Wednesday, December 06, 2017

வரம் தரும் வரதராஜர் (இந்திய மண்ணில் பயணம் 85 )

காலையில் சீக்கிரமா தயாராகி ஏழரைக்கெல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போயிட்டோம். வெண்பொங்கல், இட்லி வடை கிடைச்சது. சுமார் ரகம்தான். எனக்கென்னவோ நம்ம லோட்டஸை இந்த   ப்ரேக்ஃபாஸ்ட் விஷயத்தில் யாராலும்  பீட் பண்ணமுடியாதுன்னே தோணும்.
கொஞ்சம் அக்கம்பக்கம் க்ளிக் பண்ணிக்கிட்டு, எட்டேகாலுக்கே செக்கவுட் செஞ்சுட்டு, ஷெண்பகாவுக்குக் கிளம்பியாச்சு.  நம்மவரை ஒன்பது மணிக்கு  அங்கே வந்து கூப்பிட்டுப் போவார்  நண்பர்.   எட்டே முக்காலுக்கு  ஷெண்பகாவில் செக்கின் ஆனதும்,   என்னை  பத்திரமா 'ஊர் சுத்த'ச் சொல்லிட்டு  (ஒரு நூறுமுறை)  இவர் கிளம்பிட்டார்.

சீனிவாசன் சாப்பிடப்போயிருக்கார். கொஞ்சம் வலை மேயல் ஆச்சு.  அதுக்குள்ளே இன்றைக்கு எங்கெங்கே போகணுமுன்னு  பார்த்து வச்சுக்கிட்டேன்.  ஒரு நண்பரையும் சந்திக்கலாமுன்னு எண்ணம். நேத்து இன்னொரு தோழிக்கு, நான் பாண்டி வந்த விவரம் சொல்லி, சந்திக்க இயலுமான்னு  கேட்டுருந்தேன்.  அவுங்களுக்கு  திடீர்னு உடல்நலக்குறைவு காரணம் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னாங்க.  சீக்கிரம் நலம் பெறட்டும்.

அதிதி இருக்கும் இதே சாலையில் ரெண்டு நிமிட் நடையில்  நம்ம வரதராஜர் இருக்கார்.  அங்கே போய் இறங்கினதும், சீனிவாசன் பார்க்கிங் தேடப்போனார். எப்பவும் கவனிச்சுருக்கேன்.... நம்மவர் இல்லாமல் நான் தனியா சுத்தும்போது, சீனிவாசன், ட்ரைவர் என்ற பொறுப்பு ஒரு பக்கம் இருந்தாலும்,  'மேடத்தின் பாதுகாப்புக் காவலராக' அவதாரம் எடுத்துருவார்.  நல்லதுதான்....

போக்குவரத்து அதிகமா இருக்கும் மகாத்மா காந்தி சாலையில் இப்படி ஒரு கோவிலா!   அஞ்சடுக்கு ராஜகோபுரம். பார்க்க நல்ல உயரமாவே இருக்கே!


கோபுரவாசலில் நுழைஞ்சதும்  பலிபீடம், கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதி எல்லாம் சம்ப்ரதாயமான முறையில்!
கோவில்பூனை:  


கோவிலைச் சுற்றி வந்து பார்த்தால் சுவர்களில்  எல்லாம் திருவாய்மொழி, திருவந்தாதி, திருமாலைன்னு   ஆழ்வார்கள் அருளிச்செய்த பாசுரங்கள் கல்வெட்டுகளாக......

கண்ணில் ஒத்திக்கறமாதிரி சித்திரங்களா வேற விதானம் தொடங்கி அங்கே இங்கேன்னு வரைஞ்சு தள்ளி இருக்காங்க.

படம் எடுத்துக்கலாமான்னு  ஆஃபீஸில் போய் விசாரிச்சேன். நம்மைப் பத்தி விசாரிச்சுட்டு, ஒரு லெட்டர் எழுதிக் கொடுக்கச் சொன்னாங்க. மேலிடத்து அனுமதி  வாங்கணுமாம். எழுதிக் கொடுத்துட்டு,  ' மூலவரை ஸேவிச்சுட்டு வரேன்'னு  சொல்லிட்டுப் போனேன்.

என்ன ஒரு அழகான பெருமாள்! அஞ்சடியில் கம்பீரமாக நிக்கறார்  வரதராஜர்!   அலங்காரம் அட்டகாசமா இருக்கு!  பூமியில் இருந்து கிடைச்சவராம்! மரத்தில் செஞ்ச  சிலைன்னதும் எனக்கு நம்ம அத்திவரதர் நினைவுக்கு வந்தார்.

 மூலவர் படம்:  கூகுளாண்டவர் அருளிச்செய்தது.


வரிசையில் போய் தீர்த்தம், துளசி,  சடாரி எல்லாம் கிடைச்சது.  நம்மவர் பார்க்கலையேன்னு மனக்குறை வந்தது உண்மை. கருவறையைச் சுற்றி வர சின்னதா பிரகாரம் இருக்கு. சுவர்களில் நூத்தியெட்டு திவ்யதேசப் பெருமாள்கள்!

பெருந்தேவித் தாயார். தேவாதிராஜன் உற்சவர்னு  அமர்க்களமா இருக்கு  கோவில்!  வரங்களை அள்ளித் தரும் வரதராஜர்னுதான் எல்லோரும் சொல்றாங்க.

 திரும்ப  ஆஃபீஸுக்குப்போய் என்ன ஆச்சுன்னு விசாரிக்கலாமுன்னு  போனால்,  'படம் எடுத்துக்குங்கோ, மூலவரை விட்டுட்டு'ன்னு  அனுமதி கிடைச்சது.

'இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆழ்வார்களுக்கு திருமஞ்சனம் ஆகப்போறது. இருந்து  ஸேவிச்சுட்டுப் போங்க'ன்னும் உத்தரவாச்சு !  கரும்பு தின்னக் கூலியா?


ரங்கவிமானத்தின் கீழ்  ரங்கன், நரசிம்மர்,  வைகுண்ட வாசன் இப்படி கழுத்து வலிக்க வலிக்கப் பார்க்கும் விதத்தில்  விதானத்தில்!  ஆண்டாள் கல்யாணம் ரொம்பவே விலாவரியாக....   நாரணன் நம்பி  நடக்கின்றான் ............ மைத்துனன் நம்பி மதுசூதன்  வந்தென்னைக் கைத்தலம் பற்றியது .... ன்னு அட்டகாசம் போங்க!  ஒரு  கல்யாணத்தை முழுசாப் பார்த்த திருப்தி !







ராமர் சந்நிதியில் இருக்கும் சிலைகள் எல்லாம்  1902 ஆம் வருஷம்  வைந்திக்குப்பம் என்ற இடத்தில் பூமியில் இருந்து கிடைச்சதாம்!   ராமர் மட்டுமில்லாமல்,  வேணுகோபால், சந்தானகோபால், நவநீத கிருஷ்ணன்னு  சிலைகளும் அங்கே கிடைச்சதாம்.  எல்லோருக்கும் இங்கே இடம் கொடுத்தாச்சு.  என்ன ஒன்னு ... சந்நிதிகள் மூடி இருந்துச்சே!   பட்டர்கள் எல்லாம் இன்றைய திருமஞ்சன ஸேவையில் பிஸியா இருக்காங்கன்றதும் காரணமா இருக்கலாம்.





சுத்தி வந்து  ஊஞ்சல் மண்டபத்தைப் பார்த்ததும் வாய் அடைஞ்சுதான் போச்சு!  என்னமா  வரைஞ்சுருக்காங்க  பாருங்க!! இந்த மண்டபத்து அமைப்பே புதுசாத்தான் இருக்கு. நல்ல உயர உயரத்தூண்கள்,  மேலே சுத்திலும் தசாவதாரம், கீழே நாலு வரிசையில்  அந்தந்த அவதார சம்பந்தப்பட்ட காட்சிகள்னு....








ஊஞ்சல் ஸேவை. பட  உதவி :  கூகுளாண்டவர்.
அதுக்குள்ளே  திருமஞ்சனத்துக்கு  வரச்சொல்லி ஒருத்தர் வந்து சொன்னார்.  அங்கே போனால் நல்ல கூட்டம்.  நேர்  எதிர்ப்பக்கம் இருந்த படிகளில் போய் உக்கார்ந்தேன்.  கண் குளிரக்குளிர   ஆழ்வார்களுக்குத் திருமஞ்சனம்! இன்றைக்கு ஏகாதசி வேற !  சம்ப்ரதாயமான சகலமும் பார்க்கக் கிடைச்சது பாக்கியம்.

கடைசியில் பிரஸாத விநியோகத்துக்கு வரிசை ஆரம்பிச்சது.  எங்கிருந்துதான் இப்படி  மக்கள்ஸ் வந்தாங்களோ.....   ராவணன் சபையில் அனுமார் வால்......  இது நமக்கில்லை....

நேரம் வேற ஆகுதேன்னு ஆஃபீஸில் போய்ச் சொல்லிட்டுக் கிளம்பணும். படம் எடுத்து முடிச்சதும் கொண்டுவந்து காமிக்கச் சொல்லி இருந்தாங்களே.... 

அங்கே போனால்   கெமெரா அனுமதி  தந்தவர் எடுத்தாச்சான்னு விசாரிச்சார்.  கெமெராவை நீட்டுனேன்.  வாங்கிக்கலை.  அந்த ஊஞ்சல் மண்டபத்துச் சித்திரங்களைப் புகழ்ந்து  ரெண்டு வார்த்தை சொன்னதும், அவர் முகம் பிரகாசமாச்சு.  'இது நல்லா இல்லைன்னு  எல்லாத்தையும்  அழிக்கணுமுன்னு  பேசிக்கிட்டு இருக்காங்க'ன்னார்.

 ஐயோ.... யாராம்?  எல்லாம் கமிட்டி ஆட்கள்னு  மெல்ல..... சின்ன சப்தம்....  அடடா.... அருமை தெரியலையே......  அவருக்குமே  சித்திரங்களை ரொம்பவே பிடிச்சுப்போச்சாம்.....  ஆனாலும்.....  ப்ச்....

திருக்குளத்தை விட்டுட்டேனேன்னு  அங்கே போய் ரெண்டு க்ளிக்ஸ்.  சந்திரப்புஷ்கரணி!  இதுலெ எம்பத்திரெண்டு தீர்த்தங்களும்  ஊற்றெடுத்து வருதுன்னு  ஐதீகம்.  தண்ணிக்குள்ளே  பனிரெண்டு கிணறுகள் இருக்குன்னு சொல்றாங்க.  தண்ணீர் ஒரு மாதிரி பச்சை நிறமா இருக்கு. கந்தகம் கலந்துருக்காம்! இதில் மூழ்கி எழுந்துருந்தால் பல வித  நோய்கள் முக்கியமா சருமநோய்கள் அகலும்னு ஒரு நம்பிக்கை!   குளம் ஓரளவு சுத்தமாக இருக்கு!  இந்தக் கோவிலுமே சுத்தமாகத்தான்  இருக்கு.
 கோவிலுக்கு வயசு எண்ணூறு வருஷங்கள் !

  ஆதிகாலத்தில் பாண்டிச்சேரிக்கு  வேற ஒரு பெயர் இருந்துருக்கு தெரியுமோ?

வேதபுரி!

தொடரும்.......  :-)


16 comments:

said...

அந்த பிஸ்கட்டுக்கு எறும்பு வந்து பூனையின் தூக்கத்தைக் கெடுத்து விடப்போகிறது!

ஓவியங்களை படம் எடுத்துத் தள்ளி விட்டீர்களே என்று நினைத்தேன். ஆனால் அதுவும் நல்லதுக்குதான் போல. ஒரு ஆவணமாகி விடுமே... இந்நேரம் ஓவியங்களை எடுத்திருப்பார்களோ! ஆனாலும் இவ்வளவு கலர்புல்லாக கோவில்கள் இருந்தால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைகிறது!

said...

நன்றாக இருக்கும் ஓவியங்களை எதற்கு எடுக்க வேண்டும்.... என்ன கமிட்டியோ!

தொடரட்டும் பயணங்கள்.... நானும் தொடர்கிறேன்.

said...

ஓவியங்கள் மிக அழகு.
அருமை நன்றி

said...

அருமையான படங்கள்...

பாண்டிக்கு செல்லும் போது கட்டாயம் இங்கு செல்ல வேண்டும்...குறித்துக்கொண்டேன்

said...

கோயில் பூனையில் உறக்கம் அழகு. தூங்கும் போது நாமல்லாம் கொழந்தையாயிருவோமாம். அதுனாலதான் முழிச்சிருக்கும் போது கவனத்தோடு செய்யாம இருக்கும் பாவனைகளையெல்லாம் நம்மையறியாம தூங்கும் போது எந்தக் கவலையும் இல்லாம செய்வோமாம்.

கோயில் பளிச்சுன்னு சுத்தமா இருக்கு. என்ன... நம்மளை எல்லாம் மூலவரை படம் பிடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு அவங்க படம் பிடிச்சு போட்டிருக்காங்க. தப்பில்ல. எல்லாரையும் அனுமதிக்கலாம். ஆனா உண்மையிலேயே ஆகம விதிகளை கோயில்கள்ள பட்டர்கள் எப்படியெல்லாம் மீறுகிறார்கள்னு ஒரு தேர்ந்த சிற்பி கண்ணீர் வடிச்சு சொன்னாரு. நாம என்ன சொல்றது? ஆறுதலை மட்டும் சொன்னேன்.

அந்தப் படங்கள் பளிச்சுன்னு இருந்தாலும்... கோயில் நிர்வாகத்தார் சொன்ன மாதிரி கொஞ்சம் சுமார்தான்னு எனக்குத் தோணுது. அழகு இருக்கும் அளவுக்கு பாவங்கள் இல்லையோன்னு ஒரு தோணல். எது சரின்னு காலம் முடிவு செய்யட்டும்.

said...

ஆஹா... பாண்டிச்சேரில இதுவரை போகாத கோவிலாச்சே. அடுத்தமுறை நிச்சயம் தரிசனம் செய்ய அவன் அருள் வேண்டும். தொடர்கிறேன்.

said...

கோவிலில் வரையப் பட்டிருந்த ஓவியங்கள் அற்புதம், நீங்கள் அதை புகைப் படமாக்கியிருந்த விதம் அபாரம். நான் பல முறை பாண்டிக்குச் சென்றிருக்கிறேன், அனால் வரதராஜர் கோவிலுக்குச் சென்றதில்லை. மதர் ஆஷ்ரம் மட்டும் சென்று விட்டு வந்து விடுவோம். அடுத்த முறை பார்க்க வேண்டும்.

said...

வணக்கம் ,
we are reaching out on behalf of a upcoming tamil digital magazine. We are impressed with your blog which is active for so many years with good consistent content. our team like to speak to you to get advise on how to write about sprituality related content in tamil. any guidance will be greatly helpful. expecting your reply soon.

said...

வாங்க ஸ்ரீராம்.

அந்தந்த காலத்துக்குத் தகுந்தபடி கோவிலைப் புதுப்பிச்சுடறாங்க.. பழமை மாறாமல் புதுப்பிக்க இன்னும் யாருமே இங்கே கத்துக்கலை போல... :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

புது ஓவியர் வேண்டப்பட்டவரோ என்னவோ? க்யா மாலும்?

said...

வாங்க விஸ்வநாத்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

போய்வந்துட்டுச் சொல்லுங்க.... இன்னும் விட்டு வச்சுருக்காங்களா, இல்லே இல்லையான்னு....

said...

வாங்க ஜிரா.


படம் எடுத்தால் கடவுளின் சக்தி போயிருமுன்னு சொல்றதெல்லாம் உடான்ஸ் இல்லையோ!!

அவ்வளவு பலஹீனனா சாமி?

என்னவோ போங்க.....

அவரவர் பதவியில் இருக்கும்போது எதாவது செஞ்சு அதிகாரத்தைக் காமிச்சுக்கணுமுன்னு இருக்காங்களோன்னு என் நினைப்பு. 'பாவம்' பார்த்து வரையும் திறமைகள் கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு போகும் காலம் ஆச்சே...இப்போ....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

பெருமாள் நல்ல அழகு! அவனுக்காகவே போகலாம் !

said...

வாங்க பானு.

நான் ஒரே ஒருமுறைதான் மணக்குள விநாயகர் கோவில் அருகில் இருக்கும் அரவிந்த ஆஷ்ரம் போனேன். மனம் லயிக்கலை..... அப்புறம் பாண்டி போன சமயங்களில் எல்லாம் போகணுமுன்னும் தோணலை.... ப்ச்....

said...

வணக்கம் சிவாதினேஷ்.

எந்த முறையில் உதவணுமுன்னு தெரியலையே.... விளக்கமா ஒரு மடல் அனுப்புங்க.