Wednesday, August 23, 2017

சிக்கன் கடைக்குள் போனேன் (இந்திய மண்ணில் பயணம் 47)

எனக்கு ரொம்பக் கடுப்பா இருக்கும் ஒரு சமாச்சாரம்....   உள்ளூர் பயணத்துக்கும்  ரெண்டு மூணு மணி நேரத்துக்கு முன்னால் ஏர்ப்போர்ட்டுலே இருக்கணும் என்றதுதான். நம்மவர் சொல்றார்....   இங்கெதான் எங்கெ போனாலும் கூட்டம் நெரியுதே....  அதான்னு......  ப்ச்....

 பஸ் ஸ்டாண்டு மாதிரிதான் இப்ப விமான நிலையங்கள் எல்லாம்.....   ஆனால்  பஸ்ஸுலே கடைசி நிமிட்லே கூட ஓடிப்போய் ஏறிக்கலாம் :-)


பொழுது விடிஞ்சதான்னு  ஜன்னல் திரையை விலக்கினால்.... கோம்தியில் மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க.
காலையில் எழுந்து தயாராகி, கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சோம்.  இட்லி இப்ப ஒரு 'இன்ட்டர் ஸ்டேட் ஃபுட் ஐட்டம்' ஆகி இருக்கு.  ருசியைப் பற்றிக் கவலை  இல்லை. உருவம் சரியா இருந்தாப் போதும்!   கூடவே பராவும் உண்டு:-)

நான் பரா, டோக்ளா, ஒரு போண்டா , கொஞ்சம் முளைப்பயிறு எடுத்துக்கிட்டேன். டோக்ளா இவுங்க நல்லா செய்ஞ்சுருவாங்க. நாம் செஞ்சாக் கொஞ்சம் கல்லாகிருது. அவரவருக்கு அவரவர் சமையல்தான் நல்லா வருது, இல்லயோ!

ஒன்பதரைக்கு வண்டிக்குச் சொல்லி இருந்தோம். வினோத் தான் வந்துருக்கார்.  சனிக்கிழமை என்றதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லையாம்.  முக்கால்மணி நேரத்துலே ஏர்ப்போர்ட் வந்துட்டோம்.  இங்கேயும் அவ்வளவாக் கூட்டம் இல்லை. செக்கின் செஞ்சாச்சு. ஏற்கெனவே கூடுதல் எடைக்குக் காசு கட்டி இருந்ததால் பிரச்சனை ஒன்னும் இல்லைதான்.

நமக்கு 12.05  மணிக்குத்தான் ஃப்ளைட்.  அதுவரை  நேரம் போக்கணுமே....   வேடிக்கை பார்க்க ரொம்ப இல்லை. கண்ணில் பட்டது சிக்கன் கடை.  'அடடா.... லக்நோவில் ரொம்ப விசேஷமாச்சே.....   நேத்து ஊருக்குள் கண்ணில்பட்ட ஏராளமான கடைகளில் கூட எட்டிப்பார்க்கலை பாரேன்'னு என்னையே நொந்துக்கிட்டு  சிக்கன் கடைக்குள் நுழைஞ்சேன்.
ஒரு கலர் மட்டும்னா கொஞ்சம் விலை கம்மி. ரெண்டு கலர் இருந்தால் கொஞ்சம் கூடுதல். ஒரு கலரே இருக்கட்டுமுன்னு  தேடுனதில்  நம்ம பச்சை  கண்ணில் பட்டது. ப்ரோப்பர் பச்சை இல்லைன்னாலும்...  பச்சைதான்.  ஒன்னு வாங்கிக்கிட்டேன்.

காத்திருக்கும் நேரம், பக்கத்து இருக்கையில் வந்து  உக்கார்ந்த ஒரு பெண்மணி, என் கையில் இருக்கும் பையை நோட்டம் விட்டுட்டு விசாரிச்சாங்க.   உள்ளுர் ஆள்தான். தில்லிக்கு ஒரு வேலையாப் போறாங்க. நாளைக்குத் திரும்பிருவாங்களாம்.  கொடுத்த  விலை அதிகமோன்னு எனக்கொரு சம்சயம். ஏர்ப்போர்ட்லே எல்லாம் தீ பிடிச்ச விலை இல்லையோ?  ஏறக்கொறைய  சரியான விலைதானாம்.  என்ன ஒன்னு ஊருக்குள்  நிறைய டிஸைன்கள், வகைகள் கிடைக்குமாம்.   போயிட்டுப் போகுது. அதான் இன்னொருக்கா ஒரு வாரம் வந்து தங்கப்போறோமே... அப்ப வாங்கினால் ஆச்சு :-)

தில்லி வந்து சேர்ந்தப்ப  மணி ஒன்னேகால். சென்னை ஃப்ளைட் புடிக்கணும் இப்ப.  உள்ளேயே  ட்ரான்ஸிட் மக்களுக்குன்னு எதோ வழியைக் காமிச்சாங்கன்னு போனால்.... ஒரு Mazeக்குள் நுழைஞ்சமாதிரி இருக்கு.  அசல் மொஃபஸல் பஸ் ஸ்டேண்டு மாதிரி இதுக்குள்ளே கூட்டம்!  வேணுமுன்னே இந்த வழியை வச்சமாதிரித்தான் இருந்துச்சு.

   இன் ஃப்ளைட் ஸ்நாக்ஸ் என்ற வகையில்  ஒன்னு கொடுத்தாங்க. அதென்ன  இனிப்புன்னு   இந்த ஜெட் ஏர்வேஸ் ஃப்ளைட்டுகளில் எல்லாம்   புளி உருண்டை ரெண்டு வைக்கிறாங்கன்னே தெரியலையே...   :-) ரெண்டு மூணு  ஃப்ளைட்டுலே  இப்படிக்கிடைச்சது  :-)

ஒருவழியா  சென்னை வந்து சேர்ந்தோம். அஞ்சே முக்கால்.  ஒரு நாள் முழுசும் போயே போயிருச்சு. நம்ம   ஸ்ரீராம் ட்ராவல்ஸ்  சீனிவாசனை  மறுநாள் முதல்தான் புக் பண்ணி இருக்கோம்.  இன்றைக்கு அவர்  வேற இடத்துக்குப் போயிருக்காராம்.  டாக்ஸி  ஒன்னு எடுத்துக்கிட்டுக் கிளம்பியாச்சு.

 திநகருக்குள் நுழைஞ்சவுடனே  நவராத்ரி கோலாகலம் கண்ணில் பட்டுச்சு. இடம்தெரியாம வேறேதோ வழியில் நுழைஞ்சுட்டார் போல டாக்ஸி ட்ரைவர்.   தெருவில் மேடையெல்லாம் போட்டு சிலர் பறை அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆயுதபூஜைக் கொண்டாட்டமாம்.  ஸ்ரீகிருஷ்ணர் குழலும் கையுமா ஜொலிச்சுக்கிட்டு இருந்தார். நல்ல கூட்டம்....


கொஞ்சம் சுத்திக்கிட்டுப் பாண்டிபஸார் தொட்டவுடன்,  நாமே வழி சொல்லி, நம்ம லோட்டஸுக்குப் போய்ச் சேர்ந்தோம். எதோ வீட்டுக்கு  வந்தாப்லெ நிம்மதி ஆச்சு.  புதுசா   கண்ணாடி லிஃப்ட் போட்டுருக்காங்க. சூப்பர்!  முந்தி போல க்ரில்லை இழுக்க வேணாம்.  அது கம்பியை இழுக்கறதுக்குள்ளே  ...'க்ளோஸ் த டோர்'ன்னு கத்திக் கத்தியே  நம்ம உயிரை எடுத்துரும்.

கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு  ஒரு ஆட்டோ பிடிச்சு பாண்டிபஸார் கீதாகஃபேக்குப் போனோம்.

நம்ம பேட்டைக்குள் இருக்கோம் என்பதே  மனசை மகிழ்ச்சியாக்கிடுது :-)
தீபக் கையால் இட்லியும் ஃபில்ட்டர் காஃபியும் கிடைச்சது. நல்ல பையர்.  வழக்கம்போல் நார்த்தான்.  தில்லி அம்பி.

வெளியே வந்தப்ப, நம்ம கீதா கஃபேயை ஒட்டியே இருக்கும்  துணிக்கடையில் தொங்கிக்கிட்டு இருந்த டிஸைன் நல்லா இருக்கேன்னு  வாங்கிக்கிட்டு,  அப்படியே  நம்ம டெய்லரிடம் கொண்டுபோய்க் கொடுத்துட்டு  ரெண்டுநாளில் வேணுமுன்னு சொல்லிட்டு  அறைக்குத் திரும்பிட்டோம்.

தொடரும்.......  :-)

PINகுறிப்பு :  சென்னைக்குப் பிறந்த நாள் சமயம் இல்லையோ இப்ப .... சென்னைப் பதிவாகவும் இதை வச்சுக்கலாம் :-)

Monday, August 21, 2017

எங்கெங்கு காணினும்..... (இந்திய மண்ணில் பயணம் 46)

நூத்தி ஏழு ஏக்கர் நிலத்தில்  தரை முழுசும்  பளபளன்னு மின்னும் சலவைக்கல்!  அலங்காரமா உசந்து நிக்கும்  பளிங்குத் தூண்கள்.  புத்தர் நினைவிடங்கள்,  கோவில்களில் இருக்கறதைப்போல   பெரிய ஸ்தூபா  இப்படி  என்னென்னவோ இருந்தாலும்,  கண்ணைக் கட்டி இழுத்து நிறுத்துவது  நம்ம யானைகள்தான்!

ஒவ்வொன்னும் லைஃப் சைஸ் என்ற வகையில் உண்மை யானைகள் அளவில்தான்.  ஹைய்யோ..... வரிசை கட்டி நிக்குதுகள்!     அதுவும் மேடையில்  ஏறி!  எத்தனை இருக்குமுன்னு  எண்ண முடியாது.....
அறுவது ன்னு கணக்கு சொல்றாங்க. ராஜஸ்தான் கற்களாம்.  இப்படி ஒரு யானைப்ரேமி  நம்ம 'மாயாவதி பெஹன்'னு எனக்கு முதலில் தெரியவே தெரியாது.

அப்பப்பப் பத்திரிகை சேதிகளில் யானைச்சிலை யானைச்சிலைன்னு வாசிச்சதுதான்!

பரா இமாம்பாராவில் இருந்து கிளம்புன நாங்கள் நேரா வந்து சேர்ந்த  இடம்   பீம்ராவ் அம்பேட்கர் மெமோரியல் பார்க். கிட்டத்தட்ட ஒரு எட்டேமுக்கால் கிமீ தூரம்.   அட்டகாசமான சாலை!  இருவது நிமிட்ஸ்லே வந்தாச்சுன்னா பாருங்க!

ஒரு பாலம் போல இருக்கும்  பைபாஸ் சாலையின்  ஒரு இடத்தில் வண்டியை நிறுத்துன வினோத் இங்கெருந்து  பார்த்தால் முழுசாத் தெரியுமுன்னு சொன்னார்!
கீழே   கொஞ்ச தூரத்தில் புத்த ஸ்தூபா மாதிரி இருந்துச்சு.  வலது பக்கம் ரொம்ப தூரத்தில் யானை வரிசையோ?   கெமெராக் கண்ணை அனுப்பிக் கிட்டக்கக் கொண்டு வந்தேன்.....ஹைய்யோ!!!!
இங்கே கொஞ்சம் க்ளிக்ஸ் முடிச்சுக்கிட்டு  அங்கே வாசலுக்குப் போகலாமுன்னு  சொன்னதால்   அப்படியே ஆச்சு.
சாலையின் அழகும், அகலமும், தரமும் எந்த ஒரு வெளிநாட்டு  அழகுக்கும்   குறைஞ்சதில்லை!   இந்தியாவா இது?  ஹா.....
சாலையின் நடுவில்   அலங்கார மேடை அமைப்பின் நடுவில்   நாலு திசையிலும் நாலு புத்தர்கள்.  நின்ற திருக்கோலம்!
கீழே இறங்கும் சாலையில்  சமாஜிக் பரிவர்த்தன் ப்ரதீக் ஸ்தல் என்ற பெயருடன் ஒரு கட்டடம். அதில்  ரெண்டு சிலைகள்.  ஒன்னு  டாக்டர் அம்பேட்கர், இன்னொன்னு பெஹன் மாயாவதி.

நினைவு மண்டபம் (?) வாசலில் போய் இறங்கினோம்.  முகப்புக் கட்டடத்துக்கே  ரொம்ப தூரம் நடக்கணும். பளிங்குத் தரையும், செயற்கை நீரூற்றும், அதில் இருக்கும் யானைகளுமா ஒரு வரவேற்பு.   டிக்கெட் உண்டு உள்ளே போய்ப் பார்க்க. ஆளுக்குப் பத்து ரூ!தோட்டமும் செடிகளுமா  அருமை!  இன்னும் கொஞ்சதூரம் நடந்து போனால் உள்ளே போகும் மெயின் கேட்!  வாசலில் ரெண்டு பக்கமும் யானைகள்.   15 ஜனவரி, 2003 ஆம் வருசம் பொதுமக்களுக்காகத் திறந்து வச்சுருக்காங்க  பெஹன்.  அப்போ அவுங்கதான் உத்தரப்ரதேஷின் முதல்வர்.     நாலு முறை முதல்வரா இருந்துருக்காங்க.
அவுங்க அரசியல் வாழ்க்கை, ஆட்சி இதெல்லாம் எனக்கு சரியாத் தெரியாதுன்னாலும் அவுங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  காரணம்....  அவுங்களும் யானைப்ரேமி  :-)

இந்த லக்நோவுக்குள் நுழைஞ்சதுலே இருந்து   'கேள்விப்பட்ட' யானைகளைக் கண் தேடிக்கிட்டே இருந்துச்சு. ஆனால் இதெல்லாம் தனியா ஒரு இடத்தில் இருக்குமுன்னு நினைச்சுப் பார்க்கலை.  ஊர் முழுசும் அங்கங்கே இருக்கும் என்ற எண்ணம்தான்....ஹிஹி...

ஆமாம்.... அது என்ன ஜனவரி 15க்குத் திறந்து வச்சுருக்காங்க?

 அன்றைக்குத்தானே அவுங்க பொறந்தநாள் :-)

கல்வெட்டைக் க்ளிக்கினதும், கேமெரா பேட்டரி உயிரை விட்டுச்சு.  காலையில் இருந்து  நைமிசாரண்யம், பரா இமாம்பரான்னு  ஏகப்பட்ட படங்கள் எடுத்ததில்  ரெண்டு பேட்டரியும்  தீர்ந்தே போச்சு.   இனி செல் கேமெராவே சரணம்  :-(
சமயம் பார்த்து இப்படிக் கழுத்தறுத்துருச்சேன்னு கொஞ்சம் சோகம்தான்.
முப்பது நாப்பதடி உயரம் இருக்கும்  பளிங்குத் தூண்கள்   ஏராளமா அங்கங்கே நிக்குது.  அதன் உச்சியில் திசைக்கொன்னாப் பார்க்கும் நாலு யானைகள்.
இது மெயின் கேட்டின் உட்புறம்.  ரெண்டு பக்கங்களிலும்  ஆண்கள், பெண்களுக்கான கழிவறைகள் இங்கே (மட்டும்)தான் இருக்கு.
மொத்த இடத்தையும் சுத்தி வந்தோமுன்னா கிட்டத்தட்ட  நாலரை லட்சம்  சதுர மீட்டர்களா இருக்கும்.  கால்கள் அசந்துதான் போகுது.   சில இடங்களில் பளிங்கு இருக்கைகள் போட்டுருக்காங்க.  வெயில் நேரத்துலே போனா....   பளிங்குத் தரைக்கும் அதுக்கும் சூடு பொங்கி  வரும். தாங்க முடியாது. நல்ல வேளையா  காலணியைக் கழட்டச் சொல்லலை என்றது ஆறுதல்.

(தாஜ்மஹல் தரையில் வெறுங்காலோடு ஓடுனது  இன்னும் மனசில் ஒட்டிக்கிட்டுத்தான் இருக்கு.  அன்றைக்கு 51 டிகிரி.  ஜூன் மாசம் 1994.  நேரம்  மட்ட மத்யானம். )

கொஞ்சம் சின்னச் செடிகளாத்தான் இருக்கு, நிழலுக்கு மரம்   ஏதும் இல்லைன்னு  சிலர் சொல்லிக்கிட்டு இருக்காங்கதான். இதுலே இன்னொரு விஷயமும் இருக்கு.  மரங்களை வச்சால் பறவைகள் வந்து கூடும்.  சும்மா உக்காருமோ?  எச்சமிட்டு எச்சமிட்டுக் கீழே பளிங்குத்தரை முழுக்க  அழுக்கு .... கழுவிவிட ஆட்கள் வைச்சு அது நதநதன்னு   அசிங்கமா இருக்காது?   என்னவோ போங்க.... எதுக்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிச்சுக்கிட்டுக் குறை சொல்லிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு?

இங்கே பார்வையாளர் நேரம் காலை 11 முதல்  மாலை 9 வரை  என்பதால் கொஞ்சம் வெயில்தாழப் போனால் நிம்மதியாச் சுத்தி வரலாம்.  நாமும் போனது  மாலை  நாலே முக்காலுக்கு என்பதால்  வெயில் சமாளிக்க முடிஞ்சது. இத்தனைக்கும்  இது கோடை காலம் கூட இல்லை.
நினைவகக் கட்டடத்துக்குள்  நாங்க போகலை. உள்ளே பெரிய பெரிய சிலைகள் (மனிதர்கள்) இருக்குன்னாலும்.... நின்னு பார்க்க நேரம் இல்லை. காலையில் இருந்து சுத்திக்கிட்டு இருக்கோமா.... களைப்புதான்.
நமக்கு வேண்டிய யானைஸ் எல்லாம் வெளியிலேயே இருக்கறதால் நல்லதாப் போச்சு.  விளக்கு அலங்காரங்கள் கூட ரொம்ப நல்லா இருக்குமாம். இருட்டும்வரை காத்திருக்காம திரும்பிட்டோம்.
வரிசைக்கு முப்பதுன்னு எதிரும் புதிருமா  அறுபது யானைகளைப் பார்த்து வாயடைச்சு நின்னேன்தான்.  எப்படி க்ளிக்கினாலும் மொத்த  யானைகளையும்  ஒரே ப்ரேமில் அடக்க முடியாது.  இந்த அழகில் கையில் இருக்கறது செல்ஃபோன் கெமெரா மட்டுமே.....ப்ச்.
அரசியல் சார்ந்த குழு ஒன்னு  எதிர்ப்பு காமிக்கிறோமுன்னு ஒரு நாள் இங்கே புகுந்து யானைகளை சிதைக்க ஆரம்பிச்சுருக்காங்க..... (பாவம்.... அதுகள் என்ன செஞ்சது?) நல்லவேளையா அதைத் தடுத்து நிறுத்துன கையோடு  ராத்திரியோட ராத்திரியா  பழுதான யானையைச் சரிப்படுத்திட்டாங்கன்னு சேதி.
அது ஒருவேளை இந்த யானையோ?
யானைகளுக்குப்பின்னாலே ஏகப்பட்ட அரசியல் இருக்கு பாருங்க.....
அரசாங்க கஜானாவைக் காலி பண்ணிட்டாங்க, பொது மக்கள் பணம் எல்லாம் போச்சுன்னு  ஏகப்பட்ட  குற்றச்சாட்டுகளும் குழப்பங்களும்  ஒரு பக்கம் இருக்க...
நம்ம  மாதிரியே இன்னொரு ஜோடியும்  யானை பார்க்க வந்துருக்கு !!!

பொதுவா எல்லா பெரிய   கட்டடங்களும்  ஒருவித வேலை வாய்ப்பைக் கொடுத்துருக்கு, இல்லையோ?  கொஞ்ச நேரத்துக்கு  முன்னே நாம் பார்த்த அந்த பரா இமாம்பாராவும்  சனம்  பஞ்சம் பொழைக்கக் கட்டுனதாகத்தானே சொன்னாங்க.

இங்கேயும் எத்தனை பேருக்கு  வேலை கிடைச்சுருக்கும் கட்டுமானத்தின் சமயம்....!

கட்டுன வீட்டுக்குப் பழுது சொல்ல நம்ம சனம் எப்பவும் ரெடி  :-(

இங்கேயாச்சும் தனியா ஒரு இடத்துலே  நினைவகம் கட்டி இருக்காங்க. நம்ம சிங்காரச் சென்னையில் பாருங்க....     உலகின் நீளமான கடற்கரை என்ற  பெத்த பெயர்  வச்சுருக்கும் மெரினாவை சமாதிகள் வச்சு இடுகாடா ஆக்கி வச்சுருக்காங்க.... ப்ச்.....   என்னமோ போங்க.....
கொஞ்சம் நின்னு நிதானமாப் பார்க்க வேண்டிய இடம், என்னைப் பொருத்தவரையில்....
இதுக்காகவே இன்னொரு முறை இந்த ஊருக்கு  வந்து ஒரு வாரம் தங்கத்தான் வேணும்.

கிளம்பி ஹொட்டேலுக்கு  வந்துட்டோம். களைப்பா இருக்குன்னு ஒரு காஃபி குடிக்க  கீழேஇருக்கும் ரெஸ்ட்டாரண்ட் போனால் பக்கோரா   கிடைச்சது!      நம்ம பஜ்ஜிதான்:-)
கெமெரா பேட்டரிகளை எல்லாம் சார்ஜரில் போட்டுட்டு  வலை மேயும் கடமைகள் முடிச்சு, இன்னொருக்கா பெட்டிகளையெல்லாம் பேக் பண்ணி......

    நம்மவர் கிட்டே  இது ஒரு ....   பழக்கம். அதுவும் பொட்டி அடுக்கணுமுன்னா.... ரொம்பவே  சந்தோஷப்படுவார்.  நான் எப்பவும் சின்னதா ஒரு கேபின் பேக்லே  தினப்படிக்கானதை வச்சுக்குவேன்.  ரொம்பத் தேவைன்னா மாத்திரமே பெரிய பெட்டியைத் திறப்பேன்.  நம்மவரும் அப்படித்தான்.... என்ன ஒன்னு  தினமும்  ரெண்டுமுறை சில சமயம் மூணு முறை தேவை வந்துரும்  அவருக்குன்னே   :-)


ராச்சாப்பாட்டுக்கு   ரூம் சர்வீஸில் ஒரு தாலி மீல்ஸ். ரெண்டு பேருக்கு   இதுவே தாராளம்.
நாளைக்குக் காலை ஊரைவிட்டுக் கிளம்பணும். நல்லாத் தூங்கி  எழுந்தால் நீண்ட பயணத்தை சமாளிக்கலாம்:-)

தொடரும்........ :-)

PINகுறிப்பு :  படம் பார்க்க விருப்பம் இருந்தால்....  ஆல்பம் இங்கே :-)Saturday, August 19, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்: பூண்டு வத்தக் குழம்பு !

அதான் எல்லா விசேஷ தினமும்  இன்னும் ஒரு வாரத்துக்கு இல்லைதானே? இன்றைக்குப் பூண்டு போட்டக் குழம்பைச் செஞ்சுடலாமா?

நம்ம வீட்டில் பூண்டு உபயோகம் கொஞ்சம் அதிகம்தான்.  பூண்டு சலுகை விலையில் கிடைக்கும்போது வாங்கியாந்து, உரிச்சுட்டு அப்படியே ஃப்ரீஸ் பண்ணிக்கலாம். இது  ஒன்னோட ஒன்னு ஒட்டாம ஃப்ரீ ஃப்ளோவாத்தான்   உறையும். தேவைப்படும்போது ஒரு கை அள்ளிக்கலாம் :-)

நெல்லுக்குத்த மாவரைக்க நீரிரைக்க  மெசினு  வரிசையில் பூண்டு மெசினு ஒன்னு நம்மாண்டை இருக்கு.என்ன ஏதுன்னு உங்களுக்குச் சொல்ல நேத்து படப்பிடிப்பும் நடத்தியாச்:-)
போனவாரம் நாலு பொதி, ஒவ்வொன்னும் 400 கிராம் வாங்கிவந்து,  முந்தாநாள் மெசினு வச்சு உரிச்சுதும் எடை பார்த்தால்  1427 கிராம்!  நாட் பேட் .  ஒரு 11%  தான்   தோல். மெசினு இல்லையா? நோ ஒர்ரீஸ்.....   ஹாட் ஏர் அவனில் ஒரு மூணு நிமிட்ஸ் (225 டிகிரி) வச்சு எடுத்தால்  தோலைச் சுலபமாக்  கழட்டி விட்டுடலாம் :-)
தினம்தினம் சமையல் செய்யறது கூடப் பிரச்சனை இல்லை.... ஆனால் என்ன சமைக்கலாமுன்னு முடிவு செய்யறதைப்போல் தலைவலி வேறொன்னும் இல்லை....

நம்மவரிடம் கேட்டேன்... என்ன சமைக்கலாமுன்னு....

பூண்டுக் குழம்புன்னார்!  ஓக்கே....  டன்!

பேன்ட்ரியை நோட்டம் விட்டப்பக் கொஞ்சம் சுண்டைக்காய் வத்தல் போன பயணத்துக்கு  முன் போன பயணத்துலே  வாங்கியாந்தது...  கொஞ்சூண்டு பாக்கி இருக்கு.  போன பயணத்துலே கொண்டு வந்த பொட்டலத்தைத்தான் குப்பையிலே கடாசிட்டாங்களே...  ஏர்ப்போர்ட்லே  :-(  நாட்டுக்கே ஆபத்து  உண்டாக்கும்  மினி குண்டூஸ்?

சரி. இனி குழம்பலாம் வாங்க :-)

தேவையான பொருட்கள்:

புளி  ஒரு  நெல்லிக்காய் அளவு. ஊற வச்சுக் கரைச்சு வச்சுக்குங்க.

தக்காளி  மூணு

வெங்காயம் பெருசா இருந்தால் ஒன்னு. சின்னதுன்னா ரெண்டு.

பூண்டு  பற்கள் உரிச்சது  ஒரு கைப்பிடி அளவு.

சுண்டைக்காய் வத்தல்  கால் கப்

(நம்ம வீட்டுக்குன்னு தனி அளவைகள் இருக்கு என்பதால் புளி க்யூப் ஒரு நாலு. தக்காளி வெங்காய வதக்கல் க்யூப்  ஒரு ஆறு )

இன்னும் கொஞ்சம் ருசியா இருக்கட்டுமேன்னு  ஒரு ரெட் வெங்காயமும் சேர்த்தேன்.
குழம்புப்பொடி  மூணு டீஸ்பூன்  (நம்ம வீட்டுக்குழம்புப் பொடி  கொஞ்சம் மைல்ட்.  உங்களுக்கு விருப்பம் என்றால் குழம்புப்பொடிக்குப் பதிலா  ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ரெண்டு டீஸ்பூன் மல்லித்தூள் சேர்த்துக்கலாம்)

மஞ்சள் தூள்   அரை  டீஸ்பூன்

உப்பு  ஒரு டீஸ்பூன்  (நம்ம வீட்டுலே உப்பு குறைவு.  நீங்க உங்க ருசிக்குச் சேர்த்துக்கலாம்)

நல்லெண்ணெய்  ஒரு ஏழெட்டு டேபிள் ஸ்பூன் . ( சமையல் எண்ணெய் உங்களுக்கு எது வசதியோ அதையே பயன்படுத்தலாம்)

கறிவேப்பிலை,

கடுகு அரை டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு கால் டீஸ்பூன் (ஒரு வாசனைக்குத்தான்)

பெருங்காயத்தூள்  அரை டீஸ்பூன்

வெந்தியம்  அரை டீஸ்பூன்  (நான் கொஞ்சம் வெந்தியத்தை ட்ரை மிக்ஸி ஜாரில் போட்டு அரைச்சுத் தூளாகவும் வச்சுருக்கேன்)


செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் ஏத்துங்க. தீ மிதமா எரியட்டும்.  எண்ணெய் ஊத்திக் காயவிடுங்க.  எண்ணெய் சூடானதும்  கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து, கடுகு வெடிச்சதும்  வெந்தியம், பெருங்காயத்தூள்,         சுண்டைக்காய் வத்தலைப் போட்டு  வறுத்துக்கணும். ஆச்சா? இப்போ கறிவேப்பிலை சேர்க்கலாம்.
பூண்டு & வெங்காயம் சேர்த்து வதக்கணும்.  இதுக்கு ஒரு நாலைஞ்சு நிமிட்ஸ் ஆகலாம்

மஞ்சள் தூள், உப்பு சேர்க்கலாம் இப்போ. ஒரு நிமிட் ஆனதும் குழம்புப்பொடி சேர்த்து வதக்குங்க.  கடாயில் இருக்கும் எண்ணெயிலேயே வதங்குனால் மிளகாய் நெடி போயிரும்.

அடுத்ததாக சேர்க்க வேண்டியது அரிஞ்சு வச்ச தக்காளித்துண்டுகள்.  (நான்  எடுத்து வச்ச  தக்காளி வெங்காய க்யூப்களைச் சேர்த்தேன். அடுத்து புளி க்யூப்ஸ் )

ஒரு கிளறு கிளறிட்டு, புளிக் கரைசல் சேர்த்துக் கூடவே கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக் கொதிக்க விடணும். ஒரு மூடியும் போட்டு வச்சுருங்க. அப்பப்பப் பார்த்துக் கொஞ்சம் கிளறிக்கொடுக்கணும் கேட்டோ.... இல்லைன்னா தண்ணீர் இல்லாம அடிப்பிடிச்சுரும்.

நாலு கொதி கொதிச்சவுடன், முந்திரிப் பருப்புகள் (!) மிதக்கும் பூண்டு, வத்தல் குழம்பு ரெடி!!
பூண்டு  சேர்க்க விருப்பம் இல்லாதவர்கள், இதையே பூண்டை விட்டுட்டுச் செஞ்சுக்கலாம்.  வெறும் வத்தல் குழம்பு ரெடி :-)

குழம்புப்பொடி நம் வீட்டு வகை:

முந்தி அதாவது இந்தியாவில்  வாழ்க்கை ஆரம்பிச்ச புதிதில்  கால் கிலோ மிளகாய் வத்தல், அரைக்கிலோ தனியா விதை,   அரைக் கப் துவரம் பருப்பு, அரைக் கப் கடலைப்பருப்பு, அரைக் கப் அரிசி,  கால் கப் உளுத்தம் பருப்பு,   கால் கப் மிளகு, கால் கப் சீரகம்  எடுத்து  வெயிலில் நல்லாக் காயவச்சு மெஷீனில் கொடுத்து அரைச்சு வச்சுக்குவேன்.

நாட்டை விட்டு வந்தவுடன் பார்த்தால்  இங்கே நம்மூர் மாவு மில் போல ஒன்னுமே இல்லை.  ஃபிஜியிலும் இப்படித்தான். வீட்டில்தான் அரைச்சுக்கணும்.

அதனால் சின்னதா ஒரு  மாத்து வழி கண்டுபிடிச்சேன்.

மிளகாய்த்தூள் ஒரு கப், தனியாத்தூள்  மூணு கப் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வச்சுக்குவேன்.  ஸ்பூனால் ரெண்டு கலக்கு கலக்கிக்கணும்.

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , அரிசி  தலா ஒரு  குழம்புக் கரண்டி,  ரெண்டு டேபிள் ஸ்பூன் மிளகு, ரெண்டு டேபிள் ஸ்பூன்  சீரகம்  எல்லாம் தனித்தனியா வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்துக்கிட்டுக் கொஞ்சம் ஆறுனதும் மிக்ஸி ட்ரை ஜாரில்  அரைச்சுச் சலிச்சு எடுத்துக்கணும். ஆச்சா?

இப்பப் பாத்திரத்தில் எடுத்து வச்ச பொடிகளுடன், இதையும் கலந்துட்டு, இன்னொருமுறை மிக்ஸியில் நாலு சுத்துச் சுத்தி எடுத்து வச்சால் துள்ஸீ'ஸ் குழம்புப்பொடி தயார்!

இன்னும் கொஞ்சம் குறுக்கு வழின்னு    மேலே ரெண்டாவதாச் சொன்ன பருப்பு வகைகள், மிளகு சீரக சேர்க்கையை மட்டும் கூடுதல் அளவில்  செஞ்சு  தனியாகப் பொடிச்சு அப்படியே எடுத்து வச்சுருக்கேன்.

சின்ன பாட்டில் தான் குழம்புப் பொடிக்குன்னு  எடுத்து வச்சுக்கிட்டு, அது தீரத்தீரக் கலந்து வச்சுக்குறேன்.

 மிளகாய்த்தூள் ஒரு குழம்புக்கரண்டி, மல்லித்தூள்  மூணு குழம்புக் கரண்டி, மேலே சொன்ன அரைச்சு வச்ச பொடிரெண்டு குழம்புக் கரண்டி !

சரியான சோம்பேறி............    :-)

PINகுறிப்பு: இந்தக் குழம்புப்பொடியை சாம்பாருக்குப் போடுவதில்லையாக்கும்!

 இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!