Thursday, March 17, 2022

ஓ..... இட் ஈஸ் அமேரிக்கன்......

ஒரு 34 வருஷங்களுக்கு முந்தியெல்லாம் இந்தப்பெயர்  இங்கே அவ்வளவா பிரபலமாகலை....  மகள் அப்போதான் பள்ளிக்கூடத்துலே ஒன்னாப்பு. அங்கே நமக்குப் பரிச்சயமான ஒரு தோழி, வுட் க்ராஃப்ட்னு ஒன்னு ஆரம்பிச்சுருந்தாங்க. நாங்களும் அந்தக் குழுவில் சேர்ந்துக்கிட்டோம். இது குழந்தைகளுக்கானது என்றாலும் மொத்தக் குடும்பத்துக்குமானது. வாரம் ஒருநாள் எல்லோரும் கூடி, எதாவது  ஆக்டிவிட்டீஸ் நடத்துவோம்.  
இங்கே கிடைக்கும்  Flax புதர்களின் இலைகளை ( நம்மூர் தாழம்பூ இலை போல இருக்கும் . இது   மவொரிகளுக்கு ரொம்ப முக்கியம். பாய் எல்லாம் இதுலே முடைவாங்க.  Maori Weaving )வச்சுத் தட்டு, கூடைன்னு பின்னுதல், குதிரையேற்றம்,  பண்ணைகளுக்குப்போய் பார்க்கறது, ரேடியோ ஸ்டேஷன், டிவி ஸ்டேஷன் விஸிட்,  தோல்பொருட்கள் டிஸைன் செஞ்சு அதுலே ஸீல் போடறது,  ரெண்டு நாளுக்கு பிக்னிக் போறோமுன்னு போய்  வேற ஊர்களில்  இருக்கும் காடுகளுக்குள் போய் வர்றது, ஈஸ்டர் முட்டைகளில்  டிஸைன் போடறது,  கடலும் நதியும் சந்திக்கும் இடங்களுக்குப்போய் தண்ணீரில் அடிச்சு வந்த  மரக்கட்டைகள், கிளைகளைக் கொண்டுவந்து  Drift wood  Dry flowers  arrangment,    க்றிஸ்மஸ் கொண்டாட்டம், அதுக்கான பரிசு அட்டைகள் தயாரிக்கிறது , அப்பப்ப எதாவது சமையல் இப்படி ஏதாவது இருக்கும். நாங்க அதில் சேர்ந்த பிறகு தீபாவளி எல்லாம் கொண்டாடினோம்.  இதே ஃப்ளாக்ஸ் இலைகளில் படகுகள் செய்து அதுக்குள் மெழுகுவத்தி ஏத்திவச்சு, உள்ளூர் ஆற்றிலே  தீபங்களை மிதக்க விட்டோம். தீப வரிசை !  உள்ளூர் பத்திரிகையில்  படத்தோடு செய்தி வந்தது !!!! 


நம்ம பள்ளிக்கூடம் இங்கத்துப் பல்கலைக்கழகத்தையொட்டியே இருக்கு என்பதால் வெளிநாடுகளில் இருந்து பல்கலைக்கழகத்துக்குத் தாற்காலிக வேலையாக (sabbatical) வரும் குடும்பம், அவுங்க பிள்ளைகளை இந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது வழக்கம். அந்த அம்மாக்கள் பள்ளிக்குப் பிள்ளைகளைக்கூட்டிவந்து விடும்போது மற்ற அம்மாக்களுடன் பேசி நண்பர்களாவதும் நடக்கும்.  எங்க குழுவிலும் மற்ற நாட்டினர் வந்து சேர்ந்துக்குவாங்க. 

அப்படி ஒரு அமெரிக்கக் குடும்பம் சேர்ந்தப்பதான் இந்த ஹாலோவீன் பற்றித் தெரிஞ்சது.  இதை மற்ற கிவித் தோழிகளுடன் பகிர்ந்துகொண்டப்ப....  நிறையப்பேருக்குத் தெரியலை. ஒரு சிலர் 'ஓ..... இட் ஈஸ் அமேரிக்கன்......' னு சொல்லி  அதைப்பற்றிப் பெருசா எடுத்துக்கலை. 

காலம் இப்படியே போகுமா.... ஒரு இருபது வருஷங்களுக்கு முந்தி பரவலா இதைப்பற்றித் தெரியவந்துச்சு. எல்லாம் கடைக்காரர்களின் வேலைதான்.  அதிலும் சீனர்கள் இங்கே வந்து குடியேறிக்கிட்டு இருந்தாங்க அப்போ.  பிரிட்டிஷார் பிடிச்சு வச்சுருந்த  ஹாங்காங்கைச் சீனாவுக்குத் திருப்பிக் கொடுத்த  நேரம் அது. சீனத்தயாரிப்புகள் ஏராளமா இங்கே இறக்குமதி ஆகிக்கிட்டு இருந்தது. அப்போதைய பிரதமர் சீனாவோடு வணிக உறவு வச்சுக்கத் தீர்மானிச்சுட்டாங்க.  (இது எவ்ளோ மடத்தனம்னு இப்ப எங்களுக்குத் தெரியுது. உரலில் தலையைக் கொடுத்தாச் )

வியாபாரத்தைப் பெருக்கச் சீனருக்குச் சொல்லித்தரணுமா ?  ஹாலோவீனுக்குன்னே  என்னென்னவோ பொருட்கள் கிடைக்க ஆரம்பிச்சது அப்போதான். பசங்களுக்குப் பயம் வர்றது மாதிரி இருக்கும் சமாச்சாரங்கள் சாக்லெட் இல்லையோ ! 

பொதுவா இங்கே  'ஸ்ட்ரேஞ்சர் டேஞ்சர்'னு பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்கறது வழக்கம்.  இதுலே ஹாலோவீனுக்கு  முட்டாய் வசூலிக்க 'ட்ரிக் ஆர் ட்ரீட் 'எப்படிப் போவாங்களாம்.  அக்கம்பக்கத்து வீடுகளுக்கு மட்டும்தான் போகணும். போரடிச்சுப்போச்சுன்னு.... மெதுவா தாய்தகப்பனை நச்சரிச்சு அவுங்க துணையோடு வெவ்வேற ஏரியாவரை போகறதெல்லாமும்  ஆரம்பிச்சு, இப்போ இந்த ஹாலோவீன்  ஒரு பெரிய பிஸினஸாகிப்போச்சு.

நம்ம வீட்டில் க்ருஷ்ணாப் பாப்பா வந்த பிறகு நாங்களும் நம்ம ஜன்னுவுக்கும் க்ருஸ்ஷ்ஷுக்கும் ஹாலோவீனுக்கு எதாவது அலங்காரம் செஞ்சு விடும் வழக்கத்தை ஆரம்பிச்சுருந்தோம்.

எங்க தெருவிலே பொதுவா எல்லோரும்  தாமுண்டு, தம் வீடுண்டுன்னு இருப்பாங்க. நம்ம பக்கங்களில் க்றிஸ்மஸ் பண்டிகைக்குக் கிறிஸ்தவர்கள் வீடுகளில் நட்சத்திர விளக்கெல்லாம் வாசலில் தொங்கவிட்டு அலங்கரிப்பாங்களே அதெல்லாம்  மூச்....  வீட்டுக்குள்ளில் மட்டும் க்றிஸ்மஸ் மரம் ஒன்னு வச்சு விளக்குப்போட்டு வைப்பாங்க. அந்தப்பக்கம் போகும்போது  ஜன்னலில் தெரியும். அதுவுமே எல்லா வீடுகளிலும் இல்லையாக்கும்.  நம்ம தெருவில் ரெண்டே வீடுகளில்தான் கொஞ்சம் விளக்கு அலங்காரம். அதுலே ஒரு வீட்டு மக்கள், வீட்டை வித்துட்டுப் போயிட்டாங்க. அதனால் இருக்கும் ஒரே வீட்டு அலங்காரம்தான் எப்பவும். அது நம்ம வீடுதான்னு  சொல்லணுமா என்ன ? 
நமக்கு வருஷத்துக்கு ஒரே ஒரு பண்டிகையா என்ன ?  சின்னதும் பெருசுமா எத்தனையெத்தனை!  நாங்க சாமி அறை ஜன்னல்களில்  நிரந்தரமா ஒரு சிம்பிளான விளக்கு அலங்காரம்  ஏற்பாடு செஞ்சுருக்கோம்.  பண்டிகை நாட்களில் விளக்குப் போட்டுருவோம்ல! க்றிஸ்மஸ்ஸுக்கும் இதெல்லாம் உண்டு.

தெருவோடு போற சனத்துக்கும்,  இந்த பதினேழு வருஷங்களில்  பழகிப்போயிருக்கும் ஏதோ விசேஷமுன்னு ! ( இந்த வீட்டுக்கு வந்து பதினேழு வருஷங்களாச்சு )


இப்படி இருக்கும் எங்க தெருவில்,  நம்ம எதிர்வீட்டுலே  ஒரு நாலைஞ்சு வருஷத்துக்கு முன்னே புதுசா யாரோ குடிவந்தாங்க.  பெண்கள் யாரும் இல்லை. நாலு ஆண்கள் மட்டும்.  அவுங்கதான் எந்த விழாவையும் கொண்டாடுறாங்களோ இல்லையோ... ஹாலோவீனை மட்டும்  கொண்டாடுறாங்க. வாசலில் கொடிக்கம்பம் நட்டு அதில் மண்டையோடும் குறுக்கே ரெண்டு எலும்பும்ன்னு இருக்கும் கொடிவேற !  ட்ரைவ் வே முழுக்க  புகை வர்ற மாதிரி, அதுக்குள்ளே சிகப்பு , பச்சை விளக்குகள்  எரியுறமாதிரியெல்லாம் அலங்காரம்!  பெரிய பேனர் ஒன்னும் கட்டிவிடுவாங்க.
இந்த வருஷம் என்னன்னா.... ஒரு பத்து நாளுக்கு முன்னேயே பேனர் கட்டியாச்சு. அதைப் பார்த்ததும்தான் அடடா.... ஹலோவீன் வருதே.... பசங்களுக்கு ஒன்னும் வாங்கலையேன்னு கடைக்குக் கிளம்பிப்போனோம் :-)   கடந்த வருஷ அலங்காரச்சாமான்கள் வீட்டில்  இருந்தாலும் ஒன்னோ ரெண்டோ புதுசா வாங்கிக்கலாம்தானே ?

மேஜிக்காரர் போட்டுக்கற அங்கியும்,  சிலந்திப்பூச்சிகளும் கிடைச்சது.  வீட்டுக்கு வந்து பசங்களுக்குப் போட்டுப்பார்த்தால்...... ரஜ்ஜூ  கூடவே சுத்திச்சுத்தி வர்றான். 

பாவம்... இவனுக்கும் போரடிக்கும்தானே ? ஏற்கெனவே இவனுக்கு விளையாட ஒரு  பல்லி செஞ்சு கொடுத்துருந்தேன். சுவரில் ஒட்டி வச்சுருவேன். இவன் வீட்டுக்குள் வந்ததும் நேராப்போய் அதைத் தள்ளிவிட்டு வாலைக் கடிச்சுத் துப்பிருவான். நாட்டுக்கு ஒரே பல்லி ! 
இப்போ சில சிலந்திகளையும் ஒட்டி விட்டுருக்கேன். போகவர இவனுக்கு இதே வேலைதான் :-)



வாசலில் கொண்டு போய்  பசங்களை நிக்கவச்சுச் சரிவருமான்னு பார்த்தேன்.  பரவாயில்லை. ஓரளவுக்கு நல்லாத்தான் இருக்கு.  

ஹாலோவீன் நாளில்  கொஞ்சநேரம் வாசலில் இருந்தப்ப, ஒரு சின்னப் பெண்குழந்தை தன் அம்மாவோடு வந்து கேட்டுக்கு அந்தாண்டை நின்னு பார்த்தது.  உள்ளே வரச்சொன்னதும் ரொம்ப சந்தோஷம். சாக்லெட் கொடுத்ததும்  தேங்க்ஸ்னு வாங்கிட்டுப் போனாள். ஜப்பான் நாட்டுக் குடும்பம்.  அம்மா நன்றி சொல்லிப்போனாங்க. 

எனக்குமே ரொம்ப சந்தோஷம்தான்.  வருஷாவருஷம் சாக்லெட்ஸ் வாங்கி வச்சாலும், நம்ம வீட்டுக்கு  யாரும் வர்றதில்லை.   ஒரு 15 வருஷத்துக்கு முன் இலங்கைத்தோழியின் குழந்தைகள் வந்து போனாங்க. 
இன்னும் கொஞ்சநேரம்  வாசலில் இருக்கலாமுன்னா மழை ஆரம்பிச்சது. போதும் கொண்டாடுனது. உள்ளே வந்து கொண்டாடுங்கன்னுட்டார்....
அதான் எதிர்வீட்டுலே அட்டகாசமாக் கொண்டாடுறாங்களே!  அது போதாதா !!!!







7 comments:

said...

அருமை நன்றி

said...

எல்லா பண்டிகைகளையும் கொண்டாடுவோம்... சிறப்பான விளக்கமும் படங்களும்.

தொடரட்டும் பதிவுகள்.

said...

ஹலோவீன் அட ஜன்னு அண்ட் கிருஷ் சூப்பர் போங்க! நம்ம ரஜ்ஜுவுக்கு போட்டு விடலைனு வருத்தமொ அதான் சுத்தி சித்தி...அவனையும் கவர் பண்ணியிருக்கீங்களே.

அலங்காரம் அழகு. அருமை துளசிக்கா. பார்த்து பார்த்து எல்லாம் அழகுபடுத்திக் கொண்டாடுறீங்க! சூப்பர். எனக்கும் இதிலெல்லாம் ஆர்வம் அதிகம்.

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

அதுதான் சரி. பண்டிகைன்னா அலங்காரமும் விருந்தும்தானே ? அனுபவிச்சால் ஆச்சு இல்லையா !!!

said...

வாங்க கீதா,

இந்த கோவிட் காலம் எங்கேயும் போக முடியாம நம்மை முடக்கிப் போடுருச்சு. இதுலே மனசும் முடங்கலானதும்தான், உற்சாகப்படுத்திக்க இந்த அலங்காரங்களில் கவனம் அதிகமாச் செலுத்த ஆரம்பிச்சு, இப்போ இதுலேயே பித்துப்பிடிச்சுக்கிடக்கேன் :-)

said...

அனைத்தும் சூப்பர்.