இங்கே போகணும் அங்கே போகணும் னு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் மெல்பர்னுக்கு வந்துருக்கேன். அதனால் காலையிலேயே எழுந்து ஓடவேண்டாமேன்னு நிதானமாவே அறையிலிருந்து பத்தேகாலுக்குத்தான் கிளம்பினோம். மகள், இங்கே பார்க்கவேண்டிய இடங்கள்னு ஒரு லிஸ்ட் அனுப்பியிருந்தாள். இலவச ட்ராம் சர்வீஸ் இருக்காம். அதுலே போய்ச் சுத்திப்பாருங்கன்னாள்.
நேத்து லஞ்சுக்காக எலிஸபெத் தெரு போகும்போதே ட்ராம்கள் நடமாட்டம் பார்த்தேன். நல்லா இருக்கேன்னும் நினைச்சேன்.
பொதுவா அஸ்ட்ராலியான்னு இப்ப நாம் சொல்லும் எங்கள் அண்டை நாட்டில் முதல்முதலில் காலடி எடுத்துவச்சது டச்சு மக்கள்தான். ஏபெல் டாஸ்மன் என்ற கடலோடி, 1644 ஆம் வருஷம் இங்கே முதலில் வந்துருக்கார். (இதுக்கு ரெண்டு வருஷத்துக்கு முன்னேயே நியூஸிப் பக்கமாவும் வந்துட்டுப் போயிருக்கார் . ) டச்சு நாடும் உலகம் சுத்திக்கிட்டு, எங்கே நல்ல இடம் கிடைக்குமோ.... அங்கே காலனி ஆரம்பிச்சுக்கிட்டுத்தான் இருந்தது அந்தக் காலத்துலே.
புதுசாக் கண்ணில்பட்ட இடத்துக்கு நியூஹாலண்ட் னு பெயரும் வச்சுருக்கார். இந்த வெள்ளைக்காரர்களுக்கு ஒரு வழக்கம் என்னன்னா.... புதுசா ஒரு இடத்தைப் பிடிச்சால். அதுக்கொரு பெயர் வைக்க மெனெக்கெட மாட்டாங்க. அவுங்களுக்குப் பரிச்சயமான பெயரில் முன்னால் ஒரு 'நியூ" சேர்த்துக்கிட்டால் ஆச்சு. அம்புட்டுத்தான் !
ஒரு முன்னூறு நானூறு வருஷங்களுக்கு முன்னால் உலகம்னு ஒன்னு இருக்குன்றதுகூட மக்களுக்குத் தெரியாது. அவுங்கவுங்க இருக்குமிடம்தான் உலகமுன்னுகூட நினைச்சுருக்கலாம். ஒருவேளைத் தெரிஞ்சுருந்தால் உலகம் ரொம்பவே பெரூசுன்னும் எண்ணம் இருந்துருக்கும். போக்குவரத்து வசதிகள் ஒன்னுமே இல்லாத காலங்கள்தானே ! இப்ப உலகம் எவ்வளவோ சுருங்கிருச்சு. ஐ மீன் இடங்கள் சுருங்கலை. அதது அங்கங்கே அப்படியேதான் இருக்கு. ஆனால் எங்கோ நடக்கறதை அடுத்த அஞ்சாவது நிமிட்லே நாமெல்லாம் தெரிஞ்சுக்கும் விதமா விஞ்ஞான அற்புதங்கள் எல்லாம் வந்துருச்சுல்லே !
இந்த ஏரோப்ளேன் கண்டுபிடிச்சு, அதை பொதுமக்கள் பயணம் போகும் விதமா மாத்துனது என்னமாதிரி சமாச்சாரம்! நாங்க உலகின் தென்கோடியில் இருக்கோம். வடகோடிக்கு ஒரு இருவது மணி நேரத்துலே போகமுடியுது ! எங்கேயும் இடையில் நிறுத்தாம இன்னும் ரொம்ப வேகமாப் போறதுக்கான ஆராய்ச்சிகள் எல்லாம் முடிவே இல்லாமல் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆகாயத்துலே மிதக்கற நிலாவுக்கே போய்வர ஆரம்பிச்சாச்சு பாருங்க. !
எங்கியோ ஆரம்பிச்சு.... எங்கியோ போயிட்டேன்..... மன்னிச்சூ...........
நியூ ஹாலண்டை, ஒரு காலனியாக ஆக்கிக்காம அப்படியே விட்டுட்டுப்போனதுக்கு டச்சு மக்கள் சொன்ன காரணம் அங்கே , ஒரே மொட்டை நிலம், வெறும் பாலைவனம்தான், தண்ணியே கிடையாது... மனுஷன் வாழ்வதற்கு லாயக்கில்லை !! அவுங்க முதலில் பார்த்தது ஆஸியின் மேற்குப்பகுதிதான் !
ஆனால் தொலைதூரத்துலே ஒரு இடம் 'யாருமில்லாம'க் காலியா இருக்குன்ற விவரம் பரவாமலா இருந்துருக்கும் ?
கேப்டன் ஜேம்ஸ் குக், 1770 ஆம் வருஷம், ஆஸியின் கிழக்குப்பகுதிக்கு வந்து சேர்ந்தார். 'அட ! நல்ல இடமா இருக்கே'ன்னு போய் ப்ரிட்டிஷ் அரசுகிட்டே சொல்லி 'அது நம்ம இடமு'ன்னு அவுங்களே சொல்லிக்கிட்டாங்க. அந்தக் காலங்களில் குற்றவாளிகளால் ப்ரிட்டன் சிறைகள் நிரம்பி வழிஞ்சுக்கிட்டு இருக்கவே........... ( இந்தியாவுக்கு அந்தமான் போல ) கேப்டன் ஆர்தர் பிலிப் தலைமையில் 1400 குற்றவாளிகளைப் பதினோறு கப்பலில் ஏத்திக்கிட்டு , கிட்டத்தட்ட எட்டரை மாசம் பயணம் செஞ்சு , 'பாட்டனி பே' (கேப்டன் குக் , பெயர் வச்சுட்டுப்போன) இடத்துக்கு வந்து சேர்ந்தாங்க. ஜனவரி மாசம் 26 ஆம் தேதி, 1788 வது வருஷம். முதல்வேலையா ப்ரிட்டன் கொடியைக் கொண்டுவந்து நட்டாச்சு ! நட்டாச்சுல்லே.... இந்த இடம் இனிமேப்பட்டு ப்ரிட்டிஷாருக்குச் சொந்தமானது ! இந்த நாளைத்தான் இப்பவும் அஸ்ட்ராலியன் டேன்னு அரசு விடுமுறை விட்டுக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க.
குற்றவாளிகள் குடியேறின அந்த 'பாட்டனி பே' தான் இப்ப சிட்னி ! போகட்டும்..... மக்கள் வளம் பெருகி நாடும் உருவாகி, இப்போ ரொம்பப் புகழ்வாய்ந்த நாடாக மாறிப்போச்சுல்லே ! அந்த நியூஹாலண்ட் என்னும் பெயரையே 1824 இல் தான் அஸ்ட்ராலியான்னு மாத்துனாங்க.
இந்த அஸ்ட்ராலியா நாட்டின் பரப்பளவு, எங்க நியூஸியை விட 29 மடங்கு பெருசு. அதுக்கேத்தமாதிரிதான் மக்கள் தொகையும் ! நாங்க 5.3 மில்லியன். அவுங்க 33 மில்லியன்!
ரெண்டுமே தீவுகள்தான் என்றாலும். அஸ்ட்ராலியா, ப்ரமாண்டமான தீவு. ஒரு முழுக் கண்டம் ! இந்த இரு நாடுகளின் நிலத்தையொட்டிப் பங்குபோட்டுக்க வேறெந்த நாடுகளும் இல்லை ! அதனால் எல்லைத்தகறாறு கிடையாது. எவ்வளவு ஆசுவாஸம் பாருங்க !!!!
நிறைய ப்ரிட்டிஷ் மக்களும் புது நாட்டுக்குக் குடிவர ஆரம்பிச்சு அங்கங்கே குழுக்களா வசிக்க ஆரம்பிச்சு , நாடு முழுக்க ஆறு ப்ரிட்டிஷ் காலனிகளா இருந்தவைகள்தான் அப்புறம் தனித்தனி மாநிலங்களா மாறி (New South Wales, Victoria, Queensland, South Australia, Western Australia, and Tasmania ) தனியாட்சிகளா உருவாச்சு. ( எல்லாம் நம்ம இந்தியா மாதிரிதான். மாநில ஆட்சிகள், மத்திய அரசு, யூனியன் ப்ரதேசம் இப்படி.... )
இந்த மாநிலங்களில் நாம் இப்போப் பயணத்தில் வந்துருக்கோமே இது விக்டோரியா ஸ்டேட்டின், தலைநகரம், மெல்பர்ன் !
இந்த நகரம் உருவானது 1835 லேதான். இது எங்களுக்கு அக்கான்னேன் பாருங்க..... நம்ம க்றைஸ்ட்சர்ச் நகர் உருவானது.... 1856 லேதான். (2006 லே 150 ஆவது பிறந்தநாள் கொண்டாடினோம் !)
சரி வாங்க...... மெல்பர்ன் நகரத்தைக் கொஞ்சம் சுத்திப்பார்க்கலாம். அந்த ஃப்ரீ ட்ராம், என்னமாத்தான் இருக்குன்னு ஒரு சுத்துப் போயிட்டு வரலாம். எலிஸபெத் தெருவில் நடந்து போகும்போது குறுக்கே ட்ராம்கள் ஓடிக்கிட்டே இருக்கு. ரூட் நம்பர் எல்லாம் போட்டுருக்கு. ஒரு இடத்தில் 'ஃப்ரீ ட்ராம் ட்ஸோன்' னு பார்த்தேன்.

நம்ம மெர்க்யூர் ஹொட்டேல் பக்கத்துலேதான் டேவிட் ஜோன்ஸ் போல பெரிய பெரிய செயின் ஸ்டோர்ஸ் ஏகப்பட்டது இருக்கு. ஒரு தெருவில் ஆரம்பிச்சு அடுத்த தெருவரை போகும் கடைகள். இதுலே அங்கங்கே மால்கள் வேற ! வேடிக்கை பார்த்துக்கிட்டே மெல்ல நடந்தால்கூட ஒரு ஏழெட்டு நிமிட்லே எலிஸபெத் தெருவுக்குப் போயிடலாம். க்றிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒன்னரை மாசம் இருக்குன்னாலும்..... கடைகளில் (மட்டும்) கொண்டாட்டம் ஆரம்பிச்சுருச்சு !
ட்ராம் ஸ்டாப் எங்கே இருக்குன்னு தேடிக்கிட்டே போனால்.... ஒரு இடத்தில் சில்லறைக் காசுகளைப் போட்டுவச்சுக்கும் காயின் பர்ஸ் ஒன்னு தரையில் கிடக்கு. சைஸென்னவோ ரொம்பப்பெருசு. சாமி கையில் இருந்து விழுந்திருக்கும் போல ! க்ளிக் க்ளிக்.... Bourke Street Mall இந்த இடம். ஷாப்பிங் போகும் அவசரத்தில் யார் விட்டுட்டுப் போனாங்களோ !!!
கலைகளுக்கு மரியாதை, கலையை ரசிச்சுப் பாராட்டுவோமுன்னு அங்கங்கே என்னென்னவோ வச்சுருக்காங்க. ஒரு இடத்துலே ஒரு வரிசைக் கண்கள் !
நேபாள் பயணத்தில் புத்தர் கோவில் கோபுரங்களில் கண் வரைஞ்சு வச்சுருக்கறது நினைவுக்கு வந்தது. அங்கேயாவது சாமி பார்க்கிறார்னு..... மாடர்ன் கலையில் கெமெராக்கண்கள் பார்க்குது போல் !
(சொல்லாமல் இருக்க முடியலை.... இங்கே நியூஸியில் எங்கே பார்த்தாலும் க்ராஃபிட்டி என்னும் அசிங்கமான ஒரு கலாச்சாரம். நகரசபை, கண்டுக்கறதே இல்லை...ப்ச்)
பெயர்ப்பஞ்சம் இந்தத் தெருக்களுக்கும்தான்.நாம் தங்கி இருக்கும் ஹொட்டேல் இருக்கும் தெரு லிட்டில் Bபொர்க் தெரு. இப்படிச் சின்ன & பெரிய தெருக்கள் இந்தப் பேட்டை முழுசுமெ ! ட்ராம் ஸ்டாப்புலே நின்னுக்கிட்டு, கை ஆட்டி ட்ராமை நிறுத்தி ஏறிக்கலாமாம். (இங்கே எங்க நியூஸியில், டாக்ஸிகளைக் கை நீட்டி / ஆட்டி கூப்பிடக்கூடாது.... காலியாகப் போனாலும் கூட நிறுத்தமாட்டாங்க)விவரம் தெரியாமல் எந்த ட்ராமை நிறுத்துவது ? பேசாம சென்ட்ரல் ஸ்டேஷன் போய் விசாரிக்கலாமுன்னு போறோம். வழியில் நம்ம பேங்க் கண்ணில் பட்டது. நியூஸியில் நாம் கணக்கு வச்சுருப்பதும் இதே பேங்க்தான் என்றபடியால், உள்ளூர் செலவுக்கு ஆஸி டாலர் கொஞ்சம் எடுத்துக்கலாமுன்னு உள்ளே போய், காசை எடுத்துக்கிட்டோம். ஒரு அஞ்சாறு கட்டடம் தள்ளி சென்ட்ரல் ஸ்டேஷன். அங்கே விசாரிச்சுக்கிட்டு எதிர்வாடைக்குப்போய், அடுத்த தெரு திரும்பினால் ட்ராம் ஸ்டாப்.
ஒரே திசையில் போய் நாலு திசையைச் சுத்திச் சுத்தி வருதாம். எத்தனை முறை வேணுமுன்னாலும் போய் வரலாம். காலை ஒன்பதரை முதல், மாலை அஞ்சுவரை எல்லா நாட்களிலும் இந்த சர்வீஸ் உண்டு. பனிரெண்டு நிமிட் இடைவெளியில் அடுத்த வண்டி வந்துருது.
சிட்டி சர்க்கிள் ட்ராம் எல்லாம் ரொம்பவே பழசு. மரக்கட்டை......ப்ச்....
வண்டி வந்ததும் ஏறி உக்கார்ந்தோம். முதலில் ஒரு முழு வட்டம் போகலாம். அப்புறம் என்னென்ன பார்க்கணுமோ.... அதுக்கேத்தாப்லெ அங்கங்கே இறங்கி ஏறினால் ஆச்சு!
ஒரு வட்டம் சுத்திவர ஒரு மணி நேரம் ஆகுமுன்னும் ஒரு பதிநாலு, பதினஞ்சு நிறுத்தங்கள் இருக்குன்னும் தகவல் கிடைச்சது. நாம் அஞ்சாவது நிறுத்தத்தில் ஏறியிருக்கோம்.
லைப்ரரி, இமிக்ரேஷன் ம்யூஸியம், பார்லிமென்ட் பில்டிங், ட்ரெஷரி பில்டிங், மார்வெல் ஸ்டேடியம், சில பல பார்க்குகள், புல்வெளிகள் எல்லாம் தாண்டிப் போய்க்கிட்டு இருக்கும்போது.... ஒரு இடத்தில் நின்ன வண்டி, மேற்கொண்டு முன்னேறாமல்.... ரிவர்ஸில் போகுது..... அங்கே ட்ராம் லைனில் பழுதுபார்க்கும் வேலை நடக்குதுன்னு அக்கம் பக்கம் உக்கார்ந்திருக்கும்/ நின்னுக்கிட்டே வரும் மக்களின் பேச்சில் தெரிந்து கொண்டேன். ரீ வைண்ட் பண்ணிப் பார்ப்பதுபோல் இதுவரை பார்த்த காட்சிகளைத் திரும்ப ஒருக்காப் பார்த்துக்கிட்டே நாம் ஏறின அஞ்சாவது நிறுத்தத்திற்கே வந்து இறங்கியாச்சு. அடுத்த தொகுதியில் என்னென்ன இருந்திருக்குமோ ?
கூட்டிக்கழிச்சுப் பார்த்தால்.... மணி இப்போ மதியம் ஒன்னு. நாம் பதினொன்னரைக்கு ட்ராமில் ஏறியிருந்தோம். அப்ப ஒன்னரைமணி நேரம் பயணத்தில். போயிட்டு, அதே ரூட்டில் திரும்ப வந்ததால் முக்காமணி நேரம்தான் ஒரிஜினல் பயணம். அவுங்கதான் ஏற்கெனவே ஒரு மணி நேரம் ஒரு சுத்துன்னு சொன்னதால்.... நாம் ஒரு காமணி நேரக் காட்சிகளைத்தான் தவறவிட்டுருக்கோம். போகட்டும்..... என்ன செய்வது ? ( இந்தக் கணக்குப்போடும் புத்தி எப்பத்தான் என்னைவிட்டுப்போகுமோ ???? )
தொடரும்.........:-)





























0 comments:
Post a Comment