காலையில் மண்பானையில் கூழ் பார்த்தவுடன் மனசு கூல் ஆனது உண்மை. கொஞ்சமா ஒரு கரண்டி மட்டும் எடுத்துக்குடிச்சுப் பார்த்தேன். ராகி போரிட்ஜ் :-) பானைதான் ரொம்பவே க்யூட்டா இருந்துச்சு. இடியாப்பம், வடை (இதென்ன காம்பிநேஷன்? )கொஞ்சம் பழங்கள் (தக்காளி, வெள்ளரி & கொய்யாப்பழம் ) எனக்கானது.
நம்மவருக்கு என்னவோ தோணுச்சு.... விஜியை ஃபேக்டரிக்குக் கூட்டிப்போய்க் காமிக்கணுமுன்னு..... கம்ப்யூட்டர் படிப்புதான். ஆனாலும் இப்படி ட்ராவல்ஸ் வண்டி ஓட்டறது ரொம்பவே ரிலாக்ஸா, சுதந்திரமா இருக்குல்லே !
சரிதான். ஆனால் எப்பவாவது ஒரு சமயம்.... வேற வேலைக்குப்போகத் தோணுச்சுன்னா..... வேலையிடம் எப்படி இருக்குமுன்னு தெரிஞ்சுக்க ஒரு ஐடியா கிடைக்குமேன்னார். அதுவும் சரிதான், இல்லே ?
விஜியை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு ரெடியா இருக்கச் சொல்லியாச்சு. பத்துமணிக்கு நமக்கு வண்டி வந்ததும்..... நம்மைப் பின் தொடர்ந்து வரணும். ஒருநாள் முழுக்க அங்கே இருக்கணுமா என்ன ? ஒரு சுத்து பார்த்துட்டுத் திரும்பிவந்து தன்னிஷ்டம் போல் நேரம் போக்கட்டுமே....
போறவழியில் ஒரு அழகான பெரிய புள்ளையார் ! ரெண்டு நாட்களா, நான் இந்த வழியாத்தானே போய் வரேன். கண்ணுலே படவே இல்லை ! அடுத்த பக்கம் உக்கார்ந்துருந்தேன் போல.....
பேக்டரிக்குப்போனதும்..... விஜியைக்கூட்டிப்போய் சுத்திக்காமிக்க வந்தவரிடம் ஒப்படைச்சுட்டு, எப்பத் தோணுதோ அப்பத் திரும்பி போகலாமுன்னு விஜிகிட்டே சொல்லிட்டு நாங்கள் தோழி வீட்டுக்குப் போனோம்.
எனக்குக் கால்வலிக்கு ஒரு சிகிச்சை நடக்கப்போகுது, இங்கே ! எப்படி ? ஃபிஸியோ தெரப்பிஸ்ட் வந்துருக்கார். ஹா.....
ஒரு மெஷீன் இருக்கு. அது மூலமா சிகிச்சை செய்தால் குணம் கிடைக்குமாம். இவர் இங்கே க்ரிக்கெட் ஸ்டேடியத்துக்கான ஃபிஸியோ. விளையாடும்போதும், ப்ராக்டீஸ் செய்யும்போதும், கைகால், தொடைன்னு சுளுக்குப் பிடிச்சுக்குதுல்லே..... அதுக்கு உடனே வைத்தியம் பார்க்கறவர். சின்னச் சின்ன விபத்துகள் சகஜமில்லையோ !
எனக்கு சுளுக்கெல்லாம் கிடையாது. முழங்கால் முட்டி, கால் தசை பிரச்சனை. ப்ளாஸ்மா ஊசி வேற ரெண்டுமுறை போட்டுருக்கு. இப்ப நியூஸி திரும்பினதும் இன்னொரு ஊசி போட்டுக்கணும். இதெல்லாம் சரிப்படாதுன்னால் கேட்டால்தானே? நாம்தான் 'எத்தைத்தின்னால் பித்தம் போகும்'னு இருக்கோமே..... 'வலிக்காது..... எனக்குக்கூடக் காலில் கொஞ்சம் பிரச்சனை வந்தப்ப, இது வச்சுச்சரியாகிருச்சு'ன்னு தோழி வேற சொல்றாங்க. ஒரு இருவது நிமிட்தான். நாளுக்கு ரெண்டுமுறை....எறும்பு ஊறுவதுபோல இருக்கும்...... ப்ளா ப்ளா.....
சரின்னதும் முழங்காலில் கனெக்ட் பண்ணினார் ஃபிஸியோ. இது Muscle Stimulation தான். வலி குறைஞ்சால், ஒரு மெஷீன் வாங்கிட்டுப்போகலாம்னு முடிவு. ஏற்கெனவே நம்மாண்டை (நியூஸியில்) ஒரு சின்ன க்ளினிக் வைக்கும் அளவுக்கு ஆஸ்பத்ரி சமாச்சாரம் இருக்குன்றதால் இதுக்கும் ஒரு இடம் கொடுத்தால் ஆச்சு ! ஹாஹா....
சிகிச்சை முடிஞ்சதும், நண்பரும், நம்மவரும் ஃபேக்டரிக்குள்ளே போயிட்டாங்க. நாங்களும் கிளம்பினோம். கார்பார்க்கில் பார்த்தால் நம்ம வண்டி இருக்கு. விஜி இன்னும் திரும்பிப்போகலை போல !
ஒரு அரை மணி நேரத்தில் திருவக்கரை என்னும் இடத்துக்குப்போய்ச் சேர்ந்து கோவில்வாசலில் இறங்கினோம். சிவன் கோவில்தான். அருள்மிகு வடிவாம்பிகை உடனுறை சந்திரமௌளீஸ்வரர் ! ஆனால் இங்கே குடிகொண்டுள்ள வக்ரகாளியம்மனுக்குத்தான் பெயரும் புகழுமாம். நான் இதுவரை போகாத கோவில் என்பதால் கொஞ்சம் ஆர்வத்தோடுதான் இருந்தேன். இந்தக்கோவில்கள் எல்லாம் புதுச்சேரி மாநிலத்துக்குப் பக்கமா இருக்கே தவிர தமிழ்நாடு மாநிலத்துக்குள்ளேதான் இருக்கு !


முகப்புலேயே பெரிய விஸ்தாரமான மண்டபம். வாசலில் பூ, பழம், தேங்காய், நெய்(!) விளக்குகள்னு விற்பனை. இந்த விளக்குகளில் கூட எண்ணிக்கைக்கு ஏத்தபடிதான் பலன் ! லிஸ்ட் போட்டு வச்சுருக்காங்க. தோழி விளக்கு, பூ சமாச்சாரங்கள் வாங்கினாங்க. மண்டபம் கடந்து கோவில் முற்றத்தில் இறங்கினதும், ராஜகோபுர வாசலுக்கு வலதுபக்கம் வக்ரகாளியம்மன் சந்நிதி. தனியா துவாரபாலிகைகள் இருக்கும் வாசல். பக்கவாட்டில் இருக்கும் கம்பித்தடுப்பு கடந்து..... உள்ளே கூட்டிப்போனாங்க தோழி. அவுங்க அடிக்கடி வரும் கோவிலாம் !
பெரிய அளவில் புடைப்புச் சிற்பம் போல இருக்கிறாள் காளி ! வக்ராசுரனை வதம் செய்ய, விஷ்ணு வந்தப்ப..... கூடவே வந்து வக்ராசுரனுடைய தங்கையை வதம் செய்தாளாம் ! கொல்லுமுன் தெரிஞ்சுருக்கு, அரக்கி ஒரு கர்ப்பிணின்னு ! குழந்தையைக் கொல்வது தர்மம் இல்லைன்னு கருவில் இருக்கும் குழந்தையைக் காதுலே குண்டலமா மாட்டிக்கிட்டு, அரக்கியை வதம் செஞ்சுருக்காள். அதனால்தான் வக்ராகாளின்னு பெயர் வந்துருக்கு !
தோழிக்கும் எனக்குமா ஆளுக்கொரு எலுமிச்சம்பழம் ப்ரஸாதமாக் கொடுத்தார் அர்ச்சகர். அடுத்துக் கோவிலின் மற்றபகுதிகளைத் தேடிப் போனப்ப..... முதலில் கண்ணில்பட்டவர் நந்திதேவர். அதென்ன 'கதை'ன்னு தெரியலை..... இந்தப்பக்கங்களில் பாதி புதையுண்ட நந்திதேவர் சந்நிதிகள் கண்ணில் பட்டுக்கிட்டே இருக்கு !
அந்தாண்டை....ஒரு ஓப்பன் ஷெட் மாதிரி கொட்டகை போட்டுருக்கும் இடத்தில் நாகர் சந்நிதி ! ஏராளமான நாகர்கள். நடுநாயகமா அம்மன் சிலை. எல்லோரும் மஞ்சளும் குங்குமமா இருக்காங்க. பக்தர்கள் கூட்டம் இங்கேதான் அதிகம். வாசலில் விற்பனைக்கு இருக்கும் விளக்குகள் எல்லாம் இங்கேதான் ஏத்தறாங்க போல !
தோழியின் கையில் இருந்த விளக்குகளை வாங்கிப்போய் ஏத்தறதுக்கு உதவி செஞ்சாங்க ஒரு பெண்மணி. கொஞ்சம் குங்குமம் கொண்டுவந்து தோழியின் நெற்றியில் வச்சதும், பத்து நொடிகள் தோழியின் முகத்தைக் கூர்ந்து கவனிச்சுட்டு, ஒரு பாட்டுபோல சொல்லி (உடுக்கை அடிச்சுக்கிட்டுப் பாடுவாங்களே அதைப்போல ), 'அம்மன் அருள் உனக்கு இருக்கும்மா. ஏதோ மனக்குறையில் இருக்கே.... உன் குறையெல்லாம் சீக்கிரமே தீரப்போகுது..... ' ன்னதும் தோழியின் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.
இது கொஞ்சம் உளவியல் சம்பந்தமானது. பொதுவாவே.... மனிதர்களுக்கு ஏதாவது மனக்குறை இருக்கத்தான் செய்யும். அதிலும் பெண்கள் மனக்குறையைக் கேக்கவே வேணாம். வெளியே சொல்லமுடியாதவை பலதும்..... போதாக்குறைக்கு இரக்ககுணம் ஆண்களைவிடக் கொஞ்சம் அதிகம்தான். இளகிய மனசு..... அதுலே கோவில் சந்நிதிகளில் வச்சு, உனக்கு மனக்குறை இருக்குன்னா..... ப்ச்..... அப்புறமும் என்னென்னவோ தோழிக்குச் சொன்னாங்க. ஏதோ பரிகாரம்னு ..... சொல்லி முடிச்சுட்டு..... பகல் உணவுக்கு தர்மம் செய்யச் சொன்னதும் தோழி கொடுத்தாங்க.
அடுத்து என்னப் பார்த்ததும்.... நான் அவுங்களைப்பற்றிக் கேட்டேன். பெயர் பரிமளம். இந்தக் கோவிலில்தான் அம்மன் சேவையை பலவருஷங்களாச் செய்யறாங்களாம். இங்கே இருக்கும் நாகர்கள் எல்லாம் வேண்டுதல் நிறைவேறின பக்தர்கள் கொண்டு வந்து வச்சதுதானாம். ரொம்ப சக்தியான அம்மன். வேண்டியவரம் வேண்டியபடி கிடைச்சுரும்.
அவுங்ககிட்டே அனுமதி வாங்கிக்கிட்டுக் கொஞ்சம் படங்களை எடுத்துக்கிட்டேன். குழந்தை தவழ்ந்து போவதுபோல ஒரு சிலை, கவனத்தை ஈர்த்தது. குழந்தைவரம் வேண்டிய யாரோ கொண்டு வந்தாங்களாம்.
இந்தியாவைப்பொறுத்தவரை.... மக்கள் தொகை எப்படிக் கட்டுக்கு அடங்காமல் பெருகி வருதோ..... அதுக்குக் கொஞ்சம் கூடக்குறைவில்லாமல்.... பிள்ளைவரம் வேண்டி ஏங்கி நிற்கும் மக்களும் உண்டு. கோவில்களில் வேண்டிக்கிட்டுத் தொங்கவிடும் சின்னத் தொட்டில்களைப் பார்த்துருப்பீங்கதானே ?
அப்புறம் கொஞ்சநேரம் பரிமளத்துடன் பேசிக்கிட்டு இருந்தேன். பேச்சுவாக்கில் உங்க மனசிலும் ஏதாவது குறை இருக்கத்தானே செய்யும்னு சொன்னதும்.... அழுதுட்டாங்க.
"வெளியில் சொல்ல முடிஞ்சதை மட்டும் , வெளியில் நம்பகமானவங்களிடம் சொன்னால் கொஞ்சம் பாரம் குறையும். அதுக்காக எல்லோரிடமும் நம்பிக்கை வைக்க முடியாது..... என்னை பொறுத்தவரை.... எங்க பெருமாள்தான் என் புலம்பலைக் கேக்கறவர். சந்தோஷமோ கஷ்டமோ, ரகசியமோ அவராண்டை போய்ச் சொல்லிருவேன். பதில் பேசாமக் கேட்டுக்குவார். அக்கம்பக்கத்துலே போய் பத்தவைக்கவும் மாட்டார். தினமும் அவருக்கு மண்டகப்படிதான். நீங்களும் உங்க அம்மனிடம் எதுவேணுமுன்னாலும் சொல்லிருங்க. மனசின் பாரம் குறையும்"
பையனுக்கு வயசாகிக்கிட்டே போகுது. இன்னும் கல்யாணம் கைகூடலைன்னு சொன்னாங்க. "அடராமா.... இதுக்கு நீங்க ஏன் கவலைப்படறீங்க ? வேளை வரலை, அம்புட்டுதான். எல்லாத்துக்கும் 'அவன்' கணக்கு ஒண்ணு இருக்குல்லே ? குருபலன் வந்துருச்சுன்னா...... சட்னு கல்யாணம் நடந்துரும். என் பொண்ணுக்கும் லேட்டாத்தான் கல்யாணம் ஆச்சு. பையனுக்குக் கல்யாணம் பண்ணிவச்ச அம்மாக்களைப் பாருங்க.... மருமகள் மேல் ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. குறைஞ்சபட்சம்..... முந்தியெல்லாம் அம்மா அம்மான்னு ரொம்பப் பாசமா இருப்பான்.... இப்பெல்லாம் ....ப்ச்... அடியோடு மாறிட்டான்....."
பரிமளத்தின் முகத்தில் புன்னகை வந்துருச்சு. உங்க ஃபோன் நம்பர் கொடுங்கம்மா.... உங்ககிட்டே பேசுனா நல்லா இருக்குன்னாங்க. என் நம்பர் வெளிநாட்டுதுங்க. ஃபோன் செஞ்சீங்கன்னா..... ரொம்ப செலவாகிரும். நமக்குத்தான் சாமி இருக்குல்லே, அதாண்டை சொன்னாப் போதாதான்னேன்.
எந்த ஊர்மா ? மலேசியாவா ? இல்லைங்க.... நியூஸிலாந்து. கொஞ்சம் தூரம் அதிகம்தான். நினைச்சா, சட்னு வரமுடியாது..........
'நீங்க கடவுள் மேல் பாரத்தைப் போட்டுட்டு, சந்தோஷமா இருங்க. நம்ம வாழ்க்கையை அவர் பார்த்துக்குவார். அதைவிட அவருக்கு வேறென்ன வேலை ? இன்னும் ரெண்டுமூணு பேருக்கு லஞ்சு வாங்கிக்கொடுங்க'ன்னு கொஞ்சம் காசு கொடுத்துட்டுக் கோவிலைச் சுத்திவரத் தொடங்கினோம்.
அப்பதான்.... இன்னொரு சமாச்சாரம் தெரிஞ்சது... அட.... இங்கேயுமா ?
பதிவின் நீளம் கருதி...... இங்கே நிறுத்தறேன். அடுத்தபகுதியில் மீதி....
தொடரும்......... :-)

3 comments:
அந்த பெரிய விநாயகரை நானும் பயணத்தில் கடக்கும்போது பார்த்திருக்கிறேன்.
நீங்கள் செய்து கொண்டிருக்கும் அந்த முழங்கால் தெரபியை ஏழெட்டு மாதங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்தோடு செய்து கொண்டோம்!! மூன்று மாதம் கழித்து நான் ரிப்பீட் வேறு!
கடையில் பார்த்து பிரண்டை சாறு என்று ஒன்று வாங்கி வைத்திருக்கிறேன். சாப்பாட்டுக்குமுன் தண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டுமாம். இன்னும் ஆரம்பிக்கவில்லை!
திருவக்கரை கேள்விப்பட்டிருக்கிறேன். சென்றதில்லை.
வாங்க ஸ்ரீராம்,
அந்த விநாயகர் நல்ல அழகுதான், இல்லே !!!!
ஆமாம்..... முழங்கால் சரியாச்சா ? பிரண்டைச்சாறு இதுவரை கேள்விப்படவே இல்லை. ரிஸல்ட் எப்படின்னு சொல்லுங்க. பிரண்டைப்பொடிதான் கொஞ்சநாள் பயன்படுத்தினேன். இங்கே கிடைப்பதில்லை. போனபயணத்தில் இந்தியாவில் வாங்கியது.
சந்தர்ப்பம் கிடைச்சால் திருவக்கரை கோவிலை விட்டுடாதீங்க.
வக்ரகாளி அம்மன் புதிய கோவில்கள் வணங்கக் கிடைத்திருக்கிறது.
Post a Comment