Monday, July 17, 2017

கூப்ட்டுட்டான்டா....... கூப்டுட்டான் ....(இந்திய மண்ணில் பயணம் 31)

இந்த ஷிவாலிக்  வ்யூ  ஹொட்டேல் , சண்டிகர் அரசு நடத்துது.  எனக்கு ரொம்பவும்  பிடிச்ச இடம்தான்.  நல்ல வசதிகள்.  அறைகளும் தாராளமா இருக்கும். ப்ரேக்ஃபாஸ்ட்டும், டின்னரும் இங்கே  அறை வாடகையில் சேர்த்தி என்பதால் அல்லாட வேணாம்.    முக்கியமா இது இருப்பது  சண்டிகர் நகரின் அதி முக்கியமான ஷாப்பிங் ஏரியா!

அறைக்குப் போய்ச் சேர்ந்தா.....   அது  பழைய பகுதி.  புகை பிடிக்க  அனுமதி உள்ள தளம்.  பதறி அடிச்சு, வரவேற்பில் 'நான் ஸ்மோக்கிங் ஃப்ளோர்'  கேட்டுருந்ததை  நினைவுபடுத்தினேன். அதுக்குள்ளே நம்மவர்  திடுதிடுன்னு போய் துவைக்க வேண்டிய துணிகளை ஊறவச்சுட்டார் :-)

மன்னிப்பு கேட்டுக்கிட்டு  வேற அறை மாத்தினாங்க.  அது    நாம் போனமுறை  (ஊரை விட்டுக் கிளம்புன சமயம்)  இருந்த அதே அறை !  துணி பக்கெட்டைத் தூக்கிக்கிட்டு லிஃப்டில்  அங்கே போனோம் :-)
துணி துவைப்பது,   முக்கியமா உள்ளாடைகளைப் பயணத்தில் துவைச்சு உலர்த்துவது  கொஞ்சம் கஷ்டம்தான்.  ரெண்டு நாளைக்கு மேல் ஒரு இடத்தில் தங்கும்போது துவைச்சுக்கணும்.  மற்ற உடைகளை  ஹொட்டேல் லாண்ட்ரி சர்வீஸுக்கு அனுப்பிடலாம். பிரச்சனை இல்லை.

வேலைகளைச் சட்னு முடிச்சுட்டு தயாராகி உடனே கிளம்புனது நம்ம முருகன் கோவிலுக்கு. வர்றோமுன்னு   சொல்ல வேண்டியதில்லை.  அப்படியே போகலாமுன்னா  நம்மவர் கேக்கலை.   ராஜசேகருக்கு (தலைவர்) சொல்லிட்டார்.  இந்த செல்ஃபோன்களால் தொல்லைகளும் இருக்கு :-)

ஒரு ஆட்டோ பிடிச்சு  கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.  எப்போ நான் கடைசியா இங்கே முருகனைப் பார்த்தேன்?   ஜூலை 24 , 2011.  அதெப்படி இப்படி  நாள் நக்ஷத்திரத்தோட ஞாபகம் இருக்கும்?  இந்தியாவில் கொஞ்சநாள் குப்பைகொட்ட வந்துட்டு,  நியூஸிக்குத்  திரும்பிய தினம் அது. முருகனுக்கு பைபை சொல்லிட்டு வந்தோம். அன்று ஒரு ஆடி வெள்ளிக்கிழமையாக(வும்) இருந்தது !

அப்போ பார்க்காதவங்க இப்போ பார்க்க  ஒரு  ச்சான்ஸ் இங்கே :-)



நேத்துதான் நவராத்ரி ஆரம்பம் என்பதால் கோவிலில் கொலு வச்சுருப்பாங்கன்னு  ஆசை ஆசையாப் போய், ஏமாந்தும் போனேன்  :-(

ராஜகோபுரம் கட்டி முடிக்கும் நிலையில்தான் நாங்க ஊரைவிட்டுக் கிளம்பியிருந்தோம். அதுக்குப்பிறகு  ஒரு வருசம் கழிச்சு நம்மவர் மட்டும் ஆஃபீஸ் வேலையா ஹிமாச்சல் ப்ரதேஷ் போய் வந்தார்.  அப்போ கோவிலுக்குப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டு,  படங்கள் எடுத்து வந்தார்.  பார்க்கவே பரவசமா இருந்துச்சு. எப்போ பார்க்கப்போறோமுன்னு கூட  நினைச்சேன்.  ஆனா பாருங்க....  எதோ ஒரு சாக்கு வச்சு நம்மை வரவழைச்சுட்டான்  முருகன்.  அதென்னவோ தெரியலை என் மேலே அவனுக்கு ஒரு இது :-)   ஒருவேளை என் ஜென்ம நக்ஷத்திரம் கூடக் காரணமா இருக்கலாம்  :-)    விசாகம்  !   இவராண்டை புடவைகள் கூடகொடுத்து விட்டுருக்கான்,  தெரியுமோ?

கோவிலில் சந்நிதிகள் நிறைய  வந்துட்டதால்    கொலு வைக்க இடம் இல்லாமல் போயிருக்கு!
ராஜகோபுரம் வழியா உள்ளே போய்  சாமி நமஸ்காரம் பண்ணிக்கிட்டுப் பழைய குருக்களைத் தேடினால் காணோம். புது குருக்களாண்டை விசாரிச்சால்   அவருக்குத் தெரியலை .
அதுக்குள்ளே நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகர் வந்துட்டார்.  லார்ட் கார்த்திகேய   ஸ்வாமி பக்த ஜன சபா & கோவில் ட்ரஸ்ட் தலைவர் இவர்தான்.   வடக்கே பொதுவா முருகன்னு சொல்றதில்லை. நாம் பாட்டுக்கு  முருகா முருகான்னா.... அவுங்க சேவலைச் சொல்றோமுன்னு நினைச்சுக்கறாங்க.  சேவல் கொடியோனை நாம் முருகான்னு சொல்றதும் சரியாத்தான் இருக்கு :-)
குசலவிசாரிப்புகள் நடந்ததும்,  நமக்கான ஸ்பெஷல் தீபாராதனை.  ஏற்கெனவே ஆச்சுன்னு சொன்னாலும் விடலை.  படம் எல்லாம் எடுக்கலையான்னு  கேட்டார்.  இல்லைன்னேன்.   சண்டிகர் வாழ்க்கையில் கோவிலுக்கு அஃபீஸியல் ஃபொட்டொக்ராஃபர் நாந்தான்.  கருவறையைப் படம் எடுக்க எனக்கு அனுமதி இருந்தது அப்போ. இப்பத் தயங்குனதும்....  'உங்களுக்கு இப்பவும் அனுமதி இருக்கு'ன்னார்.
போதாதா?  பூந்து வெளையாடிட மாட்டேனா என்ன?  :-)
இவர்தான்  நம்ம ஆஞ்சிச் செல்லம் :-) எவ்ளோ க்யூட் பாருங்க !

மேலும் புதுசா வந்த சந்நிதிகள், உற்சவர்கள்னு எல்லா சாமிகளையும் அறிமுகம் செஞ்சு விளக்கினார்.
உண்மையில் கோவிலைப் பத்திச் சொல்றதை விட ராஜசேகரைப் பத்திச் சொல்லத்தான் நிறைய இருக்கு எனக்கு!  முருகன் சரியான ஆளாப் பார்த்து தனக்கு சேவை செய்ய வச்சுக்கிட்டான்னு சொல்லணும். கில்லாடி....   ரெண்டு பேரும்தான்!

ராஜசேகருக்கு விமானப்படையில் வேலை.  மனைவி டீச்சர்.  கோவில் காசைக் கொள்ளையடிக்கும் மனம் இல்லாததால் கோவில் ரொம்ப நல்லாவே அபிவிருத்திஆகி இருக்கு!

இதே  மாதிரி இன்னொரு கோவிலையும் சொல்லணும். அது நம்ம அடையார் ஸ்ரீ அநந்தபத்மநாபன் கோவில்தான். இங்கேயும்  ஒவ்வொரு  முறை போகும்போதும்  கோவிலில் செய்து வச்சுருக்கும் கூடுதல் வசதிகளைப் பார்த்து   மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சென்னையில் என்னோட ஃபேவரிட் கோவில் இதுதான்.  சாமி காசை அபேஸ் பண்ணாத கோவில்கள் :-)

அரசாங்கம் கொடுத்த லிமிட்டட் ஸ்பேஸில்  இருக்கும் கோவிலுக்குள்  இத்தனை சந்நிதிகளை அமைச்சது க்ரேட்!  இடிச்சுத் தள்ளிக்கிட்டு நெருக்கமா இருக்கமாட்டாங்க கடவுளர்கள். அவுங்கவுங்களுக்குன்னு  இடம் ஓரளவு தாராளமாத்தான்  இருக்கு!  எட்டிப் பார்த்து பேசிக்கலாம் :-)
நவராத்ரி சமயமானதால் தினமும் கிருஷ்ணமாரியம்மனுக்கு  விளக்குப் பூஜை உண்டு.     வேலைநாள் வேற ...   எல்லோரும் வந்து சேரவேணமா?  அதனால் கொஞ்சம் லேட்டாத்தான்    விசேஷ பூஜைகள்  இங்கே தொடங்கும்.  நமக்காகத்தான் சாமி.  சாமிக்கு  நாம் எதுக்கு?
இந்தக் கோவில் ஏர்ஃபோர்ஸ் குடியிருப்பில்  இருக்கு.  தமிழர்கள் மட்டுமில்லாமல்  எல்லா இந்தியர்களும் வந்து கலந்துக்குவாங்க.  அதிலும் அவுங்களுக்கு நம்ம பிரஸாத வகைகள் அப்படிப் பிடிச்சுப் போச்சு. சாம்பார் சாதத்துக்கு ஏகப்பட்ட டிமாண்ட்!

அதுக்குள்ளே பழைய ஆட்கள் வந்து சேர ஆரம்பிச்சாங்க. எல்லோருக்கும் நம்மை அங்கே பார்த்ததும் ஆச்சரியம்!

ஏழேகாலுக்கு விளக்குப் பூஜை ஆரம்பிச்சது.  நாங்களும் மேடை மண்டபத்தில் உக்கார்ந்து பூஜை  பார்த்தோம்.
இந்தக் கோவிலில்  ஒரு பக்கம் சின்னதா மேடை அமைப்பு ஒன்னு இருக்கு.  எனக்கு ரொம்பவே பிடிச்ச இடம்.  விழாக்கால கலைநிகழ்ச்சிகள் அங்கேதான் எப்பவும். நாங்கெல்லாம்  மேடைக்கு  முன்பக்கம் தரையில் உக்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிப்போம்.
நவராத்ரியை முன்னிட்டுக் கலை நிகழ்ச்சிகள் (இன்றைக்கானது ) நடந்தது. குட்டிப் பசங்க செல்லம் போல் ஆடுனாங்க. நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் பிள்ளைகளை அப்படியே விட்டுடாமல்,   மாலை மரியாதைகளுடன் கௌரவிப்பதில் ராஜசேகருக்கு இணையா இதுவரை நான் யாரையுமே கண்டதில்லை.  இதனால்  நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் ஆர்வம்  பிள்ளைகளுக்கும், பெற்றோருக்கும்  வந்துருது பாருங்க.


மைக் பிடிச்சுருந்த ராஜசேகர்,  நம்ம சண்டிகர் வரவை அறிவிச்சு, நம்மை சபைக்கு முன்னால் வரவழைச்சுப் பொன்னாடை  போர்த்தினார். மாலை? அதுவும்தான் :-)    (வடநாடு முழுக்க துருக்க சாமந்திதான் எல்லாத்துக்கும்..  )  அதுமட்டுமில்லாமல்  பிரபல எழுத்தாளர்னு  தலையில் ஒரு க்ரீடமும்....  ஹா........



திடீர்னு  மைக்கை என்னிடம் கொடுத்து, நீங்க பேசணுமுன்னதும் ஒரு விநாடி 'ஙே'.....   என்னத்தைப் பேசறது?  உங்களுக்கு எப்படி முருகனோடுள்ள  சொந்தமுன்னு  சொல்லுங்கன்னுட்டார்.

  இந்தியர்களின்,  அதிலும் முக்கியமா   தமிழர்களின்  தேசிய குணம் 'பேச்சு எங்கள் மூச்சு'   இன்னும் ஒட்டிக்கிட்டுத்தானே இருக்கு! இல்லையோ?
பதிவு எழுதும் நினைவில் ,  சண்டிகருக்கு இடம் மாறி  வந்தப்ப,  பஞ்ச்குலா பெருமாள் கோவிலில்,  சண்டிகர் முருகன் நமக்கு அறிமுகமானது முதல் ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிட் போல  பேசிட்டேன் :-) அதுலே கொஞ்சம் நம்மவர் வீடியோ எடுத்துருந்தார்.
பெரியவர்களின் கோலாட்டம் ஒன்னு நவராத்ரி ஸ்பெஷல் ஐட்டம் !

விழா முடிஞ்சதும் ப்ரஸாதம் கிடைச்சது!
பழைய குருக்கள் வேற  இடத்துக்குப் போயிட்டார்.  முந்தி ஒரே ஒரு குருக்கள்தான் இருந்தார். தனி மனுசரா   அவருக்கும் விட்டுவிட்டுன்னு தான் இருந்துருக்கும். இப்போ புது குருக்கள் வந்தாச்சு.  கூடவே  வேதபாடசாலை ஒன்னும் ஆரம்பிச்சதால் அதுக்கும் ஒரு தனி ஆசிரியர், வேதம் படிக்க நாலு மாணவர்கள்னு  கோவிலே கலகலன்னு இருக்கு!  குருக்களும் சரி, வேதம் சொல்லிக்கொடுக்கும் வாத்யாரும் சரி இளைஞர்கள்தான்.
புது குருக்கள் ராஹுல்,  வாரணாசிக்காரர்.  சமஸ்க்ரதம்  அண்ட் ஆச்சாரம் முதுகலை பட்டதாரி.
வேதிக் முகேஷ் த்ருபாதி  மத்யப்ரதேஷ்காரர். வேத பாடசாலை ஆசிரியர்.
மாணவர்கள் பத்து, பதினொன்னு, பனிரெண்டு அண்ட் பதினாலு வயசுப்பிள்ளைகள்.  சிவம் சுக்லா (சித்ரகூட்) சுமன் (ஜார்கண்ட்)  அபிஷேக் அண்ட் கோபி  (பீஹார்)
கோபிக்கு  அம்மை போட்டுருக்கு. குளிக்க வார்த்தாச்சுன்னாலும்....   இன்னும் ஒரு வாரத்துக்கு ஓய்வெடுக்கட்டுமுன்னு  விட்டுருக்காங்க.  மற்ற பிள்ளைகள்தான் கோபாலோடு ஒட்டிக்கிட்டே இருந்தாங்க :-)
அதென்னவோ தெரியலை   எங்கே போனாலும் நம்ம கோபாலிடம் குழந்தைகள் வந்து ஒட்டிக்குவாங்க.  இங்கேயும்தான் :-)
மேலே படத்தில்  வலப்பக்கம் இருப்பவர்  நம்ம குணா (ப்ளூ ஷர்ட்)

கோவிலில் விசேஷ நிகழ்ச்சிகளுக்கெல்லாம் சாப்பாடு வகைகள்  சப்ளை செய்வது நம்ம கார்த்திக் ரெஸ்ட்டாரண்ட் குணாதான்.  நாம் இங்கே  ஊர்விட்டுப் போனபோது அவர் தனி மனிதர். இப்போ இந்த  அஞ்சு வருசத்துலே கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள்.
இதேபோலத்தான் நம்ம ரமேஷூம். இப்போ அவருக்கும் ரெண்டு குழந்தைகள்.  ரமேஷ் ரொம்ப நல்லாப் பாடுவார்.  முந்தியெல்லாம் தினமும் வேலைமுடிஞ்சு கோவிலுக்கு  அவர்     வர்றதுக்கும், நாங்க அங்கே போய்ச் சேர்றதுக்கும் சரியா இருக்கும். எல்லா சந்நிதிகளிலும்  போய் நின்னு  பாடுறதைக் கேக்கும்போது...  இந்த சின்ன வயசுலே எவ்ளோ பக்தி பாரேன்னு இருக்கும் , எனக்கு!

நம்ம குருவுக்குத்தான் இன்னும் ஜோடி கிடைக்கலை.  இவ்ளோ தூரத்துலே பொண்ணு கொடுக்கத் தயங்கறாங்களாம் ஊருலே!   சீக்கிரம் அவருக்கு ஒரு வழியைக் காட்டுன்னு அந்த முருகனையே வேண்டிக்கிட்டேன்.
மேலே படத்தில் துள்ஸிக்கு வலப்புறம் குரு, இடப்பக்கம் ரமேஷ்! 

நண்பர்கள் நம்மை ஹொட்டேலுக்குக் கொண்டு விடறேன்னு சொன்னாலும்.... நவராத்ரி வேலைகள் கோவிலில்  நிறைய இருப்பதால் வேணாமுன்னுட்டு , அவுங்க உதவியால் ஒரு  ஊபர் டாக்ஸி வரவழைச்சுக்கிட்டோம்.

எல்லோரையும் பார்த்த திருப்தி எங்களுக்கு.  விளக்குப் பூஜையும் தரிசிக்க முடிஞ்சதுன்னு ரெட்டை மகிழ்ச்சி.



தொடரும்......:-)

PINகுறிப்பு:    சண்டிகர் ஸ்ரீ கார்த்திகேயஸ்வாமியையும்,  மற்ற பரிவார்களையும் தனி ஆல்பத்தில் போடத்தான் வேணும், இல்லையோ?     முருகன் தரிசனத்துக்கு  இங்கே க்ளிக்கலாம் :-)



15 comments:

said...

முருகா... பழைய நண்பர்களை பார்ப்பது(ம்) சுகம்.

said...

நன்றி. அருமை.

said...

ரசித்தேன். கார்த்திகேயரையும் தரிசித்துக்கொண்டேன்.

said...

வாங்க ஸ்ரீராம்.

உண்மைதான். அதுவும் நம்ம வாசகர்களா வேற இருக்காங்க :-)

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இந்தக் கோவிலுக்கும் நமக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கு :-)

said...

super !!!

said...

அருமையான தரிசனம்.

said...

அலுவல் சம்பந்தமாக பலமுறை சென்ற இடம் - சில நாட்கள் தொடர்ந்து அங்கே இருந்திருக்கிறேன் - ஆனால் இக்கோவிலுக்குச் சென்றதில்லை. அடுத்த முறை இங்கே பயணித்தால் செல்ல வேண்டும்!

தொடர்கிறேன்.

said...

சண்டிகர் முருகன் கோயிலைப் பற்றி நீங்க முன்னாடி எழுதுனப்பவே படிச்சிருக்கேன். மறுபடியும் அந்தக் கோயிலுக்குப் போக ஒங்களுக்குக் கொடுத்து வெச்சிருக்கு. முருகன் கருணை ஒங்களுக்கு நெறைய இருக்கு. வாழ்க. வாழ்க.

said...

வாங்க நாஞ்சில் கண்ணன்.

நன்றீஸ்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அடுத்தமுறைன்னு சொல்லிட்டீங்கல்லெ ! அவனே நினைவு படுத்துவான்:-)

said...

வாங்க ஜிரா,

கோபால் என்ற நெல்லுக்குக் காட்டும் கருணை கூடவே இருக்கும் துல்ஸி என்ற புல்லுக்கும் கிடைக்குது !

said...

சண்டிகர் முருகன் நண்பர்கள் சந்திப்பு என மகிழ்ச்சியான தருணம்.