Wednesday, March 09, 2022

கொரோனா காலக் கல்யாணம்.......

நம்ம ஊரில் முதல்முறையாக............
மணமேடையைப் பார்த்ததும்  அப்படியே  அசந்து போனது உண்மை! தோழி மகளுக்குக் கல்யாணம். பொதுவா இங்கே நம்மாட்கள் எல்லோரும் நம்மூருக்குப்போய்தான் கல்யாணம் முடிச்சுக்கிட்டு வருவாங்க. சுற்றமும் சூழ....ன்னால் இங்கே முடியுமோ ?    நம்மவரின்  கல்யாணத்தைக்கூட சென்னைக்குப்போய் நடத்துனது நினைவிருக்கோ ? அது அறுபதாங்கல்யாணமாகத்தான் இருக்கட்டுமே :-)



இந்த சமயம் இங்கே தோழிக்கு ஒரு சிக்கல்.....  ஒன்னுல்லே... ரெண்டு.  கோவிட் காரணம், நியூஸி மக்களுக்கு நாட்டைவிட்டுப்போக அனுமதி இல்லைன்னு சொல்லிருச்சு அரசு. பார்டர்ஸ் க்ளோஸ்டு. ரொம்ப அத்யாவஸியமாப் போகணுமுன்னா....  திரும்பி வந்தவுடன் ரெண்டு வாரகாலத்துக்கு தனிமையில் இருக்கணும். அதுவும் அரசு ஏற்பாடு செஞ்சுருக்கும்  இடத்தில் மட்டுமே! சில முக்கிய நகரங்களில் இருக்கும் அஞ்சு நக்ஷத்திர ஹொட்டேல்களை  அரசாங்கமே வாடகைக்கு எடுத்து  MIG ன்னு(Managed isolation and quarantine )சகல வசதிகளோடு நம்ம வரிப்பணத்தில் தாளிச்சுக்கிட்டு இருந்துச்சு.  அதுவும்  எல்லாமே இலவசமாய் ! 

அண்டைநாட்டில் இப்படித்த தனிமைப்படுத்தப்படும் மக்களிடமிருந்து  குறிப்பிட்ட அளவு காசு வாங்கிக்கிட்டு இருந்ததைத் தெரிஞ்சும் கூட ! நாம்தான் தாராளப்பிரபுக்கள் ஆச்சே ! இப்படி வச்சுருந்தும்கூட  ரெண்டு வாரம் பொறுக்க முடியாம வேலி தாண்டின ஆடுகளைப்பற்றி முந்தி புலம்பி இருந்தேன்.  (எனக்கு மட்டும் அப்படி ரெண்டு வாரம் அமைஞ்சால் அக்கடான்னு  போய் தங்கிக்க ஆசை வந்ததும் உண்மை!  வீட்டுவேலை, முக்கியமா சமையல் செய்ய வேணாம், பாருங்க!  )

2020லே கோவிட் நுழைஞ்சதும் நாங்க ஆடுன ஆட்டம் இருக்கே.... அப்பப்பா.....  எல்லா வியாபார நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மற்ற அரசு, தனியார் சேவைகள்னு எல்லாத்தையும் மூடிவச்சுட்டாங்க. சம்பளம் மட்டும் சரியா வந்துருது. வீடடங்கு, வீடடங்குன்னுதான். முக்கிய சேவைகள் செய்வோர் மட்டும் பயங்கரப்பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வேலைக்குப் போய் வரணும்.  முக்கிய சேவை, ஆனால் ஆஃபீஸ் வரவேணாமுன்னவைகளின் மக்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யணும்.  மருமகனுக்கு ஜாலி. சம்பளத்தோடு விடுமுறை. மகளுக்கு ஒர்க் ஃப்ரம் ஹோம். இதுக்காக தனியா  ஒரு வொர்க் ஸ்டேஷன்ன்னு  ஆஃபீஸே எல்லாத்தையும் அனுப்பிக்கொடுத்து வீட்டாபீஸ் பண்ணிக்கோன்னுட்டாங்க. 

இதெல்லாம் கூடப்பொறுத்துக்கலாம். ஆனால் சூப்பர் மார்கெட் சமாச்சாரம் இருக்கே... அதுதான் பேஜாராப் போயிருச்சு.  எவ்ளோ நாள் அடைப்போ, சாமான்கள் கிடைக்குமோ  கிடைக்காதோ என்ற பயத்தில் மக்கள் கூட்டங்கூட்டமா  வந்து, நேராப்போய் ட்ராலியில் அடைக்கிற சமாச்சாரம் என்ன தெரியுமோ  ?  சொன்னால் நம்ம மாட்டீங்க.... டாய்லெட் பேப்பர்!  யார் கிளப்பிவிட்டாங்கன்னு தெரியலை....  பேப்பருக்காக அடிதடி வரைகூடப்போயிருச்சு.  Panic Buying  வேணாம் வேணாமுன்னு டிவியில் அரசு கதறும்படியாச்சுன்னா பார்த்துக்குங்க. ஆனால் உண்மைக்குமே  கடையில் பணியாளர்கள்  அடுக்கி வைக்கும் பொருட்கள் எல்லாம் பத்தே நிமிட்டில்  மந்திரம் போட்டாப்லெ மறைஞ்சுருது.  

இந்த அழகில் இருக்கும்போது, க்வாரன்டைனில் இருக்கும் யாராவது, உள்ளே போரடிக்குதுன்னு ஓசைப்படாமத்  தப்பி வெளியே வந்து சூப்பர் மார்கெட்டுக்குள்ளே சுத்தினாங்கன்னு சேதி கிடைச்சுச்சுன்னா ( திரும்பி க்வாரன்டைன் ஹொட்டேல் உள்ளே போகும்போது பிடிபட்டுருவாங்க.  வாசலில் ஆர்மி ஆட்கள்தான் காவலுக்கு இருக்காங்களே ! ) எந்த இடத்துக்கெல்லாம் அவுங்க போனாங்களோ.....  உடனே (தீட்டுப்பட்டுப்போச்சுன்னு)  கடையை அடைச்சு, மருந்தடிச்சுப் பக்காவா சுத்தம் செஞ்சு, அந்தக் கடையில் அப்ப வேலைக்கு இருந்த ஆட்களையெல்லாம் தனிமைப்படுத்தி,  கொரோனா வந்துருச்சான்னு  கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டு கவனிப்பு, இதன் காரணம்  சூப்பர் மார்கெட்டையே ரெண்டுமூணுநாள் மூடி வைக்கிறதுன்னு ஏகப்பட்ட கலாட்டா. 


இதுலே கடைக்குள்ளே போறதுக்கு கிழக்குப்பக்கமுன்னா,  வெளியே வர்றது  வடக்குப்பக்கம் இருக்கும்  வாசல்னு எல்லாத்தையும் தலைகீழா மாத்திவச்சுட்டாங்க.  ரெண்டு மீட்டர் இடைவெளி நபர்களுக்குள் இருக்கணும். ஒரு குடும்பத்துக்கு ஒரே ஒரு ஆள் மட்டும்தான் கடைக்குள்ளாறப் போகணும்னு ஏகப்பட்ட ரூல்ஸ்.  கடைசியில்  இதன்காரணம் குடும்பத்துக்குள்ளே சண்டை வந்ததுதான் அதிகம். நாமொன்னு சொல்ல, மற்றவர் சரியாக் காதுலே வாங்கிக்காம ( வழக்கம்போல்தான்) எதையோ வாங்கிவரன்னு  வீடே War Zone ஆகிருச்சு.

இதுலே  முக்கியமான ஒன்னு.....   இந்த  கொரோனா பரவல் எல்லாம்  வடக்குத்தீவில்தான்.  நாங்க தெற்குத்தீவு வாசிகள், நோயில்லாமல்தான் இருக்கோம்.  ஆனால்..... நாட்டுக்கு ஒன் னுன்னா அது நமக்கும்னு நாங்களும் பத்தியம் தின்னுக்கிட்டு இருந்தோம்.

ஆனால் சும்மாச் சொல்லக்கூடாது.... அப்படியெல்லாம் இருந்ததினாலோ என்னவோ.... பாதிப்பு அதிகமில்லை.  அப்போ மொத்தமே இருபத்தியாறு மரணம்தான்.  அதுக்கும்கூட  சம்ப்ரதாயமான சடங்கு ஒன்னும் வைக்க முடியாம வெறும் பத்துப்பேரோடு முடிச்சுக்கணுமுன்னு  (கல்யாணத்துக்கும் இதே பத்துபேர் கணக்குதான்) ஒரே கெடுபிடி.

கொரோனாவின் வெவ்வேற அவதாரத்தில் தெற்குத்தீவு மக்கள் தப்பிச்சுக்கிட்டே இருந்தோம். இது பலருக்குப் பொறுக்கலை. வீடடங்கு கொஞ்சம் வலிவிழந்ததும், அந்தந்த ஊர் மக்கள் ஊர் எல்லையைத் தாண்டாம வச்சுருக்கக்கூடாதோ.... ஊஹூம்....  தெற்குத்தீவுக்கு வரணுமுன்னு ஒரே பிடிவாதம். அப்படி இப்படின்னு க்றிஸ்மஸ் போனாட்டு எல்லையைத் திறந்துதான் தப்பாகப்போச்சு. 

இப்ப இன்னொரு அவதாரம் எடுத்த கொரோனாவால் நாடு முழுக்க  நோய்.  மரணங்களின் எண்ணிக்கை அதிகரிச்சுருக்கு. இந்த அழகில் நானூத்தியறுபது முதல் ஆயிரத்து நானூத்தியம்பதுவரை போகும்னு ஆரூடம் சொல்லுது அரசு.  ப்ச்....

இவ்வளவுக்கும் இடையில் தடுப்பூசி போட்டுக்கமாட்டோமுன்னு ஒரு க்ரூப் இறங்கி இருக்கு.  விவசாயிகள் போராட்டமுன்னு நம்மநாட்டில் நடந்ததைப் பார்த்துருப்பாங்க போல.....    பார்லிமென்ட்க்கு முன்னால் கூடாரம் எல்லாம் போட்டுத் தங்கிக்கிட்டுக் கத்திக்கிட்டு இருந்தாங்க. போனவாரம் அவுங்களைக் கலைச்சு விட்டதும், எங்கூருக்கு வந்து ஒரு சதுக்கத்தில் கூடாரம் போட்டுத் தங்கி இருக்காங்க.

புது அவதாரத்தில் நாளுக்கு பத்தாயிரம், இருபதாயிரம், முப்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுருக்காங்கன்னு தினம் பகல் சேதி டிவியில். அரைக்கோடி மக்கள் இருக்கும் நாட்டுலே  ஒரு மாசத்துக்குள்  எல்லோரையும் புடிச்சுரும்போல இருக்கு....  

இவ்ளோ நடந்துக்கிட்டு இருக்கும்போதும், நாட்டின் எல்லையைத் திறக்கச் சொல்லி அழுத்தம் கொடுக்கும் ஆட்களால்........  எப்படியோ தொலைங்கன்னு பார்டரைத் திறந்துட்டாங்க. அண்டைநாடுகளுக்குப் போகலாமாம். மற்ற நாட்டு மக்கள்  இன்னும் சில மாதங்களில்  வரலாமாம். 

தலைக்குமேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முழம் என்ன ?  சிச்சுவேஷன் ஸாங் பாடறேன்.

தோழி வீட்டுக் கல்யாணம் சொல்லப்போய், பேச்சு எங்கியோ போயிருச்சு.....  அடடா.... அடுத்த பதிவில் சொல்லலாமுன்னா..... இன்னும் வேறெதாவது வந்துருச்சுன்னா ?  

பேசாமக் கல்யாணவிழாப் படங்களை இந்தப் பதிவிலேயே சேர்த்துடலாமுன்னு.....  

வேணாம்....  அது தனி, இது தனின்னு பார்த்துக்குங்க....  ஆனாலும் சொன்னதுக்காக நாலைஞ்சு படம் போட்டுடலாம். ஓக்கே ? 




8 comments:

said...

//நாமொன்னு சொல்ல, மற்றவர் சரியாக் காதுலே வாங்கிக்காம ( வழக்கம்போல்தான்) எதையோ வாங்கிவரன்னு வீடே War Zone ஆகிருச்சு.// பாவம் கோபாலண்ணா.

said...

' தலைக்கு மேலே வெள்ளம்போனால்.....' இது எல்லாம் தாண்டி கடவுள் காப்பாத்தி நம்நாட்டு மக்கள் தப்பியுள்ளார்கள்.
இப்போது கொரானோ பிரச்சினைதைவிட அன்றாட பிரச்சினைகள்தான் .

பவர் கட் நாளுக்கு 7 1/2 மணி 5 1/2 மணி 3மணித்தியாலம் என தொடர்கிறது சமையல் காஸ் இல்லை . அன்றாட பிரச்சினை தலைவிரித்தாடும்போது கொரோனோ பற்றி நினைக்க ஏது நேரம்.

said...

கல்யாண கதை படிக்க வந்தா ..கொரோன சோதனை கதை ..ஹி ஹி ...

said...

தீநுண்மி நாட்கள் வேதனையான நாட்கள் தான். இங்கே இழப்புகள் அதிகம். கல்யாணம் குறித்த தகவல்கள் படிக்கக் காத்திருக்கிறேன்.

said...

வாங்க விஸ்வநாத்,

அப்ப மீ பாவம் இல்லையா ? ஙே....

said...

வாங்க மாதேவி,

ஸ்ரீலங்காவின் நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கு. மக்கள் எப்படி வாழப்போகிறார்களோ ? ப்ச்.....

said...

வாங்க அனுப்ரேம்,

கல்யாணமே ஒரு சோதனைதான் இல்லையோ !!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஆரம்பகாலத்தில் ரொம்பவே கெடுபிடியாக இருந்து சமாளிச்சாச்சு பார்த்தால்.... இப்போ இந்த ஓமிக்ரோன் தலைவிரிச்சு ஆடுது.... இழப்பு இப்பதான் அதிகமாகி வருது....