Monday, July 04, 2022

அனுபவம் புதுமை..................

அப்பாடா....   ஜனவரி மாசம்  முடிஞ்சது.  இது ரொம்பவே பரபரப்பான பிஸியான மாசம் எங்களுக்கு !  கோடைகாலம் & விடுமுறை காலம்.  சனம் பூராவும்  எதாவது கொண்டாட்டத்தில் இருப்பாங்க. நானே ஒரு பனிரெண்டு பதிவு போட்டுருக்கேன்னா பாருங்க :-)   







ஃபெப்ரவரி மாசம் பொறந்தாச்சு.  பள்ளிக்கூடங்கள் எல்லாம் திறந்துட்டாங்க.  இதுதான் கோடையின்  கடைசி மாசம், கொஞ்சம் அறுவடை சீஸன்  ஆரம்பிக்கும். ஒருசில நல்ல காய்கறிகளும்  கிடைக்கும் பருவம். அதுவும் ஃபிஜியில் கோடையில் வரும்  புயலும் தொடர்மழையும் வராமல் இருந்தால்தான்.  Chichinda கிடைச்சது.  பயந்துறாதீங்க..... இது நம்ம புடலைதான். குள்ள வகை.  கோவைக்காயும்  கிடைச்சது. பொன்போல் பாவித்து வாங்கி வந்து சமைப்பேன்.  எல்லாம் வருஷத்துக்கொருமுறைதான். போனால் வராது. 

உள்ளூர் சீனர்களும்   வீட்டுத் தோட்டத்துலே ஹீட்டர், ஷெல்ட்டர்  எல்லாமும் வச்சு எப்படியோ சிலபல காய்களை விளைவிக்கறாங்க. அந்தளவுக்குக் கஷ்டப்பட நம்மால் முடியறதில்லை.  மார்கெட்டில் வச்சு வித்தால்  மார்கெட் இடத்துக்கு வாடகை தரணும் என்பதால் சட்னு  கடைத்தொகுதிகளில்  வெளியே வச்சு வித்துட்டு கொஞ்ச நேரத்தில் கடையை எடுத்துருவாங்க. இத்தனைக்கும்   இந்த  மார்கெட்னு நான் சொல்றது  ரோட்டரி க்ளப் நடத்தும் மார்கெட்.  இவுங்களும் ஏகப்பட்ட ஆட்களை அங்கே செக்யூரிட்டி, அது இதுன்னு  வேலைக்கு வச்சுருக்காங்க. வாடகையில் அவுங்க சம்பளம் எல்லாம் போக மீதி (!!!!) தர்மத்துக்குப் போகுதாம். வாரச்சந்தை இது. சண்டே மார்கெட்னு சொல்வோம். நம்ம வீட்டாண்டைதான் , நம்ம பேட்டையிலேயே !
மார்கெட்ன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது.  வழக்கமாக் கடை போடறவங்களுக்கு வாடகை கொஞ்சம் குறைவு. எப்பவாவது  கடை போடறவங்களுக்கு வாடகை அதிகம்.  

நானும்  ஒரு  மலேஷியத் தோழியுமாச் சேர்ந்து இங்கே நம்மூரில்  ஒரு கடை நடத்தினோமுன்னு சொல்லி இருந்தேனில்லையா.  எல்லாம் வீட்டு அலங்காரப்பொருட்கள்தான். கொஞ்சம் இளவயதினருக்கான   வட இந்திய  வகை உடைகள் !    இதுக்காகவே நானும் தோழியும்  சென்னை, பெங்களூர் எல்லாம் போய் பார்த்துப் பார்த்துச் சாமான்கள் வாங்கினோம். சாமான்கள் வாங்கும்போது.... சனம் வந்து வாங்கலைன்னா நம்ம வீட்டு உபயோகத்துக்கு வச்சுக்கிட்டால் ஆச்சு என்றதால் நல்ல தரமான பொருட்கள் மட்டுமே! 



கடைக்குப் பெயர் 'கோலம்'.   மங்கள இசை கேஸட் போட்டு, சம்ப்ரதாய முறையில்  புள்ளையார் வச்சுக் குத்துவிளக்கேத்தி ஆரம்பிச்சோம். இதன் திறப்பு விழாவுக்கு உள்ளூர் இண்டியன் கவுன்ஸிலர் வந்து சிறப்பித்தார் !  காலம் 2003  ஜூன் மாதம். அதனால்  சாதாரண ஃப்ல்ம்ரோல்  கேமெராவில் எடுத்த படங்கள்தான் . கேமெரா நம்மவர் கைகளில். நாந்தான்  விழாவில் பிஸியா இருந்தேனே!    இவர் வழக்கம்போல்  வேடிக்கை பார்த்துக்கிட்டுக் கெமாராவை மறந்துட்டார். விழாவுக்கு வந்த மக்கள் கூட்டம்(!!!), தீனி வகைகள்னு எதையும் படமே எடுக்கலைன்னு அப்புறம்தான் தெரிஞ்சது.

என்னோட எண்ணம் என்னன்னா.... வித்தாக் கடையைத் தொடர்ந்து நடத்தலாம்.  இல்லைன்னா.... இல்லை. அதுக்காக ஒரு ஆறு மாசத்துக்கு மட்டும் ஒரு இடத்தை வேறொரு பேட்டையில் நல்ல  பிஸியான கடைகள் இருக்கும் இடத்தில் வாடகைக்கு எடுத்தோம்.  கடையில் சுமாரா விற்பனை ஆச்சு. ஆனால்  வந்த வருமானம் எல்லாம் கடை வாடகை, எலெக்ட்ரிசிடி, இன்ஷூரன்ஸ்னு  போயிருச்சு.  ஆறாம் மாசம் கணக்குப் பார்த்தால்  50% நஷ்டம்.  நாங்க ரெண்டு பாகஸ்தர்கள் என்பதால் ஆளுக்கு 25%. போனால் போகுது. புத்தி கொள்முதல் !   மொதல்லேயே  ரொம்ப கோட்டை கட்டாததால் ஏமாற்றம் அதிகம் இல்லை. இந்த அழகில் தோழியின் கணவர் கடை நடந்த சமயம்  பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாமுன்னதால்  அதுக்கொரு மாடலையும் ஃபொட்டாக்ராஃபரையும்  நியூஸ்பேப்பர்காரர்களே அனுப்பி வைக்க , ஃபோட்டோ ஷூட் எல்லாம் (நம்ம கடை ட்ரெஸ்களைப் போட்டு ) நடந்தது. தண்ட செலவுன்னு தனியாச் சொல்லணுமா :-)    

கடையை ஆறு மாசம் கழிச்சு மூடியாச். இப்ப மீதம் இருக்கும் சாமான்களை   மார்கெட்டில்  ஒரு கடை போட்டு வித்துப் பார்க்கலாமுன்னு தோழியின் கணவரே ஒரு ஐடியாக் கொடுத்தார்.  ரொம்ப ஸீதா சாதா மனுஷர். வெள்ளைக்காரர். ஒரே ஒருமுறை மட்டுமுன்னு சொல்லிட்டேன். 

ஞாயிறு காலை  கொஞ்சம் கனமில்லாத பொருட்களுடன்  (இருபது கிலோ கனம் உள்ள குத்துவிளக்குகள், தஞ்சாவூர் பெயின்டிங்ஸ்  போன்றவை தவிர ) மார்கெட்க்குப் போனோம். அங்கே போய் ஆஃபீஸில் சொல்லி  தாற்காலிகக் கடை வரிசையில் கொண்டுபோயிருந்த   ரெண்டு  மடக்கு மேசைகளில் பொருட்களை வரிசை வச்சாச்சு.  'நம்மவர்' அப்படியே குஷியா இருக்கார். அவருடைய கனவுகளில் ஒன்னு கடை நடத்தறது. அதான் ஆறுமாசம் நடத்தினோமே... அது போதாது ? 

புதுக்கடைன்னதும்  சனம் வந்து பார்த்து, பொருட்களையெல்லாம்  ரசிச்சு, ரொம்ப நல்ல கலைப்பொருட்கள்னு  சொல்லிட்டுப்போகுதே தவிர.... விற்பனை? ஊஹூம்...... 

கடைக்காக வாங்கிய ஹீட்டர் ஒன்னும் விற்பனைக்குப் போட்டுருந்தோம்.  ஒரே ஒருத்தர் வந்து அந்த ஹீட்டரை வாங்கிட்டுப்போனார்.  அந்த இடத்துக்கான வாடகை, அந்த ஹீட்டர் வித்த காசுதான்  ! Dதானிக்கு Dதீனி சரியாப் போச்சு :-)

 நல்ல வேளை இந்த மார்கெட் நேரம் காலை 9 முதல்  பகல் 2 வரை என்பதால் தப்பிச்சோம் பொழைச்சோமுன்னு எல்லாத்தையும் வாரிப்போட்டுக்கிட்டு வீடு வந்தோம்.

அப்புறம் தோழிக்கு வேண்டியதை அவுங்க எடுத்துக்கிட்டாங்க. நமக்கு வேண்டியதை நாமும்.  மீதி ஆனதை,  உள்ளூர் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குள் இருந்த  கடைக்குத் தானம் பண்ணியாச். கணக்குப் பார்த்துட்டு,  நஷ்டத்தை  நாங்க தோழிகள் இருவரும் பாகம் பிரிச்சுக்கிட்டோம் :-)

இப்ப நினைச்சாலும் ஒரே சிரிப்புதான் !  அத்தனையும் அனுபவம் இல்லையோ !!!!

நம்ம வீட்டு விளைச்சலா  சுரைக்காய், உருளைக்கிழங்கு,  கத்தரிக்காய், கொஞ்சம் வெங்காயம், முட்டைக்கோஸ் , கீரை, பீட்ரூட்  எல்லாமும் கிடைச்சது. இந்த முட்டைக்கோஸ் போனவருஷத்துச் செடியில் இருந்து கிடைச்சது. பனியில் எப்படித் தப்பிப் பிழைச்சதுன்னு தெரியலை ! 





ஒரு ஃபிஜித் தோழி   வெத்தலைச் செடி கொடுத்துருந்தாங்க.  அது கொஞ்சம் வளர்ந்ததும் பதியம் போட்டு இன்னும் ரெண்டு செடிகள் உருவாக்கினேன். 
புழக்கடைத்தோட்டத்தில் பூக்கள் எல்லாம், கண்ணுக்கு விருந்து.  தாமரை மேல் ரஜ்ஜுவுக்குப் பிரியம் போல!  பாவம் குழந்தை, மஹாலக்ஷ்மியைத் தேடறானேன்னு சொந்தமா ஒரு வெண்தாமரை செஞ்சு கொடுத்தேன்.  மோந்து பார்த்துட்டு வேணாமுன்னுட்டான் :-)  வெங்காய வாசனை பிடிக்கலை !
உள்ளூர் தோழி ஒருத்தர் 'வீட்டுச்சுரைக்காய்' வேணுமுன்னாங்க. வந்து பறிச்சுக்கிட்டுப் போகச் சொன்னேன்:-)
பொறந்தநாள் ஸ்பெஷலா, உள்ளுர் பிகானீர்வாலா ரெஸ்ட்டாரண்டில் பகல் சாப்பாடும், சாயங்காலம்  நம்ம ஹரே க்ருஷ்ணாவில் ஆரத்தி தரிசனமும் ஆச்சு. 

அடுக்களையிலும், பாத்ரூம்களிலும்  டைல்ஸ் போட்டுருப்பதால்,  அங்கே டைல்ஸ் இணைப்புக்காக போட்டு வைக்கும் Grout  மாத்த வேண்டி இருந்தது.  முக்கியமா பாத்ரூம் தரை. பழுதானால்  தண்ணீர்    அதுவழியா இறங்கிறாதா ?  grouting  கம்பெனி  தேடுனதில் ஒரு  இந்தியர் கிடைச்சார். பஞ்சாபி.  கொஞ்சம் கொஞ்சமா நம்மாட்கள் சின்னச் சின்னத் தொழில்களில் இறங்கியிருக்காங்க.  நல்லதுதான்.  ரெண்டு நாள் வேலை.  ஆச்சு !  உள்ளுர் பாலிடெக்கில் தொழில் கத்துக்கிட்டாராம். 
இந்தக் கோடை காலத்தில்தான் கட்டடம், வீடுன்னு பராமரிப்பு செஞ்சுக்கணும்.  பெயிண்ட் கடைகளில் வியாபாரம் கொடிகட்டிப்பறக்கும் காலம் இது.  நம்ம வீட்டுலே   சில கதவுகள் பெயின்ட் செஞ்சுக்கணும். எல்லாம் ரஜ்ஜுவின் வேலைதான்.  தரையில் இருந்து ஒரு ஒன்னரையடி உசரத்துக்கு நல்லா நகம் வச்சு கதவைத் தள்ளித் திறக்கறதும், மூடியிருந்தால் நல்லா நகத்தை வச்சுப் பிறாண்டுறதுமா இருக்கானே ! இந்த மாதிரி  வேலைக்கு ஆள் கிடைப்பது இப்பெல்லாம் ரொம்பவே கஷ்டமாகிருச்சு. 

https://www.facebook.com/1309695969/videos/600062311463273/

நம்ம சநாதன் ஹாலிலும் புது அடுக்களை,  புதுசா ஃபென்ஸிங், பெயிண்டிங் வேலை எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. நம்ம ஃபிஜி மக்கள், வேலைக்கு அஞ்சாதவர்கள்.  ஹாலுக்கான எல்லா வேலைகளையும் இவுங்கதான்  வாலண்டியர்களா வந்து செஞ்சு முடிச்சுருவாங்க. 

ரொம்ப நாளா ஆஞ்சி தரிசனம் இல்லையேன்னு, ஒருநாள்  சாயங்காலமாக் கடைக்குப் போகும் வழியில் ஹாலுக்குப் போனால்....  ஃபிஜி இளைஞர் ஒருவர்  உள்ளே பெயின்ட் அடிச்சுக்கிட்டு இருக்கார். அவரிடம்,  பெயின்டர் யாராவது கிடைப்பாங்களான்னு விசாரிச்சால்,  அவரே வந்து செஞ்சுதரேன்னுட்டார். கொஞ்சம் லேட்டாகும்.  ஹால் வேலையெல்லாம்  முடிக்கணும் என்றார்.

பிரச்சனையே இல்லை.... வெயில் காலம் போறதுக்குள்ளே வந்தால் சரின்னோம்.  அதுக்கு முன்னால் ஒருநாள் வந்து  என்னவேலைன்னு பார்க்கறேன்னார்.  எனக்கு அப்படியே தோட்டத்திலும்  ரெண்டு கம்பம் நடணும், அதையும் வந்து பார்க்கச் சொன்னேன்.  அந்த வீக் எண்டில்  வந்து பார்த்துட்டும் போனார். 


8 comments:

said...

புடலங்காய் 16 டாலரா? ஐந்து மாசமா கிலோ 20-40ரூபாய்ல வாங்கிக்கிட்டிருக்கேன்.

சொந்தக் கடை புத்திக் கொள்முதல்னு ஆயிடுச்சே. வெற்றி பெற்றிருந்தா பிஸியா இருந்திருப்பீங்க. ஊர் பிரயாணம் செய்ய முடியாது.

said...

தோட்டத்துக் காய்கறிகள் அழகு. கத்தரிதான் ஏதோ கண்டங்கத்தரி மாதிரி இருக்கு

said...

வீட்டுத் தோட்ட விளைச்சல்கள் சூப்பர் மகிழ்ச்சியாகவும் இருந்திருக்கும்.

said...

தோட்டம் பூக்கள், காய் எல்லாம் கன ஜோர்!! அதை விட நம்ம ரஜ்ஜுவைப் பார்த்து ரொம்ப நாளாச்சா நீங்களும் நிறைய படங்கள் போட்டிருக்கீங்களா பார்த்து ரசித்தேன். வீடியோவும் சேர்த்து என்னமா பிராண்டி கதவைத் திறக்குது!!! உள்ள நைஸா நுழைந்து கதவைத் திறக்க பிரம்மப் ப்ரயத்தனம் முதல்லயே வலதுகையால ட்ரை பண்ணிருக்கலாம்ல!! ஹாஹாஹா

பொம்மை பூனைய ஆராய்ச்சி, தாமரைய ஆராய்ச்சி....

சொந்தக் கடை நொந்தக் கடையாகிடுச்சே!! பரவால்ல, விடுங்க...அதுவும் ஒரு அனுபவம் தான். அதுக்கெல்லாம் ஒரு ராசி வேணும்னு நினைக்கிறேன்.

காயும் எல்லாம் ரசிச்சேன் துளசிக்கா

கீதா

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

நமக்குப் பரிச்சயமான காய்கள் எதையெடுத்தாலும் தீப்பிடிச்ச விலைதான். எத்தனைநாளைக்குத்தான் முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர்னு சாப்பிடமுடியுது ?

கடை ரொம்பநாள் நடத்தமுடியாது. அப்போ 2003 இல் இங்கே இந்தியர்கள் ரொம்பக் கொஞ்சம்.2011 எர்த்க்வேக் ஆனபின் 2013 க்குப்பிறகு ஸிட்டி ரீபில்ட்னு கட்டடவேலைகளுக்காக வந்த மக்களில் இந்தியர்கள் குறிப்பாகத் தென்னிந்தியர் அதிகம்.

இப்ப அநேகமா எல்லாமே ஆன்லைன் பிஸினஸ் ஆகிப்போனதால் கடை இருந்தாலுமே விற்பனை கஷ்டம்தான். போகட்டும்... எல்லாம் ஒரு அனுபவமுன்னு விடவேண்டியதுதான்.

said...

@நெல்லைத் தமிழன்,

ஏதோ ஏஷியா டிலைட்னு பெயர் இருந்ததுன்னு செடியை வாங்கினோம். சுமாரான ருசிதான்.

said...

வாங்க மாதேவி,

சொந்த விளைச்சலில் ஒரு சுகம் உண்டுதான் !

said...

வாங்க கீதா,

எங்கே ரொம்பநாளாக் காணோமேன்னு நினைச்சேன்.

அனுபவங்களே வாழ்க்கை. இல்லையோ !