Friday, August 19, 2016

திருச்சேறை சாரநாதப்பெருமாள் (இந்தியப் பயணத்தொடர். பகுதி 75)

எட்டே நிமிசம். அஞ்சே கி மீ தூரம். ஓங்கி உயர்ந்திருக்கும் ராஜகோபுரம் கண்ணில் பட்டது.  அலங்கார  தோரணவாசல் வழி உள்ளே போனால்  இடப்புறம் திருக்குளம். வலப்புறம் கோபுரவாசல்.அஞ்சு மனைவியருடன் பெரிய குடும்பி நம்ம சாரநாதர்.  தெப்பத்திருவிழா நடந்து முடிஞ்சுருக்கு சமீபத்தில். தண்ணீரில் மிதக்கும் தெப்ப மிச்சங்கள்!
கோபுரவாசல் கடந்து போனால்.......வெளிப்ரகாரத்தில் கொடிமரம் பலிபீடம்! தாற்காலிகப் பந்தலின் அடியில்!
அதுக்குப்பின் உள்ள உள்கோபுரவாசலை அடுத்து உள்ப்ரகாரம்.  கண் எதிரில் இருக்கும் மகாமண்டபத்துக்கு நாலு படிகள் ஏறிப்போறோம்.  இடதுபக்கம் பெரியதிருவடி.  நேரெதிரா  நமக்கு வலப்பக்கம்  மூலவர். அர்த்தமண்டபம் கடந்து போய் ஸேவிக்கிறோம்.
கிழக்கு நோக்கி நின்னு ஸேவை சாதிக்கிறார் பெருமாள். கூடவே அஞ்சு தேவியர்! ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், நீளாதேவியருடன் தாமரையில் அமர்ந்த கோலத்தில் சாரநாயகித் தாயார்.

மூலவருக்கு   வலப்பக்கம்  மார்கண்டேய மகரிஷியும்,  இந்தாண்டை  மடியில் ஒரு குழந்தையோடு காவிரியும் இருக்காங்க.  ஒப்பிலியப்பன் கோவிலில் நாம் பார்த்த மார்கண்டேயர் இங்கே இத்தலத்தில்தான் முக்தி அடைஞ்சாராம்.  (அப்ப  16 வயசோடு சிரஞ்சீவியா இல்லையா?  ஙே.....)
பாவம்....  பெரியதிருவடியின் பார்வை நேராப்போய் மூலவரைச் சேரமுடியாமல் வழியில் ஒரு தடை :-(  உண்டியலை வச்சுருக்காங்க......


மகாமண்டபத்துத் தூண்களில் இருக்கும் சிற்பங்களைக் கிட்டப்போய்ப் பார்க்க முடியலை.  தேரின் மேற்பாகத்தில் இருக்கும் குடை போன்ற அமைப்பைக் கழட்டி வச்சுருக்காங்க. அதுவும் ஒன்னுக்கு ரெண்டா இருக்கு.

மஹாமண்டபத்துக்கு அந்தாண்டை தாயாருக்குத் தனிக்கோவில். கோபுரவாசலோடு அமைஞ்சுருக்கு.  சாரநாயகித் தாயார்.பெரிய நீண்ட ப்ரகாரங்கள். சுத்தமாக இருக்கு என்பது மகிழ்ச்சியே!   ஆனால்  பராமரிப்பு  சரியாக இல்லையோன்னு தோணுச்சு.
 வைகுந்தவாசல்    இப்படி.......
ஆழ்வார்கள் சந்நிதிக்கு ரெண்டுபக்கமும் திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள்  பளிங்குக் கல்வெட்டில். பதிமூணு  பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார்.
 அந்தக் காலக்கட்டத்தில் சமணம்,பௌத்தம், வைஷ்ணவம் தகராறுகள் அதிகமா இருந்திருக்கும் போல :-(

(ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரையில் தெரியவந்தது)

வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பின் வல்லமணர் தமக்கு மல்லேன்,
முந்திசென் றரியுருவா யிரணியனை முரணழித்த முதல்வர்க் கல்லால்,
சந்தப்பூ மலர்ச்சோலைத் தண்சேறை எம்பெருமான் தாளை, நாளும்
சிந்திப்பார்க் கென்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக் கும்மே.
பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா. என்றும்,
மைவிரியும் மணி வரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம்
செய்விரியும் தண்சேறை யெம்பெருமான் திருவடியை சிந்தித் தேற்கு,என்
ஐயறிவும் கொண்டானுக் காளானார்க் காளாமென் அன்பு தானே!
ராஜகோபால ஸ்வாமி, ருக்மிணி, சத்யபாமா சந்நிதி இருக்கு!  இங்கே வந்த காரணம்.....

தஞ்சாவூரை ஒருசமயம் ஆண்ட அழகியமணவாள நாயக்க மன்னர், தனக்கு இஷ்ட தெய்வமா இருக்கும்  மன்னார்குடி  ராஜகோபாலஸ்வாமிக்குக் கோவில் கட்ட ஏற்பாடு செய்யறார். பொறுப்பைத் தனது மந்திரி நரசபூபாலனிடம் ஒப்படைச்சார். கும்பகோணத்தில் இருந்து  இந்த  வழியாகத்தான்   வண்டிகளில் கற்கள் கொண்டுபோறாங்க மன்னார்குடிக்கு.

அமைச்சர் நரசபூபாலருக்கு இஷ்டதெய்வம் சாரநாதர் என்றபடியால் இங்கேயும் ஒரு கோவில் கட்டுனால் கொள்ளாம் என்றிருக்கு. அதனால் வண்டிக்கொரு கல் இங்கே இறக்கிட்டுப் போகச் சொல்லியிருக்கார் வண்டிக்காரர்களிடம்.  அப்படியே இங்கே கற்கள் சேர்ந்துக்கிட்டு இருக்கு. கோவிலைக் கட்டும் வேலையும் ஆரம்பமாகி நடந்துக்கிட்டு இருக்கு.


ஒற்றன் மூலமா அரசருக்குச் சேதி தெரிஞ்சுபோச்சு.  அவருக்குத் தெரிஞ்சுபோச்சுன்னு  இவருக்கும் தெரிஞ்சுபோச்சு. அரசர் கிளம்பி வந்துக்கிட்டு இருக்கார்னு தெரிஞ்சதும் ராவோடுராவா இங்கே ராஜகோபாலஸ்வாமிக்கு ஒரு சந்நிதி எழுப்பிடறார் அமைச்சர்.
கோபத்தோடு வந்த மன்னர்,  ராஜகோபாலன் சந்நிதியைப் பார்த்து கோபம் தணிஞ்சு 'மகிழ்ச்சி' அடைந்தார்.  சாக்ஷாத் ராஜகோபாலனே, அவருக்குக் காட்சி கொடுத்ததாகவும் ஒரு கதை இருக்கு!

ப்ரளயத்துக்கு முன்னால் வேதங்களைக் காப்பாத்தி வைக்க என்னவழின்னு ப்ரம்மன், பெருமாளைக் கேட்க, இந்தத் தலத்துலே மண் எடுத்து அதில் ஒரு குடம் செஞ்சு அதுக்குள்ளே வச்சுக் காப்பாத்தச் சொன்னாராம் பெருமாள்.  அவ்ளோ சாரம் நிறைஞ்ச மண் இதுன்னு சொன்னவர் நம்ம சாரநாதர்.

கருவறையில் காவிரி மடியில் குழந்தை இருக்குன்னேன் பாருங்க....    அதை  ஓவியமாவும் ஒரு இடத்திலே வரைஞ்சு வச்சுருக்காங்க. அந்தக்குழந்தை பெருமாளேதான்!
ஒரு சமயம் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, காவிரி, நர்மதை, கோதாவரின்னு சப்த நதிகளும்  மங்கையரா உருவெடுத்து விளையாடிக்கிட்டு இருந்துருக்காங்க. அப்ப அந்தப் பக்கம்போன விஸ்வாவஸ் என்ற காந்தருவன், வணக்கம் சொல்லிட்டுக் கடந்து போனான்.  நதி மங்கையர் ஒவ்வொருவரும் அவன் தன்னைப் பார்த்துத்தான் வணக்கம் போட்டான்னு  எண்ணம். வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கப்டாதோ?

இருந்துட்டாலும்..............   என்னப் பார்த்துதான் கும்பிட்டான்னு ஒவ்வொருத்தரும் வாதம் செஞ்சுக்கிட்டு இருக்கும்போது, போனவன் திரும்பி வர்றான்.

சரி அவனிடமே கேட்டுடலாம்னு , 'நீ யாரைப் பார்த்துக் கும்பிட்டே?'னு கேட்க, இதென்னடா வம்பாப் போச்சேன்னு  நினைச்சவன், உங்களில் யார் பெரியவரோ அவரைப் பார்த்துக் கும்பிட்டேன்னு சொல்லி 'எஸ்' ஆனான்:-)

இங்கெதான் அவன் ஒரு தப்பு பண்ணிட்டான்.  யார் வயசில் பெரியவரோன்னு  ஒரு வார்த்தை சேர்த்திருந்தால்....   எல்லோரும் நான் இல்லைன்னு ஒதுங்கிப் போயிருப்பாங்க:-)  ஆனா.....   அப்படிச் சொல்லலையே.............

பழையபடி விவாதம் ஆரம்பமாச்சு.  ஒவ்வொருத்தரா பின்வாங்க, கடைசியில் கங்கையும் காவிரியும் ஒண்டிக்கு ஒண்டின்னு நிக்கறாங்க. வழக்கம்போல் நாரதர் வர்றார். அவரிடம் நியாயம் கேட்க, அவர் ப்ரம்மாவிடம் போய்க்கேக்கணுமுன்னு சொல்லிட்டு எஸ் ஆனார்.

ப்ரம்மாவின் சத்யலோகத்துக்குப் போனாங்க ரெண்டுபேரும்.  பெருமாள்  வாமன அவதார  சமயம் மூணடி  அளக்கும்போது,  முதலடியில் மேலுலகம் பூராவும் அளந்தெடுக்கத் திருப்பாதம் வந்தபோது , ஆகாய கங்கையைக் கோரி எடுத்து அதைத் திருப்பாதத்துக்கு அபிஷேகம் பண்ணினேன். அதுலே இருந்து கீழே வழிஞ்ச தண்ணீர்தான் கங்கையா பூலோகத்தில் உருவெடுத்தது. அதனால் கங்கைதான்  பெரியவர் என்று சொல்லிட்டார் ப்ரம்மா!

காவிரிக்கு  மனசு உடைஞ்சு போச்சு.  கங்கைக்குக் கிடைச்ச புகழ் எனக்கும் வேணும்னு இங்கே   அரச மரத்தடியில் வந்து உக்கார்ந்து கடுமையான தவம் செய்யறாள். அதுக்கப்புறம்தான் மஹாவிஷ்ணு, ஒரு குழந்தையா உருவெடுத்து வந்து காவிரியின் மடிமேல் உக்கார்ந்து அவளுக்குத் தன்,  தாய் ஸ்தானம் கொடுத்தார்.

மனம் நிறைஞ்சு    மகிழ்ச்சியோடு வணங்கி நின்ன காவிரிக்கு, தன்னுடைய ஐந்து தேவியருடன் கருடவாகனத்தில் காட்சி கொடுத்தாராம். ஹா..............   இதெல்லாம் எப்ப நடந்துச்சு?
நல்லா கேட்டீங்க போங்க!   ஒரு தை மாசம் பூச நட்சத்திர நாளிலே!

அதனாலே இங்கே இந்த விஷ்ணு கோவிலில் தைப்பூசம் கொண்டாடறாங்க  தெரியுமோ?  அதுவும் ஒரு நாள் இல்லை. பத்துநாள் திருவிழா!  தினமும் காலையும்  மாலையும் பெருமாள் பவனி வெவ்வேற வாகனங்களில்! கடைசிநாள் தேரில் மனைவியருடன் ஊர்வலம்!
ஹைய்யோ.....     பார்க்கக் கொடுப்பினை இல்லையேன்னு மனசு ஏங்கதான் செஞ்சது.......... கேட்டோ!

தைப்பூசம் கொண்டாடும் ஒரே ஒரு திவ்யதேசக்கோவில் இது மட்டும்தான்!!!!பிரகாரம் சுத்தி வந்தப்ப, எண்ணெய்ச்சொம்பு வச்சுக்கிட்டுச் சந்நிதிகளில் விளக்கு ஏத்திவச்சுக்கிட்டு இருந்தவரிடம்,  'காவிரித்தாய் சந்நிதி எங்கே?'ன்னு கேட்டதுக்கு, 'வெளியில் புஷ்கரணிப் படிக்கட்டில் இருக்கு.  அங்கேயும் நாந்தான் விளக்குப் போடணும். இதோ போறேன்'னார். அங்கே அப்ப வந்த பட்டருக்கும்  இன்றைய ட்யூட்டி அங்கேதானாம்.
'நீங்க போங்க. பின்னாலேயே வர்றேன்'னார். வெளிப்ரகாரத்தில் தரையில் செங்கல் பாவும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு.
கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ.....

நாங்க  வெளியே  கோவிலுக்கு எதிரில் இருக்கும் 'சார புஷ்கரணி' என்னும் கோவில் குளத்துக்குப் போனோம்.  வலதுபக்கம் அரசமரத்தையொட்டி ஒரு சந்நிதி இருக்கு காவிரித்தாயாருக்கு.  மரத்தடியில் நாகர்கள்!அஞ்சு நிமிட்டில் விளக்குப்போடும் பெரியவர் வந்து சந்நிதியைத் திறந்து  விளக்கேற்றினார்.  கோவிலில் எண்ணெய்க்குத் தரும்  பணம் போதலைன்னு  சொன்னதால் விளக்குப்போடச் சொல்லி ஒரு தொகையைக் கொடுத்தார்   நம்ம கோபால்.

அதுக்குள்ளே பட்டர் வந்து சேர்ந்து தீபாராதனை காமிச்சுத் தீர்த்தப் ப்ரஸாதம் கொடுத்தார்.  காவிரித்தாய் மடியில் சின்னஞ்சிறுவனாகக் குழந்தை இருக்கான்.  சலசலன்னு  இலைகள் அசைய அந்த அரசமரத்தடியும் சந்நிதியும் வேறொருவிதமான  மனநிம்மதியைக் கொடுத்தது நிஜம்.
இருட்ட ஆரம்பிக்குது.  கிளம்பிப் போறோம்.   போகும்வழியில் ஒரு பள்ளிக்கூடம்.  R.K. இராதாகிருஷ்ணா அரசு மேல்நிலைப்பள்ளி.  பள்ளிக்கூட நுழைவுவாசலே  கோவில்மாதிரி இருக்கு!  கல்விக்கோவில்!  அடுத்து கொஞ்சதூரத்துலே ஒரு சிவன் கோவில். உள்ளே கட்டடவேலை என்னவோ நடக்குது.... க்ளிக்.


நாச்சியார்கோவில் வழியாத் திரும்பிப் போறோம். கோவில் திருக்குளம் இருக்கும் அவலத்தை என்னன்னு சொல்ல   ....ப்ச்.......
கும்பகோணம் போகும் சாலை  இது.....  கொஞ்சதூரத்துலே ஒரு டீக்கடை கண்ணில்பட்டது. பாவம்...  நம்ம சீனிவாசனுக்குப் பொதுவாக டிரைவர்களுக்குண்டான  பழக்கம் (அடிக்கடி டீ குடிப்பது) இருக்கேன்னு ஒரு ஸ்டாப் போட்டோம். நமக்கும்தான் ஒரு டீ ஆய்க்கோட்டே!  டீக்கடைக்காரர் சுந்தரிடம் கேட்டுட்டு அவர் டீ போடுவதை வீடியோ க்ளிப்பாக எடுத்தேன். ஆணியில் மாட்டி இருந்த ஷர்ட்டைச் சட்னு எடுத்துப் போட்டுக்கிட்டு ரெடி ஆனார்:-)
கொஞ்சநாளுக்கு முன்னே ஃபேஸ்புக்கில் அதைப்போட்டாச்சு. இதுவரை 406 பேர் பார்த்துருக்காங்க. நீங்களும்கூட இங்கே பார்க்கலாம்:-)


இன்றைக்கு ஏகப்பட்ட கோவில்கள் தரிசனம் ஆச்சு. இன்னும் ஒரே ஒரு கோவிலைப் பார்த்துட்டு இன்றைய ஸேவையை முடிச்சுக்கலாமா?

தொடரும்........:-)


PIN குறிப்பு:  பதிவு எழுதும்போது முக்கியமான ஒரு  சமாச்சாரம் சொல்ல விட்டுப்போச்சு :-( அதுக்காக சும்மா இருக்கலாமா?  இப்போ படம் ரெண்டு  சேர்த்துருக்கேன் பாருங்க.    'சாரா சாரா'  ன்னு கொஞ்சணும்:-)


15 comments:

said...

காவிரித் தாய் மடியில் பெருமாள் - ஓவியம் அருமை.
நன்றி.

said...

பழத்தின் உள்ளிருக்கும் பலனைச் சாறுன்னுதானே சொல்வோம். சாறு பிழிந்து என்பது அதன் மையப் பொருளை எடுத்து என்று பொருள்படும் அல்லவா. அப்போ சாறநாதர்னுதானே இருக்கனும்? எழுத்துப்பிழை செஞ்சிட்டாங்களா?

சாரம்னா தென்னாட்டிலும் இலங்கையிலும் கைலி/லுங்கியைக் குறிக்கும்.

காவிரிக்கு ஒரு கோயில். அந்தக் கோயிலிலும் தாய்க்கோலம். அந்தத் தாய்க்கோல மடியில் இறைவன் குழந்தைக் கோலம். அருமை. அந்தக் காவிரியும் காவிரி மைந்தனும் தமிழ்நாட்டுக்குக் கருணை காட்ட மாட்டார்களா!!!

டீ ஆத்தல் அருமை. இதை முகப்பொத்தகத்தில் போட்டிருந்தீங்கள்ள?

//அஞ்சு மனைவியருடன் பெரிய குடும்பி நம்ம சாரநாதர் //
எனக்கு நாலுதான் தெரியுது. ஒருவேளை கணவனைக் கண்டதும் அஞ்சு மனைவியர்னு சொல்றீங்களோ? :)

said...

வாங்க விஸ்வநாத்.

எனக்கும் அந்தப் படம் ரொம்பப்பிடிச்சு இருந்தது.

said...

வாங்க ஜிரா.

குதிரைக்கு குர்ரம்ன்னா ஆனைக்கு அர்ரமா?

சாராம்சம் னு ஒன்னு இருக்கே..... 'சாறு சாரு' ன்னா எப்படி:-)

ஆதிகாலத்துலே நதிகள் எல்லோருக்குமாத்தானே இருந்தது. அரசியல் வியாதிகளால் அல்லவோ நல்ல தண்ணி கிடைக்காமல் வஞ்சிக்கப்படுகிறோம்.... :-(

ஏழாவது, ஒன்பதாவது படத்தில் கீழ்வரிசையில் பாருங்க. ஒரு பொண் தலை தெரியும். ரொம்பப்பணிவா கீழே உக்கார்ந்துருக்காள் போல !

said...

மூன்று வருடங்கள் முன்பு சாரநாதப் பெருமாளை தரிசித்து இருக்கிறேன்! அப்போது இருந்த பட்டர் விளக்கமாக வரலாறுகளை கூறி தரிசனம் செய்துவைத்தார். காவிரித்தாய் சன்னதி மட்டும் அப்போது பார்க்கவில்லை.விரிவான தகவல்கள் அழகிய படங்களுடன் உங்கள் பதிவு அருமை! நன்றி!

said...

ஆஹா அருமையான தரிசனம் ... பஞ்ச லட்சுமி சமேத சாரநாதன் :) .. ஸ்ரீ ரங்கத்துல காவிரி ரங்குக்கு என்ன சொந்தம் ?? ஆடில இவரு சீர் கொடுப்பாரே

said...

பதிவு எழுதும்போது முக்கியமான ஒரு சமாச்சாரம் சொல்ல விட்டுப்போச்சு :-( அதுக்காக சும்மா இருக்கலாமா? இப்போ படம் ஒன்னு சேர்த்துருக்கேன் பாருங்க. 'சாரா சாரா' ன்னு கொஞ்சணும்:-)

said...

வாங்க தளிர் சுரேஷ்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காவிரித்தாய் சந்நிதியாண்டை படிக்கட்டில் உக்கார்ந்தால் மனசுக்கு நிம்மதியா இருக்கு!

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

ரெங்கனுக்கு வேற வேலை என்ன? ஆன்னா ஊன்னா சீர்வரிசை அனுப்பிருவார். காவிரிக்கு மட்டுமா? ஸ்ரீவில்லிபுத்தூர், சமயபுரம் இப்படி வருசாவருசம் அனுப்புறாரே!

காவிரிக்குத் தாய்க்கு செய்யும் மரியாதையாகவும் இருக்கலாம். இல்லேன்னா ஸ்ரீரங்கத்தைச் சுத்தி மாலை போட்டுத் தீவா ஆக்கிவிட்டதுக்காகவும் இருக்கலாம். ஆடிப்பெருக்கு தினம் சீர்வரிசை போகுது. நல்லவேளை அன்றைக்காவது காவிரியில் தண்ணீர் நிறைய ஓடும் தானே!

said...

கோலும் கண்டு, சுத்தி வந்த அலுப்பு தீர ஒரு தேநீரும் குடிக்கத் தந்தீர்கள்..... நன்றி!

எனக்கும் முதல்ல நாலு தேவிகள் தானே தெரிந்தார்கள்.... உங்கள் பதில் மூலம் பவ்யமாய் அமர்ந்திருக்கும் தேவியையும் கண்டு கொண்டேன்!

தொடர்கிறேன்.

said...

திருமங்கையாழ்வாரின் இரு பாசுரஙகள். நன்றிகள். மகிழ்ச்சி.

இவ்வாழ்வாருக்கு இத்தளத்துப் பெருமாளிடம் இருந்த ஈர்ப்பு சற்று விசேடமானது என்பது இவ்விரு பாசுரங்களிலிருந்து புலனாகும். என்னவது?

திருமாலடியார்களுக்கு அவர் கொடுக்கும் தனிச்சிறப்பு. பெருமாளைவிட அடியார்களை அவர் விதந்தோத்தும் விசேடத்தைக்கொண்டது இத்தளத்துப்பாசுரங்கள் என்பது இவ்விரு பாசுரங்களோடு சேர்த்து மற்ற திருச்சேரை பாசுரங்களைச் சேர்த்து படித்துத்தெரிந்து கொள்ளலாம்.

பெருமாளே வந்து என்னைக் கவனிக்கவில்லையா என்று கேட்டதாகவும், உன் அடியார்களுக்குத்தான் என் முதல் கவனிப்பு என்றதாகவும் இத்தளப்புராணமொன்று பகர்கிறது.

இறுதியாக-

அடுத்த மடலில்.

said...

நல்ல வேளை திருமங்கையாழ்வார் திருச்சேறை பாசுர்ங்கள் அனைத்தையும் படித்துவிட்டு நீங்கள் கிளம்பவில்லை. அதுவும் ஒரு நன்மைக்கே. ஏனெனில், அப்படி படித்துவிட்டிருந்தீர்களாயின், உங்களுக்கு எழும் கேள்வி: திருச்சேறைக்குப் போகாமலே இருக்கலாமே எனறு. ஏன், என்ன அது?

முன்பு சொன்னேன். ஆழ்வார் பாகவதர்களுக்கு முதல் வணக்கத்தை வைத்தாரிங்கே. அதை ஒருபடி மேலேயே செய்துவிட்டார். அவர் சொல்கிறார்.

இத்தளத்துக்கு வந்து திருச்சேறைப்பெருமாளை வணங்க வரும் திருமாலடியார்களே! நீங்கள் செல்லுங்கள். உங்களுக்கு வசதியாக நான் இங்கே படிபோல கிடக்கிறேன். என் தலைமீது கால் வைத்து பெருமாளைப்பார்க்கச் செல்லுங்கள் என்று திருச்சேறை முதற்பாசுரத்திலேயே சொல்லிவிட, எப்படி திருச்சேறைக்குப் போக முடியும்? நீங்கள் எங்கெல்லாம நடந்தீர்களோ அங்கெல்லாம் ஆழ்வாரின் திருத்தலை மீதல்லவா கால் வைத்தீர்கள்? எனவே தீவிர ஆழ்வார் பகதர்கள் இத்தளத்தைத் தவிர்ப்பார்கள் என்பது கேள்வி.

இம்மதத்தில் பக்தர்களுக்கு இறைவனைவிட பெருத்த மரியாதையும் வணக்கமும் கொடுக்கவேண்டுமென்பது ஆழ்வார்கள் அனைவரின் தேர்ந்த கொள்கை. திருமங்கையாழ்வார் திருச்சேறையை.திருமாலடியார்களுக்குத் தான் கொடுக்கும் வணக்கத்திற்காகவே தேர்ந்தெடுத்தார் எனலாம

உங்கள் பதிவில் போடப்பட்டிருக்கும் இரு பாசுரங்கள் அதைப் பறை சாற்றும்.

அடுத்த மடலில் அம்முதற்பாசுரம் - என் தலைமீது கால்வைத்துச் செல்லுங்கள் எனபது.

said...

கண் சோர, வெம் குருதி வந்து இழிய, வெம் தழல்போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய்! வானவர் தம் கோவே! என்று
விண் சேரும் இளந்திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தான் தொழுவார் காண்மின் என் தலைமேலாரே!

(திரண்ட பொருள்:

:திருச்சேறை தலத்தில் உள்ள மாடங்கள் வாஆணீள் உள்ள சந்திரனின் அடிவயிற்றைத் தொடும்ளவு உயர்ந்தவை. இங்கு எழுந்தருளிய பெருமாளை அடியார்கள், 'நித்திய சூரிகள் தலைவனே!" என்ற்ழைப்பர். 'கொடிய கண் தளரவும் குருதி பீரிடவும் தீ ஒத்த தலைமயிரை உடைய பூதனை பூமியிலே விழும்படி முலை சுவைத்து உண்ட சிறிய குழந்தையே! என்று துதிப்பார்கள்.

இவ்வாறு பெருமாளின் திருவடிகளைத் தொழும் அடியார்கள் அடியேன் தலைமேல் தம் திருவடிகளை வைத்து உலாவுவதைக் காணுங்கள்!"

said...

இக்கோயிலுக்கு இன்னும் போகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. செல்வேன். கிளி புகைப்படங்களை மிகவும் ரசித்தேன். எங்கள் பள்ளி நாட்களில் (1970களில்)கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் உள் பிரகாரத்தில் நாங்கள் சுற்றிக்கொண்டு கிளிகளைப் பார்த்து ரசித்த நினைவு வந்துவிட்டது.

said...

கோவிலைப் பற்றிய தகவல்களைத் தெரிப்து கொண்டேன்..தொடர்கிறேன் டீச்சர் .