இந்த மாட்டுக்காரப்பயல் இருக்கானே..... ரொம்பக் குருத்தக்கேடு காமிப்பான். ஆயர்பாடியில் வளர்ந்து வரும் காலம்..... எல்லோரும் மாடுங்கன்னும், பாலும் நெய்யுமா மகிழ்ச்சியோட இருக்காங்க. மழைக்கடவுளான இந்திரனுக்கு, வருஷமொருக்காப் படையல் போட்டுக் கும்பிடுறது வழக்கம். மழை இருந்தாத்தானே புல்பூண்டு செழிப்பா வளரும்? மாட்டுக்கூட்டத்துக்கு சாப்பாடு வேணாமா ?
நம்ம பயல் பார்த்தான்..... இதை இப்படியே விடக்கூடாதுன்னு..... உக்கார்ந்து யோசிச்சவன் சொல்றான்..... 'இதப்பாருங்க.... இந்த மலை இருப்பதால்தான் நம்ம மாடுகள் எல்லாம் அங்கே போய் காலாற மேய்ஞ்சும், வயிறாரத் தின்னும் சந்தோஷமாத் திரிஞ்சுட்டு வந்து நம்ம வீடுகளில் குடங்குடங்குமாப் பாலைப் பொழியுதுங்க. இந்த மலை மட்டும் இல்லேன்னா.... நம்ம கதி என்னாகும் ? அதனால் இந்த மலைக்கே நாம் படையல் போட்டு விழா எடுக்கணும்' னு.
தலைவர் மகன். கிராமத்துக்கேச் செல்லப்பிள்ளை. இவன் சொல்லி நாம எப்படிக் கேக்காமல் இருக்க முடியும் ? எதுத்துப்பேசலாமுன்னா..... இவன் முகத்தைப் பார்த்ததும் வாயடைஞ்சு போயிருது..... சரி போ.... அப்படியே செஞ்சுறலாமுன்னு விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சாங்க. விழா எப்பன்னா.... தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் !
தேவலோகத்துலே இந்திரன் ரொம்பக் குஷியா இருக்கான். மழைக்கு அதிபதி வருணன் என்றாலும், தாந்தானே தேவர்களுக்கே தலைவன். . நம்ம சொற்படிதான் கேபினட் கேட்கணும். அதனால் நாம்தான் ஒசத்தி. கீழே வேற படையல் தயாராகுது. நம்ம ஃபேவரிட் சாப்பாட்டு வகைகள் எல்லாம் தயாரிக்கிறாங்க. பாலுக்கும் நெய்யுக்கும் அங்கே குறைவா என்ன ? இஷ்டத்துக்கு ஊத்தித் தாளிக்கிறதுதானே ! எல்லாம் அட்டகாசமான ருசிதான் ! வருஷத்துக்கு ஒருநாள்னு இதுக்காகவே வருஷம் முழுக்கக் காத்துக்கிட்டு இருக்க வேண்டியதாப் போச்சு.....
படையல் போட்டுட்டாங்க. இதோ கிளம்பிப்போறேன்னு அவசரமா வர்றான். இங்கே பார்த்தால், பூஜைக்குரிய சாமியா தான் இல்லாமல். மலையைக் கும்பிட்டிக்கிட்டு இருக்கு சனம். என்ன அக்ரமம் ? இந்திரனுக்கு ஒரே கடுப்பு. இதுகளுக்கு ஒரு பாடம் கற்பிக்கணும். இப்படியே போனாப்போகுதுன்னு விட்டால் நம்ம மானம் மரியாதையெல்லாம் என்னாவது ? நம்ம அருமை தெரியவேணாம் ? வருணனுக்கு உத்திரவாச்சு. "வித் இம்மீடியட் எஃபெக்ட்.... மழையைத் திறந்து விடு ! நாஞ்சொல்றதுவரை நிப்பாட்டக்கூடாது... ஆமாம்....."
மழையாக் கொட்டித் தள்ளுறான். ஒரே வெள்ளக்காடு.... கோகுலத்துப் பெருசுங்க... 'அடடா... தப்பு பண்ணிட்டோம். இந்தப்பொடியன் பேச்சைக் கேட்டுருக்கக்கூடாது. காலங்காலமா இருக்கற வழக்கத்தை மாத்துனது நம்ம தப்புதான். இப்பக் கஷ்டப்படறது நாமா இல்லை, இவனா ? நமக்காச்சும் வீட்டுக்குளே போய் முடங்கலாம். இந்த மாடு கன்னுங்க கதி என்னாறது ? இவ்ளோதூரத்துக்கு நம்மைக் கொண்டுவந்துட்டானே... அவனைச் சும்மா விடக்கூடாதுன்னு தலைவர் வீட்டுக்கு ஓடறாங்க. அங்கே போனால் யாருக்கு வந்த விருந்தோன்னு எதையும் கண்டுக்காம நடுக்கூடத்துலே உக்கார்ந்து விழாவுக்குச் சமைச்சுப் படையல் போட்டதையெல்லாம் ஒரு கை பார்த்துக்கிட்டு உக்கார்ந்துருக்கான் பயல்.
சனம் கூப்பாடு போடுது. 'என்னாச்சு?'ன்னு நிதானமாக் கேக்கறான்! என்ன நடக்குதுன்னு உமக்குத் தெரியாதா ? வெளியே வந்து பாரும்.....
"அச்சச்சோ.... மழையாப் பெய்யுது ?" சனத்துக்கு BP எகுறுது.
கவலைப்படாதீங்க. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.....
உயிரினங்கள் எல்லாம் கடும் மழையில் மாட்டிச் செய்வதறியாது மயங்கும் நேரம், ஏழே வயதுப் பாலகன் அறுபது மைல் நீளம், நாற்பது மைல் அகலம், அறுபது மைல் உயரம் உள்ள கோவர்தன மலையை அப்படியே அலாக்காத் தூக்கி( தன் இடது கை சுண்டு விரலால்) நிறுத்தினதும் சகல உயிர்களும் மலைக்கடியில் தஞ்சம் அடைஞ்சது. ( நல்ல காலம். கை மட்டும் கொஞ்சம் தவறி இருந்தால் கூண்டோடு காலி. மழை விட்டப்பாட்டைக் காணொம். ஏழு பகலும் ஏழு இரவும் விடாத மழை. கடைசியில் இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மழையை வாபஸ் வாங்கிட்டான்.
(கீழே படம் நம்ம மதுரா பயணத்தில் வ்ருந்தாவனில் எடுத்தது )
நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலில் கோவர்தன பூஜை வருஷாவருஷம் தவறாமல் நடக்கும். முந்தியெல்லாம் கேக் செஞ்சு மலையையே உருவாக்கிருவாங்க. அங்கே இருக்கும் சின்னச் சின்ன குளம் எல்லாம் ஜெல்லியால் மின்னும் தண்ணீராக இருக்கும். குட்டிக்குட்டிப் பொம்மைகளா மாடு, கன்னு, மனுஷன், மரம் னு அலங்காரம். இங்கெல்லாம் நகருக்குள்ளே நாய் பூனையைத் தவிர்த்து மற்ற மிருகங்கள் இருக்கத் தடை என்பதால்..... பக்கத்து கிராமப் பண்ணையில் இருந்து கன்னுக்குட்டிகளைக் கொண்டுவந்து கொஞ்சநேரம் தோட்டத்தில் கட்டி வைப்பாங்க. இந்தப் பண்ணையும் கோவிலோட பண்ணைதான்.
அந்த கோவர்தனகிரி பூஜை விவரங்கள் கீழே இருக்கும் சுட்டியில்....
http://thulasidhalam.blogspot.com/2008/10/blog-post_27.html
சில வருஷங்களுக்கு முன் யாரோ புண்ணியவான் மரமலையைச் செஞ்சு கொடுத்துருந்தார். அதுலே மண்டபம், மரம் குளம் மாடு கன்னு எல்லாமே அங்கங்கே வைக்கும் விதம் தனித்தனி பொம்மைகள். அலங்கரிக்கும் வேலை எளிதுன்னாலும் பழைய அழகு இல்லை. காலமாற்றமுன்னு இருக்க வேண்டியதுதான். இருக்கோம்.
கோவிலில் இருந்து கோவர்தன பூஜை அழைப்பிதழ் வந்தது. விழாவுக்குப் போனோம். மழை வரும் அறிகுறியாக இருந்ததால் டைனிங் ஹாலில் மலையை வச்சாச். வழக்கம் போல் இல்லாமல் மூணே இளம் பக்தர்கள் மலைகளைப் பலகாரங்களினால் அலங்கரிக்கிறாங்க. கோவிட் காரணம் மலையில் இனிப்புகள் வைக்கும் மற்ற பக்தர்கள் கைகளுக்குத் தடா. ஒருவரோடொருவர் இடிச்சுத் தள்ளிப்போவதும் வேண்டாம். ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிச்ச மாதிரியும் ஆச்சு.
மலையைச் சுத்திவரக் கொஞ்சம் தள்ளி நின்னு பஜனைகளைப் பாடினோம். ஆரத்தி எடுத்தவுடன், மூலவர்களுக்கும் கருவறை ஹாலில் ஆரத்தி எடுத்து முடிச்சு, விருந்தும் சாப்பிட்டு வீடு வந்தோம்.
இதே கோவர்தன பூஜை மாதிரிதான் நம்ம ஸ்ரீ ஸ்வாமி நாராயண் கோவிலிலும் தீபாவளி முடிஞ்சதும் அன்னக்கூட் வைபவம் நடக்கும். இதுக்கு பக்தர்கள் எல்லோரும் எதாவது பலகாரம் செஞ்சு கொண்டு போவோம். ஒருமுறை நானூற்றி எம்பது தட்டுகளில் படையல். அப்போ நம்ம வகையில் தேன்குழல் செஞ்சு கொண்டு போயிருந்தோம். இந்த வருஷம் அன்னக்கூட் கோவிடின் உபயத்தால் ரொம்பவே அடக்கி வாசிக்கப்பட்டது.
இந்தக் கோவிட்டால் இன்னும் எத்தனை கஷ்டங்கள் வரப்போகுதோ..... ப்ச்....
7 comments:
அருமை நன்றி
கொண்டாட்டம் குறித்த தகவல்கள் மற்றும் படங்கள் நன்று. தொடரட்டும் கொண்டாட்டங்கள்.
அருமை.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க வெங்கட் நாகராஜ்,
மிகவும் நன்றி. கொண்டாட்டங்களை மட்டுமே எழுதிக்கிட்டுப்போறேன். துன்பியல் இப்போதைக்கு வேணாம்தானே ?
வாங்க நாமக்கல் சிபி.
இங்கே பார்த்தே ரொம்ப நாளாச்சே !
வருகைக்கு நன்றி !
கோவர்த்தன பூஜை அருமை.
Post a Comment