Saturday, July 15, 2017

சனிக்கிழமை ஸ்பெஷல்: தடாலடிப் போளி :-)

உலகத்துலே பார்த்தீங்கன்னா நிறைய கண்டுபிடிப்புகள் புள்ளையார் புடிக்கக் குரங்காய் முடிஞ்ச மாதிரி  ஆனவைதான்.   நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்னு நினைச்சுருச்சுன்றது  இதைத்தான் போல :-)

சம்ப்ரதாயமான போளி  செய்யறதுதான் எப்பவும் இருக்கே!  இன்றைக்கு தடாலடி பார்க்கலாம்
இனிப்பும் காரமும் ஜஸ்ட் ஒரு துளி புளிப்பும்  சேர்ந்த த்ரீ  இன் ஒன் போளி செய்முறை உங்களுக்கு !

தேங்காய் துருவியது  அரை கப்
பொட்டுக்கடலை  அரை கப்
 எண்ணெயில் வறுத்த மிளகாய் வத்தல்  நாலு
புளி கொஞ்சமே கொஞ்சம் (இத்துனூண்டு)
உப்பு  அரை டீஸ்பூன். உங்க ருசிக்குத் தகுந்தமாதிரி இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கிட்டாலும் பிரச்சனை இல்லை.

இது எல்லாத்தையும் மிக்ஸியின் ட்ரை ஜாரில் போட்டுப் பொடி பண்ணிக்குங்க.

என்ன இது..... எதோ சட்னிக்கு அரைக்கிறமாதிரி இருக்கே......

எஸ் யூ ஆர் ரைட்!  சட்னிப்பொடியேதான்.  இது வந்த விதம்?

சொல்றேன்... ஒன்னொன்னாச் சொல்றேன்....

தேங்காய் பத்தைகளை ஃப்ரிட்ஜில் போட்டு வச்சுருந்தேன்.  கோகனட் கட்ஸ் என்ற பெயரில் கேரளாவில் இருந்து இங்கே இறக்குமதி.  இண்டியன் கடைகளில் ஃப்ரோஸன் செக்‌ஷனில் கிடைக்குது.  நமக்குப் பேலியோவில் தின்ன வாகா இருக்கேன்னு வாங்கியாறதுதான். ஒரு பேக்கட்டைப் பிரிச்சால் எப்படியும் கொஞ்சம் பாக்கிதான் ஆறது இல்லையோ?

இப்படிப் போட்டு வச்சு மறந்து போன சமாச்சாரம் ஒருநாள் கண்ணில் பட்டது. ரொம்பநாள் சமாச்சரமில்லை கேட்டோ.... ஒரு வாரம் தான்.  இது மெள்ள மெள்ள  ஈரக்காத்தில் உலர்ந்துக்கிட்டு இருந்துருக்கு போல.  கண்ணில் பட்டதை எடுத்தா கிட்டத்தட்டக் கொப்பரை லெவல். ஒரு துண்டு உடைச்சால் பிஸ்கெட் போல் பட்னு உடைஞ்சது. தின்னு பார்த்தால் அவ்ளோ கடினமா இல்லை. மொறுக்குன்னு  பல்லில் அரைபட்டுச்சு.

கொஞ்சத்தை எடுத்துச் சின்னத் துண்டுகளாக்கி,  வால்நட்ஸ்,  பூசணி விதை, முந்திரி, சாரப்பருப்புன்னு சில நட்ஸ்களை கொஞ்சம் நெய்யில் வறுத்தப்ப  கூடச் சேர்த்து  வறுத்து வச்சேன்.  ஃப்ரைட் ரைஸ் மாதிரி சில ஐயிட்டங்களுக்கு  மேலாகத் தூவி அலங்கரிச்சுக்கலாம். 

இப்ப இன்னொரு சமையல் குறிப்பையும் இங்கே சொல்லிக்கறேன். மிளகாய் கிள்ளிப்போட்டுத் தாளிக்கும் சமையல் வகைகளைச் செய்யும்போது  கிள்ளிப்போடும் மிளகாய் வத்தலின் கூடவே  ஒரு ஏழெட்டு முழுமிளகாய் வத்தல்களைப்போட்டு அந்த எண்ணெயில் வறுபட்டதும் அந்த முழு மிளகாய்களைத் தனியே எடுத்து ஆறுனதும் ஒரு சின்ன டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜ்லே வச்சுக்கலாம். சில சமயம்   ஒரே ஒரு மிளகாய்  சேர்த்து அரைக்க வேண்டியதா இருந்தால் அந்த ஒரு மிளகாய்காக  தனியா கடாய் வச்சு வறுக்க வேணாம் பாருங்க.

பல்லுலேயே  அரைக்க முடியுதுன்னா மிக்ஸிக்குக் கஷ்டமா?  சின்னத்துண்டுகளா உடைச்சு  ரெண்டு சுத்து மிக்ஸியை ஓடவிட்டதுலே தேங்காய் மாவு கிடைச்சது.  அதுலேயே பொட்டுக்கடலை, உப்பு,  வறுத்த மிளகாய் வத்தல் எல்லாம் சேர்த்து  இன்னும் ரெண்டு சுத்து ஓடவிட்டேன்.  சட்னிப்பொடி!  புளி இத்துனூண்டு  வேணும். எதுக்கு  டாமரிண்ட் கான்ஸன்ட்ரேட் வாங்கி வச்சுருக்கோமாம்?  அதுலே அரைக்கால் டீஸ்பூன்  எடுத்து  பொடியுடன் சேர்த்து இன்னொரு சுத்து.

இவ்ளோ இருக்கே.... ரெண்டு பேருக்கு அதிகம் இல்லையோன்னு அதுலே பாதியை எடுத்து வச்சுட்டு மீதியில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கியதும் இன்ஸ்டன்ட் சட்னி ரெடி!  தாளிச்சுக் கொட்டியதும் சூப்பர்!   நம்ம வீட்டுக் கருவேப்பிலையின் மகிமையே  தனி, கேட்டோ  :-)

மறுநாள்  சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வச்சதும், திடீர்னு ஒரு எண்ணம். மூச். பேசப்டாது.  சைலண்டா வேலையை முடிக்கணும். பரிசோதனை ஆரம்பம்!
சப்பாத்தி மாவு கொஞ்சம் எடுத்து அதைப் பரத்தி அதுக்குள்ளே கொஞ்சம் 'அந்தச் சட்னிப்பொடி' யை  வச்சு, மேலாக கொஞ்சம் ப்ரவுன் ஷுகர் சேர்த்து  ஓரத்தைச் சேர்த்து மூடி உருண்டையாப் பண்ணிக்கிட்டுத் திரும்ப அதை  சப்பாத்தியாக திரட்டினேன்.சூடான தவ்வாவில் போட்டு ரெண்டு பக்கமும் வெந்ததும் கொஞ்சம் நெய்  அதன் மேலே  ரெண்டு பக்கமும் தடவுனதும் புஸ்ஸுன்னு எழும்பி வந்தது.
பகல் சாப்பாட்டுக்கு  ஒன்னும் சொல்லாமச் சுடச்சுடத்  தட்டுலே வச்சு நீட்டினேன்.
"என்னம்மா இது?"

"சாப்பிட்டுப் பார்த்துட்டுச் சொல்லுங்க, பார்ப்போம்!"

"அட! போளி."

ஹா....  துள்ஸி.... வெற்றி வெற்றி :-)

"எப்படி இருக்கு?"

"டேஸ்ட் வித்தியாசமா இருக்கு. சொல்லத்தெரியலை...."

(ஹூம் தெரிஞ்சுட்டாலும்....)

" ஆனா  நல்லா இருக்கு"
பரிசோதனை எலிக்கு ஒன்னும் ஆகலை :-)

நானும் தின்னு பார்த்தேன். கட்டா, மீட்டா, காரான்னு  உண்மையிலெயே நல்லாத்தான் இருக்கு!

ஒரு நாலு நாள் போகட்டும். இன்னொருக்கா செய்ஞ்சு பார்க்கலாம்.
இந்த முறை  போளிக்குரிய  உபச்சாரங்கள்  செஞ்சால் ஆச்சு.

 நம்ம வீட்டில் மைதா மாவு வாங்கறதில்லை என்பதால்....  அதே கோதுமை மாவு. ஆஷிர்வாத்  சக்கி  ஆட்டா !

கொஞ்சம் சூடான பாலில் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து ரெண்டு நிமிட் ஆனதும் மாவுலே சேர்த்து ஒரு  டேபிள் ஸ்பூன் நெய்யும் சேர்த்துப்  பிசைஞ்சு வச்சேன். (நம்ம வீட்டில் சப்பாத்தி மாவு பிசையும்போது உப்பு சேர்க்கும் வழக்கம் இல்லை என்பது உபரித்தகவல்)  என்ன குங்குமப்பூவா?  ஓ.... இவ்வளவு வக்கணை வேணாமுன்னா.... கொஞ்சம் மஞ்சள்தூள்.

இந்தமுறை உங்களுக்குச் சொல்லணும் என்றதுக்காகவே கேமெரா  அடுக்களைக்கு வந்தாச்.  கேமெரா கொண்டு வர்றதுக்குள்ளே   தீ, தீய்ச்சுடுச்சோ....
இப்பப் பாருங்க.... மேலே சொன்ன  செய்முறை... படக் க(வி)தையா   இந்தப் பதிவில் அங்கங்கே :-)

இந்த சமையல் குறிப்பு வரப்போகும் ஈஸிபீஸி இண்டியன் ரெஸிபியில் இடம் பெறுகிறது!


16 comments:

said...

அருமை. செய்து பார்க்கிறேன். உங்கள் நூலுக்காகக் காத்திருக்கிறேன்:).

said...

சரி. என் பசங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது செய்துதருகிறேன். எனக்கு இந்த புது கான்செப்ட் பிடிக்கும்னு தோணலை, எனக்கு கட்டா மிட்டா நம்கீன் ரொம்பப் பிடிக்கும் என்றபோதிலும்.

said...

மைதா நாங்களும் வாங்கறதில்லை. அது சரி, பேலியோ என்னாச்சு? அதுக்கு இதெல்லாம் சாப்பிடலாமா? இரண்டு நாட்கள் முன்னர் ஆலு பரோட்டா செய்தேன். அப்போ நினைச்சேன், இப்படியும் செய்து பார்க்கணும்னு! :) ஆனால் போணியாகுமானு சந்தேகம்!

said...

அடிப்பொலி! அதிரடி போளி!

said...

சூப்பர் போளி

said...

போளியில் எதுவுமே போலியில்லை. எதை உள்ளே வைத்துத் தேய்த்தாலும் போளி பொலியும்.

மிளகாய் வத்தல் வறுத்து வைக்கும் டெக்னிக் அருமை. ஒருத்தர் ரெண்டு பேருக்கு சமைக்கும் போது இது உதவியா இருக்கும்.

said...

அட இது நல்லா இருக்கே! :)

செய்துடலாம்!

said...

வாங்க ராமலக்ஷ்மி.

நூலை இ புக்காத்தான் போடணுமுன்னு எண்ணம். செஞ்சுறலாம் :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அதெப்படி ருசி பார்க்காமலேயே சொல்றீங்க? பிடிச்சுட்டா என்ன பண்ணுவீங்க? அப்புறம் போளியேதானா? :-)

said...

வாங்க கீதா.

பேலியோவால் தினமும் எனக்கு மண்டகப்படிதான். இப்படியே போனா...சீக்கிரம் போயிருவேன்னு....

இப்ப லோ கார்ப் டயட்னு சொல்லிக்கறேன்.

நான் ரெண்டே ரெண்டுதான் செஞ்சு பார்ப்பேன்.அதனால் போணி ஆகுமா ஆகாதா என்ற கவலை இல்லை.

இன்றைக்கு லட்டுப் போளி செஞ்சேன் :-) நேத்து ஒரு விஸிட்டர். குடும்பமா வந்துருந்தாங்க. அவுங்களுக்காக வாங்கின லட்டூஸ் பாக்கி ஆச்சு. அதான் இன்றைக்கு பரிசோதனை பண்ணியாச்சு. உண்மைக்குமே நல்லாவே இருந்தது. இனி ஒரு நாள் மைசூர்பா போளி செஞ்சு பார்க்கணும். ஒருநாள் கேஸரிப்போளி. இது சொஜ்ஜியப்பம் மாதிரி இருக்குமோ?

said...

வாங்க ஸ்ரீராம்..

இன்றைக்கு லட்டுப்போளி செஞ்சாச் :-)

said...

வாங்க மாதேவி.

இனிமே போளிதான் எப்பவும் இருக்கும்:-)

வழக்கமான போளிக்கு உள்ளே வைக்கும் கலவையைச் சின்ன உருண்டைகளா உருட்டி ஃப்ரீஸர் பையில் போட்டு ஃப்ரீஸ் பண்ணி வச்சுக்குவேன். நினைக்கும்போது போளி. இனி அந்த வேலையை மிச்சம் பண்ணிக்கலாம் :-)

said...

வாங்க ஜிரா.

ரொம்பச் சரி. இன்றைக்கு லட்டுப்போளி செஞ்சாச்:-)

சின்னச்சின்ன சமையல் குறிப்புகளை ஒருநாள் போட்டு வைக்கிறேன். நேரத்தை இப்படி எல்லாம் மிச்சம் பிடிச்சால்தான் எழுத நேரம் கிடைக்கும் :-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரோஷ்ணியம்மா செஞ்ச அந்த உளுந்துருண்டையைக்கூட உள்ளே வச்சு உளுந்துப்போளி செஞ்சுடலாமே!

said...

துளசி டீச்சர்... நீங்க சொல்றதைப் பார்த்தால், போளிக்கான மேல்மாவு எக்கச்சக்கம் செய்து குளிர்சாதனப் பெட்டில வச்சிருக்கீங்க போலிருக்கு. யார் என்ன கொண்டுவந்தாலும், அதில் கொஞ்சம் இந்த மாவில் வைத்து போளி செய்கிறீர்கள் போலிருக்கு. நான் நேற்றுத்தான், என்ன என்ன போளி அல்லது சப்பாத்தி மாவின் உள் வைத்து இடலாம் என்று யோசித்தேன் (புளியோதரை மிக்ஸ், இட்லி மிளகாய்ப்பொடி போன்று).

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ரெண்டு பாய்ன்ட் இருக்கு இப்போ சொல்றதுக்கு.

போளிக்குன்னு தனி மாவெல்லாம் இல்லை. சப்பாத்தி செய்யும் அதே கோதுமை மாவில்தான் போளியுமே! தினம் சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வைப்பதில் இருந்து ஒரு சப்பாத்தி செய்யும் மாவில் போளி செய்யரதுதான்.

யாரும் ஒன்னும் கொண்டு வரலை. நாந்தான் யாராவது வர்றதா இருந்தால் எதாவது வாங்கி வைப்பேன். பொதுவா இண்டியன் & சீனக் கடைகளுக்குப் போகும்போது சில தீனிகளை வாங்கி வந்து ஃப்ரீஸரில் போட்டு வச்சுக்குவேன். இன்றையப் பர்ச்சேஸ் பலாப்பழம் (ப்ரோஸன்) டின்னில் நுங்கு, லைச்சி ஃப்ரூட்ஸ்.

இட்லி மிளகாய்ப்பொடி நானும் செஞ்சு பார்த்தால் ஆச்சு :-) புளியோதரை மிக்ஸ் சரிப்படாது.... நட்ஸ் வகைகள் இருக்குமே....