Monday, August 14, 2017

மகிழ்ச்சியோ மகிழ்ச்சி !!!(இந்திய மண்ணில் பயணம் 43)

பாண்டவர் கோவிலுன்னு  ஆசையோடு உள்ளே போனால் நடுநாயகமா வாசலுக்கு நேரெதிரா ஸ்ரீ க்ருஷ்ணன், அவருக்கு இடமும் வலமுமா தருமரும், அர்ஜுனனும்.  'பத்ரி அர்ஜுனனை'ப் பார்த்த கண்ணுக்கு இங்கே இருட்டிக்கிட்டு வந்துருச்சு :-)

பீமன், நகுலன்,சகாதேவன் எல்லோரும் வரிசை கட்டி நிக்க இந்தாண்டை த்ரோபதி.

தனியார் கோவில்கள்  ஏகப்பட்டது  இருக்குன்னேனே அதுலே ஒன்னு இது.  ஒரு வீடு மாதிரிதான்.  ஒரு ஹாலில் சிலைகள். எல்லா இடத்தையும் போல  இங்கேயும்  முக்கியமான இடம். கட்டாயம் தரிசிக்கவும்னு எழுதிப் போட்டுருக்காங்க :-)


பெருசா வருமானம் வராதுன்னாலும்....   வர்றது வரட்டுமே என்றதைப்போல மகிழ்ச்சியான முகத்துடன் பண்டிட்கள்  இந்த மாதிரிக் கோவில்களைப் பார்த்துக்கறாங்க.  இங்கே  பந்து ஷுக்லா என்ற இளைஞர். ரொம்ப  நிம்மதியா  மகிழ்ச்சியோடு தரிசனம் செஞ்சு வச்சார்.   உண்மையில் மகிழ்ச்சியோடு இருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம் , இல்லையோ!  நல்லா இருக்கட்டும். க்ளிக் ஆச்சு :-)


எதிர்ப்புறமா  கொஞ்சதூரத்தில் காட்டு ஷ்யாம் (Khatu Shyam)கோவில் ஒன்னு. ஏனோ போகணுமுன்னு தோணலை.  இந்த காட்டுஷ்யாம்     நம்ம பீமனுடைய பேரன், கடோத்கஜனின் பிள்ளை. தனியார்க்கோவில்தான்.  பழைய புராதனக் கோவிலாக இருந்தால் போகலாமுன்னு  தோணும்போதே வண்டி போய் நின்னது ஒரு புராதனக்கோவிலில்தான்.   அப்படித்தான் எழுதி வச்சுருக்காங்க :-)
புராண் மந்திர். ஸ்ரீ ஸ்ரீமாதா ஆனந்தமயி ஆஷ்ரம்.  ஐயோ...  கட்டிப்பிடி வைத்தியமோன்னு நினைச்சுக்கிட்டே உள்ளே போனால்....   சுகர் இருக்கார்!

 இவரும் ஒரு பிரபலத்தின் பிள்ளைதான் !    எழுத்தாளரின் மகன்!  உலகின் முதல் எழுத்தாளராக இருக்கார்  அப்பா வேத வியாஸர்.  சுகப்ரம்மரிஷி! மூக்கு அப்படியே கிளிமூக்கு!  அம்மா சாயலில் பொறந்துட்டார்!
ஒரு சமயம் தேவகன்னிகையான  க்ருதாஸி,  எதிர்பாராத விதமா  வியாஸரைக் கடந்து போறாங்க.  அந்தப் பேரழகைப் பார்த்ததும்  வியாஸ மஹரிஷிக்கு மனதில் சின்னதா ஒரு மயக்கம். மோஹம். இதை உணர்ந்த நொடியில் க்ருதாஸி அந்த இடத்தை விட்டுக் கிளம்பிடணுமுன்னு  தலையைத் தூக்கிப்பார்க்க, ஒரு கிளிக்கூட்டம் பறந்து போய்க்கிட்டு இருக்கு.  க்ருதாஸியும் சட்னு கிளி ரூபமெடுத்து கூட்டத்தோடு கூட்டமா பறந்து போயிடறாள்.

ஆனால்.....   பார்வை துளைத்த   அந்த மைக்ரோ செகன்ட் மோஹம்  காரணம்  அவளுக்கு  கர்ப்பம் ஏற்பட்டு,  குழந்தையும் பொறந்துருது, கிளி மூக்கோடு.   இந்தக் குழந்தை பிறக்கும்போதே  மஹாஞானியாகப் பிறந்ததாம்.  குழந்தையைக் கொண்டுவந்து  வியாஸரின் ஆஸ்ரமத்தில்  விட்டுட்டுப் போயிடறாள் க்ருதாஸி.

குழந்தையைப் பார்த்தவுடன், இது தன்னுடைய மானசீகக் குழந்தைன்னு  மஹரிஷிக்குத் தெரிஞ்சு போய், அதை  இவரே வளர்க்கிறார்.  சுக ன்னு சொன்னால் (शुक   வடமொழியில்)  கிளி என்பதால் சுகன்னு பெயர்  வச்சு,  தான் இயற்றியவைகளையெல்லாம்  சொல்லிக்கொடுத்து  வளர்த்துருக்கார்.  அந்தக்காலத்தில்  எல்லாமே கேள்வி ஞானம்தான்.  குருவானவர் சொல்வதைக் கேட்டுத்தான் படிப்பே!  வாயால் சொல்லியே பரவுன சமாச்சாரங்கள் தான் எல்லாமே!   கூட்டங்கூட்டமாக வந்து உக்கார்ந்து  கதை கேட்பாங்க!
பரீக்ஷத்து மஹாராஜாவுக்கு ஏழு நாட்களில் பாம்பு கடிச்சு மரணம் என்ற சாபம் கிடைச்சதும், இருக்கற ஏழுநாளை எப்படிப் பயனுள்ளதா செலவிடலாமுன்னு  இந்த வனத்துக்கு  வந்து  சுகமஹரிஷியிடம் கேட்க, அப்போதான்   அவருடைய  தந்தை வியாஸர் எழுதுன பாகவதத்தைச் சொல்றார்.  அந்த சம்பவங்கள் எல்லாம் நடந்த இடம் இதே நைமிசாரண்யம்தானாம்!

சுகப்ரம்ம ரிஷி சிலையை நான் முதல்முதலாப் பார்க்கறது இங்கே இப்பதான்!  மினுமினுன்னு வெங்கலச் சிலை.  ரொம்பவே பெருசாத்தான் இருக்கு!  கண்ணாடிப் பொட்டிக்குள் வச்சுருப்பதால்   படத்தில் கண்ணாடியின் ரிஃப்லெக்‌ஷன் வந்துருது,
கையெடுத்துக் கும்பிடு போட்டுட்டுப் பக்கத்து அறையில்  அடுக்கி வச்சுருக்கும் புராணங்களையும் க்ளிக்கிக்கிட்டேன்.  பட்டுத்துணி போட்டு மூடி அடுக்கி இருக்காங்க.


முக்கியமான இடங்களையெல்லாம் தரிசனம் பண்ணியாச்சுன்னு அஹோபில மடத்துக்குத் திரும்பி வந்தோம்.

தொடரும்......:-)

PIN குறிப்பு :  கிளிக்கு   எதிர்காலம் பற்றி அறியும் ஞானம் இருக்குன்னுதான் கிளி ஜோஸியம்  பார்க்கும் பழக்கம் வந்துருக்குமோ என்னவோ?  


15 comments:

said...

மகிழ்ச்சியா இருப்பதுதான் வாழ்க்கையின் நோக்கம். ஆம், அதை மறந்து விடுகிறோம்! பழைய குளிர்பான விளம்பரம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சுகப்பிரம்ம ரிஷி தந்தை வியாசரை விடவும் ஞானத்தில் மேம்பட்டவர் என்பதற்குச் சில கதைகள் படித்த ஞாபகம்.

said...

ஒரு வேளை இம்மாதிரி தனியார் கோவில்கள் வருமானம் கொடுக்கிறதோ

said...

அருமை நன்றி வணக்கம்

said...

சுகப்பிரமரிஷி சிலை கண்டுகொண்டேன். அழகாக இருக்கிறது.

said...

சுகப்ரம்ம ரிஷி ஆஸ்ரமம் தரிசித்தோம். தொடர்கிறேன்.

said...

படம் அருமைம்மா

said...

பரீக்ஷத்து மஹாராஜாவுக்கு ஏழு நாட்களில் பாம்பு கடிச்சு மரணம் என்ற சாபம் கிடைச்சதும், இருக்கற ஏழுநாளை எப்படிப் பயனுள்ளதா செலவிடலாமுன்னு இந்த வனத்துக்கு வந்து சுகமஹரிஷியிடம் கேட்க

Maharaj Parishshit did not go to Suka. The King decided to do "prayopavesa" - fast until death. Hearing that lot of Rishis came to see him off and Suka was also there. The King asks a simple question - what can a man accomplish in short span of 7 days and that resulted in Bhagavatha Maha Puranam.

said...

வாங்க ஸ்ரீராம்.

பறவைகள் எப்பவும் மகிழ்ச்சியாகத்தானே இருக்குதுகள், இல்லையோ? மகிழ்ச்சியா இருக்கும்போது ஞானத்துக்கு என்ன குறைவு? அதான் சுகர் பெரிய ஞானியாக இருந்துருக்கார்!

இவர் பெண்கள் குளிக்கும் குளத்தைக் கடந்து போனபோது குளிச்சுக்கிட்டு இருந்த பெண்கள் இவரைச் சட்டையே செய்யாம இயல்பாக இருந்தாங்கன்னும், அடுத்தபடியா வந்த வியாஸரைப் பார்த்தவுடன், தங்களை ஆடைகளால் மூடி மறைச்சாங்கன்னும் ஒரு கதை உண்டு.

இவர் ஞானி. பரப்ரம்மம். அவர் மனுஷ்யர்! அதான் காரணமாம்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அப்படி ஒன்னும் ஏகப்பட்ட வருமானம் இல்லைன்னு நினைக்கிறேன். கிடைப்பதில் மகிழ்ச்சியா இருக்காங்க.

ஆனால்.... பெரிய புகழும் பெருமையுமா இருக்கும் நம்ம பக்கக் கோவில்களைப் பாருங்க....... ஏகப்பட்ட வருமானம். அதே சமயம் அங்கிருப்பவர்களும் ரொம்பவே பேராசை பிடிச்சுக்கிடக்கறாங்களே :-(

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க மாதேவி.

எனக்கும் பிடிச்சுருந்ததுப்பா. முதல்முறையாகப் பார்த்தேன்!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நீங்களும் போயிருந்தீங்கதானே?

said...

வாங்க ராஜி.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க Strada Roseville,

ஆமாம். ரொம்பச் சரி.

நாந்தான் கதை சொல்லும்போது சரியாகச் சொல்லலை....

நன்றீஸ்.

said...

சுகப் பிரம்ம ரிஷி பரிக்ஷித் மஹாராஜுக்கு பாகவத கதை சொன்ன இடம் ஷுக்ரதால்.... இதுவும் உத்திரப் பிரதேசத்தில் தான் இருக்கிறது. இதில் உண்மையான இடம் எது என்று சுகப் பிரம்ம ரிஷியே வந்து சொன்னால் தான் உண்டு.

ஷுக்ரதால் பற்றிய பதிவு என்று என் பக்கத்திலும் உண்டு. நீங்க படிக்கலைன்னு இப்போதான் பார்த்தேன்.... :) ஒரு விளம்பரம் இங்கேயும்!

https://venkatnagaraj.blogspot.com/2017/08/blog-post_21.html