Wednesday, December 27, 2017

ஸ்ரீ லக்ஷ்மிநரஸிம்ம ஸ்வாமி ஆஃப் சோழலிங்கபுரம் ! (இந்திய மண்ணில் பயணம் 94)

பெரியமலை  அடிவாரத்துலே நிக்கும் ஆஞ்சியைப் போற போக்குலேயே கும்பிட்டுக்கிட்டு ஊருக்குள் இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர் கோவிலுப்போய்ச் சேர்ந்தோம்.  4.6 கிமீபயணம்.  காமணி ஆயிருச்சு.
இங்கே மூலவர் யார் தெரியுமோ?   பெரிய மலை யோகநரஸிம்ஹரின் உற்சவர் பக்தவத்ஸலர்தான்!   உற்சவருக்குன்னு தனிக்கோவில் இருப்பது  உலகத்துலேயே இது ஒன்னு தானாம்!  அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில் அழகான அஞ்சு நிலைக் கோபுரத்தோடு அதோ.....
அடுத்தடுத்து   ஒரு ஜோடி திருவந்திக் காப்பு மண்டபங்கள்!  ஒருபக்கம் தேர் ஷெட் !
கடந்து  போனால் வண்டி நிறுத்த  இடம் கிடைச்சது.  கோபுரவாசலுக்கு இந்தாண்டை நவீன கழிப்பறை!  இது ஒரு பக்கமுன்னா இதுக்கு எதிர்வாடையில் தேவஸ்தான அலுவலகம். சோழசிம்மபுரம்னு  எழுதி இருக்கு!  பழைய பெயர்   சோழலிங்கபுரம்.   அதுக்கப்புறம்....   சோழசிம்ம புரம்!    இதுதான் எப்படியெப்படியோ மருவி  சோளிங்கபுரம்  என்றும் இருந்து   ஷோளிங்கர்னு ஆகி இருக்கு இப்போ!

 சோழர்கள் ஆட்சி காலத்துக்குப்பிறகு,  ஆற்காடு நவாப், அப்புறம் திப்பு சுல்தான்  ஆட்சிக்கு உட்பட்டு  இருந்த ஊர்.  கிழக்கிந்திய கம்பெனிக்கும், மைசூர் அரசர்களுக்கும் இடையில் நடந்த போர் இங்கேதான் நடந்ததாக வரலாறு!  இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து வாசிக்கத்தான் வேணும்.  எப்படியோ சரித்திரத்தில் இடம் பெற்ற ஊருக்குள் நுழைஞ்சுருக்கோம்! 
ராஜகோபுரம் கடந்து உள்ளே போறோம். கொடிமரத்தைக் காணோம்!  பலிபீடமும், விளக்கு மேடையும் மட்டும்தான்.   மேடையில்  சார்த்திவச்சச் சதுரக் கல்லில் நாமம்!  கீழே....   பெருமாள் பாதங்கள்! நமக்கு வலதுபக்கம்  மதில்சுவரையொட்டி ஒரு நூலகம்! 


வாவ்!!!   அங்கோர் வாட் கோவில்களில்தான் கோவிலினுள்ளே லைப்ரரின்னு  இருக்கறதைப் பார்த்திருக்கேன்.  இப்போதான் முதல்முதலா  இங்கே தமிழ்நாட்டில். வேற ஊர் கோவில்களில் இருக்குமோ என்றாலுமெனக்குத் தெரிஞ்சு என் கண்ணில் பட்டது இப்பதான்!
பலிபீடத்துக்கு முன்னால் பெரிய மண்டபம் ஒன்னு!  பக்கவாட்டில் ஏறிப்போகும் படிக்கட்டுகள்.  முன்னோர்கள் நடமாட்டம் அதிகம் என்பதால்.... மண்டபத்து வெளிப்பக்கமெல்லாம்  கம்பிவலைகள்தான்! மண்டபத்தின் ஆரம்பத்திலே நடுசென்ட்டரில் அழகான சின்ன கோபுரத்தோடு பெரிய திருவடி சந்நிதி!   மண்டபத்துக்குள் போய்  அவரை தரிசிக்கவேணும்.
கோபுரத்தில் ஆதிசேஷன் படுக்கையில் பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியருடன். நாபிக் கமலத்தில் ப்ரம்மா!
பொதுவாக    மண்டபம், மதில் சுவர் ஓரங்களில் பெருமாள் கோவில் என்றால் கருடாழ்வாரும், சிவன் கோவில் என்றால் நந்தியும் இருப்பது வழக்கம்தானே?  இங்கே   கருடாழ்வார் இருக்கார். கூடவே கொஞ்சம் தள்ளி  வெண்ணெய் குடத்தோடு கண்ணன்!


இந்த மண்டபத்தில்தான் தாயாருக்குத் திருமஞ்சனம் நடக்கப்போகுதுன்னு சொன்னாங்க.  நடுவில் இடம் விட்டு  கயிறு கட்டி விட்டதைப் பார்த்து, ஒரு தூணோரம் இடம் பிடிச்சு உக்கார்ந்தார் நம்மவர்.
நம்ம 'காஞ்சி இருவர்'  எங்காவது இருக்காங்களான்னு என் கண்கள் தேடுனது உண்மை.  ஊஹூம்.....   காணலை....

இன்னும் அபிஷேகம் ஆரம்பிக்கலைன்னு நான் மட்டும்  கோவிலைச் சுத்திப் பார்க்கப் போனேன்.


முன்பக்கம் ஆரம்பிக்கும் மண்டபம் அப்படியே  பின்னால் நீண்டு போய்க்கிட்டு இருக்கே!  பிரகாரத்தின்  இந்தப்பக்கம் கோவில் கிணறு. அதுக்கு எதுத்தாப்லே முகப்பில் பரமபதநாதர் இருக்கார். இது வாகனமண்டபம் போல இருக்கு.
கோவில் வளாகத்தைச் சுத்திப்போகும் மண்டபங்களைப் பார்த்தால்.... உற்சவருக்கு இத்தனாம் பெரிய கோவிலான்னு  மலைப்பு வந்தது உண்மை!

மண்டபத்தூண்களைப் பார்த்தால் எதோ  ஆயிரங்கால் மண்டபத்துள்ளே வந்துட்டமாதிரி இருக்கு!
பெருமாள் குடைகள் !!!  எனக்கு ரொம்பவே பிடிக்கும் :-)
நம்ம ரெங்கனுக்கு ஒரு சந்நிதி இங்கே!  சந்தனம் பூசி மெழுகி வச்சுருக்காங்க. கிடக்கட்டும், கிடந்தோன்னு அந்தாண்டைப்பக்கம் வந்தால்..... சொர்கவாசலுக்கு  ஒரு நுழைவு வாயில்!அட!   கதவு எப்படி இருக்குன்னு  கொஞ்சம் உள்ளே தள்ளிப்போய்ப் பார்த்தால்.....  அச்ச்சச்சோ.....

கோவில் நந்தவனம்... நல்ல பராமரிப்பில்!

வலம் முடிக்கும் சமயம் முன் மண்டபத்துப் பின் பாகத்துலே  ஒரு படிக்கட்டுகள்,  பக்கவாட்டில்!   நிமிர்ந்து பார்த்தால்  அங்கே ஒரு விமானம் !
சரி.... எதோ சந்நிதி இருக்கு போலன்னு போய்ப் பார்த்தால்.........
ஹைய்யோ!!!!  நம்ம  பெருமாள்!  நின்ற கோலத்தில்!  அச்சு அசலா  திருப்பதியான்!

பட்டர் இருந்தார்.  தீர்த்தம் சடாரி கிடைச்சது! என்னடா   பெருமாளெ.... யார் கண்ணுக்கும் படாம இங்கே வந்து ஒளிஞ்சுண்டுருக்காய்? தாயாருக்குத் தெரியாமல் எதாவது கடுபடா?
 நம்மவருக்கு இவரைக் காண்பிக்கலாமேன்னு  முன்மண்டபத்துக்குள் போனால் தாயார் சுதாவல்லி வந்து  நின்னு, திருமஞ்சனம் ஆரம்பிச்சுருக்கு!
கண்குளிரப் பார்த்தேன்.  இங்கே   உற்சவரே மூலவர் என்பதால்.... படங்கள் ஒன்னும் எடுக்கலை.  (எடுக்கலாமான்னு  கேட்டுருக்கலாமோன்னு இப்போ தோணறது!)  போகட்டும்......   அடுத்த முறை  பார்க்கலாம் :-)
அந்த இருவர் மட்டும் இந்தக் கோவிலைப் பத்திச் சொல்லலைன்னா.... எனக்குத் தெரிஞ்சுருக்காது.   பெரியமலை, சின்னமலை தரிசனம் முடிச்சு அப்படியே திரும்பிப் போயிருப்போம்! இப்பவும்  அவுங்களைச் சுத்திமுத்தித் தேடினேன்.  காணோம்! கண்ணில் படலை.....

திருமஞ்சனம் முடிஞ்சு  அலங்கரிக்கணும்.   தாயாரைச் சுத்திவர ஒரு திரை போட்டாங்க. எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று பட்டர்ஸ்வாமிகள் சொன்னார்.  அவ்ளோதான்....  நம்மவருக்கு.... பொறுமைத்திலகம்னு  நம்ம சிஜி கொடுத்துருந்த பட்டத்தைக் கேன்ஸல் பண்ண வேண்டியதாப் போச்சு.

இப்பக் கிளம்புனா சரியா இருக்கும். ஒன்னரை மணி நேரம் ஆகும் காஞ்சிபுரம் போக......   னு  ஆரம்பிச்சுட்டார்.  கூடவே   'கிடைச்சவரை போதும்'னு இருக்கக் கத்துக்கோ'ன்னு   உபதேசம் வேற....

இங்கத்துப் புஷ்கரணி ராஜகோபுரத்துக்கு  அந்தாண்டை இருக்கு. ஸ்ரீநிவாஸ புஷ்கரணி.  கம்பிகேட் அடைச்சு இருப்பதால் கொஞ்சம் சுத்தமாத்தான் இருக்கு. உள்ளே கறிகாய்த்தோட்டம் ஒன்னும் இருக்குன்னு  தகவல்.

சலோ காஞ்சின்னு கிளம்பிட்டோம்.  உங்களால்தான்  மூணு கோவில்களிலும் நல்ல தரிசனம் கிடைச்சதுன்னு நம்ம சீனிவாசன் சொல்லிக்கிட்டே வந்தார். ட்ராவல்ஸ் வண்டி ஓட்டுனர்கள், பொதுவா  கோவில் வாசலில்  வாடிக்கையாளரை இறக்கி விட்டுட்டு, வண்டிக்கருகிலேயேதான்  காத்துக்கிட்டு இருப்பாங்களாம்.  ஏற்கெனவே சில முறைகள் இங்கே வந்தும் கூட இதுவரை  தரிசனம் செய்ய ச்சான்ஸே கிடைக்கலையாம்.....   மலைக்கோவில்கள் என்றால்  வண்டியிலேயே காத்திருப்பதுதானாம்.
நாங்க ஆரம்பத்தில் இருந்தே.... (கடந்த ஒன்பது வருசங்களா) சீனிவாசனை வேத்து ஆள் போல் பார்க்கறதில்லை. சாப்பிடப்போனாலும் சரி, கோவில்களுக்குள் போனாலும் சரி,  கூட வாங்கன்னு கூட்டிப்போவதுதான் வழக்கம்.  அவரும் வந்து ஸ்வாமி தரிசனம் பண்ணி முடிச்சதும்  குடுகுடுன்னு ஓடிப்போய்  வண்டிக்குள் உக்கார்ந்துக்குவார்.  பழக்கத்தை விடறது கஷ்டம் இல்லையோ!

உங்களோடு வந்துதான் நிறையக் கோவில்களைப் பார்த்தேன்னு எப்பவும் சொல்வார். இப்பவும் சொன்னார். எல்லாம் பெருமாளின் அருள், இல்லையோ!

அதே வாலாஜாபாத் வழியா காஞ்சிபுரத்துக்கு  ஒன்னரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தோம்.  ஏகாம்பரேஸ்வரர் கோவில் கோபுரத்தைப் போற போக்கில் கும்பிட்டதோடு சரி.  மணி இப்போ பனிரெண்டரை. கோவில்கள் எல்லாம் நடை சாத்தி இருப்பாங்கதானே?
நம்முடைய  திவ்யதேச யாத்திரை முடிவடைஞ்சதுன்றதை இன்னும் மனசு நம்பவே இல்லை..... திரும்பத் திரும்ப அந்த இருவர் நினைப்பும் பேச்சுமாவே இருந்தோம் என்பது உண்மை !


தொடரும்............ :-)   

PINகுறிப்பு:   கூட்டத்தை ஒழுங்குபடுத்தன்னு  கோவில்களில் எல்லா இடங்களிலும் கல்தரையில் இரும்புக் கம்பிகளை நட்டுவச்சு கம்பித்தடுப்புப் போட்டுத் தரையெல்லாம் பாழ்படுத்தி வச்சுருக்காங்க.  ப்ச்.....  எந்தப் புண்ணியவானின் ஐடியாவோ.....   ப்ச்....  :-(  இங்கேயும் அப்படித்தான்.......


12 comments:

said...

நூலகம் - திருவரங்கம் அரங்கன் கோவிலிலும் நூலகம் உண்டு - மணல் வெளி அருகே. சமய நூல்கள், நாளிதழ்கள் பார்த்திருக்கிறேன்.

திவ்யமான தரிசனம் - எங்களுக்கும்.

ஓட்டுனர்களை நம் போலவே நினைப்பது நல்ல விஷயம் - நானும் அப்படியே.

தொடர்கிறேன்.

said...

சுக தரிசனம். இப்படி ஒரு கோவில் இருப்பதை உங்கள் மூலம் நாங்களும் தெரிந்து கொண்டோம்.

said...

வழக்கம் போல உங்களின் தயவால் பெருமாளைக் கண்டோம்.

said...

//அவுங்களைச் சுத்திமுத்தித் தேடினேன். காணோம்!//
கையைக் காமிச்சிட்டு காணாமப்போறது கடவுளுக்குத் தான் கைவந்தக் கலையாச்சே.

said...

இவ்வளவு பிரம்மாண்டமான கோவிலா? நல்ல தரிசனம். திருப்பதி பெருமாளை கோபால் சார் தரிசனம் செய்தாரோ?

said...

ஆகா.. உங்கள் மூலமாக நானும் சோழலிங்கபுரம் தரிசனம் கண்டேன்..

வாழ்க நலம்!..

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

திருவரங்கத்திலா? ஆஹா.... இதுவரை கவனிக்கலை பாருங்க..... விடுவதில்லை அடுத்த முறை :-)

தகவலுக்கு நன்றி.

ஓட்டுனர்களிடம் நம்ம உயிர் பாதுகாப்பு இருக்கே. கவனிக்கத்தான் வேணும்!

said...

வாங்க ஸ்ரீராம்.

அன்றைக்குக் 'காஞ்சி இருவர்' சொல்லலைன்னா எனக்கும் தெரிஞ்சுருக்காது. ரெண்டு மலைகளையும் தரிசனம் செஞ்சு நேராத் திரும்பி இருப்போம்.

பெருமாளாப்பார்த்து சேதி சொல்ல அனுப்பியதாகத்தான் நினைக்கிறேன்!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நீங்களும் வாய்ப்பு கிடைத்தான் விடமாட்டீர்கள்தானே!

அருமையான கோவிலாக இருக்கு!

said...

வாங்க விஸ்வநாத்.

ரொம்பச்சரி! சேதி போய்ச் சேர்ந்துச்சுன்னு கண்ணில் இருந்து ஒளிச்சுட்டான் பாருங்க :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்!


உண்மையிலேயே பெரிய கோவில்தான்! கோபால் தரிசிக்காமல் இருக்க நான் விடுவேனோ? இழுத்துப்போய் சீனு முன்னால் நிறுத்தியாச்சே :-)

said...

வாங்க துரை செல்வராஜூ.

வருகைக்கு நன்றி!