நியூஸியும் ஆஸியும் தனித்தனியான சுதந்திர நாடுகள்தான் என்றாலும்.... எங்களுக்குப் பெரிய தலை என்னவோ ப்ரிட்டிஷ் ராஜாங்கம்தான். ரொம்ப வருஷமா மாட்சிமை தாங்கிய மஹாராணின்னுதான் எழுதிக்கிட்டு இருந்தேன். இப்ப சில வருஷங்களாத்தான் ராஜா ஆட்சியில்.... எங்க ரெண்டு நாடுகளுக்கும் கவர்னர் ஜெனரல்தான் சின்னத்தலை. அதனால் எல்லாத்துக்கும் முன்னொட்டாக ராயல் சேர்ந்தே இருக்கு. ராயல் ஆர்மி, ராயல் நேவி, ராயல் ஏர்ஃபோர்ஸ் இப்படி. எஸ்பிசியே கூட ராயல் எஸ்பிசியேதான்னா பாருங்க !
இந்த மெல்பர்ன் ஊரே ஹிஸ்டாரிக் ப்ளேஸ் லிஸ்ட்டில் வருது! பல கட்டடங்களையும் ஆரம்பகாலப் பழமை மாறாமல் திரும்பத்திரும்ப அதே மாதிரி புதுப்பிச்சுக்கிட்டே இருக்காங்க. சரித்திரத்தோட அருமை தெரிஞ்சால்தான் இப்படியெல்லாம் நடக்கும்.
நாம் இன்றைக்கு இங்கேயிருந்து கிளம்பறோம். கடைசிநாள் ரொம்பக் கஷ்டப்படாமல் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கணும். நாளை ஊர்போய்ச் சேர்ந்தால் காத்திருக்கும் வேலைகளை நினைச்சால் பகீர்னு இருக்கு !
இங்கே பார்க்கவேண்டிய 'முக்கிய' இடங்கள்னு மகள் பட்டியல் அனுப்பிக்கிட்டே இருக்காள். படிச்ச படிப்பை (ட்ராவல் & டூரிஸம் ) வீணாக்காமல்.... ஒரு வருஷம் வேலை பார்த்துட்டு, வேற லைனுக்கு மாறிட்டாள். காலையில் அனுப்பிய செய்தி, 'ராயல் ஆர்கேட் பார்க்க மறக்க வேணாம் ! அம்மாவுக்கு ரொம்பப்பிடிக்கும்!' (கொக்கி!!)
நாங்கள் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுக்கிட்டு, பொட்டிகளையெல்லாம் பயணத்துக்குத் தயாரா அடுக்கி வச்சுட்டுக் கீழே போனோம். ஏற்கெனவே லேட் செக்கவுட் கேட்டுருந்தோம். எவ்வளவு நேரம் வேணும் ? அட!!!! பரவாயில்லையே.... எவ்வளவு நேரமுன்னு கேட்டுக் கொடுக்கறாங்களே ன்னு ஆச்சரியத்துடன் திறந்த வாயை மூடுமுன், மணிக்கு இருவது டாலர்னு சொன்னாங்க. (அதானே பார்த்தேன் ! ) நம்ம ஃப்ளைட் சாயங்காலம் ஏழுக்கு சமீபம். பகல் மூணுவரை போதும்தானேன்னவர் காசைக் கட்டினார். கருமியான எனக்குக் கொஞ்சமாக் கோவம் வந்தது உண்மை. இப்பப் பதினொன்னே கால் ஆகுது.... பெட்டிகளை கீழே கொண்டுவந்து concierge இல் கொடுத்துட்டு, நாம் போய் கொஞ்சம் சுத்திப்பார்த்துட்டு லஞ்சை முடிச்சுக்கிட்டு வந்தால் போதாதா ? என்னவோ போங்க.....
இன்னொரு முக்கிய சமாச்சாரம் சொல்ல மறந்துட்டேனே.....இந்த 4 Star ஹொட்டேலில், நம்ம படுக்கை விரிப்புகளைத் தினமும் மாற்ற மாட்டாங்களாம். முதல் நாள் கழிஞ்சு மறுநாள் நாம் வெளியே போய்வந்து பார்த்தால் படுக்கை நாம் விட்டுட்டுப் போனதுபோலவே இருக்கு! பாத் ரூமில் ஈர டவல்கள் ! கீழே ஹௌஸ் கீப்பிங் செக்ஷனுக்குப் ஃபோன் போட்டால்.... ஒரு பணியாளர் வந்து மாத்தி, அறையைச் சுத்தம் செஞ்சுட்டு, சமாச்சாரத்தைச் சொல்லிட்டுப் போனார். இங்கே மூணுநாளைக்கொருமுறைதான் அறையைச் சுத்தம் செஞ்சு படுக்கை விரிப்பை மாத்தி, பாத்ரூமைச் சுத்தப்படுத்தி டவல்ஸ் எல்லாம் மாத்துவாங்களாம் ! அடராமா...... படுக்கை விரிப்பை மாத்தலைனாக்கூட பரவாயில்லை. நாம் நம்ம வீடுகளில் தினமுமா மாத்தறோம் ? ஆனால் அறையையும் பாத்ரூமையும் சுத்தம் செஞ்சு , ஈரட்டவல்களை மாத்தணுமா இல்லையா ? எவன் இதுக்கு நாலு நக்ஷத்திரத்தை வாரி வழங்கினான்!!!!!
தினமும் பாத்ரூம் சுத்தம் செஞ்சு டவல்களைக் கட்டாயம் மாத்தணுமுன்னு சொல்லியனுப்பினோம்.
பேரனுக்கு சம்மர் சீஸன் உடைகள் கொஞ்சம் வாங்கிக்கலாம்னு அதே டேவிட் ஜோன்ஸுக்குள் நுழைஞ்சாச்சு. கடைகளைப் பார்த்தாலே இப்ப அலுப்பா இருக்கு. இந்த சீஸனில் இதுதான் ஃபேஷன் ஃபேஷன்னு கடைகளில் கொட்டிக்கிடப்பவைகளைப் பார்த்தால் கொஞ்சம்கூட எனக்குப் பிடிக்கலை.....
நம்மவர்தான் மூணு செட் பேரனுக்கு வாங்கினார். விலை வேற ஆஸிக்கும் நியூஸிக்கும் ஒரே விலை! இதையே நம்மூரில் வாங்கினால் 10% குறைவு. இவுங்க டாலருக்கு , எங்களுதைவிட கொஞ்சம் பலம் அதிகம்.
கடையை விட்டு வெளியே வந்தால் பொர்க் தெரு. கண்ணெதிரே ராயல் ஆர்கேட். நேத்து ரோடோரம் பெஞ்சுலே உக்கார்ந்துருந்தோமே.... அதே இடம் ! மணி இப்போ பதினொன்னரை. நல்ல பிஸியான நேரம். மக்களை மகிழ்விக்கத் தெருப்பாடகர் ஒருவர் இசைக்கருவிகளுடன் பாடிக்கிட்டு இருக்கார். (One man Band ) ட்ராம் ஒன்னு நிக்குது..... அது கிளம்பினதும் நாங்கள் தெருவைக்கடந்து அந்தாண்டை ராயல் ஆர்கேடுக்குள் போனோம்.
மெல்பர்ன் நகரின் முதல் ஆர்கேட் இது. இந்த நகரமே 1835 லேதான் உருவாச்சு. ரெண்டு வருஷம் ஆனதும்..... யாரோ வளைச்சுப்போட்டு வச்சுருந்த ஒரு நிலத்தை, ஜோஸஃப் மூர் என்றவர் 20 பவுண்டு காசைக்கொடுத்து வாங்கிப்போட்டார். நகரில் முதல் விற்பனை. ஒரு பதினெட்டு வருஷம் அப்படியே போட்டுவச்சுருந்த இடத்தை, 1855 லே 650 பவுண்டு கொடுத்து Simon Staughton என்பவர் வாங்கினார். எப்படி இடத்தின் மதிப்பு கூடியிருக்கு பாருங்க ! அசையாச் சொத்துக்கு மதிப்பு கூடிக்கிட்டேதான் போகும், இல்லே ? இவரும் வாங்குன இடத்தை என்ன செய்யலாமுன்னு தெரியாம பதிமூணு வருஷம் அப்படியே போட்டுவச்சுருக்கார். (யோசிச்சுக்கிட்டு இருந்திருப்பாரோ ! )
ஆர்கேட் ஒன்னு கட்டி வாடகைக்கு விடலாமுன்னு 1869 ஆம் வருஷம், கட்டடவேலையை ஆரம்பிச்சு 1870 லே அப்போ மெல்பர்ன் மேயரா இருந்தவர் வந்து திறந்துவச்சுருக்கார். எந்த டிஸைனில் கட்டலாம் என்றதுக்குப் பரிசுப்போட்டி எல்லாம் நடத்தியிருக்கார்னா பாருங்க. சார்லஸ் வெப் என்றவர் வரைஞ்சு கொடுத்த டிஸைன்தான் ஜெயிச்சுருக்கு !
இந்த சார்லஸ் வெப், ப்ரிட்டனில் இருந்து 1849 வருஷம் மெல்பர்ன் வந்துருக்கார். சிவில் எஞ்ஜீனியர். வந்த மறுவருஷமே மெல்பர்னில் ஒரு சர்ச் (செயின்ட் பால்ஸ் கதீட்ரல்) கட்டும் வேலைகிடைச்சு அருமையாகக் கட்டிக்கொடுத்திருக்கார். நாம் தங்கியிருந்த ஏரியாதான். போயிருக்கலாம். ஆனால் போக வாய்ப்பில்லாமல் போச்சு. அதுக்கப்புறம் டவுன்ஹால், வெஸ்லி காலேஜ், வின்ட்ஸர் ஹொட்டேல்னு பதினேழு முக்கிய கட்டடங்கள் கட்டி, சரித்திரத்தில் இடம் பிடிச்சுட்டார் !
நல்ல அலங்காரத்துடன் நீளமாகப் போகுது கட்டடம். பொதுவா இருக்கும் கடைகளாக இல்லாமல் ஸ்பெஷாலிட்டி ஷாப்ஸ் என்ற வகையில் முக்காலும் ஹேண்ட் மேட் பொருட்கள் ! பார்க்க அழகுதான்..... நம் கண்களுக்குக் கலர்ஃபுல் விருந்து! ஆனால் விலை?????
நீண்டுபோகும் அடுத்த பகுதியில் ஒரு கடிகாரமும், அதுக்கு ரெண்டுபக்கமும் ஏழடி மனுஷர்களும்! Gog & Magog என்று பெயர்கள். இவுங்க ரெண்டுபேரும் பாதாளத்தில் இருக்கும் கடவுளருக்குக் காவலாளிகளாம். ஹிஸ்டாரிக் ஃபிகர்னு சொல்றாங்க!
இந்த கடிகாரம்,( Gaunt's Clock )ஆர்கேட் கட்டி 22 வருஷங்களுக்கு அப்புறம்தான் ஆர்கேடு சுவரில் இடம்பிடிச்சுருக்கு ! இந்த ஊருலே நான் பார்த்தவரை அங்கங்கே மணிக்கூண்டுகள் நிறையவே இருக்கு. அந்தக் காலத்துலே கைகடிகாரம் பரவலா இருந்திருக்காது..... இல்லே ? நம்மூர் போல சூரிய கடிகாரம் எல்லாம் இங்கே வேலைக்காகாது. வெயில் காலத்துலே காலையில் நாலே முக்காலுக்கு உதிக்கும் சூரியன் மாலை ஒன்பதரைக்குப் பக்கம்தான் மறையும். கடுங்குளிர் காலத்துலே எட்டுக்குப் பொழுது விடிஞ்சு, சாயங்காலம் அஞ்சுக்கே இருட்டிரும். ப்ச்.....
இந்த கடிகாரத்துலே ஒரு விசேஷம் என்னன்னா..... ஒவ்வொரு முழுமணி ஆகும்போதும் அந்த Gog & Magog ம் அவுங்க கையாண்டை தொங்கும் வெங்கல மணிகளை கையில் வச்சுருக்கும் உலோகக் கம்பியால் அடிக்கிறாங்க. அந்த மணியோசையின் ரீங்காரம்.....கட்டடம் முழுக்க அப்படியே பரவுமாம்! (பாருங்க 'மாம்' னு எழுதியிருக்கேன். ) நாம் அங்கே நின்னுருந்தபோது மணி பனிரெண்டடிக்கப் பத்து நிமிட் பாக்கி இருந்தது.......... நான் நம்மவரைப் படமெடுத்துக்கிட்டு இருந்தேன். க்ளிக் ஆனதும், இந்தாண்டை இருந்த பெண்மணி ஒருவர், நீங்க ரெண்டுபேரும் ஒன்னா நில்லுங்க நான் க்ளிக்கித்தாரேன்னாங்க. நான் செல்ஃபோனை அவுங்ககிட்டே கொடுத்துட்டு, வாங்க நாம் அங்கே போய் நிக்கலாமுன்னு சொல்லிக்கிட்டே திரும்பிப்பார்க்கிறேன்........ நம்மவரைக் காணோம் !
பார்வையை அனுப்பினால்...... வேடிக்கை பார்த்துக்கிட்டே மனுஷர் விடுவிடுன்னு அடுத்த தெருவுக்குப்போகும் வாசலுக்குப் போய்க்கிட்டு இருக்கார். (இதுதான் கூடவே வர்ற லக்ஷணம்) இப்ப நான் என்ன செய்யறது ? இந்தக் காலை வச்சுக்கிட்டு ஓடிப்போய் நிறுத்த முடியுமா ? ஃபோன் வேற அவுங்க கையிலே! நமக்காகக் காத்திருக்காங்க அவுங்க.... கத்திக்கூப்பிட்டால் எல்லோரும் திரும்பிப் பார்க்க மாட்டாங்களா ? எந்தொரு ஸல்யம் !
நான் கையை நீட்டும் திசை பார்த்துட்டு, அந்தப் பெண்மணிகூட இருந்தவர் ஓடிப்போய் நம்மவரைப் பிடிச்சார். ஒரு நிமிட்தான் ஆகியிருக்கும் அதுக்குள்ளே ஒரு அம்பது மீட்டர் போயிருக்கார்.....
அப்புறம் 'அசடு' வழிய வந்து சேர்ந்தார். எல்லோருக்கும் ஒரே சிரிப்பு !
தொடரும்........... :-)

.jpg)





















0 comments:
Post a Comment