Friday, March 29, 2019

திருக்குடந்தை ஆராவமுதன்.... (பயணத்தொடர், பகுதி 85 )

ரெண்டே நிமிஷத்தில் போய்ச்சேரவேண்டிய இடத்துக்கு, போக்குவரத்து நெரிசலால்  அஞ்சு நிமிஷம் ஆச்சு!   கும்பேஸ்வரர் கோவிலில் இருந்து வெறும் முக்கால் கிமீதான்.  பெருமாளுக்கான திருமாமணி மண்டபம் இப்போ டூவீலர் பார்க்கிங் :-(
அழகான, கம்பீரமான பதினொருநிலை ராஜகோபுரம் கடந்து உள்முற்றத்தில் காலடி வைக்கும்போது கண் முன் 'சார்ங்கா சார்ங்கா சார்ங்கா'ன்னு ....   கொடிமரம் ஸேவிச்சுட்டு உள்ளே போறோம்.




இன்று முதல் அஞ்சு நாளைக்குப் பவித்ரோத்ஸவம் ! அப்புறமும் மூணுநாட்கள் விழா!  ஹைய்யோ.... எட்டுநாட்களுக்குத் தொடர்ந்து ஸேவிக்கும் புண்ணியவான்களுக்கு என் பணிவன்பான  வணக்கம்!
நேற்று இங்கேயும் உத்தராயண வாசல் மூடி, தக்ஷிணாயணவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்துருக்கு!
ஆழ்வார்கள் பாடி மங்களா சாஸனம் செஞ்ச நூத்தியெட்டு திவ்யதேசக் கோவில்களில்  இதுவும் ஒன்னு!
ஆராவமுதன் கிடப்பில்!  உத்தான சயனம்! நிம்மதியான தரிசனம்!
(பேசாம கும்மோணத்துக்கு வந்துடலாமான்னு கூட ஒரு விநாடி தோணுச்சு! )
கும்மோணம் கோமளாவைக் கல்யாணம் பண்ணிக்கத் தேரில் ஏறிவந்தவன், இங்கே தேரோடு அதுலேயே தங்கிட்டான்!
தீபாவளியன்னைக்கு மட்டும் காலையில்  சாமி தரிசனத்துக்கு வந்துறாதீங்க..... கோவில் மூடித்தான்  இருக்கும்! அடடா.... நல்லநாளுமா அதுவுமா  இப்படி ஏன்?

விஸ்தரிச்சு எழுதுன கோவில்கதைகள், புராணங்கள்  இந்தச் சுட்டியில். ஒரு எட்டுப்போய் பார்த்தீங்கன்னா.... எனக்குத் தொணத்தொணன்னு எழுதும் வேலை மிச்சம் :-)
கோவிலுக்கு நெல்லளந்துட்டுப்போயிருக்கார் குத்தகைக்காரர். நல்லா இருக்கட்டும்!  தரம் சரியா இருக்கான்னு ஒருத்தர் செக் பண்ணிக்கிட்டு இருந்தார் :-)
பெரிய மரம் ஒன்னு வந்திறங்கி இருக்கு. என்ன செய்யப்போறாங்க? தேரோ?
இந்தக் கோவிலில் சொர்கவாசல் இல்லை, தெரியுமோ?
தக்ஷிணாயணம், உத்தராயணம் வாசல்கள்  கடந்து எம் பெருமாளைத் தரிசனம் செய்யும் அனைவருக்குமே நேரா ஸ்ரீ வைகுண்டம்தான் !

உள்ப்ரகாரம் சுற்றி வந்தோமுன்னா அந்த பாதாள சீனிவாசரை சந்திக்கலாம். சரியான பயந்தாங்கொள்ளி.  அதுவும் யாரைப்பார்த்து?  தங்க்ஸைப் பார்த்துதான்.  தப்பு செஞ்சால்  வேற யாருகிட்டே இருந்து தப்பறோமோ.... தங்க்ஸ் கிட்டே இருந்துமட்டும் தப்பவே முடியாது.... கேட்டோ!
இதுக்கான புராணக்கதை (!) யை முந்தி எழுதி இருந்தேன் . அது என்னன்னா.....   மும்மூர்த்திகளில் பொறுமைசாலி யாருன்னு  தேடிக்கண்டுபிடிக்கும் அஸைன்மென்ட் நம்ம பிருகு மகரிஷிக்குக் கொடுத்துடறாங்க. 

அவர் தேடிப்போய்ப் பார்த்து  பிரம்மா சிவன் ரெண்டு பேரையும் டிஸ்க்வாலிஃபை பண்ணிட்டார்.  கதை தெரியலைன்னு அப்போ குறிப்பிட்ட போது, நம்ம துளசிதளத்தின் நெடுநாள் வாசக நண்பரான விஸ்வநாத்,  கதையைத் தனிமடலில் அனுப்பி வச்சுருந்தார்.  எல்லாம் ஒரு மூணு வருஷத்துக்கு முன்னேதான்.  நேத்து இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சப்போ.....  நண்பர் பதிவர் விஸ்வநாத் அனுப்பிய கதையைத் தேடினால்  கண்ணுக்கு ஆப்டலை.  இதுக்குத்தான் ஒழுங்கான தலைப்புலே சேமிக்கணுங்கறது.... திரும்ப அவருக்கே  மெயில் அனுப்பிக் கேட்டதும் உடனே அனுப்பி  வச்சார். அந்த நல்ல மனசுக்கு என் நன்றி!  ஒருக்கா திருப்பதியில் வாங்குன புத்தகத்துலே  இதுக்கான கதை ஒன்னு வாசிச்சாராம்.

புராணக் கதைன்னு சொல்றேனே தவிர,  உண்மையான புராணங்களில் இதெல்லாம் இருக்காது.  அவரவர் தன் கற்பனைக் குதிரையை மேய அனுப்பி அது கொண்டுவரும் கதைகள்தான்!  புனைவுன்னு சொல்றாங்களே   அது :-)
அதுவும் கொஞ்சம் சுவாரஸியம்தானே!  போகட்டும். வாங்க . நண்பர் அனுப்பிய கதையின் சுருக் இது.

பயங்கர தவ வலிமையால் பிருகு முனிவருக்கு உள்ளங்காலில்  மூணாவது கண் வந்துருக்காமே.....  (அடப்பாவமே....   அப்ப அந்தக் கண்ணைத் திறக்கவே முடியாது போல...  ப்ச்....)

சத்யலோகம் போறார்.  அங்கே ப்ரம்மன் இவரை சட்டையே பண்ணாமல் சரஸ்வதியாண்டை பேசிக்கிட்டு இருக்கான். இவரை வான்னு கூடச் சொல்லலை..... 'திசைக்கொன்னாப் பார்க்க  நாலு மூஞ்சு, அதுலே எட்டு கண்ணு  இருந்து என்ன பலன்?  நான் வந்த வேலைக்கு நீ லாயக்கே இல்லை. உனக்கு பூலோகத்துலே கோவிலே இல்லாமல் போகட்டுமு'ன்னு  சபிச்சுட்டு நேராப் போனது கைலாசத்துக்கு!

அங்கே போனா... சிவனும் பார்வதியுமா ஆடிக்கிட்டு இருக்காங்க.... ஆனந்த நடனம்!  நந்தி முதற்கொண்டு பரிவாரங்கள் அனைத்தும்  நடனத்தைப் பார்த்து ரசிச்சு அதுலேயே மூழ்கிப்போய் இருக்காங்க.  ஆட்டஜோரில்  சிவனும் சட்டை பண்ணலை. அவ்ளோதான்....  கோச்சுக்க இது போதாதா?

'இனி உனக்கு  உன் சொந்த உருவத்துலே சிலையா  உன்னைக் கோவிலில் வச்சுக் கும்பிடமாட்டாங்க'ன்னுட்டார். திகைச்சுப்போன சிவன், 'அப்போ அதுக்கு பர்த்தி என்னா'ன்னு கேட்டதும், லிங்கம்னு சொல்லிட்டுக் கிளம்பி வைகுண்டம் போனார்னு கதை போகுது....

செல்விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் 
நல்விருந்து வானத்தவர்க்கு... 

  தாடி ஞாபகம் வருதே.... அந்த வானத்தவர்களுக்கு  தங்கள் வீட்டுக்கு வர்ற விருந்தைக் கவனிக்கத்தெரியலை பாருங்க....

அப்புறம்? வைகுண்டத்துலே என்ன ஆச்சு?

அப்போ திருப்பாற்கடலில் ஹாயாப் படுத்துக்கிட்டு இருக்கும்  மஹாவிஷ்ணுவும்,  கணவன் காலை அமுக்கி விட்டுக்கிட்டு இருக்கும்  மஹாலக்ஷ்மியும்  தனிமையில் சுவாரசியமா பேசிக்கிட்டு இருக்காங்க. முனிவர் வந்து நின்னார். அவரைக் கவனிக்காமல் இங்கே பேச்சு தொடர்ந்துக்கிட்டு இருக்கு.
முனிவருக்குக் கோபம் வந்துருச்சு!  'எம்மாநேரமா இங்கே நிக்கிறேன்.  வந்தவனைக் கவனிக்காமல் அப்படி என்ன பேச்சு'ன்னு  மஹாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைச்சார்.  சட்னு அவர் பாதத்தைப் பிடிச்ச பெருமாள், 'ஐயோ....  உங்க பாதம் நோகுமே....'ன்னு விசாரிச்சதும் கோபம் பொசுக்னு போயிருச்சு.
பொறுமைத்திலகம் இருப்பது அங்கேதான்னு புரிஞ்சு போச்சு.

அதுசரி.  இதுக்கும்  பாதாளத்துலே போய் ஒளிஞ்சுக்கறதுக்கும் என்ன தொடர்பு?

  முனிவர் அந்தாண்டை போனதும் இங்கெ குடும்பச் சண்டை ஆரம்பிச்சது. 'நீர் ஆனானப்பட்ட   பெரிய ஆள்னு நினைச்சேன். ஆனால் உம்மை ஒருவர் எட்டி உதைக்க இடம் கொடுத்துட்டீரே. அதுவும் நான் எப்போதும் உறைந்திருக்கும் திரு மார்பில்! என்னையே நேரடியா உதைச்சவரை தண்டிக்காம சும்மா விட்டுருக்கலாமா? இது எனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய்   பூலோகத்துக்கு வந்துட்டா மஹாலக்ஷ்மி.

வந்தவ சும்மா  இருக்கமுடியாம கொல்லாபுரத்துக்குத்  தவம் செய்யப்போயிட்டான்னு  'நம்ம அமைதிச்சாரல்' வந்து  சொல்லிட்டுப் போனாங்க!!!

அப்படி வந்து தவம் செஞ்ச இடம்தான் கோலாப்பூர். இங்கே மஹாலக்ஷ்மிக்கு கோவிலும் இருக்கு. ரொம்பவும் பிரசித்தி வாய்ஞ்சதும்கூட.

மனைவி பிரிஞ்சு போனதும்  துக்கப்படாம, தங்கமணி ஊருக்குப்போயிட்டா......ன்னு ஆடிக்கிட்டுப்போய்  சீனிவாசனா உருவெடுத்துக் குபேரன் கிட்டே  அளவில்லாமக் கடன் வாங்கி பத்மாவதியைக் கல்யாணம் பண்ண சேதி கேட்டு,  மகாலக்ஷ்மி கிளம்பிவர... பயந்துபோய் ஒளிஞ்சுக்கிட்டது  இங்கெதான்.

கதைகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை................   கொஞ்சம் உக்கார்ந்து யோசிச்சா நாமும் இட்டுக்கட்டலாம்.... ஆனால் பொருத்தமா அங்கங்கே கொண்டுபோய் கோர்த்துவுட்டுரணும் :-)

கும்பகோணம் வரும்போதெல்லாம் தவறாமல் வரும் கோவில் இது . சட்னு போய் தரிசனம் முடிச்சுக்கிட்டுக் கிளம்பணும்தான் வந்தோம்.   கிளம்பியாச்சு!
இதோ அடுத்தாப்லே இன்னொரு ஃபேவரிட் கோவில்....

தொடரும்.....:-)

Wednesday, March 27, 2019

ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் மங்களம் !!!! (பயணத்தொடர், பகுதி 84 )

ஊருக்கே பெயர் கொடுத்த  கும்பேஸ்வரரை தரிசனம் பண்ணிக்கலாமுன்னு தோணுச்சு. சரியா பத்து வருசத்துக்கு முன்னால் ஒரு மட்ட மத்தியானத்துலே  இந்தக் கோவிலுக்குப் போயிருந்தோம்.  சரியாப் பார்க்கலைன்னு ஒரு குறை.
சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிப்போய் கடைவீதியில்  எனக்கொரு விக்ரஹம் வாங்கிக்கணும். 'என்ன.... என்ன.... பெருசா வாங்குனா நீதான் அதுக்கான எக்ஸ்ட்ரா வெயிட்டுக்கான  செலவு செய்யணுமு'ன்னு ஒரு மிரட்டல்  கிடைச்சது :-)
பளபளன்னு மின்னும் சாமிச்சாமான்கள் பார்த்தால் ஆசையாத்தான் இருக்கு. ஒரு திருவாசி இருந்தால் கொள்ளாம்.  ஒரு கடையில் போய் விவரம் கேட்டோம்.  சிங்கிள் பீஸ். பிரிச்சுக் கோர்த்துக்க முடியாதாம். அப்ப பேக்கிங் நமக்குக் கஷ்டம்.  நாங்க நியூஸிக்கு அனுப்பறோமுன்னு உத்திரவாதம் கொடுத்தார் கடைக்காரர்.  சுண்டைக்காய்  &  சுமைகூலி   நினைவுக்கு வருது.
கடைக்குள்ளே போனதும்  ஊஞ்சல் புள்ளையாரைக் கண்டேன். ஹைய்யோ!!!!  'நம்மவருக்கும்' பிடிச்சுப் போச்சு. ஆனால் கனம் அதிகம்.  ரெண்டு மூணு மாசத்துலே ஒரு வேலையா  பாண்டிச்சேரி போகணும். அப்போ வாங்கி வரேன்னு வாக்கு கொடுத்தார்.  வாக்கு மீறும் பழிபாவம் வேண்டாமுன்னு இதுவரை  இன்னும் பாண்டிச்சேரி போகலை :-)
சரி.... வாங்க நினைச்சு வந்ததை வாங்கிக்கலாமுன்னு 'காமதேனு'  இருக்கான்னதும், ஒரு ஊழியர்  உள்ளே போய்க் கொண்டு வந்தார்.

ரொம்பநாளா எனக்கொரு ஆசை இந்தக் காமதேனு மேலே. ஒன்னு இருந்தால் நமக்கு வேண்டியதை எல்லாம் சட்னு  நிறைவேத்திக்கலாம்.  பயணம், சமையல், வீடு சுத்தம் செய்ய ஆட்கள் இப்படி.... ஏன்.... பதிவு எழுதக்கூட  (கோஸ்ட்) ரைட்டர்ஸ் கிடைச்சுறமாட்டாங்க? ஹாஹா....
'நம்மவர்' வழக்கம்போல்  முகம் அவ்ளோ சரியா இல்லையேம்மான்னு ஆரம்பிச்சார்.  லக்ஷணம் போதாதாம் !!!   ஆங்......    வாங்குற சைஸுக்கும் கொடுக்கற காசுக்கும் இவ்ளோதான் வரும் (என் பதில்! )
ராயாஸ்லே ஒவ்வொரு தளத்திலும் நடுவில் இருக்கும் ஹாலில் ரொம்பப்பெரிய பெரிய  விக்ரஹங்கள்   வச்சுருக்காங்க. அதுலே காமதேனுவும் ஒன்னு!  (ஒருவேளை நந்தினியோ? )குத்துவிளக்குகள், கீதோபதேசம்னு எல்லாமே அருமை! ஆனால் ஒவ்வொன்னும் சுமார் அம்பது கிலோ கனம் இருக்கும் !

நம்ம காமதேனுவையும்  எடைபோட்டு வாங்கியாச்சு.  ஒன்னரைக்கிலோவில் நல்லாவே கிண்ணுன்னு இருக்காள்!  கூடவே ஒரு காமதேனு பாப்பா அவள் காலடியில் !
காமதேனு இருக்கும் தைரியத்துலே கவலையை விட்டொழிச்சேன். ஹேண்ட் லக்கேஜில் வச்சால் ஆச்சு !
அடுத்துப்போய் இறங்குனது நம்ம கும்பேஸ்வர் கோவில் வாசலில்.  இது ப்ரொப்பர் வாசல் இல்லை கேட்டோ.....  கசகசன்னு இருக்கும் கடைகளுக்கிடையில் ஒளிஞ்சுருக்கு. அதுவழியா உள்ளே போனால்  கோவில்கடைகள்தான் ரெண்டு பக்கமும்.

எனக்குக் கோவில்கடைகளைப் பார்க்கப் பிடிக்கும். வேடிக்கைதான்.....  ஆனால் கோவில் வாசல் தனியா கம்பீரமா இருக்கணுமுன்னு நினைப்பேன்.  இது ராஜகோபுரவாசல் இல்லை.  போனமுறையும் வேறேதோ வாசலில்தான் போய் இறங்கினோம்.இந்த முறையும் இப்படி.....   அடுத்த முறை ராஜகோபுர வாசலாண்டை போகணும்.

ச்சும்மாச் சொல்லக்கூடாது.....  கும்மோணத்துலேயே பெரிய கோவில் இதுதான்..... முப்பதாயிரத்து நூத்தியெண்பத்தோரு  சதுர அடி!!  மதிள் சுவரின் நீளம் பார்த்தே அசந்து போயிருந்தேன் போனமுறை.....
இப்பக் கோவிலில் திருப்பணி நடக்குது போல..... எல்லாத் தரைகளையும் தோண்டிப்போட்டு வச்சுருக்காங்க. மண்டபத்தில் மங்களம் நிக்கறாள்.   அவளைப் போய் குசலம் விசாரிச்சுட்டு அந்த ராஜகோபுர வாசலுக்குப் போனோம்.


வெளியே  போய் நின்னால்  இதுவும் கடைவீதியே.....    அந்தாண்டைத்தெருவைக் கடந்து போனால்தான் கோபுர அழகைப் பார்க்க முடியும்.  பயங்கரமா ட்ராஃபிக். அதனால் போகலை....
திரும்ப வந்து கொடிமரம் ஸேவிச்சுட்டுக் கோவிலுக்குள் போய்  ஸ்ரீ கும்பேஸ்வரரையும்,   அம்பாள் மங்களநாயகியையும்  தரிசனம் பண்ணினோம்.
கோவில் புஷ்கரணியில் சொட்டுத்தண்ணி இல்லை.
இங்கேயும் ஒரு மொட்டைக்கோபுர வாசல் இருக்கு, தெரியுமோ?

எனக்கென்னமோ கோவிலை நல்லாவே பார்க்காம வந்ததுபோல்தான் தோணிக்கிட்டே இருக்கு.   ப்ச்....

சிற்பங்களை இன்னும் நல்லா கவனிக்கலை. கழுத்துலே கத்தியை வச்சா எப்படி? பயமா இருக்காது?

பாடல்பெற்ற  கோவில் இது!  மஹாப்ரளயத்தில் எல்லாமே அழிஞ்சு போகுமுன்  பிரம்மன் தன் அடுத்தமுறை  படைப்புக்கான  சமாச்சாரங்களையெல்லாம் கும்பத்துக்குள் வச்சு அதை ஹிமயமலையின் உச்சியில் கொண்டு போய்  வச்சுட்டார்.   ப்ரளயம் நடந்தப்ப வெள்ளத்தில் மிதந்துவந்த கும்பம் தங்கிய இடம்  இது!  அப்புறம் சிவன் தனது அம்பால் அந்தக் கும்பத்தை உடைச்சதும்  அதிலிருந்து  மணலில் சிந்திய அமுதத்தை மணலோடு வாரி எடுத்து அதை ஒரு சிவலிங்கமாப் பிடிச்சு வச்சு அதுலே ஐக்கியமாகி இங்கேயே தங்கிட்டார்.  மணல் லிங்கம் என்றபடியால் அபிஷேகம் கிடையாது!  அபிஷேகப்பிரியன்... இப்படித் தனக்கே ஆப்பு வச்சுக்கலாமோ?  பிடிச்ச பிடியில்   உச்சி நுனி குவிஞ்சுருச்சு!
 அம்பாள் மங்களநாயகி, அம்பத்தியொரு சக்திபீடங்களில் இருக்கும் அனைத்து சக்திகளும் (எழுபத்தி ரெண்டாயிரம் கோடியாம்!) ஒன்னாச் சேர்ந்த மஹாசக்தி பீடமுன்னும் சகல சக்திகளுக்கும் அதிபதியான மங்களநாயகியை மட்டும் தரிசனம் செஞ்சாலே போதும், அனைத்துப்பலன்களும் நமக்குன்னும் சொல்றாங்க.!  அப்படியே ஆகட்டும்!

இங்கே சந்நிதித்தெருவில்  மங்களாம்பிகாவிலாஸ்  காபிஹோட்டல்  ரொம்பப் பிரசித்தியானதுன்னு  பதிவில்  வாசிச்ச நினைவு. அதைத் தேடினப்பக் கிடைச்சது.  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கு. விசாரிச்சுத்தான்போனோம்.
ஏனோ உள்ளே போய் சாப்பிடணுமுன்னு தோணலை. சாம்ப்ராணி போட்டுக்கிட்டு இருந்தார் ஒருவர்!
 ஆரம்பிச்ச வருஷம் 1914 !  நூறைத்தாண்டிப் போயிருக்கு!  இன்னொரு 'பார்த்தசாரதி விலாஸ்' போல இருக்கலாம்.....   எதுக்கும் அடுத்த முறை ராஜகோபுர வாசலில் வந்திறங்கி வரப்போறோமே அப்போ பார்த்துக்கலாம்....   காஃபிதான் பெஸ்ட்டாம்!
வாங்க இன்னும் ரெண்டு மூணு கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம்.....  ஏற்கெனவே இருட்டிக்கிட்டு வருது.....

ஆமாம்.... அது ஏன் பெரும்பாலான கோவில்களில் பெண்யானையை  வச்சுருக்காங்க?  அதுதான்  அடக்க ஒடுக்கமா வாயை மூடிக்கிட்டு இருக்குமுன்னா?

தொடரும்........ :-)


Monday, March 25, 2019

அன்றைக்கு ஆடிப்பூரமா அமைஞ்சது !!!!! (பயணத்தொடர், பகுதி 83 )

இதுவரை போகாத கோவில்களுக்குப் போகணும் என்று திட்டமிட்டாலும், நடுவிலே வரும் நம்ம பெருமாளை விடமுடியுமோ?
அந்த ஒப்புவமை இல்லாத ஒப்பியப்பனை ஸேவிச்சுக்கிட்டு போகணும். திருமீயச்சூரில் இருந்து ஒரு இருபத்தியெட்டு கிமீ தூரம். கும்மோணம் திரும்பிப்போகும் வழிதான். முக்கால்மணி நேரம் ஆச்சு.

கோவில் வாசலில் நல்ல கூட்டம். என்ன விசேஷமோ?
அழகான அஞ்சுநிலை ராஜகோபுரத்தின் அழகைக் கெடுக்கறதுபோல  குறுகலான தெருவில் கசகசன்னு ஏகப்பட்ட  சமாச்சாரங்கள்.  தெருவில் இருக்கு கோபுரவாசல்.  கொஞ்சம் உள்ளே தள்ளி இருக்கப்டாதோ.....

'நம்மவர்' அவருடைய வழக்கம்போல் விடுவிடுன்னு உள்ளே போக, நான் நம்ம பூமா இருக்காளான்னு பார்த்தேன். இருக்காள் !!! முன்னுரிமை எப்பவும் அவளுக்குத்தான். நானும் விடுவிடுன்னு அவளாண்டை போனேன். செல்லம் அழகோ அழகு!
'உப்பிலியைப் பார்த்துட்டு வந்துடலாம் வா'ன்னார் 'நம்மவர்'.  ஒப்பை உப்பாக்கி வச்சுருக்குல்லே சனம் :-)
பூமாவைப் பார்க்கும் வேகத்தில் போறபோக்கில் கொடிமரத்துக்குக் கும்பிடு போட்டதால்,  திரும்பக் கொடிமரத்தாண்டை போய்  வணங்கிட்டு, பெரிய திருவடியிடம், 'மூலவரைப் பார்க்க   உள்ளே போறேன்'னு தகவல்  சொல்லும்போதே... அங்கே  நின்னுருந்த பட்டர்ஸ்வாமிகள் சிலரில்,  ஒருவர் ஒரு  பொதியை என்னிடம் நீட்டினார்.  முழிச்ச என்னிடம், பஞ்சாமிர்தம்ன்னார்.  கைநீட்டி வாங்கினேன். பிசுக்பிசுக்ன்னு கையெல்லாம்  ஒட்டிப்பிடிச்சது.
இப்ப நான் இதை என்ன செய்ய? பட்டர்ஸ்வாமிகளே வழியும் சொன்னார். "இங்கேயே (பெரியதிருவடி சந்நிதியில்) வச்சுட்டுப்போங்கோ. திரும்பி வர்றச்சே எடுத்துக்கலாம்"  ஆஹா..... அதேபடியே செஞ்சேன்.  இப்பக் கையை அலம்பிக்கணுமே....
அந்தாண்டை  இருந்த குழாயைக் காமிச்சார் 'நம்மவர்' ! ஆச்சு.

ஒப்பியப்பன், நம்ம துளசியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட இடம் !  தகப்பன் மார்கண்டேயன், மகளுக்கு வச்ச பெயர் துளசிதானாக்கும் !

என்னது மார்கண்டேயனுக்குப் பொண்ணு இருக்கா?

இருக்காளே :-) 

அதான் எப்படி?  எப்படின்னா இப்படித்தான்....
மார்கண்டேய மகரிஷிக்குக்  குழந்தை வேணும் என்று தோணுச்சு. பெருமாளை மனதில் இருத்தித் தவம் செய்யறார்.  அதே சமயம்  ஸ்ரீவைகுண்டத்தில் பூமா தேவிக்கு  ஒரு ஆசை. பெருமாளின் மார்பில் மஹாலக்ஷ்மிக்கு இடம்  கிடைச்சது போல் தனக்கும் ஒரு இடம் வேணுமுன்னு....

"அதான் மனசில் நீ இருக்கும்போது....  மார்புலே வேற இடம் வேணுமாக்கும்? "

"வேணும்... அப்பத்தான் நான் இருப்பது பளிச்ன்னு வெளியே தெரியும், இல்லையா!"


அமிர்தம் எடுக்கத் திருப்பாற்கடலைக்  கடைஞ்சுக்கிட்டு இருந்தப்ப  பதினாறு செல்வங்கள்  ஒவ்வொன்னா வெளியில்  வந்துச்சுன்னு  புராணம் சொல்லுது பாருங்க,  அப்போ  லக்ஷ்மி வெளியில் வரும்போது கூடவே வந்தவள் துளசி. ஒவ்வொரு செல்வமும் வரவர, இது எனக்கு  இது உனக்குன்னு  அங்கேயே பாய்ஞ்சு எடுத்துக்கிட்டு இருக்காங்க தேவர்கள்.  லக்ஷ்மி வந்தவுடன், மஹாவிஷ்ணு எடுத்து மார்பில்  வச்சுக்கிட்டார். கூடவே வந்த துளசி பார்க்கிறாள்.... தனக்கு எங்கே இடமுன்னு!

"ஆல்ரெடி  இடம் போயிருச்சுங்க  துளசி.  நீங்க என்ன பண்றீங்க....   பூலோகத்துலே ஒரு  முனிவர்  பெண்குழந்தை வேணுமுன்னு  தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். அவர் வீட்டுலே போய் பிறந்து வளர்ந்து வாங்க. நான்  சமயம் பார்த்து                 ( லக்ஸ்க்குத் தெரியாம)  அங்கே வந்து  உங்களைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு வந்துடறேன்.  அஃபீஸியல்  மனைவி ஆயிட்டால்  இடம் தன்னாலே கிடைச்சுரும்.  போங்க... சொன்னதைச் செய்யுங்க."

"என்ன இப்படிச் சொல்லி விரட்டப் பாக்குறீங்க?  முனிவர் தனிக்கட்டையா இருக்கார்.  கைக்குழந்தையை எப்படி வளர்க்கப்போறார்? கஷ்டமாச்சே.... "

"நோ ஒர்ரீஸ். ஒரு ரெண்டு வயசுக்குழந்தை அளவு இருந்தால்  பாட்டில், நாப்பி இப்படிப் ப்ரச்சனைகள் இல்லை. ஓக்கேவா?"

"ஓக்கே!  ஆனால் எதுக்குப் பொண் குழந்தை வேணுமாம்? பேசாம  மகன் வேணுமுன்னு கேட்டால்  அவனுக்கு இவர் கற்றதையெல்லாம் சொல்லிக் கொடுத்துத் தன்  வாரிசுன்னு பெருமைப்பட்டுக்கலாமே!"

"அது ஒன்னுமில்லை. பொண் குழந்தையா இருந்தால்  அதை எனக்குக் கட்டிக்கொடுத்து, மஹாவிஷ்ணுவின் மாமனார் என்ற பெருமையைத் தட்டிக்கலாமுன்னுதான். நான் வரதக்ஷிணை எல்லாம் கேக்கமாட்டேன்னு எப்படியோ தெரிஞ்சு வச்சுக்கிட்டுத்தான் இப்படியெல்லாம் தவம் செய்யறார் போல!  சீக்கிரம் கிளம்பிப் போம்மா.... அவர்  தவத்தை முடிச்சுக் கண் திறக்கும்போது ஆஜராகிடணும், சரியா?"

கண்ணைத் திறக்குறார் மஹரிஷி. அவரைச் சுத்தி அடர்த்தியா வளர்ந்திருக்கு  துளசிவனம். அதுலே ஒரு அழகான பொண் குழந்தை. ரெண்டு வயசு இருக்கும்:-) 'பாப்பா, நீயார்? உன் பேர் என்ன? உங்க அம்மா அப்பா எங்கே'ன்னா சொல்லத் தெரியலை. தாடியும் மீசையுமா இருக்கும் முனிவரைப் பார்த்துப் பயமே இல்லாமச் சிரிக்குது குட்டிப் பொண்ணு. (ஆமாம்.... பதினாறு வயசுப் பையனுக்கு தாடி மீசை எல்லாம் இருக்குமா? ) துளசி வனத்தில் கிடைச்ச குழந்தைக்குத் துளசின்னு பெயர் வச்சு அவரே வளர்த்துக்கிட்டு வர்றார்.

இளங்கன்னிப் பருவத்தில்  இருக்கும்போது ஆசிரமத்துக்கு  குடுகுடு கிழவர் ஒருத்தர் வர்றார். அதிதியை வரவேற்று, உபசாரம் செஞ்சு என்ன வேணுமுன்னு (வாட் கேன் ஐ டு ஃபார் யூ?) கேட்ட  மார்கண்டேய முனிவரிடம் (இவர் என்றும் 16 வரம்  வாங்கினபடியால் சின்னப்பையனாத்தான் இருக்கார் பார்க்க, என்பதை நாம் மறந்துறக்கூடாது!) பொண்ணு உங்க தங்கையான்னு  கேட்க, 'இல்லைபா.  என் மகள்'னு சொன்னதும்,  ' அட! அப்ப உங்க  மகளை எனக்குக் கண்ணாலம் கட்டிக் குடுங்கன்னார்'.

முனிவருக்குக் கோபத்துலே உடம்பெல்லாம்  ஆவேசம் வந்தாப்லெ ஆடுது. நடந்ததைப் பார்த்துக்கிட்டு அங்கிருந்த துளசி,  வேகமாத் தன் அறைக்கு ஓடிப்போய்  கட்டிலில் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழறாள். 'கிழவருக்கு என்னா தில்லு? 'போறகாலத்துலே'  வந்து பொண்ணு  கேக்கறதைப்பாரு......'

இவ்ளோ வயசான நீர் ஒரு இளம்பெண்ணைக் கட்டிக்க நினைப்பது பொருந்துமான்னு  முனிவர் கேட்கும் சமயம், 'ஏன் பொருந்தாது'ன்னு  கேட்ட கிழவர், தன்னுடைய உண்மை ஸ்வரூபத்தைக் காட்டறார். ஹா... மஹாவிஷ்ணுவா!!!   அட! அவனா நீயி?  மனசுக்குள்ளே மகிழ்ந்த முனிவர்,  உடனே சரின்னுட்டா எப்படி? கொஞ்சம் பிகு பண்ணிக்கலாமுன்னு, ' குழந்தைப் பெண்ணுக்குச் சமைக்கத் தெரியாதே.... குழம்பு கறிகளில்  உப்பு எவ்ளோ போடணுமுன்னு கூடத் தெரியாது. நீர் பேசாம வேற பொண்ணைப் பாரும்' என்றதும், 'சமைக்கலைன்னா என்ன, உப்புப் போடலைன்னா என்ன? நான் உப்பில்லாமல் சாப்பிடத்தயார் ' என்று சொல்றார்.  'என் பொண்ணுக்குத் தனியா இருக்க பயம்' என்று ஆரம்பிக்கறார் முனிவர்.  'நான் கூடவே வச்சுக்கிட்டு எங்கே போனாலும் கூடவே கூட்டிக்கிட்டுப் போறேன்' னு சொல்லித் 'துளசி என்ற பூமாதேவியை இப்ப நான்  கல்யாணம் கட்டிக்கவா'ன்னார்.
முனிவர் உள்ளே போய் துளசியைச் சமாதானப்படுத்தி 'வந்தவர் வெறும் ஆசாமி இல்லை. சாமியாக்கும்'  என்று சொன்னதும் நம்பாத துளசி வெளியே வந்து பார்க்க,  கன கம்பீரமா ஜொலிக்கும் மஹாவிஷ்ணு!  அழுதபுள்ளை சிரிச்சது.  கல்யாணமும் ஆச்சு.  இது நடந்தது ஒரு  ஐப்பசி மாசம் திருவோண நட்சத்திரம் என்பதால் கோவிலில் கல்யாண உற்சவம்  வருசாவருசம் அதே நாளில்  ஜாம் ஜாமென நடக்குது. கோலாகலம். பெருமாள்  பவனியில் இங்கே தாயாரும் கூடவே போறாங்க!
இவரையும் ஸ்ரீநிவாஸன், வெங்கிடாசலபதின்னே  சொல்றாங்க. திருப்பதியில் இருப்பதுபோலவே நின்ற கோலம். 'மாம் ஏகம் சரணம் வ்ரஜ' என்ற சரமச்லோகப் பகுதி, எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது. பணக்காரர். வைரமா ஜொலிக்கிறார்!  திருப்பதிக்கு நேர்ந்துக்கிட்டு அங்கே போகமுடியாத நிலைன்னா, தென்திருப்பதின்னு இங்கேயே செலுத்திறலாமாம். வசூல் ராஜா தான்!
ஸ்ரீநிவாசருக்குக் கழுத்தில் எப்போதும் ஒரு துளசிமாலை உண்டாம்.   கழுத்திலும் மார்பிலுமா இடம் கொடுத்துட்டார். இப்ப திருப்தியா துளசி?  அந்த மாலை மஹாலக்ஷ்மிக்கும் சேர்த்துதான் என்பதைச் சொல்லலை போல!

திருப்பாவை முப்பதுக்கும் படங்களும் பாசுரங்களுமா  ரொம்ப அழகா வரைஞ்சு வச்சுருக்கும் சுவர் வழியாத்தான்  வரிசை நகரும் விதம். நானும் நம்ம வழக்கத்தை விடாம 'தூமணி மாடத்து'க்கிட்டே நின்னு (மனசுக்குள்) பாடிட்டு வந்தேன்.  தாயாருக்குத் தனி சந்நிதி கிடையாது. இது அவளுடைய பொறந்த வீடு. எல்லாமும் அவளுக்கே!
மூலவரை  நிம்மதியா ஸேவிச்சுக்கிட்டு குசலவிசாரிப்புகள்  ஆச்சு. (அவரோடுதான் பேச்சு  எல்லாம்! ) வாயைத் தொறந்து பதில் சொல்லும் வழக்கம் அவருக்கும் இல்லை. எனக்கும் எந்த  எதிர்பார்ப்பும் இல்லை.  சொல்ல நினைக்கிறதை சொல்லிட்டு வந்துருவேன்.
மூலவர் காலடியில் இருக்கும் என் அப்பன் 'பொன்னப்பன் முத்தப்பன் மணியப்பன்' அண்ட் மனைவிகளைக் காணோம்.   அடுத்தாப்லே இருக்கும் மண்டபத்துக்குப் போயிருக்காங்க.
மண்டபத்துக்குள் நுழைஞ்சால்  ஜம்முன்னு அலங்காரத்தில்  மூவரும்!
கூட்டமில்லை. நின்னு நிம்மதியா ஸேவிக்க முடிஞ்சது.
கொஞ்சநேரம் அங்கேயே உக்கார்ந்துருந்தோம். தக்ஷிணாயணப் புண்யகாலமாம்.  அன்றைக்கு ஆடிப்பூரம் வேற!   கேக்கணுமா? அதுதான் விசேஷ பூஜை!


திரும்ப ஒருக்கா பூமாவாண்டை போய் கொஞ்சம் க்ளிக்கிட்டு, நமக்கான பஞ்சாமிர்தப் பொதியை வாங்கிக்கிட்டு ராயாஸுக்கு வந்தோம்.  ஒரு ஏழு கிமீட்டருக்கும் குறைவுதான்.
அறைக்குப் போனவுடன், நம்ம சுமிதா ரமேஷின் அம்மா 'வச்சுக்கொடுத்த'  எவர்சில்வர் கிண்ணத்தில் பொதியைப் பிரிச்சுப் போட்டால்.... எக்கச்சக்கமான முந்திரிகளுடன் தேனில் மிதக்கும் பழத்துண்டுகள்!
இவ்ளோ ப்ரஸாதங்களை என்ன செய்யறது?   ரூம் பாயைக் கூப்பிட்டு (நாங்க ஆளுக்கு ஒரு ஸ்பூன் எடுத்துக்கிட்டு ) எல்லோருக்கும் விளம்பச் சொல்லிப் பாத்திரத்தைக் கொடுத்தேன்.

"அப்புறம் பாத்திரத்தைத் திரும்பக் கொண்டு வந்து கொடுத்துருப்பா, தம்பி."

மணி ஒன்னே முக்கால். தரிசனங்கள் நல்ல திருப்தியா அமைஞ்சது, பூமா வேற இருந்தாள்!   இதெல்லாமே எனக்கு வயிறு நிறைஞ்ச மாதிரி.  கிளம்பு. கீழே போய் சாப்ட்டுட்டு வரலாம்னார் 'நம்மவர்'.
எனக்கொரு தயிர் சாதம்.  அவருக்கொரு எலுமிச்சம்பழ சாதம்.  உண்ட மயக்கம் தீரக் கொஞ்சம் ஓய்வு.


ஒரு நாலரை, நாலே முக்காலுக்குக் கிளம்பணும். சரியா?

தொடரும்....... :-)