Friday, December 22, 2017

திருக்கடிகையில்....ஒரு கடிகை... (இந்திய மண்ணில் பயணம் 92)

ராஜகோபுரப் படிகளில் கீழே இறங்கி வந்து  'நம் பாரம்' சுமந்த எண்மருடன் கொஞ்சம் பேசிக்கிட்டு இருந்தப்ப , 'பக்தர்கள் வருகை  எப்படி இருக்கு? டோலி சர்வீஸை  அதிகம் பயன்படுத்தறாங்களா' ன்னு சின்ன விசாரிப்பு. ரெண்டு வாரமா பக்தர்கள் வருகை குறைச்சல்தானாம். அதுவும் இந்த வாரம் யாருமே டோலி சர்வீஸ் பயன்படுத்திக்கலையாம். சனிக்கிழமைகளில்  கொஞ்சம்  கூடுதலா பக்தர்கள் வருகை இருக்கும் என்றாலும்  மறுநாள் சந்தேகம்தானாம்.  பொழுது விடிஞ்சால் தீபாவளி இல்லையோ....
இவுங்களுக்குன்னு இங்கே  சங்கம் இருக்கு.  அதில் பதிவு செஞ்சுக்கிட்டவங்களுக்கு  மட்டுமே டோலி சுமக்க அனுமதி.  அதில் தற்சமயம் நாப்பத்தியொரு அங்கத்தினர். டோலிக்கு  நிர்ணயித்த கட்டணத்தில்  இருநூறு ரூபாய் சங்கத்துக்குப் போயிரும். இப்படி  ஒரு நாளில் எல்லா சவாரியும் முடிஞ்சபிறகு பாக்கி இருக்கும் காசு இந்த நாப்பத்தியொரு அங்கங்களுக்கும் சம அளவில் பிரிச்சுக் கொடுத்துருவாங்களாம். இந்தப் பங்கீட்டு முறை நல்லாதான் இருக்கு. வேலைக்குச் சான்ஸ் கிடைக்கலைன்னு பட்டினியா யாரும் இருக்க வேணாம், பாருங்க !

டோலி, இதுக்கான தாம்புக்கயிறு, தோளில் சுமக்கும்  உருண்ட  மூங்கில் கழிகள்  பராமரிப்புச் செலவெல்லாம் சங்கத்தைச் சேர்ந்தது.
விசேஷ நாட்களில்   நல்ல வருமானம் இருப்பது உண்மைதான்.   ஒரு டோலிக்கு நாலு பேர்னு   வரிசைக்கிரமப்படி அனுப்பறது  சங்கத்தின் பொறுப்பு.  ஆனால் எல்லாருக்கும் எல்லா நாட்களிலும் வேலை கிடைக்கறதில்லை. இன்றைக்குக் கடைசியா  எந்த நாலு பேர் வேலை செஞ்சாங்களோ அவுங்களுக்கு அடுத்த நால்வர் மறுநாள் காலையில் முதலில் வேலை ஆரம்பிக்கணும். இதுவரை பிரச்சனை ஒன்னும் இல்லாமல் சங்கம் ஒரு ஒழுங்கில் நடந்துக்கிட்டு இருக்குன்னு சொன்னது கேக்கவும் சந்தோஷமா இருந்துச்சு. தொழிற்சங்கங்களில் எத்தனையோ பிரச்சனைகளைப் பார்த்தும் கேட்டும் இருக்கோமில்ல.....  (கேரள வாசத்தில் பொழுது விடிஞ்சால் தொழிலாளர் ஊர்வலம்தான்...அதுவும் ஒத்தை வரிசையில்  போவாங்க.  அனுமன் வால் போல   நீளமா.....) 
ஒருநாளைக்கு எத்தனை ட்ரிப் உங்களுக்குக்கிடைக்குமுன்னு கேட்டதுக்கு ரெண்டு முறைதான் அதிகப்பட்சம்னு சொன்னாங்க. அதுவும் விசேஷ காலங்களில்தானாம்.  வயித்துப்பிழைப்புக்கு என்னெல்லாம் கஷ்டப்பட வேண்டி இருக்கு பாருங்க......
மேலே இருந்து கிளம்புன இருபதாவது  நிமிட்டில் அடிவாரம் வந்து சேந்துட்டோம். வழியில் ஸ்டாப்பிங் கிடையாது.    வந்த வழியில்  சப்தரிஷி மண்டபமுன்னு  ஒன்னு காமிச்சாங்க. அவுங்க சொல்லலைன்னா நான் கவனிச்சுருக்க சான்ஸ் இல்லை.  மேல்கூரை கொஞ்சம் மறைச்சுருது.  மண்டபத்துலே கொஞ்சம் கடைகள் இருக்கு.  காஃபி, டீ,    தண்ணீர் பாட்டில், சிறு தீனிகள் விற்பனை..  போறபோக்கில் படபடன்னு கொஞ்சம் க்ளிக்ஸ்.




மண்டபத்தின் மேல்பகுதியில் அழகான சிற்பங்கள். புதுசா வண்ணம் பூசி இருக்காங்க. ஆனால் முழு அழகையும் பார்க்க முடியாதபடி  கடைக்காரர்கள் ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு  இழுத்துக்கட்டி விட்டுருக்காங்க. இருக்கும் அழகைக் குலைக்காமல் இருக்கப்டாதோ?


இங்கே பக்கத்தில்  மலையில் கழிப்பறை வசதி  இருக்கு.  நல்ல சமாச்சாரம்.


இந்த  ஊருக்குப் புராணப்பெயர் திருக்கடிகை.  கடிகாச்சலம் என்று மலைக்குப் பெயர்.  சப்தரிஷிகள் இருந்தாங்க பாருங்க.... அவுங்க ஏழுபேரும்  (கஷ்யபர், வசிஷ்டர், ஜமதக்னி, பரத்வாஜர், அத்திரி, கௌதமர், வாமதேவர்) நரசிம்ம அவதாரத்தைக் கேள்விப்பட்டு,  அப்படி  நரனும் சிம்ஹமுமா இருக்கும்  அற்புத அவதாரத்தைப் பார்க்கணும் என்ற ஆசையில்  இங்கே வந்து  தவம் செய்ய ஆரம்பிக்கறாங்க.

கண்ணை மூடி உக்கார்ந்த ஒரு கடிகை நேரத்துக்குள்'டான்'னு  அவுங்களுக்குக் காட்சி கொடுத்துட்டார் நம்ம நரஸிம்ஹர்.  அவரும்  இதுக்குன்னே காத்துக்கிட்டு இருந்தாரோ என்னவோ?  சின்னப்பிள்ளைங்க ட்ரெஸ் அப் பண்ணிக்கிட்டு ஓடி வந்து காட்டுவாங்களே அந்த மாதிரி :-)

பக்தன் கூப்பிட்டவுடன் வந்துறனுமுன்னு   ஒரு தீர்மானம் எடுத்துக்கிட்ட மனசு.  பக்தன் ஏமாந்துடக்கூடாது  என்ற எண்ணம் கொண்டவர்.  ஹிரண்ய வத சமயத்தில் கூட...   'எந்தத் தூணில் உன் நாராயணன் இருக்கான்'னு    பிரஹலாதனைக் கேக்கறார் அப்பா ஹிரண்யன்.  குழந்தை எந்தத் தூணைக் காமிக்கப் போறோனோ, நாம் ஒளிஞ்சு நிக்கும் தூணை விட்டுட்டு வேற தூணைக் காமிச்சுட்டா.....  கதை கந்தல் ஆகிரும். குழந்தை ஏமாந்து  அசிங்கப்பட்டுப் போயிருவானேன்ற பதைப்பில்  இந்த சிங்கம், அந்த சபையில் உள்ள எல்லாத் தூண்களிலுமே  ஒளிஞ்சு நின்னதாமே! 

ஒரு கடிகைன்னா  இப்பத்து  நேரக் கணக்கிலே  இருபத்தி நாலு நிமிட்ஸ். ஒரு நாழிகை நேரம். நாம் நேரம் பார்க்கும் கடிகாரத்துக்குக்கூட , கடிகாரமுன்னு பெயர் இந்தக் கடிகை  என்ற சொல்லில் இருந்து  வந்துருக்கும்னு ஒரு தியரி இருக்கு.

 அந்தக் கால பெரியவர்களின் வழக்கபடி,  காட்சி கொடுத்த கடவுளிடம்,  இதே போல  இங்கேயே கோவில் கொண்டு,  ஒரு கடிகை நேர அளவில் இங்கே தங்கும்  அனைவருக்கும் அருள் புரிய வேணுமுன்னு  கேட்டுக்கிட்டாங்க சப்தரிஷிகள்.  சிரிக்கும் சிம்ஹம், சம்மதிச்சது !

 சும்மா  மலைமேல் ஏறி உக்கார்ந்து இருந்தால் போரடிக்காதா?  இருக்கேன்னு வேற சொல்லிட்டோமே.....  ரிஷிகள் போல நாமும் தவம் செய்யலாமேன்னு  ஆரம்பிச்சுருக்கலாம்.  தவம் முத்திப்போய் யோகநரஸிம்ஹராகவும் ஆகி இருப்பார் இல்லே?
நம்ம விஸ்வாமித்ரர்  கூட  இங்கே வந்து  தவம் செஞ்சுதான் ப்ரம்மரிஷி  பட்டத்தை வசிஷ்டர் வாயாலே சொல்ல வச்சுருக்கார்!  அதுவும் தவம் செய்ய ஆரம்பிச்ச கொஞ்ச காலத்துலேயே!

இதுலே பாருங்க... மலை கொஞ்சம் பெருசுதான். நல்ல உயரம். படிக்கட்டுகள்  பிற்காலத்துலே வெட்டி இருப்பாங்க. எப்படியும்  மேலேறிப்போய் நரஸிம்ஹரைக் கும்பிட்டுக் கீழிறங்கி வர நாலைஞ்சு கடிகை நேரம்  ஆகத்தான் செய்யும்.  அதனால்  வந்து போற எல்லாருக்கும் பெருமாளின் அருள் கிடைச்சுருது!  அவர் கணக்குப்படிப் பார்த்தாலும் 'நடந்து 'போனால்  நமக்குக் கிடைப்பது   குறைஞ்சபக்ஷம் அஞ்சு மடங்கு அருள்! அநேகமா  நமக்கு ஒரு ஒன்னரை மடங்கு அருள் கிடைச்சுருக்கும். அவர் கணக்கு யாருக்குத் தெரியுது சொல்லுங்க!
அதுவும் கார்த்திகை மாசத்துலே இங்கே தரிசனத்துக்குப் போறவங்களுக்கு  போனஸ் வேற உண்டு.   யோக நரஸிம்ஹப் பெருமாள் கண்கள் திறந்த நிலையில்  ஸேவை சாதிப்பாராம்! (அப்ப கார்த்திகையில் ஒருக்காப் போய்த்தான் வரணும். விஞ்ச் போடப்போறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது வரட்டும். போயிட்டு வரலாம். கார்த்திகை..... கார்த்திகை... மூளையில் முடிச்சு !)

மலை அடிவாரத்துக்கு வந்து சேர்ந்ததும், எண்மரையும் க்ளிக்கிக்கிட்டேன்.   மஞ்சள்பையை அவுங்ககிட்டேயே கொடுத்து பிரஸாதம் எடுத்துக்கச் சொன்னார் நம்மவர். எல்லோருக்கும் கொஞ்சம் அன்பளிப்பும் ஆச்சு.

'குண்டுக்கல்'லைத் தூக்கி வந்ததுக்கு நிறைஞ்ச மனசோடு நன்றி சொன்னேன்.  அவுங்களும்   'உங்களாலதான் நாளைக்கு தீபாவளி நல்லபடியா நடக்கப்போகுது'ன்னாங்க......  நம்மவர் அவுங்களுக்கு இன்னும் கொஞ்சம்   கூடுதல் அன்பளிப்பு, தீபாவளிச் செலவுக்குன்னு  கொடுத்தார். ரெண்டு தரப்புக்கும் மகிழ்ச்சியே!
பெரியமலை தரிசனம் ஆச்சு. இப்போ சின்ன மலைக்கு நம்ம ஆஞ்சியை தரிசிக்கப் போகணும். நம்மவர் 'டோலி வேணாம். நடந்து போகப்போறேன்'னு  சொன்னதால், ஒரு டோலி போதுமுன்னு முடிவு. நானும் மெள்ள நடந்தே வரேனேன்னதுக்கு,  ரிஸ்க் எடுக்க முடியாதுன்னுட்டார்...



அதுக்கு வேற ஒரு செட் ஆட்கள் வருவாங்க. நீங்க  மலை அடிவாரத்துக்கு வந்துருங்கன்னு சங்கத்துலே சொன்னாங்க. சங்கக் கட்டடத்துத் திண்ணைகளில்  டோலி சுமக்கும் மக்கள், பக்தர்கள் வரவை எதிர்பார்த்துக்  காத்திருந்தாங்க.  மறுநாளைக்கான செலவை எப்படி சமாளிக்கப்போறோம்   என்ற கவலை நிறைஞ்ச முகத்தோடு இருந்தாங்களோன்னு  எனக்கொரு தோணல்..........
கட்டடத்துக்குப் பின்பக்கம் தெரியும் மலையையும், கோவிலையும் இன்னொருக்காக் கும்பிட்டேன்.   யப்பா.... எவ்ளோ உயரம்! ஒரு நாளைக்கே நமக்கு இப்படி ஆகுதுன்னா.... 

தினம் மலையேறி வந்து  பெருமாள்  கைங்கரியம் பண்ணும் பட்டர்ஸ்வாமிகளுக்கும், கோவில் ஊழியர்களுக்கும்  மனம் நிறைஞ்ச  பாராட்டுகளைச் சொல்லத்தான் வேணுமுன்னு  இருக்கு!



  கோவிலுக்கான ஆஃபீஸும் இதே கட்டடத்தில்தான்.  அன்னதானத்துக்கு நன்கொடை கொடுக்கறதா இருந்தால் இங்கே கொடுக்கலாம். இதே கட்டடத்தில்தான் சாப்பாடும். நல்லவேளை மலை உச்சியில் அன்னதானமுன்னு சொல்லலை !

கோவில் காலை எட்டு மணி முதல் மாலை அஞ்சரை வரை திறந்து வைக்கிறாங்க.  மதியம் நடை அடைப்பது இல்லை.  ரொம்ப நல்லது.


சரி, வாங்க நாம் சின்ன மலையாண்டை போகலாம்....

தொடரும்.........:-)


13 comments:

said...

படிகளில் அமர்ந்திருக்கும் குடும்ப அங்கத்தினர் ஒருவர் நான் சென்றபோது என் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலைப் பிடுங்கிச் சென்றார். கடைக்காரர்கள் இவர்களுக்கு பயந்தேதான் திரை போட்டிருக்கிறார்கள்!

ஆம், தினசரி மலை ஏறும் கோவில் ஊழியர்களை நினைத்ததேயில்லை நான்.

எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியிருக்கும் ஸ்ரீ அமிர்தபாலவல்லி சமேத லக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸ்வாமி சுப்ரபாதம் எனக்குப் பிடித்த ஒன்று.

said...

ப்ரமாதம் அருமை நன்றி

said...

காலையில் படித்து விட்டேன். கருத்துரைக்க முடியவில்லை.

உழைப்பாளிகள் - அவர்களுடன் பேசுவது அவர்களுக்கும் சந்தோஷம் தரும் - நமக்கும்!

படங்கள் வழமை போலவே அழகு.

தொடர்கிறேன்.

said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. பெருமாள் தரிசனமும் திவ்யமாக அமைந்தது.

கோவில் கைங்கர்யபர்ர்கள் சேவை (எல்லோரும்) போற்றத்தக்கது. நிறைய தடவை, தெய்வத்தின் அருகில் இருந்தபோதும் கடமையில் கருத்தாக இருக்கவேண்டிய பணி. பக்தர்களை பெருமாள் சேவைக்கு அழைத்துச் செல்லும் உயரிய பணி செய்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

said...

மிக நன்றி துளசி. உங்க வழியா எனக்கு நினைவு கொடுத்திருக்கிறார்.

said...

நான் இக்கோயிலின் அருகே உள்ள புலிவலம் என்ற கம்பெனிக்கு ஒரு வாராம் அலுவலக வேலையாகச் சென்றபோது கோயிலுக்குப் போக நினைத்தேன் . ஆனால் மிகுந்த உயரம் என்பதால் போகவில்லை . பதிவில் முழு விவரம் அறிந்தேன் நன்றி

said...

நான் இக்கோயிலின் அருகே உள்ள புலிவலம் என்ற கம்பெனிக்கு ஒரு வாராம் அலுவலக வேலையாகச் சென்றபோது கோயிலுக்குப் போக நினைத்தேன் . ஆனால் மிகுந்த உயரம் என்பதால் போகவில்லை . பதிவில் முழு விவரம் அறிந்தேன் நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்.

என்னைச்சுத்தி நாலுபேர் இருந்ததால் நம்மாட்கள் யாரும் கிட்டக்க வரலை. கடைக்காரர்களுக்கும் தொந்திரவாகத்தான் இருக்கும். ஆனால் போடும் திரையை ஒரு ஒழுங்கில் போட்டுருக்கலாம். பார்க்கவும் நல்லா இருக்கும்.

நீங்க சொல்லும் அந்த 'சுப்ரபாதம்' நான் கேட்டதே இல்லை. வலையில் இருக்கான்னு தேடணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நாலு வார்த்தை பேசுனவுடன் உழைக்கும் சனத்துக்கு எவ்ளோ மகிழ்ச்சின்னு பார்க்கும்போது, நமக்கும் மகிழ்ச்சி கூடுதலா ஆறது !

நன்றியுடன் இப்பவும் அவுங்களை நினைச்சுக்கறேன்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரசித்து வாசித்தமைக்கு நன்றி!

அன்றும் இன்றும் என் மனம் நிறைந்தே போச்சு!

அம்மக்கள் நல்லா இருக்கணும்!

said...

வாங்க வல்லி.

பெருமாள் உங்களுக்குக் கொசுவத்தி ஏத்திட்டார் !!!!

தோணும்போது ஒரு பதிவா எழுதுங்கப்பா! நினைவலைகள்.....

said...

வாங்க அபயாஅருணா!

முதல் வரவுக்கு நன்றி.

ஒருவாரம் இருந்தீங்களா? ஆஹா......

அடுத்த முறை இப்படிச் சான்ஸ் கிடைச்சால் விட்டுடாதீங்க? ரொம்ப அழகான பெருமாள் அண்ட் ஆஞ்சி !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றிகள் !