Tuesday, April 14, 2009

புள்ளையாரே புள்ளையாரே......(2009 பயணம் : பகுதி 11)

மதுரவல்லிக்கு நகம் ஏன் இப்படிப் பச்சையாக் கிடக்கு? அடக்கடவுளே இவளுக்குச் சக்கரை நோயாமே(-: பாவம். குழந்தை. எதையும் மனசுலே போட்டுக்காமல் ஆடி அசைஞ்சு நின்னுக்கிட்டு இருக்காள். வயசும் ஒன்னும் அதிகமில்லை. அம்பத்தியஞ்சுதான்.

காலையில் மீனாட்சியைத் தரிசிக்கப்போனோம். கோவிலில் குடமுழுக்கு வருதேன்னு, விறுவிறுன்னு மராமத்துப் பணிகள் நடக்குது. எங்கே பார்த்தாலும் சரளைக்கல்லும், மண்ணுமாக் குவியல்கள். தென்ன ஓலைகளுக்குள் ஒளிஞ்சு, யார் யார் வராங்கன்னு லேசா எட்டிப்பார்க்கும் கோபுரங்கள். கோயில் வாசலில் நிறையக் காவல்துறையினர். இவர்களைத் தவிர வழக்கமாக் குமிஞ்சுகிடக்கும் பிச்சைக்காரர்கள் இல்லை! ஒரு உள்ளூர் அம்மா (நல்ல உடையோடும், காதுமூக்கெல்லாம் நகையோடும்தான் )மட்டும் எதுக்கும் இருக்கட்டுமுன்னு, நம்மைப் பார்த்ததும் கையை நீட்டுனாங்க.

பொற்றாமரைக்குளம் நீர்வத்திக் கிடக்கே, சுத்தம் செய்யப்போறாங்களோ?


தரிசனத்தை முடிச்சுக்கிட்டு ( சாமி அப்படிக்கு அப்படியேதான். மாற்றம் ஏதும் இல்லை) பார்வதியைக் கண்டுக்கலாமுன்னா ஆளைக் காணோம். குளிக்கப்போயிருக்காளோ என்னவோ? பசுக்கொட்டிலுக்கு வந்து, அகத்திக்கீரைக் கட்டுகள் கொஞ்சம் வாங்கிப்போய் தின்னக்கொடுத்துட்டு வந்தோம். வெளியே அகத்திக்கீரைக்கட்டு மட்டுமே வித்துக்கிட்டு இருக்காங்க. கொஞ்சம் நல்ல புல், சின்னக் கட்டுகளா விக்கக்கூடாது? வெறும் அகத்தியை மட்டும் தின்னு தின்னு போரடிக்காதா? இல்லை வயிற்றுக்கும் கேடு வராதா? மாடுப் பாப்பாக்கள் ( ஒரு காலத்துலே என் மகளின் மழலையில் ) வழக்கம்போல ரொம்பவே அழகா இருந்தாங்க.

கோயிலுக்கு வெளியே இளநீர் விற்கும் சிறுமி குளிச்சுமுடிச்சு, அலங்கரிச்சு, நெற்றியில் நீரோடு பளிச்ன்னு இருந்தது பார்க்கவே நல்லா இருந்துச்சு. அதுக்காகவே அங்கே ஒரு இளநீர் வாங்கிக் குடிச்சோம்.
கோயில் வருமுன்னேயே, கிறிஸ்டலில் காலை உணவு முடிஞ்சது. ராயல் கோர்ட்டில் காம்ப்ளிமெண்ட் ப்ரேக் ஃபாஸ்ட். பஃபே ஸ்டைல்தான். வகைவகையாக் குமிஞ்சு கிடக்கு. நம்ம ஸ்பெஷல் வேற இருக்கே. மனம் துணிஞ்சு, அதை எடுத்துத் தட்டில் வச்சுக்கிட்டேன். நேத்து இங்கே வந்தவுடன் முதல் வேலையா, ட்ராவல்டெஸ்கில், காருக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம். முந்தி இருந்த நிறுவனம் இப்போ இல்லை. இந்த இளைஞரும் நல்ல பையராவே இருந்தார். அப்படியே நம்ம பயணம் முடியும் கடைசிக் கட்டத்தில் இருந்து, சென்னைக்குத் திரும்பிவர ரயில் டிக்கெட்டுக்கும் ஏற்பாடு செஞ்சுறச் சொல்லிட்டோம்.

கூடல் அழகரைக் கண்குளிர தரிசனம் செஞ்சுட்டு தாயார் சந்நிதிக்குப் போனால் மதுரவல்லி எதிரில் நிக்கறாள். அங்கே இருந்து கிளம்பி மாமியார் வீட்டுக்குப் போய்வந்தப்பவே மணி ஏழடிச்சுருச்சு. காலேஜ் ஹவுஸுக்குப் போகலாமுன்னு கிளம்புனா, வரவேற்பில் இருந்தவர் சொல்றார், அது ரொம்பப் பழைசுங்க. மீனாட்சிபவன்லே சாப்பாடு நல்லா இருக்கும்'. 'நிதானமா ஒரு நடையாச்சு' ன்னு போனால் ஒரு புத்தக்கடை. கண்ணில் பட்டது எஸ்.ரா.வின் உபபாண்டவம். ஜெ.மோவைத் தேடினால் கிடைக்கலை. கிடைச்சதை வாங்கிக்கிட்டு நடந்தால் டிவிஎஸ் அவர்களின் உருவச்சிலை கட்டிட உள்ளில், விளக்கின் ஒளியில். ஆமாம்...இது இவுங்க இடம்:-)

மீனாட்சிபவனில் முகப்பிலேயே ஒரு பக்கமா மேடை வச்சுக் குழிப்பணியாரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. சாப்பிடும் இடத்தில் ஒரே கூட்டம். வேணாமுன்னு தீர்மானிச்சு, காலேஜ் ஹவுஸுக்கு வந்தோம். பொதுவான டைனிங் ஹால் தவிர இடதுபக்கம் ஏஸி ஹால் இருக்கு. அமைதியான சூழல். ஓல்ட் ஈஸ் கோல்ட்:-)

காளிதாஸ் வண்டி ஓட்டிக்கிட்டு இருக்கார். சின்னப்பேச்சுக்காக..... சினிமா எல்லாம் பார்ப்பீங்களான்னு ஆரம்பிச்சேன். இங்கே நம்ம பக்கம் 'வெதர்'தான் சின்னப்பேச்சின் ஆரம்பம். ஆனா..இப்பத் தமிழ்நாட்டுலேல்ல இருக்கேன்! பிடிச்ச நடிகர் கமல்தானாம். ஆனமலையைக் கடந்து போய்க்கிட்டு இருக்கோம். உண்மைக்குமே சொன்னால் இது முதலைமலையா இருக்கணும். அதே நீளமூக்கு முகத்தோடும், நீண்ட உடலோடும் இருக்கு.

போகும் வழியில் ஒரு மலையை, என்னமோ கேக் வெட்டுறதுபோல, துண்டங்களா வெட்டி எடுத்து வச்சருக்காங்க. 'இதென்னங்க பிரமாதம்..... அங்கிட்டு ஒரு மலையை முழுசாவே வெட்டிக் கொண்டுப் போயிட்டாய்ங்க'ன்னார் காளிதாஸ். நாலுவருசமா வண்டி ஓட்டுறாராம். பழைய சாலையில் இருந்து பிரிஞ்சு, குண்டும்குழியுமான இடத்துலே திரும்பிவந்து...... புதுசாப் போட்டு (இன்னும் திறப்புவிழா நடத்தாமல்) வச்சுருக்கும் சாலையில் வந்து சேர்ந்துக்கிட்டார்.
வழியெல்லாம் வானம் பார்த்த பூமி. செம்மண் சாலைகள், காரைகுடி நோக்கிப் போறோம். ஒரு இடத்துலே கோவில் மதில்போல செம்மண்பட்டை போட்டதைக் கவனிச்சு , என்ன கோயில் அதுன்னு கேட்குமுன்னே வேகமாக் கடந்துபோறோம். அஞ்சு நிமிசத்துக்கப்புறம் வண்டி நிக்குது...முன்னால் சாலை அடைபட்டுருக்கு. குறுக்குவழிகள் எல்லாம் நம்ம காளிதாஸுக்கு அத்துப்படி........ 'என்னா ஆச்சுன்னு இப்பக் கல்லைப்போட்டு மூடிவச்சுருக்காய்ங்க'ன்னு முழிக்கிறார். வந்தவழியே திரும்பறோம். போற போக்கிலே அப்படியே கோயிலைப் பார்த்துட்டே போகலாமுன்னு இறங்கினோம். திருப்புத்தூர் திருத்தளி நாதர் கோவில். நம்பியாண்டார் நம்பி வாசலில் நுழையறோம். பைரவர் சந்நிதி ரொம்ப விசேஷமாம். அர்த்தஜாம பூஜை இவருக்கு உண்டாம். நமக்கு அதுக்கெல்லாம் கொடுத்துவைக்கலை. ஆனால் வழியோடு போனவளைக் கூப்பிட்டுட்டார் தளீஸ்வரர். கோவிலுக்கு எதிரில் திருமுருகன் திருப்பேரவைன்னு ஆன்மீகச் சங்கம் ஒன்னு இயங்குது. அந்தப் பெயர்ப்பலகையைக் கவனித்தவுடந்தான்...... திருப்புத்தூர். ஆஹா.... இது நம்ம மனோரமா ஆச்சியின் ஊரோன்னு ஒரு நினைவு. ஒருவேளை பள்ளத்தூரா இருக்குமோ?

பத்தே நிமிஷ ட்ரைவ்....பிள்ளையார்ப்பட்டிக்குள்ளே இருக்கோம். கற்பக விநாயகர். முன்னொரு காலத்திலே இந்த ஊருக்கு மருதம்பூர்ன்னு பெயராம். கோவிலின் தலவிருட்சம் மருதமரம்தான். அருகம்புல் மாலைகளா விற்பனை கனஜோராய் நடக்குது. 'உள்ளே அருள் பாலிப்பது நம்ம ஆளாச்சே'ன்னு ஒரு மாலையை வாங்கினேன்.


புள்ளையாருக்கு நடுவில் சீனா நுழைஞ்சுருச்சு, பார்த்தீங்களா? வாஸ்து படுத்தும் பாடு:-)
பிரமாண்டமான கோயில் குளம். படுசுத்தமா இருக்கு. குடவரைக் கோயில். மூலவர் நிகுநிகுன்னு அட்டகாசமா ஆறடி உயரத்தில். ஞாயிற்றுக்கிழமைக் கூட்டம் கொஞ்சம் இருந்தாலுமே, தள்ளுமுள்ளு ஒன்றும் இல்லை. கோயிலில் உண்டியலும் கிடையாது. ஹைதராபாத் 'விசா பாலாஜி' போல இவர் தமிழ்நாட்டுக்குப் 'பாஸ்போர்ட் புள்ளையாராம்'. எல்லாருக்கும் வேண்டிதை அள்ளிக் கொடுப்பதில் கற்பக விருட்சம் போல...... 1600 வருசங்களாச்சாமே இந்த கோயிலைக் கட்டி!!!!
ரொம்பவே சுத்தமான பராமரிப்பு. தேங்காய் உடைக்கும் தொட்டி எல்லாம் சிங்கைக் கோயில்களை நினைவுபடுத்துச்சு. இந்த சமூகம்தானே அங்கேயும் கோவில்களைக் கட்டி நிர்வகிக்கிறாங்க. கிழக்கு வாசலில் வெளிவந்தோம். அங்கே ஒரு கூடத்தில் வேத அத்யயனம் நடந்துக்கிட்டு இருக்கு. சமஸ்கிரதம் தேவர்கள் மொழியா இல்லையா என்ற விவாதத்துக்கு இடம் கொடாமல் அங்கே கொஞ்ச நேரம் நின்னு கேட்கும்போது.....ஒரே மாதிரி, ஒருவித ராகத்தோடு ஓதும் மந்திரங்கள் ......மனசுக்கு ஒரு அமைதியைத் தந்தது என்னவோ நிஜம்.
தாமரையைத் தாங்கும் மேடை, அலங்காரத்தூண் மாதிரி ஒரு அமைப்பில் நம்ம யானைகளும், நாகங்களுமாய் .....புதுமையாக

குன்றக்குடி கோயிலைக் கண்டேன். சின்னக் குன்றுதான் ஆனாலும் ஏறணுமே..... கோயிலுக்கான அழகான தேர், வேலைப்பாடுகளுடன் அமர்க்களமா நிக்குது.
பன்னிரண்டு ஊர் கண்ணார ஆசாரிகள் கல்மண்டபம் என்ற கட்டிடத்தில் கல்யாணம் நடக்குது.

பேசாமக் கலியாணத்தைப்போய்ப் பார்த்துட்டு அங்கேயே சாப்புட்டுப் போகலாமா?
அழையாமலா? நல்லா இருக்கே..... சீக்கிரம் கிளம்புங்க. போற இடம் ரொம்பப் பெரிய இடம்!!!!


தொடரும்...:-)

47 comments:

said...

நானும் பிள்ளையார் பட்டி போயிருக்கேன், கல்யாணம் ஆன ஒரு வாரம் கழித்து.

வடை இன்றைக்கும் சாப்பிடுவேன். தமிழ் வருட பிறப்பிற்காக.

இளநீர் இங்கு கிடைப்பதில்லை.

said...

என்னது...மதுரைக்கு போயிட்டு திருப்பரங்குன்றம் போகலையா?? அழகர் மலை??
அப்பனையும் அம்மையையும் பார்த்துட்டு அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை விட்டுட்டீங்களே? :0))

said...

வாங்க குடுகுடுப்பை.

நல்லகாலம் பொறக்குதுன்னு சொல்லுங்க:-)

சீனக்கடைகளில் பாருங்க.....இளநீர் டின்களில் அடைச்சு வருது!

said...

வாங்க அதுசரி.

அழகன், முருகன் எல்லாரையும் சேவிச்சு பதிவுகள் சில வருசங்களுக்கு முன்னேயே போட்டாச்சுங்க.

இந்த முறை, இதுவரை போகாத இடங்களுக்கான ஒரு பயணம்:-)

said...

நாளொரு ஊரும் பொழுதொரு கோவிலுமாய்....இப்போ நாளொரு பதிவுமாவா..பிரமாதம்.

said...

வாங்க நான் நரேந்திரன்.

பயணமுன்னாலே...நாளொரு இடம்தானே?

நேற்றையப் பதிவு வருசப்பிறப்பு ஸ்பெஷல்:-))))

வகுப்புகள் வழமை போல வாரம் மூணு மட்டும்:-)

said...

'மாடு பாப்பா’-நல்லாருக்கே:)!

இளநீர் பாப்பா பளிச்!

தூங்கும் முதலையின் முகம் போலத்தான் இருக்கிறது அந்த மலை.

said...

//ராயல் கோர்ட்டில் காம்ப்ளிமெண்ட் ப்ரேக் ஃபாஸ்ட். பஃபே ஸ்டைல்தான். வகைவகையாக் குமிஞ்சு கிடக்கு. நம்ம ஸ்பெஷல் வேற இருக்கே. மனம் துணிஞ்சு, அதை எடுத்துத் தட்டில் வச்சுக்கிட்டேன்.//

எனக்கும் தமிழகம் சென்றால் இப்படி குவித்து வைத்திருக்கும் உளுந்து வடை மசால் வடையைப் பார்த்தால் நாக்கு ஊறும். வெட்கப்படாமல் வாங்கி சாப்பிடுவேன். கூட இருக்கிறவர்கள் இதுக்குப் போய் அலையிறானே என்று நினைப்பது போல் பார்பாங்க. நம்ம ஊர் பலகாரம் சுவையை விட வாசனை தூக்கலாக இருக்கும்.

said...

வடை படம் போட்டாலும் (யப்பா, எம் புள்ளங்க பாத்தா, படத்தையே கடிச்சு சாப்பிட்டுடும்:) மதுரவல்லி படம் போடாதது குறை தான்-(

said...

வாங்க ராமலக்ஷ்மி.

குழந்தைக்காலத்தில், குளிச்சுமுடிச்சுச் சாமி அறைக்குள்ளே வந்து புள்ளையாப்பா, மாடுப்பாப்பா, சிங்கம்ன்னு சொல்லிச் சாமி கும்பிடும் அழகு இன்னும் என் கண்ணுலேயே நிக்குதப்பா.

வளர்ந்தபிறகு இந்த இன்னொஸன்ஸி போயிருதுல்லே!!!

said...

வாங்க கோவியாரே.

ஆமாங்க. அந்த மணம்தான் அப்படியே தூக்கிக்கிட்டுப் போகுது. காஃபிகூட இப்படித்தான். ஒருவேளை நம் சின்னவயசுலேயே, 'வாசனை'கள் மூளையில் பதிஞ்சுருதோ?

said...

வாங்க கெக்கேபிக்குணி.

பாகர், படம் எடுக்க அனுமதி இல்லைன்னுட்டார்.

போன முறை எடுத்தது இங்கே இருக்குங்க.

http://thulasidhalam.blogspot.com/2006/04/blog-post.html

said...

டீச்சர்!

எனக்கு அந்த வடைகள் அப்படியே வேணும்!!!!

இங்க மலையாளத்தானுங்க வடையை கல்லு கணக்கால்ல போடுறானுங்க!
:(

டிரைவர் & கோபால் சார் புன்னகைக்கும் படம் அருமை!

said...

மாடு பாப்பா இங்கயும் கேட்டதுண்டு.. நீங்க சொன்னமாதிரி வளர வளர கோயிலா சாமியா ப்ளீஸ் விளையாட விடு..தான்..

said...

வாங்க ஆயில்யன்.

என்ன, அப்படியே வேணுமா?

ரொம்ப 'ஆயில்' ஆச்சே....
பரவாயில்லையா? :-))))

said...

வாங்க கயலு.

காலம் போகப்போக மாற்றங்கள் வருதே.

ஆனால் 'அது' நமக்குப் பொக்கிஷம்!

said...

//கோயிலுக்கு வெளியே இளநீர் விற்கும் சிறுமி குளிச்சுமுடிச்சு, அலங்கரிச்சு, நெற்றியில் நீரோடு பளிச்ன்னு இருந்தது பார்க்கவே நல்லா இருந்துச்சு. அதுக்காகவே அங்கே ஒரு இளநீர் வாங்கிக் குடிச்சோம்.//

நல்ல ரசனை :-))

//1600 வருசங்களாச்சாமே இந்த கோயிலைக் கட்டி!!!!//

அப்படியா!!!!!!!!!!!

Anonymous said...

//புள்ளையாருக்கு நடுவில் சீனா நுழைஞ்சுருச்சு, பார்த்தீங்களா? //

ஆமாம், தஞ்சை பெரிய கோயில் வாசல்லயும் இப்படித்தான், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைங்கள விட இவங்க தான் அதிகம்.

Anonymous said...

அந்த இளநீர் விக்கற பொண்ணுக்கு சுத்தம் சோறு போடும்னு தெரிஞ்சு இருக்கு

said...

//தென்ன ஓலைகளுக்குள் ஒளிஞ்சு, யார் யார் வராங்கன்னு லேசா எட்டிப்பார்க்கும் கோபுரங்கள்.//

கலக்குறீங்க டீச்சர்

ஒரே பதிவுல குடும்பத்த சுத்திவர வச்சுடீங்க
நாங்க இந்த கோவில சுத்துன புண்ணியமெல்லாம் உங்களைதான் சாரும்

said...

நேற்று பாயாசம், இன்று வடை. புது வருஷம் ஆரம்பமே ஜோராக இருக்கிறது. பிள்ளையார் அழகாக இருக்கிறார். இந்த வருஷம் கொலுவில் அவரும் உண்டுதானே?. இந்த முறை மசால்வடை கிடைத்ததா?.

said...

ம்ம்ம்..நான் இங்க எல்லாம் போனதே இல்ல...டீச்சர் ;(

said...

//புள்ளையாருக்கு நடுவில் சீனா நுழைஞ்சுருச்சு, பார்த்தீங்களா?//

இல்லையே டீச்சர்! சீனா சாரைக் காணோமே! :)

//ஒரே மாதிரி, ஒருவித ராகத்தோடு ஓதும் மந்திரங்கள் ......மனசுக்கு ஒரு அமைதியைத் தந்தது என்னவோ நிஜம்//

அது தேவ மொழியோ, தேவி மொழியோ...மந்திரங்களை மந்திரங்களா ஓதும் போது, எந்த மொழி மந்திரமானாலும், மனம் அமைதி பெறும் டீச்சர்!

பதிவுக்கு வடை அழகு-ன்னு பாடத் தோணுதே!:)

said...

கும்பாபிஷேகம் முடிந்து ஆறாவது நாள் மீனாட்சியை தரிசித்தேன். சுலபமான சீக்கிர தரிசனம்.
தெப்பகுளம் புத்தம் புது பொலிவோடு தகதகக்கும் தங்கத் தாமரையோடு ஜொலித்தது. மைசூர்பாகு மாதிரி வெட்டிப் போட்ட கற்களையும் பார்த்தேன்.

said...

இந்த வடையைப் பத்திச் சொன்னீங்களே... அதுல பலப்பல விசயங்கள் இருக்கு. வடைய அப்படியேவும் சாப்புடலாம். பலப்பல விதமாகவும் சாப்புடலாம். வெறும் வடைய அப்படியே கடிச்சிக்கிட்டும் திங்கலாம். இல்லைன்னா.. கெட்டியான தேங்காச் சட்டினி தொட்டும்.. பொரிகடலை போடாமத் தேங்காயும் வதக்குன மெளகா..பச்சமொளகா.. லேசாப் புளி போட்டு அரைக்கனும். அந்தத் துவையல் ஒரு ருசி.

நாகரீகமா சாம்பார்ல தொட்டும் திங்கலாம். ஊற வெச்சும் திங்கலாம். ஆனா சாம்பார்ல பருப்பு நல்லா கொழஞ்சி கரைஞ்சிருக்கனும்.

ரசத்துல கொத்துமல்லி அரைச்சி விட்டு ஊற வெச்சும் சாப்புடலாம். வயிறு ஜிலுகிலுன்னு இருக்கும்.

இல்லைன்னா தயிர்ல ஊற வைக்கனும். இதுல ஒரு விஷயம். தேங்காயை மெளகாயோட லேசா அரைச்சிப் பாலெடுத்து அதைத் தயிர்ல கலந்துறனும். அதுலதான் வடை ஊறனும்.

வடக்கத்தி பாணில தக்காளி சாஸ் தொட்டுக்கிட்டும் சாப்பிடலாம். இல்ல.. வெளிநாட்டான் மாதிரி கடுகு சாசும் மயோனிசும் தொட்டுக்கிடலாம். இப்பிடி எப்படி வேணும்னாலும் சாப்பிடப்படக்கூடிய வடையை எவ்ளோ பாராட்டினாலும் தகும்.

said...

மதுரைன்னதும் காலேஜ் ஹவுஸ் போனீங்களான்னுதான் கேக்க நெனைச்சேன். நீங்களும் சரியாப் போயிருக்கீங்க. அது பழைய ஓட்டல்தான். ஆனால் ரொம்ப நல்லாருக்கும். அந்தப் பொங்கல் இருக்கே.. அடடா... அதோட தலைல சாம்பாரை ஊத்திக் குழப்பி......அடடா! எனக்கில்லை. எனக்கில்லை. ரெண்டு நாளைக்கு முன்னாடி சாப்ட இத்தாலியன் கால்சொனேட்டோ... சால்மன் அடைச்சது... அது மாதிரி வாயில பட்டதும் கரையும்.

அப்பிடியே.. காலேஜ் ஹவுஸ் பக்கத்துல... ரோட்டு முக்குல பிரேம விலாஸ் அல்வாக் கடைல அல்வா வாங்கிச் சாப்பிட்டிருக்கனும். அடேங்கப்பா.....எலைல விழுறதும் தெரியாது.. விரல் தொடுறதும் தெரியாது.. நாக்குல படுறதும் தெரியாது... கிளுக்குதான்.

said...

டீச்சர்... அவருக்குப் பேரு வாஸ்த்தாண்டவர். ஒரு வாட்டி... பாற்கடல்ல பரந்தாமரு பள்ளி கொண்டிருந்தப்போ... பரமசிவன் ஆலகால விடம் உண்டதையும் தான் வெண்ணை உண்டதையும் நெனைச்சிப் பாத்தாரு. அப்ப அவரு வயிற்றில் அமிலம் சுரந்து வாயுத் தொல்லை வந்து வீங்குச்சு. அந்தக் காட்சியைக் காண விரும்பின சிவனுக்காக திரும்பவும் வயிறு வீங்கிக் காட்டுனப்போ சிவனுக்கும் பரந்தாமனுக்கும் பொறந்தவர்தான் இந்த வாஸ்த்தாண்டவர். இவருக்குச் சைனால கோயில் இருக்கு. தமிழகத்துல இருந்து சைனாவுக்குப் போன இவரைத் திரும்பவும் தமிழகத்துக் கொண்டு வரனும். இவருக்குக் கோயில் கட்டிக் கும்பாபிசேகம் பண்ணனும். இவருக்கு வேண்டிக்கிட்டு ஆலகால விசத்தையும் வெண்ணெய்யையும் கலந்து ஒரு மண்டலம் சாப்புடனும். ஆலகால விசம் கிடைக்காதவங்க ரேசன் அரிசியை வாங்கிக்கலாம். அப்படித்தான் இருக்குறதா சொல்லிக்கிறாங்க.

said...

எங்க ஊரு - நான் சொல்ல நினெச்சதெ எல்லாம் - நெனெக்கறதெ எல்லாம் - எல்லோரும் சொல்லிட்டாங்க - அதனாலே சிம்பிளா ஒரு ரிப்பீட்ட்டேய்ய் - எல்லா மறுமொழிகளுக்கும்

சீனா சாரக் காணோமேன்னு கேயாரெஸ் வேற கேக்கறாரு - உள்ளேன் ஐயா

said...

'கறுப்புவெள்ளை மாடுப்பாப்பாக்கள்' நன்று.

இளநீர் சிறுமி அழகு.

பயணம் தொடர வாழ்த்துக்கள்.

said...

என்னப்பா, இத்தனை பேரு கமெண்டிட்டாங்களே.
செம லேட் பர்ட்டி நான்.

மீனாட்சி கோவில் யானையைப் பார்க்க முடியலையா. எம்மாம் உசரம் அது!!

வடை..ஸ்ஸ்சூப்பர்.
யானைமலையை முதலை மலையா ஆக்கினது யார். அழகர் மலைக்கள்ளரோ:(

புதுமண்டபம் வளையல் கேட்டு இருந்தேன்ன்ன்ன்ன்ன்:)

அழகு எழுத்தில கூடிக்கிட்டே போகுதும்மா. என் கண்ணே பட்டுவிடும். மதுரைக்காரிக்குக் கரும்பு கொடுத்திட்டீங்க. வாழி நீடூழி.

said...

நானும் இருவாரங்களுக்கு முன்னர்தான் பிள்ளையார்பட்டியும் குன்றக்குடியும் சென்றுவந்தேன். ஆனால் உங்களைப்போல இளநீர் விற்கும் பெண்ணிலிருந்து ஊடுருவும் சீனா வரை 'கவனித்து' பதிக்கும் திறன் யாருக்கு வரும் ? சிறந்த பயண இதழாளர் நீங்கள்.

said...

வாங்க கிரி.

பலசமயங்களில் இப்படி எளிமையா இருப்பதுதான் 'பளிச்'ன்னு கண்ணுலே படுதுப்பா.

'பதிவர் கண்பார்வை(கோளாறு)'ன்னு இதுக்குப் பெயராம்!!!

said...

வாங்க சின்ன அம்மிணி.

நம்ம மக்களுக்கு எதுவும் 'ஃபாரீன்'ன்னா உடனே பிடிச்சுருது(-:

said...

வாங்க தீப்பெட்டி.

புண்ணியமெல்லாம் பதிவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தாச்சுன்னு வச்சுக்குங்க.

said...

வாங்க ஐஅம்கூல்.

மசால்வடை கிடைக்காமலா? நிறைய தின்னேன் கண்ணால்.

புள்ளையார்ப்பட்டியில் இருந்து குட்டியா ஒன்னு 20 ரூபாய்க்கு வாங்குனதோட சரி. அதைத்தான் கொலுவில் வைக்கணும்.

said...

வாங்க கோபி
நானும் தான் இத்தனைவருசம் போனதே இல்லை. இதுதான் இந்தப் பக்கம் முதல்முறை.

டீச்சருக்கே இப்பத்தான் காலம் கனிஞ்சது. உங்களுக்கு இதோ வந்துக்கிட்டே இருக்குதாம் நல்ல காலம்.

said...

வாங்க கே ஆர் எஸ்.

எழுதாக்கிளவியை இப்பெல்லாம் எழுதிவச்சுப் படிக்கிறோம்.

பரவாயில்லை. உச்சரிப்புச் சரியா வந்தால்தான் கேக்க ரம்மியம்.

said...

வாங்க நானானி.

சரியான காலத்துலே போய் இருக்கீங்க. எல்லாம் பளிச்ன்னு கண்ணைப் பறிச்சுருக்குமே!

பார்வதி, காணக்கிடைத்தாளா?

said...

வாங்க ராகவன்.

உங்க பின்னூட்டம் பார்த்தால்.... கோபால் அப்படியே புளகாங்கிதம் அடைஞ்சுருவார். எப்பவும் உங்க பின்னூட்டத்தைப் படிச்சவுடனே.... 'ராகவன் நல்லா சமைப்பாரு போல'ன்னுவார்:-)))

பிரேமவிலாஸ் ரகசியம் எனக்குத் தெரியாமப்போச்சேப்பா(-:

புருடபுராணக் கதைகள்ன்னு சீக்கிரம் பதிவுகள் போடுங்க. பயங்கர சுவாரஸியமா இருக்கு:-))))

said...

வாங்க சீனா.

உங்கூர் விஷயங்கள் எல்லாம் சரியான்னு நீங்கதான் சொல்லணும். தவறான தகவல் வந்தா தலையில் ஒரு குட்டு. எனக்குத்தான்!!!

said...

வாங்க மாதேவி.

அம்மாவை அப்படியே கொண்டிருக்கு அந்தப் பாப்பா, கால் டிஸைன் உள்பட!!!

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க வல்லி.

காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே போனதாலும், அங்கங்கே வேலை நடப்பதாலும் ரொம்பச் சுத்தலைப்பா. புதுமண்டபம் பக்கம் போகவே இல்லை.

மதுரைக்காரிக்கு கரும்பு கொடுக்கணும்தான். ஆனால் அவள் (பார்வதி) வெளியே உலாத்தப் போயிட்டாப்போல!

said...

வாங்க மணியன்.

குன்றக்குடி கோயிலுக்குப் போனீங்களா?

அடடா.... நான் அடிவாரம் வரை போயிட்டு வந்துருக்கேன் பாருங்க. முருகன் கூப்புடலை.

வேளை வரலை.

இப்படித்தான் சில தரிசனங்கள் கோவில்வரை போனாலும் கிடைப்பதில்லை.

said...

தெப்பக் குளம் புத்தம் புதிதாய் பளிச்சின்னு இருந்துச்சு. காலை ஐந்தே காலுக்கே போனதால் அபிஷேகம் முடிந்து அன்னை அலங்கார தரிசனம் தந்தாள். பதிவு ரெடியாயிட்டிருக்கு. படிச்சு சொல்லுங்க. துள்சி!

said...

நானானி,

அவ்வளோ அதிகாலையிலா போனீங்க?

அடடா.... அமைதியா இருந்துருக்குமே....

சீக்கிரம் பதிவு போடுங்க. ஆவலுடன் காத்திருக்கோம்.

said...

நல்லா ஒரு சுத்து வந்து இருகேங்க போல... மதுர வள்ளி கு சக்கரை இருக்குதல அதுனால தேங்காய் வழைப்பழம் ல cut.மதுரவள்ளி கு கடல முட்டாய் ரெம்ப பிடிக்கும் அனா ராகி,கேழ்வரகு, சோழகருது wheat bread தான். பிள்ளையார் பட்டி ல பிள்ளையார் சதுர்த்தி கொலுகட்டை ரெம்ப special. இந்த கோவிளையும் no spl tickets...அருண்மொழி

said...

வாங்க அருண்மொழி.

இந்தப் பெயரில் எனக்குத் தெரிஞ்சவங்களில் நீங்க ரெண்டாவது:-)

மதுரவல்லி பாவம்தாங்க. நம்ம கோபாலகிருஷ்ணனுக்கும் சக்கரை நோய். அடிக்கடி வெட் செக் கொண்டுபோறோம்.

பிள்ளையார்ப்பட்டி கோவில் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சுங்க.