Monday, January 31, 2005

ரெடிமேட் !!!(பகுதி 1)

நான் சின்னப்புள்ளையா இருந்த காலத்துலே இந்த 'ரெடிமேட்' சமாச்சாரமெல்லாம் கிடையாது! துணி
எடுத்துத் தைக்கக் கொடுக்கணும்! எனக்கு நினைவு தெரிஞ்ச, முதல் தையல்காரர் வத்தலகுண்டு மெயின்
ரோடிலே கடை வச்சிருந்த அப்துல் காதர்தான்!வீட்டுலே புதுத்துணி எடுத்தவுடனே, அந்த சேதியைச் சொல்ல நாந்தான் கடைக்கு ஓடுவேன்.கையோட
கூடவே அவரும் நம்ம வீட்டுக்கு வந்துருவார்.

அக்காங்க அவுங்க அளவு ப்ளவுஸ் கொடுத்துட்டு, அதுலே என்னென்னெ மாறுதல் செய்யணும், கை எவ்வளவு
நீளம், கழுத்து என்ன ஸ்டைல் எல்லாம் சொல்வாங்க. அந்தப் புதுத்துணியிலேயே ஒரு ஓரத்துலே பென்சிலாலே
எழுதிக்குவார். எட்டிப் பார்த்தால் அரை, காலுன்னு ஒரே பின்னமா இருக்கும் நம்பருங்க எல்லாம்!

அப்புறம் எனக்கு மட்டும் அளவு எடுப்பாங்க.வளர்ற புள்ளை பாருங்க! இன்னும் ரெண்டு மூணு 'டக்ஸ்' வைக்கச்
சொல்வாங்க. வளர வளர பிரிச்சு விடறதுக்காம்! அதுவரை அந்தத்துணி கிழியாம இருக்கணுமே! ( நான் குரங்கு
மாதிரி மரமெல்லாம் ஏறுவேன். பயமே கிடையாது! எத்தனை கவுனுங்களை இப்படி மரமேறியே கிழிச்சிருக்கேன்!
ஆனா அதையெல்லாம் இப்பக் கண்டுக்கக்கூடாது!)

அண்ணனுக்கு மட்டும் துணிங்க மதுரையிலே இருந்து தைச்சு வரும்! அங்கேயே துணி எடுத்துத் தைக்கக் கொடுத்துடுவாரு!
ரெண்டு வாரம் கழிச்சு அதுக்கு ஒருதடவை மதுரைக்குப் போய் வாங்கிக்கிட்டு வந்துருவாரு. அங்கே பொம்பிளைங்களுக்குத்
தைக்க மாட்டாங்களாம்! 'ஜெண்ட்ஸ் டெய்லர் கடை'யாம்!

மறுநாளிலே இருந்து ஆரம்பிச்சுருவேன்! எதுக்கா? எல்லாம் நம்ம டெய்லர் கடையிலே 'தவம்' இருக்கத்தான்!
மொதல்லெ என் துணியைத் தச்சுரணும்! எனக்கு போட்டுக்க வேற எதுவுமே இல்லாத மாதிரி, அந்தப்பக்கம் போறப்ப,
வாரப்ப இதே ஜோலிதான்! அந்தப் பக்கம் போற வேலை இல்லேன்னாலும் ச்சும்மானாச்சுக்கும் அந்தப் பக்கம் போய்
'என்னங்க பாய், தச்சாச்சா?'ன்னு பெரிய மனுஷியாட்டம் ஒரு குரல் கொடுத்துட்டுப் போவேன். எங்க ஊர்ப்பக்கம்
இஸ்லாமியர்களை 'பாய்'ன்னுதான் எல்லோரும் கூப்புடுவாங்க.

எந்த ஊருன்னு கேக்கறீங்களா? இதுக்குள்ளே தெரிஞ்சிருக்கணுமே! எல்லாம் நம்ம 'வத்தலகுண்டு'தான்!

ரெண்டு மூணுநாள்தான் இந்த குரல் கொடுக்கற வேலை! அப்புறம் அங்கெயே 'டேரா' போட்டுருவேன். அங்கே
ஒரு ச்சின்னப்பையன் 'காஜா'எடுத்துக்கிட்டு உக்காந்திருப்பான். அவனோட வேலை காஜா எடுக்கறது மட்டுமில்லை.
பகலுக்கு, பாய் வூட்டுலெ போய் சோறு கொண்டுட்டு வர்றது, நூல், பட்டன்,ஊசி இதெல்லாம் தேவைப்படறப்போ
'ஜெனரல் ஸ்டோர்ஸ்'லே இருந்து வாங்கியாறதுன்னு இப்படி எல்லா எடுபிடி வேலைக்கும் அவந்தான் ஆளு!

'பாப்பா, மத்தியானமா வூட்டுக்கு கொடுத்துவிட்டுர்றேன்'இது என் தலையைப் பார்த்ததும்'பாய்' சொல்றது!
நானும் 'சரி'ன்னு தலையை ஆட்டிட்டு, அங்கெயே அந்தப் பாய்லே( இது தரையிலெ விரிச்சிருக்கற பாய்ங்க!)
உக்காந்து, மெஷினுக்குக் கீழே கலர்க்கலரா விழுந்துகிடக்குற துண்டுத்துணிங்களை எல்லாம் பொறுக்கி வச்சுக்கிட்டு
விளையாடிக்கிட்டே இருப்பேன். என்னாலே ஒரு வம்பும் இல்லே. நாம்பாட்டுக்கு இருப்பேன்! என்னை ஒண்ணும்
சொல்லமுடியாதுன்றதாலெ, பாய் அந்தக் காஜாப் பையன் செய்யற ச்சின்னத் தப்புங்களைக்கூட எதோ பிரமாதமான
குற்றம் செஞ்சுட்டாப்போல நினைச்சுக்கிட்டு கத்துவார். தப்பே செய்யாம இருந்தாலும்கூட ஒரு கத்து கத்துவார்!
ஒரு துணியை முடிச்சிட்டு அங்கிட்டு அம்பாரமாப் போட்டு வச்சிருக்கற துணிகளிலெ ஏதாவதைத் தைக்கறதுக்கு எடுக்கும்போது
மட்டும் நான் ஒரு பார்வை பார்ப்பேன். ச்சும்மாத்தான்! இப்படியே ரெண்டு மூணு துணிங்களை தைக்கறதும், அதுக்குப்
பட்டன் தைக்கறதுக்கு, காஜாப் பையன்கிட்டே விசிறிப் போடறதுமா இருப்பார்.நானும் அப்பப்ப ச்சும்மா ஒரு பார்வை மட்டும்
பார்த்துட்டு நாம்பாட்டுக்கு விளையாடிக்கிட்டே இருப்பேன்.


'பாய்'க்கும் ஒருமாதிரி இருக்கும் போல! அதிலும் அந்தத் துணிங்களை தைக்கறதுக்கு எடுக்கறப்ப என்னை அடிக்கண்ணாலே
பாத்துக்கிட்டே எடுப்பார். அப்புறம் அவராலெ தாங்க முடியாம, பாப்பா, இப்ப உன் சட்டைதான்! எடு அந்தத் துணியம்பார்!
கால் படபடன்னு அமுக்க ஒரு ஸ்பீடுலே மெஷினை ஓட்டுவார். இப்படி ஒரு வெட்டு, அப்படி ஒரு வெட்டுன்னு படபடன்னு
வெட்டி, கிடுகிடுன்னு தைச்சு முடிச்சுருவார். நான் அதை வாங்கிக்கிட்டு 'ஹை ஸ்பீட்'லே வீட்டுக்கு ஓடுவேன். போட்டுப்
பாக்கறதுன்னு ஒண்ணு இருக்குல்லே! வளர்ற புள்ளைக்குத் தைக்கறதாலே கொஞ்சம் 'லூஸ்'ஸாத்தான் இருக்கும்! நமக்கு
அதெல்லாம் ஒண்ணும் கஷ்டம் இல்லை! போட்டாப் போட்டதுதான்! உடனே கழட்டிவைக்கற பாபத்து கிடையாது!

வீட்டுலே எல்லோருக்கும் காமிச்சிட்டு, ஃப்ரெண்ட்ஸ்க்கும் காமிச்சிட்டு, அம்மாவுக்கு காமிக்கறதுக்காக அப்படியே போட்டுக்கிட்டே
இருப்பேன்.பண்டிகைக்கு எடுத்த துணிங்களா இருந்தா, 'அதை பண்டிகையன்னைக்குப் போடறதுக்காகக் கழட்டி வை, அழுக்காக்கிடாதே'ன்னு
அக்காங்க கத்திக்கிட்டே இருப்பாங்க!

சொன்ன பேச்சுக் கேக்காம, அழுக்கு செஞ்சிட்டு, மறுபடி வேற துணி எடுத்து, அதை தைக்கக் கொடுக்கறதுன்னு பலசமயங்கள்ள
நடந்திருக்கு! நான் வீட்டுலே கடைசிக் கட்டிக்கரும்பாச்சா( அப்படித்தான் அக்கம்பக்கத்து ஆயாங்க சொல்றது!)அதனாலே செல்லம் ஜாஸ்தி!
அக்காங்கதான், சிலசமயம் கோவத்துலே கத்துவாங்க, 'இவளுக்கு மட்டும் கணக்கேயில்லாம எடுங்க. எங்களுக்குன்னாத்தான் மனசு
வராது!'

ச்சும்மா சொல்லக்கூடாது, நம்ம பாய்,துணி தைக்கறதிலே கெட்டிக்காரர்! இல்லாட்டா, எங்க அக்காங்களுக்கு பதில் சொல்லி
மாளுமா? அப்படியும், வெளியே போற சமயத்துலேதான், டெய்லர் பாய் சரியாத் தைக்காதது அவுங்களுக்குத் தெரியும்!
அதெல்லாம் ச்சும்மா.... நல்லாத்தான் தைச்சிருப்பாரு. புதுசு போட்டுப் பாக்கறப்பச் சரியாத்தானே இருந்துச்சு! இப்ப வெளியே கிளம்பற
அவசரம். அவதி அவதின்னு கிளம்பறப்ப எல்லாம் கோக்குமாக்காப் போயிருதுல்லே!

ஊர்லே எங்க பாட்டிக்கும் இதே கதைதான்! பாட்டி, கொஞ்சம் குண்டா(!) இருப்பாங்க.மெட்ராஸ் வெயில்லே, குளிச்சிட்டு பாத்ரூமை
விட்டு வெளியே வர்றப்பவே வேர்த்து ஊத்தும்! அதுலே, அவுங்களுக்கு பாத்ரூமுக்குள்ளேயே ஜாக்கெட் போட்டுக்கிட்டுப் புடவையைச்
சுத்திக்கிட்டு வர்ற பழக்கம்! அந்த வேர்வையிலே ஜாக்கெட் ஒட்டிப் பிடிச்சுக்கும்! கை ஏறவும் ஏறாது, அவுத்து எடுக்கவும் வராது!
அவுங்க பாடு ரொம்பக் கஷ்டம்! அப்பவும் திட்டு வாங்கறது அந்த ஜாக்கெட்டைத் தைச்ச டெய்லர்தான்! பாவம்!

'ஒருத்தனாவது சரியாத் தைக்கறானா? எனக்கொரு நல்ல ஜாக்கெட் தைக்கற டெய்லர் தேவலோகத்துலே இருந்துதான் வரணும்'ன்னு
புலம்புவாங்க! எனக்குச் சிரிப்பா வரும். 'ஆமாம் அம்மம்மா. எப்பவாவது, யாராவது ஒரு டெய்லர் உங்களுக்கு நல்ல ஜாக்கெட்
தைச்சிருப்பாருல்லே! அவர் இப்ப மேலே போயிருப்பாரு. அங்கிருந்து வந்தாத்தான் உண்டு'ன்னு சொல்லி, என் 'பட்டத்தை' உறுதி
செஞ்சுக்குவேன்! என்ன பட்டமா? 'வாயாடி!'


இன்னும் வரும்!3 comments:

said...

யக்கோவ்!!

ஆகா! நீங்க வத்தலக்குண்டாக்கா? அது எங்க தாத்தா(அம்மாவின் அப்பா :-)) ஊருக்கா. லீவுவுட்டா பாளையங்கோட்டையில இருந்து நேர வத்தலக்குண்டு தான்க்கா. எப்படி மறக்க முடியும் ஜில்லுன்னு இருக்கும் வத்தலக்குண்டை. மாரியம்மன் கோவில் திருவிழா, அந்த மார்க்கெட், எங்க தாத்தா மளிகைக் கடை முதல்ல, அப்புறம் கருப்பட்டிக் கடை, சந்திரா டாக்கீஸ் டூரிங் கொட்டகையில தரையில உக்காந்து பார்த்த படங்கள், கோவிந்தராஜ் டாக்கீஸ்ல பார்த்த மன்வாசனை படம், சுடுகாடு தாண்டி பயந்துகிட்டே நைட் ஷோ பார்த்த பரிமளா டாக்கீஸ், அந்த பஸ்ஸ்டாண்டு, பழைய வத்தலகுண்டு எங்க தாத்தா வயல், கொடைக்கானல் மலைய பார்த்துக்கிடே மொட்டைமாடி தூக்கம்...அப்பப்பா... அப்படியே பசுமையா மனசுல நிக்குது. அதைப் பத்தி ஒரு பதிவே போடலாமக்கா....

said...

துளசி,
பல முறை உங்களின் பின்னூட்டம், பதிவு ஆகியவற்றைப் பார்த்திருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேனென்றால் அப்போதெல்லாம் நீங்கள் பையன் என்று நினைத்திருந்தேன்
:-) . ஆனால் இது முழுதும் என் தவறல்ல. அமர்க்களம் படத்தில் ரகுவரன் பெயர்கூட துளசிதான் என்று ஞாபகம் ;-).

said...

அப்போதெல்லாம் நீங்கள் பையன் என்று நினைத்திருந்தேன்

பாத்தீகளா?

என்னைப் போலவே இன்னோரு ஆத்மா?

பயந்து கொண்டே படித்தேன். வேறு எதையும் கௌப்பி விடப் போறீங்களோன்னு.

நல்ல வேளைக்கு? வரிக்கு வரி ரசித்து படிக்க முடிந்தது. காரணம் இருவருக்கும் ஒரே வாழ்க்கை. வாழ்ந்த இடம் தான் வெவ்வேறு.

என்ன 250 கிமீ இருக்குமா?