புதுச்சேரியில் நாம் வழக்கமாத் தங்கும் இடம் வேற. இந்த முறை தங்குமிடம் வேற ! இது நம்மவரின் நண்பர்(தொழிலதிபர்) ஏற்பாடு. இவருடைய கம்பெனிக்குத் தொழில் நுட்ப ஆலோசகரா இருக்கார், நம்மவர். அதனால் இந்தியா வரும்போது, சில நாட்கள் பாண்டிச்சேரியில் தங்கல் உண்டு.
காலையில் கம்பெனி காரில் இவர் தொழிற்சாலைக்குப் போயிருவார். நமக்குத்தான் ஊர்சுத்தும் வேலை இருக்கேன்னு .... நானும் பிஸியாக இருப்பேன். நம்ம சீனிவாசன், நமக்கு டிரைவரா இருந்த காலக்கட்டங்களில் என்னைப் பத்திரமாப் பார்த்துக்கும் பொறுப்பை அவர், தானே எடுத்துக்குவார் என்பதால் நான் கவலை இல்லாத மனுஷியாச் சுத்துவேன்.
நண்பரின் வீடு சென்னையில் என்பதால் பயணங்களில் ஒரு நாள் வீட்டிற்கும் போய் வருவேன். இந்தமுறை எல்லாமே தலைகீழா ஆகியிருக்கு ! பழைய தொழிற்சாலையை விரிவுபடுத்தி, புதுசா இன்னொரு ப்ரமாண்ட தொழிற்சாலையையும் கட்டி அங்கேயே ஒரு சில வீடுகளும், கட்டியிருக்கார். தினமும் மெட்ராஸ் டு பாண்டிச்சேரின்னா முக்கால்வாசி நேரம் போகவரப் பயணத்துலேயே போயிருது பாருங்க. குடும்பம் இங்கே இடம்பெயர்ந்திருக்கு !
நாம் அக்கார்ட் வந்து சேரும்போதே மணி ஒன்னரை. பாலராமர் பையைக் கவனமா இறக்கி வச்ச விஜியிடமிருந்து, பையை வாங்கப்போன ஹொட்டேல் பணியாளரைத் தடுத்து, நம்மவரை எடுத்துக்கச் சொன்னேன். ஒரு சாதாரண ஷோல்டர் பேக்..... என்ன இருக்குமுன்னு அவரை ரொம்ப யோசிக்கவிடாமல். 'அயோத்யா ராமர் சிலை'ன்னதும், பையைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொண்டார் . ஃபார்மாலிட்டீஸ் முடிச்சு அறைக்குப்போய்ச் சேர இன்னுமொரு பத்து நிமிட்.
ஜன்னலுக்கு அந்தாண்டை முருகா தியேட்டர். என்ன படம்னு தெரியலையே..... போஸ்டரைக் கிட்டக்கக் கொண்டுவந்தால்..... டிராகன்னு ஒரு படமா ? ஙே..... விஜியை அனுப்பணும்.....
பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு கேட்டவரிடம், இங்கே ரெஸ்ட்டாரண்டுக்கு வேணாம். (அதானே .... வெங்கடேஷ் பட் இருக்காரா என்ன.... சமைச்சுத் தர்றதுக்கு ? ) தெரிஞ்ச பெயரா இருக்கும் சத்குரு போகலாமுன்னேன்.
இவுங்க அஞ்சு இடங்களில் கிளை பரப்பி நிக்கறாங்களாமே !!!! இருக்கட்டும்......
வழக்கம்போல் நம்மவருக்கும் விஜிக்கும் தாலி. எனக்கு ? பூரி.
அறைக்குத்திரும்பி வரும்போதே மணி ரெண்டரை. கொஞ்சம் ஓய்வெடுக்கணும். ஒரு நாலரை போலக் கிளம்பித் தொழிற்சாலைக்குப் போகணுமாம். ஆஹா.... நம்ம நேரத்தை என்ன செய்யலாமுன்னு யோசிக்கும்போதே..... குடும்பம் இங்கே வந்துட்டதால்.... எல்லோரும் உன்னை எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்கன்னார் ! அடராமா......
அறையிலே என்னவோ போல ஒரு வேண்டாத மணம். கொஞ்சநேரத்துலே சரியாகும்னு பார்த்தால் இல்லை.... மனசுக்கு ஒவ்வாமை.... ப்ச்....
நாலரைக்கு வண்டி வந்தாச்சு. நம்ம விஜியை, கொஞ்சம் ஊர்சுத்திப்பார்த்துட்டு, டின்னரையும் முடிச்சுக்கச் சொல்லியாச்சு. வரவேற்பில்..... அறை மணம் பற்றிச் சொன்னதும், வேறு அறை தர்றதாகவும், நாம் திரும்பி வந்தவுடன் அறை மாத்திக்கலாமுன்னும் சொன்னாங்க.
சுமார் இருபது நிமிட் பயணதூரத்தில் தொழிற்சாலை. வாங்க என்னும் வரவேற்பு :-)
கண்ணாடிச்சுவர்களுக்குள்ளில் தொழிற்சாலை இயங்குவது தெரிஞ்சது.
பொதுவா நான் நம்மவருடைய வேலையிடத்துக்குப் போறதே இல்லை. ஃபிஜியில் இருந்தப்பதான் ஒரு சில முறைகள் போகும்படியாச்சு. ( திறப்புவிழா பூஜை, தீபாவளிப்பூஜை, வெள்ளம் வந்து வடிஞ்சபின் இருந்த மெஷீன்களின் கதி......பார்க்க.... ) நியூஸியில் இன்னும் சுத்தம்....... பலமுறை இவரை கொண்டுபோய் விடவோ , பிக்கப் செய்யவோ கார்பார்க் வரை போனதோடு சரி. உள்ளே ? நெவர்.......
ஆஃபீஸில் அறிமுகப்படலம் முடிஞ்சு காஃபி குடிச்சுட்டு, தோழியுடன் (நண்பரின் மனைவி ) 'வீட்டுக்கு'ப் போயிட்டேன். அம்மாவும் (நண்பரின் தாய் ) இருந்தாங்க. நாங்க மூணுபேரும் குடும்ப விஷயங்கள் தொடங்கி பல சப்ஜெக்டுகளுள் புகுந்து புறப்பட்டதில் நேரம் ஓடுனதே தெரியலை.
ஒரு ஏழரை மணி வாக்கில் நண்பரும் கோபாலும் வந்து சேர்ந்துக்கிட்டாங்க. டின்னர் பற்றிய விவாதத்தில்..... எனக்குக் காரம் ஆகறதில்லைன்னு பேச்சு வாக்கில் சொல்லப்போக..... வீட்டுலேயே சமைக்கலாமுன்னு ஆரம்பிச்சு பல்கர் வீட் வெஜிடபிள் பாத், ( கௌரவமாச் சொன்னால் சம்பா கோதுமை ரவை உப்புமா ) தேங்காய்ச்சட்னி (ஐடியா என்னோடது ) டின்னர் ஆச்சு. ஒரு மாசமா அடுப்பங்கரைப் பக்கம் எட்டிப்பார்க்கலையேன்னு.... இப்ப நுழைஞ்சுட்டு வந்தேன். ஏகப்பட்ட பணியாட்கள் இருக்காங்க. அடுக்களை மட்டுமா..... வீடே கண்ணாடி போல் பளபளக்குது !
நண்பரும் மனைவியுமா நம்மை 'அக்கார்ட்' கொண்டு வந்து விட்டபோது மணி பத்தேகால். வழியில் ஜிப்மரின் நியான் ஸைன் பார்த்ததும் நெருங்கிய தோழியின் நினைவு வந்தது!
விஜிக்கு ஃபோன் செஞ்சு சாப்பிட்ட விவரம் விசாரிச்சுட்டு உள்ளே போனால் வரவேற்பில் வேறு அறை ரெடின்னு சொல்லிக் கூட்டிப்போய்க் காமிச்சாங்க. கொள்ளாம். பழைய அறையைக் காலி செஞ்சு இங்கே குடிபுகுந்தோம் :-)
மறுநாள் காலைக் காட்சி இப்படி !
கீழே ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு நம்மவர் எட்டரைக்குக் கிளம்பிப் போயிட்டார். 'மாத்திக் கொடுத்த அறை, வசதியா இருக்கா? வேற எதாவது சௌகரியம் செய்யணுமா? 'ன்னு வந்து கேட்டுட்டு போனாங்க . நானும் விஜியும் கொஞ்சம் ஊர்சுத்தப் போகணும். ஒன்பதே முக்காலுக்குக் கிளம்பினோம். முதலில் வரதராஜப்பெருமாள் கோவில்னு சொன்னதும், கூகுளாண்டவரை சரணடைஞ்சார் விஜி.
முன்பெல்லாம் தங்கும் 'ஹொட்டேல் அதிதி'யில் இருந்து ரெண்டே நிமிட் தூரத்தில் கோவில். ஆனால் இப்போ...... போய்க்கிட்டே இருக்கோமே தவிரக் கோவிலைக் காணோம்...... ஆண்டவர் வழி சொல்லிக்கிட்டே வர்றார். கிட்டத்தட்ட அரைமணி நேரமாகி இருக்கு. வண்டி கோவில்(! ) வாசலில் நின்னதும் பார்த்தால்.....
பெருமாள் அவனே...... ஆனால் இருக்குமிடம் வேற ஊர் ! இது விலியனூர் !
வம்பு வேணாமுன்னு தலைப்பிலேயே தென்கலைன்னு சேர்த்தாச்சு. கோவில் யானை இருக்கான்னு தெரியலை...... இருந்தால் 'அவளுக்கு' நிம்மதி !
பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடி வணங்கி உள்ளே போறோம்,
கோவிலில் அனக்கமே இல்லை..... பட்டர்ஸ்வாமிகள் 'வாங்கோ'ன்னு கூட்டிப்போய் தரிசனம் செய்வித்தார் !
வரம் தரும் வரதராஜர் ! கம்பீரமும் அழகுமா..... நின்ற திருக்கோலம் !
உள்ப்ரகாரத்தில் அழகான சிறுதேர் ! நல்ல ஜொலிப்பு ! அந்தாண்டை குட்டியா நம்ம ஆஞ்சு !
இங்கே தேர்த்திருவிழா ரொம்பவே விசேஷமாம் ! வலையில் தேடிப்பார்த்தேன்.... ஆ..... கிடைச்சுடுத்து ! நன்னி !
கிருஷ்ணனுக்கும் ராமனுக்கும் அடுத்தடுத்த சந்நிதிகள். வாகனமண்டபமா என்ன ? யாகசாலை போலவும் இருக்கோ ?
தாயார் பெருந்தேவியின் தரிசனம் மரக்கதவினூடாகத்தான் ! 54 ஜன்னல் ! உடுபியில் வெறும் ஒன்பதுதான் :-)
வைகுண்ட ஏகாதேசி மண்டபம் ! அட ! இன்னும் கொஞ்சம் நல்லா வச்சுருக்கப்டாதோ ? வருஷத்துக்கொருக்கா சுத்தம் பண்ணால் போறும் போல ! ப்ச்.....
காலத்துக்கேத்தமாதிரி பெருமாள் அப் டு டேட்டாக இந்த இண்ட்டர்நெட் யுகத்தில் இருப்பதும் விசேஷமே ! ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்ட்டாக்ராம், ட்விட்டர், யூட்யூப் இப்படி எதையுமே விட்டுவைக்கலை பாருங்களேன் ! க்யூஆர் கோட், ஸ்கேன் பண்ணிக்கணும் நாம் !
துவாதச நாமங்களில் கேசவனுக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே....... விசாரிக்கலாமுன்னா யாராண்டை ? பட்டர்ஸ்வாமிகளைக் காணோம்..... கோவிலுக்குள் தடைசெய்யப்பட்டவைகளின் பட்டியல் நல்லாவே இருக்கு !
ஓரளவு சுமாரான அளவில் பெரிய கோவில்தான் ! முக்கியமா நான் கேள்விப்படாத கோவில் ! 'அவனுக்கே' என்னைப்பார்க்கத் தோணியிருக்கு போல ! வரவழைச்சுட்டான்..... போகட்டும்.... இந்த முறை காஞ்சிபுரம் போகும் எண்ணம் இல்லை என்பதும்கூட ஒரு காரணமாக இருக்கவேணும்......
அடுத்து எங்கேன்னு கேட்ட விஜிக்கு..... 'நேரா நான் சொன்ன வரதராஜர் கோவில்தான் , மகாத்மா காந்தி ரோட்டிலே இருக்கு'ன்னேன்......
தொடரும்......... :-)

0 comments:
Post a Comment