Saturday, February 19, 2005

மனுஷ வாழ்க்கை!!!!!

கடவுள் ஒரு நாள் கழுதையைப் படைச்சாராம்!

அப்ப அதுகிட்டே அவர் சொன்னாராம்,"உன் பெயர் கழுதை!
நீ , தினமும் பொழுது விடியறதுலே இருந்து, பொழுது போற வரைக்கும் வரை சோர்வில்லாம உழைக்கணும்.
உன் முதுகில கனமான சாமான்களை ஏத்திக்கொண்டு போக நீ உதவியாக இருக்கணும்.
உனக்கு உணவு புல்! புத்திசாலித்தனம் உனக்கு விதிக்கப்படலை. நீ 50 வருஷம் உயிரோடு இருப்பே!



அதுக்கு அந்தக் கழுதை சொல்லுச்சாம்,' நான் கழுதையாக இருப்பேன். ஆனால் 50 வருஷம் ரொம்ப ஜாஸ்தி. எனக்கு ஒரு 20
வருஷ ஆயுள் போதும்!'


சரி. அப்படியே ஆகட்டும்!'ன்னு கடவுள் சொல்லிட்டாராம்.

அப்புறமா ஒரு நாயைப் படைச்சாராம்!

" உன் பேரு நாய். நீ மனுஷனுக்கு நல்ல தோஸ்தா இருப்பே! அவன்/அவள் கொடுக்கற மிச்சம் மீதியைத்தான் தின்னுவே. அவுங்க வீட்டையெல்லாம்
நல்லா காவல் காப்பே! 30 வருசம் உனக்கு ஆயுசு!"

அதுக்கு நாய்,'30 ரொம்பக் கூடிப்போச்சு! எனக்கு ஒரு 15 போதும். ஆமா, மனுஷன்னா என்ன? 'ன்னு கேட்டுச்சாம்!

சாமி சொன்னாராம், '15 வருசமே போட்டுக்கறென். மனுஷனை இனிமேப்பட்டுத்தான் படைக்கணும்'

அடுத்து குரங்கு.

வழமை போல,'நீ குரங்கு. கிளைக்குக் கிளை தாவிகிட்டே இருப்பே. எல்லோருக்கும் வேடிக்கை காட்டி, சந்தோஷப்படுத்துவே! உனக்கு
ஆயுள் 20! அப்படின்னு சொன்னப்ப, குரங்கு சொல்லுச்சாம்,' சொல்றதெல்லாம் சரிதான்! ஆனா ஆயுசு மட்டும் 10 போதும்'

சாமி 'ஓக்கே'ன்னுட்டு மனுஷனைப் படைச்சாராம்!

மனுஷங்கிட்டே சொன்னாராம், 'நீ மனுஷன். உனக்கு ரொம்ப புத்தி கொடுத்திருக்கேன். எல்லா மிருகங்களையும் நீ அடக்கி டுவே! இந்த
பூமியை உன் ஆட்சிக்குக் கொண்டு வந்துருவே! உனக்கு ஆயுள் 20 வருஷம்!'

மனுஷந்தான் புத்திசாலியாச்சே! யோசிச்சானாம். அப்புறம் சொன்னானாம்,'நான் மனுஷனா இருக்கேன். அது ஒண்ணும் பிரச்சனையில்லே!
ஆனா இவ்வளவு புத்தியை வச்சுக்கிட்டு வெறும் 20 வருஷம்ன்னா ரொம்பக் கொஞ்சமா இருக்கு'

கடவுள் இதுவரைக்கும் நடந்ததைச் சொன்னாராம். 'அவுங்கெல்லாம் ஆயுள் கொடுத்தா வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. அந்த பாக்கிதான் இப்ப
என்கிட்டே இருக்கு. என்ன செய்யலாம்?'ன்னு மனுசன்கிட்டேயே யோசனை கேட்டாராம்.

மனுசன் சொன்னானாம், 'கழுதையோட 30, நாயோட 15, குரங்கோட 10 இதெல்லாம் நானே எடுத்துக்கறேன்'

கடவுள், அப்படியே ஆகட்டும்'ன்னு சொல்லிட்டு போயிட்டாராம்!

அப்ப இருந்து, மனுஷன், மனுஷனா மொதல் 20 வருஷம் வாழ்ந்துட்டு,அதுக்கப்புறம் கல்யாணம் கட்டி, குடும்பத்தைக் காப்பாத்துறது, பிள்ளைங்களைப்
படிக்கவைக்கறது அப்படி எல்லா குடும்ப பாரங்களையும் முதுகுலே சுமந்துகிட்டு 30 வருசம் இருக்கானாம். அப்புறம் பசங்கெல்லாம் பெருசானதும்,
வீட்டைப் பார்த்துக்கிட்டு, என்ன கொடுத்தாலும் சாப்புட்டுக்கிட்டு நாயாட்டம் 15 வருசம் இருந்துட்டு, கிழவனா ஆனபிறகு, புள்ளைங்களோட வீட்டுக்கு,
இங்கே இந்தப் புள்ளைகூட கொஞ்ச நாள், அந்தப்புள்ளைகூட கொஞ்சநாளுன்னு மாறி மாறி தாவிகிட்டு, அங்கங்க பேரப்புள்ளைங்களுக்கு
வேடிக்கைக் காட்டிக்கிட்டு இருக்கானாம்!


இன்னைக்குக் காலையிலே ஒரு நண்பர் மின்னஞ்சலிலே இதை அனுப்பி வச்சார். படிச்சதும் நல்லா இருக்கேன்னு தோணுச்சு. கொஞ்சம்
நம்ம கைச்சரக்கையும் சேர்த்து உங்களுக்கு இந்தப் பதிவைப் போட்டேன். உங்களிலே பலருக்கு இது மொதவே தெரிஞ்சிருக்கலாம்.
தெரியாதவங்களும் இருப்பாங்களே, என்னை மாதிரி!




1 comments:

said...

துளசி,
சில மாதங்களுக்கு முன்னால் நண்ப/நன்பிகள் இதை எனக்கு மின்னஞ்சியிருந்தனர். இது ஓரளவுக்குப் பொருத்தமாகவே இருக்கிறது. :)