Friday, July 29, 2022

ஹோலிகா என் தோழி !!!!

நம்ம ஊர் ஹரே க்ருஷ்ணா கோவிலில்  மஹாவிஷ்ணுவின் தசாவதாரத்தில்  மூணே மூணு அவதாரத்தைத்தான் பெரிய விழாவாகக் கொண்டாடுவாங்க.  பாக்கி ஆறு எனக்குத் தெரிஞ்சவரையில் இல்லை. நாமும்தான் வீடுகளில்  கொண்டாடறோமோ ? தெரியலையே....   நான்  நம்ம வீட்டில்  நாலு  அவதாரங்களைக் கொண்டாடுவது வழக்கம். நரசிம்ஹன்,  வாமனன்/த்ரிவிக்ரமன்,  ராமன்  & க்ருஷ்ணன். 

நம்மூர் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கு  சாயங்காலம் ஸ்ரீ நரசிம்ஹ ஜயந்தி விழாவுக்குப் போகணும்.  பெரிய நரசிம்ஹர் இருக்காருன்னு  சேதி அனுப்பினாங்க. காலையில் நம்ம வீட்டுலே பூஜை ஆச்சு.   சிலசமயம்  நம்ம தசாவதாரம் செட்டுலே இருக்கும் ஸ்ரீ நரசிம்ஹர் சிறப்புப் பூஜையில்  கலந்துக்குவார்.  இந்த முறை தூணைப்பிளந்துவரும் நரசிம்ஹர் வருகை!  போன கொலுவுக்கு  வந்தவர்தான் :-)

யாருக்கும் கிடைக்காத ஒரு பாக்கியம்  அடைஞ்சவன்,  ஹிரண்யக்கசிபுதான்.  
யாருக்குமே  ஏன்  லக்ஷ்மிக்கும், ப்ரஹலாதனுக்கும் கூட கிட்டாத பாக்கியம் இந்த  ஹிரண்யகசிபுக்கு எப்படிக் கிடைச்சுருக்கு பாருங்க!  அவுங்களுக்கெல்லாம்  வெறும் இடது தொடை. இவனுக்கோ ரெண்டு தொடையிலும்  கிடக்கும்  பாக்கியம்! இப்படிச் செத்தாலும் பரவாயில்லைதான்! இது ஒரு கொடுப்பினை, இல்லையோ?  இது எப்படி வாய்ச்சது? கதையை இங்கே சொல்லித்தான் ஆகணும் இப்போ:-)
மேலே படம்: சண்டிகர் ஹரே க்ருஷ்ணா கோவில்.

நம்ம ப்ரம்மா இருக்காரு பாருங்க, அவர்  வேலையில் சேர்ந்த  முதல்நாள், முதல் ட்யூட்டி என்னன்னா.... பூமியில் மக்கள்  பல்கிப்பெருக ஆவன செய்யணும்.  படைத்தல்! முதல் படைப்பா ஒரு நாலு பேரை  உண்டாக்கினார்.  இவுங்கதான் சனகாதிகள். சனகர், சனாதனர், சனந்தனர் அண்ட் சனத்குமாரர் என்று பெயரும் வச்சுட்டார். அடுத்த விநாடியில் நாலு பொண் குழந்தைகளைப் படைச்சிருக்கணும் இல்லையோ?  அங்கெதான்  கோட்டை விட்டுட்டார் :-(
பெயர் சூட்டுதலில் பிஸியாகிட்டாராக இருக்கும்.  இந்த சனகாதிகள்  மக்கள் தொகையைப் பெருக்க தங்களால் ஆனதைச் செய்யாமல்  சாமிகளைக் கும்பிட்டுக்கிட்டு தேவலோகத்திலேயே சுத்திக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொரு நாளுக்கு  ஒரு இடமுன்னு  சிவலோகம், வைகுண்டம், ப்ரம்ம லோகம் இப்படி  தொடர் பயணம்தான்:-)
ஒரு நாள்  மஹாவிஷ்ணுவைப் பார்க்க  ஸ்ரீவைகுண்டம்  போறாங்க. அங்கே வழக்கமா வாசலைக் காவல் காக்கும் ஜய விஜயர்கள்  ட்யூட்டியில்!  ( பெருமாள் கோவில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு வெளியில் பக்கத்துக்கொன்னா நிப்பாங்களே  அவுங்கதான். ) 

எங்கியாவது போனால், கேட்டில் இருக்கும் வாட்ச்மேன்கிட்டே யாரைப் பார்க்க வந்துருக்கோம்னு சொல்லிட்டுப் போறோமே  அந்த லௌகீகம் எல்லாம் தெரியாது போல இந்த சனகாதிகளுக்கு.
மேலே :நம்ம வீட்டு ஜயவிஜயர்.

கேட் கீப்பரைச் சட்டை செய்யாமல் உள்ளே நேராப்போக ஆரம்பிச்சவங்களை  ஜயவிஜயர்கள் தடுத்து நிறுத்தி, நீங்க யாரு?  என்ன விவரமா வந்தீங்க?  நாங்க உள்ளே போய் நீங்க வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி ஐயா கிட்டே  அனுமதி வாங்கி  வர்றோம். ' சரி. உள்ளே வரச்சொல்லு'ன்னு அனுமதி கொடுத்துட்டாருன்னா  நீங்க உள்ளே போகலாம்னு தன்மையாத்தான் முதலில் சொன்னாங்க.

சொன்னதைக் கேட்டு  சனகாதிகள் சரின்னு சொல்லி இருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது?

'ஏய்... நாங்க யார்னு தெரியுமா? நீ யாரு எங்களைத் தடுத்து நிறுத்த?' ன்னு ரகளை பண்ண ஆரம்பிச்சு  பெரிய வாய்ச்சண்டையா முத்திப்போச்சு. 'மரியாதை தெரியாத நீங்க ரெண்டு பேரும்  ஏழு ஜென்மத்துக்கு பூலோகத்தில் அசுரர்களாகப் பிறக்கக்கடவது'ன்னு சாபம் விட்டுடறாங்க!

(பார்த்தீங்கல்லே... மரியாதை இல்லைன்னா பூலோகம்தானாம்!  இப்பல்லாம்  அசுரர்கள் வேற ரூபத்துலே மனுசனாப் பிறந்துடறாங்க. மனுசன்டா...மனுசன்!) 

இவ்ளோ நேரம்  உள்ளே இருந்த எஜமான் (எல்லாம் தெரிஞ்சுக்கிட்டும் ஒன்னுமே தெரியாதமாதிரி இருப்பார் இவர்!)  'என்ன சத்தம் இந்த நேரம்?' னு வெளி வந்து பார்த்தார்.  இந்தப் பக்கம் காவலாளிகள் ரெண்டுபேரும் பேயறைஞ்சமாதிரி நிக்க,  அந்தப் பக்கம் சனகாதிகள் ஒரே கோபமா நிக்க ன்னு இருக்கு ஸீன். 'அடடா  நீங்களா?  வாங்கவாங்க'ன்னு  ரொம்ப அன்போடும் மரியாதையோடும் கைகூப்பி வணங்கி உள்ளே அழைக்கிறார்.

ஜயவிஜயர்கள்  ரெண்டு பேரும் 'எங்க மேலே தப்பு ஒன்னும் இல்லீங்க ஐயா. எங்க ட்யூட்டியை நாங்க செஞ்சதுக்கு  இவுங்க சாபம் வுட்டுட்டாங்க. வாபஸ் வாங்கிக்கச் சொல்லுங்க'ன்னு   அழுகுரலில்  சொல்றாங்க.

"உங்க வாட்ச்மேன் எங்களை மரியாதை இல்லாம நடத்துனதாலே  சாபம் விடவேண்டியதாப் போச்சு. எங்களால் சாபத்தையெல்லாம் வாபஸ் கீபஸ் வாங்கிக்கமுடியாது. விட்டது விட்டதுதான்."

'ஐயா...   நீங்கதான் சூப்பர் சுப்ரீம்  கோர்ட். நீங்கதான்  எல்லோரையும் விட பெரும் ஆள்.  ஹை கோர்ட் தண்டனையை ரத்து பண்ணி எங்களைக்  காப்பாத்துங்க'ன்னு கெஞ்சிக் கதறி  பெருமாள் கால்லே விழறாங்க.

"இல்லைப்பா... தேவலோகத்துலே நியாயங்கள்  வேற மாதிரி.  ஆளுக்கொரு சட்டம், நியாயமுன்னு இருக்க இதென்ன  பரதகண்டமா?  நீங்க தண்டனை அனுபவிச்சுத்தான் ஆகணும். என்னுடைய அதிகாரத்தை வச்சு  வேணுமுன்னா  தண்டனையைக்   கொஞ்சூண்டு குறைக்க முடியும்."

 தூக்குன்றதை ஆயுள் தண்டனை  ஆக்குவது போலவா!

"அந்த ஏழுக்கு பதிலா மூணு  வாட்டி  ஜென்மம் எடுத்தாப் போதும். ஓக்கேயா?"

'சரிங்க  எஜமான். மூணுன்னா மூணு.  ஒவ்வொரு பிறப்பையும் சட்னு முடிச்சுக்கிட்டு சீக்கிரம் இங்கே வந்து ட்யூட்டியில்  சேரணுமுன்னு ஆசீர்வதியுங்க'ன்னு  மறுபடி காலில் விழுந்தாங்க ஜயவிஜயர்கள்.

எடுத்த பிறவியை சட்னு முடிக்க என்ன செய்யலாமுன்னு  பெருமாளையே கேக்க, 'சதா என்னைத் திட்டிக்கிட்டேக் கிடங்க'ன்னாராம். கொடுமை செய்யுங்க. எப்படா இவன் ஒழிவான்னு மத்தவங்க நினைக்கும்படியா நடந்துக்குங்கன்னாராம்.

அவங்களுக்கு இயல்பா இருந்த நல்ல குணத்தால் இதை சட்னு ஒத்துக்க முடியலை. "அதெப்படி எல்லாருக்கும் கொடுமை செய்யறது?  ஒரு நியாயம் வேணாம்? மாத்தி யோசிங்க எஜமானே......"

'சரி. நானே  பூமியில் வந்து பொறக்கதான் போறேன். அந்தக் கெட்டதையெல்லாம் எனக்கே செய்யுங்க'ன்னுட்டார்  பெருமாள்.

 முதல் பிறவியில்  ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன் என்ற  அண்ணந்தம்பிகளா பூமியில் வந்து பொறந்தாச்சு ஜயவிஜயர்கள். இவுங்க கெட்ட நேரம் இப்ப ஸ்ட்ராங்கா இருக்கு. முதல் பிறவி ஜோர்லே கண்ணுமண்ணு தெரியலை.

அக்ரமம் ஆரம்பிச்சது. ஹிரண்யாக்ஷனுக்கு  போனஸ் மார்க் கொடுக்கும் அளவுக்கு  தீவிரமா போயிட்டான்.  ரிஷிமுனிவர்கள் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிட்டு அப்படியே தேவலோகத்துக்குப்போய் தேவர்களை எல்லாம்  கொடுமை செஞ்சுட்டு, 'எங்கெடா உங்க ஹரி'ன்னு  தேடிக்கிட்டு இருக்கான். அப்போ  அவர் வேற வேலையா வெளியே போயிருக்கார்.  பெரும்ஆள்  வீட்டுலே இல்லைன்னதும் ஆங்காரமா காலை ஓங்கி  பூலோகத்தை  அழுத்த   அது   அப்படியே பாதாள லோகத்துக்குப் போயிருச்சு.

பூமா தேவி  மனதுக்குள்  ஹரியை  வணங்கி தன்னைக் காப்பாத்த வேண்டிக்கறாள். அவரும் வராஹ அவதாரம் எடுத்து, பாதாள லோகம் போய்  ஹிரண்யாக்ஷனோடு சண்டை போட்டு அவனை வதம் செஞ்சுட்டு, தன் வராக மூக்காண்டை இருக்கும் பெரிய   பல்லால் பூமியைத் தோண்டி எடுத்துக்கிட்டு அப்படியே  வெளியே கொண்டு வந்துட்டார்.  

 தம்பி வரலையேன்னு பார்த்துக்கிட்டு இருந்த அண்ணன் ஹிரண்யகசிபுக்கு, தம்பி வதம் தெரிஞ்சதும்  கோபம் இன்னும் அதிகமாகிப் போச்சு. அப்பதான்  மகன் ப்ரஹாலதன் பொறந்து  ஹரியே எல்லாம்னு பக்தி பண்ணிக்கிட்டு இருக்கான்.  ஹரி ஓம் நமஹ தவிர வேற ஏதும் புள்ளை வாயில் வரலை!  அட்லீஸ்ட் ஒரே ஒருக்கா ஹிரண்யாய நமஹ சொல்லுடான்னா,  புள்ளையாண்டான் கேட்டாத்தானே?
அடிச்சு உதைச்சு, விஷப்பாம்புகளோடு அறையில் அடைச்சு, கடும்விஷத்தைக் குழந்தையின் அம்மா கையாலேயே குடிக்கக் கொடுத்து, மலை உச்சியில் இருந்து உருட்டிவிட்டு இப்படி  'தமிழ்சினிமா வில்லன் கணக்கா' என்னென்னவோ செஞ்சு பார்த்தாலும் புள்ளை சாவற வழியைக் காணோம். ஒவ்வொரு சமயமும்  பெரும் ஆள் காப்பாத்திடறார்.

என்ன செய்யலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சவன், தன்னுடைய தங்கை ஹோலிகாவைக் கூப்பிட்டு குழந்தையை  'அத்தை மடியில் உக்கார வச்சுக்கோ'ன்னான்.  என்னடா இவ்ளோ ஆசை?  காரணம் இருக்கே!  ஹோலிகாவை அக்னி தீண்டாதுன்னு ஒரு வரம்  இருக்கு.   இதையே வச்சுக் கதையை முடிச்சுக்கணுமுன்னு  திட்டம்தான் அப்பனுக்கு.

மடியில்  மருமானோடு ஹோலிகா  உக்கார்ந்ததும்,  அவளைச் சுத்தி தீ மூட்டி விட்டுடறாங்க. சொக்கப்பானை போல குபுகுபுன்னு எரிஞ்சு  எல்லாம் சாம்பலாகுது.  தொலைஞ்சான்  அந்த ஹரி பக்தன்னு  இருக்கும்போது , சாம்பல் குவியலில் இருந்து, என்னமோ இப்போதான் பூத்த தாமரை மாதிரி  எழுந்து வர்றான் ஹரிபக்தன் பிரஹலாதன். அப்ப அத்தை?  தீ தின்னுருச்சு!  அப்போ  அக்னி தீண்டாதுன்ற வரம் என்ன ஆச்சு?

அதுலே ஒரு சின்ன கேட்ச் இருந்ததை  கவனிக்கத் தவறிட்டாங்க அண்ணனும் தங்கையும். தர்ம நிலை தவறாமல் நடக்கும்போது அக்னி தீண்டாது.  பெத்த பிள்ளையை உயிரோடு தீ வச்சுக் கொளுத்தறது  தர்மமா?  அதுக்குத் துணை போனது அதர்மம் இல்லையா?  இப்படி அவள்  தீயிலே போனதைத்தான் ஹோலிப்பண்டிகையாக் கொண்டாடறாங்க நம்ம வடநாட்டில்.

மனம் வெறுத்துப்போய்  'எப்படிடா எவ்ளோ அடிச்சாலும்  தாங்கறே? எப்படிடா ... எப்படி?'  ன்னு கேட்க,  புள்ளை சொல்றான் 'அந்த ஹரிதான் எனக்கு ஒரு ஆபத்தும் வராமக் காப்பாத்தறார்'னு!

எரிச்சல் மண்டிய நிலையில் அந்த ஹரி எங்கேடா இருக்கான்னதும்  புள்ளை சொல்லுது  'எல்லா இடத்திலும் வியாபித்து இருக்கான்.  தூசி துரும்புலேயும் இருக்கார்'

ஹஹா... (கோபச்சிரிப்பு!) தூசி துரும்புலேயும்  இருக்கானா....  தூசியில்கூட  இருக்கான்னா  தூணில் இருக்கானான்னு  அலற,  இருக்காங்குது புள்ளை. எந்தத் தூணில் இருக்கான்?  எல்லாத் தூணிலும்தான் இருக்கான்.  கோபம் தலைக்கேற  எதிரில் இருந்த தூணைக் காமிச்சு  இந்தத் தூணில்  இருக்கானா?  இருக்கான்னு தூணைத் தொட்டுக் காமிச்சான் புள்ளை.

இந்த சமயத்தில் நம்ம பெருமாளுக்கு உள்ளுக்குள்ளே ஒரு உதறல். எந்த தூணுக்குள்ளே போய் நிக்கறதுன்னு? சின்னப்பிள்ளை எந்தத் தூணை  காமிக்குமோன்னு தெரியலையே...  இல்லாத தூணைக் காமிச்சுட்டா கதை கந்தல் ஆயிருமே.... ஒன்னு செய்யலாம், பேசாம இங்கெ இருக்க எல்லாத் தூணிலும் போய் மறைஞ்சு நிக்கலாமுன்னு அப்படியே செஞ்சானாம்.......... :-)

இருக்கானா......   இருக்கானான்னு வெறிச்சிரிப்போட தூணை எட்டி உதைக்கிறான்  ஹிரண்யகசிபு. அவ்ளோதான்... தூண் மடார்னு  வெடிச்சு ரெண்டாப் பிளக்க,  உள்ளே இருந்து  வர்றான்  பாதி அரியும் பாதி ஹரியுமா  நம்ம  நரசிம்ஹன்.  சிங்கத்தலை! சிங்கக்கை, சிங்க நகம் .பாதிமனிதன் பாதி மிருகம்.


அப்படியே தூக்கி தன்மடியில் வச்சு வயித்தைக் கிழிச்சு குடல் மாலை போட்டுக்கிட்டு   ரத்தம் குடிச்சது எல்லாம் ஆச்சு!


நம்ம கோவில்  நாடகம் இங்கே !

https://www.facebook.com/1309695969/videos/576753297372660/


இப்படித்தான் இரு தொடையிலும் கிடக்கும்  பாக்யம்  ஹிரண்யகசிபுக்கு லபிச்சது!  ஹரியின் விரோதியா இருந்து  சதா சர்வ காலமும்  எதிரியையே நினைச்சுக்கிட்டு இருந்தால் ............  இதுவும் ஒரு தியானம்தான் இல்லே?

இதேதான் நாத்திகம் பேசறவங்களும் செய்யறாங்க:-)   'சாமி இருக்கு'ன்றவன் இருக்குன்ற நம்பிக்கையில்  அலட்டிக்காமல் இருந்துடறான்.  சாமி இல்லைன்றவன்தான், இல்லைன்னு நிரூபிக்கறதுக்காக  புராணங்களையும் சாமி கதைகளையும் படிச்சுப் பார்த்துக்கிட்டே இருக்கான்.  அதுலே இருக்கும் சம்பவத்தையெல்லாம் முக்கியமா  கொஞ்சம் அரசபுரசலா இருப்பதையெல்லாம்  கவனிச்சு,  உங்க சாமி யோக்கியதையைப் பாருன்னு சொல்லி கேலி செய்யணுமாம்!
இப்பச் சொல்லுங்க... சாமி.... எப்பவாவது நினைக்கும் பக்தனுக்கு  உதவுமா, இல்லை  எப்போதும் நினைக்கும்  அபக்தனுக்கு  உதவுமா?


ஆமாம்...  மற்ற ரெண்டு பிறவிகள் என்ன ஆச்சு கேட்டால்....  ராமாவதார காலத்தில்   ராவணனும் கும்பகர்ணனும்,  க்ருஷ்ணாவதார காலத்தில் தந்தவக்ரனும் சிசுபாலனுமா  இருந்துட்டு  மூணு பிறவி முடிஞ்சதுன்னு  வைகுண்டத்து ட்யூட்டிக்குத் திரும்பிப் போயிட்டாங்க.



ஏற்கெனவே நம்ம துளசிதளத்துலே வந்த பதிவில் இருந்த கதைதான். கதை பழசுன்னாலும் நடிகர்களும் நடிப்பும் புதுசு ! நம்ம ஹரே க்ருஷ்ணா பக்தர்களின் குழந்தைகள் நல்லாவே  நாடகமா நடத்திக் காட்டுனாங்க.  இதுலே வந்த ஹோலிகா........ நம்ம தோழிதான் ! 



Wednesday, July 27, 2022

எலி வளையா இருந்தாலும் தனிவளையா வேணுமாம்....

இப்படிச் சொன்னது யாருன்னா....  நம்ம பூனை :-)  நம்ம வீட்டைக் கடைசியில, நாம் இருக்கும்போதே பாகம் பிரிக்கும்படியா ஆகிப்போச்சே.....
640 சதுர அடியில் ஒரு கூடம்.  அதுலே காவாசி வேணுமாம் !!!! 

வீடு மொத்தத்தையும்  ஆண்டு அனுபவிச்சுக்கிட்டுத்தான் இருந்தான் இத்தனை வருஷங்களும்.  இப்ப என்னடான்னா.....

மகள் அவளுடைய ஜூபிடருக்கு ஒரு டோனட் வாங்கினாள்.  அவனும் அழகா அதுலே  உக்கார்ந்து போஸ் கொடுத்தான் !  பல சமயம் தூக்கமே அதுலே படுத்துத்தான். 

கீழே படங்கள்  ஜூபிடர்!  போன மாசம் சாமிகிட்டே போயிட்டான். ப்ச்.....

ரஜ்ஜுவுக்கும் ஒன்னு வேணுமான்னு கேட்டாள்தான். ஆனால் 
இவனுக்கு வேணும்னு எனக்குத் தோணலை அப்போ. கொஞ்சநாள் கழிச்சு இவன் நம்ம காலையொட்டிப் படுக்க ஆரம்பிச்சானா..... என்னாலே சட்னு எழுந்து போகவோ, காலை அசைக்கவோ முடியாமல்  போச்சு. சரி. நாமும் ஒரு டோனட் வாங்கிக்கலாமுன்னு தேடினால்... எங்கே ?  வேண்டாதபோது கடைகளில் எல்லாம் கண்முன்னே இருந்ததையெல்லாம் யார் வாங்கிட்டுப் போனாங்க ? 

உள்ளூர்க் கடைகளில் எங்கே கிடைக்குமுன்னு வலை வீசினதில்  ஒரு  கடையில்   இருக்குன்னு தெரியவந்ததும் அங்கே போனோம்.  கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு இறங்கும்போதே.... கொஞ்சதூரத்துலே ஒருத்தர் டோனட்டை, ட்ராலியில் வச்சுக்கிட்டுப் போறாங்க. நான் விரும்பிய அதே நிறம் வேற !

கடைக்குள் பாய்ஞ்சு, செல்லம் செக்‌ஷனுக்குள் தேடினால்....  இருந்த கடைசி டோனட் தான்  ட்ராலியில் போயிருக்கு. ப்ச்.....  துக்கத்தோடு சுத்திவரும்போது வீடு ஒன்னு  கண்ணில் பட்டுச்சு.  ஈஸ்டர் ஹௌஸ்.   இவனுக்குத்தான்  வருஷப்பிறப்புக்கோ, ஈஸ்டருக்கோ ஒன்னும் வாங்கலையேன்னு (கோவிட் ஹௌஸ் டிடென்ஷன் காலம்  அப்போ)  வீட்டை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தோம்.


அப்பா உக்கார்ந்து வீட்டைக் கட்டினார்:-)எஞ்சிநீயர் இல்லையோ !!!!   ஹாஹா

மூணு பக்க வாசல்களோடு நல்லா அம்சமாத்தான் இருக்கு வீடு.  உள்ளே கொண்டு வந்து வச்சதும்  முன்வாசலையே பார்த்துக்கிட்டு இருந்தவன், பக்கவாட்டு வாசல்வழியா உள்ளே போய் உக்கார்ந்தான்.




கொஞ்சம் லேண்ட்ஸ்கேப் பண்ணிக்கொடுத்தேன் :-)

என்ன இருந்தாலும் சொந்த வீட்டு சுகம் வருமோ என்றதைப்போல்தான் அவனுடைய நடவடிக்கை ஆச்சு. ஆன்னா ஊன்னா வீட்டு வாசலில் போய் உக்காருவதும், சிலசமயம் உள்ளே போய் 'வறக் வறக்'னு தரையைப் பிறாண்டி நகங்களைக் கூராக்கிக்கறதுமா..... தரையில் என் தலை தெரியுதோ என்னவோ...

https://www.facebook.com/1309695969/videos/1599968280369075/

வீட்டில் வளர்க்கும்  செல்லங்களுக்கு விருப்பு வெறுப்பு இருக்குமா?  பிடிச்சது, பிடிக்காததுன்னு ....   போனமாசக்கடைசியில் மகள் எனக்கொரு பரிசு கொண்டுவந்து கொடுத்துட்டு, 'மதர்ஸ் டே கிஃப்ட்'  இப்பவே தர்றேன்னாள். பிரிச்சுப் பார்த்தால் தங்கச் செருப்பு ! நானென்ன மைக்கேல் ஜான்ஸனா... தங்க செருப்புப் போட்டுக்கிட்டு ஓட ?  

விசேஷம், பார்ட்டிகளுக்குப் போட்டுக்கிட்டுப் போகவாம்.  எனக்குச் சரிவராதுன்னுன்னதும்,  'வாங்கின கடையில் திருப்பிக்கொடுத்துடலாம்.  பிரச்சனை இல்லை.  வேற ஏதாவது வேணுமுன்னால் மாத்தி எடுத்துக்கலாமு'ன்னும் சொன்னாள்.   அந்த கிஃப்ட் பொதிஞ்சுவந்த தாள் தரையில் கிடந்ததும், இவன் மெள்ள அதுக்குள் போய்ப் பார்த்தான். அதில் இருந்த ஏதோ  ஒன்னு.... (மணம் ? )இவன் மனசுக்குப் பிடிச்சுருச்சுப் போல.  அதுலேயே உக்கார்ந்துக்குவான். அப்போ சொந்த வீடு வரலை.  
கோபம் வரும்போதோ இல்லை போரடிக்கும்போதோ அந்த தாளைக் கிழிச்சுப் போட்டுருவான். வேற கிஃப்ட் ராப் கொடுத்தாலும் பிடிக்கலை. மகளிடம் கொஞ்சிக்கூத்தாடி  கொஞ்சம் கிஃப்ட் ராப் கொண்டுவரச்சொன்னேன்.  அவள் அந்தக் கடையில் இருந்து நிறைய பொருட்களை வாங்கறாள்!  அது லேடீஸ் ஸ்பெஷல் கடை !  ஒவ்வொன்னும் யானை விலை.  தங்கச் செருப்பைத் திருப்பிக்கொடுக்கப்போனப்ப... நான் மகளுடைய பெயரைச் சொல்லி அவளுடைய  அம்மான்னதும் பயங்கர வரவேற்பு!  அந்தக் கடையின் உடைகளுக்கு மகள் மாடலிங் செய்கிறாள் !

இப்படியே  ஒருநாள் டோனட் தேடிப் போனப்பதான் வீடும் வந்தது.  அப்புறம் ஒருநாள்  அந்தக் குறிப்பிட்டக் கடைக்குப்போனபோது  ஸ்டாக் வந்துருக்கான்னு எட்டிப் பார்த்தால் நான் விரும்பிய கலரில் டோனட் ஒன்னு இருந்தது. ஆசை ஆசையா வாங்கியாந்தேன்.     

புதுசா எது வீட்டுக்குள் வந்தாலும் ஓடிவந்து நோட்டம் பார்க்கிறவன், இதை சட்டையே செய்யலை.  மகளிடம் கேட்டதுக்கு, படுக்கை மேல்  அவன் படுக்கும் இடத்தில் வச்சுப் பார்க்கச் சொன்னாள். ஊஹூம்.....   சரி. கலர் பிடிக்கலைபோலன்னு அவனுடைய  பாஷ்மீனா ஷால் எடுத்து அதன் மேல் போட்டு நிறம் மாத்தினேன்.

வேணாமுன்னா வேணாம்.... அம்புட்டுதான் !
அடப்பாவி.... இதே எண்ணமா இருந்து ஓடி ஓடிப் பார்த்து வாங்கினேனே... போச்சா.... எல்லாம் பாழப்போச்சா..  என்னென்ன கனவெல்லாம் கண்டேன்.....  (ஹாஹா... சினிமா விட்டுத்தொலைக்குதா பாருங்க ) 

போகட்டும்...  அதை எடுத்துக்க ஆளா இல்லை ?  இதோ.... குழந்தை தூங்கறது :-)   உன் காவாசி பாகத்துலே போட்டாச்சுடா!.  


நல்லவேளை.... 'ஒற்றுமையா வாழ்வதாலே உண்டு நன்மையே... வேற்றுமையை வளர்ப்பதனாலே....' ன்னு பாடிக்கிட்டே  நடுவே சுவர் ஒன்னும் கட்டலை !



Monday, July 25, 2022

எங்கூர் சித்திரைத் திருவிழா !

நம்மூருக்கு மஹா மாரி வந்துட்டாள்.  போனவருஷம் மார்ச் மாசம் பூமி பூஜை ஆச்சு. ஏப்ரலில் கோவிலும் கட்டியாச்சு !  


சித்திரைத் திருவிழா ஆரம்பிச்சது அப்போதான். பொதுவா ஃபிஜித் தமிழர்களுக்கு ரொம்பவே முக்கியமான  திருவிழாக்கள், ஆடிமாசம் கரகம் சுமந்தும்,  தீ மிதியும் குளுகுளாத் திருவிழா, கூழ் பூஜையும் ,  புரட்டாசி மாசம் கோவிந்தாப் பூஜையும்தான்.  இப்போ கோவில் சித்திரை மாசம் கட்டிமுடிச்சதால் வருஷாந்திர விழாவா இந்தச் சித்திரை மாசமும் சேர்ந்துருக்கு ! 
 
தென்னிந்திய   சன்மார்க்க ஐக்கிய சங்கம் ( TISI Sangam )என்பது ஃபிஜியில் குறிப்பிட்ட பெரிய தொண்டு நிறுவனம்.  மந்த்ராஜிகள் நிறுவியது. (வடக்கர்களுக்கு , விந்திய மலைக்குத் தெற்கே உள்ள அனைவரும் மத்ராஸிகள்தான்! ) கோவில் கட்டுவதோடு நிற்காமல் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சு வச்சதும்  இந்த சங்கம்தான்.  சங்கம் ஸ்கூல்னு இருபது பள்ளிக்கூடங்கள்  இருக்கு !  இங்கே வழக்கமான பாடங்களோடு தமிழும் சொல்லித்தர்றாங்க.   நாப்பது வருஷத்துக்கு முன்புவரை, தென்னிந்தியாவிலிருந்து ஆசிரியர்களைக் கூட்டிவந்துக்கிட்டுதான் இருந்தாங்க. நாங்க  ஃபிஜி போன புதுசில் நம்மூர் ஆசிரியர்களோடு, ரொம்ப சொந்த உறவினர் போலத்தான்  பழகி வந்தோம்,  எல்லாம் அந்த பாழாப்போன ராணுவப்புரட்சி வந்து நாட்டைக் கெடுத்தவரை.  அப்புறம்  வொர்க் பர்மிட் இல்லைன்னு பலரும்  வெவ்வேற நாடுகளுக்குப் போயிட்டாங்க. சிலர் மட்டும்  ஃபிஜி குடியுரிமை வாங்கி அங்கேயே இருந்தாங்க. இப்ப சங்கம் பள்ளிகளில் தமிழ் சொல்லித்தருவது நின்னு போச்சாம்.  குறைஞ்சபட்சம் பேசத் தெரிஞ்சாலும் போதும்தானே ?  ரொம்பப்பழைய தலைமுறை மக்களைத்தவிர  வேற யாரும் பேசறதும் இல்லை.  இங்கேயும் 'ஹம் பி மந்த்ராஜி ஹை. மகர் மந்த்ராஜி நை ஜானே ' தான்.  அர்ஜுன் என்ற நண்பர் மட்டும் என்னைப் பார்த்தவுடன், 'என்ன . எப்டி'ன்னுவார் !

ஃபிஜித்தமிழர்கள் உலகின் எந்தப் பகுதிக்குப்போனாலும், சின்ன அளவிலாவது  சங்கம் ஆரம்பிச்சு நம்ம கலை கலாச்சாரங்களை விடாமல் வச்சுருக்காங்க.  அதேதான் நியூஸியிலும்.  பள்ளிக்கூடம் இல்லை.  ஆனால் திருவிழாக்களில் தீமிதி நீங்கலாக,  ஆடி மாசம்  கூழ் ஊத்தி அம்மன் பூஜை, கோவிந்தாப்பூஜை உண்டு. எல்லாம்  போன வருஷம் வரை வாடகைக்கு எடுத்த ஹாலில்தான் . இப்பதான் கோவில் வந்துருச்சே !

இங்கே கோவில் வந்த விவரம் எல்லாம் இப்ப ஒரு நாலு மாசத்துக்கு முன்னே நம்ம துளசிதளத்திலேயே பதிவு வந்துருக்கு. அப்போ வாசிக்காதவர்களுக்காக.....



http://thulasidhalam.blogspot.com/2022/03/blog-post.html


கோவில்ன்னா அது வளரத்தானே வேணும். நம்மூர் சங்கத்தலைவர் சுப்ரமணி அவர்கள் முயற்சியால்  எல்லாம்  மெள்ள நடந்துக்கிட்டுதான் இருக்கு. அவருடைய அர்ப்பணிப்பை இங்கே எழுதி, எங்கள் நன்றியையும் தெரிவிச்சுக்கறேன்.

மதுரைவீரன் ப்ரதிஷ்டை இருக்குன்னு தகவல் அனுப்பினார்.  ஆஹான்னு கிளம்பிப் போனோம்.  ஆக்லாந்தில் இருந்து  பூஜாரி ஐயா  ஷிவ் பிள்ளை (இவர்தான்  கோவில் கட்டி முடிஞ்சதும்  வந்து பூஜைகளை ஆரம்பிச்சுக் கொடுத்தவர் ) வந்திருந்தார்.  நம்மூர் சநாதன் தரம் சபாவின்  நிரந்தர பண்டிட் ரூப் ப்ரகாஷ் ஜி ,  வந்திருந்து  ஹவன் (அக்னி வழிபாடு )ஏற்பாடுகளைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார்.  ஃபிஜி இந்தியர்களிடையே  விசேஷ பூஜைகளில் எல்லாம் கட்டாயம்  'அக்னி தேவோ பவ ! ன்னு ஹோமம் செய்வது  வழக்கம்.  பூஜைக்குப் போகும் அனைவருக்கும்  அக்னிக்கு ஆஹுதியிடும் வாய்ப்பும் உண்டு. 



ஹவன் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் ஆனதும்தான் ஆக்லாந்திலிருந்து பண்டிட் சுநில் ஷார்தா  வந்தார். ஃப்ளைட் லேட். ப்ச்.....  ரொம்ப கம்பீரமா, கணீர் என்ற குரலில் ஸ்பஷ்டமாக   மந்திரம் சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.  என்னவோ எஸ்வி ரங்காராவ் மனசுக்குள் வந்து போனார் ! (கல்யாண சமையல் சாதம்  !!! )
நாந்தான் மதுரைவீரன் எங்கேன்னு பரபரப்பாக இருந்தேன் :-)  ஓரு வகையில் மதுரைக்காரி இல்லையோ !   சின்னதா ரெண்டடி உயரத்தில்  பளிங்குச்சிலை, ஜெய்ப்பூரில் இருந்து வந்துருக்கு !  கோவிலுக்கு  ஒரு அம்மன் சிலையும் வரவழைச்சுருக்காங்க. 
கருவறையை ஒழுங்குபடுத்தி அம்மன் வரவுக்காகத் தயார் பண்ணியிருந்தாங்க.

சாயங்காலமா உள்ளூர் ஆத்தங்கரைக்குப்போய் கரகம் சிங்காரிக்கணும்.  நாம்  அவுங்க கோவிலுக்குத் திரும்பிவரும்வரை நிக்காமல் வீட்டுக்கு வந்துட்டோம். 

இன்றுமுதல் ஆறுநாட்களுக்கு விழா !  முதல் நாள் ஹவன், மறுநாள்  மதுரைவீரன் ப்ரதிஷ்டை, கரகம் அலங்கரிப்புடன் ,  அம்மன் வரவேற்பும்  அம்மன் ப்ரதிஷ்டையும், அதுக்கடுத்தநாள் அபிஷேகம், அப்புறம்  பக்தர் வீடுகளுக்குக் கரகம் எடுத்துப்போய்  பூஜை .  கடைசிநாள் கூழ் ஊற்றும் வைபவம்.  ஆடி மாசம் கூழ் என்று இருந்தாலும்  இங்கே நியூஸியில் ஆடியில்  கடுங்குளிர்காலம் என்றதால், சித்திரைக்கே கூழ் ஆச்சு.      

வேலைநாட்கள் என்பதால்  சாயங்காலம் தான் பக்தர்கள் கூட்டம் அதிகம். நம்ம ஊரில் இருந்து  ஒரு 23 கிமீ தொலைவில் இருக்கு இந்தக் கோவில் இருக்கும் இடம்.  காலநிலை அவ்வளவாச் சரியில்லை. ஒரே குளிரும் மழையுமா....  இப்பதான் கோவிட் அட்டாக்கிலிருந்து  மீண்டு வந்ததாலும்,  திரும்பி வரும்போது  ராத்ரி நேர ட்ரைவிங் அவ்வளவாச் சுகப்படாததாலும்  எல்லா நாட்களும் நம்மால் போக முடியலை.  பெரிய கூடாரம் போட்டு வச்சுத்தான் தினமும் தெருக்கூத்து, ராமாயணம் வாசிப்பு, ஷெனாய் கச்சேரின்னு  கலைநிகழ்ச்சிகள் இருந்தாலும்  ராத்ரி 11 மணின்றது  நமக்குச் சரிவரலை. வயசாகுதுல்லெ..... 

அம்மன் ப்ரதிஷ்டையை வீட்டில் இருந்தபடி லைவாகப் பார்த்தோம்.  பெரிய பெட்டியில் அரிசி நிரப்பி அதற்குள்  மஹாமாரியம்மன் இருந்தாள். இதுதான் எனக்கு முதல்முறை இப்படிப் பார்ப்பது.  மறுநாள் காலை அபிஷேகத்துக்குப் போனோம்.  எனக்கொரு சின்ன அரிசிப்பொதி கிடைச்சது.  எனக்காக எடுத்து வச்சுருந்தாங்களாம் ! அம்மன் வந்த பெரியபெட்டி அரிசியை சின்னச்சின்னப்பொதிகளாப் போட்டு நேற்று ப்ரதிஷ்டைக்கு வந்திருந்த 'பெண் தெய்வங்களுக்கு' விநியோகம் நடந்துருக்கு ! 
என்னமாதிரி கருணை குடிகொண்டிருக்கும் கண்கள்!  கண்டதும் காதலில் விழுந்தேன் ! முதல்நாள் அலங்காரத்தில் ஜொலிப்புடன் இருக்காள் !   பூஜாரி ஷிவ் பிள்ளைக்கு உதவியா சிலர் ஆக்லாந்தில் இருந்து  வந்துருந்தாங்க.   அதில் இருவர் அபிஷேகம், அலங்காரத்துக்கான எல்லா வேலைகளையும் கவனமாச் செஞ்சு கொடுத்தாங்க.   மற்றவர்கள் தாரை தப்பட்டைன்னு பறையடிப்பதும் குழல் ஊதுவதுமாக  !
       


திரை திறந்ததும்... ஹைய்யோ.... என்ன ஒரு அழகு!      
அலங்காரம் சரியா இருக்கான்னு அப்பப்ப பூஜாரி ஐயா என்னிடம் கேட்டுக்கிட்டே இருந்தார்.  என்ன இருந்தாலும் ஊர்க்காரி இல்லையோ நான் ! ரொம்ப அழகுன்னு மனமாரப்  பாராட்டினேன்.   அழகை அழகுன்னுதானே சொல்லணும் ! 

நம்ம மதுரைவீரர் அம்மனை நோக்கி நின்றிருக்கார் !

கொஞ்சம் கோவில் வேலைகளில் உதவி செஞ்சுகொடுத்தார் 'நம்மவர்'.  சின்ன அணில் ! 



மறுநாள் தோழி வீட்டுக்குக் கரகம் வரும் நேரம், அங்கே போனோம். பூஜை நல்லமுறையில் நடந்தது. 

ஆச்சுக் கடைசிநாள் பூஜை பகலில்தான். அபிஷேகம் முடிச்சு அலங்காரம்  செஞ்சு, கூழும் படையலுமா போட்டுக் கோவில் வலம் வந்து ன்னு எல்லாம் கிரமப்படி ஆச்சு.  கரகங்கள் எல்லாம் ஆத்தங்கரைக்குப் போனாங்க.  கங்கையைத் திரும்ப ஆற்றில் சேர்க்கணும்.

எல்லா வேலைகளையும் ஒத்துமையாச் சேர்ந்து செஞ்ச TISI  சங்கத்தின் பெண்கள் குழுவினர்க்கு  (மாதர் சங்கம்) நன்றி சொல்லியே ஆகணும்.  தினம்  ரெண்டுவேளை சமையல் ஒரு நூற்றைம்பது பேருக்குச் செய்யறது சுலபமா என்ன ? 

ஆண்கள்  எப்பவும் போல  கோவில் வேலைகளைச் செஞ்சதையும்  பாராட்டத்தான் வேணும்!