இந்திய நாட்டுக்கான புதுவருஷம் பொறந்தாச். சந்திரனின் சுழற்சிக் கணக்கு. நம்ம வீட்டு முன்னறையில் சின்னதா அலங்காரம் ஆச்சு. பொற்கிண்ணங்கள் வச்சேன். மஹாலஷ்மி எதாவது போடுவாள்தானே ?
யுகாதிப் பண்டிகையை வெவ்வேற பெயரில் இன்னும் சில மாநிலங்களும் கொண்டாடுவது உங்களுக்குத் தெரியும்தானே !
மஹாலக்ஷ்மி வரவை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கானோ ?போண்டா, பாயஸம் நைவேத்யம் ஆச்சு. மாங்காய் பச்சடிக்காக, புழக்கடை மரத்தில் இருந்து ரெண்டு மாங்காய்கள் பறிச்சு வந்தேன். சப்பாத்தி, பலாக்காய் கறியுடன் பகல் விருந்தும் ஆச்சு !!!!!
குழந்தை புத்திசாலிதான். ஆனால் ஏட்டுப் படிப்பு ஏறலை என்றதால் ஒரு கடை வச்சுக் கொடுத்தேன். நல்ல நாளா இருக்கேன்னு புதுசா ஒரு வியாபாரம். Fruits & Veges தள்ளுவண்டியில் விற்பனை. சின்ன அளவில்தான். அப்புறம் ஆன்லைன் வியாபாரம் செய்யணும். தினமும் புதுசு புதுசா காய்கறிகள் வந்து இறங்குது. வடுமாங்காய் கூட வந்துச்சுன்னா பாருங்க.
இவனுடைய புத்திசாலித்தனம் ....... வண்டியைத்தள்ளிக்கிட்டுப்போய் வியாபாரம் செய்ய ஒருத்தனை வேலைக்கு வச்சுட்டான். சரக்கு சேகரிக்க, என்னை ஒர்க்கிங் பார்ட்னரா இழுத்துவிட்டுட்டான். தினமும் என்ன காய்ன்னு இப்படி யோசிக்க வச்சுட்டானே..... இதுக்கெல்லாம் அசந்து போயிருவேனா என்ன ?
சில சமயம் காய்கள் தயாராகும்போது பக்கத்துலே உக்கார்ந்து பார்த்துக்கிட்டே பச்சைக் காய்கறிகள் தின்னவும் செய்வான். 'போகட்டும் போ.... முதலாளி தின்னால் என்ன'ன்னு விட்டுருவேன். சப்பாத்தி மாவு வயித்துக்கு ஒன்னும் செய்யாதுன்னு நினைக்கிறேன்.
தினமும் சின்ன அளவில் எதாவது அறுவடை, அடுத்த கோடைக்கான விதைகள் சேகரிப்புன்னு 'நம்மவரும்' பிஸி ஆனார். காலையில் வீட்டுவேலை, சாயங்காலம் ஆனா க்ரிக்கெட்ன்னு நேரத்தைப் பிரிச்சு வச்சுக்கிட்டார்.
ICC Women's Cricket World Cup 2022 நியூஸியில்தான் நடந்தது. ஃபைனல் கேம், நம்மூரில்தான். இந்தியாவோ இல்லை நியூஸியோ ஃபைனல்வரை வந்துருந்தாப் போயிருப்போமோ என்னவோ..... டிவியில் லைவாப் பார்த்தால் போதுமுன்னு இருந்தோம். ஒரு காலத்துலே இந்த விளையாட்டின் மேல் எனக்கு இருந்த மோகம்..... மேட்ச் ஃபிக்ஸிங் சம்பவத்தோடு போயே போச். 'நம்மவர்'தான் ஸ்போர்ட்ஸ் ப்ரேமி. எதுன்னாலும் விடமாட்டார். நியூஸியின் மதம் கூட ஸ்போர்ட்ஸ்தான் !!!!
நம்ம சநாதன தர்ம ஹாலில் புனரமைப்பு & பராமரிப்பு வேலைகள் முடிஞ்சதால் சிரமதானம் செய்தவர்களுக்கு நன்றி நவிலும் நாளாக ஒரு சிறப்புப்பூஜை நடந்தது. எதுக்குப்போகலைன்னாலும் இதுபோன்ற சிறப்பு நிகழ்ச்சிக்குக் கட்டாயம் போகத்தான் வேணும். நன்றி கொன்றவர்களாக இருக்கணுமா என்ன ?
இப்போ எங்க கோடை காலம் முடிஞ்சு இலையுதிர் காலத்தில் இருக்கோம். ஒவ்வொரு பருவத்திலும் ஒருநாளாவது நம்மூர் தோட்டத்துக்குப் போய்வரணும் என்பது என் 'கொள்கை' :-) அதன்படி நம்ம ஹேக்ளிபார்க் போனோம். ஏராளமான தோட்டக்கலை நிபுணர்களும், அவர்கள் சொல்பேச்சைக் கேட்கும் பணியாளர்களும் இருப்பதால் எப்பப்போனாலும் ஒரு ஒழுங்கும் அழகும் இருப்பதைச் சொல்லத்தான் வேணும்.
நகரத்துக்கு நடுவில் 'இப்போ இருக்கும்' தோட்டம் கொஞ்சம் பெருசுதான். ஒரு 408 ஏக்கர் பரப்பளவு. வெள்ளையர்கள் இங்கே குடியேற வந்திறங்கியதுமே ஊருக்கு வெளியில் ஆரம்பிச்ச தோட்டம் இது. ஊர் வளர வளர இது ஊருக்கு நடுவில் வந்துருச்சு :-)
வெறும் தோட்டமா இருந்த இடத்தில் மெள்ள மெள்ள வந்து இடம் பிடிச்சுக்கிட்டவை கோல்ஃப் க்ளப்பும், நெட்பால் கோர்ட்டும், டென்னிஸ் கோர்ட்டும், ரக்பி விளையாடும் புல்வெளியும். 2011 நிலநடுக்கத்துக்குப்பின் நம்மூர் ஸ்டேடியம் (நீங்கெல்லாம் இந்தியா க்ரிக்கெட் டீம் இங்கே விளையாட வரும்போது டிவியில் பார்த்திருப்பீங்க ) பழுதாகிப்போனதால், தாற்காலிக ஏற்பாடாக இந்தப் பார்க்கிலேயே கொஞ்சம் இடத்தைக் கடன் வாங்கி க்ரிக்கெட் போட்டிகள் நடக்கும் இடமா மாத்திக்கிட்டாங்க. Hagley Ovalனு பெயர். போறபோக்கைப்பார்த்தா...... 'கடனைத் திருப்பித்தரும் எண்ணம்' அறவே இல்லைன்ற மாதிரிதான் எனக்குத் தோணுது :-(
இப்படி எல்லோரும் அப்பத்தைப் பிய்ச்சுத்தின்னுட்டு, மீதி இருக்கும் இடத்தில் தான் நமக்கான தோட்டம். நிலநடுக்கம் இந்தப் பார்க்கை மட்டும் விட்டு வைக்குமா ? வயசான பல பெரிய மரங்களை பலி வாங்கிருச்சு.
நல்லவேளையா இந்தத் தோட்டத்தில் இருக்கும் கன்ஸர்வேட்டரிக் கட்டடம் கொஞ்சம் 'பழுது பார்க்கும் நிலையில்' தப்பிச்சது. இதையும் ஒரு மூணு வருஷம் பூட்டியே வச்சுப் பழுது பார்த்துட்டுப் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்தாங்க. இந்தக் கட்டடம்தான் இந்த முழுத்தோட்டத்திலேயும் எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம்.
கன்ஸர்வேட்டரியில் குலைதள்ளி நிற்கும் வாழை, காஃபி , ஒரு பக்கத்தில் கள்ளிச்செடிகள், ஒரு பக்கம் அந்தந்த சீஸனுக்கான பூக்கள்ன்னு அழகு சொல்லி மாளாது !
6 comments:
அருமை நன்றி
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
தோட்டம் அருமையாக இருக்கு.
வாங்க குமார்,
சிட்டிக் கவுன்ஸில் பராமரிப்பு. காசுக்கென்ன குறைச்சல்? ஏகப்பட்டத் தோட்டக் காரர்கள்! எல்லாம் நம்ம வரிப்பணம்.
காய்கறி, பழங்கள் வண்டி சூப்பர்.
வீட்டு மாங்காய் பச்சடி :) நன்றாக உள்ளது.
தோட்டம் அசத்தலாக இருக்கிறது வாழைப்பழமும் பறித்திடலாம்.:)
வாங்க மாதேவி,
அந்தத் தோட்டத்து வாழைக்காய்கள் என்ன ஆகுதுன்னு கண்டுபிடிக்கணும்ப்பா.....
Post a Comment