Friday, December 01, 2017

பூவராஹர் ஸ்வாமி ஸ்ரீமுஷ்ணம் (இந்திய மண்ணில் பயணம் 83 )

வராஹர் எப்படி இங்கேன்னு சொல்றதுக்கு முன்னே கொஞ்சம் (!!) திரும்பிப் பார்க்கத்தான் வேணும்.....
நம்ம ப்ரம்மா இருக்காரு பாருங்க, அவர்  வேலையில் சேர்ந்த  முதல்நாள், முதல் ட்யூட்டி என்னன்னா.... பூமியில் மக்கள்  பல்கிப்பெருக ஆவன செய்யணும்.  படைத்தல்! முதல் படைப்பா ஒரு நாலு பேரை  உண்டாக்கினார்.  இவுங்கதான் சனகாதிகள். சனகர், சனாதனர், சனந்தனர் அண்ட் சனத்குமாரர் என்று பெயரும் வச்சுட்டார். அடுத்த விநாடியில் நாலு பொண் குழந்தைகளைப் படைச்சிருக்கணும் இல்லையோ?  அங்கெதான்  கோட்டை விட்டுட்டார் :-( பெயர் சூட்டுதலில் பிஸியாகிட்டாராக இருக்கும்.
இந்த சனகாதிகள்  மக்கள் தொகையைப் பெருக்க தங்களால் ஆனதைச் செய்யாமல்  சாமிகளைக் கும்பிட்டுக்கிட்டு தேவலோகத்திலேயே சுத்திக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொரு நாளுக்கு  ஒரு இடமுன்னு  சிவலோகம், வைகுண்டம், ப்ரம்ம லோகம் இப்படி  தொடர் பயணம்தான்:-)

ஒரு நாள்  மஹாவிஷ்ணுவைப் பார்க்க  ஸ்ரீவைகுண்டம்  போறாங்க. அங்கே வழக்கமா வாசலைக் காவல் காக்கும் ஜய விஜயர்கள்  ட்யூட்டியில்! 
( பெருமாள் கோவில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு வெளியில் பக்கத்துக்கொன்னா நிப்பாங்களே  அவுங்கதான். ) 
 மேலே: சிங்கைச்சீனு கோவில்  மூலவரும்  கேட் கீப்பர்ஸும் :-)


எங்கியாவது போனால், கேட்டில் இருக்கும் வாட்ச்மேன்கிட்டே யாரைப் பார்க்க வந்துருக்கோம்னு சொல்லிட்டுப் போறோமே  அந்த லௌகீகம் எல்லாம் தெரியாது போல இந்த சனகாதிகளுக்கு.

கேட் கீப்பரைச் சட்டை செய்யாமல் உள்ளே நேராப்போக ஆரம்பிச்சவங்களை  ஜயவிஜயர்கள் தடுத்து நிறுத்தி, நீங்க யாரு?  என்ன விவரமா வந்தீங்க?  நாங்க உள்ளே போய் நீங்க வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி ஐயா கிட்டே  அனுமதி வாங்கி  வர்றோம். ' சரி. உள்ளே வரச்சொல்லு'ன்னு அனுமதி கொடுத்துட்டாருன்னா  நீங்க உள்ளே போகலாம்னு தன்மையாத்தான் முதலில் சொன்னாங்க.

சொன்னதைக் கேட்டு  சனகாதிகள் சரின்னு சொல்லி இருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது?

'ஏய்... நாங்க யார்னு தெரியுமா? நீ யாரு எங்களைத் தடுத்து நிறுத்த?' ன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சு  பெரிய வாய்ச்சண்டையா முத்திப்போச்சு. 'மரியாதை தெரியாத நீங்க ரெண்டு பேரும்  ஏழு ஜென்மத்துக்கு பூலோகத்தில் அசுரர்களாகப் பிறக்கக்கடவது'ன்னு சாபம் விட்டுடறாங்க!

(பார்த்தீங்கல்லே... மரியாதை இல்லைன்னா பூலோகம்தானாம்!  இப்பல்லாம்  அசுரர்கள் வேற ரூபத்துலே மனுசனாப் பிறந்துடறாங்க. மனுசன்டா...மனுசன்!) 

இவ்ளோ நேரம்  உள்ளே இருந்த எஜமான் (எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும் ஒன்னுமே தெரியாதமாதிரி இருப்பார் இவர்!)  'என்ன சத்தம் இந்த நேரம்?' னு வெளி வந்து பார்த்தார்.  இந்தப் பக்கம் காவலாளிகள் ரெண்டுபேரும் பேயறைஞ்சமாதிரி நிக்க,  அந்தப் பக்கம் சனகாதிகள் ஒரே கோபமா நிக்க ன்னு இருக்கு ஸீன். 'அடடா  நீங்களா?  வாங்கவாங்க'ன்னு  ரொம்ப அன்போடும் மரியாதையோடும் கைகூப்பி வணங்கி உள்ளே அழைக்கிறார்.

ஜயவிஜயர்கள்  ரெண்டு பேரும் 'எங்க மேலே தப்பு ஒன்னும் இல்லீங்க ஐயா. எங்க ட்யூட்டியை நாங்க செஞ்சதுக்கு  இவுங்க சாபம் வுட்டுட்டாங்க. வாபஸ் வாங்கிக்கச் சொல்லுங்க'ன்னு   அழுகுரலில்  சொல்றாங்க.

"உங்க வாட்ச்மேன் எங்களை மரியாதை இல்லாம நடத்துனதாலே  சாபம் விடவேண்டியதாப் போச்சு. எங்களால் சாபத்தையெல்லாம் வாபஸ் கீபஸ் வாங்கிக்கமுடியாது. விட்டது விட்டதுதான்."

'ஐயா...   நீங்கதான் சூப்பர் சுப்ரீம்  கோர்ட். நீங்கதான்  எல்லோரையும் விட பெரும் ஆள்.  ஹை கோர்ட் தண்டனையை ரத்து பண்ணி எங்களைக்  காப்பாத்துங்க'ன்னு கெஞ்சிக் கதறி  பெருமாள் கால்லே விழறாங்க.

"இல்லைப்பா... தேவலோகத்துலே நியாயங்கள்  வேற மாதிரி.  ஆளுக்கொரு சட்டம், நியாயமுன்னு இருக்க இதென்ன  பரதகண்டமா?  நீங்க தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும். என்னுடைய அதிகாரத்தை வச்சு  வேணுமுன்னா  தண்டனையைக்   கொஞ்சூண்டு குறைக்க முடியும்."

 தூக்குன்றதை ஆயுள் தண்டனை  ஆக்குவது போலவா!

"அந்த ஏழுக்கு பதிலா மூணு  வாட்டி  ஜென்மம் எடுத்தாப் போதும். ஓக்கேயா?"

'சரிங்க  எஜமான். மூணுன்னா மூணு.  ஒவ்வொரு பிறப்பையும் சட்னு முடிச்சுக்கிட்டு சீக்கிரம் இங்கே வந்து ட்யூட்டியில்  சேரணுமுன்னு ஆசீர்வதியுங்க'ன்னு  மறுபடி காலில் விழுந்தாங்க ஜயவிஜயர்கள்.

எடுத்த பிறவியை சட்னு முடிக்க என்ன செய்யலாமுன்னு  பெருமாளையே கேக்க, 'சதா என்னைத் திட்டிக்கிட்டேக் கிடங்க'ன்னாராம். கொடுமை செய்யுங்க. எப்படா இவன் ஒழிவான்னு மத்தவங்க நினைக்கும்படியா நடந்துக்குங்கன்னாராம்.

அவங்களுக்கு இயல்பா இருந்த நல்ல குணத்தால் இதை சட்னு ஒத்துக்க முடியலை. "அதெப்படி எல்லாருக்கும் கொடுமை செய்யறது?  ஒரு நியாயம் வேணாம்? மாத்தி யோசிங்க எஜமானே......"

'சரி. நானே  பூமியில் வந்து பொறக்கதான் போறேன். அந்தக் கெட்டதையெல்லாம் எனக்கே செய்யுங்க'ன்னுட்டார்  பெருமாள்.

 முதல் பிறவியில்  ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற  அண்ணந்தம்பிகளா பூமியில் வந்து பொறந்தாச்சு ஜயவிஜயர்கள். இவுங்க கெட்ட நேரம் இப்ப ஸ்ட்ராங்கா இருக்கு. முதல் பிறவி ஜோர்லே கண்ணுமண்ணு தெரியலை.

அக்ரமம் ஆரம்பிச்சது. ஹிரண்யாக்ஷனுக்கு  போனஸ் மார்க் கொடுக்கும் அளவுக்கு  தீவிரமா போயிட்டான்.  ரிஷிமுனிவர்கள் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு அப்படியே தேவலோகத்துக்குப்போய் தேவர்களை எல்லாம்  கொடுமை செஞ்சுட்டு, 'எங்கெடா உங்க ஹரி'ன்னு  தேடிக்கிட்டு இருக்கான். அப்போ  அவர் வேற வேலையா வெளியே போயிருக்கார்.  பெரும்ஆள்  வீட்டுலே இல்லைன்னதும் ஆங்காரமா காலை ஓங்கி  பூலோகத்தை  அழுத்த   அது   அப்படியே பாதாள லோகத்துக்குப் போயிருச்சு.

பூமா தேவி  மனதுக்குள்  ஹரியை  வணங்கி தன்னைக் காப்பாத்த வேண்டிக்கறாள். அவரும் வராஹ அவதாரம் எடுத்து, பாதாள லோகம் போய்  ஹிரண்யாக்ஷனோடு சண்டை போட்டு அவனை வதம் செஞ்சுட்டு, தன் வராக மூக்காண்டை இருக்கும் பெரிய   பல்லால் பூமியைத் தோண்டி எடுத்துக்கிட்டு அப்படியே  வெளியே கொண்டு வந்துட்டார்.

 மேலே சொல்லி இருக்கும் 'கதை' நம்ம துளசிதளத்தில் வந்ததுதான்.  கதை அமைப்பு ஒன்னும் மாறலை என்பதால் அப்படியே    கொஞ்சத்தைச் சுட்டு இங்கே போட்டேன் :-)

 முழுக்க வாசிக்கணுமுன்னா இங்கே  பாருங்க. நல்லாவே வந்துருக்குன்னு சொல்றாங்க நம் வாசக அன்பர்கள் :-)


பாதாளத்தை நோக்கி, பூமிக்குள்ளே போன நம்ம வராஹர்,  அங்கிருந்து கிளம்பி மேலே வந்த ரிட்டர்ன் ரூட் இந்தப் பக்கம்தான். பூமியைத் துளைச்சு  வெளிவந்த இடம் இது! ஸ்ரீமுஷ்ணம்!

 மஹா விஷ்ணு,   தாமாய் தம்மை வெளிப்படுத்திக்கிட்ட இடங்கள்னு                  ( ஸ்வயம்வ்யக்த க்ஷேத்ரங்கள் =  சுயம்பு)எட்டு இடங்களைச் சொல்வாங்க. அதுலே ஒன்னு  இந்த ஸ்ரீமுஷ்ணம்!   மற்ற ஏழு இடங்கள்... ஸ்ரீரங்கம், திருமலை(திருப்பதி) நாங்குநேரி, முக்திநாத்,  புஷ்கர், நைமிசாரண்யம், பத்ரிநாத்  ஆகியவை. நமக்கு இந்த எட்டு கோவில்களையும் தரிசிக்கும் வாய்ப்பு அமைச்சுக்கொடுத்த எம்பெருமாளுக்கு  நன்றி .

இன்றைக்குத்தான் இந்த எட்டாவது கோவிலைப் பார்க்கப்போறோம். முன்பக்கமே பெரிய மண்டபம்!  நூத்துக்கால் மண்டபமுன்னு பெயர். மண்டபத்துக்குள் நுழையும் ஆரம்பத்துலேயே  சின்னதா ஒரு சந்நிதி.  பாதஸேவை! திருப்பதி பெருமாளோடது!  முதலில் இவரை  வணங்கிட்டுத்தான்  உள்ளே போறாப்லெ அமைப்பு! 


பலிபீடம், கொடிமரம் பெரிய திருவடி சந்நிதி கருவறை வாசலை நோக்கியபடி.... குட்டியா விமானம் கொள்ளை அழகு!   அழகுக்கு அழகு சேர்க்க இன்னும் இருவர் :-)





அதுக்கு  அடுத்தாப்லே  புருஷசூக்த மண்டபம். சிற்பக்கலையின் அழகெல்லாம் கொட்டிக்கிடக்கு!   ஸ்ரீரங்கம் சேஷராயர் மண்டபம் தொடங்கி நாம் இதுவரை வேறெங்கெங்கோ பார்த்த  மண்டபங்கள், சிற்பங்களின் அழகு மொத்தமும் ஒரு கலவையாக் கிடக்கு இங்கே!

 நீளமாப்பின்னி, ராக்கொடி, ஜடை பில்லை, குஞ்சலம் எல்லாம் வச்சு சூப்பரா இருக்காளே!!!

கலை அழகை ரசிக்க மனம் இல்லாத  ஒருசில பக்தர்களுக்குப்  'பசி' அதிகமா இருக்கு.....  இந்த மாதிரி ஆட்கள்தான் நம்ம கலாச்சாரப்படி பெண்கள் உடை உடுத்தலைன்னு சொல்லிக்கிட்டுத் திரியற கூட்டம், இல்லே?    ப்ச்.....  பேசாம  கோவில் நிர்வாகமே சிலைகளுக்கு எண்ணெய்க் காப்பு போட்டுவிட்டால் தேவலை.  கண் உறுத்தல் இல்லாமல் இருக்கும்.






மூலவர் சந்நிதிக்குப் போறோம். பூ வராஹ ஸ்வாமி.  கோவிலின் அளவுக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் தக்கினியூண்டு இருக்கார்.

நரவராஹம்!  தலை மட்டும் வராஹம். மனுஷ்ய உடம்புதான். ரெண்டு கையும் இடுப்பில் வச்சு, தலையை ஒரு சிலுப்பு சிலுப்பி ஸைட் பக்கமாத் திருப்பிக்கிட்டு   ஒரு  ஹீரோ லுக் !

அரக்கனை பொலி போட்டாச்!

பிரம்மாவின்  மூக்கிலே இருந்து கட்டைவிரல் அளவான உருவில் வெளிப்பட்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாப் பெருகி வளர்ந்து, பாதாளம் போய் பூமி(தேவி)யை மீட்டு திரும்பி இங்கே வெளிப்பட்ட உருவம் மினி சைஸ் ஆகி இருக்கு!  எல்லாம் தேவி கேட்டுக்கொண்டதுக்கு இணங்கியே!

 அவளுக்கே இப்படி இம்மாம் பெரிய உருவம் பார்த்து பயம் வந்துருக்காதோ?
"சின்னதா உடம்பை மாத்திக்குங்கோ..... "

"சரி. இது போதுமா பார்!  இத்தினியூண்டு போதுமா பார்!"

இவருக்கு     இப்படி வராஹ அவதாரம் எடுப்பது  ரொம்பப்பிடிச்சுப்போச்சு போல....

ப்ரம்மாவுக்கும்  விஷ்ணுவுக்கும் யார் பெரியவர்னு தர்க்கம் வந்து சிவனாண்டை நியாயம் கேக்கப்போனா.... அவர் அதுக்கு மேலே.....

என்னுடைய  பாதத்தையோ, திருமுடியையோ  யார் முதலில்  பார்த்துட்டு வர்றாங்களோ அவரே  பெரியவர்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு  அடிமுடி தெரியாதபடி பிரமாண்டமா வளர்ந்து நின்னுட்டார்.  அப்பதான் நம்ம விஷ்ணு  சொல்றார், நான் அடி தேடிப்போறேன்னு!  அதான் வராஹ அவதாரம் எடுத்த அனுபவமிருக்கே!   ஜோராய்  வாயாண்டை இருக்கும் கொம்பால்   பரபரன்னு   தோண்டிக்கிட்டே ஜாலியாப் போகலாமே!

ப்ரம்மா, தன்னுடைய வாஹனமான அன்னப்பறவை மேலே உக்கார்ந்து  முடி பார்க்கப்போறேன்னு கிளம்பி, போன வேலையை முடிக்க முடியாமல்,     போற வழியில்  மேலே சிவன் முடியில் இருந்து விழுந்துக்கிட்டு இருந்த தாழம்பூவிடம் நைச்சியமாப் பேசி, நான் முடியைப் பார்த்துட்டேன் என்பதற்கு நீ சாட்சியா இருன்னு அதைப் பொய் சொல்ல வச்சு.... கடைசியில் தாழம்பூவுக்கு இனி பூஜைக்கு வைக்கும் மலர்களில் இடம் கிடையாதுன்ற தண்டனையையும் வாங்கிக்  கொடுத்த கதை உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன ?  :-)

கடைசியில் விஷ்ணுவும் அடி பார்க்க முடியாமல் திரும்பி வந்து தன் தோல்வியை ஒத்துண்டார்!  தைரியமா உண்மையைச் சொல்லி, தன் தோல்வியை ஒப்புக்கொண்டது  பெரிய விஷயம் இல்லையா?  ப்ரம்மா மாதிரி பொய் சொல்லி, பொய்ப்புகழுக்கு ஆசைப்படலை பாருங்க!   அதனால் விஷ்ணுவே பெரியவர்னு நான் சொல்றேன், கேட்டோ !!

பட்டர்ஸ்வாமிகள், தீபாராதனை காமிச்சு  சடாரி, தீர்த்தம், துளசி பிரஸாதம் கொடுத்தார்.
பட உதவி : கூகுளாண்டவர் :-)


இங்கத்து  உற்சவருக்கு  யக்ஞவராஹர்னு பேர்.  முழுக்க மனுஷ்ய ரூபம்தான். பூதேவி,    அரக்கனிடமிருந்து தன்னைக் காப்பாத்துன  வராஹரைக் காதலித்துக் கல்யாணம் பண்ணிக்கிட்டதும்  அவளுடைய  தோழிகள் எல்லாம்  பன்றி முகத்தைப்போய் பண்ணிப்பாளோன்னு  கேலி பண்ணறாங்க.  அவளுக்கு  மனசொடைஞ்சு  போகுது.  பன்றிக் கணவனிடம் வேண்டுகோள் வைக்கிறாள். ஈரேழு உலகத்திலும் ஈடு இணையில்லாத அழகான  மனுஷ்ய ரூபத்தில் நீங்க உங்களை  மாத்திக்கணுமுன்னு புது மனைவி கொஞ்சியும் கெஞ்சியும் கேட்டதும்,  ஆகட்டுமுன்னு  சொல்லி  ப்ரம்மா நடத்துன யாகத்தில் இருந்து அதிரூப சுந்தரனா கிளம்பி வந்தவர்தான் இந்த யக்ஞவராஹர்.  உண்மையிலேயே அழகுதான் !

பூமாதேவியைக் காப்பாற்றிக் கல்யாணம் பண்ணிக்கிட்டதால் இவர்  பூ...வராஹர் ஆனார்:-)

மூலவரை மனம் நிறைய தரிசனம் செஞ்சுக்கிட்டு, பிரகாரம் வலம் வர்றோம்.
அர்ச்சனை சீட்டு விற்கும் கவுன்ட்டரில் போய் கேமெரா டிக்கெட் விசாரிச்சால் இல்லையாம்.   மூலவரை விட்டுட்டு   நீங்க படம் எடுத்துக்குங்கோன்னார்.  அங்கே தலபுராணம் இருக்கான்னு விசாரிச்ச நம்மவர்,  ஸ்ரீ வராஹ சரித்திரம் என்னும் புத்தகம் வாங்கினார். எல்லாம் எனக்கு எழுத மேட்டர் தேத்தும் உபகாரம்தான் :-)
பிரகாரம் நல்லா சுத்தமாத்தான் இருக்கு. அங்கங்கே  நம்ம கூட்டத்தின் உலாத்தல் :-) எதோ விழா நடந்து முடிஞ்சுருக்கு போல.....  பந்தல் போட்ட மூங்கில்கள்  அங்கங்கே.....




அம்புஜவல்லித் தாயார் தனிச்சந்நிதியில்.....

நம்ம ஆண்டாளம்மா   வழக்கம்போல் தனியாக....  தூமணி மாடம் ஆச்சு :-)


பரமபதவாசல் அழகான கோபுரத்தோடு அட்டகாசமா இருக்கு!
இதுக்குப் பக்கத்திலே  குழந்தையம்மன் சந்நிதின்னு ஒன்னு! சப்த கன்னியர் இருக்காங்க.  இங்கே பூஜை செய்ய தனிப்பூசாரி இருக்கார். சகுனம் பார்த்துச் சொல்வது இங்கே விசேஷமாம்!

பெருமாள் கோவிலில் எப்படி இதெல்லாம்?   விசாரிச்சால்......  ஒருத்தர் சொல்றாங்க.... இவுங்கெல்லாம்  அம்புஜவல்லியின் தாதிமார்.  இன்னொருத்தர் சொல்றாங்க....  இவுங்க  பூதேவியின் தோழிகள்.  மூணாவது நபர் சொல்றார், பெருமாளின் சகோதரிகள்! (தாயாரின் நாத்தனார்களா?   ஹாஹா!)

சுட்டபடம்: நன்றி. தினமலர்:-)

நல்ல ஆளுயரச்சிலைகளா எழுவர்!  சப்தமாதாக்கள்!
வேணுகோபால், சீனிவாசர், விஸ்வக்சேனர்,  நம்மாழ்வார், திருமங்கையாழ்வார்,   மணவாளமாமுனிகள், உடையவர்,  வேதாந்த  தேசிகர்னு தனித்தனிசந்நிதிகள் பிரகாரம் முழுசும்!  வலம் வரும்போதே  கும்பிட்டுக்கலாம்!
நல்ல பெரிய பெரிய பிரகாரங்கள், சந்நிதிகள். ஆனால் இந்தக் காலத்துக் கோவில்களின், முக்கியமாகப் பெருமாள் கோவில்களின்  வழக்கம்போல் பல சந்நிதிகள் மூடித்தான் இருக்கு!  கம்பிக்கதவு போட்டுருந்தால் குறைஞ்சபட்சம் எட்டிப்பார்த்து ஸேவிச்சுக்கலாம்.  நாம் பார்க்கலைன்னாலும் அவர் பார்த்திருப்பார்னு சமாதானப்படுத்திக்க வேண்டி இருக்கு. பட்டர்கள் பற்றாக்குறைன்னு காரணம் சொல்றாங்க. வருமானம் வராத சந்நிதிகள்னு என் மனசு சொல்லுது.  ப்ச்.... என்னவோ போங்க.....
 கோவிலை விஸ்தரிச்சுக் கட்டிய மன்னரும் மனைவிகளும்.

தேன் குடிச்ச நரிபோல புருஷஸூக்த மண்டபத்தில் நின்னு  கேமெராவும் கையுமா நேரம் போக்கிட்டேன் போல.....  நம்மவர் 'போலாமா'ன்னதும்  சரின்னு கிளம்பி வந்தாச்சு.

வெளியே வந்து   ராஜகோபுரத்தைக் க்ளிக்கும்போதுதான்  இளநீர் விற்பனையாளரை, நம்மவர் கண்டுபிடிச்சுட்டார். ஆளுக்கொன்னு வாங்கிக்குடிச்சுட்டுக் கிளம்பி கொஞ்சதூரம் வந்தப்பதான்  புஷ்கரணியைப் பார்க்கலையேன்னு  .......   அடடா.......    அடுத்த முறை  ஆகட்டும்....


PINகுறிப்பு :   பூவராஹர் கோவில் படங்கள் தனி ஆல்பத்தில் இங்கே :-)



தொடரும்.....   :-)


14 comments:

said...

பூமி பாவப்பட்ட ஜென்மங்கள் இருப்பிடம் என்று நினைக்கிறார்கள் போல "மேலே" இருப்பவர்கள்!!!! "இதென்ன பாரதக் கண்டமா? போன்ற எள்ளல்கள் ரசித்துப் புன்னகைக்க வைத்தன.

ஜெயவிஜயர்கள் என்றால் எனக்கு பாடகர்கள் ஜெயவிஜயா நினைவுக்கு வருகிறார்கள். பக்திப்பாடல்கள் பாடும் இரட்டையர் (மலையாள தேசம் என்று நினைவு) உதாரணப்பாடல் "திருமதுரை... தென்மதுரை... சிறந்து நிற்கும் தென்மதுரை.... சிறந்துவிளங்கும் மீனாட்சி... அருள் வழங்கும் அவள் ஆட்சி...."

அருமையான கோவில்... அருமையான படங்கள்.

said...

பூவராஹரை உங்கள் இடுகையின் மூலமாக சேவித்தாயிற்று. அம்புஜவல்லித் தாயார் சன்னதிக்கும் ஜய விஜயர்கள் போல் காவலுக்கு இருக்கிறார்களா? எந்தக் கோவிலைச் தரிசனம் செய்தாலும் முழுமையடைந்த திருப்தி வருவதில்லை. பலவற்றை பென்டிங் வைத்திருக்கும்படியாகிறது. தொடர்கிறேன்.

said...

ஜயவிஜயர் கதை அருமை
நன்றி தொடர்கிறேன்.

said...

மண்டபச் சிற்பங்களைப் பார்த்தபோது கும்பகோணம் ராமசாமி கோயில் சிற்பங்கள் நினைவிற்கு வந்தன. சற்றொப்ப அவற்றைப் போலவே இவை இருக்கின்றன.

said...

அவதாரக் கதைகளை நானும் பதிவிட்டிருக்கிறேன்படித்திருக்கின்றீர்களா

said...

சிற்பங்களின் படங்கள் அழகு. நம் ஊர் சிற்பங்கள் பார்த்த கண்களுக்கு வடக்கில் இருக்கும் சிற்பங்கள் அவ்வளவாக பிடிப்பதில்லை! :) இருந்தாலும் இங்கேயும் நிறைய சிற்பங்கள் அழகாக இருக்கின்றன.

தொடர்கிறேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசிப்புக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தாயாருக்கும் வாசலில் த்வாரபாலகியர் உண்டு. இங்கே பெயர் எழுதி வைக்கலை.

நிர்மால்யஹரிணி, நிவேத்யஹரிணின்னு பெயர்கள்.

சிவன் கோவில்களிலும் அம்பாளுக்கு த்வாரபாலகியர் உண்டு.

said...

வாங்க விஸ்வநாத்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

அந்தப் பகுதிகளில் ஏறக்கொறைய ஒரே மாதிரி சிற்பங்கள் பலவற்றையும் நானும் பார்த்திருக்கேன்.

இதுதான் பாரம்பரியமோ என்னவோ!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

முன்பு வாசித்த நினைவு இருக்கிறது. இங்கே சுட்டிகளைக் கொடுத்தால் நம் வாசக அன்பர்களும் வாசிப்பாங்களே!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வடக்கே பளபளன்னு பளிங்குச்சிலைகளாச்சே! அதுவும் ஒரு அழகுதான். உண்மையைச் சொன்னா பளிங்கில் உணர்ச்சிகளைச் செதுக்குவது கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா? அதையும் மீறி சில கோவில்களில் பளிங்குச்சிலைகளுமே சொல்லமுடியாத அழகு!

அதுவும் கருப்புப் பளிங்கில் இருக்கும் கிருஷ்ணன்..... ஹைய்யோ!!!!

said...

வராஹர் வரலாற்றை சொன்னபோது வரலாற்றில் இல்லாத பொய்க்கதையான அடிமுடி தேடிய கதையை சொருகியிருக்க வேண்டாம். மற்றபடி வேடிக்கையான எழுத்துநடை

said...

வணக்கம் பட்டர்ஸ்வாமிகளே!

துளசிதளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது.


அப்ப அந்த 'அடிமுடி' புராணத்தில் இல்லையா ? அடடா...... இப்படிச் செஞ்சுட்டேனே....

மன்னிக்கணும். காலங்காலமாய்க் கேட்ட கதைகளில் எது உண்மை எது பொய் என்று குழப்பம் வந்துருதே.............

பெருமாளே....