Monday, August 22, 2016

சார்ங்கா சார்ங்கா சார்ங்கா....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 76)

நல்ல உசரமான ராஜகோபுரம்!  தமிழ்நாட்டின்   உயர்ந்த கோபுரங்கள் வரிசையில் மூணாவது இடம்! 146 அடி உயரம். பதினோரு நிலை!  அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கப்போகுதேன்னு  கோபுரவாசலுக்கீடா பந்தல் போட்டு வச்சுருக்காங்க. கோவிலில் விழா ஒன்னு நடந்து முடிஞ்சமாதிரி இருக்கு!  மணி வேற  ஏழு ஆச்சே. எல்லாம் இருட்டோ இருட்டுதான்!  சார்ங்கா சார்ங்கா சார்ங்கான்னு நியான் விளக்கு எழுத்து.............மட்டும் வெளிச்சம் காமிக்குது.
அம்பத்தோரடி உசரக் கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம். தூண்களில் கட்டி வச்ச     வாழைமரங்கள்கூடக் காய்ஞ்சுபோக ஆரம்பிச்சுருக்கு.
 ரெண்டுபக்கமும் வாகனமண்டபமா இருக்கு.  தூரக்கே கொடிமரம். பலிபீடம்,  பெரியதிருவடிக்கான சந்நிதி.   இந்தாண்டை கோசாலை.
கோமளவல்லித்தாயாரின் கோசாலை!
இங்கே(யும்) தாயாருக்குத்தான் பவர் கூடுதல்.  பொறந்த இடமாம்! கும்மோணம் ஹேமரிஷியின் மகள் !  மொதல்லே தாயாரைத் தரிசனம் பண்ணிக்கிட்டுத்தான் ஐயாவையே பார்க்கப்போகணும் என்பதுதான்   இங்கே  நியதி!

நேரா உள்ளே போறோம். அழகான தூண்களுடன் முகமண்டபம்.
பக்தருக்கு வருசாவருசம் திதி கொடுக்கும்  அமுதன்   இவன்!  ஆராவமுதன்! இவ்வளவு பாக்கியம் செய்த பக்தர்  லக்ஷ்மிநாராயணன்  என்பவர். குருதாத்தாச்சாரியாரின் சீடர். பரம ஏழை.  பெருமாள் மீது  அளவுகடந்த அன்பு. இப்போ நாம் கடந்து வந்த ராஜகோபுரம் இவர் முயற்சியால்தான்  கட்டப்பட்டது.

மடப்பள்ளி ஸேவகம். பெருமாளே கதின்னு  கல்யாணம் கட்டாம வாழ்ந்துட்டார்.  கடைசியில் ஒரு தீபாவளி அமாவாசையன்னிக்குப் பெருமாள் திருவடிக்குப்போய்ச் சேர்ந்துட்டார். தனிக்கட்டையா இருந்ததால்  திதி செய்யக்கூடக் குடும்பம் இல்லை. அன்றைக்குப் பட்டர் கனவிலே வந்த பெருமாள்,  என் கையில் இருக்கும் தர்ப்பையை எடுத்துக்கொண்டுபோய் வேண்டியதைச் செய்யும் என்று உத்தரவிட்டாராம்.

மறுநாள் காலை  கருவறையைத் திறந்தால்..........   ஈரவேட்டியும், கையில் தர்ப்பையுமா காட்சி கொடுத்ததாகக் கோவில் புராணம் சொல்லுது! அதேபடிக்குத் தீபாவளி அமாவாசை தினம்  காலை நேரத்தில் கோவில் திறக்கறதில்லை. கோவில் வகையில் தர்ப்பணம்  கொடுத்து முடிச்சப்பறம் உச்சி காலபூஜைக்குக் கோவிலைத் திறந்துடறாங்க.
உத்தராயண வாசல், தக்ஷிணாயவாசல்னு ரெண்டு வாசல்கள்.  தைமாசம் முதல் ஆனி வரை உத்தராயணவாசல். ஆடி முதல் மார்கழிவரை தக்ஷிணாயணவாசல் வழியா வந்து  ஸேவிச்சுக்கணும்.
கோமளவல்லியைக் கல்யாணம் பண்ணிக்கப் பெருமாள் தேரில் வந்து இறங்கினாராம். அதுவும் யானை இழுக்கும் தேர்! அதனால் கருவறைகூட தேர் வடிவத்துலேயே இருக்கு!
ரதவடிவில் கருவறை இருப்பதை திருஎழுகூற்றிருக்கை என்ற வகையில் பாடலாகப் பாடி இருக்கார் நம்ம திருமங்கை ஆழ்வார். ஒன்னுமுதல் ஏழுவரைசொற்களை அமைச்சு மேலேறிப்போய், அங்கிருந்து  ஒவ்வொன்னா கீழிறிங்கி வரும் சொற்களைக் கொண்டு  ஒன்னில் முடிக்கணுமாம்.

 (  'அவ்வையே... எம்மை   ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்திப் பாடுக'ன்னு  நினைவுக்கு வந்துச்சு....   ஐயோ.... எப்பப்பார்த்தாலும் என்ன சினிமா வேண்டிக்கிடக்கு?)
அது எப்படின்னு விளக்கும் விதத்தில் ஒரு  சித்திரம் போட்டு வச்சுருக்காங்க கோவிலில்! கூடவே திருமங்கை பாடிய பாடலும் ஒரு பளிங்குக் கல்வெட்டில். இந்தக் கல்வெட்டுக்கு ஒரு திறப்புவிழாகூட நடந்து இருக்கு 1980 இல்! அதுக்கும் ஒரு கல்வெட்டு!


 ஒவ்வொருபடியா ஏறி படிக்கட்டில் ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறிநின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது எழுகூற்றிருக்கைன்னு  விக்கியண்ணன் சொல்றார்.   இப்படிப் பாடுதல் 96 சிற்றிலக்கிய வகைகளில்  ஒன்னு. 

சைவ வைணவ பேதமில்லாமல் திருமங்கை ஆழ்வார் பெருமாளையும், திருஞான சம்பந்தர், நக்கீர தேவ நாயனார்,அருணகிரிநாதர் ஆகியோர்   முருகனையும்,   இவ்வகையில்  பாடி வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சது.

பனிரெண்டு ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத் தாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஏழுவர்  சார்ங்கனைப் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க.   மொத்தம் அம்பதியொரு பாசுரங்கள்.
கருவறைக்குள் கிடப்பில் இருக்கார் சார்ங்கபாணி என்னும் ஆராவமுதன். உற்சவருக்கும் இதே பெயர்கள்தான். படுக்கையில் இருந்து  லேசா உடம்பை உயர்த்தித் தலையைத் தூக்கிப் பார்க்கும் போஸ்! உத்தான சயனத்தில் இருக்கார். பெருமாளின் பத்துவித சயனக்கோலத்தில் இங்கே மட்டும்தான்  இந்த உத்யோக/உத்தான சயனப்போஸ்.  இந்த போஸில் இருக்கும் சுதைச்  சிற்பத்தை முந்தி ஒரு சமயம்  ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜரைத் தரிசிக்கப்போனபோது வெளியே ஒரு   மண்டபமுகப்பில் பார்த்துருக்கேன்!


திருமழிசை ஆழ்வார் ஒரு சமயம் பெருமாளை தரிசிக்க வர்றார்.  இங்கே  பெரும் ஆள் கிடப்பில்!  சரின்னுட்டு அவரைப் பாட ஆரம்பிக்கிறார்....

இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக
கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே
விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார்
வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

கம்னு கிடப்பில் இருந்தபடியே பாட்டைக் கேட்டாறது.  காதுக்குக் கதவு இருக்கா என்ன? இப்படியே அஞ்சு பாசுரம் ஆச்சு. புள்ளி இன்னும் தலையைக்கூட அசைக்கலை. வந்தவரை என்னன்னு கூடக் கேக்கலை.  இன்னும் தன்னைப் புகழ்த்திப் பாடட்டும். கேட்டு அனுபவிக்கலாம் என்ற ஆசை போல!

இன்றையக் காலக்கட்டத்துலேகூடப் பாருங்க.... மேடையிலே    தனக்கு ஆதாயம் தேடிக்கவும், அரசியல்வியாதிகளின் குட் புக்ஸில் இருக்கவும் கொஞ்சம்கூடத் தகுதி இல்லாத தலைவர்களை 'இந்திரனே சந்திரனே'ன்னு வானளாவப் புகழ்ந்து பேசும்  பேச்சுக்களைக் கேட்டபடியே ஒரு கூச்சமே இல்லாம  'தேன் குடிச்ச நரிகளைப்போல'  ஆனந்தமாக் கேட்டுக்கிட்டு  உக்கார்ந்துருக்கும் சிலர் நினைவுக்கு வந்து போறாங்க...ப்ச் :-(

திருமழிசை பாவம்.....  அவருக்குப் பெருமாள் மேல் பக்தி என்பதைத்தவிர  அவரிடம் ஆதாயம் தேடிக்கணும் என்ற ஆசை எல்லாம் இல்லாத அப்பாவி.
கால் வலின்னு ரொம்ப முடியாமல் படுத்துக்கிடக்கறார் போல....  அதானே உலகை மூவடியால் அளந்த காலத்துலே  உமக்கு நிறைய  கால்வலி வந்து கஷ்டமாப் போயிருக்கும்.  பூமாதேவியை அரக்கன் கொண்டுபோய் பாதாளத்துலே ஒளிச்சு வைச்சபோது, தேடிக்கொண்டு  பூமியைக் கால்களால் தோண்டிக்கொண்டு போனதில் கால்களுக்கு ஏகப்பட்ட வலி வந்துருக்குமே....  சீதையைப் பறிகொடுத்துட்டுத் தேடி  எங்கெல்லாமோ அலைஞ்ச கால்கள் நொந்து போய்க்கிடக்குதோ...  அதான்  மலைகளையும் பாலை நிலங்களையும் கடந்து ஓடி வர்ற  காவிரிக் கரையிலே இந்த இடத்துலே வந்து கொஞ்சம் படுத்து,  சிரமபரிகாரம் செஞ்சுக்கிட்டு இருக்கும் நீர், 'கிடந்தவாறெ ழுந்திருந்து பேசு(ம்) என்றார்.

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.

சட்னு  தலையைத் திருப்பி,  உடம்பை உயர்த்திப் பார்க்கிறார் சார்ங்கன் என்னும் வில்லை ஏந்தியவர்! சார்ங்கபாணி!

ஆஹா...  உம்மால் முடியும்!  இனி இப்படியே இருந்து பக்தர்களுக்கு அருள்புரியவேணும்னு வேண்டுகோளும் வைக்க, அதன்படியே ஆச்சு!
பாவம். இனி இப்படியே போஸ் கொடுத்து இடுப்புவலிதான் கேட்டோ!  நல்லா செக் வச்சுட்டார்ப்பா பெரும்  ஆளுக்கு :-)
கருவறையில் தீபாரதனை காமிச்சு, தீர்த்தம், சடாரி கிடைச்சது. சந்தானகோபாலன்    இருக்கார்.

ப்ரகாரம் சுற்றி வர்றோம்.  சொர்க்கவாசல் இல்லாத கோவில்! டைரக்ட்டா சொர்கத்தில் இருந்து  புறப்பட்டு இங்கே வந்துட்டதால்  இவரை க் கும்பிட்டாலே நமக்கும் டைரக்ட்டா சொர்கம்தானாம்!  ஆமென்!
இந்த சார்ங்கபாணி கோவிலுக்குப்போய் வரலாமுன்னு  நினைச்சுக்கிட்டு வீட்டு வாசலில் இருந்து ஒரு அடி எடுத்து வச்சாப் போதுமாம்!  போய்வந்த பலன் கிடைச்சுரும். வைகுண்டத்துலே ஒரு இடம் நமக்கு  ரிஸர்வ்டு னு பெரியவங்க சொல்றாங்க!

காலை 7 முதல் 12.30 வரையும்,  மாலை 4 முதல் 8 வரையும் கோவிலைத்  திறந்து வைக்கறாங்க.


பாதாள சீனிவாசர்னு ஒரு சந்நிதி இருக்கு! எதுக்கு இப்படி பாதாளத்துலே ஒளிஞ்சுக்கணும்?
தேவலோகத்துலே ஒரு பெரிய யாகம் நடத்தப்போறாங்க.  யாருக்கு அங்கே முதல் மரியாதை கொடுக்கலாமுன்னு விவாதம். மும்மூர்த்திகளில் யார் சாந்தமான குணம் உள்ளவரோ  அவருக்கு முதல் ஆஹூதின்னு முடிவாச்சு.

   அந்த சாந்தமான சமாதானப்புறா யார்னு  கண்டுபிடிக்கணுமே!  அதுக்கு ப்ருகு முனிவரைத் தேர்ந்தெடுத்து , 'நீர் போய் யார் சாந்தன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கோ'ன்னு அனுப்பறாங்க.

முதலில் ப்ரம்மா, அப்புறம் சிவன் னு ரெண்டுபேரும் இவர் வச்ச டெஸ்ட்லே ஃபெயில் ஆகிட்டாங்க.  என்ன கதைன்னு தெரியலையே.......    கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகாததால் எனக்கும் தெரியலை போங்க...  தெரிஞ்சவங்க சொன்னால் கேட்டுக்குவேன்.

மூணாவதா மஹாவிஷ்ணுவாண்டை  வர்றார். அப்போ திருப்பாற்கடலில் ஹாயாப் படுத்துக்கிட்டு இருக்கும்  மஹாவிஷ்ணுவும்,  கணவன் காலை அமுக்கி விட்டுக்கிட்டு இருக்கும்  மஹாலக்ஷ்மியும்  தனிமையில் சுவாரசியமா பேசிக்கிட்டு இருக்காங்க. முனிவர் வந்து நின்னார். அவரைக் கவனிக்காமல் இங்கே பேச்சு தொடர்ந்துக்கிட்டு இருக்கு.

முனிவருக்குக் கோபம் வந்துருச்சு!  'எம்மாநேரமா இங்கே நிக்கிறேன்.  வந்தவனைக் கவனிக்காமல் அப்படி என்ன பேச்சு'ன்னு  மஹாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைச்சார்.  சட்னு அவர் பாதத்தைப் பிடிச்ச பெருமாள், 'ஐயோ....  உங்க பாதம் நோகுமே....'ன்னு விசாரிச்சதும் கோபம் பொசுக்னு போயிருச்சு.  இவர்தான் ரொம்ப சாந்தமான சாமின்னு  சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டு  மகரிஷி கிளம்பிப் போயிட்டார்.
அவர் அந்தாண்டை போனதும் இங்கெ குடும்பச் சண்டை ஆரம்பிச்சது. 'நீர் ஆனானப்பட்ட   பெரிய ஆள்னு நினைச்சேன். ஆனால் உம்மை ஒருவர் எட்டி உதைக்க இடம் கொடுத்துட்டீரே. அதுவும் நான் எப்போதும் உறைந்திருக்கும் திரு மார்பில்! என்னையே நேரடியா உதைச்சவரை தண்டிக்காம சும்மா விட்டுருக்கலாமா? இது எனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய்   பூலோகத்துக்கு வந்துட்டாங்க.

வந்தவங்க ச்சும்மா  இருக்கமுடியாம கொல்லாபுரத்துக்குத்  தவம் செய்யப்போயிட்டாங்க. இதை எழுதுனப்ப நம்ம அமைதிச்சாரல் வந்து இப்படிச் சொல்லிட்டுப் போனாங்க!!!

அப்படி வந்து தவம் செஞ்ச இடம்தான் கோலாப்பூர். இங்கே மஹாலக்ஷ்மிக்கு கோவிலும் இருக்கு. ரொம்பவும் பிரசித்தி வாய்ஞ்சதும்கூட. சீனிவாசன் படும் துன்பத்தைக் காணச்சகிக்காம நாரதர் லக்ஷ்மியைத் தேடிக்கண்டு பிடிச்சு விவரத்தைச் சொல்ல, சமாதானமான லக்ஷ்மி தாமரையில் குழந்தையாக அவதரிச்சாங்கன்னு சொல்லுவாங்க. (சாந்தியின் அருள் வாக்கு!)


அப்புறம் அந்தக் குழந்தை ராஜா வீட்டுலே பத்மாவதி என்ற பெயரில் வளர்ந்து  ஸ்ரீநிவாசனைக் கல்யாணம் கட்டி, ஒரு கருவேப்பிலை இல்லாததால்  திருச்சானூர்லே  தனியா உக்கார்ந்துருக்கறது நம்ம துளசிதளத்தில்  இதே தொடரில்தான்    வந்துருக்குன்றது கூடுதல் தகவல்:-)
இது இப்படி இருக்க,  ஒரிஜினல் மஹாலக்ஷ்மி,  ரொம்பநாளாச்சே... அவரைப் பிரிஞ்சு வந்து.... எப்படி இருக்காரோ என்னமோன்னு அவரைத் தேடப்போக....  இப்படி திருப்பதியில்  குபேரன்கிட்ட வாங்குன  கல்யாணக்கடனை அடைக்கமுடியாமல் நிக்கறாருன்னு சேதி கிடைச்சு அவரைப்பார்க்கத் திருப்பதிக்கு (கையில்  லாட்னாவோடு) புறப்பட்டுப் போறாங்க.

என்னதான் சாமியா இருந்தாலும்  சின்ன வீடுன்னு வச்சுக்கிட்டா.......?  புள்ளிக்குப் பயம் வந்து ஓடி ஒளிஞ்சுக்கிட்டது  இங்கே இதே  பாஸ்கர க்ஷேத்ரத்தில்தான். பாதாளத்துலே ஒளிஞ்சுக்கிட்டால் கண்டுபிடிக்க முடியாதாம்... ஹஹா... :-)))))

இங்கே  கோமளவல்லியுடன் கல்யாணம் முடிஞ்சதும் மேட்டு ஸ்ரீநிவாசரா தனிச்சந்நிதிக்கு  வந்துட்டார்.

திருவஹீந்தபுரம் தேவநாதப்பெருமாள் கோவிலில் கூட   தரையில் இருந்து இறங்கும்  பள்ளத்தில் ஒரு பெருமாளைப் பார்த்த நினைவு இருக்கு. கோவில் மூடிடப்போறாங்களே என்ற அவசரத்தில்     நான் வேறெங்கெயோ  மும்முரமா க்ளிக்கிக்கிட்டு இருந்தப்ப, சீக்கிரமா வந்து பாருன்னு நம்மவர் கூப்பிட்டுக் காண்பிச்ச ஞாபகம்.  அது எதுக்கு ஒளிஞ்சுருக்கார்னு தெரியலை.  அந்தக் கோவிலை நல்லாப் பார்க்காத குறை இருக்கு.  பார்க்கலாம்...இன்னொரு ச்சான்ஸ் கொடுக்கறாரான்னு! 

மண்டபத்தூண்களில் ஏராளமான அபூர்வ சிற்பங்கள் இருக்கு. ஆனால் நாம் போன நேரம் சரியில்லை.  மேலும் படம் எடுக்க கட்டணம் கட்டி ரசீது வாங்கிக்கலாமான்னு  பார்த்தால்....   ஆஃபீஸ் மூடிக்கிடக்கு.
சார்ங்கபாணி கோவிலைத்தான் சாரங்கபாணி கோவில்னு சொல்லிக்கிட்டு இருக்கு சனம். கோவில் வகையில் எழுதி வச்சுருப்பதிலும் சில இடங்களில் சாரங்கதான் !!!!       பொதுவா அந்தக் காலத்துலே ஊரில் இருக்கும் முக்கியமான கோவில் சாமி பெயரையே, வீட்டுலே குழந்தைகளுக்கு வைக்கிற  பழக்கம் உண்டு. அதை அனுசரிச்சு சாரங்கபாணின்னு  பெயர் வச்சுருக்காங்க பலருக்கும்.  அப்பப்  பெண்  குழந்தைன்னா?  கோமளா, கோமளவல்லி.....   நம்ம பூனா எபிஸோட்  மாமிகூட கோமளா மாமிதானாக்கும். தாயைப்போல் என்னிடம் பரிவு காட்டிய அந்தக்கும்பகோணம் கோமளா மாமி....  மாமி ஐ மிஸ் யூ..... :-(

கோவிலின் ராஜகோபுரத்தில்  பரதநாட்டிய முத்திரைகளும், நூத்தியெட்டுக் கரணங்களுமா சிற்பங்கள்  இருக்குன்னு கேள்வி. போறபோக்குலே க்ளிக் பண்ணும் கண்களுக்கு இதையெல்லாம் கண்டுபிடிக்கிறது கஷ்டம்:-(   ஒன்னா ரெண்டா... லட்சக் கணக்குலே சிற்பங்கள் இடம்பிடிச்சுக்கு இந்த பதினோறு நிலைகளில்.  விவரம் தெரிஞ்ச உள்ளூர்க்காரர்களோ, இல்லை  ஒரு கைடோ  கிடைச்சால்  தேவலை.   வேலை இல்லாமல் ச்சும்மாச் சுத்திக்கிட்டு இருக்கும் இளைஞர்கள் நல்ல வேலை கிடைக்கும்வரை இதை ஒரு  ஸேவையாச் செஞ்சு நாலு காசு பார்க்கலாம், இல்லே?

இந்தப் படம் ஏழு வருசத்துக்கு முன்னால் போன பயணத்தில் எடுத்தது.
வெளியே ப்ரகாரம் சுத்தி வரும்போது ஒரு சந்நிதியின் படிக்கட்டுகளில்  சில நோட்டுப்புத்தகங்களை வச்சுப் படிச்சு எழுதிக்கிட்டு இருந்தார்.  என்னன்னு தெரிஞ்சுக்காட்டி எனக்குத் தலை வெடிச்சுடாதா?
தமிழாசிரியர்.  பெயர் ஜானகிராமன்.  பள்ளிக்கூடத்துலே நாளைக்கு நடத்தவேண்டிய பகுதிகளுக்கு நோட்ஸ் ஆஃப் லெஸன் எழுதறாராம். அரசுப்பள்ளி ஆசிரியர்தான்.  முதலில் ஆசிரியர் படிச்சு வச்சுக்கிட்டாத்தானே பிள்ளைகளுக்கு நல்லபடியாச் சொல்லித்தரமுடியும்? எனக்குள்ளே இருக்கும் டீச்சருக்கு ஆனந்தம் தாங்கலை. அவரோடு பிள்ளைகளின் கவனம், படிப்பின் தரம் எல்லாம் கொஞ்சம் பேசிட்டுத்தான் கிளம்பினேன்:-)


ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைதிக்குக் கேட்பானேன்!

 கும்மோணத்துக் கொசுக்களுக்குத்தான் கொண்டாட்டம்! நானும் ராமர் சந்நிதியில்  ரெண்டு நிமிட் உக்கார்ந்துட்டு வந்தேன்:-)


இன்றைக்கு மட்டும் இந்தக் கோவிலோடு சேர்த்து 26 கோவில்களுக்குப்போய் இருக்கோம்.  நம்ம பயணவரலாற்றில் இது ஒரு ரெக்கார்ட் !


ராயாஸ்க்குத் திரும்பியதும்தான்  காலுக்கு வலி தெரிய ஆரம்பிச்சது.  ஒருவழியா ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கட்டையைக் கிடத்தணும்.
எனக்கு இட்லி, நம்மவருக்குப் பரோட்டா. நம்ம சீனிவாசன் வேறெங்கேயோ  சாப்பிடப் போறேன்னார்.





மத்யானம் இங்கே ஹொட்டேலுக்கு வந்து சேரும்போதே கரிடார் ஜன்னலில்
எதிரில் இருக்கும் மஹாமகக்குளம் சுத்தம் செஞ்சு  தண்ணீரை எல்லாம்  எடுத்துட்டு  வட்டவட்டமா  நீலக்கலரில் என்னவோ வச்சுருந்தாங்க.  உறை போல இருக்கு!  எது என்ன தீர்த்தம் என்ற போர்டும் வச்சுக்கிட்டு இருந்தாங்க.  செல்லில் கொஞ்சம் க்ளிக்கி வச்சேன்.  படங்கள் சரியா வரலை :-(

இப்ப எட்டிப் பார்த்தேன்.  கொஞ்சம் தண்ணி  வந்துருக்கு. கொண்டுவந்து  குளத்தை நிரப்பறாங்களோ என்னவோ!


ஆச்சு. நாளைக்கு எங்கே போறோம்? பார்க்கலாம் :-)

தொடரும்............  :-)




14 comments:

said...

சார்ங்கா..... தரிசனம் உங்கள் மூலம் எனக்கும்...

தொடர்கிறேன்.

said...

//முதலில் ப்ரம்மா, அப்புறம் சிவன் னு ரெண்டுபேரும் இவர் வச்ச டெஸ்ட்லே ஃபெயில் ஆகிட்டாங்க. என்ன கதைன்னு தெரியலையே....... கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகாததால் எனக்கும் தெரியலை போங்க... தெரிஞ்சவங்க சொன்னால் கேட்டுக்குவேன்.//

டீச்சர் send me your email ID pl. I read that story in one of the books purchased at Thirumala. Will scan & send you.

said...

திருவெழுகூற்றிருக்கை படிக்கிறதே அருமையான விளையாட்டு. பல கோயில்கள்ள அருணகிரியும் திருஞானசம்பந்தரும் பாடிய கூற்றிருக்கைகளைப் பாத்திருக்கேன். திருமங்கையாழ்வாரோட திருவெழுகூற்றிருக்கையையும் எங்கயோ பாத்திருக்கேனே. எங்கன்னு சட்டுன்னு நினைவுக்கு வர மாட்டேங்குது.

சார்ங்கம்னு எழுதுவது தமிழ் இலக்கணப்படி தவறு. சாரங்கம் என்பதே இலக்கணப்படிச் சரியானது. அதைத்தான் நமக்கு முன்னாடி இருந்தவங்க சாரங்கம்/சாரங்கபாணின்னு எழுதினாங்க. வடமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதும் போது தமிழ் இலக்கணப்படி எழுதனுங்குறதாலதான் சைவத்தில் பாடியவங்களும் வைணவத்தில் பாடியவங்களும் அந்த விதிக்கு உட்பட்டுப் பாடினாங்க. வடமொழி கலந்து பாடிய அருணகிரி கூட வடமொழிச் சொற்களை விதிக்கு உட்பட்டுத்தான் பாடினாரு. ஆனா இன்னைக்கு பல இணைய தளங்கள்ள.. திருப்புகழ் வரிகளில் மக்கள் புகுந்து விளையாடியிருக்காங்க. வடமொழியைத் தப்பா எழுதுனா மட்டும் பாவமில்லை. தமிழைத் தப்பா எழுதினாலும் பாவம் தான். ஒன்னும் சொல்றதுக்கில்ல. எதோ.. என் புலம்பல்.

சைவ வைணவச் சண்டைகள்ள.. சிவனை மட்டப்படுத்திய கதைகள்ள ஒன்னு சாந்தமானவர் யாருன்னு கண்டுபிடிக்கிறது. இதே மாதிரி அந்தப் பக்கமும் கதைகள் இருக்கு.

திருவண்ணாமலைல ஒரு பாதாளலிங்கம் இருக்கு. ஆனா அதுக்கு இன்னும் எந்தக் கதையும் யாரும் சொல்லல. அது எப்படி வந்ததுங்குறதே ஒரு சுவாரசியமான விஷயம். அதைப் பிரிதொரு சமயம் சொல்றேன்.

அடேங்கப்பா.. கோயில்ல வந்து பாடம் படிக்கிறாரா ஆசிரியர். நல்லது.

பரந்தாமனுக்குக் கால் வலியான்னு பாட்டுக்கு உரிய கோயிலுக்குப் போயிட்டு வந்ததால பரந்தாமன் கால்வலியை உங்களோட பகிர்ந்துக்கிட்டாரு போல.

said...

இந்தப்பதிவைப் படிக்கும்போது இரண்டு விஷயங்கள் சொல்லத் தோன்றுகிறது ஒன்று கோவில் கோபுர சிற்பங்கள் அட்டகாசமாக இருக்கும் எல்லாவிதச் சிற்பங்களும் , நோட் திஸ் பாயிண்ட் டீச்சர், இரண்டாவது திருவெழுக்கூற்றிருக்கை. இது பற்றி ஏதும் தெரியாது இருந்த நான் எப்படியெல்லாமோ தேடி தெரிந்து என் பாணியில் ஒரு திருவெழுக்கூற்றிருக்கை எழுதிப் பதிவிட்டிருக்கிறேன் சுட்டி இதோ
http://gmbat1649.blogspot.in/2012/08/blog-post_21.html

said...

ஊருக்கு (துபாய்க்கு) கிளம்பிக்கிட்டே இருக்கேன். உங்களால ஆராவமுதன் தரிசனம் கிட்டியது. எத்தனை கோயிலானாலும் கோயில் கதைகளை விளக்கமா எழுதிர்றீங்க டீச்சர். அதுலாம் தமிழ் ஆசிரியரைப் பற்றி எழுதியுள்ளதுபோல் ஒரு பெர்சனல் டச்சும் கொண்டுவந்துர்றீங்க.

ராகவன் சார்... ஆழ்வார் பாடலில் சார்ங்கபாணி அப்படின்னதானே இருக்கு. தேஜஸ் என்பதையே தேசு என்று பாடுபவர்களாயிற்றே. ஒருவேளை ஓசை நயத்துக்காக சார்ங்கபாணின்னு பாடல்ல வந்திருக்குமா?

said...

எங்கள் ஊரான கும்பகோணத்தில் உள்ள கோயில் என்ற நிலையில் பல முறை இக்கோயில்களுக்குச் சென்றுள்ளேன். கல்லூரி நாட்களில் இக்கோயிலின் பிரகாரத்தில் படிக்கச் சென்றுள்ளோம். (அதிகமாக படித்தது கும்பேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில்தான், நண்பர்களுடன்).
கடந்த ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின்போது நாங்கள் குடும்பத்துடன் சென்றோம். குடந்தைக்கிடந்தானைக் கண்டோம். இதோ, இணைப்பு உங்களுக்காக.
http://drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_16.html

said...

சாரங்கபாணியின் தரிசனம் கிடைக்கப் பெற்றது..ஆராவமுதன் எனக்கு பிடித்த பெயர்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வருகைக்கு நன்றி.

said...

வாங்க விஸ்வநாத்.

நீங்க அனுப்பிய 'கதைகள்' கிடைத்தன. அடுத்தமுறை பயன்படுத்திக்கறேன். சிரமம் எடுத்து ஸ்கேன் செஞ்சு அனுப்பியதற்கு மனம் நிறைந்த நன்றிகள்!

said...

வாங்க ஜிரா.

புலம்பல்கள் பலவகை! அந்த வில்லின் பெயர் சார்ங்கம் என்றுள்ளபோது அதைத் தமிழ்ப்படுத்தறோமுன்னு சிதைக்கலாமா?

கோவில்கதைகளில் சரித்திரச் சான்று கிடைக்குமா? போற போக்கில் படிச்சுட்டு அந்தக் கால மக்களின் புனைவுத் திறன் பற்றி வியந்துக்கிட்டு நடையைக் கட்டணும். இப்ப நாம் கூட கதை கட்டி விட்டால் இன்னும் அம்பது வருசத்துலே அது புராணம் ஆகிடாதா? :-)

said...

வாங்க ஜிஎம் பி ஐயா.

சிற்பங்களின் அழகை என்னன்னு சொல்ல!!!

உங்க திருவெழுக்கூற்றிருக்கை இன்னும் பார்க்கலை. கொஞ்சநாளா நேரம் டைட்.... என்ன பண்ணறேன்னு புரியலை :-(

வருகைக்கு நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

விஷ்ணு சகஸ்ரநாமத்தில்கூட சார்ங்கன் என்றுதான் இருக்கு. அததை அப்படியே ஏற்றுக்கொள்வதில் என்ன தவறுன்னு எனக்குப் புரியலை. எல்லாத்தையும் தமிழ்ப்படுத்தியே ஆகணுமா? என்னவோ போங்க...........

என்னைப் பொறுத்தவரை.... நாம் பேச்சும் எழுத்தும் அடுத்தவர்களுக்குப் புரிஞ்சாப் போதும் என்ற நிலைதான்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கும்பகோணத்துலே... கொசுக்களைத் தவிர மற்ற எல்லாமே அருமைதான்! கலை கலாச்சாரச் சூழல் அருமை அங்கே! தினம் ஒரு கோவில் என்று போனால் கூட பார்த்துத் தீராதுதான்! அடுத்தமுறை ஒரு வாரமாவது தங்கிப் பார்க்கணும்.

சுட்டிக்கு நன்றி.

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எனக்கும் ரொம்பப் பிடிச்ச பெயர்தான். அமுதன்! ஆராவமுதன்!