நாம் இன்னும் திருவக்கரை கோவிலில்தான் இருக்கோம். இப்பவே மணி பகல் ஒன்னு. சந்நிதிகள் மூடி இருக்குமோ ? கோவில் வாசலில் ஒரு அனக்கமும் இல்லை. இப்பவே உள்ளே போகலாமா.... இல்லை வலம் வந்தபின் போகலாமான்னு யோசிக்கறதுக்குள்ளேயே கண்ணில் பட்டது ஒரு தகவல் !
ஹா...... இங்கே எப்படி ? ஏன் ? எதுக்கு ?
நம்ம சிவன் இருக்காரு பாருங்க..... இவரைவிட ஒரு அப்பாவியை வேறெங்கேயுமே பார்க்க முடியாது. அமுதம் வேண்டி பாற்கடலைக் கடையும்போது... அமுதத்துக்கு முன், முதலில் வந்தது ஆலகாலவிஷம். லேசா அந்த மணம் மூக்காண்டை வந்தாலே எல்லாம் முடிஞ்சுரும். உலக நன்மைக்காக.... யாராவது அதை அப்புறப்படுத்தினால் நல்லது...... மற்ற கடவுளர்களும் தேவர்களும் ஏற்கெனவே பாற்கடலில் இருந்து கிளம்பிவந்த செல்வங்களையெல்லாம் பங்குபோட்டுக்கும் பிஸியில் இருக்காங்க..... ஆபத்து இதோ இதோன்னு காத்திருக்கு.... இதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த சிவனால்..... ச்சும்மா இருக்க முடியலை. தன்னைப்பற்றிய ஒரு எண்ணம்கூட இல்லாமல் எல்லோரும் நல்லா இருந்தாப்போதும் என்ற பெரியமனசோடு சட்னு அந்த விஷத்தையெடுத்து வாயில் போட்டுக்கறார். இது ஒன்னுபோதாதா.... அப்பாவின்றதுக்கு.....
ஒரு விஷயம் பாருங்க..... பொதுவா எந்தக்கூட்டத்தில் தம்பதிகள் இருந்தாலும்..... கணவர் மேல் ஒரு கண் எப்போதும் மனைவிக்கு இருக்கும். ( காரணம் ? என்னத்தைச் சொல்ல.... ஒன்னா ரெண்டா ...ஹிஹி... ) பார்வதி உடனே பாய்ஞ்சு போய் சிவனின் மென்னியைப் பிடிச்சுடறாங்க. இவ்வளவு கடுமையான விஷம், உள்ளே இறங்கினால் சிவன் காலி ! ஆலகாலம் அங்கேயே நின்னுபோச்சு. விஷக்கலர் நீலம் என்பதால்..... ( விஷம் இறங்கி, நீலம் பாரிச்சுப்போச்சுன்னு சொல்றோமே ) கண்டத்தில் நீலம் இருக்கும் நீலகண்டனானது இப்படித்தான். அப்புறம் குய்யோ முறையோன்ற சப்தம் கேட்டு, மற்றெல்லோரும் ஓடிவந்து பார்த்துட்டு, உடம்புலே விஷம் இருந்தால் தூங்கவிடக்கூடாது (ஊர்லே பாம்பு கடிச்சால் தூங்கவிடமாட்டாங்க. சட்னு ரத்த ஓட்டத்தில் கலந்து உடலெங்கும் பரவிடும் ) என்றபடியால் எல்லோருமாச் சேர்ந்து தாளவாத்யங்கள் பலமா அடிச்சு, ராத்ரி முழுசும் அவரையும் தூங்கவிடாமல், தாங்களும் தூங்காமல் இருந்து 'சிவராத்ரி ' ஆக்கினது பெரிய சமாச்சாரம் !
மேலே படம். நம்மதுதான். காசி சங்கரமடம் கோவிலில் எடுத்தது.இந்த அப்பாவி குணத்துக்கு எல்லையே இல்லை. எம்பெருமாள் அலங்காரப்ரியனா.... நகையும் நட்டும் பட்டுமா தினமும் ஜொலிக்கும்போது.... எனக்கு ஒரு சொம்பு தண்ணீர் தலையில் விட்டால் போதும்.... நான் அபிஷேகப்ரியன்னு இருக்கார். பக்தனுக்குச் செலவே இல்லை.... தண்ணியை மொண்டுத் தலையில் ஊத்து....
போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு............. யார் தன்னை நினைத்துத் தவம் செஞ்சாலும்... அவன் யாரு, எதுக்காக தவம் இருக்கான்ன்னு எல்லாம் ஆராய்ஞ்சு பார்க்காமல்.... 'பக்தா... உன் தவத்தை மெச்சினேன். என்ன வரம் வேண்டுமோ கேள்'னு ஒரு டயலாக் விட்டுருவார். ரொம்ப நல்லவனா இருந்தால் மற்றவர்கள் நன்மைக்காக எதாவது வரம் கேப்பான். பொல்லாதவனா இருந்துட்டால்? கதை கந்தல்..... இதுலே சாய்ஸ் வேற.... என்ன வரம் வேண்டுமோ.... ன்னு ....
இப்படித்தான் வக்ராசுரனுக்கு வரம் கொடுத்ததும், அவன் தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பிச்சுட்டான். தேவர்கள் உட்பட யாரையும் விட்டுவைக்கலை. கொடுமையின் எல்லைவரை போகிறான். அக்ரமத்தைப் பார்த்த சிவன்........ திகைச்சுப்போய் வாயடைச்சு நிக்கறார். தானே வரம் கொடுத்துட்டு, அவனை தானே சம்ஹாரம் செய்ய முடியுமா ?
ஆபத்பாந்தவா.....ன்னு எல்லோரும் ஸ்ரீவைகுண்டம் போய், மஹாவிஷ்ணுவிடம் வேண்டிக்கறாங்க..... ( இப்படித்தான் எதையாவது ஆபத்தை உண்டாக்கிட்டுக் குய்யோ முறையோன்னு மச்சானிடம் ஓடிப்போய் உதவி கேட்கிறதே வழக்கமாப் போச்சு.... )
கையில் ப்ரயோகச் சக்ரம் தாங்கி வந்தார், அசுரனைக் கொன்றார். அண்ணனுக்கு நேர்ந்த கதியைக் கண்டு, அசுரனின் தங்கை துன்முகி ஓடி வர்றாள். மஹாவிஷ்ணுவின் தங்கை விஷ்ணுதுர்கை/ மஹாகாளி, ' அண்ணா.... இவளுக்காக எல்லாம் ப்ரயோகச் சக்ரத்தைப் ப்ரயோகிக்கவேணாம்... நானே போதும் இவளை அழிக்க' ன்னு கிளம்பிப்போய் துன்முகியை அழிக்கும்போதுதான் தெரியுது.... அவள் கர்பிணின்னு..... உடனே குழந்தையை மட்டும் எடுத்துத் தன் காதில் குண்டலமாப் போட்டுக்கிட்டு, அரக்கியை அழித்தாள் காளி ! (ரெட்டைக் குழந்தைகளா இருந்துருந்தால் நல்லா இருக்குமுன்னு எனக்குத் தோணுது.... )
அப்ப வந்த மஹாவிஷ்ணுதான் இங்கே தனிச்சநிதியில் தங்கிட்டார், வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன். நல்லவேளை.... வக்ரகாளியம்மன் சந்நிதிக்கு முன்னால் அசுரன் பூஜித்துவந்த சிவன், வக்ரலிங்கம் என்ற பெயர் பெற்றதைப்போல், இவரை வக்ரவரதர் னு யாரும் சொல்லலை....
வரதரைத் தேடி அம்பு காட்டிய வழியில் போனால்.... ஒரு முன்மண்டபத்தோடு இருக்கும் சந்நிதியில் சிவன் , லிங்க ரூபத்தில் ! சோழப்பேரரசின் செம்பியன் மாதேவி கட்டிய கோவில் ! ஆஹா.... சரித்திரத்துக்குள் நுழைஞ்சுட்டோம்....
வலம் தொடர்ந்தால் அதோ அங்கே எட்டடி உயரத்தில் அட்டகாசமா நிக்கறார் எம்பெருமாள் ! எதிரில் பெரிய & சிறிய திருவடிகளுக்கு சம அந்தஸ்து ! ஜயவிஜயர்களும் ஸிம்பிள் & ஸ்வீட் !
கருவறையில் சுவரில் திருமங்கையின் பாசுரம் 'குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயராயினவெல்லாம் நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும் வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும் நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்' எழுதி வச்சுருக்காங்க.
நாராயணா நாராயணா நாராயணா
'ப்ராப்தம், புண்ணியம் பாக்கியம் இருந்தால்தான் இங்கு வரலாம் வரமுடியும் ' னு இருப்பதால் உங்க எல்லோருக்கும் இவையெல்லாம் இருக்கு. துளசிதளத்தின் வழியே இங்கே வந்துட்டீங்க ! (நேரில் போகும் வாய்ப்பு கிடைத்தால் விட்டுடாதீங்க )
எனக்கு மனம் நிறைஞ்சு போச்சுன்னுத் தனியாச் சொல்லவேணாம்தானே.....
வலம் தொடந்தால் கோவில் தலவிருட்சத்தில் தொட்டில்கள்..... அந்தாண்டை நவக்ரகங்கள். வக்ரசனியாம் ! வாகனம் திரும்பி உக்கார்ந்துருக்கு !
புள்ளையார், தேவியருடன் சண்முகசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளை வணங்கி மூலவரை தரிசித்தோம். சந்திரமௌளீஸ்வரர் ! எதிரில் சின்னதா ஒரு நந்திதேவர் பாவமா உக்கார்ந்திருக்கார். உள்ப்ரகாரத்தில் சுவரில் புடைப்புச் சிலையாக வக்ரகாளியம்மனும் இருக்காள்.



ஏழுநிலை ராஜகோபுரம் அழகாகத்தான் இருக்கு. பாடல் பெற்ற தலம் ! வெளிமுற்றம் முழுசும் பக்தர்களை வரிசையில் வரவைக்கக் கட்டங்கட்டமாக் கம்பித்தடுப்பு ஏற்பாடு. அவ்ளோ கூட்டம் இங்கே வருமா என்ன ? காளி சந்நிதிக்கும் நாகர் சந்நிதிக்கும்தான் கூட்டம் அம்முது..... நாம் போன நேரத்தில்......
வக்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை பகல் பனிரெண்டு மணிக்கும், பௌர்ணமி இரவு பனிரெண்டுமணிக்கும் ஜோதிதரிசனம் ரொம்பவே விசேஷமாம் ! இந்த தரிசனத்துக்குப் பக்தர்கள் வருகை ஏராளம் என்பதால் பாண்டிச்சேரி, திண்டிவனம் ஊர்களில் இருந்து ஸ்பெஷல் பஸ் ஏற்பாடு இருக்குன்னாங்க.
வெளி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தப்பதான் ..... மேலே உச்சியில் இருக்கும் தகவல்களைப் பார்த்தேன். மூலவருக்கு மூன்று முகங்கள் இருக்காமே ! ஆஹா...... விசாரிக்க விட்டுப்போச்சுல்லே..... அப்புறம் அம்மன் சந்நிதியைப் பார்த்த நினைவும் இல்லை..... எப்படியும் நான் மட்டும் தரிசனம் செய்த கோவில்களுக்கு, நம்மவரையும் கூட்டிவரணும்தான். இல்லைன்னா எனக்கு மனசே ஆறாது..... அப்ப நல்லா விசாரிக்கணுமுன்னு மூளையில் முடிச்சு !
தொடரும்........ :-)

2 comments:
முடிந்தவரை சீக்கிரம் ஒரு முறை சென்றுவர காளி அருள்புரிய வேண்டும். முதல் பகுதியைப் படித்ததும் ஏனோ மனதில் 'ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே' பாடல் கேட்க வேண்டும் என்று ஆசை வந்து விட்டது. போய்க் கேட்கிறேன்!
போதாக்குறைக்கு பொன்னம்மா... அர்த்தத்தையும் சொல்லிடுங்க
Post a Comment