Tuesday, September 05, 2006

மாவேலி வருந்ந திவசம் .........


மாவேலி வருந்ந திவசம் மனுஷ்யரெல்லாம் ஒண்ணு போலே.


வாமன ஜெயந்திதான் மாவேலி ( மகாபலி) வர்ற நாள். எல்லாருக்கும் வாமன அவதாரமும், மகாபலிச் சக்ரவர்த்தியின் வருஷாந்திர விஜயமும் தெரிஞ்சிருக்கும் தானே?
அது இன்னிக்குத்தான். ஓணம் பண்டிகை.


இந்த பண்டிகையை விவரிச்சுச் சொல்லணுமுன்னா இது 10 நாள் கொண்டாடற பண்டிகை.கடைசி நாள்தான் ஓணம்.
சிங்க மாசத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரைஇருக்கும் 10 நாட்கள்தான் விழா நாட்கள்.


நம்ம தமிழில் சித்திரை முதல் பங்குனி ன்னு தமிழ் மாசங்கள் பெயர் இருக்குல்லையா.அதேதான் கேரளத்தில் 12 ராசிகளை வச்சு மலையாள மாசங்களா வரும். மேஷம்தொடங்கி மீனம் வரை. அந்தக் கணக்கில் சிம்மராசி மாசம்தான் சிங்க மாசம். தமிழில் ஆவணி.


சுமார் 1200 வருஷங்களுக்கு முன்னே இந்த விழா ஆரம்பிச்சதுன்னு சொல்றாங்க.அப்பெல்லாம் ஒரு மாசம் கொண்டாடுனாங்களாம். இப்ப சொல்றமே 10 நாள் கோலாகலம்ன்னு,இதுவே இப்ப ஒரு நாளா சுருங்கிப்போச்சு.


ஒருவிதத்தில் இது கேரளத்தில் கொய்த்து காலம். அறுவடையெல்லாம் முடிஞ்சு ஜனங்கள் நிம்மதியா இருக்கற சீஸன்.


மகாபலியை வரவேற்க வாசலில் போடும் பூக்களம்ன்னு சொல்ற அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் முதல்நாளே ஆரம்பிக்குமாம். குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்னும் பூவை சேகரிச்சுக்கிட்டு வருவாங்களாம். அதைத்தான் பூக்களத்துலே முதல்லே வைக்கணும். அப்புறம் தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரிச்சு அலங்கரிச்சுக்கிட்டே இருப்பாங்களாம்.இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் பெரூசா இருக்குமாம்.


ஓணத்தினத்தில் காலையிலே புது அரிசியை இடிச்சு மாவாக்கி இலையில் எழுதிய அடை, ஆவியில் புழுங்கிஅதைப் பாயாசம் செஞ்சு கடவுளுக்குப் படையல் வைப்பாங்க. இது அந்தக் காலத்தில். இப்பவோ? காலம் நேரம் எல்லாம் சுருங்கிப் போனதுனாலே என்னென்ன தில்லுமுல்லு பண்ணலாமோ அத்தனையும் செஞ்சு சடங்கு நடந்துருது.


சொந்த ஊரைவிட்டு பலநாடுகளில் போய் வசிக்கும் நமக்கெல்லாம் வார இறுதியை விட்டா நேரம் கிடைக்கறதில்லையே.அதனாலே சனிக்கிழமையன்னிக்கே இங்கே எங்க ஊர்லெ வாமன ஜெயந்தியும், மகாபலி( மாவேலி) யின் வருஷாந்திர விஸிட்டும்நடத்தி முடிச்சுட்டோம்.


மொத்தம் 100 பேர் பங்கெடுக்கறாங்கன்னு தெரிஞ்சது. வழக்கம்போல் ஓண சத்யா( ஓணம் விருந்து)வுக்கு மெனு போட்டோம். ஒண்ணு விடலை. அவியல், ஓலன், காளன், எரிசேரி, பருப்பு& நெய், சாம்பார், ரஸம், மோர், இஞ்சிக்கறி,தோரன், பப்படம், பழம், பாயாஸம்(பருப்புப் பாயாசம் & அடைப் பிரதமன்னு 2 வகை), வெண்டைக்காய் கிச்சடி, மெழுக்குபுரட்டி, சோறு, உப்பேறி, சர்க்கரைவ(பு)ரட்டின்னு சம்பிரதாயமான விருந்து.எனக்குக் கிடைச்சது பாயாஸத்தில் ஒரு வகை. அடைப் பிரதமன். அரைக்கிலோ முந்திரிப்பருப்புப் போட்டு அடிச்சு தூள் கிளப்பியாச்சு.


இந்த வருஷம் நம்முடைய சிட்டிக் கவுன்சில் & கேண்டர்பரி பவுண்டேஷன் சேர்ந்து மூணாயிரம் டாலர்கள் எங்களுக்கு மொய் எழுதியிருந்தாங்க. எல்லாம் நம்ம காசுதான். வரியாக் கட்டறோம் இல்லையா? ஆனாலும் நம்முடைய நன்றியைக் காமிக்கணுமுன்னு நகரத் தந்தையைக் கூப்புட்டு இருந்தோம். வரேன்னு சொல்லி இருந்தார்.


சனிக்கிழமையன்னிக்குக் காலையிலே ஹாலுக்குப் போய்ச் சேர்ந்தேன். (பாயாஸம் எடுத்துக்கிட்டுத்தான்) அங்கே அலங்கரிக்கும் பூக்களம் பொறுப்பு என்னோடது. இந்த வருஷம் இங்கே குளிர் ரொம்பக் கடுமையா இருந்ததாலே நம்ம வீடுகளில் எல்லாம் பூக்கள் ஒண்ணும் சரியா இல்லை. முதல் முறையா காசுக்குப் பூ வாங்கும்படி ஆச்சு.அதுலேயும் நல்ல கலர்களா அமையலை. ஒரு விதமா 'உள்ளது கொண்டு ஓணம்'னு சொல்ற பழமொழிக்கேற்பப் பூக்களம் போட்டு முடிச்சோம். உதவிக்குத்தான் யாரையும் காணலை. அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா? அங்கே கலை நிகழ்ச்சியில் ஆடவந்த பிள்ளைகளின் அம்மாக்கள் ரெண்டு பேர் இருந்தாங்க.( பாவம், இந்தியன் பங்சுவாலிட்டி தெரிஞ்சுக்காம வந்துட்டாங்க!) ஒருத்தர் இலங்கை, இன்னொருத்தர் ராஜஸ்த்தான். அவங்க ரெண்டு பேரும் பூக்களம் போட படிச்சுக்கிட்டுப் போனாங்க நம்ம புண்ணியத்துலே.


கறுப்புப் பூனைகளோ, கார்களின் வரிசையோ, அடிப்பொடிகளோ,அணிவகுப்போ இல்லாம தனியா வந்து சேர்ந்தார் நகரத் தந்தை. அவர் மனைவி எங்கேன்னு கேட்டதுக்கு, அவுங்க நர்ஸ் வேலை செய்யறாங்களாம். ஏற்கெனவே யார்யார் என்னிக்கு வேலை செய்யணுங்கிற பட்டியல் போட்டுட்டதாலே இவுங்களுக்கு லீவு கிடைக்கலையாம். வார இறுதியாச்சே.( டாய்..... யாருடா அது அண்ணிக்கு லீவுகொடுக்கலே......... எட்றா சைக்கிள் செயினை........ கிளம்புங்கடா....... கீசிறலாம் கீசி.....)


விழா ஆரம்பிச்சது ஒரு சூரிய நமஸ்கார ஸ்லோகத்தோடு. பாடியது பீட்டர். அருமையான குரல். அதுக்கப்புறம் சங்கத்தலைவர் பேசுனார். அதுலே எனக்குப் பிடிச்ச ஒரு பாயிண்ட் அவர் பூக்களத்தைப் பற்றிச் சொன்னது. பொதுவா மகாபலியை வரவேற்கத்தான் இது போடறதுன்னு சொல்வோம். ஆனா இவர், பூக்களத்துலே இருக்கும் பூக்கள் நிறம், மணம் இதுவெல்லாம் வேறுபட்டு இருந்தாலும் ஒண்ணோடொண்ணு சேர்ந்து இணைஞ்சு அழகா இருக்கறதுபோல பலவித மனிதர்கள் நாம் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையா இருக்க வேணுங்கறதுக்கான ஒரு அடையாளம் இதுன்னார்.


நகரத் தந்தை ஓணம் விழாவுக்கான குத்து விளக்கேற்றி வைத்துவிட்டு அவருடைய பங்குக்கான பேச்சைப் பேசினார்.இந்த நகரத்தில் 150 வெவ்வேறு இன மக்கள் இப்ப இருக்காறாங்கன்னு நம்ம விஜயகாந்த் போல புள்ளிவிவரம் கொடுத்தார். எப்படி எல்லாரும் ஒரு டேப்பஸ்ட்டிரி போல இணைஞ்சு வாழணுங்கற அவசியத்தையும் சொன்னார்.இங்கே புதுசா குடியேறிவரும் மக்களுக்கு உதவி செய்ய ஒரு விசேஷ சேவை இருக்குன்னு சொல்லி, அதுக்குத் தலைவரானவரையும் ( சீனர்) அறிமுகம் செய்து வச்சார்.


கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமாச்சு. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பற்றி அவருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டே இருக்கும் படி ஆச்சு.பக்கத்து இருக்கையில் இருந்தாரே. பரதநாட்டிய நிகழ்ச்சியில் தில்லானாவை வெகுவாகப் பாராட்டினார். அப்புறம்ஒரு ச்சின்னப் பிள்ளையின் பாலிவுட் நடனம். பாட்டு என்ன? 'பண்ட்டி அவுர் பப்ளி'லே வர்ற 'கஜுராரே' பாட்டு.'க்ளாப் க்ளாப்'ன்னு கையை எல்லாம் தட்டிக்கிட்டுத் தாளம் போட்டு ரசிச்சார். தெலுங்கு, மலையாளம், ஹிந்தின்னுபாட்டுக்கள் & நடனங்கள். எனக்குத்தான் நிம்மதியா நிகழ்ச்சியைப் பார்க்க முடியலை. ஒண்ணொண்ணும் என்ன பாஷை,இந்தியாவில் எந்தப் பகுதியிலே பேசறாங்க, அந்தப் பாட்டுக்களுக்கு என்ன அர்த்தம்னு 'தொண தொண'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தாரே.


இதுக்கப்புறம் ஓண சத்யா. இதையும் வெகுவா ரசிச்சார். அவர் மக்களுக்கும், மனைவிக்கும் இந்த மாதிரியானசாப்பாடு ரொம்பப் பிடிக்குமாம். வாயைத் திறந்து சொன்னப்புறம் ச்சும்மா விட முடியுமா? பார்ஸல் செஞ்சு கொடுத்தோம். விருந்தோம்பல்?


இந்த வருஷம் ஓணம் பண்டிகை சிறப்பா நடந்துச்சு. அசல் பண்டிகை என்னவோ இன்னிக்குத்தான். பாலக்காட்டுத் தோழி ஒருத்தர் வீட்டுலே மத்தியானம் ஓண சத்யா. அவர் ப்ரத்யேகம் வராம் பரஞ்ஞு க்ஷணிச்சிட்டுண்டு. போகாதிருக்கான் நிவர்த்தியில்லா. ஞானொண்ணு போயி உண்டுவரட்டே?


அனைத்து வலைப்பதிவர்களுக்கும், கேரள நண்பர்களுக்கும் இனிய ஓணம் பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.

55 comments:

said...

//கறுப்புப் பூனைகளோ, கார்களின் வரிசையோ, அடிப்பொடிகளோ,அணிவகுப்போ இல்லாம தனியா வந்து சேர்ந்தார் நகரத் தந்தை.//

அக்கா. நீங்க நகரத்தந்தைக்கு இப்படி சொல்றீங்க. போன வார இறுதியில எங்க ஊர்த் திருவிழா இறுதி நாள் ஊர்வலம் (Parate on the last day of City Fair) தெருவோரமா நின்னு பாத்துக்கிட்டு இருந்தோம். திடீர்ன்னு ஊர்வலத்துல இருந்து ஒருத்தர் வந்து கை குலுக்கி 'பேர் என்ன? ஊர் என்ன? குழந்தை பேரு என்ன?'ன்னு கேக்கறாரு. யாருன்னு பாத்தா மினசோட்டா கவர்னர். நம்ம ஊரு முதலமைச்சர் மாதிரி. கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லி அவரை அனுப்பிச்சப் பிறகு தான் அந்த உண்மையே உறைக்குது எனக்கு. ஊர்வலத்துல ஒரு சத்தமும் இல்லாம கவர்னர் நடந்து வர்றதும் நம்மளை மாதிரி வெளியூர் காரங்களைப் பாத்து கைகுலுக்கி நலம் விசாரிக்கிறதும் இங்க தான் நடக்கும். நம்ம ஊருல? ஹும்.

இப்ப இந்த நிகழ்ச்சியைப் பத்தி இங்க எழுதுறப்ப கம்பன் இராமனைப் பத்தி சொன்ன வரிகள் தான் நினைவுக்கு வருது.

எதிர் வரும் அவர்களை, எமையுடை இறைவன்,
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா,
'எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதி தரு குமரரும் வலியர்கொல்?' எனவே, 130

வசிட்டரிடம் கல்வி கற்று மீண்டு வரும் போது எதிர் வரும் நகர மக்களைப் பார்த்து, எங்களையுடைய இறைவனாம் இராகவன், கருணையின் மிகுதியால் முகமலர் ஒளிர அம்மக்களைப் பார்த்து 'எது வினை? - என்ன தொழில் செய்கிறீர்கள்?, இடர் இலை? - எந்த வித இடரும் இல்லாமல் தொழில் நடக்கிறதா?, இனிது நும் மனையும்? - வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?, மதி தரு குமரரும் வலியர் கொல்? - மதிநலம் மிகுந்த குழந்தைகளும் நல்லா இருக்கங்களா?' எனக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

said...

மத்தக்களிற்று வசுதேவர்தம்முடை
சித்தம்பிரியாத தேவகிதன்வயிற்றில்
அத்தத்தின்பத்தாநாள் தோன்றியஅச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே
முகிழ்நகையீர். வந்துகாணீரே.

- பெரியாழ்வார் திருமொழி.

பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத்தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு
ஓணத்தான் உலகாளும் என்பார்களே

- பெரியாழ்வார் திருமொழி

said...

சாமி கும்பிடதான் லேட்டாச்சு, சாப்பாட்டு விஷயமாச்சே,அதான் பந்திக்கு முந்தி வந்துட்டேன். ஓணம் சாப்பாடு லிஸ்ட்ட பாத்தோன்ன சாப்பிட்ட திருப்தியாச்சு.(எந்தா டீச்ச‌ரே! ஊணு கழிச்சோ! எங்கன உண்டாயிருந்து? கொள்ளாமோ? நிங்கள் விளிச்சில்லா. பட்ஷே ஞானும் வ‌ந்து, கண்டு, உண்டு திருச்சி வந்து. மதியாயி டீச்ச‌ரே)

said...

வாங்க குமரன்.

அடடா.... பெரியாழ்வார் என்னமாச் சொல்லிட்டுப் போயிருக்கார்!!!!
கம்பனும் லேசுப்பட்டவரா?

ரொம்ப நன்றி குமரன். இதையெல்லாம் உணர்ந்து படிக்க ஆரம்பிக்கணும்.


இங்கே மேயர்தான் முதலமைச்சர். ஒவ்வொரு ரீஜன் கார்ப்பரேஷனும் நம்மூர்
ஸ்டேட் கவர்மெண்ட் போலத்தான் தனியா இயங்குது. எளிமையா மக்கள் சமீபக்கிறமாதிரி
இருக்காங்க. பிரதமர் மற்றும் எல்லா மந்திரிகளும்கூட இப்படித்தான் இருக்காங்க.

said...

மதி,

விருந்துன்னதும் பந்திக்கு முந்தியா?

'ப்ரதமன் கெம்பீரமாயிருந்நு' எல்லோரும் சொன்னது. அந்த ரெஸிபியை ஒரு பதிவாப்
போடணும்.

said...

எஞ்சாய்!

said...

எல்லாத்தையும் விட ஓண சத்யா தான் பிடிச்சது. துளசியோட தயவில் குமரனையும் பார்க்க முடிஞ்சது.
பெரியாழ்வாரையும் கம்பனையும் பார்த்தது மறுபடி ஸ்கூல் போன ஞாபகம் வருதே.
கொஞ்சம் அடைபிரதமன் அனுப்பக்கூடாது?சரி இவ்வளோஓ மலையாளம் எஞ்ஞன அறிஞ்சு?
சீகிரம் ரெசிபி போடவும். மெழுக்குப் பிரட்டி பாவக்காய்லெ பண்ணுவாங்களா? சுவைத்துப் படித்டேன் துளசி. த்ருப்தியாயி.

said...

புகுந்த வீட்டிலும்(அந்நிய நாட்டிலும்) நம் பண்பாட்டினை மறக்காது விழாவினை கொண்டாடும் பாங்கு வாழ்க.

said...

//அவியல், ஓலன், காளன், எரிசேரி, பருப்பு& நெய், சாம்பார், ரஸம், மோர், இஞ்சிக்கறி,தோரன், பப்படம், பழம், பாயாஸம்(பருப்புப் பாயாசம் & அடைப் பிரதமன்னு 2 வகை), வெண்டைக்காய் கிச்சடி, மெழுக்குபுரட்டி, சோறு, உப்பேறி, சர்க்கரைவ(பு)ரட்டின்னு//

டீச்சர், இது உங்களுக்கே நியாயமா?
பூக்களம் photo மட்டும் போட்டுவிட்டு, மேல் சொன்ன ஐட்டங்கள் photo-வை வுட்டுட்டீங்களே! படிக்கிற எங்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு நினைச்சிப் பாத்தீங்களா? ம்ஹூம்!

ஆமாம், பூக்களத்தில் கேரளத்துக்கே உரிய தென்னங்குருத்து எங்கே?எங்கே?எங்கே? :-)

குமரன் சொன்ன பின் இன்னொன்றும் ஞாபகம் வருது.
ஓணம் விழா பற்றிப் பெரியாழ்வார், திருப்பல்லாண்டில் ஒரு குறிப்பும் தருகிறார்.
பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து, பரம்பரை பரம்பரையாக ஓணம் விழாவில் வந்து, பணிகளிலும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வதாகவும் கூறுகிறார்.

"எந்தை தந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்ப்படி கால் தொடங்கி
வந்து வழிவழி ஆட் செய்கின்றோம்
திருவோணத் திருவிழாவில்

அந்தி அம்போதில் அரி உருவாகி
அரியை அழித்தவனை
பந்தணை தீரப் பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு என்று பாடுமினே"

said...

கொத்ஸ்,

//எஞ்சாய்//

பின்னே.......?

said...

வல்லி,

//மெழுக்குப் பிரட்டி பாவக்காய்லெ பண்ணுவாங்களா?
சுவைத்துப் படித்டேன் துளசி. த்ருப்தியாயி//

ஏன் பண்ணாமல்? ட்ரை( dry) கறிதான் இது.
மெழுக்கு= எண்ணெய்.
அதுலே புரட்டி எடுத்தால் ஆச்சு:-))))

said...

வாங்க ஞானவெட்டியார் அண்ணா.

எல்லாம் உங்க ஆசீர்வாதம். நம்மால் முடியும் வரை செய்ய முடிஞ்சதைச்
செஞ்சுரணும் இல்லையா?

said...

KRS,

ப்ளொக்கர் சொதப்பிடுச்சே. படங்கள் எல்லாம் அருமையா வந்துச்சு. ஆனா
எதையும் வேணாங்குதே நம்ம ப்ளொக்கர்(-:

நேத்து ஃப்ளிக்கர் பகவான் தயவுலே கொஞ்சம் போட்டேன். இந்த மாசத்துக் கோட்டா
ஃபினிஷாம்(-:


தென்னங் குருத்துக்கெல்லாம் எங்கெ போறது? நம்ம வீட்டுலே வாழைச்செடி மட்டும்
ஒண்ணெ ஒண்ணு கண்ணே கண்ணுன்னு செத்துப் பிழைச்சுக்கிட்டு இருக்கு.

பேசாம கோலத்துலே தென்னங்குருத்துன்னு எழுதி வச்சுறலாம் அடுத்த வருஷம்:-))))

குலசேகரப்பெருமாள் காலத்துலேயெ ( 800 AD) ஓணம் கன ஜோராய் கொண்டாடுனாங்களாம்.

எப்படியோ எம்பெருமான் கிருபையாலே பழைய பாட்டுகள்/பாசுரங்கள் எல்லாம் ஞாபகம் வருதே,
அதுவே பாக்கியம்.

said...

என்ன உங்க ஊர்ல ஓனம் கொண்டாடுறாங்களா? ஓனம்னோன்ன கோபிகா ஞாபகம் வந்துடுச்சு-:)

said...

வாங்க உதயகுமார்.
நலமா? என்ன ஆளையே காணொம்? க்ஷேத்ராடானமா?
சினிமாவையும் தமிழரையும் பிரிக்கவே முடியாது:-))))

said...

அக்கா,

மிக அழகா எழிதினிர்...அதுக்கு குமரனின் சரியான பின்னுட்டம் மிக மிக அருமை.....

இருவருக்கும் வந்தனம்.

said...

ஓணம் கொண்டாட்டங்களா! நடக்கட்டும் நடக்கட்டும். இன்னைக்கு ஓணமாம். ஆபீசுல ஏதாவது ஓணம் ஸ்பெஷல் லஞ்ச் இருக்கும். அதச் சாப்பிட்டு ஓணம் கொண்டாட வேண்டியதுதான்.

ஒரு சில விஷயங்களைப் படிச்சதுல லேசா வயிறு எரிஞ்சது. ம்ம்ம்ம்...நானும் பதிவு போடுறேன்.

said...

ஓணாசம்சங்கள் எல்லார்க்கும் !

அயல்நாட்டிலும் சிரத்தையாக இந்தியப் பண்டிகைகளைக் கொண்டாடும் உங்களைப் போற்ற வேண்டும். நம்ம மலையாளத் தோழர் வீட்டில் ஓணசத்யா சாப்பிடலாம் என்றால் ரெசிபி எல்லாம் மறந்து போச்சு, சாதனங்களும் கிடைப்பதில்லை, எல்லாரும் Rice Boat * க்கு வந்துடுங்கோ என்று சொல்லிவிட்டார்.

*ஒரு கேரள உணவகம்

said...

Mouls,

வாங்க, வாங்க. புதுசா இருக்கீங்க! எப்ப நம்ம ஜோதியில் ஐக்கியமானீங்க?
நல்லா இருக்கீங்களா?

said...

வாங்க ராகவன்,

பெங்களூரு எப்படி இருக்கு? நீங்க விட்டுட்டு வந்த மாதிரியே இருக்கா?இல்லெ அதுவும் மாறிப்போச்சா?

எதுக்குங்க லேசான வயித்தெரிச்சல்?
( 3 சகோதரர்கள் நினைப்பா?)

பதிவைப் போட்டுருங்க சரியாயிரும்:-))))

said...

மணியன்,

ரைஸ் போட்? நல்லா இருந்துச்சா? என்ன பாயஸம்?
சாதனங்கள் அங்கே கிடைக்கறதில்லையா? (-:
இங்கேயே ஒரு விதம் சமாளிச்சுட்டோமேங்க.

said...

எலாவர்க்கும் திருவோண ஆஷம்ஸகள்!!!

said...

துளசி அக்கா,

இங்க நான் புதியவன்.....இன்னும் ஈ-கல்ப்பையுடன் தவிக்கிரென்.

sorry for such a Tamil, but I'm really wondering how you are all writing such big articles without any mistakes, I dont know few key strokes for some tamil letters. Also I found that there is none to help here around to help people like me.

Please let me know if there is any other software is used by you and others.

said...

சாதனங்கள் கிடைக்காமல் என்ன ? எல்லாம் packaged ஆகவே கிடைக்கிறது. குறிப்பிட்ட கடைக்குப் போய் வாங்க சோம்பல். சென்னையில் கிராண்ட் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ் வந்தபிறகு யார் வீட்டில் கோகுலாஷ்டமி சீடையும் முறுக்கும் செய்கிறார்கள் ?

said...

வாங்க ஜெயசங்கர்.

உங்க பதிவையும் பார்த்தேன்.

உங்கள் அனைவருக்கும் ஓணம் வாழ்த்து(க்)கள்

said...

மணியன்,

கார்த்திகை தீபத்துக்கான பொரி உருண்டையை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லே
பார்த்துட்டு அப்படியே அம்பரன்னு நின்னுட்டேன், 3 வருசத்துக்கு முன்னாலே!

பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை விளம்பரம் பார்த்ததும் அடடா. இந்தியாவில்
இல்லாமப் போயிட்டோமேன்னு ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

இனிமே எல்லாப் பண்டிகையும் வாங்கிக் கொண்டாடுறதுதான் போல.

said...

Mouls,

கலப்பையை நாலுதடவை குறுக்குசால் ஓட்டுனா விஷயம் பிடிபட்டுரும். ஜெயம் ரவி எப்படிக் கலப்பையைப்
புடிச்சு உழுதாருன்னு பார்த்தீங்களா?

எல்லாம் பட்டுத் தெரிஞ்சுக்கிட்டதுதான். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம், பதிவு எழுத எழுத வெற்றிதான்!

இங்கே வலைபதியும் எல்லோருமே ஒரு விதமான software தான். மனசு அப்படியே பஞ்சு போல இருக்கும்!

உங்க பதிவுலே உங்களைப் பத்தி ஒரு அறிமுகம் கொடுங்க. மூணு பதிவு ஆச்சுங்களா? அதை அப்படியே தமிழ்மணத்துலே
சேர்த்துருங்க. அப்புறம் பாருங்க ஒரே take off தான்.

said...

டீச்சரின் ஓனம் பதிவு நன்றாக இருந்தது மதியின் மலையாள நடையும் நன்று

said...

வாங்க என்னார்.

அங்கே எப்படி இருந்துச்சுப் பண்டிகை கோலாகலம்?

கிஷ்கிந்தாவுலே பெரிய அளவுலே கொண்டாடினாங்களாமே!!!!!

said...

//கறுப்புப் பூனைகளோ, கார்களின் வரிசையோ, அடிப்பொடிகளோ,அணிவகுப்போ இல்லாம தனியா வந்து சேர்ந்தார் நகரத் தந்தை.//

//ஒரு சத்தமும் இல்லாம மினசோட்டா கவர்னர் நடந்து வர்றதும் நம்மளை மாதிரி வெளியூர் காரங்களைப் பாத்து கைகுலுக்கி நலம் விசாரிக்கிறதும் இங்க தான் நடக்கும். நம்ம ஊருல? //

துளசியக்கா,

இன்னிக்குத்தான் ஊர்லேர்ந்து வந்தேன்.
கழக வட்டம், மாவட்டம், இதர அடிப்பொடிகளெல்லாம் 10-15 மகிந்திரா ஸ்கார்ப்பியோ ஜீப்பபுகள் புடைசூழ அதகளம். மக்கள் பம்மிப் பதுங்கித் தானே நடக்க வேண்டியிருக்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

said...

வாங்க ஹரிஹரன்.

ஊர்ப் பயணம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா?

சீக்கிரம் உங்க அனுபவங்களைப் பதிவாப் போடுங்க.

ஒரு மாசம் ஓடியே போயிருச்சு இல்லே?

said...

ஆமாக்கா. 32 நாட்கள் விடுமுறை ஓடியே போயிருச்சு. திருப்பதியிலே சாமி தரிசனத்தின் போது துளசியக்காவின் நமஸ்காரங்களை மறக்காம சொல்லிட்டேன்.

விடுமிறைலே நான் போனது, பார்த்தது, கேட்டது எல்லாம் பதிவாப் போட்டு மக்களை வதைக்கமாவா விட்டுறப்போறேன். என்ன நிறைய எழுதணும்.

அன்புடன்

ஹரிஹரன்

said...

ஏ.......வ்
ஒரு வெட்டு வெட்டிட்டு அதச் சொல்லி வேற..........
கொடுத்து வச்சவங்க பா

said...

ஓணம் கொண்டாட்டங்களா!
லேட்டானாலும் லேட்டெஸ்ட் நான்தான். வாழ்த்துக்கள்.

said...

மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொள்கிறது துளசி. சில காலமாகவே ஒருவித இயந்திரத்தனமாய் இருந்ததற்கு மாறாக நல்ல உணர்வு.

said...

சிஜி,

இது புளியேப்பம்தானே?

அங்கே இல்லத ஓணம் சத்யாவா? இப்பத்தான்
எல்லா கேரள உணவகங்களிலும் இது ஒரு பதிவாயிருச்சே( இந்த இடட்துலே இது மலையாளப்பதிவு= வழக்கமாயிருச்சேன்னு அர்த்தம்!)

said...

வாங்க சிவமுருகன்,

நீங்க வேற 'திரும்பிப் பார்த்துக்கிட்டு' இருக்கீங்க.

லேட்டாவோ இல்லெ லேட்டஸ்ட்டாவோ வந்தாப் போதும்.

said...

பத்மா,

நீங்க 'சக்தி'யா மாறிட்டீங்க. வாழ்த்து(க்)கள்.

( அதுக்குப்போட்ட பின்னூட்டம் இன்னும் மாடரேஷன் செய்யலை போல இருக்கே)

அப்பப்ப இதுபோல எதாவது செஞ்சாத்தான் மனசுக்கும் கொஞ்சம் புத்துணர்வு வருது. இல்லேன்னா...........

வாழ்க்கை ரொம்ப போரடிச்சுருது பத்மா.

said...

அனைத்து வலைப்பதிவர்களுக்கும், கேரள நண்பர்களுக்கும் இனிய ஓணம் பண்டிகைக்கால வாழ்த்து(க்)கள்.//

நிங்கள்க்கும்..

அது சரி மதி மலையாளத்துல கலக்குறாங்களே. அது சரி மலையாளிங்க இல்லாத இடம் ஒலகத்துல இருக்கா என்ன?

என்ன மதி?

said...

வாங்க டிபிஆர்ஜோ.

உடம்பு இப்பத் தேவலையா?

இந்த மதி 'ஆண்' மதி. நைஜீரியாலெ இருக்கார்.

நீங்க சொல்றதும் சரிதான். கேரளீயர்கள் இல்லாத ஊர் இருக்கா என்ன?

said...

துளசி அக்கா!
ஈழத்தில் குறிப்பாக எங்கள் பகுதிகளில் இவ்விழாபற்றித் தெரியாது. சிலசமயம் கொழும்பில் மலையாளிகள்
உள்ளதால் கொண்டாடுவார்கள். இந்த நாட்டு அரசியல்வாதிகள்;அதிகாரிகள் போல் நம்மவர் நடக்க முற்பட்டால்" நாயும்" மதிக்காதக்கா!!!நாம் பலவருடங்களாகப் பந்தாவுக்கு இயல்பாக்கமடைந்து விட்டோம்.
நீங்கள் சாப்பாடு கட்டிக்கொடுப்பது போல்;நானும் யாரையும் அழைத்து;வரத்தவறுபவருக்கு;பொதி கட்டி அனுப்புவேன்.சந்தோசப்படுவார்கள்.
யோகன் பாரிஸ்

said...

ஆகா, டீச்ச‌ர்! தமிழ் படிக்க உங்க பிளாக்குக்கு வந்து, "மலையால மாஸ்ட‌ர்"(:-)ன்னு பேர் வாங்கிடுவேன் போலிருகே. என்னோட மலையாள‌த்த ரசிச்சு பின்னூட்டமிட்ட ENNAR, tbr.JOSEPH க்கும் 'ஞான் நன்னி பறையுன்னு"

said...

யோகன்,

//நாம் பலவருடங்களாகப் பந்தாவுக்கு இயல்பாக்கமடைந்து விட்டோம்.//

ஆமாமாம். சாதாரணமா இருந்தா யாரு மதிக்கறா நம்ம ஊர்லே?:-))))

said...

மதி மாஷே!

எங்ஙன மலையாளம் படிச்சு? அதையொண்ணு
விவரமாயிட்டு பறயணம் கேட்டொ!

said...

//அது சரி மலையாளிங்க இல்லாத இடம் ஒலகத்துல இருக்கா என்ன?//
// கேரளீயர்கள் இல்லாத ஊர் இருக்கா என்ன?//

ஆகா! நல்லா சொன்னீங்க டிபிஆர்ஜோ.வோட சேர்ந்து நீங்களும்.
அவ‌ர்கள் "துபாயிலும் இருப்பார்கள், துருவத்திலும் இருப்பார்கள்."(நீல் ஆம்ஸ்ட்ராங் ஜோக்கு கேட்டு இருக்கிங்கள்ள.)

said...

ஆஹா! என் சோக கதையக் கேளு வலை குலமே.

மலேசியாவுல 'மடுத்து', மஸ்கட்ல 'மதியாயி', ஷார்ஜாவுல 'ஷீனிச்சு', பாக்கு(அஜ‌ர்பைஜான்) போயும் 'தாக்குபிடிச்சில்லா'. பின்ன‌ லாகூஸ்(நைஜீரியா) வந்துட்டும் நோ பீஸ்(pease).
காரணம் திரும்பிய இடமெல்லாம் 'சேட்டன்". அதுல எனக்கு என்ன பிர‌ச்சனைன்னா, "ஞிங்கள்ட‌ பேரு எந்தா மாஷே?" என்ற கேள்விக்கு பதில் சொல்லி புரிய வச்சு, போதும் போதும்னு ஆயிடும் போங்க. (மலையாளத்துல மதின்னா, 'போதும்(enough)'ன்னு பெத்தவங்களுக்கு தெரியாம போச்சு பாருங்க). இனி நம்ப பசங்களுக்கு இப்படி பிரச்சனை வ‌ரக் கூடாது பாருங்க.அதுக்காகவே மலயாளம் கத்துக்கனும்னு ஆரம்பிச்சு, "வேணாப்பா! நீ மலயாளத்துல சம்சாரிக்க வேணாம்‌, நானே தமிழ்ல பேசிடறேன்"னு அவங்க கத‌ற கதற விடாப் பிடியா கத்துகிட்டதுதாங்க.

said...

மதி,

இந்த அனுபவங்களையே 'எண்டே சேட்டனும் சேச்சியும்' னு தலைப்புப் போட்டு
விளாசியிருக்கலாமுல்லே.

போயதொக்க போட்டே..... இப்போளும் அவிடே சேச்சிமாரும்
சேட்டன்மாரும் உண்டோ?

said...

உளங்கனிந்த ஓணம் நல்வாழ்த்துகள்!

என் மனைவியின் பிறந்த நாள் வேறு1

மறக்க முடியுமா!

ஒவ்வொரு முறையும் சொல்லிக் காட்டுவார்!

said...

வணக்கம் துளசிம்மா

மலையாளிகளின் பண்பாட்டில் ஆர்வமுள்ள எனக்கு உங்கள் கட்டுரை ஒரு ஓண சத்யா:-)
என் பங்கிற்குக் கடந்த வாரம் எமது வானொலியில் மலையாளப் பாடல்களுடன் ஆசிப் மீரான் எழுதிய ஓணம் பற்றிய கட்டுரையுடன் சிறப்பு நிகழ்ச்சி செய்திருந்தேன். சிட்னியில் ஓணம் விழா நடந்தால் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆசையும் உண்டு.

said...

வாங்க SK.

உங்க வீட்டம்மாவுக்கு எங்கள் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.

said...

கானா பிரபா,

வாங்க வாங்க. நலமா? இன்னும் படகு யாத்திரை முடிக்கலையா? :-))))

படங்கள் எல்லாம் அருமையாப் போடறீங்க.

அங்கே சிட்னியிலும் கொண்டாட்டம் நல்லாத்தான் இருந்திருக்கணும்.

said...

துளசி,

ஓணம் எப்ப வரும், 'ஓண சத்ய' மெனுவோட துளசி பதிவு எப்போ போடுவாங்கன்னு காத்துகிட்டே இருந்தேன்.


தோழி வீட்டிலே விருந்து எப்படி இருந்தது?

said...

வாங்க ஜெயஸ்ரீ.

ஓணம் போயே நாலு நாளாச்சு. இன்னிக்கும் ஒரு க்ரூப் இங்கே ஓணம் கொண்டாடுறாங்க. நாங்கதான்
போகலை.

தோழி வீட்டுலெ சாப்பாடு அட்டகாசம். சக்கப் ப்ரதமன், பால் பாயாஸம், சாம்பார்,
எரிசேரி, அவியல், கூட்டு, தோரன், பப்படம், புளி இஞ்சி, பப்படம்னு ஜமாய்ச்சுட்டாங்க.

அவுங்க வீட்டுக்கு அன்னிக்கு 'மாவேலி'யே நாந்தான்:-))))

said...

துளசி தளம் அருமையான பதிவுகளை உள்வாங்கியுள்ளது.
நன்றி, தமிழ்ப் பணி தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்
இலக்கியா

said...

வாங்க இலக்கியா.

பாராட்டுக்கு நன்றி.

இலக்கியமே பாராட்டுதுன்னா...........!!!

மீண்டும் நன்றி. அடிக்கடி வாங்க.