Monday, August 28, 2017

வச்சுக் கொடுப்பதில் ஒரு விசேஷம் ..... (இந்திய மண்ணில் பயணம் 48)

நம்ம லோட்டஸில்      ரொம்பப் பிடிச்ச விஷயம்   இங்கத்து ப்ரேக்ஃபாஸ்ட்தான்.   எனக்கான வடைகள் தினமும் உண்டு.  'உண்டு, உண்டு' கொழுத்துதான் ஊர் திரும்புவேன் எப்போதும். அடுத்த பயணம் வரை இது தாக்குப் பிடிக்கணும்.  வீட்டுலே வடை செய்வதை விட்டாச்சு. நம்மவர்தான் வாயாலே வடை சுட்டுடுவார் அப்பப்ப :-)
லோட்டஸின்  சென்னை 24 ரெஸ்ட்டாரண்டின் பெயரை க்ரீன்வேஸ்ன்னு மாத்தியாச்சுன்னு சொல்லி இருக்கேனோ? அது போன பயணத்துலே... 2016 ஜனவரி.
காலை எட்டேகாலுக்குத் தயாராகிக் கீழே போய்  இட்லிவடைகள் தரிசனம் ஆச்சு.  சைட் டிஷ் கொஞ்சூண்டு பைனாப்பிள் கேஸரி :-)

ஒரிஜினல் இட்லிகளை முழுங்குனதும் உடம்புக்குத் தெம்பு வந்துருச்சு. வயிறு நிறைஞ்சதும்  அலங்கார ஆசை வந்துருமே எனக்கு!   இந்தியப் பயணங்களில்  குறிப்பாச் சென்னைப் பகுதின்னா.... (இருக்கும் கொஞ்சூண்டு) கூந்தல் மலருக்கு அழும்.
தெருவில் இறங்கி எட்டிப் பார்த்தால் அதோ கொஞ்ச தூரத்துலே   கோவை பழமுதிர்நிலயத்தையொட்டியே பூக்காரம்மா கடை போட்டுருக்காங்க.

பகல் வெளிச்சத்துலே சிங்காரச்சென்னை  அழுக்கும்புழுக்குமா மின்னுது.  பூனையாரின் தரிசனமும் லபிச்சது :-)

ஞாயித்துக்கிழமை என்பதால் இன்னும் ட்ராஃபிக் ஆரம்பிக்கலை. பொடிநடையில் போய்   பழமுதிர்நிலயத்தில்  கொஞ்சம் பழங்கள், தயிர் வாங்கிக்கிட்டு அப்படியே மல்லிப்பூ!
திரும்பி வரும்போது ஒரு எட்டு சுஸ்வாதுக்குள்.   கோதுமை அல்வா, கை முறுக்குன்னு சிறுதீனிகள்.....   இன்றைக்கு விஸிட் போகும்  இடங்களுக்கு  வெறுங்கையாவாப் போறது?  தீபாவளிக்கு  வேணுங்கறதை இப்பவே ஆர்டர் கொடுத்துடலாமாம்!   ஹூம்.....    சென்னையில் கிடைக்கும் சுகங்களில் இதுவும் ஒன்னு!    கொடுத்துவச்ச மகராசிங்கப்பா.... சென்னை மக்கள்ஸ்.




பத்துமணிக்கு நம்ம    சீனிவாசன் வந்துட்டார். முதலில் போனது  வெங்கடநாராயணா சாலை... திருப்பதி தேவஸ்தானக் கோவில்!  பெருமாள்  அட்டகாசமா இருக்கார்.  நம்ம கன்ஸெர்ன்  தாயார் முகத்தில் கூட  கொஞ்சூண்டு  இனிமை வந்த மாதிரி தோணல்.  இனி கவலைப்பட்டு  என்ன ஆகப்போகுதுன்னு விட்டுட்டாங்க போல.... என்னைப்போல :-)

வந்தியாம்மா...... வா வான்னு தரிசனம் கொடுத்துக் கையில் ததியன்னமும் கொடுத்தார்னா பாருங்க!   ப்ரம்மோத்ஸவம் நடக்குது. நவராத்ரியாச்சே....      வரும் வருசக் கேலண்டர் விற்பனைக்கு வந்தாச்சு. அதுலே ஒரு நாலைஞ்சை  வாங்கினோம்.  உறவுகள் வருசம் பூராவும் நினைச்சுக்கட்டுமே :-)
அடுத்த ஸ்டாப் அண்ணன் வீடு.  நம்ம சீனிவாசனுக்கு  நம்ம உறவுகள் எல்லாம் அத்துப்படி.  பேட்டை பேரைச் சொன்னதும் வீட்டு வாசலுக்குக் கொண்டு போயிருவார்:-)

இதுவரை நடந்தது என்னன்னு   விலாவரியாப் பேசி,  பகல் சாப்பாட்டையும் முடிச்சு,  அப்புறமும் பேசோ பேசுன்னு  பேசி....  நாலு மணிக்கு  காஃபி,  சிறுதீனி முடிச்சுட்டு, பாக்கி பேச்சு இன்னொரு நாளைக்கு ஆகட்டும்னு  கிளம்பி  நம்ம அநந்தபதுமனை அடைந்தோம்.

வர்ற வழியிலேயே இருக்கும் வார்மெமோரியலை ஒருநாள் இறங்கிப்போய்ப் பார்க்கணும் என்ற  ஆசை இன்னும் நிறைவேறலை.  எப்பவும் போல் போற போக்குலேயே  ஒரு பார்வை ,  சில க்ளிக்ஸ்.  (இங்கெ நியூஸி வார் மெமோரியல் படங்களை ஒரு ஆல்பமாத் தயாரிக்கச் சேகரிச்சுக்கிட்டு இருக்கேன். கொசுறுத்தகவல்!)
அடையார்   ஸ்ரீஅநந்த பத்மநாபன் கோவிலில்  வேலைகள் நடக்குது.  கோவிலில் புது  ஹால் கட்டிக்கிட்டு இருக்காங்க. ஏற்கெனவே ஒன்னு இருக்குன்னாலும் இது மாடியில் வரப்போகும் மினி ஹால்.  இருக்குற இடத்துலேயே கோவிலை விரிவுபடுத்தணுமுன்னா வேறவழி?  ஆனால் ஒன்னு  இந்தக்கோவிலின் நிர்வாகம் அருமையா செயல்படுது.  வசூலாகும் தொகையில்  அறநிலையத்தார்  'கொள்ளை அடித்தது' போக மீதி எல்லாம் கோவிலுக்கு மட்டுமே செலவாகுது.

கொடிமரம் சேவிச்சு,  வாசல் பிள்ளையாரையும் கும்பிட்டு,  கருடாழ்வாருக்கு ஆஜர் போட்டுக்கச் சொல்லிட்டு கோவிலுக்குள் போறோம். உச்சிகால பூஜை  முடிச்சு மூடிய நடை,  திறக்கும் நேரம் இது!  மணி  நாலரை.  எப்பவும் இந்த நேரத்தில் கோவிலில் கூட்டம் இருக்காது.

நிம்மதியான உறக்கத்தில் இருக்கும் பதுமனை மனநிறைவோடு கண் நிறையப் பார்த்துட்டு, 'அவன் முன்னால்'  உக்கார்ந்து கொஞ்சநேரம் தியானம் என்ற பெயரில் அவனை   அணுஅணுவா அனுபவிச்சுட்டுப் பிரகாரம் வலம் வந்து  பெரிய, சிறிய திருவடிகள், உற்சவர்கள், தங்கத்தேர், சுதர்ஸன், லக்ஷ்மிநரசிம்மன், விஷ்ணுதுர்கைன்னு எல்லோருக்கும்  கும்பிடுபோட்டு வருகையைத் தெரிவிச்சதும் ஒரு திருப்தி வரத்தான் செஞ்சது:-)

அங்கே பக்கத்துப் பேட்டையில் இருக்கும்   நெருங்கிய தோழி வீட்டுக்குப் போனோம்.  ஹாய் ஹாய் பை பைதான் :-) அப்படியும் அங்கேயும் ஒரு காஃபி ஆச்சு.  வுடறதில்லைபா..... கொலு சமயம் வேற இல்லையா.....    குட்டியூண்டு கொலுவைப் பார்த்துட்டு,  சுண்டல் எல்லாம் இப்போ ஜூஜுபி  ஆனதை சந்தோஷமா ஏத்துக்கிட்டு,  மஞ்சள் குங்குமம் வாங்கிக்கிட்டு  (ஹல்தி குங்கும்) கிளம்பி நேராப் போனது.... சாலிக்ராமம்.

புதுத்தம்பி வீட்டு கொலுவுக்குப் போகணும். எப்போ வர்றேன்னு தினமும் கேட்டுக்கிட்டே இருக்கார். தம்பி மகன் இப்போ எங்கூர்லே  படிக்கிறார். அவருடைய வீட்டுக்குத்தான் அவருக்குப் பதிலாப் போறோம்:-)


அழகான கொலு.   முறுக்கிய மீசையோடு மிரட்டும்  பார்த்தனின் சாரதி, ரொம்பப் பிடிச்சது எனக்கு. போனமுறை சாப்பிடக் கூப்பிட்டப்ப டிமிக்கி கொடுத்ததுக்கு  இப்போ சாத்துப்படி கிடைச்சது.  (நேரமில்லாமப் போயிருச்சுப்பா) அம்மாவும் கோவிச்சுக்கிட்டாங்க.
சுண்டல் இருக்கும் கொலு  என்பதால் அதையும் முடிச்சுக்கிட்டோம்:-)
( இதை எழுதும் போது  அம்மாவின் நினைவு மனசுக்குள்....  பெருமாளிடம் போய்ச் சேர்ந்துட்டாங்க இப்போ சில மாசங்களுக்கு முன்....  )
கொலு என்னமோ பெண்கள் பண்டிகைன்னும், ஆண்களுக்கு ஒன்னுமே வச்சுக்கொடுக்கறதில்லைன்னும் சொல்லும் குற்றச்சாட்டுகளைப் பொய்யாக்கினார் தம்பி. தங்கக்கம்பி :-)
ஊரை எனக்கு நினைவுபடுத்தும்விதமா கிவி வேற !

நவராத்ரி முடிய இன்னும் ஒரே நாள்தான் இருக்கு. அதுக்குள்ளே போக வேண்டிய  இடங்களுக்குப் போய் வசூலை முடிச்சுக்கணும், இல்லே?  :-)
களைப்போடு லோட்டஸுக்கு வந்து சேர்ந்தோம். நாளைக் கதையை நாளைக்குப் பார்க்கலாம்....  ஓக்கே?

தொடரும்..........:-)


Wednesday, August 23, 2017

புள்ளையார்

பயணம் அமைந்துள்ளது.  அதனால் இன்றைக்கே புள்ளையாரைக் கும்பிட்டு அனுமதி வாங்கியாச்சு.
'டேட் லைனில் உக்கார்ந்துக்கிட்டு, ஊர் உலகத்துக்கு முன்னாலேயே எல்லாத்தையும் முடிச்சுடுவே.....  இப்பக் கேக்கணுமா?  ரெண்டுநாளைக்கு முன்னாலேதானே   கொஞ்சம் அவசரமாப் பொறந்துட்டேன்னு  வச்சுக்கறேன்.  நல்லபடியா போயிட்டு வா' ன்னுட்டார்!

இனிப்பு, காரம்,காய்கறின்னு  மூணு வகை !   எல்லாமே  மோதகம் டிஸைந்தான்.   (  அதான்  அச்சு இருக்கே !)  மெதுவடை,  அசோகா,  பால் கொழுக்கட்டைன்னு அவரையே அசத்திப்புட்டேன் :-)


போகுமிடத்தில் கிடைக்கும் இணையத் தொடர்பைப்  பொறுத்து  வாரம் ஒரு பதிவு  வரலாம்.   வாராமலும் இருக்க வாய்ப்பு உண்டு!  ஒரு மாசத்துக்கு  அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமா?   :-)

அனைவருக்கும்  விழாக் காலத்துக்கான இனிய வாழ்த்துகளுடன், எங்கள் அன்பும் ஆசிகளும்!

சிக்கன் கடைக்குள் போனேன் (இந்திய மண்ணில் பயணம் 47)

எனக்கு ரொம்பக் கடுப்பா இருக்கும் ஒரு சமாச்சாரம்....   உள்ளூர் பயணத்துக்கும்  ரெண்டு மூணு மணி நேரத்துக்கு முன்னால் ஏர்ப்போர்ட்டுலே இருக்கணும் என்றதுதான். நம்மவர் சொல்றார்....   இங்கெதான் எங்கெ போனாலும் கூட்டம் நெரியுதே....  அதான்னு......  ப்ச்....

 பஸ் ஸ்டாண்டு மாதிரிதான் இப்ப விமான நிலையங்கள் எல்லாம்.....   ஆனால்  பஸ்ஸுலே கடைசி நிமிட்லே கூட ஓடிப்போய் ஏறிக்கலாம் :-)


பொழுது விடிஞ்சதான்னு  ஜன்னல் திரையை விலக்கினால்.... கோம்தியில் மீன் பிடிச்சுக்கிட்டு இருக்காங்க.
காலையில் எழுந்து தயாராகி, கீழே போய் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சோம்.  இட்லி இப்ப ஒரு 'இன்ட்டர் ஸ்டேட் ஃபுட் ஐட்டம்' ஆகி இருக்கு.  ருசியைப் பற்றிக் கவலை  இல்லை. உருவம் சரியா இருந்தாப் போதும்!   கூடவே பராவும் உண்டு:-)

நான் பரா, டோக்ளா, ஒரு போண்டா , கொஞ்சம் முளைப்பயிறு எடுத்துக்கிட்டேன். டோக்ளா இவுங்க நல்லா செய்ஞ்சுருவாங்க. நாம் செஞ்சாக் கொஞ்சம் கல்லாகிருது. அவரவருக்கு அவரவர் சமையல்தான் நல்லா வருது, இல்லயோ!

ஒன்பதரைக்கு வண்டிக்குச் சொல்லி இருந்தோம். வினோத் தான் வந்துருக்கார்.  சனிக்கிழமை என்றதால் அவ்வளவா ட்ராஃபிக் இல்லையாம்.  முக்கால்மணி நேரத்துலே ஏர்ப்போர்ட் வந்துட்டோம்.  இங்கேயும் அவ்வளவாக் கூட்டம் இல்லை. செக்கின் செஞ்சாச்சு. ஏற்கெனவே கூடுதல் எடைக்குக் காசு கட்டி இருந்ததால் பிரச்சனை ஒன்னும் இல்லைதான்.





நமக்கு 12.05  மணிக்குத்தான் ஃப்ளைட்.  அதுவரை  நேரம் போக்கணுமே....   வேடிக்கை பார்க்க ரொம்ப இல்லை. கண்ணில் பட்டது சிக்கன் கடை.  'அடடா.... லக்நோவில் ரொம்ப விசேஷமாச்சே.....   நேத்து ஊருக்குள் கண்ணில்பட்ட ஏராளமான கடைகளில் கூட எட்டிப்பார்க்கலை பாரேன்'னு என்னையே நொந்துக்கிட்டு  சிக்கன் கடைக்குள் நுழைஞ்சேன்.
ஒரு கலர் மட்டும்னா கொஞ்சம் விலை கம்மி. ரெண்டு கலர் இருந்தால் கொஞ்சம் கூடுதல். ஒரு கலரே இருக்கட்டுமுன்னு  தேடுனதில்  நம்ம பச்சை  கண்ணில் பட்டது. ப்ரோப்பர் பச்சை இல்லைன்னாலும்...  பச்சைதான்.  ஒன்னு வாங்கிக்கிட்டேன்.

காத்திருக்கும் நேரம், பக்கத்து இருக்கையில் வந்து  உக்கார்ந்த ஒரு பெண்மணி, என் கையில் இருக்கும் பையை நோட்டம் விட்டுட்டு விசாரிச்சாங்க.   உள்ளுர் ஆள்தான். தில்லிக்கு ஒரு வேலையாப் போறாங்க. நாளைக்குத் திரும்பிருவாங்களாம்.  கொடுத்த  விலை அதிகமோன்னு எனக்கொரு சம்சயம். ஏர்ப்போர்ட்லே எல்லாம் தீ பிடிச்ச விலை இல்லையோ?  ஏறக்கொறைய  சரியான விலைதானாம்.  என்ன ஒன்னு ஊருக்குள்  நிறைய டிஸைன்கள், வகைகள் கிடைக்குமாம்.   போயிட்டுப் போகுது. அதான் இன்னொருக்கா ஒரு வாரம் வந்து தங்கப்போறோமே... அப்ப வாங்கினால் ஆச்சு :-)

தில்லி வந்து சேர்ந்தப்ப  மணி ஒன்னேகால். சென்னை ஃப்ளைட் புடிக்கணும் இப்ப.  உள்ளேயே  ட்ரான்ஸிட் மக்களுக்குன்னு எதோ வழியைக் காமிச்சாங்கன்னு போனால்.... ஒரு Mazeக்குள் நுழைஞ்சமாதிரி இருக்கு.  அசல் மொஃபஸல் பஸ் ஸ்டேண்டு மாதிரி இதுக்குள்ளே கூட்டம்!  வேணுமுன்னே இந்த வழியை வச்சமாதிரித்தான் இருந்துச்சு.

   இன் ஃப்ளைட் ஸ்நாக்ஸ் என்ற வகையில்  ஒன்னு கொடுத்தாங்க. அதென்ன  இனிப்புன்னு   இந்த ஜெட் ஏர்வேஸ் ஃப்ளைட்டுகளில் எல்லாம்   புளி உருண்டை ரெண்டு வைக்கிறாங்கன்னே தெரியலையே...   :-) ரெண்டு மூணு  ஃப்ளைட்டுலே  இப்படிக்கிடைச்சது  :-)

ஒருவழியா  சென்னை வந்து சேர்ந்தோம். அஞ்சே முக்கால்.  ஒரு நாள் முழுசும் போயே போயிருச்சு. நம்ம   ஸ்ரீராம் ட்ராவல்ஸ்  சீனிவாசனை  மறுநாள் முதல்தான் புக் பண்ணி இருக்கோம்.  இன்றைக்கு அவர்  வேற இடத்துக்குப் போயிருக்காராம்.  டாக்ஸி  ஒன்னு எடுத்துக்கிட்டுக் கிளம்பியாச்சு.

 திநகருக்குள் நுழைஞ்சவுடனே  நவராத்ரி கோலாகலம் கண்ணில் பட்டுச்சு. இடம்தெரியாம வேறேதோ வழியில் நுழைஞ்சுட்டார் போல டாக்ஸி ட்ரைவர்.   தெருவில் மேடையெல்லாம் போட்டு சிலர் பறை அடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆயுதபூஜைக் கொண்டாட்டமாம்.  ஸ்ரீகிருஷ்ணர் குழலும் கையுமா ஜொலிச்சுக்கிட்டு இருந்தார். நல்ல கூட்டம்....


கொஞ்சம் சுத்திக்கிட்டுப் பாண்டிபஸார் தொட்டவுடன்,  நாமே வழி சொல்லி, நம்ம லோட்டஸுக்குப் போய்ச் சேர்ந்தோம். எதோ வீட்டுக்கு  வந்தாப்லெ நிம்மதி ஆச்சு.  புதுசா   கண்ணாடி லிஃப்ட் போட்டுருக்காங்க. சூப்பர்!  முந்தி போல க்ரில்லை இழுக்க வேணாம்.  அது கம்பியை இழுக்கறதுக்குள்ளே  ...'க்ளோஸ் த டோர்'ன்னு கத்திக் கத்தியே  நம்ம உயிரை எடுத்துரும்.

கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு  ஒரு ஆட்டோ பிடிச்சு பாண்டிபஸார் கீதாகஃபேக்குப் போனோம்.

நம்ம பேட்டைக்குள் இருக்கோம் என்பதே  மனசை மகிழ்ச்சியாக்கிடுது :-)
தீபக் கையால் இட்லியும் ஃபில்ட்டர் காஃபியும் கிடைச்சது. நல்ல பையர்.  வழக்கம்போல் நார்த்தான்.  தில்லி அம்பி.

வெளியே வந்தப்ப, நம்ம கீதா கஃபேயை ஒட்டியே இருக்கும்  துணிக்கடையில் தொங்கிக்கிட்டு இருந்த டிஸைன் நல்லா இருக்கேன்னு  வாங்கிக்கிட்டு,  அப்படியே  நம்ம டெய்லரிடம் கொண்டுபோய்க் கொடுத்துட்டு  ரெண்டுநாளில் வேணுமுன்னு சொல்லிட்டு  அறைக்குத் திரும்பிட்டோம்.

தொடரும்.......  :-)

PINகுறிப்பு :  சென்னைக்குப் பிறந்த நாள் சமயம் இல்லையோ இப்ப .... சென்னைப் பதிவாகவும் இதை வச்சுக்கலாம் :-)