மாப்பிள்ளையும் பொண்ணுமே அதே ஜோடிதான் என்றாலுமே.... இப்படித்தான் இருக்கு !
சின்னக்குழந்தைகளைக் கேட்டுக்கிட்டா நாம் இங்கே புலம் பெயர்ந்தோம் ? விவரம் தெரியாத வயசுலே இங்கே வந்த பிள்ளைகளோ, இல்லே இங்கேயே பிறந்து வளர்ந்த நம்ம பிள்ளைகளோ... காலப்போக்கில், பருவ வயதில் காதலிக்கத்தானே செய்வாங்க ? பிள்ளைகளுடைய மகிழ்ச்சிக்காக நாம் விட்டுக்கொடுத்துப்போகத்தானே வேணும், இல்லையோ ? இங்கே வேறே எல்லாமே காதல் கல்யாணங்கள்தான் !
நமக்கு ரொம்பவே அதிர்ஷ்டம் இருந்தால் இன்னொரு இந்தியரோடு அந்தக் காதல் ஏற்படலாம். அப்படியாச்சுன்னா.... ரெண்டு குடும்பமும் ஊருக்குப்போய் ஜாம்ஜாமுன்னு கல்யாணம் முடிச்சுக்கிட்டு வந்துருவாங்க. இது கோடியில் ஒன்னு!
ஆனால் காதல், சாதி, மதம், நாடு, இனம் எல்லாம் பார்த்தா வருது ? குறைஞ்சபட்சம் ஒரே மதமாக அமைஞ்சதுன்னா அவ்ளோ பிரச்சனை இல்லை. வெவ்வேற மதமா அமைஞ்சுருதே..... அதான் இந்தியர்களுக்கு ரெண்டு கல்யாணம் ! ஒன்னு அப்பா அம்மா ஆசைக்கு. இன்னொன்னும் அப்பா அம்மா ஆசைக்குத்தான். பெற்றோர்களுக்கு , பிள்ளைகள் கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்திப்பார்க்கணும் என்ற கனவு இருக்காதா என்ன ?
தோழி மகளுக்கு உள்ளூர் வெள்ளைக்காரப் பையனுடன் கல்யாணம் நிச்சயமானதும், ஒருநாள் என்னோடு ஃபோனில் பேசுனாங்க. மனக்குறையைக் கொட்டறதுக்குத்தான். இதுலேயும் நாம் ஒரு முன்னோடியாத்தான் ஆகியிருக்கோமே.... ஊருலகம் என்ன சொல்லுமோன்னு அவுங்க பயம். 'விட்டுத்தள்ளுங்க. காதலைப் பெற்றோர் அங்கீகரிச்சால் ஊருலகம் வாய்பொத்திக்கிட்டு இருந்துரும். நாம் எதிர்ப்பு காமிக்கிறோமுன்னா.... சந்தோஷமா வந்து கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்ப்பாங்க'ன்னேன்.
ஹிந்துமுறைப்படி ஒன்னும், சர்ச் வெட்டிங்குமா ரெண்டு கல்யாணம் அமைஞ்சது. கொரோனா காரணம், குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அனுமதி இல்லை என்பதால் விருந்தினர்களை அழைப்பதில் கவனம் எடுக்க வேண்டித்தான் இருக்கு. நமக்கு எல்லோருமே நண்பர்கள் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
தோழி, கேரளநாட்டவர். ஹிந்து. இங்கே நம்ம கேரள மக்கள் ஏராளமா இருக்காங்கன்னாலும், 1% தான் ஹிந்துக்கள். நம்ம கேரளா அசோஸியேஷனில் கூட நாங்க, ஒரு அஞ்சு குடும்பம்தான் ஹிந்துக்கள். ஆனாலும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் விஷூ, ஓணம், ஈஸ்டர்,க்றிஸ்மஸ்னு பண்டிகைகளை எல்லோரும் சேர்ந்தே கொண்டாடறோம்.
பகல் பனிரெண்டுமணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். சரியான நேரத்துக்குப்போய்ச் சேர்ந்தோம். வீடடங்கி இருந்ததில் ரொம்ப நாட்களா வேறெந்த விழாவும் நம்ம கேரள அசோஸியேஷனில் நடக்காததால்..... சந்திக்காத தோழிகளை அங்கே பார்த்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே !
மணவறை மேடை அலங்காரம் சிம்பிள் & ஸ்வீட் ! நிறபறையும் நிலவிளக்குமாய் அமைச்சுக் கொடுத்த தோழிக்கு நம்ம பாராட்டுகளைச் சொல்லியாச். அவுங்களுக்கும் இதுதான் முதல் முறையாம்! நல்லவேளை... இப்பெல்லாம் ஏதாவது தேவைன்னா, இந்தியாவில் இருந்து வரவழைச்சுக்க முடியுது!
சரியாப் பனிரெண்டரைக்கு மணமகன் வருகை. பெண் வீட்டார், தாலப்பொலியோடு எதிரில் போய் மணமகன் குடும்பத்தினரை வரவேற்று மண்டபத்துள் அழைச்சுப்போய் மணமேடையில் விட்டாங்க. அதுக்குமுன் வாசலில் மணமகனுக்குப் பாதபூஜை ஆச்சு! மணமகளின் சகோதரர், மாப்பிள்ளை கையைப் பற்றிக் கூட்டி வந்து மணமேடையில் உட்கார வச்சார்.
இதோ மணமகளைப்பெற்றோர் மேடைக்கு அழைத்து வந்தாங்க. சபையை வணங்கிட்டு, மணப்பெண்ணும் மேடையில் அமர்ந்தாங்க.
அடுத்து, மணமகன், பெரியோர்களிடம் ஆசிகள் வாங்கிக்கொள்வது. குடும்பத்தில் மூத்தோருக்குத் தாம்பூலம் கையில் கொடுக்கணும். அதை வாங்கிக்கிட்ட பெரியவர்கள் மணமகன் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பாங்க. அதேபோல மணப்பெண்ணும் தாம்பூலம் கொடுத்து குடும்பப் பெரியவர்களிடம் ஆசிகள் வாங்கிக்கணும்.
அடுத்துத் தாலி கட்டுதல், மாலை மாற்றுதல், மணமகன் பெண்ணுக்குப் புடவை கொடுத்தல் ஆச்சு! இங்கெல்லாம் ஹாலில் அக்னி வளர்க்க முடியாது என்பதால் விளக்கில் இருக்கும் ஜோதியே.... அக்னி சாட்சி !
ஆகக்கூடி அரைமணி நேரத்தில் கல்யாணம் நடந்து முடிஞ்சது. அதுக்குப்பின் கல்யாணவிருந்து. உள்ளூர் ரெஸ்டாரண்ட் உணவு சப்ளை.
விருந்து முடிஞ்சதும், நடனக் கச்சேரி! மணப்பெண் ஒரு நடனமணி. தன் தோழிகளுடன் ரெண்டு க்ரூப் டான்ஸ், மணமகனுடன் ஒரு டான்ஸ்னு ஜமாய்ச்சுட்டாங்க. மாப்பிள்ளைக்கு பயங்கரமா பயிற்சி கொடுத்துருக்காங்க... ஒரு சிறு தவறும் இல்லாமக் கச்சிதமா ஆடினார் மாப்பிள்ளை !
அழகான அருமையான நிகழ்ச்சிகள்! தோழிக்கும் கணவருக்கும் நம் இனிய பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் !
இந்தவாரம் ஹிந்து முறைப்படி ஆச்சு. அடுத்த வாரம் சர்ச்சுலே மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடு !
================================================================
8 comments:
இந்த இடுகை எனக்குப் பிடித்திருக்கிறது அக்கா. <3
பிறந்த நாட்டில் இருந்திருந்தால் கூட, யார் என்ன சொல்லியிருந்தாலும், என் பிள்ளைகள் இஷ்டத்துக்கு மாறாகப் போயிருக்க மாட்டேன். //காதலைப் பெற்றோர் அங்கீகரிச்சால் ஊருலகம் வாய்பொத்திக்கிட்டு இருந்துரும்.// இது என் வசனம், ஆனால் என் பேச்சு வழக்கில். :-) ஆரம்பத்தில் சமுதாயத்துக்காக எதிர்த்துவிட்டு குழந்தை பிறந்த பின்னாலோ, ஒருவருக்கு உடல்நலமில்லை எனும் போதோ சேர்ந்து / சேர்த்துக் கொள்பவர்களைப் பார்க்கையில் கோபம் வரும். என்னதான் மன்னித்ததாக இருந்தாலும் ஆரம்பத்தில் சின்னவர்கள் மனதை வருத்தியது இல்லையென்று ஆகாது இல்லையா? வாழ்க்கையை சந்தோஷமாக ஆரம்பிக்கும் உரிமையைக் கெடுத்துவிட்டு, பிறகு ஆயிரம் செய்தாலும் ஈடு செய்ய முடியாது. :-(
என் மூத்தவருக்கு இரண்டு கிறீஸ்தவ மதப் பிரிவுகளுக்குப் பொதுவான முறையில் திருமணம் நடந்தது. வரவேற்புக்கு மருமகள் சேலை அணிந்து வந்தார். (அவர் முன்பே பல முறை அணிந்திருக்கிறார்.) சின்னவர் திருமணம் - குஜராத்தி முறையில் ஒரு தடவையும் எங்கள் பங்குக்கோவிலில் (மருமகள் ஆசைப்படி) ஒரு முறையும் நடந்தது. ஏற்பாடுகள் எல்லாமே பிள்ளைகள் இஷ்டம் என்று விட்டுவிட்டோம். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலை கேக் மட்டும்தான்.
இனிய நிகழ்வு. வாழ்க மணமக்கள்.
கல்யாண போட்டோக்கள் அழகாக வந்திருக்கின்றன. தொழில்முறை புகைப்படக் கலைஞர் எடுத்தது போல் உள்ளது.
கல்யாணம் கொரோனா காலத்திற்கு முன்பா? ஒருத்தரும் மாஸ்க் அணியவில்லை. 2 மீட்டர் இடைவெளி இல்லை.
கேரள இந்து கல்யாணங்களில் அக்னி வளர்ப்பது கிடையாது. மந்திரங்கள் ஓதுவதும் கிடையாது. நூலில் கோர்த்த தாலி கிடையாது. தங்க செயினில் கோர்த்த மின்னு தான் தாலி.
திருமண நிகழ்வுகள் அனைத்தும் சிறப்பு. படங்கள் அழகாக உள்ளது. மணமக்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வாங்க இமா.
கல்யாணம் செய்து சேர்ந்து வாழப்போவது அவுங்கதானே ? அதான் பிள்ளைகள் விருப்பத்திற்கு தடை சொல்வதில்லை. மேலும் இங்கெல்லாம் ப்ரொப்போஸ் செய்யுமுன் நல்லா ஆலோசனை செய்துதான் முடிவெடுக்கறாங்க. பொறுப்பாக நடந்துகொள்ளும்போது நாம் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதுதானே அழகு !
வாங்க மாதேவி,
மணமக்களை வாழ்த்தியதற்கு நன்றிப்பா !
வாங்க ஜயகுமார்,
கொரோனா ஆரம்பம் முதல் இந்த ஜனவரி 2022 வரை எங்க தெற்குத்தீவில் நோய் இல்லை. வீடடங்கு, வெவ்வேற லெவலில் இருந்ததெல்லாம் பொதுவா நாட்டுக்கு என்பதால் நாங்களும் அந்த பத்திய சாப்பாட்டை, நல்லா இருக்கும்போதே சாப்பிட்டோம்.
கல்யாணம் கொரோனா காலத்தில்தான். ஆனால் விழாவில் கலந்துகொண்ட எல்லோரும் ரெண்டு தடுப்பூசிகள் போட்டுக்கிட்டவங்களே! அப்போ எங்க ஊரில் கொரோனாவே இல்லை. எல்லாம் வடக்குத்தீவில்தான்.
//கேரள இந்து கல்யாணங்களில் அக்னி வளர்ப்பது கிடையாது. மந்திரங்கள் ஓதுவதும் கிடையாது. நூலில் கோர்த்த தாலி கிடையாது. தங்க செயினில் கோர்த்த மின்னு தான் தாலி. //
ரொம்பச்சரி. ஆனாலும் சில குடும்ப வழக்கங்களில் ப்ரோஹிதர் உண்டாம் !
வாங்க வெங்கட் நாகராஜ்,
மணமக்களை வாழ்த்தியமைக்கு நன்றி. இருவரும் அழகு என்பதால் படங்களும் அழகாகவே அமைஞ்சு போயிருக்கு !
Post a Comment