Monday, July 25, 2022

எங்கூர் சித்திரைத் திருவிழா !

நம்மூருக்கு மஹா மாரி வந்துட்டாள்.  போனவருஷம் மார்ச் மாசம் பூமி பூஜை ஆச்சு. ஏப்ரலில் கோவிலும் கட்டியாச்சு !  


சித்திரைத் திருவிழா ஆரம்பிச்சது அப்போதான். பொதுவா ஃபிஜித் தமிழர்களுக்கு ரொம்பவே முக்கியமான  திருவிழாக்கள், ஆடிமாசம் கரகம் சுமந்தும்,  தீ மிதியும் குளுகுளாத் திருவிழா, கூழ் பூஜையும் ,  புரட்டாசி மாசம் கோவிந்தாப் பூஜையும்தான்.  இப்போ கோவில் சித்திரை மாசம் கட்டிமுடிச்சதால் வருஷாந்திர விழாவா இந்தச் சித்திரை மாசமும் சேர்ந்துருக்கு ! 
 
தென்னிந்திய   சன்மார்க்க ஐக்கிய சங்கம் ( TISI Sangam )என்பது ஃபிஜியில் குறிப்பிட்ட பெரிய தொண்டு நிறுவனம்.  மந்த்ராஜிகள் நிறுவியது. (வடக்கர்களுக்கு , விந்திய மலைக்குத் தெற்கே உள்ள அனைவரும் மத்ராஸிகள்தான்! ) கோவில் கட்டுவதோடு நிற்காமல் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சு வச்சதும்  இந்த சங்கம்தான்.  சங்கம் ஸ்கூல்னு இருபது பள்ளிக்கூடங்கள்  இருக்கு !  இங்கே வழக்கமான பாடங்களோடு தமிழும் சொல்லித்தர்றாங்க.   நாப்பது வருஷத்துக்கு முன்புவரை, தென்னிந்தியாவிலிருந்து ஆசிரியர்களைக் கூட்டிவந்துக்கிட்டுதான் இருந்தாங்க. நாங்க  ஃபிஜி போன புதுசில் நம்மூர் ஆசிரியர்களோடு, ரொம்ப சொந்த உறவினர் போலத்தான்  பழகி வந்தோம்,  எல்லாம் அந்த பாழாப்போன ராணுவப்புரட்சி வந்து நாட்டைக் கெடுத்தவரை.  அப்புறம்  வொர்க் பர்மிட் இல்லைன்னு பலரும்  வெவ்வேற நாடுகளுக்குப் போயிட்டாங்க. சிலர் மட்டும்  ஃபிஜி குடியுரிமை வாங்கி அங்கேயே இருந்தாங்க. இப்ப சங்கம் பள்ளிகளில் தமிழ் சொல்லித்தருவது நின்னு போச்சாம்.  குறைஞ்சபட்சம் பேசத் தெரிஞ்சாலும் போதும்தானே ?  ரொம்பப்பழைய தலைமுறை மக்களைத்தவிர  வேற யாரும் பேசறதும் இல்லை.  இங்கேயும் 'ஹம் பி மந்த்ராஜி ஹை. மகர் மந்த்ராஜி நை ஜானே ' தான்.  அர்ஜுன் என்ற நண்பர் மட்டும் என்னைப் பார்த்தவுடன், 'என்ன . எப்டி'ன்னுவார் !

ஃபிஜித்தமிழர்கள் உலகின் எந்தப் பகுதிக்குப்போனாலும், சின்ன அளவிலாவது  சங்கம் ஆரம்பிச்சு நம்ம கலை கலாச்சாரங்களை விடாமல் வச்சுருக்காங்க.  அதேதான் நியூஸியிலும்.  பள்ளிக்கூடம் இல்லை.  ஆனால் திருவிழாக்களில் தீமிதி நீங்கலாக,  ஆடி மாசம்  கூழ் ஊத்தி அம்மன் பூஜை, கோவிந்தாப்பூஜை உண்டு. எல்லாம்  போன வருஷம் வரை வாடகைக்கு எடுத்த ஹாலில்தான் . இப்பதான் கோவில் வந்துருச்சே !

இங்கே கோவில் வந்த விவரம் எல்லாம் இப்ப ஒரு நாலு மாசத்துக்கு முன்னே நம்ம துளசிதளத்திலேயே பதிவு வந்துருக்கு. அப்போ வாசிக்காதவர்களுக்காக.....



http://thulasidhalam.blogspot.com/2022/03/blog-post.html


கோவில்ன்னா அது வளரத்தானே வேணும். நம்மூர் சங்கத்தலைவர் சுப்ரமணி அவர்கள் முயற்சியால்  எல்லாம்  மெள்ள நடந்துக்கிட்டுதான் இருக்கு. அவருடைய அர்ப்பணிப்பை இங்கே எழுதி, எங்கள் நன்றியையும் தெரிவிச்சுக்கறேன்.

மதுரைவீரன் ப்ரதிஷ்டை இருக்குன்னு தகவல் அனுப்பினார்.  ஆஹான்னு கிளம்பிப் போனோம்.  ஆக்லாந்தில் இருந்து  பூஜாரி ஐயா  ஷிவ் பிள்ளை (இவர்தான்  கோவில் கட்டி முடிஞ்சதும்  வந்து பூஜைகளை ஆரம்பிச்சுக் கொடுத்தவர் ) வந்திருந்தார்.  நம்மூர் சநாதன் தரம் சபாவின்  நிரந்தர பண்டிட் ரூப் ப்ரகாஷ் ஜி ,  வந்திருந்து  ஹவன் (அக்னி வழிபாடு )ஏற்பாடுகளைக் கவனிச்சுக்கிட்டு இருந்தார்.  ஃபிஜி இந்தியர்களிடையே  விசேஷ பூஜைகளில் எல்லாம் கட்டாயம்  'அக்னி தேவோ பவ ! ன்னு ஹோமம் செய்வது  வழக்கம்.  பூஜைக்குப் போகும் அனைவருக்கும்  அக்னிக்கு ஆஹுதியிடும் வாய்ப்பும் உண்டு. 



ஹவன் ஆரம்பிச்சுக் கொஞ்ச நேரம் ஆனதும்தான் ஆக்லாந்திலிருந்து பண்டிட் சுநில் ஷார்தா  வந்தார். ஃப்ளைட் லேட். ப்ச்.....  ரொம்ப கம்பீரமா, கணீர் என்ற குரலில் ஸ்பஷ்டமாக   மந்திரம் சொன்னது எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.  என்னவோ எஸ்வி ரங்காராவ் மனசுக்குள் வந்து போனார் ! (கல்யாண சமையல் சாதம்  !!! )
நாந்தான் மதுரைவீரன் எங்கேன்னு பரபரப்பாக இருந்தேன் :-)  ஓரு வகையில் மதுரைக்காரி இல்லையோ !   சின்னதா ரெண்டடி உயரத்தில்  பளிங்குச்சிலை, ஜெய்ப்பூரில் இருந்து வந்துருக்கு !  கோவிலுக்கு  ஒரு அம்மன் சிலையும் வரவழைச்சுருக்காங்க. 
கருவறையை ஒழுங்குபடுத்தி அம்மன் வரவுக்காகத் தயார் பண்ணியிருந்தாங்க.

சாயங்காலமா உள்ளூர் ஆத்தங்கரைக்குப்போய் கரகம் சிங்காரிக்கணும்.  நாம்  அவுங்க கோவிலுக்குத் திரும்பிவரும்வரை நிக்காமல் வீட்டுக்கு வந்துட்டோம். 

இன்றுமுதல் ஆறுநாட்களுக்கு விழா !  முதல் நாள் ஹவன், மறுநாள்  மதுரைவீரன் ப்ரதிஷ்டை, கரகம் அலங்கரிப்புடன் ,  அம்மன் வரவேற்பும்  அம்மன் ப்ரதிஷ்டையும், அதுக்கடுத்தநாள் அபிஷேகம், அப்புறம்  பக்தர் வீடுகளுக்குக் கரகம் எடுத்துப்போய்  பூஜை .  கடைசிநாள் கூழ் ஊற்றும் வைபவம்.  ஆடி மாசம் கூழ் என்று இருந்தாலும்  இங்கே நியூஸியில் ஆடியில்  கடுங்குளிர்காலம் என்றதால், சித்திரைக்கே கூழ் ஆச்சு.      

வேலைநாட்கள் என்பதால்  சாயங்காலம் தான் பக்தர்கள் கூட்டம் அதிகம். நம்ம ஊரில் இருந்து  ஒரு 23 கிமீ தொலைவில் இருக்கு இந்தக் கோவில் இருக்கும் இடம்.  காலநிலை அவ்வளவாச் சரியில்லை. ஒரே குளிரும் மழையுமா....  இப்பதான் கோவிட் அட்டாக்கிலிருந்து  மீண்டு வந்ததாலும்,  திரும்பி வரும்போது  ராத்ரி நேர ட்ரைவிங் அவ்வளவாச் சுகப்படாததாலும்  எல்லா நாட்களும் நம்மால் போக முடியலை.  பெரிய கூடாரம் போட்டு வச்சுத்தான் தினமும் தெருக்கூத்து, ராமாயணம் வாசிப்பு, ஷெனாய் கச்சேரின்னு  கலைநிகழ்ச்சிகள் இருந்தாலும்  ராத்ரி 11 மணின்றது  நமக்குச் சரிவரலை. வயசாகுதுல்லெ..... 

அம்மன் ப்ரதிஷ்டையை வீட்டில் இருந்தபடி லைவாகப் பார்த்தோம்.  பெரிய பெட்டியில் அரிசி நிரப்பி அதற்குள்  மஹாமாரியம்மன் இருந்தாள். இதுதான் எனக்கு முதல்முறை இப்படிப் பார்ப்பது.  மறுநாள் காலை அபிஷேகத்துக்குப் போனோம்.  எனக்கொரு சின்ன அரிசிப்பொதி கிடைச்சது.  எனக்காக எடுத்து வச்சுருந்தாங்களாம் ! அம்மன் வந்த பெரியபெட்டி அரிசியை சின்னச்சின்னப்பொதிகளாப் போட்டு நேற்று ப்ரதிஷ்டைக்கு வந்திருந்த 'பெண் தெய்வங்களுக்கு' விநியோகம் நடந்துருக்கு ! 
என்னமாதிரி கருணை குடிகொண்டிருக்கும் கண்கள்!  கண்டதும் காதலில் விழுந்தேன் ! முதல்நாள் அலங்காரத்தில் ஜொலிப்புடன் இருக்காள் !   பூஜாரி ஷிவ் பிள்ளைக்கு உதவியா சிலர் ஆக்லாந்தில் இருந்து  வந்துருந்தாங்க.   அதில் இருவர் அபிஷேகம், அலங்காரத்துக்கான எல்லா வேலைகளையும் கவனமாச் செஞ்சு கொடுத்தாங்க.   மற்றவர்கள் தாரை தப்பட்டைன்னு பறையடிப்பதும் குழல் ஊதுவதுமாக  !
       


திரை திறந்ததும்... ஹைய்யோ.... என்ன ஒரு அழகு!      
அலங்காரம் சரியா இருக்கான்னு அப்பப்ப பூஜாரி ஐயா என்னிடம் கேட்டுக்கிட்டே இருந்தார்.  என்ன இருந்தாலும் ஊர்க்காரி இல்லையோ நான் ! ரொம்ப அழகுன்னு மனமாரப்  பாராட்டினேன்.   அழகை அழகுன்னுதானே சொல்லணும் ! 

நம்ம மதுரைவீரர் அம்மனை நோக்கி நின்றிருக்கார் !

கொஞ்சம் கோவில் வேலைகளில் உதவி செஞ்சுகொடுத்தார் 'நம்மவர்'.  சின்ன அணில் ! 



மறுநாள் தோழி வீட்டுக்குக் கரகம் வரும் நேரம், அங்கே போனோம். பூஜை நல்லமுறையில் நடந்தது. 

ஆச்சுக் கடைசிநாள் பூஜை பகலில்தான். அபிஷேகம் முடிச்சு அலங்காரம்  செஞ்சு, கூழும் படையலுமா போட்டுக் கோவில் வலம் வந்து ன்னு எல்லாம் கிரமப்படி ஆச்சு.  கரகங்கள் எல்லாம் ஆத்தங்கரைக்குப் போனாங்க.  கங்கையைத் திரும்ப ஆற்றில் சேர்க்கணும்.

எல்லா வேலைகளையும் ஒத்துமையாச் சேர்ந்து செஞ்ச TISI  சங்கத்தின் பெண்கள் குழுவினர்க்கு  (மாதர் சங்கம்) நன்றி சொல்லியே ஆகணும்.  தினம்  ரெண்டுவேளை சமையல் ஒரு நூற்றைம்பது பேருக்குச் செய்யறது சுலபமா என்ன ? 

ஆண்கள்  எப்பவும் போல  கோவில் வேலைகளைச் செஞ்சதையும்  பாராட்டத்தான் வேணும்!   



4 comments:

said...

கோவிலின் வரலாறு சுவாரஸ்யம்.

said...

வாங்க ஸ்ரீராம்,

புலம்பெயர்ந்தவர்கள் கட்டும் கோவில்களுக்குக் கண்முன்னே வரலாறு !

said...

அம்மன் பிரதிஷ்டையும் விழாவும் படங்கள் சிறப்பு.

said...

வாங்க மாதேவி

வரலாறு முக்கியமும் கூட !