Friday, April 01, 2022

எண்ணிக்கை குறைஞ்சு போச்சே.......

தினம் தினம் தீபாவளி....ன்னு இருந்த காலம் போச்சு.   எந்தப் பண்டிகையா  இருந்தாலும்  வீக் எண்டுக்காக நேர்ந்து விட்ருவோம் என்பதால்  ஒரு வருஷம் பதினொரு தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் போயிருக்கோம். இதுலே ஒரே நாளில்  ரெண்டு இடங்களில் நடந்தவைகளில் எதாவது ஒன்னை மிஸ் பண்ணத்தான் வேண்டி இருந்தது.  அப்படி ஒரு நாலைஞ்சு....  இத்தனை தீபாவளிக்கு எத்தனை புடவை வாங்கறதுன்னு......  'நம்மவருக்குக் கவலை வேற' !  எல்லா க்ளப்பிலும் மெம்பர் ஆனா இப்படித்தான்....
இப்பெல்லாம்  என்ன ஆச்சுன்னு தெரியலை... சனம் ஊரைவிட்டுப்போச்சோ.... நாட்டை விட்டுப்போச்சோ...  இல்லை..... ஆரம்பகால ஜோர் குறைஞ்சு போச்சோ.... ஏதோ ஒரு காரணத்தால் எல்லாம் நீர்த்துப்போயிருச்சு போல...  காலம் மாறுதில்லையா ? ஆனால் இப்படி க்ளப், சங்கம்னு வச்சு நடத்தறது ஒன்னும் சுலபமில்லை.  தலைவராக இருக்கப்பட்டவரின்  முழு நேரத்தையும்  சங்க வேலை முழுங்கிரும்.  உபதலைவர், பொருளாளர், காரியதரிசின்னு மற்ற சிலர் இருந்தாலும் கூட...  அவுங்க எல்லோருக்கும் இது வாலண்டியர் வேலைதான்.  சங்கத்துக்காக எவ்வளவு செஞ்சாலும் சனம் ஏதாவது பிழை பிடிக்கும்.  ஒரு கட்டத்தில் எல்லாம் செஞ்சது போதுமுன்னு ஒவ்வொருத்தராக் கழண்டுக்குவாங்க. ப்ச்....  
நம்ம யோகா வகுப்பில்  அப்பப்ப ஃபுட் யோகாவும் நடத்திக்குவோம். இந்தக் குழு  கொஞ்சம் நல்லாவே இருக்கு.  இப்போ மூணு வருஷமா ஒன்னும் பிரச்சனையில்லாம ஒரு ஒழுங்கில்தான் எல்லாம் போய்க்கிட்டு இருக்கு.  முக்கியமாச் சொல்லணுமுன்னா... புதுசா வர்றவங்களைச் சேர்த்துக்கறதில்லை.  நிறையப்பேர், சேர விரும்புனாங்கதான்.  இடம் போதாதுன்றது  ஒரு  வசதியாப் போயிருச்சு. அவுங்க எல்லோரும் சேர்ந்து ஒரு குழு  அமைச்சுக்கலாம்தானே ?  இங்கேயே வந்து சேரணுமுன்னா எப்படி ?  கூட்டம் சேரச்சேர பாலிடிக்ஸ் வந்துறாது ? 

எங்க யோகா குழுவில் தீபாவளிக் கொண்டாட்டம்.  ஆளுக்கு ஒரு வகைன்னு  தீபாவளிப் பலகாரங்கள் செஞ்சு கொண்டு போவோம்.   நம்ம  வகையில் ஒரு இனிப்பு.  புது மொந்தையில்  பழைய கள்ளு. ஹாஹா.... ரவா லட்டுக்குப் புது உருவம் கொடுத்துக் கொஞ்சம் மேம்படுத்தினேன்.  புதுப்பெயரும் கொடுக்கணும். ஆல்மண்ட் சாக்லெட் ரவா ஸ்டார்.  வெற்றியோ வெற்றி :-)  

இதுபோல  Food Yoga நாளில்  வகுப்பை அரை மணியோடு நிறுத்திருவோம். அப்புறம் கொஞ்சம் யோசிச்சபிறகு... இது சரியில்லைன்னு பட்டதால்,  வகுப்பு நாட்களில் இல்லாமல் தனியாக  ஒரு சனிக்கிழமைகளில் நடத்த ஆரம்பிச்சுருக்கோம். இதுக்கும் வீகெண்ட் வேண்டி இருக்கே ! யோகா வகுப்பு மக்களும் அவர்களின் குடும்பத்தினரும் கலந்துக்கும் வகை!  


நவம்பர் மாசம் எங்க  வசந்த காலத்தின் கடைசி மாசம் என்பதால் காலநிலை மேம்பட்டு வருது. செடிகள் எல்லாம் பூத்துக்குலுங்க ஆரம்பிச்சது! கண்களுக்கும் விருந்து !  நம்ம ஊர், இந்த நாட்டின் தோட்ட நகரம்.  கார்டன் சிட்டி !  நம்ம வீட்டிலும் ஓரளவு பூச்செடிகள் வச்சுருக்கோம். மகள் கொடுத்தக் கள்ளியில் முதல் மொட்டு வருது !  இதோ இன்னும் ரெண்டு வாரங்களில் கோடை காலம் !  வெயிலுக்குத் தவம் இருப்பதேப் பொழைப்பாப் போயிருச்சு  நமக்கு.

இவ்வளவு அமர்க்களத்திலும் எனக்கொரு இடி. என்னோட சாம்ஸங் நோட் புக் மண்டையைப் போட்டுருச்சுப்பா....  உயிர் இருக்கு. ஒளி இல்லை.   கை ஒடைஞ்ச மாதிரி.....  'அதுக்கும்' வயசாகலையான்றார் நம்மவர்.  தோற்றம் 2013 நவம்பர்.  மறைவு 2021 நவம்பர். வெறும் எட்டே வயசுதான். பயணங்களிலும் என்னோடு கூடவே வர்றது வழக்கம்.  இங்கே ஒரு சீனக்கடை, கணினி சமாச்சாரங்களுக்கே இருக்கு.  எப்பப்போனாலும் கூட்டம்தான். கூட்டத்தோடு கூட்டமா நாமும் ஜோதியில் கலந்து புதுசு ஒன்னு வாங்கியாந்தோம். Galaxy Tab S7 FE. ரஜ்ஜு பார்த்துட்டு ஓக்கே சொன்னது.   அப்பப்ப அதுலே ஏறி உக்கார்ந்துக்கறவன்  இவந்தானே !  கொஞ்சம் பெருசா இருப்பது சௌகர்யம்.
இன்னொரு ஃபிஜித் தோழி, நவதுர்கா பூஜைக்குக் கூப்பிட்டு இருந்தாங்க. நம்ம சநாதன ஹால்  கட்டடம்தான்    தனிப்பட்டவர்களின் பூஜைகள்,  ஆர்யசமாஜ ஹோமம்  செய்யவெல்லாம்கூடப் பயன்படுது. நம்ம பண்டிட்டும் இருக்கார், பூஜையை நடத்தி வைக்க.  நமக்கு வீடுகளில் பூஜை நடத்தணுமுன்னா....  அவரே வந்து நடத்திக்கொடுக்கிறார்.  என்ன ஒன்னு....   வீக் எண்டாக இருக்கணும்.  நம்ம பண்டிட்  வேற ஒரு கம்பெனியில் முழு நேர வேலை செய்கிறார். இந்தப் பூஜைகளையெல்லாம்  நம்ம சனங்களுக்கு ஒரு சேவையாகத்தான்  செய்கிறார். எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போல.... பண்டிட் எல்லா வேலைகளுக்கும் போகலாம், கல்வித்தகுதியை அனுசரிச்சு !

இந்த நவதுர்கா பூஜை ஏதோ குடும்ப விசேஷம் போலத்தான் இருந்தது. தோழி, அம்மன் உபாசகி.  வீட்டு அம்மனையும் கொண்டுவந்து பூஜையில் வச்சுருந்தாங்க.  இவுங்க நம்ம  உள்ளுர் மாரியம்மன் கோவிலில் கரகம் சுமப்பாங்க .  பூஜை முடிஞ்சதும்,  நம்ம ஊரில் இந்தப் பூஜையை எப்படிக் கொண்டாடுவோமுன்னு  சபையில் பேசச் சொன்னதும்  எனக்கு 'திக்' னு ஆச்சு. நம்ம பக்கங்களில் நான் பார்த்ததில்லை.   துர்க்கான்னதும்  வடக்கர்களும், முக்கியமா பெங்காலிகளும்தானே துர்கா பூஜைன்னு செய்யறாங்க இல்லையோ !  அதனால்  கல்கத்தா  துர்கா பூஜையைப் பற்றிப் பொதுவா கொஞ்சம் பேசினேன். 

பல சமயங்களில் மன ஆறுதலுக்குப் போகுமிடம் கோவில்தானே ? வாராவாரம் முடிஞ்சவரை நம்மூர் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்குப் போய் வர்றதுதான்.  கோவிட் லெவல் அனுசரிச்சு தரிசனமும்.  நம்ம கோவிலில்  சடாரி ஸேவிக்கிறது இப்போ ரெண்டு வருஷமா உண்டு. யாரோட உபயமுன்னு தெரியலை. 


நம்ம புள்ளையார் சத்சங்கத்தில் தீபாவளி விழா. எப்பவும்  மாதாந்திர சத்சங்க ஒன்று கூடல்னு மாசத்தின் ரெண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தறோம்.  அன்றைக்குத்தான்  விட்டுப்போனப் பண்டிகைகளைச் சேர்த்துக் கொண்டாடுவது வழக்கம்.  நம்ம தமிழ்ப் பண்டிட், வெலிங்டன் நகரில் இருந்து வந்து பூஜையை நடத்திக் கொடுத்துட்டுப் போவார். நடத்திக்கும்  கம்யூனிட்டி ஹால், நம்மூர் கவுன்ஸிலோடது. வருஷம் முழுக்க ரெண்டாவது சனின்னு புக் பண்ணி இருந்தாலும் அவுங்களும் கொரோனா லெவல் அனுசரிச்சுத்தான்  சாவியைக்  கொடுப்பாங்க.  அதனால் சில சமயம்  Zoom வழியாகவும்  நடத்திக்க வேண்டி இருக்கு.   எத்தனைபேர் கலந்துக்குவாங்கன்ற கணக்கும் இல்லை....   எதுவும் நிச்சயமில்லாத தன்மை உருவாகி இருப்பதால்  எதுவானாலும் க்ருஷ்ணார்ப்பணமுன்னு நினைக்கும் நிலமைக்கு வந்தாச்சு. கடைசி நாள் வரை  நடக்குமா நடக்காதா தான்.    
 
நம்ம வகையில் ஒரு இனிப்பு செஞ்சு கொண்டு போனோம். இந்த முறை  பால் பேடா மாதிரி ஒன்னு ! 
அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை எல்லாம் நல்லபடியா நடந்தது. நம்ம யோகா குழுவினர் சிலரும் நம்ம அழைப்பின்பேரில் வந்து கலந்துக்கிட்டாங்க.













PINகுறிப்பு:  பொழுது விடிஞ்சால் யுகாதிப் பண்டிகை ! அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை அருளும்படி எம்பெருமாளை வேண்டிக்கொள்கின்றேன். 






6 comments:

said...

/ரெண்டு இடங்களில் நடந்தவைகளில்/

நடந்தவற்றில்...

ஐயா ரீச்சரே தப்பு!!

said...

விழாக்கள் குறித்த தகவல்கள் நன்று. தொடரட்டும் கொண்டாட்டங்கள்.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

said...

வாங்க கொத்ஸ்,

இப்படி ஒரு பிழை விட்டால்தான் வருவீங்க போல ! அதான்.....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி !

said...

விழாக்கள் என்றுமே மனதுக்கு மகிழ்ச்சி தான்.
உங்கள் வீட்டு பூக்களும் அழகு.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !