Monday, March 04, 2019

விட்டல விட்டல பாண்டுரங்க..... !!!!!(பயணத்தொடர், பகுதி 74 )

ராயாஸுக்குத் திரும்பி வந்தால் ஏகப்பட்ட இளைஞர்களின் கூட்டம் எங்கே பார்த்தாலும்.  மாடியில் இருக்கும் ஹாலில் விழா நடக்குதாம். லிஃப்டுக்குக் காத்து நின்னப்பக் கிடைச்ச சேதி. கூடவே 'வாங்க'ன்னு அழைப்பு வேற ! 
'என்னதான் நடக்குதுன்னு  பார்த்தால் ஆச்சு'ன்னு அழைப்பை ஏற்றுப் போனோம். ராயா ராதாக்ருஷ்ணன் ஆடிட்டோரியம்!  இளைஞரணி மகாமகம்.  முப்பெரும் விழாவின் நாலாம் ஆண்டு  !  மேடையில்  முதியோர்கள்  ஒரு பத்திருவதுபேர் !  அதுலே  ஒருத்தர் நம்ம ஈரோடு கதிர் போலவே இருந்தார். அவர்தானோ?

மைக் பிடிச்சுப் பேசுனவர் யாருன்னு  தெரியலை....  அஞ்சு நிமிட் உக்கார்ந்துட்டுக் கிளம்பிட்டேன்.   ஹாலுக்கு வெளியே எதிரே இருக்கும் இடத்தில் சாப்பாடு ! பெரிய  பெரிய பாத்திரங்களில் மணக்க மணக்க.....     'சாப்பிட்டுப் போங்க'ன்னு உபசரிக்கிறாங்க. விருந்தோம்பல், தமிழர் பண்பாடு!  நமக்கு வயித்தில் இடம் வேணாமோ?   சக்கரராஜா கொடுத்த ப்ரஸாதங்கள்  உக்கார்ந்துருக்கே!

அறைக்குப்போய் மறுநாளுக்கான திட்டங்களை தயாரிச்சுக்கிட்டால்  நல்லது.

 நமக்கு சாயங்காலம்தான்  சக்கர ராஜாவை தரிசிக்கணும் என்பதால் நம்ம விஷ் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்து இதுவரை போகாத அக்கம்பக்கத்து ஊர்க்கோவில்களுக்கு முன்னுரிமை கொடுக்க முடிவு.
நாமொன்று நினைக்க 'அவன்' வேறொன்னு நடத்திடறானே!    எட்டுமணிக்குக் கிளம்பிடலாமுன்னு  இருந்தோம்.  ஒரு பத்து நிமிட் லேட்டாகிருச்சு.  கும்பகோணம் சீர்காழி நெடுஞ்சாலையில் ஒரு  இருவது நிமிட் பயணத்தில் (ஒரு ஏழு ஏழரை கிமீ தூரம்)  அட்டகாசமான ஒரு கோபுரம் கண்ணில் பட்டது.  ஸ்டா.......ப்.  அலங்கார நுழைவு வாசலின் தலையில் பெயர் 'ஸ்ரீ விட்டல் ருக்மிணி ஸம்ஸ்தான்' னு இருக்கு!

ஆஹா.....    பண்டரிபுரம் போகணுமுன்னு நாம் பேசிக்கிட்டு இருந்ததை 'அவன்' கேட்டுட்டுக் குறுக்கு வழி  காமிக்கிறான்!
நம்ம விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட கோவில். கும்பாபிஷேகம் ஜூலை 15,  2011 இல் ஆகி இருக்கு! அட! நேத்துதான் ஏழாவது பொறந்தநாள் இந்தக் கோவிலுக்கு! பர்த்டே கொண்டாட்டம் பதிமூணுநாட்கள் நடக்கப்போகுது. இன்றைக்கு மூணாம்நாள்.... நாம் வந்துருக்கோம்!
விட்டல்தாஸ் மஹராஜ் அவர்களின்  பஜனை 'நம்மவருக்கு'  ரொம்பவே பிடிக்கும்.  ஒருமுறை நம்ம காஞ்சிபுரப் பயணத்தில் சங்கரமடத்தில் நேரில் கேக்கவும் வாய்ப்புக் கிடைச்சது! அன்றைக்கு நம்ம 'பெரியவா'வின் அதிஷ்டானம் ஸேவிக்கப் போயிருந்தோம்.
சும்மாச் சொல்லக்கூடாது.....  அட்டகாசமான அழகிய கட்டடம். அந்த கோபுரம் மராத்தி ஸ்டைலாமே!  அதுக்குன்னு தனி ஸ்தபதி, அங்கிருந்தே  வந்து செஞ்சு கொடுத்துருக்கார்.  விவரங்கள்  பளிங்குக் கல்வெட்டில் இருந்தவை!
ஜெயகிருஷ்ண தீக்ஷிதர் என்ற இயற்பெயரே மறைஞ்சு போய் விட்டல்தாஸ் மஹராஜ் என்ற பெயரே இவருக்கு நிலைச்சுப் போயிருக்கு பாருங்க!  விட்டலன் பக்தி.....  விட்டலா விட்டாலா....
மேலே  படம்: உபயம் தினமலர் ! நன்றி

கோபுரம் மட்டும் 40 அடி தளத்தின் மேல் 92 அடி கும்மாச்சி  என்ற கணக்கில்  132 அடி உயரமாம்.  அதுக்கு மேலே 18 அடி உயரக் கோபுரக்கலசம்! ஆக மொத்தம்  நூத்தம்பது அடி!  அதான்  கொஞ்சதூரத்தில் நாம் வரும்போதே கண்ணில் பட்டது!

பெரிய வளாகம்தான்.  கோவிலுக்குள் போகஒரு முப்பது படிகள் இருக்கலாம்....னு நினைச்சேன். ஆனால்  இருபத்தியேழு படிகள்தான்!  ஒரு நக்ஷத்திரத்துக்கு ஒன்னுன்னு கணக்கு!!    எம்பதடி உசரமும், அறுபத்தியிரண்டடி அகலமுமா  வாசல்!  வாசலுக்கு ரெண்டுபக்கமும் தும்புருவுடன் நாமசங்கீர்த்தனம் செய்யும்  பக்தரின் சிலைகள். த்வாரபக்தாஸ் ?  ஹாஹா     நம்ம சந்த் துக்காராம்!  இவரை விட யார் பொருத்தம் இங்கே விட்டலனைப் பாட !





உள்ளே நுழைஞ்சால் வசந்த மண்டபம். தாங்கிப்பிடிக்கும் தூண்களே இல்லாமல் விஸ்தாரமான பெரிய ஹால்!  ரெண்டாயிரம் பக்தர்கள்  ஒரே சமயம் கூடி இருந்து பஜனை பாடும் வசதி!
அதுக்கு அந்தாண்டை மஹாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை. கருவறையில் இடுப்பில் கைகளை வச்சுக்கிட்டு நிக்கும் பாண்டுரங்கனும், ருக்மிணிதேவியும்!  ஒரு நாலடி உயரச் சிலைகள். ரொம்பவே அழகான, திருத்தமான முகம்.   ஒரிஜினல் பண்டரிபுரத்துலே இருந்தே இங்கே வந்துருக்காங்க இவுங்க ரெண்டுபேரும்!
பண்டரிபுரம் போலவே இங்கேயும் மூலவர் பாதம் தொட்டு நாம் கும்பிட்டுக்கலாம்.  அதுக்குன்னு ஒரு குறிப்பிட்ட நேரம்  வச்சுருக்காங்களாம். இதெல்லாம் தெரியாமலேயே நாம் போயிருக்கோம். ஆனால்  அவன் பெரும் கருணையால்.... நமக்கும் பாதம் தொட ஒரு வாய்ப்புக் கொடுத்தான் !!!!

மூலவரைப் படம் எடுக்க அனுமதி கிடைக்கலை. ஆனால் கோவிலுக்கான ஒரு வெப்ஸைட்டில் படங்கள், கட்டுமானம், விழாக்கள் பற்றிய விவரங்கள் எல்லாம் அட்டகாசமாப் போட்டு வச்சுருக்காங்க.  விருப்பம் இருந்தால் நீங்களும் பார்க்கலாம்!


விட்டல விட்டலன்னு  அவன் பெயரை  நூறு கோடிமுறை எழுதி வச்சு அதுக்கு மேலேதான்  கடவுளர் சிலைகளை பிரதிஷ்டை பண்ணி இருக்காங்க.!

(நம்ம சண்டிகர் முருகன் கோவிலைக் கட்டும் சமயம், ஒவ்வொரு  தூணுக்கும் அடியில் ஒரு லக்ஷம் ஸ்ரீராமஜெயம் எழுதிவச்சது  நினைவுக்கு வந்தது! ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டின போதும்  லக்ஷக்கணக்கான  ஸ்ரீராமஜெயங்கள் வச்சுதான்  அஸ்திவாரம் போட்டோம்!  எல்லாம் ஒரு அனுபவம்தான்!)

கோவிலை உசத்திக் கட்டி இருப்பதால் கீழ்தளத்தில், தியான ஹால், லைப்ரரி அமைச்சுருக்காங்க.
முழுக்கோவிலும் ஏர்கண்டிஷன்டு.  நிம்மதியா உக்கார்ந்து நாமஜெபம் பண்ணிக்கலாம். இப்பவும் கூட இந்த  பிறந்தநாள் விழா வைபவத்துக்காக, ஹாலில்  ஒருபக்கம் சின்ன மேடை போட்டு  ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம்  காலை ஏழுமுதல்  பகல் பனிரெண்டுவரை  நடக்குது!
இந்தக் கோவிலைக் கட்டிமுடிக்க ஏழு வருஷங்கள் ஆகி இருக்கு!  இருக்காதா பின்னே.....   எல்லாம் பார்த்துப் பார்த்துக் கட்டுன ப்ரமாண்டம் இல்லையோ!!!!
கோவிலுக்குப் பின்பக்கம் படி இறங்கிப்போனால் திறந்தவெளி அரங்கம் போல் ஒன்னு!  அங்கே ஒருபக்கம் நம்ம பாண்டுரங்கனும் ருக்மிணியும் விஸ்ராந்தியா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க:-)

மொத்தம் பதினைஞ்சு ஏக்கர் இடமாம்.  கோவில் கட்டடத்தைத்  தவிர பின்னம்பக்கம்  கோசாலை அமைச்சுருக்காங்க. த்வார்கா, மதுரா, ப்ருந்தாவன் பகுதிகளில் இருந்து கொண்டுவந்த  ஒரு முன்னூறு பசுக்களோடு சேர்த்து மொத்தம் ஐநூறு பசுக்களுக்குமேல் வச்சுப் பராமரிக்கிறாங்களாம்.  சிறந்த கவனிப்பு.பசுக்களுக்கான புல் பயிரிடவே  அஞ்சு ஏக்கர் நிலம் ஒதுக்கியாச்சு. இந்தப் பசுக்களின் சாணத்தையே பயன்படுத்தி கோபர்கேஸ் தயாரிப்பு மூலம், கோவிலுக்கான  ஏஸி, மின்சாரம் எல்லாம்  அதன் வழியாவே கிடைச்சுருதுன்னு  சொல்றாங்க. தினமும் பனிரெண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்க முடியுதாம்.   (நாம்தான் கோசாலை வரை போகாமல் கிளம்பியிருக்கோம். ப்ச்.... )

கொடிமரம்  பார்த்த நினைவில்லை. ஆனால் சின்னதா ஒருபலிபீடமும், மூணாவது படியில் ஒரு தலையுமா இருக்கு!
எதிரே   வளாகத்தில் யாககுண்டம்!
நித்ய பூஜைகளுக்காக  காலை ஏழு மணிக்கு சுப்ரபாதம் பாடி  விட்டலனை எழுப்பி விட்டுட்டாலும்.....     பக்தர்களுக்கு வாசல் கேட்டை காலை எட்டுக்குத்தான் திறந்து விடறாங்களாம்.  எட்டரை முதல்  பதினொன்னரை வரை தரிசனம் செஞ்சுக்கலாம்.  அதேபோல் மாலை நாலரைமணிக்குத் திறந்து விட்டதும், நாலே முக்கால் முதல்  ஏழரை வரை தரிசனம் உண்டு.
ரொம்ப அழகா, படுசுத்தமா இருக்கும் கோவிலை தரிசனம் செஞ்ச மகிழ்ச்சியில் அங்கிருந்து கிளம்பிட்டோம்.....

தொடரும்........ :-)


6 comments:

said...

அழகான கோவிலாகத் தெரிகிறது. இந்தக் கோவில் பற்றி கேள்விப்பட்டதில்லை. வாய்ப்பு கிடைத்தால் அங்கே சென்று வர வேண்டும்....

படங்கள் சிறப்பு.

said...

மிக அருமை, நன்றி.

said...

அருமையான கோவில் ...

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

புதுக்கோவில். ஆனாலும் அழகு !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க அனுராதா ப்ரேம்,

நன்றி !