Wednesday, July 13, 2022

சிங்கம் வந்தது...... கூடவே யானையும்.....

இந்த கோவிட்  முதலில் பலி வாங்குனது சின்ன வியாபாரிகளைன்னு நினைக்கிறேன்.  ஏற்கெனவே பெரிய முதலைகளோடு போட்டிபோட முடியாமல் தள்ளாடிக்கிட்டு இருந்தவங்களை ஒரேடியாச் சாய்ச்சுப்புடுச்சு..... ப்ச்....
எதுக்கெடுத்தாலும் ஆன்லைனில் வாங்கறதுன்ற ட்ரெண்டையும்  கொண்டுவந்துருச்சுல்லே  சனம்.  லாக்கவுட், லாக்கவுட்டுன்னு  வீட்டை விட்டு வெளியேறாமலேயே எல்லாத்தையும் வீட்டுவாசலில் கொண்டுவந்து கொடுக்கறது நல்லாவே இருக்குன்னாலும்,  கடை கண்ணிக்குப்போய் நாமே கண்ணால் பார்த்துச் சாமான்கள்  வாங்கறமாதிரி ஆகுமோ ? 

சின்ன வியாபாரிகளும்,  கடைவாடகை,  மின்சாரம்,  காப்பீடு மற்ற  மேல்  செலவுகள்னு சமாளிக்க முடியாமல்  பேசாம ஆன்லைனில் விற்க ஆரம்பிச்சுட்டாங்க. 

மகள்தான் ஒருநாள் விவரம் அனுப்பினாள். ' கல்லுக்கடை ஒன்னு மூடறாங்க. நல்ல ஸேல் போய்க்கிட்டு இருக்கு. நான் போயிட்டு வந்தேன். எனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான்.  என் பெயரைச் சொல்லு. 50% கழிவு'ன்னு ஆசை காமிச்சா, நம்மாலெ ச்சும்மா இருக்க முடியுதோ ?
 
கிளம்பிப் போனோம்.  மகள் பெயரைச் சொன்னதும் நல்ல வரவேற்பு.  பரவாயில்லாம நல்ல பொருட்களாத்தான் இருக்கு!  மகளுக்கும் எனக்கும் கொஞ்சம் கல் பைத்தியம் உண்டு.  நம்மாண்டையே ஒரு நல்ல கலெக்‌ஷன் இருக்கே! ஒரு வருஷம், கொலுவில் கல்வரிசை கூட வச்சேன் :-))))

பாதிக்குப்பாதி சாமான்கள் வித்துப்போச்சுன்னு கடைக்காரம்மா சொன்னாங்க. மிச்சம் இருக்கறதைப் பார்த்துட்டு,  ஒரிஜினல் Ruby & Zoisite Beadsம், Back flow  incense cones ம்  வாங்கினோம்.   வெள்ளையர்களுக்கும் இந்த செமி ஜெம் ஸ்டோன்களில் ஆசை இருக்கு. எந்த சக்ராவுக்கு எதுன்னு பார்த்துப்பார்த்து வாங்கறாங்க. நாம் வாங்கியது Heart  சக்ராவுக்கானது. பாஸிடிவ் எனர்ஜி கொடுக்குமாம்.  ரொம்ப இந்த சக்ரங்களைப்பத்தி  எனக்குத் தெரியாதுன்னாலும் நல்லது நடக்குமுன்னா நடக்கட்டுமே!  வீட்டுக்கு வந்ததும் ஒரு ப்ரேஸ்லெட் செஞ்சு போட்டுக்கிட்டேன்.  நல்ல கனம் ! எதையும் தாங்கும் இதயம் வந்தால் சரி :-)   Ruby zoisite is found in Tanzania, with the largest deposits found at the base of Mount Kilimanjaro. Tanzania is the only known location to have ruby zoisite deposits, which is why the stone is so rare.

சுவரில் போட்டுருந்த  யானை நல்லா இருக்கேன்னு விலை விசாரிச்சால்,  நாளைக்குத்தான் வியாபாரம் கடைசி நாள்.  நாளைக்கு ஒரு மூணு மணிக்கு வந்தீங்கன்னா  யானையைத் தர்றேன்னாங்க. 

'இங்கே மூடிட்டு, வேற இடத்தில் கடை போடப்போறீங்களா'ன்னதுக்கு,  சின்னதாப் புலம்பிட்டு,  வீட்டுலே வச்சே ஆன்லைனில் விற்கவேண்டியதுதான்னாங்க.

அந்தப்பேட்டையில்  இந்தக் கல்லுக்கடையாண்டை ஒரு இண்டியன் கடை இருக்கு.   எப்பவாவது போவோம். போனமாசம்  இங்கே சமையல் எண்ணெய், திடீர்னு விலை ஏறிப்போச்சு.  ரெண்டு மூணு இடத்தில் விசாரிச்சுட்டு வாங்கலாமுன்னு  அந்தக் கடைக்குப்போனப்ப,  ஒரு சிம்மவாஹினியைப் பார்த்தேன்.  வாங்கிக்கலாமுன்னு  விலைவிசாரிச்சப்பப் பேரம் படியலை.  கடை முதலாளி வேற அப்போ இல்லை. 'பரவாயில்லை வாங்கிக்கோ, உன் பிறந்தநாள் பரிசாக இருக்கட்டும்னு 'நம்மவர்' சொன்னார்'தான். எனெக்கென்னமோ  மனசு வரலை.
மறுநாள் யானை வர்ற குஷியில்  அந்த இண்டியன் கடையாண்டை நிறுத்திவச்சுருந்த வண்டிக்குப்போனபோது, உள்ளே போயிட்டுப் போகலாமுன்னு போய், கண்ணை ஓட்டினால் சிம்மவாஹினி நமக்காகக்  காத்திருக்காள். கடைமுதலாளியும் இருந்தார்.  விலையும் படிஞ்சது.  கொஞ்சம் விலை கூடுதல்தான். ஆனால் இனி எப்போ  இந்தியாவுக்குப் போவோம் என்ற நிச்சயமே இல்லை. கொரோனாவால் பார்டர் மூடிவச்சுட்டாங்க.
வீட்டுக்கு வந்தபிறகுதான் தெரிஞ்சது சாமி சும்மா இருக்குன்னு :-) அதுக்குமே மக்களைக் காப்பாத்திக் காப்பாத்தியே போரடிச்சுப்போச்சு போல !  கொரோனாவைக் கண்டுக்கவே இல்லை பாருங்க.....

மறுநாள் சொன்ன நேரத்துக்குப்போனோம். யானையை  இறக்கிக் கொடுத்தாங்க.  நல்ல பெருசாத்தான் இருக்கு!  காசு வாங்கிக்கலை. இலவச யானை !!!!  
அந்தக் காலத்துலே அரசர், செல்வந்தர்  யாரையாவது கடுமையா தண்டிக்கணுமுன்னா, ஒரு யானையைப் பரிசாக் கொடுப்பாராம். அரசர் கொடுத்த யானையை நல்லபடியாப் பராமரிக்கணுமே.... அதுலே  அவன் சொத்து பூராவும்  கரைஞ்சே போய் படு ஏழையா ஆகிருவானாம்.  எப்படியாப்பட்ட தண்டனை பாருங்க!  பணம் இல்லாதவன் பிணம் இல்லையோ !  நல்லவேளை இது துணி யானை.  நல்ல இடமாப் பார்த்து மாட்டணும்.   





அந்த பஞ்சாபி லோஹ்ரி விழாவில் பார்த்த  துருக்க சாமந்திப்பூ மாலை மனசுக்குள்ளேயே உக்கார்ந்துருக்கேன்னு ஒருநாள் யூ ட்யூபில் தேடுனப்ப ஆப்டது.  செஞ்சு பார்க்கலாமுன்னு  ஆரம்பிச்சுக் கடைசியில் நல்லாவே அமைஞ்சுருச்சு ! முந்தியெல்லாம் க்ரேப் பேப்பரில் செய்வதை, இப்போ ப்ளாஸ்டிக் டேபிள் க்ளாத்தில் செஞ்சுடலாம். அழுக்கானால்  சோப்புத்தண்ணீரில் அலசினால் ஆச்சு ! 



கொஞ்சநாளா ரஜ்ஜுவின் எதிரிகள் நடமாட்டம் அதிகமாகி இருக்கு.  புலி, கருப்பன், வெள்ளையன்னு வீட்டைச் சுத்தி முற்றுகை போட்டுக்கிட்டு இருக்கானுங்க.     பேசாம T S  னு ஒரு நாவல் எழுதணும். பிற்காலத்துலே யாராவது படம் எடுக்கமாட்டாங்களா என்ன ?


6 comments:

said...

// கல்லுக்கடை// ஓ, சின்ன ல்.

said...

யம்மாடியோவ் ரஜ்ஜுவுக்கு இத்தனை எதிரிங்களா? நான் நண்பர்கள்னு நினைச்சேன்..

ஆனாலும் எல்லாம் அழகோ அழகு!

பூ மாலை அட்டகாசம் என் இளம் வயது நினைவு - இப்படி நவராத்திரிக்காக செஞ்சது. ஹாங்க் இளம் வயது நினைவுன்னு சொன்னதும் வயசாகிடுச்சோன்னும் நினைச்சுடாதீங்க துளசிக்கா!!!!ஹாஹாஹா

கீதா

said...

சிம்மவாஹினி மிக அழகாக இருக்கிறது.

யானை பிரியையின் வீட்டில் மேலும் பெரிய ஒரு வரவு.

அலங்காரம் அழகு.
ஆ! ரஜ்ஜுவுக்கு எதிரிகள்? அவர்களும் அழகாகவே இருக்கிறார்கள்.

said...

வாங்க விஸ்வநாத்,

ஹாஹா ஹாஹா....

said...

வாங்க கீதா,

நாயைப்போல் சேர்ந்து வாழும் குணம் இதுகளுக்கு இல்லையேப்பா. தனிமை விரும்பிகள். இப்பக் கொஞ்சநாளா ஒருத்தன் நம்மை ஒட்டிக்கிட்டே படுக்கறான். பாசம் பொத்துக்கிட்டு வந்துருக்கோன்னு ஒரு சம்ஸயம் :-)

said...

வாங்க மாதேவி,

அதிலும் அந்த வெள்ளையன் கொள்ளை அழகு. ரஜ்ஜு யாரையும் நெருங்க விடமாட்டான்.

கொஞ்சம் பொறாமை இருக்குபோல. அதிலும் புலி வரும்போது இவனுக்குப் பயந்து பதுங்கிப்பதுங்கி வந்து பூத்தொட்டியில் செடிபோல அசையாமல் உக்கார்ந்துருப்பான். நான் அடுக்களை ஜன்னலில் பார்த்துட்டுப்போய் சாப்பாடு வைப்பேன்.