Friday, July 22, 2022

குந்துனியா குரங்கே..... உன் சந்தடி.....

குந்துனியா குரங்கே உன் சங்தடியெல்லாம் அடங்கன்னு ஆகிப்போச்சு....  ஸ்ரீ ராம்நவமின்னு  ஓடி ஓடிப்போய் கொண்டாடிட்டு வந்தோமில்லையா... அதுலே  ஏதோ ஒரு இடத்தில் கோபாலைப் பிடிச்சுருக்கு இந்தக் கோவிட். 
பொதுவா இங்கே  தடுப்பூசி போட்டதுக்கான சாட்சியை நம்ம செல்ஃபோனில் , அரசு வச்சுருக்கும்  நம்ம ரெக்கார்டைப் பதிஞ்சு வச்சுக்கலாம். இதைக் காமிச்சால்தான்  ரெஸ்ட்டாரண்ட், இன்னும் சிலபல கூட்டங்கள், சபைகள் எல்லாம் உள்ளே அனுமதிக்கும்.

ஆனால் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில்,  'அரசு ஆணையை மதிக்கிறோம். ஆனால் பக்தர்களுக்குள் பாரபட்சம் காமிக்க முடியாது'ன்னு சொல்லியிருக்காங்க.  அதனால் அங்கிருந்துதான் வந்துருக்கணுமுன்னு என் கணிப்பு.  எதாக இருந்தாலும் எல்லாம் க்ருஷ்ணார்ப்பணம். நல்லதும்  பொல்லதும் நாராயணனுக்கேன்னு இருக்கவேண்டியதாப் போச்சு. 
ஆரம்பகால  ஆட்டங்கள் எல்லாம் அடங்கி இப்போ நம்ம அரசு நிதானத்துக்கு வந்துருச்சு. இருக்கா இல்லையான்னு நீயே  சோதனை செஞ்சு பார்த்துக்கோன்னு RAT   (Rapid Antigen Test.) பொட்டிகளை  விநியோகம்  செஞ்சது.

 இந்த எலி டப்பாவில்  இருக்கும் பொருட்களை வச்சு அஞ்சு முறை சோதனை செஞ்சுக்கலாம். நம்ம குடும்ப மருத்துவர், ஊர் ஆஸ்பத்ரி,  பள்ளிக்கூடம்,  மக்கள் போய்வரும் லைப்ரரி, ன்னு  பல இடங்களில் கிடைக்கும்.  நம்ம யோகா வகுப்புக்கும் சப்ளை செஞ்சாங்க.

வரிசையா நடந்தவைகளை எழுதிவரும்போது, இடையில்  கோவிட் வந்துட்டதால் , நிலை என்னன்னு  அப்பவே எழுதிட்டேன்.  அந்த விவரங்கள்தான் கொஞ்சம் 'சுருக்' காக italics  ல் கீழே !
கடைசியில் என்ன ஆச்சு தெரியுமோ ? ஸ்ரீ ராமநவமி பூஜைகள் மூணு இடத்துக்குப்போய் வந்த  ரெண்டாம் நாள் சாயங்காலம், இவருக்குக் காய்ச்சல். ரொம்ப லேசாத்தான். நார்மலைவிட பாய்ண்ட் 8 டிகிரி கூடுதல். ஒரு பனடால் போட்டுக்கச் சொன்னேன்.  ஜூரம் விட்டது. 

பொழுது விடிஞ்சதும், நம்மாண்டை இருக்கும் பொட்டிகளில் ஒன்னைத் திறந்து  பரிசோதனை செஞ்சுக்கிட்டவர்....  பாஸிடிவ்னு கொணாந்து காமிச்சார்.  உடனே கிளம்பி  டெஸ்டிங் ஸ்டேஷன் போனார்.  அங்கே உறுதி செஞ்சாங்க.  அப்படியே சுகாதார இலாகா   கோவிட் பிரிவுக்குச் செய்தி அனுப்பிச்சுட்டாங்க.  என்ன செய்யணும், எது கூடாதுன்றதுக்கு அச்சடிச்ச ஒரு தகவல் நோட்டீஸ். இன்னும் ரெண்டு பொட்டி எலிகள்.  பாஸிடிவ்னு தெரிஞ்சுபோச்சுல்லே.... இனி ஏழாம்நாள்  எலிப்பரிசோதனை போதுமாம்.


ஏழுநாட்கள் தனிமைப்படுத்திக்கணும்.  அது பிரச்சனை இல்லை. ஆனால் வீட்டுலே இருக்கறவங்களும் தனிமைப்படுத்திக்கணுமாம். எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது..... எலிப்புழுக்கை ஏன் காயணுமாம் ?  ரஜ்ஜுவை விட்டுட்டாங்க.  நம்ம குடும்ப மருத்துவரிடமிருந்து ஃபோன் வருது, நான் எப்படி இருக்கேன்னு ? ஏன்னா நம்ம உடல்நிலை இருக்கும் லக்ஷணம் தெரிஞ்சவங்க அவுங்க தானே ?
மூணாம் நாளும் ஏழாம் நாளும் நான் எலிப்பரிசோதனை செஞ்சுக்கணுமாம். தினம் தினம் டாக்டர் ஃபோன் பண்ணி விசாரிக்கறாங்க..... நல்ல வேளை குட் ஃப்ரைடே... ஈஸ்டர்னு  நாலுநாட்கள் தொடர்விடுமுறை வந்ததால்.....  விசாரிப்பு நின்னு போச்சு......

தனிமைப்படுத்திக்கறேன்னு  ஃபைவ் ஸ்டார் ரூமுக்குள்ளே போயிட்டார்.  அவர் அவருக்கு குடிக்க, தின்னன்னு எதாவது கொண்டுபோய் வாசலில் வச்சுட்டு வரணும்.  பாஸிடிவ்காரர் மட்டுமில்லாமல் நெகடிவ்காரரும் N95 Mask போட்டுக்கணும்.  ஃபேஸ்புக்கில் சமாச்சாரத்தைப் போட்டுவிட்டேன். மற்ற  உள்ளூர் நண்பர்கள், உதவி வேணுமான்னு கேட்டுக்கிட்டே இருந்தாங்க. வெளியூர், வெளிநாட்டு நண்பர்கள் எல்லோரும் கவலையைத் தெரிவிச்சு எனக்குத் தைரியம் சொன்னாங்க. அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை இத்துடன் தெரிவிச்சுக்கறேன்.

ஆச்சு மூணாம் நாள். என்னோட எலி, எனக்கொன்னுமில்லைன்னு சொல்லிருச்சு. ஒரு கோடு இருந்தால் இல்லை. ரெண்டு கோடுகள் இருந்தால் இருக்கு. சிம்பிள் !

இதுக்கெல்லாம் தனியா மருந்து மாத்திரைன்னு ஒன்னும் இல்லை. தலைவலி, உடல்வலிக்கு பனடால். இருமல் வந்தா அதுக்கொரு இருமல் ஸிரப். வைரஸ் என்பதால்.... எப்படி உள்ளே வந்துச்சோ... அப்படியே வெளியே ஓசைப்படாமப் போயிருமாம். உடலுக்குள் நுழைஞ்சவுடன் வீரியம் காமிச்சு அடுத்தவங்களுக்கு தொற்று பரவ அல்லாடுமாம். ஏழாம் நாள் பொட்டிப்பாம்பு.  

எல்லா வேலைகளும் செஞ்சு செஞ்சு எனக்குக் களைப்பாப் போயிருச்சு. கைவேற சரியில்லையே.... அதுபாட்டுக்கு விடாம வலிக்குது.  ரூம் ஸர்வீஸ் ஒரு கட்டத்துலே  அலுத்துப் போயிருதுப்பா....  முப்பத்தியஞ்சு முறை....   ஒரே ஒரு நல்லதுன்னா..... வீட்டு ஸிட்டிங்  ரூம் டிவி  வாயையும் கண்ணையும் மூடிக்கிட்டதுதான். தொண தொணன்னு அதுபாட்டுக்குக் கத்திக்கிட்டே இருக்கும் எப்பவும். நம்ம ரஜ்ஜுவுக்குத்தான்   வீடு சைலண்ட் ஆனது ஏன்னு தெரியலை.... சுத்திச் சுத்தி வர்றான்.  தகப்பனைப் பார்க்க முடியலை. என்ன ஆச்சும்மா? என்ன ஆச்சு.....  ஏம்மா நீ கத்திச்சண்டை கூடப் போடாம இருக்கே.... 24 மணிநேரமும் வீடே கதின்னு  வேற....   ப்ச்....  

வீக் எண்ட் வேற.... அதுவும்  லாங்க் வீக் எண்ட். நிறைய விசேஷங்களில் பங்கெடுக்கணுமுன்னு இருந்தேன்.  ஒரு நிச்சயதார்த்தம், ஒரு  ஸ்வீட் சிக்ஸ்ட்டீன் பொறந்தநாள், நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கத்தில் வருஷப்பிறப்பு விழா, நம்ம ஆஞ்சியின் பொறந்தநாளான ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி, சனிக்கிழமை போகும் ஹரே க்ருஷ்ணா கோவில் விஸிட், நம்ம தமிழ்ச்சங்கத்தில் வருஷப்பிறப்பு விழான்னு..... எதுலேயுமே கலந்துக்க முடியலை. 

ஆச்சு நேத்து ஏழாம்நாள்.  அரசு செய்தி அனுப்புச்சு.... விடுதலை...விடுதலை விடுதலை.....

எனக்கு மட்டும் எலிப்பரிசோதனை. ஒத்தைக்கோடைக் காமிச்சது..... 
நாம் ரெண்டு தடுப்பூசி, ஒரு பூஸ்டர் எல்லாம் போட்டுக்கிட்டதால் அவ்வளவா பாதிப்பு ஒன்னும்  இல்லாமத் தலைக்கு வந்தது, தொப்பியோடு போச்சுன்றதே உண்மை!

என்ன ஒன்னு.....  இது திரும்பியும் வர்ற சான்ஸ் இருக்காம். ஓமிக்ரோனோட வாரிசுகள் ஏற்கெனவே வெளியே வந்து உலாத்த ஆரம்பிச்சுருக்கே....  கொஞ்சம் படிச்ச வைரஸ்கள் போல!  பெயரெல்லாம்  BA 1, BA 2 ன்னு  வச்சுருக்குகள். இந்தப் பதிவு எழுதும் சமயம்  மேற்படிப்பு ஆச்சு போல ... BA 5.   மூணு நாட்களுக்கு முன் மருமகனுக்கு வந்துருச்சு.  இதோ இன்று முதல் மகளுக்கும்.....   ப்ச்.....   நாங்க ரெண்டாவது பூஸ்டரும் போட்டுக்கிட்டோம்.  

ஊர் உலகமெல்லாம் நோயில் வாட, அதை உண்டாக்கியவனே.... அதைக் கண்டுபிடிக்கவும்   தேவையானவைகளைத் தயாரிச்சு  இதே ஊருலகமெல்லாம் அனுப்பி நல்ல காசு பார்த்துக்கிட்டு இருக்கற அக்ரமம் இந்த பூவுலகைத் தவிற வேறெங்கும் இருக்காது....
என்னவோ போங்க......   

எங்கேயும் போக முடியாம இருந்த இந்த சமயத்துலேதான்  தமிழ் வருஷப்பிறப்பு, விஷூ , குட் ஃப்ரை டேன்னு தினம் ஒன்னு வரிசைகட்டி வந்தது இந்த  வருஷம். மனசை உற்சாகப்படுத்த நம்ம வீட்டு Bird of Paradise பூச்செடி, தன்னால் ஆனதைச் செய்தது. ஒருமுறை பூத்தால் நிறைய நாட்களுக்கு செடியில் நிற்கும் பூ,  இந்த முறை ரெண்டு தண்டுகளில் பூத்து மூணுமாசம் வரை நின்னது!






ஸோலார் காலண்டர் கணக்குப்படி சித்திரை முதல் தேதியும், மலையாள  மாசம் மேஷத்தின் முதல் தேதியும் ஒன்னாத்தான் வரும். இந்த வருஷம் அடுத்தடுத்த  நாட்களா அமைஞ்சதால்  தனித்தனியாக் கொண்டாடவேணாமுன்னு ரெண்டையும் சேர்த்தே கொண்டாடியாச்சு..  நம்ம ஜன்னுவுக்கும்  கிச்சுவுக்கும்  அலங்காரம் ஆச்சு.  ரஜ்ஜுவுக்குப் பட்டு மோகம் இருக்கு போல. 
விஷூக்கணி  தரிசனம் பார்க்க முடியாமல் தனிமையில் இருந்தவருக்கு, படத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பினேன். அவரும் விஷூக் கைநீட்டத்தை, என் பேங்க் அக்கௌண்டுக்கு அனுப்பினார். சம்ப்ரதாயத்தை மீறலாகுமோ ?  ஹாஹா





தகப்பன் இருக்கும் அறைக்குள் போக  முடியலைன்ற விரக்தியில் இங்கெ ஒருத்தன் பைத்தியம் பிடிச்சுப் பேப்பரை கிழிச்சுக்கிட்டு இருந்தான்.

அடுத்துவந்த  ஈஸ்டருக்கும் ஒன்னும் பெருசாப் பண்ணலை....



8 comments:

said...

அருமை நன்றி

said...

நான் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டதோடு சரி.  பூஸ்டர் போட்டுக்கொள்ளவில்லை!  அவரைப் பார்க்கவில்லை என்கிற சோகத்தை ரஜ்ஜு வெளிப்படுத்திய விதங்கள் யாது?

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

நாங்க ரெண்டு டோஸும் ரெண்டு பூஸ்டரும் ஆச்சு.

ரஜ்ஜு அந்த ரூம் கதவைத் திறக்கப் பிறாண்டிக்கிட்டே இருப்பான். நான் போய் தூக்கி வந்து என் அறையில் வச்சுக்குவேன். நல்லா ஆனதும் இவர் வெளியில் வந்தால் அவரிடம் போகவே இல்லை. தூரமா நின்னு பார்த்துட்டு என்னாண்டை வந்துருவான். எவ்ளோ அறிவு பாருங்கன்னு மெச்சிக்க வேண்டியதாப் போச்சு !

said...

அட ராமா கோவிட்!

நாங்களும் பூஸ்டர் எல்லாம் போட்டுகிட்டாச்சு. முதல் ஊசி போட்டதுமே கோவிட் வந்து போயிடுச்சு.

இங்கும் மொபைலில் நாம் போட்டுக் கொண்டதற்கு சாட்சி வைத்திருக்கணும் அதான் ஆரோக்கிய சேது...இப்பல்லாம் வெளியில் எங்கும் காட்ட கேட்பதில்லை. ஓஞ்சு போச்சு!!

ரஜ்ஜு! ஹாஹாஹா சிரிக்க வைத்துவிட்டான். அவனுக்கும் புரிஞ்சுருக்கு பாருங்க...!!

கீதா

said...

அட....ராமா ....ராமநவமியின் பின் இப்படியாகிவிட்டதே. ரஜ்ஜு பாவம் பொழுதுபோகாமல் இருந்திருப்பான்.

.பேட் ஆப் பரடைஸ் நன்றாகவே பூத்திருக்கு .

said...

வாங்க மாதேவி,

அப்பா பாசத்தை விட, கதவு ஏன் மூடியே இருக்குன்னு பார்க்கணும். ரொம்ப நோஸிப்பா :-)

ரொம்பவே ஆசைப்பட்டு வாங்கின செடி. நாலரை வருஷங்களுக்குப்பின் தான் பூத்தது.

said...

வாங்க கீதா,

அவன் நோஸி..... என்ன நடக்குதுன்னு தெரிஞ்சே ஆகணும் :-)