ஃபிஜித் தமிழர்களுக்கு முக்கியமான விழாக்கள்னு சொன்னால் அது ஆடி மாசம் கரகம் அலங்கரிச்சுச் சுமந்துபோய் ஊர்வலம் முடிச்சு, அம்மனுக்காகப் பூக்குழி இறங்குவதும், புரட்டாசி மாசம் கோவிந்தா பூஜையும்தான். இந்தக் கோவிந்தாப்பூஜையில், 'குளுகுளாத் திருவிழா'ன்னு ஒன்னு அம்மன் கோவிலில் நடக்கும்.
நாம் ஃபிஜியில் இருந்த காலத்தில் நம்ம வீடு, கோவிலுக்குப் பக்கம்தான். ரெண்டே நிமிட்டில் கோவிலுக்குப் போயிடலாம். காரில்தான். அதான் அங்கே யாருமே நடக்கமாட்டாங்களே ! நாம்தான் ஒரு வாக் போகலாமுன்னு தெருவில் கால் வச்சவுடன், டக்னு எதாவது ஒரு கார் நம்மாண்டை வந்து ப்ரேக் போட்டுரும். எங்கே போறீங்க ? கார்லே ஏறுங்க. கொண்டு விடறேன்னு.... தொல்லை தாங்க முடியாது :-) விடுப்பா.... கொஞ்சம் காலாற நடந்து போறோமுன்னாலும் கேக்க மாட்டாங்களே !
ஆங்.... கோவிந்தாப் பூஜையில் குளுகுளா சமாச்சாரம் சொல்ல விட்டுப்போச்சே.... பெருமாளுக்காக விரதம் பிடிச்சு, அம்மன் கோவிலில் ஒரு வாரம் தங்கி இருந்து எட்டாம் நாள் அது சனிக்கிழமையாக அமையும் படி ஒரு ஏற்பாடு இருக்கும். விரதம் இருந்த மக்கள் எல்லோரும் குளிச்சுட்டு , வாயை ஒரு துணியால் கட்டிக்கிட்டு வந்து ஒரு பாத்திரத்தில் கோதுமைமாவு, சக்கரை, கொஞ்சம் நெய், ஏலக்காய் எல்லாம் கலந்து சப்பாத்திமாவு பதத்தில் பிசைஞ்சு, எலுமிச்சம்பழ சைஸில் உருட்டு வச்சுருப்பாங்க. இன்னொரு பக்கம் ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊத்தி ஒரு பக்கம் விறகடுப்பில் காய்ஞ்சுக்கிட்டே இருக்கும்.
எண்ணெய் காய்ஞ்சு ரெடியாக இருக்கும்போது, இன்னொருமுறை தலைக்குத் தண்ணீர் ஊத்திக்கிட்டு வந்து வாயில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, அம்மனை வணங்கி வரிசையாக வந்து எண்ணெய்ச் சட்டிக்கு முன் நிற்பார்கள். மாவு பந்துக்கள் எண்ணெயில் போடப்படும். அவை வெந்து பொன் நிறமாக மாறும்போது, ஒவ்வொருவராக வந்து, 'வெறும்' கைகளால், அந்த எண்ணெயிலிருந்து கோரி எடுப்பார்கள். கைகளை முக்கி குளுகுளாக்களை எடுத்து, அப்படியே கைகளை உயர்த்திக் காட்டிவிட்டு, ஒரு பாத்திரத்தில் வைப்பார்கள். விரதம் இருந்த்வர்கள் எல்லாரும் எடுத்தபின்,அவைகளை அம்மனுக்கு முன்வைத்து பூஜித்து, அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்!
ஒவ்வொருவரும் எண்ணெயில் கைவிடும்போது 'கோவிந்தா கோவிந்தா' என்ற கோஷம் முழங்கப்படும்! புரட்டாசி மாதம் என்றெல்லாம் சொல்லத்தெரியாது. ஆனால் கோவிந்தாப் பூஜை மாசம் என்றே குறிப்பிடுவார்கள். இந்த 'கோவிந்தா' முழக்கம் எல்லா திருவிழாக்களுக்குமே பொது!
பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்களின் வீடுகளிலும் இந்த புரட்டாசிச் சனிக்கிழமை களில் பூஜை நடத்திப் படையல் போடுவாங்க. நமக்கும் எல்லா வீடுகளில் இருந்தும் விசேஷ அழைப்பு வந்துரும். என்ன இருந்தாலும் நாம் ஊர்க்காரங்க இல்லையோ ! ஊர்ப்பாசம் விடாது !
நம்ம தமிழ்மக்கள் எழுப்பும் கோவில் எப்பவுமே மாரியம்மன் கோவில்தான். தனியாப் பெருமாள் கோவில்னு ஒன்னும் கட்டறதில்லை. இங்கேயே எல்லாக் கடவுளர்களுக்கும் கூடியவரை சின்னதோ பெருசோ சிலைகள் வைச்சுக் கும்பிடறதுதான். சிலைன்னு சொன்னால் நம்ம பக்கங்களில் இருக்கறமாதிரி சிற்பிகள் உருவாக்கும் கற்சிலைகள் எல்லாம் கிடையாது. மண், மரம், காகிதம்னு எல்லாம் கலந்துகட்டி உருவாக்கும் பொம்மைகள்தான். கொஞ்சம் பெரிய சைஸில் இருக்கும். கருவறையில் கூட்டமா நிப்பாங்க கடவுளர்கள் எல்லாம்.
இப்பெல்லாம் கடவுளர் சிலைகள், பொம்மைகள் இந்தியாவில் இருந்து வர ஆரம்பிச்சுருக்கு. அந்தக் காலத்தில் இதெல்லாம் ஏது ?
இங்கே நம்மூரில் மாரியம்மன் கோவில் வந்ததை முன்னே சொல்லி இருந்தேனே.... ஞாபகம் இருக்கோ ? இடம் வாங்க முடியாமல் யோசிச்சுக்கிட்டு இருந்தப்ப, ஃபிஜி நண்பர் ஒருவர், அவருடைய பண்ணையில் தாற்காலிகக்கோவில் கட்டிக்க இடம் தரேன்னதும், சட்னு போன மார்ச் மாசம் பூமி பூஜை செய்து கோவில் கட்டி, ஏப்ரல் மாசமே கடவுள் மூர்த்தங்கள் ப்ரதிஷ்டையும் சித்திரைத்திருவிழாவுமா மூணுநாள் கொண்டாட்டம் ஆச்சு. கோவில் ஒரே மாசத்துலே கட்டிட்டாங்கன்னதும், தேவலோக விஸ்வகர்மா வந்துருந்தாரான்னு தோணுதுல்லே ? கோவில்ன்னா.... கோவிலுக்கான கட்டிடமா ஒரு சின்ன அறை. கரகம் சுமந்து போனது, கடைசி நாள் கூழ் ஊத்தும் விழான்னு கூடியவரை , அவுங்களுக்குத் தெரிஞ்சமாதிரி சிறப்பாத்தான் செஞ்சாங்க.
ஃபிஜி தமிழ்மக்கள்னு நான் இங்கே குறிப்பிடுவது மொத்த தென்னிந்திய மக்களைத்தான். ஃபிஜி சங்கம் என்ற பெயரில் தென் இந்திய சன்மார்க ஐக்கிய சங்கம் (TISI Sangam )தான் நம்ம பகுதி கோவில், பள்ளிக்கூடம் எல்லாத்துக்கும் பொறுப்பேத்துக்கிட்டு நடைமுறைப்படுத்துது. ஃபிஜி மந்த்ராஜிகள் ( மதராஸிகள்) உலகின் எந்த மூலைக்குப் போனாலும் சங்கம் அங்கே ரொம்பச் சின்ன அளவிலாவது ஆடி மாசப்பூஜையும் புரட்டாசி மாசப்பூஜையும் செய்யாம விடுவதில்லை !
இதைப்பின்பற்றித்தான் இங்கே நம்மூரிலும் இந்த கோவிந்தாப்பூஜை! வழக்கம்போல் நமக்கும் அழைப்பு உண்டு. அசல் மந்த்ராஜி ஹை நா ? :-)
குளுகுளா பூஜை தவிர்த்து மற்றதெல்லாம் நல்ல முறையில் நடத்தினாங்க. எல்லாம் இந்த ஸ்ரீ மஹாமாரியம்மன் கோவிலில் தான்.
கோவில்வாசலையொட்டிய ஒரு கூடாரத்தில் தனியா ஒரு சின்ன மேடையில் பெருமாள் படத்துடன் அலங்காரம்.
கோவிந்தான்னதும் நாமம் இல்லாமலா ? சார்த்து அந்த நாமத்தை ! கோவிந்த நாம சங்கீர்த்தனம்............
விளக்கேத்திப் படையலும் போட்டாச்சு! பெருமாளுக்கு ஆரத்தி எடுக்க எல்லோருக்கும் வாய்ப்பு. கடைசியில் நம்மூர் சங்கத்த்தலைவர் ஆரத்தி எடுத்து முடிச்சார்.
இப்ப ஏப்ரல் மாசம்தான் என்றாலும் காலநிலை சரியில்லை. மழையும் குளிருமா ஒரு படுத்தல். பெரிய Gas ஹீட்டர்களை அங்கங்கே வச்சுச் சமாளிச்சோம். விருந்து முடிச்சு, வீட்டுக்கும் பார்ஸல் கொண்டு போகும் ஏற்பாடுகள் வேற !
சுமார் ஏழு தலைமுறைகளுக்கு முன்னே, ஃபிஜித் தீவுகளுக்குக் கொண்டுவரப்பட்ட மூத்தோர், எப்படி சாமி கும்பிட்டாங்களோ அதே ஸ்டைலில் இப்பவும் கும்பிட்டுக்கிட்டு இருக்காங்க ஃபிஜி மக்கள், அது தென்னிந்தியரோ வட இந்தியரோ யாராக இருந்தாலும் !
சாதிகள் இருக்கு, ஸர்நேம் இருக்கு. ஆனால் இது எதுவுமே பிரச்சனையில்லை ! ஏற்றத்தாழ்வுமில்லை. பக்தி என்ற ஒரு சமாச்சாரத்தைத்தவிர வேறெதுவும் முக்கியமில்லை. கோவில், விழாக்கள் என்பதில் பொருளுதவியைத் தவிர நேரத்தையும் உடலுழைப்பையும் தர்றதில் ஃபிஜி இந்தியர்களின் ஒற்றுமையுடன் வேற யாராலும் போட்டி போட முடியாது என்பது என் நாப்பதாண்டுகால அனுபவத்தில் நான் கண்டுணர்ந்த உண்மை.
எப்பவும் இந்த சிறப்புகுணம் நிலைச்சு நிக்கட்டும்னு பெருமாளையே வேண்டிக்கறேன்.
கோவிந்தா.... கோவிந்தா..... கோவிந்தா......
https://www.facebook.com/gopal.tulsi/posts/10220003665904528
http://thulasidhalam.blogspot.com/2021/04/blog-post.html
https://www.facebook.com/1309695969/videos/10220265488489929/
https://www.facebook.com/gopal.tulsi/posts/10221211916630041
4 comments:
அருமை நன்றி
நிறைவான கொண்டாட்டங்கள்..... அனைத்தும் ரசித்தேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்,
ரசித்தமைக்கு நன்றி !
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
Post a Comment