தன்னுடைய பதினெட்டாவது வயசில் அரியணை ஏறினவுங்க இவுங்க. இவரின் 63 வருஷ ஆட்சி காலத்தில்தான் ஆஸி, நியூஸி, கனடா, ஹாங்காங், ஃபிஜி, தென்னாஃப்ரிகாவில் பல இடங்கள்னு ஏகப்பட்ட நாடுகளை, ப்ரிட்டிஷ் ஆட்சி பிடிச்சுக்கிட்டு, தங்கள் ஆட்சியில் சூரியனே மறையாதுன்னு பெருமைப்பட்டுக்கிட்டு இருந்தாங்க. அதானே உலகம் முழுக்க அங்கங்கே நாடு பிடிச்சு வச்சுருந்தா.... எங்காவது சூரிய வெளிச்சம் மறையுமா என்ன ?
கீழே படம்: வலையில் இருந்து! அன்னாருக்கு நன்றி !
இதனால் மஹாராணி விக்டோரியாவின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளில் ராணியின் பெயரில்தான் ஏகப்பட்ட தெருக்களும், கட்டடங்களும், நிலங்களும் , மாநிலங்களும்..... இப்ப நாம் சுத்திக்கிட்டு இருக்கும் மெல்பர்ன் என்ற ஊர் கூட விக்டோரியா மாநிலத்தின் தலைநகரே !
ஹரேக்ருஷ்ணா கோவிலில் இருந்து டாக்ஸியில் வந்துக்கிட்டு இருந்த நாம், நேரா நம்ம ஹொட்டேலுக்குப் போகாம க்வீன் விக்டோரியா மார்கெட்டில் இறங்கினோம். கட்டட முகப்பு வாசலுக்குள் நுழைஞ்சால்................ ஹைய்யோ............. பெத்தாம் பெரிய ஷெட்! அறுநூறு சில்லரை வியாபாரம். அவுங்கவுங்களுக்கு சுவாரஸ்யமான இடங்களில் கூட்டம் !நகைநட்டுக் கடைகள் ஏகப்பட்டது. இதுலே கையாலெ செஞ்சதுன்றதுக்கு பெரிய கௌரவம் வேற !
தங்கம் விக்கிற விலையில் இனி உலகம் பூராவும் இப்படித்தான் மாறணும்போல ! நான் பார்த்தவரையில் ஏற்கெனவே வெள்ளையர்கள் இதே மாதிரி நகைகளைத்தான் போட்டுக்கிட்டு இருக்காங்க. நம்ம இந்தியர்களும், சீனர்களும்தான் நகைன்னா அது தங்கம் மட்டும்தான்னு இருக்கோம். இப்ப சிலவருஷங்களா.............. இந்தியாவில் தங்கம் போலவே மின்னும் போலி நகைகள் நடமாட்டம் அதிகமாகிக்கிட்டே இருக்கு! ச்சும்மாச் சொல்லக்கூடாது..... உண்மையில் ஒரிஜினல் தங்க நகைகளில் கூட இவ்வளவு அழகழகான டிஸைன்கள் இல்லையாக்கும் !
மார்கெட்டில் இருக்கும் அறுநூறு கடைகளில் முன்னூறு கடைகள் நகைநட்டுக்குத்தான்..... நமக்கு ஒன்னும் வேணாம்தான். ஆனால் மகளுக்காக சில 'நகைகள்' பார்த்துட்டு, சிலபல க்ளிக்ஸ் எடுத்து வாட்ஸப்பில் அனுப்பிட்டு, பதில் வரும்வரை ச்சும்மாச் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தோம். ரெண்டு மணிநேர வித்தியாசம்தான். ஒன்னைமட்டும் தெரிவு செஞ்சுட்டு, மற்றவைகளை வேணாமுன்னுட்டாள். மார்கெட் ஏரியாவில் ஃப்ரீ வை ஃபை கிடைச்சது நல்லதாப் போச்சு !
என் கல்லாசைக்குத் தீனி போட்டக் கடைகள் அருமை. மனசைக் கல்லாக்கிக்கிட்டேன், விலையைப் பார்த்து ! நம்மாண்டையே கல்கலெக்ஷன்ஸ் ஓரளவு இருக்கு. ஒரு சமயம் நம்ம வீட்டுக்கொலுவில் ஒரு படி வரிசை, கற்களே !
இந்த மார்கெட்டுக்கு வயசு 148 ! ஆரம்பத்துலே ஆடு,மாடு, குதிரை,கோழி, பன்றின்னு மிருகங்களும் அவற்றிற்கான தீவனங்களும்னு ஆரம்பிச்சது, இப்போ இவற்றைத்தவிர மற்றவைகளுக்கானதாகிப் போயிருக்கு !
இப்போ ஹொட்டேலுக்குத் திரும்ப டாக்ஸி வேணுமேன்னு பார்த்தப்ப, பரிச்சயமானதுபோல் கண்ணில்பட்டது தெருமுனைக் கட்டடம். நேத்து ட்ராமில் போகும்போது பார்த்த நினைவு. மனம் சொன்னபடி அதன்வழியே நடந்தால் கொஞ்ச தூரத்தில் 'நம்ம' எலிஸபெத் தெரு. இனி என்ன ப்ராப்லம் ?
அடுத்து லஞ்சுக்கு அதே ச்சில்லீஸ் இண்டியா ! ஃபலூடா அருமை. அறைக்கு வந்து ஒரு குட்டித்தூக்கமும் ஆச்சு. சாயங்காலம்...... ஹொட்டேல் டைனிங் ஏரியா எப்படி இருக்குன்னு எட்டிப்பார்த்தால் 'ஈ காக்கா' இல்லை..... ப்ரேக்ஃபாஸ்ட்க்கு மட்டுமான ஏற்பாடு போலத்தான் இருக்கு. இங்கேயே ராச்சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிக்கலாமுன்னு நினைச்சதை மாத்திக்கணும்........ பார்க்கலாம்....
நம்ம ஹொட்டேலே சைனா டவுன்லேதானே இருக்கு..... கொஞ்சம் அந்தாண்டை சிங்கத்வார் வரை போய் வரலாமுன்னு போனோம். தெருவின் ரெண்டு பக்கங்களிலும் சீனக்கடைகளும், ரெஸ்ட்டாரண்டுகளும், பேக்கரிகளுமாத்தான் இருக்கு. குறுக்கே போகும் ரஸ்ஸல் தெருமுனையில் ஒரு சின்னக்கூட்டம். இந்தாண்டை சனம் அந்தண்டை போக, பச்சைமனுஷனுக்குக் காத்திருக்கு. நாமும்தான். என்ன கூட்டமுன்னு பார்த்தால் தெருச்சண்டை ! ஒருத்தன் , ஒரு பெண்ணை பளார் பளார்னு முகத்தில் அறைஞ்சுக்கிட்டு இருக்கான். சனம் ஓடிப்போய்த் தடுக்காம... வேடிக்கை பார்க்குது. நம்மவர் என் கையைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டு இருக்கார். (சண்டையை நிறுத்த ஓடுவாளோ என்ற பயம் ? )
அந்தப்பெண்மணியும், அடிச்ச ஆளை மூர்க்கமாய் திருப்பியடிக்குது....பக்கத்து பில்டிங் வாசலில் நிற்கும் செக்யூரிட்டி சண்டையை விலக்கப்போய், அந்தப்பெண்மணியை இந்தாண்டை இழுக்க, அடிச்சவனும் பெண்ணைத்தாக்க, எகிறிக்குதிச்ச பெண்ணின் மேலாடை எல்லாம் கிழிபட்டுத் தாறுமாறாய் கிடக்க.... ஐயோன்னு இருக்கு..... சினிமாப்போலிஸ் போல....... போலிஸ்காரர் ஒருத்தர் இப்போ ஓடிவர.... அந்த மொத்தக்கூட்டமும் அப்படியே நகர்ந்து அந்தாண்டை போய்க்கிட்டே இருக்காங்க. குடும்பச் சண்டை மாதிரித் தெரியலை......
சைனா டவுன் இருக்கட்டுமுன்னு நாங்க போன வழியிலேயேப் பேசாமத் திரும்பி வந்து நம்ம ஹொட்டேலுக்கு அடுத்த கடைக்குள் நுழைஞ்சுட்டோம். சீனநகைக்கடையில் தோசைக்கல்லு போல் பெரிய சைஸ் நகைகள் ! ஷோகேஸில் வச்சுக்கும் அலங்காரப்பொருட்கள் எல்லாமும் கூட தங்கத்தில்!!!! விலையோ லக்ஷக் கணக்கில் ! க்க்கும்........... ரொம்ப மிதப்புதான்...............
கிறிஸ்மஸ் இன்னும் நாப்பத்தியஞ்சு நாளில் வருதாமே................ டேவிட் ஜோன்ஸ். ஆஸியில் இருக்கும் பெரிய செயின்ஸ்டோர்ஸில் ஒன்னு ! இந்தக் கடை நம்மூரில் இல்லை. கடைக்குளேயே நடந்து அடுத்த தெருவுக்குப் போயாச்சு.
இது ட்ராம் போகும் தெரு. அங்கங்கே உக்கார்ந்துக்க இருக்கைகள் வேற ! யாருமே உக்காரலை. இடம் பாழாப்போகுதேன்னு இருக்கு ! விடலாமோ ? இருட்டிப்போனதால் அந்த ஏரியாவே பளிச் !
எதிர்வாடையில் இருக்கும் மக்கள் தலையை உயர்த்தி நம்மப்பக்கம் பார்க்கறாங்க...... நாமும் திரும்பிப்பார்த்தால் , பின்னால் இருக்கும் கடையின் சுவரில் கார்ட்டூன் படம்போல ஒன்னு (Chrismas Window show, Lego theme @ Myers shop wall )போய்க்கிட்டு இருக்கு ! நாமும் தெருவைக்கடந்து அந்தாண்டைபோய் படம் பார்த்தோம் ! ரெண்டு வீடியோ க்ளிப்ஸும் , உங்களுக்காக!
https://www.facebook.com/share/v/1ALrrxixw3/
https://www.facebook.com/share/v/1D6b9fTTGm/
ட்ராம் வரப்போக இருப்பதைக் கொஞ்சநேரம் வேடிக்கை பார்த்துட்டு அறைக்கு வந்தாச்!
https://www.facebook.com/share/r/1AhPhMeCVd/
https://www.facebook.com/share/r/17wjF1y6Ui/
மேலே : சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப்ஸ்.
பகல் சாப்பாடு, லேட்டாகிப் போனதால் அவ்வளவாகப் பசி இல்லைன்னு அறைக்குப்போயிட்டோம். அப்போ டின்னர்? நேத்து வாங்கிவச்ச மாம்பழம்தான் !
தொடரும்............. :-)


























0 comments:
Post a Comment