Wednesday, July 26, 2017

கடவுளும் கஸலும் பின்னே .... (இந்திய மண்ணில் பயணம் 35)

வேறெங்கேயும் இறங்கிப் பார்க்கத் தோணாமச்  சும்மாவே   ஊரை ஒரு சுத்து, போறோம்.   இங்கே கோவில்கள் வேற இருக்கான்னு மொஹ்ஹம்மதிடம் கேட்டேன். பழைய  லக்நோவில் மசூதிகளைத் தவிர வேறொன்னும் இருக்காதுன்ற என் எண்ணம் பொய்யாப் போச்சு!
அனுமன்கட்டி (Hanuman Gati) வாசலில் கொண்டு விட்டார் மொஹ்ஹம்மத். பழைய காலத்துக் கோவிலாம். ஆனால் நல்லா  புதுக்கருக்கோடு இருக்கு!  கோவிலைக் கட்டுனது யாரு, தெரியுமோ?  இங்கத்து நவாப்!

மொஹம்மத் அலி ஷாவும் அவர் மனைவி பேகம் ரபியாவும் வாழ்ந்த காலக் கட்டம். குழந்தை இல்லைன்ற ஏக்கம் இருக்கு. ஒருநாள்  பேகம் ரபியாவின் கனவுலே  ஒரு தோட்டத்தைக்  காட்டி அங்கே  ஹனுமன் சிலை இருக்கறதா  சேதி சொல்றமாதிரி.....   இதை நவாபிடமும் சொல்றாங்க. கொஞ்சநாளிலே பேகம் உண்டாயிருக்காங்க. குழந்தை பிறந்த பிறகு  நவாபுக்குத் தோணுது... அந்த குறிப்பிட்ட தோட்டத்தைத் தோண்டிப் பார்த்தால் என்னன்னு.....
அப்படியே ஆச்சு. கனவில் சொன்ன சேதி உண்மை!  பெரிய ஹனுமன் சிலை கிடைக்குது.

தன்னுடைய மாளிகையாண்டை ஒரு கோவில் கட்டலாமுன்னு  சிலையை யானை மேலே ஏத்திக் கொண்டு போறாங்க.  இந்த அலிகஞ்ச் பகுதிக்கு வந்தப்ப யானை முன்னேறி நடக்காம அங்கேயே   உக்காந்துருது, சிலையோடு.  நகர்ற வழியா இல்லைன்னதும்    அங்கேயே கோவில் ஒன்னு கட்டி அதையே பிரதிஷ்டை செஞ்சுடறார் நவாப். பக்கத்துலே இருக்கும் பெரிய நிலத்தையும் கோவிலுக்கே எழுதி வச்சுடறார். நவாபும் பேகமும் ஹனுமன் பக்தர்களா இருந்தாங்களாம். கோவில் விசேஷங்களில்கூட  ஆர்வம் காமிச்சார்னு  சொல்றாங்க.

நம்ம பூனா வாழ்க்கையில் நம்ம வீட்டுக்குக் கீழ்தளத்துலே இருந்த உம்மா, கோர்புடி ஆஞ்சி கோவிலுக்கு என்கூட வருவாங்க.  அங்கே அர்ச்சனைக்குத் தேங்காய் பழம்  வாங்கிக்கொடுப்பதெல்லாம் அவுங்க செலவுதான்.  கோவில்  கொண்டாட்டங்களுக்கு அவுங்க  வகையில்  நல்லாவே செலவு செய்வாங்க. இதெல்லாம் இப்போ இதை எழுதும்போது நினைவுக்கு வருது !  

பெரிய தோட்டம் போல ஒரு அமைப்பு.  கடந்து கோவிலுக்குள் போறோம்.  பெரிய ஹாலில்   பளிங்கு ஆஞ்சி  இருக்கார். ஆனால் இவர் மூலவர் இல்லை.  கோவிலுக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை.
மூலவர் சந்நிதியில்  செந்தூரச் சிகப்பில் ஆஞ்சி!  பூக்களால் அலங்காரம் செஞ்சு ப்ளீர்னு  இருக்கார். (படம்: கூகுளாண்டவர் அருளியது !)
தனியார் கோவில்போல!  பளபளக்கும் பளிங்குத் தரைகளும்,  பெயின்ட் அடிச்ச சுவர்களுமா  பரந்து விரியும் கோவில்.
ஆஞ்சி மட்டுமில்லாம....மற்ற கடவுளர்களுக்கும் சந்நிதி இருக்கு.  மஹாதேவ் அண்ட் பார்வதி,  மஹாவிஷ்ணு அண்ட் லக்ஷ்மி,  ராமர் அண்ட் கோ இப்படி.
படம்  விற்பனைக்காவது கிடைக்குமான்னு கேட்க, கோவிலுக்குள்ளே இருக்கும் ஆஃபீஸுக்குப் போனால்....  பெரிய  படம் இல்லைன்னுட்டு, சின்னதா ஒரு படம் கொடுத்தாங்க. அன்பளிப்புதானாம். காசு வேணாமுன்னுட்டாங்க!
இந்த ஆஞ்சியின் அருளைச் சொல்லும் இன்னொரு கதையும் இங்கே பரவலா சொல்லப்படுது.  அந்தக் காலத்துலே இந்த ஊருக்குப் பெயர் லக்ஷ்மணபுரி.

(அட!  அதுதான் லக்நோன்னு  மருவி இருக்கோ என்னவோ? வெள்ளைக்காரன் வாயிலே புகுந்து புறப்பட லக்ஷ்மணனால் முடியலை !)

இந்த ஊர்  அப்பவே ரொம்ப   செல்வச்செழிப்புள்ள ஊரா இருந்துருக்குனு கேள்விப்பட்டு, மார்வார் வியாபாரி ஒருத்தர் சரக்கு எடுத்தாந்தார். குங்குமப்பூவும், கஸ்தூரியுமா கமகமன்னு இருக்கு.  இங்கே வந்து பார்த்தால் ஒன்னுமே விலை போகலை.  மனசுக்குப் பேஜாராப் போனவர்,  தங்கறதுக்கு இடம் தேடுனப்ப, ஹனுமன் கோவில் (!) கண்ணுலே ஆப்ட்டது. அங்கேபோய் ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு,  இந்த மாதிரி ' யாவாரம் ஒன்னும் நடக்கலைப்பா.... நீதான் என் மேல் இரக்கம் காமிச்சு ஒரு வழி காட்டணுமு'ன்னு  வேண்டிக்கிட்டு, ஒரு சத்திரத்துலே போய் தங்கிடறார்.
ராத்திரி கால நிலை  ரம்யமா இருக்கு.  இவர் சுகமாத் தூங்கிட்டார்.  இளங்காத்து வீசுது.  அப்படியே மூட்டைக்குள்ளே இருந்த கஸ்தூரி வாசம் காத்துலே ஏறிப்போய் ஊரையே சுத்துது.

அந்த நேரம் பார்த்து  மாளிகையின் உப்பரிகையில் காத்தாட உக்கார்ந்துருக்கும்  நவாப் வாஜித் அலி ஷாவுக்கும் அவர் பேகத்துக்கும்  இனிய வாசனை  போய்ச் சேருது. எங்கேருந்து   இத்தனை நல்ல வாசனை வருதுன்னு முதல்லே திகைச்ச நவாபும் பேகமும், சேவகர்களை  அனுப்பி என்ன ஏதுன்னு விசாரிக்கச் சொல்றாங்க.

வாசனை புடிச்சுக்கிட்டே போன சேவகர்கள், சத்திரத்தாண்டை போய் நின்னாங்க. ஆஹா....  இங்கெருந்துதான்னு புரிஞ்சு போச்சு. வியாபாரியை அரண்மனைக்குக் கூட்டிக்கிட்டுப்போய்  நவாப் முன்னால் நிறுத்தறாங்க.
மூட்டைத் திறந்து காமிக்கிறார் வியாபாரி. பேகம் சட்னு  அதுக்கொரு விலையைச் சொல்லிட்டாங்க.  வியாபாரி எதிர்பார்க்காத பெரிய தொகை!  துட்டை வாங்கிக்கிட்டு மூட்டையை ஒப்படைச்சுட்டு நேரா வந்து நின்னது  ஆஞ்சி சந்நிதிக்கு முன்னாலேதான்!  
கேட்ட வரம் உடனே கிடைச்சுருச்சு!  அப்படி ஒரு  வரம் தரும் ஆஞ்சி இவர்!
சம்பவம்...உண்மைதான்னு உறுதிப்படுத்த   சம்பவம் நடந்த காலம் 1783ன்னு அடிச்சுச் சொல்றாங்க.!   அட!   அட!

இருட்டிருச்சு இனிமே எங்கே சுத்தன்னு அறைக்குத் திரும்பிட்டோம். எல்லா ஹொட்டேல்களிலும் வரவேற்பு அலங்காரம் மட்டும் அட்டகாசமா வச்சுருக்காங்க இல்லே?  மயில் ரங்கோலி ஒன்னு  போட்டு வச்சுருந்தாங்க.


டின்னர் இங்கேயே  ரூம் சர்வீஸ் வாங்கிக்கலாமுன்னுதான் திட்டம். ஆனால்.........     இன்றைக்கு  லைவ் ம்யூஸிக்கோட டின்னர் விளம்புவாங்களாம் இங்கத்து ரெஸ்ட்டாரண்டில்! என்ன ம்யூஸிக் னு அசுவாரசியமா விசாரிச்சால்  கஸல் னு பதில்!  வா ரே வா(வ்)
லக்நோ வந்துட்டு கஸல் கேக்கலைன்னா எப்படி?  நீங்களே சொல்லுங்க?

எட்டுமணிவாக்கில் மேலே மாடியில் இருக்கும்  ரெஸ்ட்டாரண்டுக்குப் போனோம்.  ஈ காக்காயைக் காணோம்.....   இங்கெல்லாம்  ஒன்பது ஒன்பதரைக்குத்தான் டின்னருக்கு வருவாங்களாம்.  அட ராமா.....   அப்போ நம்ம லைவ் கஸல் அவ்ளோதானா?  ஊஹூம்.....

எங்களைக் கூட்டிக்கிட்டுப்போய்    உக்காரவச்சாங்க. மேடைக்குப் பக்கத்தில் இருக்கும் மேஜை!  முக்காலே மூணுவீசம் இருட்டு! சுத்தம்  :-)
பாடகரும் தப்லாக்காரருமா வந்து   மைக் எல்லாம் செட் செஞ்சாங்க. பார்த்தால் எதோ நமக்காக அடிச்சுப்பிடிச்சு ஓடி வந்தமாதிரி இருந்துச்சு.  ரவி துபே பாடகர். நமன் சிங் தப்லா.
ரொம்ப சுமாராத்தான் பாடுனார். இதுலே நான் வேற நேயர் விருப்பம் கேட்டுக்கிட்டு இருந்தேன்.  எல்லாம் ஒரு நாலைஞ்சுதானே தெரியும்.  அதை வச்சு சமாளிக்கிறதுதான் :-)  நம்ம கஸல் ஞானத்துக்கு  ஜக்ஜீத் ஸிங், பங்கஜ் உதாஸ் எல்லாம் புண்ணியம் கட்டிக்கிட்டாங்கல்லே!    ஒரு 24 வருசத்துக்கு முந்தி,  பாட்டோ, பாடகரோ  பெயர்கள் தெரியாத காலத்துலேயே.... தில்லியில் ஒரு ம்யூஸிக் கடையில் ஒரு பாட்டை ஹம் பண்ணிக் காமிச்சு அந்தப் பாட்டு வேணுமுன்னு  கேட்டு வாங்குன ஆளாச்சே நான் :-)
                  
(Kal chaudvin ki raat thi    Shab bhar raha charcha tera  Kal chaudvin ki raat thi)

இந்த  இருட்டுலேயும் தங்கம் என்னமா மின்னுச்சு தெரியுமோ?  நம்மவர்  ஒரு சிகப்பு ரோஜாவை எடுத்து என்னிடம் நீட்டினார்.  இத்தனை வருசத்துலே முதல்முறைன்னதும் திகைச்சுப் போயிட்டேன் :-) அய்ய....  ப்ளாஸ்டிக்  ! (எல்லாம் டேபிள் டெகரேஷனுக்காக வச்சுருந்த பூ தான் )
பாட்டுக் கேட்டுக்கிட்டே சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு,  ம்யூஸிக் கலைஞர்களுக்கு  கொஞ்சம் அன்பளிப்பு  கொடுத்துட்டு 'நல்லா பாடுனீங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.  பூனை பிரஸவிச்ச மாதிரி கியா கியான்னு  ஒரு ஸ்ருதிப்பெட்டி, போதாததுக்கு பிஜிஎம்மா  ஒரு ப்ளூட்  வேற!  நம்மவர் ஒரு சின்ன வீடியோ க்ளிப் எடுத்தாரா.... இப்பப் போட்டுப் பார்த்தால் த்ராபையா இருக்கு. அதான் இங்கே  வலை ஏத்தலை!

அறைக்கு வந்ததும் அண்ணனிடம் கொஞ்சம் செல்லில் பேச்சு.  இந்தியப் பயணங்களில் மட்டும் தினம் ரிப்போர்ட் கொடுத்துருவேன். 'லக்நோ வந்தாச்சு. நாளைக்கு  கோவில் பயணமு'ன்னு சொன்னப்ப,  'இமாம்பரா கட்டாயம் பாரு'ன்னார்.  ஙே.......   நாளைக்கு நேரம் இருந்தால்னு சொல்லி வச்சேன்.

இதுக்குத்தான் போற இடத்தைப் பற்றிக் கொஞ்சம் ஹோம் ஒர்க் பண்ணிக்கணுங்கறது. ' நூத்தியெட்டு பஜனை'யில் இருந்ததால் இதை கவனிக்கலை. மேலும் தெரிஞ்சு போச்சுன்னா   சர்ப்ரைஸ் போயிருமோன்னு ஒரு சின்ன சந்தேகம் வேற....  (என்ன டீச்சரோ? நோட்ஸ் ஆஃப் லெஸன் எழுதிக்கணுமா இல்லையா?) இப்பதான்  வலை இருக்கே.... கொஞ்சம் வீசி இருக்கலாம்தான்.....

காலையில் 7 மணிக்கு  வண்டி சொல்லி இருக்கு.  நமக்கான ப்ரேக்ஃபாஸ்ட் பார்ஸல் பண்ணித் தரேன்னு ரிஸப்ஷன்லே  சொல்லிட்டாங்க.

சீக்கிரமா எழுந்து  தயாராகணும் என்ற நினைப்போட தூங்கறேன்.  குட் நைட்.

தொடரும்..........  :-)


18 comments:

said...

தொடர்கிறேன். ஹரிஹரன் கஜல் கேட்டதில்லையா?

said...

இசையுடன் ஆன்மீகம், ரசித்தோம்.

said...

வாங்க ஸ்ரீராம்.

ஏன் கேட்காம? நம்மிடமே நிறைய கலெக்‌ஷன்ஸ் (சிடி) இருக்கே! ஆனாலும் இவர் எல்லாம் இப்போ சமீபத்துலேதான் இல்லையோ.... நான் சொல்றது ஒரு முப்பது, முப்பத்தியஞ்சு வருசத்துக்கு முன் இருந்தவை... :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

மிகவும் நன்றி.

said...

Ghazal! :) வடக்கே சில இடங்களில் பாட்டு என்ற பெயரில் கொல்வார்கள்!

அனுமன் - சில விஷயங்கள் புதியவை....

தொடர்கிறேன்.

said...

படங்கள் அருமைம்மா. தொடர்கிறேண்

said...

அப்போ மன்னாடே, மகேந்திர கபூர்??!!!

said...

தொடர்கிறேன். அனுமன் தரிசனம் ஆச்சு.

said...

//தில்லியில் ஒரு ம்யூஸிக் கடையில் ஒரு பாட்டை ஹம் பண்ணிக் காமிச்சு அந்தப் பாட்டு வேணுமுன்னு கேட்டு வாங்குன ஆளாச்சே நான்// செம, அருமை.

நன்றி. தொடர்கிறேன்.

said...

அதெப்படி இந்தியா பூராவும் ஒரேமாதிரிக் கதைகள் கோவில் கட்டும்விஷயத்தில்

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஹாஹா..... எல்லாம் ஒரு அனுபவமுன்னு சகிச்சுக்கிட்டு இருக்கப் பழகிட்டேன் :-)

ஆஞ்சிக் கதைகள் இப்படி நிறைய இருக்குல்லே! சிறிய திருவடின்ற பெயரில் பெரியவர் அவர் :-)

said...

வாங்க ராஜி.

தொடர்வதற்கு மனம் நிறைந்த நன்றிப்பா.

said...

வாங்க ஸ்ரீராம்.

இவுங்கல்லாம் சினிமா மக்கள்ஸ் ஆனதால் கேக்காமல் இருப்போமோ?......

சினிமா சினிமா பாட்டு பாட்டுன்னு அலைஞ்சதெல்லாம் ஒரு காலம்........ !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர் வருகைக்கு நன்றி.

ரெடியா இருங்க. நாளைக்கு சுவாரசியமான இடத்துக்குப் போறோம்:-)

said...

வாங்க விஸ்வநாத்,

ஆஹா... அதொரு காலம். இப்போ அப்படிப் பண்ணுவேனோ..... :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இதைப் பற்றி யோசிச்சால் ரெண்டு விஷயம் மனசுக்குப் படுது.

ஒன்னு..... இவையெல்லாம் அப்போ நடந்த உண்மைச் சம்பவங்களாக இருக்கும். அதுதான் பரவலாகப் பேசப்படுது.

ரெண்டாவது..... ஒருவேளை அப்போ இருந்த சனத்துக்குக் கற்பனைத் திறன் குறைவாக இருந்துருக்குமோ? ஒரே கதையை எல்லாத்துக்கும் சொல்லி வச்சால் ஆச்சுன்னு....

said...

ஆஞ்சி சரித்திரம் தெரிந்து கொண்டோம்.

said...

வாங்க மாதேவி.

நம்ம ஆஞ்சிக்கு ஆயிரம் சரித்திரம் உண்டு :-)