கேரளத்திலேக்கு ஒரு ச்சாட்டம்! அதல பாதாளத்துக்கு வெட்டு! பின்பக்கம் முதுகுலே! தைக்கறது அதே சேட்டன்மார் டெயிலர்கள்தான்!
மெட்ராசுக்கு ஸ்டைல் வேற!
இங்கே நம்ம தமிழ் நாட்டுலே, எல்லாத்துக்கும் ஆம்பிளைங்க ஒரு வியாக்யானம் சொல்லிடுவாங்கல்ல! இதுலே கொஞ்சம்(!) வயசான
பொம்பிளைங்களும் சேர்ந்துக்கிடுவாங்களே! இதுகூடாது, அது சரியில்லேன்னு ஆயிரம் குத்தம் சொல்வாங்க. ஊர்வாய்க்குப் பயந்துக்கிட்டு
அடக்கி வாசிக்கணும்! அப்படியும் கொஞ்சம் சுமாரா கழுத்து வைக்கச் சொல்றதுதான்! 'என்னா, இந்த அலட்டு அலட்டிக்கிட்டுப் போறாங்க'ன்னு
ஜனங்க சொல்றதைக் கேட்டும் கேக்காதமாதிரிப் போயிருவோம்!
ஆனா அங்கெ போனப்பத்தான் தெரியுது நம்ம ஜாக்கெட்டெல்லாம் எப்படிக் கழுத்தை இறுக்கிக்கிட்டு இருக்குன்னு! மூச்சுவிடவே(!)முடியாம
சிரமப்படறோமோன்னு அவுங்களுக்கு ஒரே கவலை! அவுங்களுக்கென்ன ஈஸியாச் சொல்லிருவாங்க! எப்பவும் தலைக்குக் குளிச்சு ஈரம் காயாத
முடியை அப்படியே விரிச்சுப் போட்டுக்கிட்டு இருக்காங்க. முடின்னா அது முடி! அநேகமா எல்லாருக்குமே கருகருன்னு நீளமாவும் அடர்த்தியாவும்
ஆளை அடிக்குது! முதுகையே மறைச்சுடற முடி! ஆழமா வெட்டுனா என்ன? அகலமா வெட்டுனா என்ன? முதுகே வெட்டாம, ராஜஸ்த்தான்
பொம்பிளைங்க மாதிரி 'நாடா' முடிஞ்சாத்தான் என்ன?
நமக்கு? தலையை விரிச்சுப் போட்டாக் குடும்பத்துக்கு ஆவாது(!) பின்னிக்கணும்.அதுவும் தலைக்கு எண்ணெய்தடவி, பின்னிக்கணும்!
எண்ணெய் தடவாம இருந்தாலும், அடர்த்தியா இருக்கரமாதிரி ஒரு பம்மாத்துவேலை காட்டலாம்! ஏழ்மையையும், எண்ணெய் இல்லாத
முடியையும் சம்பந்தப்படுத்திட்டாங்களேப்பா! காசில்லாதவனை வர்ணிக்கறதே, எண்ணெய் காணாத தலைன்னு! இதெல்லாம் அப்போ!
எப்போவா? முப்பது கொல்லம் முன்னே! நாங்க அங்கே இருந்தப்ப, நம்ம நண்பர்கள் கூட்டம் கேரளச் சுற்றுலான்னு வந்தாங்க.
கோயில் கோயிலாப் போறதுதான் அப்பெல்லாம் சுற்றுலா! குருவாயூர் கோயிலைப் பார்த்துட்டு, அப்படியே நமக்கும் ஒரு விஸிட்
தரலாம்ன்னு வந்தாங்களா, அவுங்க நம்ம வீடு வந்து சேரும்போதே ராத்திரி பத்தாயிருச்சு! நாங்கெல்லாம் பழைய கதைகளைப் பேசிக்கிட்டே
சாப்பிட்டு தூங்கவே ராத்திரி மணி ரெண்டாயிருச்சு!
நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிங்களாச்சே, சரியாக் கவனிக்கணுமேன்னு நான் கவலையோட, காலையிலே சீக்கிரமா எழுந்து
அரக்கப் பரக்க வேலையை ஆரம்பிச்சுட்டு, எல்லோருக்கும் காஃபி தயாரிச்சு வச்சிட்டு அவுங்களை எழுப்பலாம்ன்னு போனா,
எல்லோரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க.சரி, இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். அப்புறம் எழுப்பலாம்ன்னு நினைச்சு தலையைத்
திருப்புனா, ஜன்னலுக்குப் பக்கத்திலே படுத்திருக்கறவர் முழிச்சுக்கிட்டே ஜன்னல் வழியா வெளியே கண்ணை நட்டுக்கிட்டு இருக்கார்!
அந்த வீட்டுலே பெரிய பெரிய ஜன்னலுங்க.தரையைத் தொடுறமாதிரி கதவு சைஸிலே இருக்கும்! நான் அறைக்குள்ளே வந்ததுகூடத்
தெரியாமல் என்னத்தைப் பாக்கறார்?
மெட்ராஸ் ஆளாச்சே! காஞ்ச ஊருலே இருந்து வந்தவராச்சே! இங்கேயோ எல்லாம் பச்சைப் பசேர்ன்னு இருக்கு. இயற்கைக் காட்சிகளை
ரசிக்கிறார்ன்னு நினைச்சுக்கிட்டே, அப்படி என்னதான் இருக்கு அங்கேன்னு நானும் எட்டிப் பார்த்தேன்!
அப்பத்தானே விஷயம் விளங்குது! கண்ணுக்குக் 'குளுமையான காட்சி'யைத்தான் பார்த்துக்கிட்டு இருக்கார்!
பக்கத்துப் பரம்புலே வீடு கட்டிக்கிட்டு இருக்காங்க. அதுக்குண்டான ஆத்து மணல் நம்ம ஜன்னலுக்கு அடுத்தாப்புலே கொட்டிவச்சிருக்கு.
நானும் அதை 'பீச்'சாக் கற்பனை செஞ்சுக்கிட்டு சாயங்காலம் கொஞ்ச நேரம் அங்கே உக்காந்துக்கிட்டு இருப்பேன். நல்லா 'ஜில்'லுன்னு
குளுமையா இருக்கும்!
சித்தாளு வேலை செய்யற பொன்னம்மாச் சேச்சி, சிமெண்டுக்கலவைக்காக மணலை வாரி எடுத்துக்கிட்டுப் போறதும் வாரதுமா இருக்காங்க!
சும்மாச் சொல்லக்கூடாது, சேச்சிக்கு நல்ல வண்ணமும் பொக்கமும் உண்டு கேட்டோ! வேலை செய்யறப்ப மேலே வெறும் ப்ளவுஸ் மட்டும்
போட்டுக்கிட்டு இருப்பாங்க. தாவணிக்கு ஒரு தோர்த்து. வேலை செய்யற இடத்துக்கு நடந்து வர்றப்ப அது தாவணி! வேலை ஆரம்பிச்சா
அதுதான் ச்சும்மாடு! ஜஸ்ட் லுங்கி, நல்ல பூப்போட்ட லுங்கி! வெளுத்த முண்டும் உடுக்கமாட்டாங்க. அது அம்பலம் போகும்போழ் மாத்ரம்!
ப்ளவுஸ், நான் மொதல்லே சொன்னமாதிரி, படு பயங்கர கட்டிங்கோட, ஒரு சுருக்கமும் இல்லாம உடம்போட சரியாப் பொருந்தியிருக்கும்,
அளவெடுத்துத் தைச்சமாதிரி!
வண்ணம், பொக்கம்ன்னு சொன்னதும் இன்னோரு விஷயமும் நினைவுக்கு வருது. ஒரு நாள், நாங்க வீட்டுலே இல்லாதப்ப யாரோ
ஒரு ஜோடி எங்களைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க. நாங்க வீட்டுலே இல்லைன்னதும் திரும்பிப் போயிட்டாங்க. நாங்க திரும்ப வந்தவுடனே
வீட்டுச் சொந்தக்காரர் ( பக்கத்து வீடுதான்!)பையன் ஓடிவந்து, யாரோ வந்து போன தகவலைச் சொன்னான். அவனுக்கு எட்டு வயசுதான்.
நம்மைத்தேடி அத்தி பூத்தமாதிரி ஆளுங்க வந்தப்ப, யாரு வந்துட்டுப் போனாங்கன்னு தெரியலைன்னா தலை வெடிச்சுடாதா?
"எந்தா பேருன்னு பறஞ்ஞு?"
"பேர் ஒண்ணும் பறஞ்ஞில்லா"
" காணான் எங்ஙனே?"
"காணான் கொள்ளாவுண்ண ஸ்த்ரீதன்னே!"
" வண்ணம் உுண்டாயிருந்நோ?"
" ஆவஸ்யத்தினு!"
" பொக்கமொ?"
" ஆவஸ்யத்தினு!"
யாருடைய அவசியத்துக்கான உயரமும், உடம்பும் ? எட்டு வயசுப் பையன் பேசறதைப் பார்த்தீங்களா? ஆனா, விகல்பமில்லாத
ஜனங்கன்னு புரிஞ்சது! ச்சின்ன ஊராச்சே!
'என்னண்ணே, முழிச்சுக்கிட்டீங்களா? காஃபி கொண்டுவரவா?' ஒண்ணும் தெரிஞ்சுக்காத பாவத்தில் 'அப்பாவியா' நான் கேட்டேன்.
அவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 'அடிப்பாவி.. நல்ல நேரத்துலே வந்தயே'ன்னு மனசுலே என்னைத் திட்டறார்!
அப்புறம் மத்தவங்கெல்லாம் எழுந்தாங்க. எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்! பலாப் பழத்துலே ஈ மொய்க்கிறமாதிரி அவுங்க கண்ணெல்லாம்
சேச்சி மேலேயே இருக்கு!
நானும் அவுங்க கவனத்தைத் திருப்புறதுக்கு வேற என்னென்னவோ பேசிப்பார்க்கறேன். ஊஹூம்.... நடக்கற வழியாத் தெரியலை!
அதுலே பாருங்க, இந்த சமூகத்திலே உயர்ந்த பிரிவு ( ஜாதி/பொருளாதாரம்)என்று சொல்லிக்கிறவங்கல்லாம் இந்த மேல்முண்டு உடுத்தறாங்க.
அடித்தட்டு ஜனங்களும், வசதி குறைந்தவங்களும், உடல் உழைப்பையே பிரதானமாகக் கொண்டவுங்களும்தான் இப்படி வெறும் முண்டு மட்டும்
உடுத்தறது. அவுங்களும் ஒரு தோர்த்தை தோளிலே போட்டுக்கறதுதான்! அப்புறம் இன்னொண்ணு, அவுங்க சமுதாயம் இதைத் தவறான
கண்ணோட்டத்துலே பார்க்கறதுமில்லை. இதெல்லாம் பதிவாயி சீலப்பட்டதாணு. கள்ளமில்லாம இருக்காங்கன்னு நான் நினைப்பேன்!
நாங்க தினமும், வெளியே இத்திரி நடக்கான் போகும். அங்கெல்லாம், யாராவது வீட்டுப் படியை விட்டு இறங்கினாவே, எதிர்லே பார்க்கறவங்க
'எவிடேக்கா?'ன்னு ( நமக்கோ அது அபசகுனம். போறப்பயே இப்படிக் கேட்டா, போற காரியம் விளங்குனமாதிரிதான்!)ஒரு கேள்வியை
வீசுவாங்க. யாருவேணா அப்படிக் கேக்கலாம், சின்னச் சின்ன நண்டும் சிண்டும்கூடக் கேக்கும்! அதுக்குப் பதிலையும் பெருசா
எதிர்பார்க்கறதில்லை. 'வெறுதே நடக்கான்'ன்னு சொன்னாலும் போதும். எனக்கும் இப்படிச் சொல்லிச் சொல்லி போரடிச்சுப்போச்சு!
பதிலை மாத்தலாம்னு, ஒருநா இப்படிச் சொன்னேன்'இத்திரி மீன் மேடிக்கான்!'
அதுவே ஒரு தொடர்கேள்விக்கு ஆரம்பம்ன்னு எனக்கு எப்படித் தெரியும்? 'ஐயோ, நிங்கள் பட்டமாரல்லே, மீன் கழிக்கோ?'
நாங்க அப்பல்லாம் சுத்த சைவம்! ( இதுகூட எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு!)
'ஏய், வெறுதே தமாசைக்குப் பறஞ்சதாணு'ன்னு சொல்லித் தப்பிக்கவேண்டியதாப் போச்சு!
நம்ம ஆளுங்க நினைச்சுக்கறது வேற மாதிரி! ஏன், நாங்களே இங்கே வர்றதுக்கு தயாரானப்ப, நம்ம ஆளுங்க சிலர் சொன்னது என்னன்னா,
'நீங்க ஜாக்கிரதையா இருக்கணும். மலையாளியோ கொலையாளியோன்னு ஒரு பழஞ்சொல் இருக்கு!' ரைமிங் பார்த்தீங்களா?
இதே போல அவுங்களுக்கும் நம்மைப் பத்தி ஒரு அபிப்ராயம் இருக்காதா? திருவனந்தபுரம், நாகர் கோயில் பக்கம் இருக்கற மலையாளிகள்
தமிழ் நாட்டு ஜனங்களை 'பாண்டி'ன்னு சொல்றாங்க( நம்ம காதுக்குக் கேக்காமத்தான்!) பழங்காலத்துலே பாண்டிய நாட்டு ஆட்களை இப்படிக்
குறிப்பிட்டிருப்பாங்க போல, இப்ப அதுவே எல்லாத் தமிழ்க்காரர்களுக்கும் ஆகிப்போச்சு! ஆனா நாங்க இருந்த திருச்சூர், எர்ணாகுளம் பகுதியிலே
'தமிழன்மார்'ன்னு சொல்றாங்க! ஆனா பாண்டின்றதைவிட இது கொஞ்சம் பரவாயில்லைன்னு எனக்கு ஒரு தோணல்!
எல்லா நாடுகளிலும் பேசற பாஷைதான் வேறயே தவிர மனுஷ இனம் ஒண்ணுதானே!
அதெல்லாம் இருக்கட்டும், அந்த பயங்கர ஃபேஷன்லே நான் ப்ளவுஸ் தைச்சுக்கிட்டேனான்னுதானே கேக்க வர்ரீங்க?
அந்த சோகக் கதையை ஏன் கேக்கறிங்க? அங்கே இருந்த ஒன்னரை வருஷத்திலே ஒரு ப்ளவுஸ் கூட தைச்சுக்கலே தெரியுமா?
கல்யாணம்ன்ற வலையிலே சிக்கினதும் வாழ்க்கையே மாறிடுச்சு! முந்தியெல்லாம், தேவையோ இல்லையோ பொழுதன்னிக்கும்
துணி எடுக்கறதும், புதுசுபுதுசா அப்பப்ப வர்ற ஃபேஷனை ஒட்டி, விதவிதமாத் தைச்சுப் போட்டுக்கறதுமா இருந்ததுக்கு இப்ப ஒரேடியா
லீவு விட்டாச்சு!
இவருக்கு வர்ற ஸ்டைஃபண்ட், 'திவசேன செலவுகள் முடங்காதே கழியான் மாத்ரமே மதியாயிருந்நு'! அதுகொண்டு, புதுசு எடுக்கறதுன்றது
ஒரு ஆடம்பரம்ன்ற ஞானம்(!) வந்துடுச்சு! அதான் ஏற்கெனவே கண்டமானம் வாங்கிக் குவிச்சிருக்கே! அதையெல்லாமே போட்டுப் பழசாக்கவே
அஞ்சாறு வருஷம் செல்லுமே! ( இப்படியெல்லாம் சொல்லி, என்னைத் துணிக்கடைப் பக்கமே அண்டவிடாம கவனமாப் பார்த்துக்கிட்டாரு
எங்க இவரு!)
இன்னும் வரும்!
Friday, February 18, 2005
ரெடிமேட் பகுதி 3
Posted by துளசி கோபால் at 2/18/2005 11:58:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நகைச்சுவை கரைபுரண்டோடுகிறது .. அப்புறம் என்ன இருந்தாலும் நீங்க மக்களை சந்தர்ப்பம் தெரியாமல் தொந்தரவு பண்ணாதீங்க ... ;~)
புது வீடு என்ன சொல்லொது? நல்லாவே சிரிக்க வைக்கிறீங்க. உங்கள பாக்கிறதுக்காகவே நியூஸீ வரணும் என்று தோணுது!!
அன்புள்ள முத்து,
இனிமேலும் 'சிவ பூஜையிலே கரடி'யா இருப்பேனா?
அன்புள்ள ஷ்ரேயா,
நீங்க நம்ம பக்கத்து வீடுதானே! இதோ இருக்கு நியூஸி. கட்டாயம் வாங்க! புது வீட்டுக் கதைகள் இப்பவே
நிறைய சேர்ந்துடுச்சு( மனசுலே!)
அன்புள்ள கிறிஸ்,
வாழைப்பழ பஜ்ஜிக்கே ஒரு கதை இருக்கு. நல்ல வேளை ஞாபகப் படுத்தினீங்க!
படகு சவாரி யெல்லாம் 'கனவு சீன்'தான்! அதுக்கெல்லாம் அப்ப ஐவேஜ் நஹி!
என்றும் அன்புடன்,]
துளசி.
Post a Comment