Tuesday, February 01, 2005

புக் ஷெல்ஃப்!!!

இப்ப நாங்க வீடு மாத்தற வேலையிலே ரொம்ப மும்முரமா இருக்கோம். ஒவ்வொரு இடமா ஒழிச்சுக்கிட்டு
இருக்கறப்ப எனக்கே எனக்குன்னு இருக்கற புத்தக அலமாரிக்கு வந்தேன். இது ரொம்பச் சின்னதுதான்.
நான் வச்சுக்கிட்டு இருக்கற பத்துப் புத்தகத்துக்கு இதுவே தாராளம்!



இத்தனை வருஷமா, அதாவது போன வருஷம் வரைக்கும் ஆ.வி., குமுதம்ன்னுதான் 'இலக்கியம்' படிச்சுக்கிட்டு
வந்தோம். இணையத்தொடர்பு ஒரு ஒம்பது வருஷமா இருந்தாலும், அதுலெ தமிழ் மொழியிலே படிக்கலாம்ன்னு
தெரியாது! அப்புறம் ஒரு மூணு, நாலு வருசத்துக்கு முந்திதான், தினமணி, தினகரன், தினமலர், ஆறாம்திணை
இப்படி வாசிப்பு அனுபவமும் ஆனந்தமுமாக கிடைக்க ஆரம்பிச்சது!

போன வருஷம் ஏதோ ஒண்ணைத் தேடப்போக நான் மரத்தடியிலே போய் நின்னதும், அப்புறம் நடந்ததுமெல்லாம்
அப்பப்ப வேற வேற சமயங்களிலே பதிவாப் போட்டேன்.

மரத்தடியிலே 'புத்தகங்களை'ப் பற்றி அடிக்கடி சுரேஷ் எழுதுவார். இப்ப தமிழ்மணம் வந்தபிறகு, சென்னைப் புத்தகக்
கண்காட்சி விவரங்கள் எல்லாம் விவரமாக தெரிஞ்சுக்க முடிஞ்சது! பத்ரியும் ஒரு வீடியோ எடுத்து அதையும் பதிவுலே
போட்டார். எல்லாம் நல்ல விஷயம்!

இங்கே வெள்ளைக்கார நாடுகளிலே 'புத்தகக் கடை'களிலே வேற விதமான அனுபவம்! ரகம் ரகமா புத்தக அடுக்குங்க
வச்சிருக்காங்கல்லே, அதுலே ஏதாவது புத்தகத்தை எடுத்துப்படிக்க தடையேதும் இல்லை! நிறையப்பேரு, அங்கியே நின்னுகிட்டு
படிச்சுக்கிட்டேஏஏஏஏஏஏஏஏஏ இருப்பாங்க! கடைக்காரங்க யாரும் அதைக் கண்டுக்கவும் மாட்டாங்க! ( அதான் விக்கற புத்தகத்துக்கு
யானைவிலை வச்சிருக்காங்களே!)

புத்தகம் வெளிவந்தவுடனே அலங்காரமா அடுக்கி யானை விலைக்குப் போட்டிருப்பாங்கல்லே, அதுவே கொஞ்சநாளிலே குதிரைவிலைக்கு
25% கழிவுன்னு வந்துரும்! இப்படியே கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பான கதைதான்! திடீர்னு பார்த்தா 'ஸ்டாக் டேக்கிங்'னு சொல்லிக்கிட்டு
அடிமாட்டு விலைக்கு வந்துரும். அதுலெயே இவுங்களுக்கு 50% லாபம் இருக்கும்ன்னு நான் நினைச்சுக்குவேன்.

ஒருவாரம் இப்படி 'ஸ்டாக் டேக்கிங்'சேல் போட்டுட்டு,அதுக்கு அடுத்த வாரமே, 10 டாலர் கொடுத்துட்டு ஒரு ப்ளாஸ்டிக் பை நிறைய
எந்தப் புத்தகம் வேணுமுன்னாலும் எடுத்துக்கலாம்ன்னு விப்பாங்க! ச்சும்மா 10 டாலர்தானேன்னுட்டு நிறையப் பேரு பூந்துவிளையாடிடுவாங்க!
இதுலே நாங்களும் சேர்த்திதான்! தலகாணி தலகாணியா தடிமனான புத்தகங்களும் இதுலே இருக்கும். எல்லாப் புத்தகங்களையும் ஒரு பார்வை
பார்த்துட்டு, அவுங்கவுங்களுக்கு வேண்டியதை அள்ளிக்கிட்டு போகவேண்டியதுதான்!

ப்ளாஸ்டிக் பை சுமாரான, பெரிய அளவிலேதான் இருக்கும்! அது கிழியக் கிழியப் புத்தகங்களை அடைச்சுக்கிட்டு, ஆளுங்க ஒரு சந்தோஷப்
புன்னகையோட போறதைப் பார்க்கணுமே! பலசமயம் அந்தக் கனம் தாங்காம பையோட காதுகூட அறுந்துடும்! அப்ப இருக்கவே இருக்கு
சூப்பர்மார்கெட் ட்ராலி!

அதையெல்லாம் வீட்டுக்குக் கொண்டுவந்துட்டு, படிச்சுக் கிழிச்சப்புறம் அவைகளை 'டிஸ்போஸ்' செய்யறது இன்னோரு தலைவலி!
இங்கே இருக்கற 'சால்வேஷன் ஆர்மி , ரெட் க்ராஸ், ஆப்பர்ச்சூனிட்டி ஷாப்'ன்னு இருக்கற இடங்களிலே கொண்டுபோய்க் கொடுத்தோம்ன்னா
சந்தோஷமா எடுத்துக்குவாங்க! இப்பப் பாருங்க நமக்கும் சந்தோஷம், அவுங்களுக்கும் சந்தோஷம்!

அப்பப்ப இப்படிக் கொண்டுபோய் கொடுக்கற சமயம் நான் கண்டிஷனா சொல்லிருவேன்,'என் புத்தக அலமாரியிலே யாரும் கை வைக்கக்
கூடாது!' இங்க்லீஷ் புத்தகம் கிடைச்சுரும். தமிழ்ப் புத்தகம் இங்கே கிடைக்கவே கிடைக்காதுல்லே. அதுக்குத்தான்!

அதான் இப்ப வீடு மாறும் சமயத்திலும் என் புத்தகங்களையெல்லாம் எடுத்து அடுக்கி வைக்கறப்ப, என்னென்ன இருக்குன்ற விவரத்தை
உங்களுக்கும் சொல்லலாம்ன்னு தோணிடுச்சு!

இதோ அந்தப் பட்டியல். யாரும் அடிக்க வந்துறாதீங்க, இதெல்லாம் ஒரு கணக்குலே சேர்த்தியான்னு!

முதல்லே பக்தியா ஆரம்பிக்கறேன். அப்புறம் போகப் போக.....

தெய்வத்தின் குரல் --- பாகம் 1, 2, 3, 6 ( நாலும் அஞ்சும் அப்ப கிடைக்கலை)

அர்த்தமுள்ள இந்து மதம்---- பாகம் 1 ( மற்றதெல்லாம் வாங்கலை)

ராமாயணம் ( ராஜாஜி)

மகா பாரதம் ( ராஜாஜி)

சிவனருட் செல்வர் ( கிருபானந்த வாரியார்)

பக்தி வயல் ( பெளராணிகர்)

இதோட பக்தி செக்ஷன் ஓவர்


பாரதியார் கவிதைகள்

திருக்குறள் விளக்கங்களுடன் (தமிழ்)

திருக்குறள் விளக்கங்களுடன் ஆங்கிலத்தில்

தமிழ்ப் பழமொழிகள் ---- கி.வா.ஜ தொகுத்தது, ஒரு பெரிய தலைகாணி சைஸில் இருக்குது!

மலரும் உள்ளம் ---- அழ.வள்ளியப்பா ( 2 தொகுதிகள்)


நாவல்

அலை ஓசை ( ஓசியிலே கிடைச்சது! அவுங்களாதான் கொடுத்தாங்க. வைச்சுக்கச் சொல்லி!)

இரும்புக் குதிரைகள் --- பாலகுமாரன்

பாலங்கள் ---------சிவசங்கரி

Misc

சமைத்துப் பார் (மூன்று பாகங்கள்) -- மீனாட்சி அம்மாள்

கார்ட்டூன் ---மதன்

மாமியார் கதைகள் ---பானுமதி ராமகிருஷ்ணா

விக்கிரமாதித்தன் கதைகள்

ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனைகள் --தமிழ் விளக்க உரையுடன்

இதெல்லாம் மூணு, நாலு வருஷத்துக்கு ஒருமுறை ஊருக்குப் போகும்போது 'வானதி'யிலே வாங்கியவை. அப்புறம் ஒரு தடவை
மணிமேகலை பிரசுரம் போனப்ப வாங்கிய, செலவில்லாத வைத்தியம், வீட்டுக் குறிப்புகள். அழகாக இருப்பது எப்படி? இப்படி
அது இதுன்னு ஒரு பத்துப் பதினைஞ்சு புத்தகங்கள்.

இப்பத்தான் ஞாபகம் வருது. போனமுறை, பாலகுமாரனோட புத்தகம் ஒண்ணு (பேரு மறந்து போச்சு) வாங்கிவந்தேன். கூட்டமா ஏதோ
கோயில்ன்னு வரும். கடைசியிலே அந்த சாமியாரு 'கபால மோட்சம்'அடைஞ்சிடுவாரு! பெண்கள் வழி சமுதாயம்ன்னு வரும்!
'பிச்சை எடுக்குதாம் பெருமாளு. அதைப் பிடுங்குச்சாம் அனுமாரு'ன்ற கதையா அதை இரவல் வாங்கிபோனவங்க திருப்பித்தரலை!
இருக்கற நாலைஞ்சு குடும்பத்துலே யாருன்னு போய்க் கேட்கமுடியும்?

இதை வச்சுக்கிட்டே இந்த 23 வருஷத்தை ஓட்டினதை நினைச்சா.... ஆஹான்னு இருக்கு!


6 comments:

said...

எப்படி மனசாற புக்கெல்லாம் சால்வேஷன் ஆர்மிக்கு கொடுக்கிரீங்க... நான் யாரும் காசு கேட்டாக்கூட குடுத்துடுவேன், புக்கெல்லாம்(இதுமாதிரி இன்னும்பல:) பெரும்பாலும் கொடுக்கவே மனசு வராது:) அப்பப்போ வீட்டை ஒழிக்கிறேன் பேர்வழின்னு மனசு கிளம்பிடுவாங்க.... அவங்கட்ட இருந்து காப்பாத்தி மறுபடியும் அடுக்கிறது பெரிய விஷயம். அப்போதுதான் படிக்காத பல புக் வெளிவரும், எடுத்து ஒருமுறை பாத்துட்டு, சிலநாள் மேசையில கிடக்கும். அப்புறம் மீண்டும் எடுத்து அடுக்கப்படும்.

said...

துள்சி ஏராளமான புஸ்தகங்கள் வச்சிருக்கேன்
ஆனா உங்கள மாதிரி ஒழுங்குமுறையா எல்லாம்
இல்லை வீடு முழுக்க!எங்கெங்கு இடமிருக்கோ
அங்கெல்லாம் இனி நானும் எல்லாவற்றையும்
ஒழுங்கு பண்ணனும்

நல்லாருக்கு துள்சி நீங்க எழுதுறவிதம்!

said...

புத்தக ஷெல்ப் பற்றி பேசிட்டீங்களா? கை உடனே துறு துறுங்குது ( எந்த "று" போடணும்!) ஒவ்வொரு முறை வீடு, ஊர், நாடு மாறும்போதும் இந்தப் புத்தகப் பெட்டிகள்தாம் முக்கால்வாசி லாரியை / கன்டெய்னரை அடைத்துக் கொள்ளும். நீங்கள் சொல்வதுபொல் எங்கே "சேல்" அல்லது கண்காட்சி அறிவிப்பைப் பார்த்தாலும் குடும்பத்தோடு அங்கே ஆஜர். தவிர டில்லியில் கனாட் ப்ளேஸில்; அப்புறம் கரோல்பாக் குருத்வாரா சாலையில் நிறைய புத்தகம் "சல்லிசாக" கிடைக்கும். God of Small Things பரிசு வாங்கிய சில மாதங்களிலேயே ஒரு நகலை அந்த நடைபாதைக் கடைகள் ஒன்றில்தான் பொறுக்கினேன் ! அதேபோல் சிங்கப்பூர் நூல் நிலையம் ஒரு முறை கழித்துக் கட்டியபோது வாரிக்கொண்டு வந்த பழைய புத்தகங்கள் பல இன்று எங்கள் வீட்டு ஷெல்பில். பெங்களூரில் கமர்ஷியல் சாலையில் இருக்கும் பழைய புத்தகக் கடையில் நுழைந்தால் எதையாவது பொறுக்காமல் வர முடியாது. அட இப்படி புத்த்கம் சேர்த்துள்ளோமே.. ஒரே ஞானக் களஞ்சியமாக இருப்போமோ என்று யோசிக்காதீர்கள். அது வேற விஷயம் :-) :-) எப்போதோ இந்திரா காந்தி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு புத்தகத்தில் ஏதேனும் ஒரு பக்கம் / ஒரு வரி உங்களுக்கு உபயோகமாக அல்லது நீங்கள் ரசித்து இருந்தால் கூட புத்தகம் வாங்கியது அர்த்தமுள்ளதாகிறது என்றார். மிகச் சரி. சில சமயம் புத்தகக் கடையில் மேய்வதே சுகம் !

said...

///இங்கே இருக்கற 'சால்வேஷன் ஆர்மி , ரெட் க்ராஸ், ஆப்பர்ச்சூனிட்டி ஷாப்'ன்னு இருக்கற இடங்களிலே கொண்டுபோய்க் கொடுத்தோம்ன்னா
சந்தோஷமா எடுத்துக்குவாங்க!//

ஐயோ, உஷ்! சேம் சைட் கோல் எல்லாம் போடுறீங்களே !! உஷ் ! வீட்ல வெளிய போயிருக்காங்க ! ஹி ஹி

said...

துளசி,

உங்க எழுத்து நடை ரொம்ப நல்லா இருக்கு. பக்கத்து வீட்டுத் தோழி கிட்ட பேசற மாதிரி ரொம்ப friendly யா எழுதறீங்க.

தாரா.

said...

அன்புள்ள அருணா, மீனா, தாரா, அன்பு & ரவியா

உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி! எதுக்கா? பின்னூட்டம் போட்டதுக்குத்தான்!
வருசத்துக்கு ரெண்டு தடவை 'புக் சேல்'லுக்கு போய் வாங்கிக்கிட்டு, அப்படியே வச்சிருந்தா இந்த 17 வருசத்துலே எவ்வளவு
சேர்ந்து போயிருக்கும்? அதான் தானமாக் கொடுத்துடறது!