Monday, July 21, 2025

ஆஹா...... ஆஹா..... பதினாறு கைகளாமே !!!!! (2025 இந்தியப்பயணம் பகுதி 48 )

ஒரு மூணரை மணியாகும்போது, எங்கே போகலாமுன்னு ஒரு இடத்தைத் தீர்மானிச்சு, உள்ளூர் ட்ரைவர் இருந்தால் நல்லதுன்னு..... தோழி அவுங்க காரை வரச் சொன்னாங்க. நானும் விஜிக்கு ஃபோன் செஞ்சு,  அவருக்கு விருப்பமானமுறையில் நேரம் செலவழிக்கச் சொல்லிட்டேன்.
அக்கார்டில் இருந்து சுமார் பனிரெண்டு கிமீ தூரத்தில் இருக்கும் சிங்கிரிகுடி பெருமாள் கோவில் வாசலில் போய் இறங்கினப்ப மணி ஏறக்கொறைய நாலே கால்.  கோவில் திறக்கும் நேரம் நாலரையாம்.  ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ம சுவாமி திருக்கோவில், சிங்கிரிக்கோவில் னு போர்டு இருக்கும்   ராஜகோபுரவாசல் கடந்து உள்ளே போனால் பெரிய வெளிப்ரகாரத்தின்  ரெண்டுபக்கங்களிலும் சந்நிதிகள்.  அப்ப அந்த குடி ... Gudi யோ ?  வாசலில் இருந்த கடையில் நெய் (!) விளக்குகளும், பூவும் வாங்கினாங்க தோழி.  (நான் பொதுவா ஒன்னும் வாங்கிப்போறதில்லை.  எப்பவாவது தோணியால் துளசி. இல்லைன்னால் பெருமாளுக்கு இந்த  மனுஷத் துளசிமட்டும்தான்.)
ராஜகோபுரத்துக்கு  நேராக் கொஞ்ச தூரத்தில் பெரிய திருவடியின் சந்நிதி , கொடிமரம் பலிபீடம் எல்லாம் கண்ணில்பட்டது. இதோ இங்கிருக்கும் சந்நிதிகளைத் தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு இடப்பக்கம் இருக்கும் சந்நிதிக்குப்போனோம்.  ரொம்ப அழகாச் சின்ன முன்மண்டபத்தோடு இருக்கு. துர்கை !  விஷ்ணுதுர்கை !  சந்நிதிக்கதவு மூடி இருந்தாலும் கம்பித்தடுப்பு வழியா தரிசனம் ஆச்சு.  கதவுக்குமுன் நிறைய நெய்விளக்குகள்  ! தோழியும் ஜோதியில் கலந்தாங்க.  வலப்பக்கம் இருக்கும் சந்நிதிக்குப்போனால்......      புடவை கட்டிய நாகம்மாள்.  
முன்மண்டபம் எல்லாம் எடுத்துக்கட்டாத சிம்பிள் சந்நிதி. கதவு கூட இல்லை ! (நம்மவர் வீட்டுக்குலதெய்வம் நாகம்மாள் என்பதால்.... கோபால் சார்பில் இன்னும் நாலு கும்பிடு ஆச்சு)
பெரிய திருவடியை வணங்கி உள்ளே போறோம். ஜயவிஜயர்கள் உள்ள  ஒரு அலங்கார வாசல் கடந்தால் பலிபீடமும் கொடிமரமும்.   கம்பித்தடுப்புகள் போட்ட முன்மண்டபத்துக்குள் பெரிய திருவடிக்கு முன் நேரெதிராக் கருவறை ! உக்ரநரஸிம்மர் சந்நிதி !

நாலரை மணிக்குக் கோவில் திறந்து, பக்தர்கள் தரிசனம் வேண்டி கருவறைக்கு வெளியே காத்துருக்காங்க.  உள்ளே சந்நிதியில் திரை போட்டுட்டு, நித்ய பூஜை சம்ப்ரதாயங்கள் நடக்குது. சாயரக்ஷை.....     மண்டபத்தில்  நாதஸ்வரமும் தவிலுமா.....  
ஃபேஸ்புக்கில்  ரெண்டு பகுதியா ஒரு வீடியோ க்ளிப் போட்டு வச்சேன். ரொம்பப் ப்ரமாத வாசிப்பு இல்லையென்றாலும் கூட..... அந்த சூழலில், கோவில் மண்டபத்தில் இசையைக் கேக்கும்போது.... மனம் நிறைவது உண்மைதான் !

https://www.facebook.com/share/v/1AyJDMRGu9/

https://www.facebook.com/share/v/1CW3X5NyRB/

அஷ்ட நரசிம்மர் கோவில்கள்னு ஒரு எட்டுக்கோவில்களைச் சொல்றாங்க.   சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல், சிங்கப்பெருமாள் கோவில்,  சோளிங்கர், நாமக்கல், அந்திலி,  & சித்தனைவாடி.  

இதுலே சிங்கிரிகுடி, பூவரசன்குப்பம், பரிக்கல் இந்த மூணு கோவில்களும் ஒரே நேர்கோட்டில் இருக்குன்னும் 'ஒரே நாளில்' இந்த மூன்று கோவில்களுக்கும் போய் தரிசனம்  செஞ்சால் ரொம்பவே  விசேஷம்னு.....   (யார் இப்படிக் கிளப்பிவிட்டாங்கன்னு தெரியலை...  எப்படிப் பார்த்தாலும்.... சுமார் எழுபத்தியஞ்சு கிமீ பயணம் போகணும். இப்ப மாதிரி அந்தக் காலங்களில் வாகனவசதிகள் (மாட்டு வண்டி தவிர) இருந்ததா என்ன ? ஓடியோடிப் போக முடியுமோ ?  மூணு கோவில், அஞ்சு கோவில், சிவாலய ஓட்டம்னு  ஏராளமான வகைகள் இருக்கேப்பா ! )

போகட்டும், இந்த எட்டு நரசிம்ஹர் கோவில்களில்  அஞ்சு கோவில்களுக்கு நாம் ஏற்கெனவே போயிருக்கோம். ஆறாவதா இப்போ சிங்கிரிகுடியில் நிக்கறோம். இன்னும் ரெண்டு கோவில்கள்தான் பாக்கி , இல்லே ? கூப்பிடுவான், கூப்பிடுவான்....பொறுமை காக்கலாம்.     

கீழே படம் :  வலையில் அகப்பட்டது. கர்நாடகா கோவில் சிற்பமுன்னு நினைக்கிறேன்.                                                 
திரை விலகியது !   உக்ரநரசிம்ஹர், பதினாறு கைகளுடன் இருக்கிறார். மடியில்  ஹிரண்யகசிபு ! ரெண்டு தொடைகளின் மேலும்....(எவ்ளோ கொடுப்பினை பாருங்க ! ) ப்ரஹலாதனும், லக்ஷ்மியுமே  ஏதாவது ஒரு தொடையில்தான்  உக்கார்ந்துருப்பாங்க. ஆனால் இவன்.....  ஹைய்யோ !!!!
பதினாறு கைகளும் எப்படி ஆக்குபைடுன்னு ஒரு லிஸ்ட்டே இருக்கு இந்தக் கோவிலில் !
 
இன்னுமொரு முக்கியமான தகவல்..... இந்தியாவிலேயே ரெண்டே ரெண்டு கோவில்களில்தான் இப்படிப் பதினாறு கைகளுடன் நரசிம்ஹர் இருக்கார். தென் இந்தியாவில் இவர். வட இந்தியாவுக்கு  ராஜஸ்தான் மாநிலத்தில் (Narsinghji Temple at Hindaun in Rajasthan) ஒரு குகைக்கோவிலில் இருப்பதாகக் கேள்வி !

மற்றபடி  உலோகச் சிலைகளில்  பதினாறு கைகளுடன் நரசிம்மர் (நிற்கும் போஸ் ) கிடைக்கிறார்தான்.  பார்க்கலாம்.... நமக்கு அதிர்ஷ்டம் இருக்கான்னு.....

இங்கே கருவறையில் இன்னுமொரு விசேஷம் என்னன்னா........    ஹிரண்யகசிபுவின் மனைவி நீலாவதியும், மகன் ப்ரஹலாதனும் ! (என்னதான் கொடுமைக்காரப் புருஷன் என்றாலுமே,  அவனைக் கொல்லும்போது நேரில் நின்னு பார்த்தால்..... பாவம்.... அந்தப் பெண்மனசு எப்படித் துடிச்சுருக்கும்! இல்லே.... ப்ச் ........)

இந்தப்பக்கம்  வசிஷ்டரும், சுக்ரனும், இன்னும் நாலு அசுரர்களும் !  (இந்த ஸீனுக்குக் காரணமே மகரிஷி வசிஷ்டர் தான் ) 

ஹிரண்யவதம் முடிஞ்சதுன்னு கேள்விப்பட்டபின்,   தேவர்களுக்கும் ரிஷிமுனிவர்களுக்கும் நிம்மதியாச்சு இல்லையா!  அப்போ தன் பாவங்களை (!) போக்க இங்கே  இந்த ஏரியாவில் தவம் செஞ்சுக்கிட்டு இருந்த மகரிஷி வசிஷ்டர் , நரசிம்மரை மனசில் நிறுத்தி,  (சிங்கமும் மனுஷனுமாமே...!!! எப்படி இருந்துருக்கும் ? ) அந்தக் கோலம் காண்பிக்க வேணுமுன்னு பணிவாகக் கேட்டதும்,  இதோன்னு காமிச்சுருக்கார் !  

விஷ்ணுவின்  தச அவதாரங்களில் .... முன்கூட்டிய திட்டம்னு பொறந்து வளர்ந்துன்னு எல்லாம் இல்லாமல்  நினைச்ச நொடியில்  எடுத்த அவதாரம் இந்த நரசிம்ஹ அவதாரம் மட்டுமே!  குழந்தை ப்ரஹலாதன்.... எந்தத் தூணைக் காட்டுவானோன்னு தெரியாததால்..... அங்கிருந்த எல்லாத் தூண்களிலுமே இருந்தானாம் !!!!  அட... ராமா...... (நாளை என்பது நரசிம்ஹருக்கு இல்லை ! ) 

அருமையான தரிசனம் நமக்கும் கிடைச்சது. கருவறையில் சின்ன மூர்த்திகளா யோக நரசிம்ஹர் ஒருவரும்  பாலநரசிம்ஹர் ஒருவரும் கூட இருக்காங்க. பூக்கள் அலங்காரத்துக்குள் இருந்ததால் சரியாப் பார்க்கமுடியலை.  குழந்தை சிங்கம் எப்படி இருந்துருக்கும் !!!!  மொத்தம் மூணு நரசிம்ஹர்கள் கருவறையில் !  பட்டர்ஸ்வாமிகள் ரொம்ப  நல்லமாதிரி, விளக்கமாச் சொல்லி தரிசனம் செஞ்சு வைச்சார்.   ஓரமாய் நிற்கும் உற்சவர்,  ப்ரஹலாதவரதர் !


திரு அவதாரம் எடுத்தநாள் (நரசிம்ஹ ஜயந்தி ) சித்திரை மாசம் , ஸ்வாதி நக்ஷத்திரம் என்பதால் எல்லா மாசமும் வரும் ஸ்வாதி நக்ஷத்திரநாட்களில் விசேஷ பூஜை உண்டு! ஸ்வாதித்திருநாள் ! போர்டில் பார்த்தேன் ! 
  
தாயார் கனகவல்லிக்கும் நம்ம ஆண்டாளம்மாவுக்கும் தனிச்சந்நிதிகள் !
பழைய கோவில்தான். ராஜராஜசோழன் திருப்பணி செஞ்சுருக்கார்னா பார்த்துக்குங்க.  அவருக்குப்பின் க்ருஷ்ணதேவராயரும் திருப்பணி செஞ்சுருக்கார்.   ப்ரெஞ்சு அதிகாரிகளும், ஆற்காட்டு நவாபும் கூட  நகையும் நட்டுமா நம்ம நரசிம்ஹருக்குக் கொடுத்துருக்காங்கன்னு கோவில் வரலாறு சொல்லுது !

அப்புறம்...... ஆங்.....சொல்ல மறந்துட்டேனே..... செவ்வாய்க்கிழமைகளில் இவரை தரிசிப்பது சிறப்பாம். அப்படியான்னு செல்லில் இருக்கும் காலண்டரைப் பார்த்தால்.... அன்றைக்குச் செவ்வாயேதான் !  எம்பெருமாளே.... பெருமாளே.....  (பயணங்களில் பொதுவா நாளும் நக்ஷத்திரமும், திதியும் எல்லாம் நினைவில் வர்றதே இல்லை....  தேதியே குழப்பம்தான்..... )

கோவில்குளம் சின்னதா இருந்தாலும் சுத்தமா இருக்கு !  வாத்ஸ் ஓய்வெடுக்கும் படிகள்! 
நிறைவான தரிசனம். இந்தக்கோவில் இருக்கும் விவரமே நீங்க சொன்னபிறகுதான் தெரியும். மனம் நிறைந்த நன்றின்னு தோழிக்குச் சொன்னேன். மணி வேற அஞ்சேமுக்கால்..... நேரா  தோழி வீட்டுக்குப்போய் ஃபேக்டரி வேலை முடிச்சுட்டு வரும்  கோபாலைக் கூட்டிக்கிட்டு அக்கார்ட் திரும்பணும்னு மனசில் எண்ணம் ஓடிக்கிட்டு இருக்கு !
ஆனால் அடுத்ததாக வண்டி போய் நின்ன இடம் க்ரிக்கெட் ஸ்டேடியம்  !  தோழிதான் ஓனர். அசந்து போய் நின்னது நிஜம்.  சொந்தமா ஒரு க்ரிக்கெட் டீம் கூட இருக்கு !  எனக்குக் கால்வலி என்பதால் இறங்கி நடக்காமல் காரிலேயே ஒரு சுத்து கூட்டிப் போய் பார்க்க வச்சாங்க.  ப்ரமாண்டம் !  

சுத்து முடிஞ்சு வந்தால் மாலைநேரத்துக்கான டீயும், சுடச் சுட வெங்காயப்பக்கோடாவும் வண்டிக்கு வருது !  இங்கே  சமையலுக்கான எல்லா ஏற்பாடுகளும் இருக்குன்னும், க்ரௌண்ட் பராமரிப்பு, அது இது ன்னு ஒரு நூறுபேர் வேலை செய்வதால்  எல்லோருக்கும் சாப்பாடு இங்கேதான் தயாரிக்கறாங்கன்னும் சொன்னாங்க. இங்கே மட்டுமில்லாமல் ஃபேக்டரி மக்களுக்கும் உணவுத் தயாரிப்பு இங்கேதானாம் ! 

அப்பதான் நம்மவர் செல்லில் கூப்பிட்டு என்ன செய்யறீங்கன்னார்.  பக்கோடா தின்னுக்கிட்டு இருக்கேன்னேன் :-)

அப்புறமா வீட்டுக்குப்போய்ச் சேர்ந்தோம். ராத்ரி சமையல்,  எனக்காகக் காரமே இல்லாமல்  நெய்ச்சோறு. ஸ்டேடியம் அடுக்களையில் இருந்து வந்த கறிவகைகள் ஏகப்பட்டவை இருந்தன. 

ஒன்பதுமணி வரை பேசிக்கிட்டு இருந்தோம்.  மறுநாளைக்கான எங்கள் திட்டம் ஓரளவு தீர்மானிச்சாச்சு.  அப்புறம்  நண்பரும் தோழியுமா நம்மோடு கிளம்பி, ஹொட்டேலில் விட்டுட்டுப் போனாங்க. 

தொடரும்........ :-)




1 comments:

said...

ஏழெட்டு மாதங்களுக்கு முன் நாங்கள் இந்த மூன்று கோவில்களுக்கும் ஒரே நாளில் சென்று திரும்பினோம்.  இந்தக் கோவிலில் தான் என்று நினைக்கிறேன், திறந்தவெளி நடக்கும் இடம் அதிகம்.  மதியம் பனிரெண்டு மணி வெயிலில் கால்கள் பழுத்து விட்டன.