Tuesday, April 12, 2022

ஸ்ரீ ராமநவமி 2022

பழசை எல்லாம் எழுதிக்கிட்டு இருக்கும்போது.... திடீர்னு நடுவிலே ஒரு புதுசை எழுதறேன். சுடச்சுட  மனசுக்குள் இருப்பதைச் சொல்லாமல் நாளைக்கடத்த முடியாது.... 
நானும் ஒரு வகையில் நம்ம ஆஞ்சி ஆகிட்டேன் போல !  ( சரியாச் சொன்னால் நான் ஒரு குரங்கு ! ) எங்கெங்கே ஸ்ரீ ராமர் பெயர்  கேக்குதோ அங்கெல்லாம் ஆஞ்சி போயிருவாராம்.  நேத்து ஸ்ரீ ராமர் பிறந்த தினக் கொண்டாட்டம்.  உண்மையில்  ஃபிஜியில் இந்த விழா மொத்தம் ஒன்பது நாட்கள் நடக்குது.  அங்கே இங்கேன்னு ஃபிஜி இந்தியர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாமும்  அதே ஒன்பது நாட்கள் விழாதான் கொண்டாடுறாங்க. 

யுகாதி  முதல் நவமி வரை கொண்டாட்டம். சைத்ரமாசம் வளர்பிறை நவமி. இங்கே நம்ம ஊரிலும் நிறைய  ஃபிஜி இந்தியர்கள் இருக்காங்க.  ராமாயண மண்டலின்னு ஏகப்பட்ட குழுக்கள் ராமாயண வாசிப்பை வருஷம் முழுசும்  நடத்தறாங்க.  நம்ம ஊரில் சநாதன் தரம் ப்ரதிநிதி சபா என்ற பெயரில்  ஒரு ஹால் வாங்கியபிறகு  எல்லா பண்டிகைகளும் அங்கே நடத்திக்கறோம் என்றாலும் கூட  இந்த ராமாயண மண்டலிகள்  அங்கங்கே வீடுகளிலும் சில பொது இடங்களிலும் நடந்துக்கிட்டுதான் இருக்கு.  சநாதன் சபாவிலும் செவ்வாய்க் கிழமைகளில் ராமாயண வாசிப்பு உண்டு. 

இந்த ஒன்பது நாட்களும் நம்மால் விழாவில் கலந்துக்க முடியறதில்லை. முடிஞ்சபோது போறதுதான். பொதுவா ஒரு நாலைஞ்சு நாட்கள் போவோம். இந்த வருஷம் கோவிட் நம்மூருக்கு விஜயம் செஞ்ச காரணத்தால்  முக்கியமான சில விழாக்களுக்குக் கூடப்போக விடாமல்  தடா  போட்டுருக்கார் 'நம்மவர்'.  கொஞ்சம் பிடுங்கி எடுத்ததில்   மூணாம் நாள் விழாவுக்குப் போக முடிஞ்சது.  அதுக்கப்புறம்   கடைசி நாள்  போக முடிஞ்சது. அது நேத்து, ஏப்ரல் பத்தாம் தேதி.

எனக்குப் பண்டிகைகளில் ரொம்பப்பிடிச்சது ஸ்ரீராமநவமிதான்.  ப்ரஸாதம் செய்ய மெனெக்கெடவே வேணாம். நீர்மோர், பானகம், வடபப்பு, பழம், புஷ்பம் போதும்.

நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலிலும்  இதே நாளில்தான் கொண்டாட்டம்.  அங்கே சாயங்காலம்தான்  விழா.  


காலையில் நம்ம வீட்டில் பண்டிகை கொண்டாடினோம். சின்னதா ஒரு அலங்காரமும் சிம்பிள் ப்ரஸாதமும்.  



பத்தேகால் போலக் கிளம்பி க்றைஸ்ட்சர்ச் ஃபிஜி அசோஸியேஷன் நடத்தும் ஸ்ரீராம்நௌமி பூஜை நடக்கும் ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தோம். பள்ளிக்கூட ஹால்தான்.  பிறந்த குழந்தைக்குத் தொட்டில் கட்டும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு பக்கம் பூஜைக்கான ஏற்பாடுகள்.  ராமாயண வாசிப்பும் இருந்தது. பூஜை, பஜன் எல்லாம் ஆனதும் குழந்தையைத் தொட்டிலில் கிடத்தி ஆரத்தி, ஆட்டம் பாட்டம் எல்லாம் ஆச்சு. தொட்டிலை ஆட்டும் வாய்ப்பும் கிடைச்சது.  குழந்தையை உச்சிமோந்து கொஞ்சலாமுன்னு போனால்,  ஆதிசேஷன் படமெடுக்க,  சங்கு சக்ரத்தோடு மஹாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் ! 

என்னடா இது ராமரைக் காணோமேன்னு நினைச்சேன். அப்புறம் இதுதான் சரியான முறைன்னும் தோணுச்சு. ராமாவதாரத்தில், மஹாவிஷ்ணு ராமராகப் பிறந்தப்ப, ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும், சங்கும் சக்கரமும் பரதன், சத்ருக்னனாகவும்  கூடவே பிறந்ததாக ராமாயணம் சொல்லுது.  நாலு குழந்தைகள்  ஆனால் நாலு வெவ்வேற நக்ஷத்திரத்தில் ! ராமர் புனர்பூசம், லக்ஷ்மணன் ஆயில்யம், பரதன் பூசம், சத்ருக்னன் மகம் ! 

மாஸ்டர்ஜி ஜகத்சிங் அவர்களிடம், நம்ம கண்டுபிடிப்பைச் சொன்னதும் சரியான உருவத்தைத் தொட்டிலில் கிடத்தியதை நினைத்து சந்தோஷப்பட்டார். என்ன இருந்தாலும் 'ஊர்க்காரர்கள்' சொன்னா அது சரியாத்தான் இருக்கும் இல்லே !  

முக்கிய பூஜைகளில் ஹவன் செய்வது வழக்கம் என்றபடியால், வெளியே  திறந்த வெளியில் ஹோமம் நடந்தது.  ஹாலுக்குள்  நெருப்புப் பற்றவைக்கத் தடை இருக்கு. கொஞ்சம் புகை வந்ததும் ஸ்மோக் அலார்ம் அடிச்சு, அடுத்த சில நிமிஷங்களில் ஃபயர் எஞ்சின் வண்டி வந்துரும். 




ஹவன் முடிஞ்சதும்  திரும்ப ஹாலுக்குள் வந்து பூஜையை முடிச்சோம்.  நம்ம சநாதன் ஹாலிலும் இதே நேரம்தான்  கொண்டாட்டம்  என்பதால் இங்கே பூஜையை முடிச்சு அங்கே போய்த் தலையைக் காட்டிட்டு வரணும். அங்கே நம்ம ஆஞ்சி வேற இருக்காரே !  நல்லவேளை ரெண்டு இடங்களும்  பக்கத்துலேதான்.  ஒரு அஞ்சு நிமிட் ட்ரைவ். 



சநாதன் ஹால் போய் ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு  ஹாலுக்குள் போனால்  தொட்டிலிடும் நிகழ்ச்சி முடிஞ்சு  சபைக்கு நிதிதிரட்டும் வகையில் நடக்கும் ராஃபிள் குலுக்கல் நடக்குது. ஃபிஜி இந்தியர்களின் எல்லா விழாக்களிலும் இது வழக்கமா நடக்கறதுதான்.  எல்லா விழாக்கள் நடத்தவும் நிதி வேண்டித்தானே இருக்கு ! பரிசுப்பொருட்களும்  மக்களே வாங்கிக்கொடுக்கறதுதான். 
நம்ம பண்டிட், என் தலையைப் பார்த்ததும்,  வந்து ஒரு சீட்டு எடுக்க ச் சொன்னார். கூடைக்குள் கைவிட்டுக் கிளி மாதிரி ஒன்னு எடுத்துக்கொடுத்தேன் :-)நல்ல பரிச்சயமுள்ள தோழியின் பெயர் வந்தது !  

'நம்மவருக்குப் பசி நேரம் ' சாப்பிட்டுட்டுக் கிளம்பினோம். இனி அடுத்த பூஜை நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில். நடுவில்  ஒன்னரை மணி நேரம் இருக்கு. வீட்டுக்குப்போய் ரஜ்ஜுவுக்கும், பறவைகளுக்கும்  சாப்பாடு கொடுத்துட்டு, நாமும் ஒரு டீ போட்டுக்குடிச்சுட்டு, அஞ்சு  மணிக்குக் கோவிலுக்குப் போனோம்.


சந்நிதியில் புதுசா  ராமர், சீதை, லக்ஷ்மணன் & ஆஞ்சி !  கண்ணைக்கவரும் அழகு !  ஹைய்யோ !!!   வச்ச கண்ணை வாங்கமுடியலை.!  புதுசான்னு  கோவில் மக்கள் ஒருவரிடம் கேட்டால்.... யாரோ ஒரு பக்தர் வீட்டிலிருந்து வந்துருக்காம்.

இன்று அபிஷேகம் ஆரத்தி எல்லாம்  சாளக்ராமத்துக்கு !   நம்ம கோவில் கமிட்டியின் தலைவரின் ப்ரசங்கம் முடிஞ்சதும்  வழக்கமான தீபாராதனை !   அப்புறம் விருந்து வரிசை தொடங்கிருச்சு.  தலைவரிடம்,  ராமர் & கோ விவரம் கேட்டேன்.  இன்றைக்கு கடைசி தீபாராதனை நடத்தியவர் வீட்டுச் சிலையாம் !  அட ! நமக்குத் தெரிஞ்சவர்கள்தான்.

கூடுதல் விவரம் அந்தத் தோழியே சொன்னாங்க......இங்கே நம்மூரில்தான் வாங்குனாங்களாம்! அற்புதம் அழகுன்னு பாராட்டிட்டு, விருந்தும் முடிச்சு வீட்டுக்கு வந்தாச்சு !   

ஜெய் ஸ்ரீராம் !







8 comments:

said...

உள்நாட்டில் நாங்கள் கொண்டாடியதைவிட பலமடங்கு சிறப்பாக கொண்டாடி இருக்கிறீர்கள்.

said...

நன்றாக்க் கொண்டாடியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

said...

ஜெய் ஶ்ரீராம்...... சிறப்பான கொண்டாட்டம். ஶ்ரீராம நவமி அன்று நான் வாரணாசியில் இருந்தேன்.

said...

ஸ்ரீராம நவமி சிறப்பான கொண்டாட்டம்.

said...

வாங்க ஸ்ரீராம்,

சிறப்பு மட்டுமா..... ஒரு முறை கொண்டாடுவதோடு விடமாட்டோமே !

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

வாழ்த்துகளுக்கு நன்றி !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ஆஹா.... கொடுப்பினை !

said...

வாங்க மாதேவி,

ஒன்பதுநாட்கள் கொண்டாட்டம்!

வருகைக்கு நன்றி !