Wednesday, December 20, 2017

கருணைக் கடல்..... அதுக்காக அழ வைக்கணுமா? (இந்திய மண்ணில் பயணம் 91)

ராத்திரியெல்லாம் சரியாத் தூக்கமே வரலை.... எடுத்த காரியம் நிறைவேறப்போகுது என்ற எதிர்பார்ப்பும் பதற்றமுமாப் பொழுது விடியுமுன் எழுந்து தயாராகி அஞ்சே முக்காலுக்குக் கிளம்பியாச்சு.    சாலையில் இன்னும் போக்குவரத்து ஆரம்பிக்கலை.....  கூட்டமில்லாத காஞ்சி தெருக்கள் நல்லாதான் இருக்கு!
வாலாஜாபேட்டை ஸ்ரீபடவேட்டம்மன் ஆலயம்...கடந்து போறோம். பெரிய சிவன் உக்கார்ந்துருக்கார். மச்சான் தரிசனத்துக்கு உதவி செய்யணுமுன்னு  வேண்டிக்கிட்டேன். கோவிலில் பெரிய   அம்மன் சிலை கண்ணுலே படாமல் போக சான்ஸே இல்லை!  சக்தி! சக்தி கொடு தாயே....
கிளம்புன ஒன்னேகால் மணி நேரத்தில் ஊருக்குள் நுழைஞ்சாச்சு.  அதுக்கு முன்னாலேயே  தூரத்தில்   மலை உச்சியில் கோபுரம் கண்ணில் பட்டது! ஷோளிங்கர்! காலையில் வெய்யில் ஏறுமுன் போயிட்டால் நல்லதுன்னு  வாசிச்சதால் இந்தப் பரபரப்பு.
எதாவது சாப்பிட்டுட்டுத்தான் மலை ஏறணுமுன்னு நம்மவர் சொல்லிட்டார். படிகள் ஏற சக்தி  வேணுமாம்:-)  ஆர்யபவன் போனோம்.   அதே இட்லிவடைதான்.  நான் கொஞ்சம் சக்கரை தொட்டுக்கிட்டு சாப்ட்டேன். காஃபி வேணாம் எனக்கு.
இங்கே நாம் முதலில் போய் உக்கார்ந்த இடத்தில்  சரியாக் காத்து வரலைன்னு வேற இடம் மாத்தி  உக்கார்ந்தோம்.  இட்லிவடைக்குச் சொல்லிட்டுக் காத்துருந்த நேரம் படீர்னு ஒரு சத்தம். நாம் முன்னாலே  உக்கார்ந்துருந்த இடத்தாண்டை மேலே இருந்து பல்பு விழுந்து உடைஞ்சு  தரையெல்லாம் கண்ணாடிச்சில்லு.  ஏற்கெனவே பதைபதைப்பில் இருந்த எனக்கு பகீர்னு ஆச்சு. நல்லவேளை பெருமாள், நம்மை அங்கிருந்து எழுப்பி வேற இடத்தில் உக்கார்த்தி வச்சார்!  பல்பு கொடுத்துட்டாரா ன்னு ஒரு  எண்ணம் வேற ! திருஷ்டி கழிஞ்சது:-)
இந்த ஆர்யபவனுக்குத் தொட்டடுத்து  ஒரு ஹொட்டேல் இருக்கு.  இங்கே வந்து தங்கி காலையில் மலையேறிப் போகலாம். ஆனால் எப்படி வசதிகள் இருக்கோன்னு  தெரியலையே....
 ஷோளிங்கபுரம்  வர்றதுக்கு  ரெண்டு  மார்க்கம் இருக்கு. ஒன்னு திருத்தணி வழி. இது கொஞ்சம் கிட்டக்கதான்.  திருத்தணியில் இருந்து ஒரு இருவத்தியெட்டு கிமீ. இன்னொரு வழி காஞ்சிபுரத்தில் இருந்து. இது ஒரு அறுபத்தியெட்டு கிமீ.

காஞ்சியா, திருத்தணியான்னு  கேட்டதும், காஞ்சின்னேன்.  பாண்டிச்சேரியில் இருந்து  காஞ்சி வந்தது  இதுக்காகத்தான்.
சென்னையில் இருந்தும் போகலாம்.  பயண நேரம் கூடுதலாகும்.   ரெண்டரை மணி நேரம் பயணம் செஞ்சு அப்புறம் மலை ஏறணுமுன்னா  உடம்புக்கு அயர்வா இருக்குமுன்னு  முன் ஜாக்கிரதை நமக்கு.

  இதென்ன மலை ஏறணும் மலை ஏறனுமுன்னு  பயமுறுத்தறாளேன்னு  தோணுதா?  ஒன்னு ரெண்டு இல்லை  ....  ஆயிரத்து முன்னூத்து அஞ்சு படி!  அம்மாடியோவ்....   அப்புறம் இன்னொரு சின்னமலையும் இருக்கு!  அதுக்கு ஒரு நானூத்துச் சொச்சம். சரியாச் சொன்னால் நானூத்தியஞ்சு படிகள்.   ஒவ்வொரு மலைக்கும் ஒரு நாள்னு  போய் வந்தால் நல்லாத்தான் இருக்கும்.  நேரம் காலம் எல்லாம் ஒத்து வர வேணாமா?

பெரிய மலையில் ஸ்ரீ யோக நரஸிம்ஹ ஸ்வாமி இருக்கார். சின்ன மலையில் நம்ம ஆஞ்சி!  இவரும் யோகிதான்!   ரெண்டு தரிசனமும் அமைய அந்தப் பெருமாள்தான் உதவணும். உதவுவார்! (உதவினார்!!!)

ஏற்கெனவே முழங்கால் வலி. நம்மவருக்குக் கண்ணில் பிரச்சனை. ரொம்ப அதிர்வு கூடாது...

இங்கே வரணுமுன்னு முடிவு  செஞ்சுட்டு, அண்ணியிடம் பேசிக்கிட்டு இருந்தப்ப, அண்ணியின் தங்கை, சமீபத்துலே போய் வந்தாங்கன்னும்,  டோலி சர்வீஸ் இருக்குன்னும் சொன்னாங்க. கூடவே அவுங்களுக்குக்  கீழே விழுந்துருவோமோன்னு  பயமா இருந்துச்சுன்னும்  அடிஷனல் இன்ஃபோ.  எந்தமாதிரி டோலின்னு தெரியலை. அஹோபிலம் மாதிரி இருந்தால் எனக்கு வேணாம்.  வடக்கே  கேதார்நாத், வைஷ்ணவி கோவில்களுக்கு  இருப்பது போல் இருந்தாலும்  வேணாம்.  அங்கே போய்ப் பார்த்துட்டு முடிவு செய்யலாமுன்னு  இருந்தேன்.

இந்தப் பதிவு எழுதும் நேரம் ப்ரியா (அண்ணியின் தங்கை) பெருமாள்கிட்டே போயிட்டாங்க. இப்பதான் தீபாவளிக்கு அடுத்த மூணாம்நாள். இன்னும் என்னால் நம்பக்கூட முடியலை.  ஹூம்.....    

மலையடிவாரம் போய்ச் சேர்ந்தோம். ஆஞ்சி  நின்னு வரவேற்பு கொடுக்கறார். மலை மேல் எம்பெருமாள் ! அண்ணாந்து பார்த்துக் கும்பிட்டேன்.

கீழே  கோவில் பூஜைக்கான  தேங்காய் பழம் பூ விற்பனைக்கான கடைகள் ஏராளம். என்ன ஏதுன்னு யோசிக்கறதுக்கு முன்னேயே கோபாலின் கைகளில் ஒரு  மஞ்சப்பை வந்துருக்கு! அர்ச்சனைப் பொருட்களாம்!  கடைகளைத்  தாண்டினதும்  கோவிலுக்கு ஒரு அலங்கார வளைவு! வரவேற்கும் வாசல். படிகளின் ஆரம்பம் இங்கிருந்துதான்!
ஷோளிங்கர்னு சொல்றோமே தவிர  ஷோளிங்கர் ஊருக்கும் மலையடிவாரத்துக்கும் இடையில் நாலு கிமீ தூரம் இருக்கு. இந்த இடத்துக்குக் கொண்டபாளையம்னு பெயராம்.

நம்ம சீனிவாசன்  போய்  'டோலி'  விசாரிச்சதும் ஒருத்தர் வந்து நம்மைக் கூப்புட்டுப் போனார். பார்த்துட்டுச் சொல்றேன்னேன். ஒரு பத்துப்படிகள் ஏறிப்போனதும் டோலீஸ்  வந்தாச்.  சரிப்படலைன்னா மெள்ள மெள்ள ஏறிப்போகணுமுன்ற முடிவில் வந்துருந்தேன்.

கயித்துக் கட்டில் போல பின்னி இருக்கும் சதுரமான அமைப்பு. நாலு பேர் சேர்ந்து தூக்குவாங்க. (ஓ.... எப்படியும் நாலு பேர் தூக்கித்தானே ஆகணும். அதுக்கு  ஒரு  ட்ரெயல் பார்த்தாப்போல..... )  முதலில் நம்மவர் தனக்கு வேணாமுன்னார்.  கண்ணுக்கு அதிர்வு வேணாம்னு வற்புறுத்துனதும் சம்மதிச்சார்.  சீனிவாசன் நடந்து வரேன்னுட்டார். அவருக்கென்ன.... ஒல்லிப்பிச்சான்!

நடுவிலெ உக்கார்ந்துக்கணும். ஆடாமல் அசையாம இருந்தால் போதும். தரையை விட ஜஸ்ட் ஒரு அடி உயரத்துலே இருப்போம். விழமாட்டோம். அப்படியே விழுந்தாலும் அடி பட்டுக்கும் சான்ஸ் குறைவு.
யாரோ புண்ணியவான்கள் தயவால் படிகளுக்கு மேலே மேற்கூரை இருக்கு.
கோபால் முன்னாலும் நான் பின்னாலுமா கிளப்பப்பட்டோம். கோபாலின் முகம் எப்படி இருந்துருக்குமுன்னு ஒரு பிடியும் கிட்டலை :-) நான் அப்பப்பக் கொஞ்சம் க்ளிக்ஸ். கையை ரொம்ப நீட்டாமலும், ஆட்டாமலும்தான்.



ரெண்டு பக்கமும் முன்னோர்கள் தனியாவும், குடும்பமாவும் காட்சி  கொடுக்கறாங்க. 'சல்லியம் நிறைய இருக்கும். கையில் குச்சி வச்சுக்கிட்டு படிகள் ஏறணும். கொண்டு போகும் பொருட்களை ஒரு பையில்  வச்சு மறைவாக் கொண்டு போகணும்.' இப்படியெல்லாம் ஏகப்பட்ட காபந்துகள் இருக்கு.  முக்கியமா நம்ம மூக்குக் கண்ணாடியை அபகரிக்க வருவாங்களாம். கோபால் கையில் பை வந்த காரணம் புரிஞ்சுருச்சு. ஆனால் இத்தனை காலத்தில்  மஞ்சப்பை ரகசியம் அதுகளுக்குப் புரிஞ்சுருக்காதா என்ன? :-)
நம்மைச் சுத்தி நாலு பேர் வர்றதால் எனக்குக் கண்ணாடிக் கவலை இல்லை :-)
படிகளில் மஞ்சள் பூசி குங்குமம் வச்சுருக்காங்க. கூடவே உபயதாரர்கள் பெயரும்.

என்னதான் சொல்லுங்க.... நாம் உயிரோடு இருக்கும்போதே நாலு பேர் தூக்கிண்டு போனால் குற்ற உணர்ச்சி வருமா இல்லையா?  இதுலே' ஐயோ  குண்டா வேற இருந்து தொலைக்கிறோமே'ன்னு ....

'ரொம்ப கனமா இருக்கேனா' ன்னு  தூக்கும் குழுவைக் கேட்டேன். அதெல்லாம் இல்லைம்மா.... உங்களை விட டபுள் மடங்கு கனமா இருக்கறவங்களை எல்லாம் தூக்கிப்போயிருக்கோம்னு சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க.  'குண்டுக்கல்' தூக்கும் வேளையில் பேச்சு கொடுத்தால் அவுங்களுக்கு ஹிம்சையா இருக்குமேன்னு  வாயை மூடிக்கிட்டு இருந்தேன்.

மனசுக்குள் ஒரு தீர்மானம்.....   உடம்பைக் குறைக்கணும்...... பழைய துள்ஸி மாதிரி ஆவேனா?  வெறும் முப்பத்தியேழரை கிலோ....
அறுநூறு படிகள் பரபரன்னு ஏறிட்டாங்க.  காமணி நேரம்தான் ஆகி இருக்கு. சின்னதா ஒரு ப்ரேக்.  பத்து நிமிட்.  அடுத்த  பகுதி பயணத்துலே   எங்க குழு முந்திக்கிச்சு.  திரும்பிப் பார்க்க முடியாதே....    பதினாறு நிமிட்லே  மேலே போய் சேர்ந்துட்டோம்.  இறங்கினேன். நம்மவர் அதோ வந்துக்கிட்டு இருக்கார். சட்னு ஒரு சின்ன வீடியோ :-)


இவுங்களுக்கு  ப்ரேக்ஃபாஸ்ட்க்குக் கொஞ்சம் பணம் வேணுமாம்.  அங்கே ஏது கடை?  அதையெல்லாம்  கண்டுக்கக்கூடாது.....   கண்டுக்கலை நாங்க. எட்டுப்பேருக்கும் பசியாறக் கொடுத்துட்டு  மேலே ஏறிப்போறோம். நாம் திரும்பி வரும்வரை இவுங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்.
ஒரு இருபத்தியொரு படிகள் ஏறுனா ராஜகோபுரம். கொஞ்சம் செங்குத்தான படிகள்தான்.  இங்கிருந்து பார்த்தால் ஊரே தெரியுது சுத்திவர.
ஆடுகள் அங்கே இங்கேன்னு  மலைப்பகுதியில் உலாத்த, செல்லங்களும் அனுசரணையா அங்கே இங்கேன்னு ஓட்டம். ஒருவருக்கொருவர் உதவியா இருக்கணுமுன்னு நமக்குச் சொல்லிக் கொடுக்குதுங்க. முக்கியமா கைகள் இருப்பது  உதவி செய்யத்தானாம் ! (ம்ம்ம்ம்... ஆடே... ஆடாம நில்லு.... பேன் ஓடுது பாருது..... )

படிகளேறி ராஜகோபுர நுழைவு வாசலுக்குள் போறோம்!  திவ்யதேசக் கோவில்!!எனக்குச் சட்னு உணர்ச்சிப்பெருக்கில் கண்ணில் அருவி. நம்ம திவ்யதேச யாத்திரையில் இதுதான் கடைசிக்கோவில். படிகள் ஏறப் பயந்துக்கிட்டுத் தள்ளிப்போட்டுக்கிட்டே இருந்தேன். கிடைக்குமான்றதே சந்தேகமாத்தான் இருந்துச்சு.  பெருமாளே   உன்னிஷ்டம்னு  இருந்த நிலை.  கொண்டு வந்து  சேர்த்துட்டேடா.......
 ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடி  மங்களா சாஸனம் செய்த  நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு!  ஆழ்வார்கள் மட்டுமா.....  நம்ம  நாதமுனி ஸ்வாமிகள், திருக்கச்சி நம்பிகள், மணவாளமாமுனிகள், ராமானுஜர்னு பாசுரங்கள் பாடி இருக்காங்க.

அக்காரக்கனியேன்னு மனம் உருகி  உருகி.....!  அதென்ன கனியாம்?  அக்காரம்னா வெல்லம். வெல்லக்கட்டி. அதுவே மரமா முளைச்சு அதுலே இருந்து பழம் வந்தா எவ்ளோ இனிப்பா இருக்குமோ அவ்ளோ இனிப்பா இருக்கார் எம்பெருமாள் !   குழந்தைகளைக் செல்லக்கட்டி, பட்டுக்குட்டி,  வெல்லக்கட்டின்னு உச்சி மோந்து கொஞ்சறாப்லே நம்ம குழந்தையான பெருமாளையும் கொஞ்சறதுலே தப்பே இல்லை!  எனக்கும் இவன் குழந்தைதான்.

எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே.

சகுனம் சரி. 'போகலாம் ரைட் ரைட்டு'ன்னுக்கிட்டு இருந்தது,  ஒரு பட்டு!
இடப்பக்கம் இருந்த வழியில் கோவிலுக்குள் போறோம்.  படம் எடுத்துக்க அனுமதி வாங்கிக்கணும். கேமெராவைப் பையில் வச்சேன். உள்ளே போனால் ஆஃபீஸ் போல ஒன்னும் காணோம்.  கம்பித்தடுப்புக்குள் பக்தர்கள் வரிசையில் இருக்காங்க. இதுக்குள்ளே போக எந்த வழின்னு தெரியலை....  உள்ளே திரை போட்டுப்  பூஜை நடக்குதாம். முடிஞ்சதும் தரிசனத்துக்கு அனுமதி.
அப்பதான் ரெண்டு பேரைப் பார்த்தேன்.  கோவில் ஆட்கள் போல மனசுக்குப் பட்டது. போய்  சின்னதா அறிமுகம் செஞ்சுக்கிட்டு 'படம் எடுக்கலாமா'ன்னு கேட்டதுக்கு  'இங்கே எடுத்துக்கலாம் , உள்ளே போனபிறகு அனுமதி இல்லை'ன்னு  சொன்னாங்க.  அஞ்சாறு க்ளிக்ஸ் முடிச்சுட்டு,  இருவருடன் சின்ன உரையாடல். அப்பதான் தெரிஞ்சது  இவுங்க கோவில் ஆட்கள் இல்லை என்பது. பக்தர்கள்.  காஞ்சிபுரத்து மக்கள்.  மாசம் ஒருக்கா  இங்கே வந்து போறாங்களாம். பெயர்கள் சேஷாத்ரி & ரங்கநாதன்.




இதுதான் நம்முடைய நூத்தியெட்டு தரிசனத்தில் கடைசிக்கோவில்னு சொன்னேன்.  அவ்ளோதான்.... அடுத்த  நிமிடம் நடந்ததெல்லாம் எதோ மேஜிக் !

இதுக்குள்ளே கம்பித் தடுப்பு திறந்து  அதுக்குள்ளே வரிசையில் இருந்த பக்தர்கள்  உள்ளே நகர ஆரம்பிச்சுருந்தாங்க. வரிசையில் போய்ச் சேர நாங்களும்  வால்  எங்கேன்னு தேடிக்கிட்டுப் போறோம்....
பக்கவாட்டுக் கம்பித்தடுப்பு திறக்கப்பட்டு எங்களை அப்படியே அதுக்குள்ளே கூட்டிட்டுப் போயிட்டாங்க. கருவறை முன்மண்டபத்துலே  பக்தர்கள் குழுமி இருக்காங்க.  மூலவருக்கும் மண்டபத்துக்கும் இடையில் கம்பித்தடுப்பு!அந்தாண்டைப் பக்கமா எங்களை நடத்திக்கிட்டு போய்  கருவறைக்குமுன் கம்பித்தடுப்புக்கு அப்பால் இருக்கும் படிகளில் ஏத்தி விட்டுட்டாங்க!

யோக நரசிம்ஹர் ஜொலிக்கிறார்! அவருக்கும் நமக்கும் இடையில் ஒரு நாலடிதான்! இவ்ளோ பக்கத்தில் தரிசனம் கிடைக்குமுன்னு கனவிலும் நினைக்கலை.  கையும் காலும் பதற அப்படியே நிக்கறேன். கண்ணில் மீண்டும் அருவி.  இந்த முறை நயாக்ரா. நம்மவர்தான் ' கொஞ்சம் தள்ளி நில்லு.  மண்டபத்தில் இருக்கும் பக்தர்களுக்கு சாமியை மறைக்காதே'ன்னார்.  தூபதீப ஆராதனை முடிச்சு, கைநிறைய  தீர்த்தம்  அள்ளி பளீர்னு முகத்தில் அடிச்சுட்டாங்க. அருவியோடருவியா நல்லதாப் போச்சு.... முகத்தில் தீர்த்தமுன்னு சமாளிச்சுக்கலாம் :-)   நம்ம மஞ்சப்பை பொருட்களையும் வச்சு அர்ச்சனை செஞ்சு நமக்குப் பிரஸாதமாவும் கொடுத்தாங்க.

இதுவரை நான் ட்ரான்ஸ்லே இருந்தேன்.....  கருவறைப் படிகளை விட்டு இறங்குறப்பதான் பெரிய திருவடி தரிசனம் ஆச்சு. அதுவரை   நரசிம்ஹர் மேலே வச்ச கண்ணை எடுக்கலையே......   நல்ல அமைதியான முகம்!  ரெண்டு காதளவு சிரிப்பு!  ஸ்நேகமுள்ள ஸிம்ஹம் !
ஹிரண்யகசிபு வதம் முடிஞ்சது. ஆனால்  அப்போ ஏற்பட்ட கோபாவேசம் இன்னும்  அடங்கலை.  உடம்பு அப்படியே துடிச்சுக்கிட்டு இருக்கு.  கை, வாய், முகம்னு ரத்தம் தெறிச்ச முகம். பார்க்கவே பயமா இருக்கும் இவரை எப்படி சமாதானப்படுத்தன்னு தேவர்களுக்கு ஒரே  கவலை.  மஹாலக்ஷ்மியிடம் வேண்டறாங்க.  வந்து பார்த்த  மஹாலக்ஷ்மிக்கே  பயமாப் போயிருச்சு.  தங்க்ஸ் வந்ததும் ரங்க்ஸ் அடங்கிருமுன்னு  இருப்பதெல்லாம் மனுசருக்கான பூலோக நியமம். கொலைவெறி அடங்காத சிங்கத்தை எப்படி அணுகறது?  சுத்திமுத்தும் பார்த்தால் பாலகன் ப்ரஹலாதன் ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருக்கான்.

குழந்தையைப் பார்த்ததும் மனசு  இளகாதா,  இளகிடாதான்னு மெல்ல  அவனிடம் 'நீ போய் சமாதானப் படுத்து'ன்னுடறாங்க. குருவி தலையில் பனங்காய்.......  எப்பவும் நாராயணாய  நமஹ சொல்லும்  பாலகனுக்கும் உள்ளுக்குள்ளே உதறல்தான். தோற்றம் அப்படி இருக்கே!  பல்லும் நகமுமா....
தயக்கத்தோடு  ஸிம்ஹம் உக்கார்ந்துருக்கும் ஸிம்ஹாசனத்தாண்டை போறான்.  வாயில் நாராயண ஸ்துதி!  தலையைத் திருப்பிப் பார்த்த ஸிம்ஹத்துக்கு  உடலும் மனசும் அப்படியே  குளிந்துருது. வாய் நிறைய சிரிப்பு, கண்களில் கருணைப் பிரவாஹம்....  சட்னு  பாலகனை வாரி எடுத்து மடியின் மேல் வச்சுக்கறார்.

தேவர்களுக்கு நிம்மதி.   அதே  சிரிப்பும் கருணைப் பார்வையுமா இதோ நம்ம கண்ணெதிரில்.......

இங்கத்துத் தாயார் பெயர் அமிர்தவள்ளி.  இன்றைக்கு வெள்ளிக்கிழமை என்பதால் தாயார் ஊருக்குள்ளே இருக்கும் லக்ஷ்மிநரசிம்ஹர் கோவிலுக்குப் போயிருக்காங்களாம்.  'அங்கே   தாயாருக்குத் திருமஞ்சன ஸேவை  ஒரு பதினொரு மணியளவில் நடக்கும்.  கட்டாயம் போய் தரிசனம் பண்ணிக்குங்க'ன்னு  சொன்னாங்க,  நமக்குப் பெருமாள் அனுப்பிவச்ச இருவர்!

 நம்ம சேஷாத்ரிக்கும், ரங்கநாதனுக்கும்  நிறைஞ்ச மனசோடு  நன்றி சொல்லிட்டு வெளியே வந்தோம்.

பிரஸாதப்பையில் இருந்த  வாழைப்பழங்களை  வெளியே    கம்பித்தடுப்பு மண்டபத்துலே உக்கார்ந்துருந்த செல்லம் கை நீட்டி வாங்கிக்கிட்டான் :-)  இன்னொருத்தனும் வந்து அடுத்த  வாழைப்பழத்துக்குக் கை நீட்டுனது அருமை.  அதுதான் அந்த  ரெண்டாவது பழம் :-)

கோவிலை வெளிப்புறம் வலம் வர்றதுக்கு வழி இருக்கான்னு தெரியலை. அதுக்குள்ளே நம்மவர் விடுவிடுன்னு வெளிப்பக்கம்  போனதும் நானும் குடுகுடுன்னு  பின்னாலெயே போக  வேண்டியதாச்சு.
ராஜகோபுர வாசலாண்டை சில க்ளிக்ஸ் ஆனதும் கீழே இறங்கிப்போனோம்.



டோலி சுமக்கும் எண்மர் அங்கே  உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. எப்படி தரிசனம்னு கேட்டதும் அற்புதமுன்னு சொன்னேன்.

தொடரும்........... :-)

PINகுறிப்பு :  நேத்து இந்தப் பதிவை எழுதும்போதும் நெஞ்சில் நினைவு ததும்ப அப்படியே கண்ணீர் பெருகியது உண்மை.  அந்த இருவரைச் சுத்தியே  மனசு பூரா நினைவுகள்.   அவுங்க காஞ்சியில் இருந்து மாசம் ஒருமுறை  இங்கே  வர்றது வழக்கமுன்னா ஏன் அந்த நாளில் வரணும்? இல்லை நாம் ஏன் அன்றைக்குன்னு பார்த்து அங்கே போகணும்?  அவுங்களைப் பார்த்துட்டு, ஏன்  நான் போய் பேசணும்? எதுக்காக அவுங்க நம்மை சாமியாண்டை நேரடியாக் கூப்புட்டுப் போகணும்? இப்படி ஏகப்பட்ட ஏன்கள்!  எதோ ஒரு கணக்கு 'அவன் ' போட்டு வச்சுருக்கான் !!  அவனிஷ்டப்படியே எல்லாம்  நடக்குது.  நடக்க வைக்கிறான்.....  புரியாத புதிர்களில் இதுவும் ஒன்னு, இல்லே??

14 comments:

said...

காஞ்சி தெருக்கள் என்று இல்லை, பகலில் பரபரப்பாக பார்த்த எந்த ஊர்த் தெருக்கள், சாலைகளையும் இரவில் ஊர் அடங்கியபின்னோ, அதிகாலையிலோ பார்ப்பது தனி சுகம்.

said...

கார்த்திகை மாதம் மூன்றாம் வாரத்தில் ஒரு வியாழன் அங்கு சென்று வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அன்னதானம் செய்து திரும்புவார்கள் என் பாஸின் சித்தி, மற்றும் அவர் மகன், மருமகள்கள். நானும் ஒருமுறை சென்று வந்திருக்கிறேன்.

said...

ஆட்டுக்கு உதவும் குட்டிக்குரங்கார் - அற்புதம்.

ஆச்சர்ய தரிசனம். படிக்கும்போது எனக்கும் சிலிர்க்கிறது.

said...

ஆருக்குப் புரியும் அவன் போடும் கணக்கு. நன்றிகளுடன்.

said...

மனம் நெகிழ்ந்த பதிவு. படிகளும் திருப்பதி மலையில் உள்ள படிகள்போல் இருக்கிறது. அருமையான தரிசனத்தைக் கொடுத்துள்ளான். அவன் எண்ணத்தை அங்கிருந்த காஞ்சி பக்தர்கள் செயல்படுத்தினார்கள் என்றுதான் தோன்றுகிறது. நடந்த கால்கள் நொந்தவோ என்னும்படியாக நீங்கள் எல்லா திவ்யதேசக் கோவில்களையும் சேவித்துள்ளீர்களே. சும்மாவா?

அவன் என்னைக் கூப்பிடுகிறான்.. விரைவில் அவனை தரிசிக்கச் செல்லவேண்டும்.

அங்க பிரசாதம் உண்டு என்று சொல்வார்களே. அதைப் பற்றி நீங்கள் எழுதவில்லையே. (ஓ.. இன்னும் இடுகை முடியவில்லையே)

said...

டோலிப் பயணம் கண்டேன். அப்பப்பா.. எந்த சூழலையும் ஏற்கும் பக்கும் உங்களுக்கு.

said...

போக நினைத்து இன்னும்பொகாத இடம்

said...

நெகிழ்ச்சி.

அவன் கணக்கு நமக்குப் புரிவதில்லை! புரிந்து விட்டால் மகிழ்ச்சிக்கு எல்லையேது.

தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்,

கார்த்திகை மாசமா !!! ஆஹா கண் திறந்த தரிசனம் உங்களுக்குக் கிடைச்சுருக்கு! பாக்கியசாலி!

ஆடும் குரங்கும் எவ்ளோ அனுசரணையா இருக்குன்னு பார்த்து எனக்கும் வியப்புதான்!

அதிகாலை சிங்கை செராங்கூன் சாலை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காலை வீசிப்போட்டு நடக்கலாம்! பெருமாளை அதிகாலையில் ஸேவிப்பது இங்கேமட்டும்தான் எனக்கு சௌகரியம்.

நடைபாதை நடக்க மட்டுமே இருப்பதால் நிம்மதியான நடை இங்கே!

said...

வாங்க விஸ்வநாத் !

கம்ப்யூட்டர் மூளை அவனுக்கு :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நம் ஆசையை நிறைவேத்தி வச்சுட்டான் என்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமப் பண்ணிட்டான்!

எல்லாம் அவன் செயல். நாம் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வச்சாப் போதும்.... ஓடி வந்து உதவக் காத்திருக்கும் பெரிய மனசுக்காரன்!

விரைவில் உங்களுக்கும் தரிசனம் அமையட்டும்!

பொதுவா, பிரசாதங்களில் ஆர்வம் இல்லை...... பலசமயம் தயங்கத்தான் வேண்டி இருக்கு.....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா!


அந்த மனப்பக்குவத்தையும் கொடுப்பவர் 'அவர்' இல்லையோ!!!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

சிரமம் அதிகமுன்னு பயந்துதான் இருந்தேன். லகுவான வழியும் அமைஞ்சது!

சந்தர்ப்பம் அமைந்தால் கட்டாயம் போய் வாருங்கள்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அவனன்றி அணுவும் அசையாது ன்னு பெரியவங்க சொல்லி வச்சது எவ்ளோ உண்மை!!!


நல்லபடியா நடத்திக்கொடுத்த எம்பெருமாளுக்கே அத்தனை புகழும் சமர்ப்பணம்.