Showing posts with label கும்பகோணம். Show all posts
Showing posts with label கும்பகோணம். Show all posts

Wednesday, March 18, 2020

கும்மோணத்தில் ஒரு 24 மணி நேரம்தான்.... (பயணத்தொடர் 2020 பகுதி 28 )

திருக்கருகாவூரில்  இருந்து கிளம்பின  முக்கால் மணி நேரத்தில் கும்மோணம் ராயாஸ் க்ராண்ட் வந்து சேர்ந்தாச்சு.
எனக்கு ஒன்னு மன உறுத்தலா இருக்கு.....  ஏன், எதுக்கு நம்ம சனம் இப்படி அறிவில்லாமக் கிடக்குன்னு.....
வழிகாட்டுறதுக்காகவும், ஊர்ப்பெயர், தெருப்பெயர் எல்லாம் தெரியறதுக்காகவும் அரசின் போக்குவரத்துத்துறை/ உள்ளூர் பஞ்சாயத்து எல்லாம் தெளிவா எழுதி வச்சுருப்பதில் போய்  விளம்பரம், நோட்டீஸ் எல்லாம் ஒட்டி வைக்குதுகளே..... இதுலே  நகரம், கிராமம்னு ஒரு வேறுபாடும் கிடையாது. சென்னையில் கூட  ஹைக்கோர்ட் எதிரில் இருக்கும் பல தெருக்களின் பெயர்ப்பலகையில் இப்படித்தான்.  யாரோட கட்சியோ,  பத்திரிகையோ, விளம்பரமோ சம்பந்தப்பட்டவர்களுக்குக் கட்டவே முடியாதபடி ஹெவி ஃபைன் போடணும். தயை தாட்சண்யம் காமிக்கப்டாது. இப்படி நாலு பேருக்குச் செஞ்சாலாவது புத்தி வருமான்னு பார்க்கணும். கொண்டுவந்து ஒட்டிட்டுப்போறவனைச் சொல்லி என்ன பயன்?

ராயாஸ் வழக்கம்போல் கலகலன்னு இருக்கு. செக்கின் ஆனதும், பகல் சாப்பாட்டுக்குக் கீழே இருக்கும் ரைஸ் & ஸ்பைஸ் போனோம். முருகனுக்குத் தாலியும், நமக்கு சாதம் பருப்புமா ஆச்சு.  கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின்  கோவில்களுக்குக் கிளம்பலாம். அதுவரை எதிரில் இருக்கும் மஹாமகக்குளத்தை க்ளிக்கினால் ஆச்சு.  இந்த முறையும்  குளம் வ்யூ இருக்கும் அறை கிடைக்கலை.  கல்யாண சீஸன் பிஸி.
மூணரை போலக் கிளம்பி முதலில் ஒப்பிலியப்பன் கோவிலுக்குப் போறோம். சமீபத்துலே ஊரில் தேர்த்திருவிழா நடந்துருக்கு போல.... அலங்காரத்தேர் கண்ணில் பட்டது... எந்தக் கோவில் விழாவோ?
கோவிலில் வழக்கம்போல் அருமையான தரிசனம். ஒப்பிலியப்பன் 'கதையை'  விஸ்தாரமா இப்ப எழுதலை. நிறையதடவை எழுதுனதுலே போனமுறை செஞ்ச பதிவை ஒருக்கா எட்டிப் பார்த்துருங்களேன்... இப்போ  உங்கள் பார்வைக்குச் சில படங்கள் மட்டுமே!





அடுத்துப்போன கோவில் எதுன்னு தெரியுமோ?  ஊகிச்சு இருப்பீங்கதான்.  அம்மாவின் அதிகாரத்தின் கீழ்தான் அத்தனையும் :-)   நாச்சியார் கோவில்.
கோவிலைப்பற்றி இங்கே !

கோவிலைப்பார்த்தாப்லெ  செல்லங்கள், அம்மாவோடு! பெருமாள் கருணை  காமிக்கணும்....



இங்கேயும் தரிசனம் அபாரம்!  இடுப்பில் சாவிக்கொத்து இருக்கான்னு பார்த்துக்கிட்டேன்.  இருக்கு  :-)



மழை வேற... வர்றதும் போறதுமா இருக்கு. 'இருட்டிக்கிட்டே வருது....   ராயாஸ் போயிடலாம். மற்ற கோவில்கள் நாளைக்கு'ன்னார் நம்மவர்.  திரும்பி வர்ற வழியில்  பாத்திரக்கடை கண்ணில் (!) பட்டது.  ஹா.... எனக்கொரு  சின்ன அடுக்கு வேணும். ஏற்கெனவே வச்சுருந்ததில் ஊசிமுனை அளவில் ஓட்டை ! அதுவும் பதிமூணு வருஷம் உழைச்சுட்டுத்தான் மண்டையைப் போட்டுருக்கு!  அம்பத்தியொரு ரூபாய்க்கு மதுரையில் வாங்குனது.

எனக்குப் பாத்திரக்கடை பார்க்க ரொம்பவே பிடிக்கும். ஒரு சின்ன அடுக்கு வாங்கியாச். கூடவே ஒரு தோல்சீவியும். பயணத்துலே வெள்ளரிக்காய் வாங்கினால் சீவித்தின்ன ஆகும்.  திருவாசிகள் அட்டகாசமா இருக்கு. நமக்கும் ஒன்னு இருந்தால் கொள்ளாம்.  அளவு சொன்னால் செஞ்சு  தர்றேன்னார் ஓனர்.   ஒரு பீஸா இல்லாமல் நடுவிலே  இணைப்பு வச்சுப் பிரிச்சு எடுக்கறதுபோல் செஞ்சால், கொண்டு வர்றது கொஞ்சம் சுலபம்.


ராயாஸ் வந்து சேர்ந்து, ரைஸ் & ஸ்பைஸில் ராச்சாப்பாடும் ஆச்சு. எனக்கு இடியாப்பம்,தேங்காய்ப்பால்.

ஃபேஸ்புக்கில் அன்னாட சமாச்சாரங்களில் கொஞ்சம்,   தினமும் போட்டுக்கிட்டு இருந்தேன். அதைப் பார்த்த கும்மோணம் தோழி ஒருவர், வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டாங்க. எவ்ளோ நல்ல மனசு! இன்னும் நம்மை நேரில் பார்த்ததுகூட இல்லை. 'ரொம்ப நன்றி. இன்னொரு சமயம் வர்றோம்'னு சொன்னேன்.  மறுநாள் கிளம்பறோம்னு சொன்னதில்  அவுங்களே வந்து நம்மை சந்திக்கறதாச் சொன்னாங்க.

மறுநாள்  காலையில்  கடமைகள் முடிச்சுட்டு, முதலில் போனது நம்ம சக்கரராஜா கோவிலுக்குத்தான்.  மூலவர் தரிசனம் முடிச்சுட்டுப் படி இறங்கும்போது ஒரே தலைசுத்தால். டேஷ் வர்றாப்லே இருக்கு.  தாக்குப்பிடிக்க முடியாதுன்னு தோணுச்சு.  ஆராவமுதனையும்,  சாரங்கனையும், குறிப்பா வீணை வாசிக்கும் ஆஞ்சியையும் மிஸ் பண்ணத்தான் வேணும். 'காலையில் மாத்திரை சாப்ட்டயா? எதுக்கும் அறைக்குத் திரும்பிப்போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு, அப்புறம் போகலாமு'ன்னு 'நம்மவர்'  சொன்னார்.

வந்து கிடந்தேன். இன்னொரு ப்ரெஷர் மாத்திரையும் ஆச்சு. கிடந்தவள் அப்படியே ரெண்டரை மணி நேரம் தூங்கி இருக்கேன். விழிப்பு வந்தப்ப  மணி பனிரெண்டு.  தோழி வரேன்னு சொன்னாங்களேன்னு நினைக்கும்போதே செல்ஃபோன் மணி.  'வந்துட்டேன், அறை எண் எதுன்னு....  '

முதல்முறையா சந்திக்கறோம் என்ற உணர்வே இல்லை.... ம். அப்புறம்னு நேத்துப்பேசின பேச்சை இன்று தொடரும் விதமா....  எல்லாமே ரொம்ப இயல்பா.... போலித்தனம் இல்லாத  பேச்சு !  பிடிச்சுப்போச்சு, பிடிச்சுப்போச்சு....இந்த அன்புக்கு என்ன கைமாறு  செய்ய முடியும் ? 


கீழே போய் அதே ரைஸ் & ஸ்பைஸில் சாப்பாடும் ஆச்சு. தோழி Bala Kumar Pathu அப்படியே  கிளம்பறாங்க. எனக்கு டுவீலர் ஓட்டத்தெரியாதுன்னு சொன்னேன்.  பேலன்ஸ் வராது. விழுந்துட்டா?  அவுங்களோட ஒரு ரைட் போயிட்டு வந்துருக்கலாமுன்னு இப்போத் தோணுது....

சொல்ல மறந்துட்டேனே....  வர்றப்பச் சும்மாவா வந்தாங்க?  பரிசுப்பொருட்களாக் கொடுத்துத் திணறடிச்சுட்டாங்க !
ரெண்டு மணிக்கு நாமும் செக்கவுட் பண்ணிட்டுக் கிளம்பினோம். பெருமாளுக்குத்தான் நம்மைப் பார்க்கக் கொடுத்துவைக்கலை..... மனசில் நினைச்சுக் கும்பிட்டேன். நல்லா இரும் பெருமாளே!

தொடரும்......... :-)

Monday, August 22, 2016

சார்ங்கா சார்ங்கா சார்ங்கா....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 76)

நல்ல உசரமான ராஜகோபுரம்!  தமிழ்நாட்டின்   உயர்ந்த கோபுரங்கள் வரிசையில் மூணாவது இடம்! 146 அடி உயரம். பதினோரு நிலை!  அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கப்போகுதேன்னு  கோபுரவாசலுக்கீடா பந்தல் போட்டு வச்சுருக்காங்க. கோவிலில் விழா ஒன்னு நடந்து முடிஞ்சமாதிரி இருக்கு!  மணி வேற  ஏழு ஆச்சே. எல்லாம் இருட்டோ இருட்டுதான்!  சார்ங்கா சார்ங்கா சார்ங்கான்னு நியான் விளக்கு எழுத்து.............மட்டும் வெளிச்சம் காமிக்குது.
அம்பத்தோரடி உசரக் கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம். தூண்களில் கட்டி வச்ச     வாழைமரங்கள்கூடக் காய்ஞ்சுபோக ஆரம்பிச்சுருக்கு.
 ரெண்டுபக்கமும் வாகனமண்டபமா இருக்கு.  தூரக்கே கொடிமரம். பலிபீடம்,  பெரியதிருவடிக்கான சந்நிதி.   இந்தாண்டை கோசாலை.
கோமளவல்லித்தாயாரின் கோசாலை!
இங்கே(யும்) தாயாருக்குத்தான் பவர் கூடுதல்.  பொறந்த இடமாம்! கும்மோணம் ஹேமரிஷியின் மகள் !  மொதல்லே தாயாரைத் தரிசனம் பண்ணிக்கிட்டுத்தான் ஐயாவையே பார்க்கப்போகணும் என்பதுதான்   இங்கே  நியதி!

நேரா உள்ளே போறோம். அழகான தூண்களுடன் முகமண்டபம்.
பக்தருக்கு வருசாவருசம் திதி கொடுக்கும்  அமுதன்   இவன்!  ஆராவமுதன்! இவ்வளவு பாக்கியம் செய்த பக்தர்  லக்ஷ்மிநாராயணன்  என்பவர். குருதாத்தாச்சாரியாரின் சீடர். பரம ஏழை.  பெருமாள் மீது  அளவுகடந்த அன்பு. இப்போ நாம் கடந்து வந்த ராஜகோபுரம் இவர் முயற்சியால்தான்  கட்டப்பட்டது.

மடப்பள்ளி ஸேவகம். பெருமாளே கதின்னு  கல்யாணம் கட்டாம வாழ்ந்துட்டார்.  கடைசியில் ஒரு தீபாவளி அமாவாசையன்னிக்குப் பெருமாள் திருவடிக்குப்போய்ச் சேர்ந்துட்டார். தனிக்கட்டையா இருந்ததால்  திதி செய்யக்கூடக் குடும்பம் இல்லை. அன்றைக்குப் பட்டர் கனவிலே வந்த பெருமாள்,  என் கையில் இருக்கும் தர்ப்பையை எடுத்துக்கொண்டுபோய் வேண்டியதைச் செய்யும் என்று உத்தரவிட்டாராம்.

மறுநாள் காலை  கருவறையைத் திறந்தால்..........   ஈரவேட்டியும், கையில் தர்ப்பையுமா காட்சி கொடுத்ததாகக் கோவில் புராணம் சொல்லுது! அதேபடிக்குத் தீபாவளி அமாவாசை தினம்  காலை நேரத்தில் கோவில் திறக்கறதில்லை. கோவில் வகையில் தர்ப்பணம்  கொடுத்து முடிச்சப்பறம் உச்சி காலபூஜைக்குக் கோவிலைத் திறந்துடறாங்க.
உத்தராயண வாசல், தக்ஷிணாயவாசல்னு ரெண்டு வாசல்கள்.  தைமாசம் முதல் ஆனி வரை உத்தராயணவாசல். ஆடி முதல் மார்கழிவரை தக்ஷிணாயணவாசல் வழியா வந்து  ஸேவிச்சுக்கணும்.
கோமளவல்லியைக் கல்யாணம் பண்ணிக்கப் பெருமாள் தேரில் வந்து இறங்கினாராம். அதுவும் யானை இழுக்கும் தேர்! அதனால் கருவறைகூட தேர் வடிவத்துலேயே இருக்கு!
ரதவடிவில் கருவறை இருப்பதை திருஎழுகூற்றிருக்கை என்ற வகையில் பாடலாகப் பாடி இருக்கார் நம்ம திருமங்கை ஆழ்வார். ஒன்னுமுதல் ஏழுவரைசொற்களை அமைச்சு மேலேறிப்போய், அங்கிருந்து  ஒவ்வொன்னா கீழிறிங்கி வரும் சொற்களைக் கொண்டு  ஒன்னில் முடிக்கணுமாம்.

 (  'அவ்வையே... எம்மை   ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்திப் பாடுக'ன்னு  நினைவுக்கு வந்துச்சு....   ஐயோ.... எப்பப்பார்த்தாலும் என்ன சினிமா வேண்டிக்கிடக்கு?)
அது எப்படின்னு விளக்கும் விதத்தில் ஒரு  சித்திரம் போட்டு வச்சுருக்காங்க கோவிலில்! கூடவே திருமங்கை பாடிய பாடலும் ஒரு பளிங்குக் கல்வெட்டில். இந்தக் கல்வெட்டுக்கு ஒரு திறப்புவிழாகூட நடந்து இருக்கு 1980 இல்! அதுக்கும் ஒரு கல்வெட்டு!


 ஒவ்வொருபடியா ஏறி படிக்கட்டில் ஏழு படிக்கட்டுகளில் ஒவ்வொன்றாக ஏறிநின்று அப்படிக்கட்டில் உள்ள எண்களால் தொகையிட்டுப் பாடி ஏறுவதும், இறங்குவதுமாகப் பாடுவது எழுகூற்றிருக்கைன்னு  விக்கியண்ணன் சொல்றார்.   இப்படிப் பாடுதல் 96 சிற்றிலக்கிய வகைகளில்  ஒன்னு. 

சைவ வைணவ பேதமில்லாமல் திருமங்கை ஆழ்வார் பெருமாளையும், திருஞான சம்பந்தர், நக்கீர தேவ நாயனார்,அருணகிரிநாதர் ஆகியோர்   முருகனையும்,   இவ்வகையில்  பாடி வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சது.

பனிரெண்டு ஆழ்வார்களில் பேயாழ்வார், பூதத் தாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஏழுவர்  சார்ங்கனைப் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்காங்க.   மொத்தம் அம்பதியொரு பாசுரங்கள்.
கருவறைக்குள் கிடப்பில் இருக்கார் சார்ங்கபாணி என்னும் ஆராவமுதன். உற்சவருக்கும் இதே பெயர்கள்தான். படுக்கையில் இருந்து  லேசா உடம்பை உயர்த்தித் தலையைத் தூக்கிப் பார்க்கும் போஸ்! உத்தான சயனத்தில் இருக்கார். பெருமாளின் பத்துவித சயனக்கோலத்தில் இங்கே மட்டும்தான்  இந்த உத்யோக/உத்தான சயனப்போஸ்.  இந்த போஸில் இருக்கும் சுதைச்  சிற்பத்தை முந்தி ஒரு சமயம்  ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜரைத் தரிசிக்கப்போனபோது வெளியே ஒரு   மண்டபமுகப்பில் பார்த்துருக்கேன்!


திருமழிசை ஆழ்வார் ஒரு சமயம் பெருமாளை தரிசிக்க வர்றார்.  இங்கே  பெரும் ஆள் கிடப்பில்!  சரின்னுட்டு அவரைப் பாட ஆரம்பிக்கிறார்....

இலங்கைமன்ன னைந்தொடைந்து பைந்தலைநி லத்துக
கலங்கவன்று சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனே
விலங்குநூலர் வேதநாவர் நீதியான கேள்வியார்
வலங்கொளக்கு டந்தையுள்கி டந்தமாலு மல்லையே.

கம்னு கிடப்பில் இருந்தபடியே பாட்டைக் கேட்டாறது.  காதுக்குக் கதவு இருக்கா என்ன? இப்படியே அஞ்சு பாசுரம் ஆச்சு. புள்ளி இன்னும் தலையைக்கூட அசைக்கலை. வந்தவரை என்னன்னு கூடக் கேக்கலை.  இன்னும் தன்னைப் புகழ்த்திப் பாடட்டும். கேட்டு அனுபவிக்கலாம் என்ற ஆசை போல!

இன்றையக் காலக்கட்டத்துலேகூடப் பாருங்க.... மேடையிலே    தனக்கு ஆதாயம் தேடிக்கவும், அரசியல்வியாதிகளின் குட் புக்ஸில் இருக்கவும் கொஞ்சம்கூடத் தகுதி இல்லாத தலைவர்களை 'இந்திரனே சந்திரனே'ன்னு வானளாவப் புகழ்ந்து பேசும்  பேச்சுக்களைக் கேட்டபடியே ஒரு கூச்சமே இல்லாம  'தேன் குடிச்ச நரிகளைப்போல'  ஆனந்தமாக் கேட்டுக்கிட்டு  உக்கார்ந்துருக்கும் சிலர் நினைவுக்கு வந்து போறாங்க...ப்ச் :-(

திருமழிசை பாவம்.....  அவருக்குப் பெருமாள் மேல் பக்தி என்பதைத்தவிர  அவரிடம் ஆதாயம் தேடிக்கணும் என்ற ஆசை எல்லாம் இல்லாத அப்பாவி.
கால் வலின்னு ரொம்ப முடியாமல் படுத்துக்கிடக்கறார் போல....  அதானே உலகை மூவடியால் அளந்த காலத்துலே  உமக்கு நிறைய  கால்வலி வந்து கஷ்டமாப் போயிருக்கும்.  பூமாதேவியை அரக்கன் கொண்டுபோய் பாதாளத்துலே ஒளிச்சு வைச்சபோது, தேடிக்கொண்டு  பூமியைக் கால்களால் தோண்டிக்கொண்டு போனதில் கால்களுக்கு ஏகப்பட்ட வலி வந்துருக்குமே....  சீதையைப் பறிகொடுத்துட்டுத் தேடி  எங்கெல்லாமோ அலைஞ்ச கால்கள் நொந்து போய்க்கிடக்குதோ...  அதான்  மலைகளையும் பாலை நிலங்களையும் கடந்து ஓடி வர்ற  காவிரிக் கரையிலே இந்த இடத்துலே வந்து கொஞ்சம் படுத்து,  சிரமபரிகாரம் செஞ்சுக்கிட்டு இருக்கும் நீர், 'கிடந்தவாறெ ழுந்திருந்து பேசு(ம்) என்றார்.

நடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞால மேனமாய்
இடந்தமெய்கு லுங்கவோவி லங்குமால்வ ரைச்சுரம்
கடந்தகால்ப ரந்தகாவி ரிக்கரைக்கு டந்தையுள்
கிடந்தவாறெ ழுந்திருந்து பேசுவாழி கேசனே.

சட்னு  தலையைத் திருப்பி,  உடம்பை உயர்த்திப் பார்க்கிறார் சார்ங்கன் என்னும் வில்லை ஏந்தியவர்! சார்ங்கபாணி!

ஆஹா...  உம்மால் முடியும்!  இனி இப்படியே இருந்து பக்தர்களுக்கு அருள்புரியவேணும்னு வேண்டுகோளும் வைக்க, அதன்படியே ஆச்சு!
பாவம். இனி இப்படியே போஸ் கொடுத்து இடுப்புவலிதான் கேட்டோ!  நல்லா செக் வச்சுட்டார்ப்பா பெரும்  ஆளுக்கு :-)
கருவறையில் தீபாரதனை காமிச்சு, தீர்த்தம், சடாரி கிடைச்சது. சந்தானகோபாலன்    இருக்கார்.

ப்ரகாரம் சுற்றி வர்றோம்.  சொர்க்கவாசல் இல்லாத கோவில்! டைரக்ட்டா சொர்கத்தில் இருந்து  புறப்பட்டு இங்கே வந்துட்டதால்  இவரை க் கும்பிட்டாலே நமக்கும் டைரக்ட்டா சொர்கம்தானாம்!  ஆமென்!
இந்த சார்ங்கபாணி கோவிலுக்குப்போய் வரலாமுன்னு  நினைச்சுக்கிட்டு வீட்டு வாசலில் இருந்து ஒரு அடி எடுத்து வச்சாப் போதுமாம்!  போய்வந்த பலன் கிடைச்சுரும். வைகுண்டத்துலே ஒரு இடம் நமக்கு  ரிஸர்வ்டு னு பெரியவங்க சொல்றாங்க!

காலை 7 முதல் 12.30 வரையும்,  மாலை 4 முதல் 8 வரையும் கோவிலைத்  திறந்து வைக்கறாங்க.


பாதாள சீனிவாசர்னு ஒரு சந்நிதி இருக்கு! எதுக்கு இப்படி பாதாளத்துலே ஒளிஞ்சுக்கணும்?
தேவலோகத்துலே ஒரு பெரிய யாகம் நடத்தப்போறாங்க.  யாருக்கு அங்கே முதல் மரியாதை கொடுக்கலாமுன்னு விவாதம். மும்மூர்த்திகளில் யார் சாந்தமான குணம் உள்ளவரோ  அவருக்கு முதல் ஆஹூதின்னு முடிவாச்சு.

   அந்த சாந்தமான சமாதானப்புறா யார்னு  கண்டுபிடிக்கணுமே!  அதுக்கு ப்ருகு முனிவரைத் தேர்ந்தெடுத்து , 'நீர் போய் யார் சாந்தன்னு தெரிஞ்சுக்கிட்டு வாங்கோ'ன்னு அனுப்பறாங்க.

முதலில் ப்ரம்மா, அப்புறம் சிவன் னு ரெண்டுபேரும் இவர் வச்ச டெஸ்ட்லே ஃபெயில் ஆகிட்டாங்க.  என்ன கதைன்னு தெரியலையே.......    கொஸ்டின் பேப்பர் அவுட் ஆகாததால் எனக்கும் தெரியலை போங்க...  தெரிஞ்சவங்க சொன்னால் கேட்டுக்குவேன்.

மூணாவதா மஹாவிஷ்ணுவாண்டை  வர்றார். அப்போ திருப்பாற்கடலில் ஹாயாப் படுத்துக்கிட்டு இருக்கும்  மஹாவிஷ்ணுவும்,  கணவன் காலை அமுக்கி விட்டுக்கிட்டு இருக்கும்  மஹாலக்ஷ்மியும்  தனிமையில் சுவாரசியமா பேசிக்கிட்டு இருக்காங்க. முனிவர் வந்து நின்னார். அவரைக் கவனிக்காமல் இங்கே பேச்சு தொடர்ந்துக்கிட்டு இருக்கு.

முனிவருக்குக் கோபம் வந்துருச்சு!  'எம்மாநேரமா இங்கே நிக்கிறேன்.  வந்தவனைக் கவனிக்காமல் அப்படி என்ன பேச்சு'ன்னு  மஹாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைச்சார்.  சட்னு அவர் பாதத்தைப் பிடிச்ச பெருமாள், 'ஐயோ....  உங்க பாதம் நோகுமே....'ன்னு விசாரிச்சதும் கோபம் பொசுக்னு போயிருச்சு.  இவர்தான் ரொம்ப சாந்தமான சாமின்னு  சர்ட்டிஃபிகேட் கொடுத்துட்டு  மகரிஷி கிளம்பிப் போயிட்டார்.
அவர் அந்தாண்டை போனதும் இங்கெ குடும்பச் சண்டை ஆரம்பிச்சது. 'நீர் ஆனானப்பட்ட   பெரிய ஆள்னு நினைச்சேன். ஆனால் உம்மை ஒருவர் எட்டி உதைக்க இடம் கொடுத்துட்டீரே. அதுவும் நான் எப்போதும் உறைந்திருக்கும் திரு மார்பில்! என்னையே நேரடியா உதைச்சவரை தண்டிக்காம சும்மா விட்டுருக்கலாமா? இது எனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம். இதைத் தாங்கிக்கிட்டு என்னால் உம்மோடு குடித்தனம் நடத்தமுடியாது'ன்னு விடுவிடுன்னு கிளம்பிப்போய்   பூலோகத்துக்கு வந்துட்டாங்க.

வந்தவங்க ச்சும்மா  இருக்கமுடியாம கொல்லாபுரத்துக்குத்  தவம் செய்யப்போயிட்டாங்க. இதை எழுதுனப்ப நம்ம அமைதிச்சாரல் வந்து இப்படிச் சொல்லிட்டுப் போனாங்க!!!

அப்படி வந்து தவம் செஞ்ச இடம்தான் கோலாப்பூர். இங்கே மஹாலக்ஷ்மிக்கு கோவிலும் இருக்கு. ரொம்பவும் பிரசித்தி வாய்ஞ்சதும்கூட. சீனிவாசன் படும் துன்பத்தைக் காணச்சகிக்காம நாரதர் லக்ஷ்மியைத் தேடிக்கண்டு பிடிச்சு விவரத்தைச் சொல்ல, சமாதானமான லக்ஷ்மி தாமரையில் குழந்தையாக அவதரிச்சாங்கன்னு சொல்லுவாங்க. (சாந்தியின் அருள் வாக்கு!)


அப்புறம் அந்தக் குழந்தை ராஜா வீட்டுலே பத்மாவதி என்ற பெயரில் வளர்ந்து  ஸ்ரீநிவாசனைக் கல்யாணம் கட்டி, ஒரு கருவேப்பிலை இல்லாததால்  திருச்சானூர்லே  தனியா உக்கார்ந்துருக்கறது நம்ம துளசிதளத்தில்  இதே தொடரில்தான்    வந்துருக்குன்றது கூடுதல் தகவல்:-)
இது இப்படி இருக்க,  ஒரிஜினல் மஹாலக்ஷ்மி,  ரொம்பநாளாச்சே... அவரைப் பிரிஞ்சு வந்து.... எப்படி இருக்காரோ என்னமோன்னு அவரைத் தேடப்போக....  இப்படி திருப்பதியில்  குபேரன்கிட்ட வாங்குன  கல்யாணக்கடனை அடைக்கமுடியாமல் நிக்கறாருன்னு சேதி கிடைச்சு அவரைப்பார்க்கத் திருப்பதிக்கு (கையில்  லாட்னாவோடு) புறப்பட்டுப் போறாங்க.

என்னதான் சாமியா இருந்தாலும்  சின்ன வீடுன்னு வச்சுக்கிட்டா.......?  புள்ளிக்குப் பயம் வந்து ஓடி ஒளிஞ்சுக்கிட்டது  இங்கே இதே  பாஸ்கர க்ஷேத்ரத்தில்தான். பாதாளத்துலே ஒளிஞ்சுக்கிட்டால் கண்டுபிடிக்க முடியாதாம்... ஹஹா... :-)))))

இங்கே  கோமளவல்லியுடன் கல்யாணம் முடிஞ்சதும் மேட்டு ஸ்ரீநிவாசரா தனிச்சந்நிதிக்கு  வந்துட்டார்.

திருவஹீந்தபுரம் தேவநாதப்பெருமாள் கோவிலில் கூட   தரையில் இருந்து இறங்கும்  பள்ளத்தில் ஒரு பெருமாளைப் பார்த்த நினைவு இருக்கு. கோவில் மூடிடப்போறாங்களே என்ற அவசரத்தில்     நான் வேறெங்கெயோ  மும்முரமா க்ளிக்கிக்கிட்டு இருந்தப்ப, சீக்கிரமா வந்து பாருன்னு நம்மவர் கூப்பிட்டுக் காண்பிச்ச ஞாபகம்.  அது எதுக்கு ஒளிஞ்சுருக்கார்னு தெரியலை.  அந்தக் கோவிலை நல்லாப் பார்க்காத குறை இருக்கு.  பார்க்கலாம்...இன்னொரு ச்சான்ஸ் கொடுக்கறாரான்னு! 

மண்டபத்தூண்களில் ஏராளமான அபூர்வ சிற்பங்கள் இருக்கு. ஆனால் நாம் போன நேரம் சரியில்லை.  மேலும் படம் எடுக்க கட்டணம் கட்டி ரசீது வாங்கிக்கலாமான்னு  பார்த்தால்....   ஆஃபீஸ் மூடிக்கிடக்கு.
சார்ங்கபாணி கோவிலைத்தான் சாரங்கபாணி கோவில்னு சொல்லிக்கிட்டு இருக்கு சனம். கோவில் வகையில் எழுதி வச்சுருப்பதிலும் சில இடங்களில் சாரங்கதான் !!!!       பொதுவா அந்தக் காலத்துலே ஊரில் இருக்கும் முக்கியமான கோவில் சாமி பெயரையே, வீட்டுலே குழந்தைகளுக்கு வைக்கிற  பழக்கம் உண்டு. அதை அனுசரிச்சு சாரங்கபாணின்னு  பெயர் வச்சுருக்காங்க பலருக்கும்.  அப்பப்  பெண்  குழந்தைன்னா?  கோமளா, கோமளவல்லி.....   நம்ம பூனா எபிஸோட்  மாமிகூட கோமளா மாமிதானாக்கும். தாயைப்போல் என்னிடம் பரிவு காட்டிய அந்தக்கும்பகோணம் கோமளா மாமி....  மாமி ஐ மிஸ் யூ..... :-(

கோவிலின் ராஜகோபுரத்தில்  பரதநாட்டிய முத்திரைகளும், நூத்தியெட்டுக் கரணங்களுமா சிற்பங்கள்  இருக்குன்னு கேள்வி. போறபோக்குலே க்ளிக் பண்ணும் கண்களுக்கு இதையெல்லாம் கண்டுபிடிக்கிறது கஷ்டம்:-(   ஒன்னா ரெண்டா... லட்சக் கணக்குலே சிற்பங்கள் இடம்பிடிச்சுக்கு இந்த பதினோறு நிலைகளில்.  விவரம் தெரிஞ்ச உள்ளூர்க்காரர்களோ, இல்லை  ஒரு கைடோ  கிடைச்சால்  தேவலை.   வேலை இல்லாமல் ச்சும்மாச் சுத்திக்கிட்டு இருக்கும் இளைஞர்கள் நல்ல வேலை கிடைக்கும்வரை இதை ஒரு  ஸேவையாச் செஞ்சு நாலு காசு பார்க்கலாம், இல்லே?

இந்தப் படம் ஏழு வருசத்துக்கு முன்னால் போன பயணத்தில் எடுத்தது.
வெளியே ப்ரகாரம் சுத்தி வரும்போது ஒரு சந்நிதியின் படிக்கட்டுகளில்  சில நோட்டுப்புத்தகங்களை வச்சுப் படிச்சு எழுதிக்கிட்டு இருந்தார்.  என்னன்னு தெரிஞ்சுக்காட்டி எனக்குத் தலை வெடிச்சுடாதா?
தமிழாசிரியர்.  பெயர் ஜானகிராமன்.  பள்ளிக்கூடத்துலே நாளைக்கு நடத்தவேண்டிய பகுதிகளுக்கு நோட்ஸ் ஆஃப் லெஸன் எழுதறாராம். அரசுப்பள்ளி ஆசிரியர்தான்.  முதலில் ஆசிரியர் படிச்சு வச்சுக்கிட்டாத்தானே பிள்ளைகளுக்கு நல்லபடியாச் சொல்லித்தரமுடியும்? எனக்குள்ளே இருக்கும் டீச்சருக்கு ஆனந்தம் தாங்கலை. அவரோடு பிள்ளைகளின் கவனம், படிப்பின் தரம் எல்லாம் கொஞ்சம் பேசிட்டுத்தான் கிளம்பினேன்:-)


ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமைதிக்குக் கேட்பானேன்!

 கும்மோணத்துக் கொசுக்களுக்குத்தான் கொண்டாட்டம்! நானும் ராமர் சந்நிதியில்  ரெண்டு நிமிட் உக்கார்ந்துட்டு வந்தேன்:-)


இன்றைக்கு மட்டும் இந்தக் கோவிலோடு சேர்த்து 26 கோவில்களுக்குப்போய் இருக்கோம்.  நம்ம பயணவரலாற்றில் இது ஒரு ரெக்கார்ட் !


ராயாஸ்க்குத் திரும்பியதும்தான்  காலுக்கு வலி தெரிய ஆரம்பிச்சது.  ஒருவழியா ராச்சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுக் கட்டையைக் கிடத்தணும்.
எனக்கு இட்லி, நம்மவருக்குப் பரோட்டா. நம்ம சீனிவாசன் வேறெங்கேயோ  சாப்பிடப் போறேன்னார்.





மத்யானம் இங்கே ஹொட்டேலுக்கு வந்து சேரும்போதே கரிடார் ஜன்னலில்
எதிரில் இருக்கும் மஹாமகக்குளம் சுத்தம் செஞ்சு  தண்ணீரை எல்லாம்  எடுத்துட்டு  வட்டவட்டமா  நீலக்கலரில் என்னவோ வச்சுருந்தாங்க.  உறை போல இருக்கு!  எது என்ன தீர்த்தம் என்ற போர்டும் வச்சுக்கிட்டு இருந்தாங்க.  செல்லில் கொஞ்சம் க்ளிக்கி வச்சேன்.  படங்கள் சரியா வரலை :-(

இப்ப எட்டிப் பார்த்தேன்.  கொஞ்சம் தண்ணி  வந்துருக்கு. கொண்டுவந்து  குளத்தை நிரப்பறாங்களோ என்னவோ!


ஆச்சு. நாளைக்கு எங்கே போறோம்? பார்க்கலாம் :-)

தொடரும்............  :-)