Monday, July 24, 2017

கொள்ளையர்கள்..... தில்லியில்.... (இந்திய மண்ணில் பயணம் 34)

எட்டேகாலுக்கு  வண்டி சொல்லி இருக்கோம்.  போற வழியில்  கோவிலுக்குப் போயிட்டுப் போகலாமான்னால்......  நாம் போற வழியில் இல்லைன்னார் நம்மவர்.  எப்படி இல்லாமல் போகுமாம்?
இப்போ புது ஏர்ப்போர்ட் வந்துருச்சுன்னார்.  2011 லே இங்கிருந்து கிளம்பும்போதுதானே ஏர்ப்போர்ட்டை விரிவாக்கிப் புதுசாக் கட்டிக்கிட்டு இருந்தாங்க... இப்ப புது ஏர்ப்போர்ட்டுன்னா எப்படி?
பழைய ஏர்ப்போர்ட் ரன்வே  ஆரம்பிக்கும்  இடத்தாண்டை இன்னொரு  304.4 ஏக்கர் நிலத்தை வாங்கி (!)  அங்கே புதுசாக் கட்டிட்டாங்களாம்.  அப்போ பழசு? அது வழக்கம்போல ஏர்ஃபோர்ஸ் பயன்படுத்திக்குது. ஏற்கெனவே ஏர்ஃபோர்ஸ் இடத்தில்தான் சிவிலியன் விமானம் இறங்கி ஏற அனுமதி கொடுத்துருந்தாங்க.  அது அப்போ 1970 இல் இண்டியன் ஏர்லைன்ஸ்க்கு மட்டுமேன்னுதான்.  அதுவும் தில்லி - சண்டிகர் மட்டும்.  அதானே...அப்ப ஏது இந்த தனியார் விமான சேவை(!)கள் எல்லாம்?
மொஹாலி எல்லாம் சுத்திக்கிட்டு ஒரு பதினொரு கிமீ பயணம் செஞ்சு  ஏர்ப்போர்ட் போய்ச் சேர்ந்தோம். நல்லாத்தான் கட்டி இருக்காங்க. இப்ப  திறந்து வச்சே ஒரு ஏழெட்டு மாசம் தான் ஆச்சு என்பதால் பளிச்ன்னுதான் இருக்கு.
'ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாலே வா, மூணு மணி நேரத்துக்கு முன்னாலே வா'ன்னு  ஏர்ப்போர்ட் டார்ச்சர்    இந்தியாவிலே  இருப்பதால் வந்து சேர்ந்துட்டு தேவுடு காத்துக்கிட்டு இருக்கவேண்டியாகுது.  காத்திருக்கும் நேரத்தில் வேடிக்கை பார்க்கக்கூட ஒன்னும் இல்லை.  கூட்டத்தையே காணோம்.

நேரத்துக்குக் கிளம்பின  விமானம், தில்லி போய்ச் சேர்ந்தப்ப மணி  12.20.  அடுத்த ப்ளைட்டுக்கு  ஒன்னரை மணி நேரத்துக்கும் அதிகமாவே இருக்கு.  நல்லவேளையா வைஃபை இருந்ததால்..... வலை மேய்ச்சல்தான்.
தில்லி ஏர்ப்போர்ட் வழக்கம்போல் கலகல கூட்டம்தான்.
ஒரு காஃபி குடிக்கலாமான்னால் கூட யோசிக்கத்தான் வேணும். கப்புசீனோ ஒன்னே ஒன்னு  180 ரூன்னு  விலைப்பட்டியல் போட்டுட்டுக் காசு கொடுக்கும்போது  290 ன்னு பில் போடறாங்க.  உள்ளூர் வரிகள் தனி(யாம்) அதுவும் நான் கேட்ட 'சின்னமன்  டாப்பிங் ' கூட இல்லைன்னுட்டாங்க.  நியாயமான விலையா  என் மனசுக்குப் படலை என்பதால் ஆர்டரைக் கேன்ஸல் செஞ்சுட்டேன்.

போற ஊர்லே போய் டீ குடிச்சால் ஆச்சு ! இப்ப எங்கே போறோமுன்னு  சொல்லலை இல்லே?   லக்நோ போய்க்கிட்டு இருக்கோம்.  உம்ராவ் ஜான் னு ஒரு  (பழைய )ஹிந்தி படம் பார்த்ததுலே இருந்து  லக்நோ தெருக்களில் சுத்தணுமுன்னு ஒரு ஆசை. ஆனா அதுக்காக இப்போ நாம் வரலை.  பின்னே எதுக்காம்?

நாம் தரிசிக்க வேண்டிய 108  திவ்யதேசக் கோவில்களில்  வட இந்தியாவில்     நமக்கு விடுபட்டுப்போனது  நாலுன்னு   பயணத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லி இருந்தேனே.... அதுலே மூணு கோவில்கள் பத்ரிநாத் போய்வரும்போதே கிடைச்சுருது.   இன்னும் ஒன்னு பாக்கி. அதுக்குத்தான்  இப்போ போய்க்கிட்டு இருக்கோம்.

பயணத்திட்டங்கள் போடும்போது,   அது என்னவோ என்னதான்  கவனிச்சுப் பார்த்துச் செஞ்சாலுமே  சில இடங்கள் விட்டுப் போயிருது.   குழுப்பயணமா இல்லாம நாமே  தனியாப்போறோமா....  அதனால் சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்கறதில்லை.  சரியாச் சொன்னால் நாம் காசிப் பயணம் முடிச்சுக்கிட்டு அயோத்யா போனோம் பாருங்க.... அப்பவே இந்த இடத்தைச் சேர்த்துருந்தால்   இதுக்குன்னு இப்ப வரவேண்டி இருக்காது.... ப்ச்..... அப்போ நமக்கு அவ்வளவா விவரம் இல்லாமப் போச்சு....

 இப்போ?  ரொம்ப விவரமோ?  ஹி ஹி....


இல்லையே.... இப்பவும்  அக்கம்பக்கம் என்னன்னு கவனிக்காம  இந்தப் பக்கம்    ஒரு கோவில் பாக்கின்னுக்கிட்டே இருந்துருக்கோமே....  உண்மையில் நாலு நாள் தங்கி நிதானமாப் பார்க்கவேண்டிய ஊர் இது. அங்கென்ன இருக்கு அங்கென்ன இருக்குன்னு  கோட்டை விட்டுருக்கோம்.....

இன்றைக்கு லக்நோவில் ஒரு நாள் தங்கிட்டுக் காலம்பற கிளம்பி நைமிசாரண்யம் போயிட்டு  வந்துடணும் என்றதுதான் நம்ம திட்டம்.
பகல் ரெண்டு அஞ்சுக்கு ப்ளேன் ஏறி லக்நோ போய் சேர்ந்தப்ப  மணி  மூணு பத்து.  நாம் புக் பண்ணி இருக்கும் ஹொட்டேல் பிக்கப்  வண்டி அனுப்பி  இருந்தது.  இடைப்பட்ட தூரம்  16. 5  கிமீ.  ஏர்ப்போர்ட் இருக்குமிடம்  எங்கெயோ வனாந்தரமா இருக்கு. பொட்டல் காடு. அங்கங்கே திடீர் திடீர்னு  வீடுகளும் தெருக்களும், பள்ளிக்கூடங்களுமா  ....
சாலைகள் எல்லாம் அகலமாவும் சுத்தமாவும் இருக்கு!  இங்கே யானைச் சிலை இருக்குன்னு  சேதிகளில் முந்தி வாசிச்சதால்  அதையே  கண் தேடுது....
சட்னு கண்ணில் பட்ட   மாயாவதியின் போஸ்டரும்,  அது  இருந்த யானை நீரூற்றும்....   அட!  அரசியலைத் தவிர்த்துப் பார்த்தால்.... இவுங்க இன்னொரு யானைப்ரேமி !
நகருக்குள்  போறோம்.   பார்த்தாலே இது எதோ அரசாங்க அலுவலகம் என்றது போலவே தெரியும் பிரமாண்டமான கட்டடங்கள்.  கடைசியில் அது உண்மைதான் :-)  பழைய கட்டடங்களும் புதிய கட்டடங்களுமா  அங்கங்கே ஒரு நெருக்கடி.  போக்குவரத்து நெரிசலும் இருந்ததால்  ஊருக்குள் வந்தே வந்துட்டோமுன்னு புரிஞ்சது.
ஹொட்டேலுக்குப் போய்ச் சேரும்போது மணி நாலரை. இதுவும் வலையில் பார்த்து புக் பண்ணதுதான். Hotel Clarks Avadh.  MG Road. ஏழாவது மாடியில் நமக்கான அறை!
 ஜன்னல் திரையைத் திறந்தால் கோம்தி நதி !   உத்தரப்ரதேஷின் பெரிய நதி.  நீளமான நதியும் இதுதான்.  கிட்டத்தட்ட 960 கிமீ ! அப்படியே போய் கங்கையில் சேர்ந்துருது!

த்வார்க்கா கோவிலுக்கு முன்னாடி கூட கோம்தி நதின்னு ஒன்னு பார்த்தோமே... இதுவும் அதுவும் ஒன்னுதானான்னு எனக்கொரு சம்ஸயம்.  அங்கே அது அரபிக்கடலில் போய் சேர்ந்துருது.  இங்கே   இது கங்கையில் சங்கமம்.  ஒன்னு மேற்குன்னா ஒன்னு  கிழக்கால்லே இருக்கு!

இந்தியாவில் எல்லா நதிகளுக்கும் பொதுவான சாபக்கேடு  இதைமட்டும் விட்டுவச்சுருக்குமோ?  இங்கேயும்  நதியே கெட்டுப்போய்த்தான் கிடக்கு.  அது எங்கே தானாகவா  கெடுது?  மக்கள்கூட்டம் கெடுத்து வச்சுருதுல்லே...  :-(  இதுலே கரையோரம் இருக்கும் நகரங்களின் அடாவடி வேற.... எல்லாக் கழிவுகளையும்  ஆத்தோடு கலந்துவிட்டால் போச்சு என்ற எண்ணம்....  மாசு,  மாசு,  மாசைத்தவிர வேறொன்னும் இல்லை.....

இப்பதான் கொஞ்சூண்டு விழிப்புணர்வு வந்துருக்கு போல.... நதியை சுத்தப் படுத்துவதும், அதன் கரையோரங்களில் மக்கள் வசதிக்காக நடைபாதைகள் இன்ன பிற வசதிகள் எல்லாம் செஞ்சு  வெளிநாடுகளில் எப்படி  ஆத்தோர இடங்களை அழகுபடுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு  விட்டுருக்காங்களோ அதே போல செய்யப்போறாங்களாம். இதுக்காகவே மந்திரிகளும் தந்திரிகளும்    வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் எல்லாம் போயும் வந்துருக்காங்க.

சென்னையைக் கூட சிங்கப்பூராக்குவோமுன்னு  சொல்லிக்கிட்டு இருந்தாங்கல்லே?  செய்யறதுக்குள்ளே ஆட்சி மாறிப்போச்சுன்னு.... கேள்வி :-)

இங்கேயும் அதுக்குண்டான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு.  நதியின் இக்கரையில் நம்ம ஹொட்டேலை ஒட்டியே ஒரு கோவில், அங்கேயும் எதோ கட்டுமானப்பணி நடக்குது.

மணி இன்னும் அஞ்சாகலை.  கொஞ்ச நேரம் ஊரைச் சுத்திப் பார்த்துக்கலாமேன்னு  கிளம்பி கீழே வந்து வரவேற்பில், மறுநாள்  நமக்கு வண்டி வேணுங்கறதைச் சொல்லி ஏற்பாடு செஞ்சுக்கிட்டு,  ஹொட்டேலுக்கு வெளியே வந்தோம்.

இங்கே பணியாளர்கள் எல்லாம் தலையிலே பகடி கட்டிக்கிட்டு (தலைப்பாகை)இருக்காங்க.  லக்நோ ஸ்டைலு!

  இந்த ஹொட்டேல் இருக்கும்  சாலை  மகாத்மா காந்தி ரோடு.  எல்லா ஊர்லேயும் ஒரு எம் ஜி ரோடு இருக்குல்லே? (சென்னையில் இருக்கோ? )
ஹொட்டேலுக்கு முன்னால்  சாலைக்கு அடுத்த பக்கம் ஒரு பெரிய பார்க் இருக்கு!  பேகம் ஹஸரத்மஹல் பார்க்.  ரொம்பவே பெரூசு. வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த முதலாம் சுதந்திரப் போராட்டத்துலே இவுங்க பங்கு அதிகம்!   உண்மையான புரட்சித் தலைவி !

இவுங்களை கௌரவிக்கத்தான் அரசு  இந்தத் தோட்டத்துக்கு (விக்டோரியா பார்க்ன்னு முந்தி இருந்த பெயரை  மாத்தி) இவுங்க பெயரை வச்சுருக்கு!

டாக்ஸி ஒன்னு எடுத்துக்கிட்டோம். ட்ரைவரிடம் கொஞ்ச நேரம் ஊரைச் சுத்திட்டு வரலாமுன்னதும்  குஷி ஆகிட்டார்.  இங்கே என்ன விசேஷமுன்னு கேட்டதுக்கு  அவர் முதலில் சொன்ன இடம் ஷர்மா சாய் தூகான். டூரிஸ்ட்டுகள் கட்டாயம் போக வேண்டிய இடமாம்.  நாமும் போனால் ஆச்சு.
ஷர்மா டீ ஸ்டால் இருக்கும் பகுதி பழைய லக்நோ. குறுகலான தெருக்கள். நவாப் காலத்திய சமாச்சாரம். ஊரில் முக்கால் வாசிக்கும்மேலே இஸ்லாமியர்கள்தான்.  சந்து பொந்துக்குள்ளே நுழைஞ்சு போய் கடைசியில் டீ ஸ்டாலாண்டை  வண்டியை நிறுத்தினார்  ட்ரைவர் மொஹ்ஹமத் ஷிராஜ்.

 வருசம் 1948லே ப்ரகாஷ் ஷர்மா என்றவர், அலிகர் என்ற ஊரில் இருந்து லக்நோவுக்குக் கிளம்பி வ்ர்றார். கூடவே  அண்ணந்தம்பிங்க நாலு பேர்.  இந்த சந்து முக்கில் டீக்  கடை ஒன்னு போடறாங்க.  சாயா, சமோஸா, வெண்ணை தடவுன பன் இதுதான் வியாபாரம். வீட்டு வெண்ணையாம் !  ருசி பிடிச்சுப்போய்  சனம் வந்து குமியுது.  அப்புறம் என்ன?  வியாபாரம் நிலைச்சுப்போய் இப்ப 68 வருசமா ஜேஜேதான்.  பிரபலங்கள் வர்ற இடமாவும் ஆகிப்போயிருக்கு. இப்பப்பாருங்க..... நியூஸியில் இருந்து கூட டீ குடிக்கப் போயிருக்கோம்:-)
அந்தக் காலத்துலே கடையில் வேலை செய்யன்னு வந்தவங்க சிலர்  இன்னும்கூட  அங்கேயே வேலை செய்யறாங்களாம்!  தீபக் ஷர்மாதான் இப்பக் கடையை நிர்வாகம் செய்யறார்.
டீ அப்படி ஒன்னும் விலை அதிகம் இல்லை. ஒரே ரகம் சாயாதான்.  மண் டம்ப்ளர், தெர்மாகோல் டம்ப்ளர், கண்ணாடி டம்ப்ளர்னு மூணு விதமா கிடைக்குது. 20,15,10ன்னு  விலை. அந்த பன் வெண்ணையும், சமோஸாவும் இப்பவும் கிடைக்குது.

நீங்க வண்டியிலே இருங்க நான் போய் வாங்கி வர்றேன்னார்  மொஹ்ஹமத். நம்ம சமாச்சாரம் அவருக்குத் தெரியாதுல்லே :-)


மூணு   மட்கா(மண் டம்ப்ளர்)சாயா சொல்லிருங்கன்னதுக்கு  தனக்கு க்ளாஸ் போதுமுன்னுட்டார்.    சாயா வந்தது. வெளியே சந்துலே நாலைஞ்சு  மேஜை  போட்டு வச்சுருக்காங்க. நின்னுக்கிட்டுத்தான் குடிக்கணும்.   அப்படி ரொம்ப சுத்தமான இடமுன்னு சொல்ல முடியாது. ஆனாலும் நல்ல கூட்டம். உள்ளுர் பாரம்பரிய சமாச்சாரப் பட்டியலில் இடம் புடிச்சுருக்கு!  நாமும் உள்ளுர் சரித்திரத்துலே இடம் புடிச்சுட்டோம் :-)
என்னமோ   இந்த இடம் பார்த்ததும் நம்ம சிங்கை செராங்கூன் ரோடு சந்துகள் ஞாபகத்துக்கு வந்தது உண்மை....

தொடரும்........  :-)

12 comments:

said...

என்ன ஆச்சர்யம்! தமிழ்மணம் ஓட்டுப்பட்டை!! வாக்கிட்டு விட்டேன்!!!

ஏர்போர்ட்ல கூட்டமே - ஆளே - இல்லை!


உம்ரோ ஜான் (பொறுமையா) பார்த்திருக்கிறீர்களா!

ஆற்றைக்கெடுக்கும் மக்களின் மனதில் எப்போதுதான் ஒரு மாற்று வருமோ!

said...

தில்லி ஏர்போர்ட் கொள்ளையர்கள்.... :( பலரும் இப்படித்தான்!

லக்னோ டீ கடை ஃபேமஸ் - இப்போ நியூசியிலும்!

தொடர்கிறேன்.

said...

// ஏர்ஃபோர்ஸ் இடத்தில்தான் சிவிலியன் விமானம் இறங்கி ஏற அனுமதி கொடுத்துருந்தாங்க // பூனாவிலும், இரண்டும் ஒரே இடத்தில்; உங்களுக்குத் தெரியாதா என்ன.

// இப்போ? ரொம்ப விவரமோ? // இல்லியா பின்ன, கூகுள் ல தகவல் களஞ்சியம் ன்னு தேடுனா உங்க பெயர் 'மட்டும்' தான் வருது.

//இவுங்க இன்னொரு யானைப்ரேமி !// அதெல்லாம் ஒண்ணுமில்லை. கட்சி சின்னம் அது, அதனாலே அந்த வேஷம், ஹிஹிஹி

// எல்லா ஊர்லேயும் ஒரு எம் ஜி ரோடு இருக்குல்லே? // பூனாவிலும் இருக்கு.

said...

லக்னோ வந்தது நைமிசாரண்யம் செல்வதற்கா? என்ன என்ன இடங்கள் லக்னோவில் பார்க்கப்போகிறீர்கள் என்பதைப் படிக்கக் காத்திருக்கிறேன். வெண்ணெய் தடவிய பன்னைத்தான் காணோம். மட்கா சாய், லாலூ அந்தக் காலத்திலேயே ரயில்வேயில் அறிமுகப்படுத்தியதல்லவா?

said...

வாங்க ஸ்ரீராம்.

என்ன இப்படிச் சொல்றீங்க! என்ன ஒரு அருமையான படம். பாடல்கள் எல்லாம் அருமையோ அருமை. ரேகாவின் நடிப்பு..... ஹைய்யோ! இசை.... சொல்லவேண்டியதே இல்லை!

நான் சொல்றது 1981 லே வந்த படம். நேஷனல் அவார்ட், ஃப்ல்ம்ஃபேர் அவார்ட் எல்லாம் வாங்கியிருக்கு!

புதுப்படம் இதே பெயரில் இருக்குல்லே.... நான் பார்க்கலை.

என்னமோ அன்றைக்குக் கூட்டம் இல்லைன்னு வச்சுக்கலாம்.

ஆறு........ பாவம். இந்தியாவில் ஆறாகப் பொறப்பதே பாவம்தான்.... :-(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தில்லியில் விலைவாசி.... ஏகத்துக்கும் ஏறிக்கிட்டே போகுது. அந்தவிலை இப்போதைய
ஜிஎஸ்டிக்கு முன். இப்போ எப்படி இருக்கோ? நீங்க போகும்போது 'பார்த்து'க்கிட்டு வந்து சொல்லுங்க.

said...

வாங்க விஸ்வநாத்,

பூனாவில் ஒரு அஞ்சு வருசம் குப்பை கொட்டி இருக்கோமே :-)

ஒருமுறை மட்டும் பாம்பேக்கு கனெக்டிங் ஃப்ளைட்க்குக்காக பூனாவில் இருந்து போயிருக்கோம். அது 1985இல் ! கூட்டமே இல்லாத இடம். ஊருக்குப் பக்கம்தான். இவ்ளோ தள்ளி இல்லை :-)

நல்லவேளை கட்சிச் சின்னத்துக்கு இப்படியெல்லாம் கூட விளம்பரம் கொடுக்கும் ஐடியா வந்துருக்கு பாருங்க!

பூனா எம்ஜி ரோடுதான் அந்தக் காலத்துலே நமக்கு பொழுதுபோக்கு :-) வீடு கோர்ப்புரி என்பதால் ரொம்பப் பக்கம்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரொம்பச் சரி. புனிதப்பயணம்தான் :-)

லாலு சமாச்சாரம் 2004 வது வருசம். இங்கே ஷர்மாவில் 1948 இல் மட்கா சாய் !

said...

லக்னோ ஒரு காலத்துல... குறிப்பா மொகலாயர்கள் ஆட்சிக்காலத்துல ஜொஜ்ஜொலிப்பா ஜோஜோன்னு இருந்த இடம். உருது மொழிக் கவிதைகளும், இந்துஸ்தானி இசையும், கவ்வாலிகளும், சுவையான கபாப்களும் பிரியாணியுமா கமகமன்னு இருந்த ஊரு. இன்னைக்கு இப்பிடியிருக்கு. ஏத்தம்னு இருந்தா இறக்கம்னு இருக்கத்தானே செய்யும்.

வங்காளத்திலும் மண் கிண்ணத்தில் காப்பி டீ கிடைக்கும். பெரும்பாலும் சுடாத மண்ணாவும் இருக்கும். குடிச்சுட்டு போட்டுடைச்சா கூட மண்ணோட மண்ணா சேந்துரும்.

இந்த ஒலகத்துல பாக்க எவ்வளவு எடங்கள் இருக்கு.

said...

வாங்கஜிரா.

வாழ்வும் தாழ்வும் இயற்கைதான் என்றாலும்..... இவ்ளோ மோசமா கீழே போயிருதேன்னு மனசுக்கு வருத்தமாத்தான் இருக்கு.

ஆமாம்... சுடாத மண் மட்கான்னா டீ ஊத்துனதும் அதை மண் உறிஞ்சுக்காதா? அதுலே நிக்குமா என்ன?

உலகம் சுற்றுதலுக்கு ஒரு ஜென்மம் போதாது.........

said...

மட்காசாயா சூப்பர்.

said...

யாரும் சொல்லலையா? சென்னையில் சாஸ்திரி நகரில் எம்ஜி ரோட் இருக்கு! :)

வெண்ணை இல்லை வெண்ணெய்... :( இந்த மாதிரி ரீச்சருக்கே இம்போசிஷன் தரும் பாக்கியம் எத்தனை பேருக்கு வாய்க்கும். ம்ம் எழுதுங்க.