யானை அசைஞ்சு தின்னும், வீடு அசையாமத் தின்னுமுன்னு சும்மாவாச் சொல்லி இருப்பாங்க ? வீட்டுப் பராமரிப்பு ஏதாவது செஞ்சுக்கணுமுன்னா.... வெயிலு வருதான்னு பார்த்துக்கணும். அப்படி வரும் நாட்களில் வேலை செய்ய ஆட்கள் கிடைக்கணுமே..... எல்லாம் தோதாக அமையணுமுன்னா பயங்கரத்திட்டம் போடவேண்டி இருக்கு. செய்யும் வேலையைப் பொறுத்து குறைஞ்சது ஒரு ரெண்டுபேர்கிட்டேயாவது க்வோட் வாங்கிக்கணும்.
அதுக்கு அவுங்க நேரில் வந்து பார்த்து, வேலைக்கான செலவுத்தொகையை மதிப்பீடு செஞ்சுச் சொல்வாங்க. அவுங்க எப்போ வர்றாங்கன்னு கேட்டு அந்த நேரத்துக்கு நாம் வீட்டுலே இருக்கும்படி நம்ம வேலைகளை வச்சுக்கணும். அப்பப்பா.... சின்ன வேலைன்னாலும் எல்லாத்தையும் ஒருங்கிணைப்பு பண்ணறதுக்குள்ளே போதும் போதுமுன்னு ஆகிருது. இப்பெல்லாம் சின்ன வேலைகளுக்கு ஆள் கிடைப்பதும் கஷ்டமாகி இருக்கு... ப்ச்...
இதெல்லாமும் கூட அக்டோபர் மாசம் முதல் ஃபிப்ரவரி வரைதான்னு ..... அப்பதானே நமக்கு வஸந்தமும் கோடையும்.
ஒன்னுமில்லை.... நம்ம வீட்டுக்கு வலதுபக்கம் இருக்கும் ஃபென்ஸ் உடைஞ்சுக்கிட்டே வருது... அதை மாத்திப் புதுசு போடணும். இங்கெல்லாம் ரெண்டு வீடுகளுக்குக்கிடையில் இருக்கும் தடுப்பு வேலிக்கு ரெண்டு வீட்டுக்காரர்களும் ஆளுக்குப் பாதின்னு செலவைப் பகிர்ந்துக்கணும். நாம் நினைக்கும்போது அவுங்க, செலவு செய்ய ஒத்துக்கணுமே.... அதுக்கே ரொம்பநாள் காத்திருக்க வேண்டி இருக்கும்.
ஆனால் 2004 இல் வீடுகட்ட ஆரம்பிச்சப்ப, நிலத்தைச் சரிப்படுத்தும்போதுப் பழுதாகிக்கிடந்த ஃபென்ஸை நாமே நம்ம செலவில் புதுசாப் போட்டுவிட்டோம். அதே போல் இடப்பக்கம் இருப்பதையும் முழுசும் நம்ம செலவில்தான் போட்டோம். இடப்பக்கம் இருப்பது இதுவரை நல்லாவே இருக்கு. வலப்பக்கம் இருப்பதுதான்.... உடைஞ்சும் வளைஞ்சும் கிடக்கு. காரணம் அந்தப்பக்கம் இருக்கும் ஐவிச் செடிதான். வேலி முழுசும் சீக்கிரமா வளர்ந்து இலைச்சுவர் கட்டிரும் வகை இது. ஃபென்ஸ் மரப்பலகைகளுக்கிடையில் எப்படியோ துளைச்சு இந்தப் பக்கமும் வந்து படர்ந்துக்கிட்டே போகும். பார்க்க அழகாத்தான் இருக்குன்னாலும் ஆபத்தும் இருக்கே! செடியோட அடர்த்தியான கனம் தாங்காமல் ஃபென்ஸ் சாய்ஞ்சுக்கிட்டே போய்விழுந்துரும்.
நம்ம பக்கம் வருவதை நாம் அப்பப்போ வெட்டிவிட்டுக்கிட்டு இருந்தாலும் மூலச்ச்செடி அந்தாண்டை இருப்பதால் அவுங்களும் வெட்டிவிட்டால்தானே நல்லது. அந்த வீட்டுலே ஓனர் வசிக்கலை. வாடகைக்குத்தான் விட்டுருக்காங்க.
நாம் வீடுகட்டுனப்ப பக்கத்துவீட்டுலே ஓனர் குடும்பம்தான் .அவுங்கபக்கத்தை அப்பப்ப வெட்டிவிட்டுருவாங்க . அவுங்களுக்கு மூணு பசங்க. நமக்கு ரொம்ப தோஸ்துங்க. அவுங்க வீட்டு நாயும் பூனையும் கூட நம்ம நண்பர்களா இருந்தாங்க. இந்தச் சுட்டியில் பாருங்க பசங்களை :-)
https://thulasidhalam.blogspot.com/2007/11/blog-post_19.html
நம்ம ஊரில் நிலம் நடுங்கினபிறகு பலரும் ஊரைவிட்டுப்போயிட்டாங்க. ஒருவேளை அப்ப இவுங்களும் வீட்டை வித்துட்டுப் போயிருக்கலாம். இல்லே அதுக்கு முந்தியோ ? நாங்க நம்மவரின் கம்பெனி வேலையா இந்தியாவுக்குப் போயிருந்தோம் ஒரு ரெண்டரை வருஷத்துக்கு. அப்பதான் இந்த நிலநடுக்கமும் வந்துருக்கு. ப்ச்....
அதுக்கப்புறம் அந்த வீட்டை வாங்கிய சீனர், வாடகைக்கே விட்டுருந்தார். அதுவும் குடும்பத்துக்குன்னு இல்லை போல. அஞ்சாறு தனி ஆட்கள். தனித்தனி அறையாத் தடுத்து விட்டுருந்தார். வீட்டு ஹாலைக்கூட ரெண்டாப்பிரிச்சு ரெண்டு அறைகளா ஆக்கிட்டார். யார் இருக்காங்கன்னு கூட நமக்குத் தெரியாது. இதுலே யாராண்டைபோய் ஓனரைப்பத்தி விசாரிக்கிறது. இப்படியே பத்து வருஷம் ஓடிப்போச்சு. அந்த வீடும் பல ஓனர்களைப் பார்த்துருச்சு. ஆனால் ஒன்னு... வாங்குனவங்க எல்லாம் சீனர்களே. ஓசைப்படாம கைமாறிக்குது போல.
அப்படி ஒரு ஓனர், வீட்டை வாடகைக்கு விட, ஒரு ஏஜென்டை நியமிச்சுருக்கார். நம்ம நல்ல காலம் அவர் வெள்ளைக்காரர். காலி வீட்டுலே ஆள் நடமாட்டம் பார்த்துட்டு, நம்மவர் போய்ப் பார்த்தப்பதான் விவரமே கிடைச்சது. உடனே ஏஜெண்டுகிட்டே ஃபோன் நம்பர் வாங்கி வச்சாச். இனி நாம் இவரோடு பேசிக்கலாம். அந்த வீட்டு மரங்கள் வேற வேலிப்பக்கமா நின்னு நம்ம வீட்டுத் தோட்டத்துலே முக்கால் இடத்துக்கு வெயில் விழாம மறைச்சுரும். இங்கெல்லாம் வெயிலு ரொம்பவே முக்கியம். வருஷத்துக்கு மூணுமாசம் மட்டுமே வர்றதைக்கூடத் தடுத்துட்டா..... எப்படி ?
மரத்தைக் கொஞ்சம் வெட்டிவிட்டால் தேவலை. நம்ம பக்கம் நீண்டு வரும் கிளைகளை நாம் வெட்டிக்கணுமாம். அதான் ரூல்ஸ்னு 'நம்மவர்' சொல்றார். அதுக்கான செலவு முழுக்க நாமே செஞ்சுக்கணும். ஒரு ஆளைக்கூப்பிட்டு வெட்டி விடுவோம். நம்ம வீட்டு மரமுன்னு எதுவுமே இல்லை. நம்மால் யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லை. ஆனால் நமக்கிரண்டு பக்கங்களிலும் மரங்களால் சல்யம்.
ஏஜெண்ட் கிட்டே விவரம் சொன்னதும் ஒருநாள் வந்து பார்த்தவர், அடடா.... கொஞ்சநஞ்சம் வரும் வெயிலை இவ்ளோ மறைக்குதே.... நீங்க பாதிக் காசைக் கொடுத்தா வெட்டிவிட்றலாம். ஓனர்கிட்டே பேசறேன்னு சொன்னார். அதேபோல ரெண்டு ஆட்கள் வந்து மரத்தை ஓரளவு வெட்டி விட்டுப்போனாங்க. நமக்கும் இப்போ ஓரளவு வெய்யில் வருது.
நம்ம வீட்டுக்கு இடதுபக்க வேலியையொட்டி ஒரு பெரிய மரம் இருக்கு. Ginkgo Tree . நெடுநெடுன்னு வளர்ந்து நிக்கும். கிளை நம்ம பக்கம் வராது. ஆனால்..... இலை ? இலையுதிர்காலம் வந்ததும் அது உதிர்க்கும் இலைகளெல்லாம் நம்ம வீட்டுக்கூரையில் வந்து சேர்ந்துரும். மழைத்தண்ணீர் வடிஞ்சு போக வச்சுருக்கும் வழியில் (கட்டரிங் ) எல்லாம் புகுந்துபோய் அடைச்சுக்கும். இதையும் வருஷாவருஷம் நாங்கதான் சுத்தம் செய்ய வேண்டி இருக்கு. கொஞ்சம் உடலில் தெம்பு இருந்தவரை நாமே செஞ்சுக்கிட்டு இருந்தோம். நம்மவர் ஏணி மேலே ஏறுனதும் அதைப்பிடிச்சுக்கவும், தண்ணீருக்கான ஹோஸ் அப்பப்ப எடுத்துக்கொடுக்க, திரும்ப வாங்கன்னு சித்தாள் வேலை எனக்கு. இப்பெல்லாம் ஒரு ஆளை வச்சு வருஷா வருஷம் சுத்தம் செஞ்சுக்கறோம். காசு ? நம்ம செலவுதான். இதெல்லாம்தான் எனக்கு எரிச்சல் இங்கே.
இப்பதான் பக்கத்து வீட்டுக்காரர், மரத்தை வெட்ட மனசு வரலை.... சுத்தம் செய்யும்போது தானும் வந்து உதவறேன்னு சொல்லி இருக்கார். பார்க்கலாம். இப்ப மார்ச் முதல் இலையுதிர்காலம் ஆரம்பிச்சாச்சு. இன்னும் மூணு மாசத்துலே மரம் மொட்டை ஆகிரும்.
ரெண்டு பக்கங்களாலும் எதாவது தொல்லைகள் வருது பாருங்க..... இந்த ஃபென்ஸ் விஷயமாகவும் ஏஜெண்டுகிட்டே சொன்னதும் பாதிச் செலவை பகிர்ந்துக்கறேன்னார். ஆனால் நாம்தான் ஆளை ஏற்பாடு செஞ்சுக்கணுமாம். அதே போல் ஆச்சு. ஜேம்ஸ்ன்னு ஒருவர் வந்து பார்த்துட்டு, நவம்பர் ஒன்னு வேலையை ஆரம்பிப்பதாப் பேச்சு.
ஜேம்ஸ் வந்ததும் பரபரன்னு பழைய ஃபென்ஸை எடுக்க ஆரம்பிச்சார். நாற்பது மீட்டர் நீளம். உயரம் நூற்றியெண்பது செ.மீ. வந்ததே காலை பதினொரு மணிக்குதான். ஒரே ஒரு ஆள்தானாம். எப்பவும் தனியாத்தான் வேலை செய்வாராம். 'நம்மவருக்குத்தான்' இதிலெல்லாம் சித்தாள் வேலை ரொம்பப்பிடிக்குமே! கட்டரைத் தூக்கிக்கிட்டு உதவப்போனார். அதுக்குள்ளே மரப்பலகைகள், மரக்கம்பங்கள் எல்லாம் வந்திறங்கிருச்சு.
பகல் சாப்பாட்டுக்கப்புறம் நாங்க கொஞ்சம் வெளியே போகவேண்டிய வேலை இருக்குன்னு போயிட்டோம். மூணு மணிக்குத்திரும்பி வந்தால் அவரைக் காணோம். கேட் எல்லாம் திறந்துபோட்டுக்கிடக்கு. ஃபோன் பண்ணிக்கேட்டால் களைப்பா இருக்குன்னு ரெண்டரைக்குப் போயிட்டாராம். ஒரு வார்த்தை சொல்லி இருக்கக்கூடாது ? ஆள் பார்க்கக் கொஞ்சம் முசுடா வேறத் தெரிஞ்சதால் நான் ஒன்னும் பேச்சு வச்சுக்கலை. ஒரு 'ஹாய்' மட்டும்தான்
காலையில் ஒரு ஒன்பது மணிக்குளே வந்துருவார். திரும்பிப் போறது.... எப்ப உடல் களைச்சுப் போகுதோ அப்போ எல்லாத்தையும் அப்படியப்படியே போட்டுட்டு காணாமப் போயிருவார்.
ஏன் திருடு போகாது ?
இந்த அழகிலே... மரக்கட்டைகள் எல்லாம் விலை அதிகம். திருடு போயிருமுன்னு சொல்லிக்கிட்டு இருந்தார்.
நாம்தான் பயந்துபோய், தினமும் கேட்டை நவ்தால் பூட்டுப் போட்டுப் பூட்டிக்கிட்டு இருந்தோம். லோக்கல் திருடனுக்கு இந்தியப் பூட்டைத் திறக்கத் தெரியாதுதானே? 🤣
இப்போ மரங்கள் எல்லாம் பயங்கரமா விலை கூடிப்போனதால் நாங்க கேட்டைப் பூட்டுப்போட்டு பூட்டிவைச்சோம். காலையிலும் எப்போ வருவாருன்னு தெரியாததால் எட்டரைக்குப் பூட்டைத் திறந்துருவோம். தனி ஆள் என்பதால் சித்தன் போக்கா இருக்கு!
ஸ்கிப் ஒன்னு கொண்டுவந்து வச்சுட்டுப் போனார், அதுக்குன்னு இருக்கும் கம்பெனி ஆள். வாசலில் வச்ச ஸ்கிப்பில் பழைய வேலியில் இருந்து எடுத்த கட்டைகளைப் போட்டு dump க்கு அனுப்பணும்.
முதல்நாள் பழசை உருவிப் போட்ட பெரிய கட்டைகளையெல்லாம் ராவோடு ராவா யாரோ கொண்டுபோயிருந்தாங்க!!!
அப்பக் கட்டைத் திருடன் உண்மைதான் !
ரஜ்ஜுவுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. வேலியேறிக் குதிக்காமல் பக்கத்து வீட்டுக்குப் போய் வரலாம் :-)
கற்காலமுறைப்படித்தான் வேலையே நடந்தது. சுத்தியலை வச்சுக்கிட்டு லொட் லொட்டுன்னு ஆணி அடிக்கிறார் வேலைக்கு வந்த ஜேம்ஸ்.
காலம் மாறிப்போனதை கவனிச்சாரோ ?
என் கவலை எனக்கு !
நெய்ல்கன் இல்லையான்னா... திருடு போயிருச்சாம் ! ஏன் போகாது ? கவனமே இல்லாம , அப்படியப்படியே போட்டுவச்சுட்டுப் போனா ?
நல்லவேளையா கட்டைகள், பலகைகளை வெட்டிக்க மெஷீன் வச்சுருந்தார். ரெண்டு பெரிய ரங்கோலி ஸ்டென்ஸில் வாங்கினதால் அதுக்காக ஒரு போர்டு வேணுமுன்னு நம்மிடம் ஏற்கெனவே இருந்ததைக் கொடுத்து வெட்டிகிட்டேன்.
சித்தாள் நம்ம வேலையில் குறுக்கிடாமல் போனதால் நானும் வரப்போகும் பண்டிகைக்கான ஏற்பாடுகள் கொஞ்சம் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.
நாலாம்நாளா வேலை நடக்குது. அன்னிக்குத்தான் தீபாவளி. நம்ம சநாதன் தர்ம ஹாலில் பகல் பொழுது சிறப்புப்பூஜை என்பதால் இடையில் கொஞ்சநேரம் போயிட்டு வந்தோம்.
வந்து பார்த்தால் குதிரை, சுத்தி, ரம்பம் இன்னபிற சாமான்களை வண்டியில் ஏத்திக்கிட்டு இருக்கார். படமே எடுக்கலையேன்னு ரெண்டு க்ளிக் ஆச்சு. ஜேம்ஸுக்குச் சிரிக்கக்கூட வருதுன்னு அப்பதான் தெரிஞ்சது:-)
எப்படியோ நாலு நாளில் வேலை முடிஞ்சது.
அவர் போனதும் தோட்டத்துப்பக்கம் படம் எடுக்கபோனால், ஒரு ஆணிகள் இருக்கும் டப்பாவை விட்டுட்டுப்போயிருக்கார். ஃபோன் பண்ணிச் சொன்னதுக்கு, அதை நீங்க வச்சுக்குங்கன்னார் :-)
அடுத்த வேலை ஃபென்ஸுக்குப் பெயிண்ட் அடிக்கணும். நம்மவர்தான் அடிக்கப்போறார். எப்ப அடிக்கலாமுன்னு ஜேம்ஸாண்டை கேட்டதுக்கு 'உடனே அடிக்கலாம், இது ட்ரீட்டட் வுட்'தான்னார்.
என்னதான் Treated wood என்றாலும் ஈரம் இருக்குமேன்னு மூன்று வாரங்கள் காயப் போட்டுட்டு, அப்புறமாப் பெயிண்ட் அடிக்கும் வேலையை ஆரம்பிச்சார் நம்மவர்.
கூடமாடத் துணைக்கு நம்ம ரஜ்ஜூ. ஸ்ப்ரே கன் நம்மாண்டை இருக்குன்னாலும், அது சரி வரலைன்னுட்டு ப்ரஷால் அடிக்கறேன்னு கிளம்புன்னா என்ன செய்யறது.... தலையை எங்கே போய் முட்டிக்கிறதுன்னா..... வேணாம்மா... நா முட்டிக்கிறேன்னுச்சு ரஜ்ஜு :-)
நானும் நம்ம ஃபென்ஸ் அலங்காரத்தை ஆரம்பிச்சேன்.
7 comments:
அருமை நன்றி
தன் கையே தனக்கு உதவி தான் போலிருக்கு
நிறைய வேலைகளை நாமே தான் செய்ய வேண்டியிருக்கும் அங்கெல்லாம் இல்லையா. அமெரிக்காவில் இருக்கும் தோழி ஒருவரும் இப்படி பல வேலைகளை அவர்களாகவே செய்து கொள்வது பற்றி சொல்வார்.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க நெல்லைத்தமிழன்,
வேற வழி ?
வாங்க வெங்கட் நாகராஜ்,
வீட்டுவேலைக்கு ஆள் கிடைக்கும். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு 20 டாலர் கொடுக்கணும். கட்டுப்படி ஆகுமோ ? அதுவும் வெள்ளைக்காரர்கள் பாத்திரம் கழுவுவதைப் பார்த்தால்... நமக்கு அடுத்த வேளை சோறு செல்லாது ! அவுங்க ஸ்டைல் வேற.... நம்மது வேற....
அதுவும் மகள் சிறியவளா இருந்த போது நமக்கு மூச்சு விட நேரமில்லை. வீட்டு வேலை, கடைகண்ணிக்குப் போகும் வெளிவேலை, ஸ்கூல் வேலை, ட்ரைவர் வேலை, குழந்தைகள் லைப்ரரி வேலை, தமிழ்ச்சங்க வேலை, டெய்லர் வேலை, பூனைகளைப் பார்த்துக்கும் வேலைன்னு வண்டி ரொம்பவே ஓடிருச்சு.... இனி முடியாது.... ப்ச்.....
பென்ஸ் அலங்காரங்கள் சூப்பர்.
Post a Comment