Thursday, February 26, 2026

கல்யாணத்துலே மட்டும்தான் ஏழடி கணக்கோ ?

இதொரு பழக்கம்..... எங்கே போனாலும்.......கூட வர்றவளை அம்போன்னு விட்டுட்டு 'திடுதிடு'ன்னு ஓடறது...... கோவிலுக்குப் போனாலும் சரி, கடைகளுக்குப் போனாலும் சரி....  அப்பெல்லாம் நானும் அவ்வளவாப் பொருட்படுத்தமாட்டேன். செல்ஃபோன் இல்லாத காலம் அது! 

செல்ஃபோன் வந்து... இந்த வைஃபை, ப்ளூடூத் எல்லாம் வந்தபின்.... இவர் என் கூடவே வரணும் என்றது என் எதிர்பார்ப்பு.  சொல்லவும் செய்வேன். ஆனால்.... கேட்டுட்டாலும்.........

வேறொன்னுமில்லை.... நான் கொஞ்சம் 'பிசுக்கு'ன்னு  சொல்லியிருக்கேனில்லையா.........  என் ஃபோனுக்கு நேரடி இன்டெர்னெட் கனெக்‌ஷன் வாங்கிக்கலை.  அதுக்கு வேற மாசம் நாப்பது டாலர் அழுவானேன்னு.... வீட்டுலே இருக்கும்போதெல்லாம் வீட்டு வைஃபை.  வெளியே  போகும்போது..... நம்மவரின் ஃபோனில் இருந்து  ப்ளூடூத் வழியா கனெக்ட் பண்ணிக்குவேன்.  கூடவே / பக்கத்துலேயே இருந்தால்தான் இது வேலை செய்யும். கொஞ்சம் நகர்ந்து போனால் கனெக்‌ஷன் கட்.  நாம் எதாவது நெட்லே பார்த்துக்கிட்டோ, சேதி அனுப்பிக்கிட்டோ இருப்போம். அப்போ நம்மை விட்டு விடுவிடுன்னு வேற பக்கம் போயிட்டால் நான் அம்போ !!!! பேசாம நாமே நேரடியா கனெக்‌ஷன் வாங்கிக்கலாம்தான்....  ஃபோன்பில் கட்டறது நம்மவர்தானே? பாவம்..... செலவு வேணாமுன்னு பார்த்தால்..... ப்ச்.... நல்லதுக்கே காலமில்லை, போங்க. 

அப்போ மகளிடமிருந்து 'சேதி' வருது. எங்கே இருக்கீங்க ? பெர்ஃப்யூம் கடையாண்டைன்னதும், அதுக்குப் பக்கத்துலே 'ஸ்பெல்பாக்ஸ் 'இருக்கு. அதைக்கட்டாயம் போய்ப் பாருங்க. வாசலில் 'விச்சு' நிக்கும்.  
பேய் பிசாசுன்னாவே ஒரு  தனி ஸ்வாரஸ்யம்! வீல் ஆஃப் ஸ்டார்ஸ்னு ஒன்னு. கைப்பிடியை இழுத்து சுத்திவிட்டால் சக்கரம் சுத்திமுடிச்சு என்ன நம்பரில் நிக்குதோ அதுக்கான ஜோஸியம் ! பொதுவா நம்மைவிட வெள்ளையருக்கு மூட நம்பிக்கைகள் அதிகம். இல்லாமலா  ஹாலோவீன் எல்லாம் இப்படி உலகம் முழுசும் பரவிக்கிடக்கு !! போதாததுக்கு பேய் சினிமாக்கள் , பேய்க்கதைகள் ???
அந்த மரச்சக்கரத்தைவிட நான் ஆர்வமாப் பார்த்தது அதே ஸ்டாண்டுலே நிக்கும் மரப்பாச்சிகள் !!!! சக்கரத்தைச் சுத்தும் முறைன்னு ஒன்னும்..... நானும் சுத்தினேன்! என்ன நம்பர் வந்ததுன்னு இப்போ நினைவில்லை.  அந்த நம்பர் சீட்டை எடுத்தா என்னவோ நல்லதாத்தான் சொல்லுச்சு......  போகட்டும்....  சில கோவில்களில் உடல் கோளாறு சரியாகணுமுன்னு வேண்டிக்கிட்டு,  ப்ரார்த்தனை நிறைவேறினதும்..... கை, கால், தலைன்னு வெள்ளி(? ) உருவம் வாங்கிப்போடறாங்கல்லே  அதே போல்  ஒன்னு செயின்லே கோர்த்துப்போட்டுக்கும்படி  விக்கறாங்க.  கை இருந்தது !  கால் கூட இருக்கும்தான். நான் தேடலை 
மணி பனிரெண்டு ஆகுது... மணி சத்தம் கேட்குமான்னு ஒரு காதை மணியாண்டை நிறுத்திவச்சுருந்தேன்.  ஊஹூம்.... ஒரு சத்தமும் போடாம அமுக்கமா இருக்கு கடிகாரம்!

போகட்டும்.....இன்னும் சில கடைகளைப் பார்த்துட்டு ராயல் ஆர்கேடில் இருந்து வெளியே வந்தாச்சு.  நம்ம பீட்டர் ஜாக்ஸன் ( Lord of the Rings, Hobbit  ) கடை வச்சுருக்காரா என்ன ? ஹாஹா 
பகல் சாப்பாட்டுக்குப் போகலாமான்னதும்,  கடைசி முறையாக  அந்த 'சில்லி இண்டியா'வுக்கே போகலாமுன்னு நடந்தோம். எங்கே பார்த்தாலும் மால்களே மால் என்பதால் எதுக்குள்ளேயாவது நுழைஞ்சாலே போதும்தானே? 
போறவழியில் ஹேண்ட்பேக் கடை...... கோணலா ஒன்னு இருக்கு. இதெல்லாம் டிஸைனர் பேக் வகை. ச்சும்மா விலையைப் பார்த்தேன்..... ச்சீ.... ஒரே புளிப்பு.  
நான் ஏதாவது கையில் எடுத்துப்பார்த்தால் 'வேணுன்னா வாங்கிக்கோ' ன்னுவார் நம்மவர்.  (என்னுடைய கருமி குணம் தெரியாமலா இருக்கும் ? )   இப்பவும் அதே போலக் கேட்டதும் ஆமாம்னேன். விலை எவ்வளவுன்னு கேட்டவர்  கையில்  பையைக்கொடுத்தேன்.  கையில் தீப்பிடிச்சதுபோல  சடார்னு திருப்பி வச்சுட்டார் :-) ( இன்னும் கொஞ்சூண்டு கூடப்போட்டால் நாங்க ரெண்டுபேரும் இந்தியாவுக்கு வந்துட்டுப்போகலாம்)

இப்ப எனக்கு இந்த ஏரியாவில்  ஓரளவு என்னென்ன எங்கே இருக்குன்றதெல்லாம் தெரியுது......  மெல்பர்ன் சென்ட்ரல் நோக்கி போய்,  உள்ளேயே அடுத்த தெருவரை நடந்து,  நம்ம 'இந்திய மிளகாய்'க்குள் லஞ்சு ஆச்சு.  திரும்ப மாலுக்குள் போனவழியிலேயே  வந்தால் கண்ணெதிரில் நம்ம ஹொட்டேல். 


ஒன்னரை மணிதான் ஆச்சு.  அறைக்குப்போய்க் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணுமாம். சாயங்காலம் ஃப்ளைட்லே தூங்க முடியாதுன்னார்.  எனக்குத் துணை வைஃபை. மணி மூணானதும் கீழே ஃபோன் செஞ்சு டாக்ஸிக்கு சொன்னார்.  நாம் கீழே போறதுக்கும் டாக்ஸி வந்து நிக்கறதுக்கும் சரியா இருந்துச்சு.  ஏர்ப்போர்ட் போய்க்கிட்டு இருக்கோம்.  டாக்ஸி ட்ரைவர் பெயர் என்னன்னு கேட்டேன்.....ரேம் என்றார். அட! ராம் ! அம்பது நிமிட்டிலே ஏர்ப்போர்ட் போயாச் !  


இப்போ நாம் ஏர் நியூஸிலேண்டில் போறோம். செக்கின் ஆச்சு. நம்ம  சிங்காரச்சென்னை பெண்ணுதான் (இங்கே படிக்க வந்து ரெண்டு வருஷமாச்சாம். படிப்பு முடிஞ்சதும்  'ஏர்நியூஸி மெல்பர்னில் ' பயிற்சி நடக்குது ) இன்னொரு தமிழரைப் பார்த்ததும் நம்ம மூணுபேருக்குமே மகிழ்ச்சி !  நமக்கு வீல்சேர் நபர் இன்னும் வரலை. கொஞ்ச நேரம் உக்காருங்கன்னதும், எனக்கு வீல்சேர் வேணாம், கேன்ஸல் பண்ணுங்கன்னேன். 

இங்கிருந்து கேட்டுக்கு ரொம்பதூரம் நடக்கணும்தான். எனக்கு வேடிக்கைபார்த்துக்கிட்டே போகணும்.வீல் சேரில் போனால்.... அக்கம்பக்கம் திரும்பவிடாம பரபரன்னு தள்ளிக்கிட்டுப்போய் கேட்டாண்டை உக்காரவச்சுட்டுப் போயிர்றாங்க.

இது ரொம்ப அநியாயவிலைதானே ? நல்லவேளை நம்மவர் 'மதுப்ரியர்' இல்லை !!!!
கடைகளையும், வரிசைகட்டி நிக்கும் பாண்டாக்களையும் பார்த்துக்கிட்டே நம்ம கேட்டாண்டை போயிட்டோம்.   நம்ம  பொட்டியைத் தொலைச்ச  அதே கேட் ! நம்ம ப்ளேன் நிக்குது.  



வண்டி கிளம்பின   முக்கா மணியில் நம்ம சாப்பாடு வந்துருச்சு. எப்பவும் முதல்லே நமக்கு கொண்டுவந்து கொடுத்துருவாங்க.  ஒரு அரைமணி நேரம் கழிச்சுத்தான்  நம்ம அக்கம்பக்கத்து மக்களுக்கு!   அதுக்குள்ளே 'ஆறிப்போகும். நீ சாப்பிடு'ன்னுட்டு நம்மவர்  ஆரம்பிப்பார்.  அடுத்தவங்களைப் பார்க்க வச்சுட்டு நாம் மட்டும் சாப்பிடுவது எனக்குப் பிடிக்காது....  ப்ச். 
அப்புறம்  ரெண்டு மணி நேரங்கழிச்சுத்தான்   எல்லோருடைய தட்டுகளையும்  எடுப்பாங்க.   அங்கே இங்கே நகராம ஒரே இடத்தில் நம்மை உக்காரவைக்கும் டெக்னிக். 

நான் வழக்கம்போல் ஃப்ளைட் பாத், நம்மவர் அவர் வழக்கம்போல் சினிமா. 
மொத்தம் பறக்கற நேரம் என்னவோ மூணரை மணிதான். ஆனால் நமக்கும் இவுங்களுக்கும் ரெண்டுமணி நேர வித்தியாசம் இருக்கே....  நடுராத்ரி தாண்டி  பனிரெண்டரை இல்லை பனிரெண்டே முக்காலுக்குத்தான் தரை இறங்குவோம்.

கைவசம் டிக்ளேர் பண்ணவேண்டிய ஐட்டம் இருப்பதால் க்ரீன் லைட்லே போகமுடியாது.....  பொட்டி வர்ரதுக்குக் கொஞ்சநேரம் ஆச்சு. 4 கிராம் குங்குமப்பூ பேக்கட்.  ஹேண்ட்பேகிலேயே வச்சுருந்தேன்.  வீட்டுக்கு வந்து சேர்ந்தப்ப மணி ஒன்னேமுக்கால். 

சாமி அறைக்குப்போய்  பத்திரமா  வீடுவந்துசேர வச்சதுக்கு நன்றி சொல்லிக் கும்பிட்டேன். நம்ம ஜன்னு அன்னு, கிச்சு எல்லாருக்கும் பொதுவா ஒரு ஹை! அம்மா வந்தாச்சுடா.........  அறிவிப்பு!  

உடம்பு அடிச்சுப்போட்டதுபோல இருக்கு.  இன்றைக்கு சனிக்கிழமை.  கோவிலுக்குப் போகணும்.......... 

காலையில் எழுந்து  வழக்கம்போல்  சாமி அறை விளக்கைப் போட்டுட்டு,  பின்பக்கத்தோட்டத்தை ஒரு சுத்து சுத்தினேன்.  நம்ம வஸந்தகாலத்தின் கடைசி மாசம் இப்போ! பூச்செடிகள்  பூக்க ஆரம்பிச்சுருக்கு !  வீட்டுக்குள் இருக்கும் செடிகளும் நல்லா இருக்கு.  மகள் நல்லபடியாகப் பார்த்துருக்காள்.   தினசரிக் கடமைகளை முடிச்சுட்டு,  நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போயிட்டு, வர்றவழியில் காய்கறிக்கடை விஸிட்.  ..... 

நம்ம கோவியாரிடம் சொன்னதுபோல  'ரசம் ' வச்சுட்டு சிம்பிளா ஒரு லஞ்ச்!



இன்றைக்கு நம்ம தமிழ்ச்சங்கத்தில் நவராத்ரி விழா ! (ஆடி கழிஞ்சு அஞ்சாம் நாள்தான் எப்பவும்! ) சங்கம்  நிறுவிய வகையில் போய் விளக்கேத்தி, ஆரம்பிச்சு வச்சு (ஆச்சே 30 ஆண்டுகள்! )  நிகழ்ச்சிகளை  ரசிச்சு, விருந்தையும்  (நம்ம செந்திலின்  ஆர் எஸ்  கேட்டரர்ஸ் ) முடிச்சுட்டு வீடு வந்தாச்சு.



இந்தப் பயணம் இத்துடன் முடிஞ்சது. நாளை முதல்.... செக்குமாடுதான்.....

பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச் சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ,  கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும். ஆனா ஒன்னு.... உடலில் கொஞ்சம் வலு இருக்கும்போதே போய் வந்தால் நல்லது. முட்டிவலி, முழங்கால் வலி, தலை சுத்தல் இப்படி  வலிகள்   வர்ற வயதான காலம்வரை  தள்ளிப்போடாதீங்க.....

ஆதலினால் பயணம் செய்வீர்!

1 comments:

said...

அப்பாடி...  சுற்றுப்பயணம் முடிந்து வீடு திரும்பியாச்சா?  என்னதான் புது இடங்களை பார்ப்பதில் ஆர்வம் இருந்தாலும், மறுபடி நம் வீட்டுக்குள் நுழையும்போது தோன்றும் ஒரு உணர்வு அலாதி இல்லை?