காலம் யாருக்காகவாவது நிக்குதா? அதோட ஓட்டத்துலே அடிச்சுகிட்டு நாங்க மெட்ராஸ்க்கு, (அப்ப இந்தப் பேருதான் ) வந்து சேர்ந்தோம்!
கெங்குரெட்டி ரோடுலே ஒரு மலையாள டெய்லர். ப்ளவுஸ் தைக்கறதுக்கு அளவு ரவிக்கையோட போய் நிப்போம்! யாராருன்னு கேக்க
மாட்டீங்களா? எல்லாம் எங்க ஹாஸ்டல் தோழிங்களோடதான்!
அப்பெல்லாம், துணிக்கடைக்குப் போறதுன்னா ஒரு 'பட்டாளமா'த்தான் போவோம்! யாருக்குத் துணையாப் போறமோ, அவுங்க எதும்
எடுக்கலைன்னாலும், துணைக்குப் போறவுங்க ஏதாவது அள்ளிக்கிட்டு வராம இருந்ததா 'சரித்திரம்' இல்லை!
" என்ன, நாளைக்கே வேணும்ன்னு சொல்வீங்களே!" (நம்மைப் பத்திக் கரெக்டா புரிஞ்சு வச்சிருக்கற டெய்லர்! பாராட்டணும்!!)
" இல்லை, அது வந்து.... இன்னைக்கு சாயந்திரம் ஒரு பார்ட்டிக்குப் போகணும்!"
" இன்னைக்கேவா?"
" பயந்துறாதீங்க! எல்லாம் வேணாம், இந்த ஒரு....கலர் மட்டும் தைச்சுக் கொடுத்துட்டாப் போதும். மத்ததுக்கு அவசரம் இல்லே.
மெதுவா நாளான்னைக்கு கொடுத்தாப் போதும்" ரொம்ப பெருந்தனமையான பதில்!
" ஏங்க, பார்ட்டிக்குப் போறவுங்க ரெண்டு நாளைக்கு முன்னாலேயே தைக்கக் கொடுத்து இருக்கலாம்தானே?"
" அது வந்துங்க, இப்பத்தான் புடவைக்கு மேட்ச்சிங்கா ப்ளவுஸ் துணி கிடைச்சது!"
" சரி. முடிஞ்சா தைச்சு வைக்கறேன்" ( இந்த பிகுதானே வேணாங்கறது!)
" நீங்க நல்லாத் தைக்கறதாலேதானே உங்க கடையைத் தேடி வர்றோம். ஜஸ்ட் ஒரு ப்ளவுஸ்தானே! சாயந்திரம் ஒரு அஞ்சு மணிக்கு
வந்து வாங்கிக்கறோம்"
அது என்னவோ தெரியலை, புதுப் புடவை வாங்கினவுடனே கட்டிடணும்! எல்லாம் ரிஷிப் பிண்டங்க! ராத் தங்க மாட்டோம்!
கடையிலே இருந்து திரும்புனவுடனே கட்டிப் பாத்துரணும். கட்டிக்கிட்டு, ஹாஸ்டல் மாடிப்படி கிட்டே இருக்கற ஒரு பெரிய ஆளுயரக்
கண்ணாடிக்கு முன்னே ஒரு பத்து நிமிஷம் நின்னு ஆராயணும்! அப்புறம்தான் டெய்லர் கடைக்கு ஓடறது எல்லாம்!
இந்த இடத்துலே ஒண்ணு சொல்லணும்! எங்க விடுதியிலே 'குல்சார்'ன்னு ஒரு பொண்ணு இருந்தாங்க. தினமும் காலையிலே, கையிலே
ஒரு ப்ளவுஸை எடுத்துக்கிட்டு, ரூம் ரூமா வருவாங்க. எதுக்கு? அந்த ரவிக்கைக்கு மேட்சா புடவை யாருகிட்டயாவது இருக்கான்னு
கேக்கறதுக்கு!
சரி, தொலையட்டும்ன்னு யாராவது கொடுத்தாங்கன்னா, உடனே அதுக்கு 'அக்ஸெஸரீஸ்' வேட்டை ( தேட்டை)யை ஆரம்பிச்சுடுவாங்க!
வளையல், ஸ்டிக்கர் பொட்டு ( அவுங்க பொட்டெல்லாம் கூட வச்சிக்குவாங்க) நகப்பாலீஷ்ன்னு மனம் சோர்ந்திராம தேடிக் கண்டுபிடிச்சுருவாங்க!
அவுங்க ஒரு அதிர்ஷ்டக்காரிதான்! எப்படியாவது கிடைச்சிரும்! இந்த 'ஓஸி' பிஸினெஸ் எங்களுக்கெல்லாம் எரிச்சலா இருந்தாலும், அவுங்க
கெஞ்சிக் கெஞ்சிக் கேக்கறப்ப திட்டிக்கிட்டே கொடுப்போம்.
இவுங்க கதை இப்படின்னா, ஒரு டீச்சர் எங்க பக்கத்து ரூமிலே இருந்தாங்க. அவுங்க வேற வகை! தினமும் ராத்திரி, ஒரு ஒம்பதரை மணிக்கு
வருவாங்க, 'யாராவது ப்ரெட் வச்சிருக்கீங்களா?'ன்னுட்டு! ஹாஸ்டல் சாப்பாடு நல்லா இருக்காதுன்றதாலே எதிர்பாராம வரும் 'பசிப்பிணி'யைப்
போக்கிக்க அவசரத்தேவையா ப்ரெட் வாங்கி வச்சிக்கிற பழக்கம் ஒரு சம்பிரதாயமா இருந்துச்சு!
பசின்னு கேக்கறப்ப, வச்சிக்கிட்டே இல்லைன்னு சொல்ல முடியமாட்டேங்குதே! சரின்னு கொடுப்போம். அதுக்கப்புறம் வர்ற கேள்விதான்
இன்னும் எரிச்சலை கிளப்பி விட்டுரும்! 'எந்தக் கடையிலே வாங்கினது? சி.வி.கே பேக்கரி ப்ரெட் தானே?'
த்தோடா.... வாங்கறது ஓசி. இதுலே இந்தக் கேள்வி வேற! இவுங்க அங்கேதான் பஸ்ஸை விட்டு இறங்குவாங்க! அப்பவே வாங்க்கிட்டு
வரலாமில்லே!
நாளைக்கு திருப்பிக் கொடுத்துடறேன்(!)ன்னுட்டு ரெண்டு ஸ்லைஸ் வாங்கிகிட்டுப் போவாங்க! அந்த 'நாளை' மட்டும் எப்பவும் வந்ததே இல்லை!
இது வாரத்துலே மூணு நாலு நாள் நடக்குற விஷயம்! மத்த நாளுங்களிலே அவுங்களே ப்ரெட் வாங்கிக்கிட்டு வந்துருவாங்க போல!
இல்லேன்னா, அந்த நாட்களிலே ஹாஸ்டலோட வேற 'விங்'க்கு போயிருவாங்க போல!
தினமும் பொழுது விடிஞ்சவுடனே ஆரம்பிச்சுரும், பேஸ்ட், சோப், தலைக்கு எண்ணெய்ன்னு! ஒருத்தர் மாத்தி ஒருத்தர் வந்துகிட்டே இருப்பாங்க!
இதெல்லாம் வாங்க எப்படி மறக்கும்ன்னு எனக்கு புரியறதில்லை! சரி, சொல்லிக்கிட்டு இருக்கற ட்ராக் மாறி எங்கியோ போயிட்டேன்!
சாயந்திரம் சரியான டைமுக்குப் போய் நின்னுருவோம். இன்னும் தைச்சு முடிச்சிருக்க மாட்டாரு. கொஞ்ச நேரம் இருங்க. ஹூக் தைக்கணும்ன்னு
சொல்லி, 'காஜா' ( இப்ப சக்திக்கு இதன் அர்த்தம் புரிஞ்சிருக்கும்!)எடுக்கற பையனை( குழந்தைத் தொழிலாளி!) விரட்டுவார்!
அடிச்சுப் புடிச்சு வாங்கிக்கிட்டு வருவோம். வந்தவுடனே அதைப் போட்டுப் பாக்கணுமா, இல்லையா? அப்படியே அதுக்குண்டான புடவையையும்
கட்டிக்கணும் இல்லையா? இவ்வளவும் செஞ்சுக்கிட்டு சும்மா ரூம்லேயே அடைஞ்சிருக்க முடியுமா?
பார்ட்டிக்குப் போகலையான்னு கேக்கறீங்களா? பார்ட்டியாவது மண்ணாவது? யார் நமக்கு பார்ட்டி வச்சு அழைக்கறது?
அப்ப பார்ட்டின்னு சொன்னது?
அதெல்லாம் ச்சும்மானாச்சுக்கும்....எல்லாம் ஒரு காரணம் சொல்லணுமில்லே! ஆனாப் பாருங்க, இதை 'பொய்' சொன்ன கணக்கா
எடுத்துக்கறதில்லை! எல்லாம் வயசு... அந்த வயசுலே இதெல்லாம் ஒரு பொய்யா?
எல்லோருமாக் கிளம்பி, மவுண்ட் ரோடு வரைக்கும் வந்துட்டு, காஸினோ தியேட்டருக்கு முன்னாலெ ஒரு கடையிலே 'லஸ்ஸி' குடிச்சிட்டு
அப்படியே பொடி நடையா புதுப்பேட்டை வழியா விடுதிக்கு வந்து சேருவோம்!
இன்னும் வரும்!
Sunday, February 06, 2005
ரெடிமேட்!!! (பகுதி 2)
Posted by துளசி கோபால் at 2/06/2005 03:41:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
கலக்கலாப் போகுது துளசிக்கா. அசத்துங்க.
ஒரு சந்தேகம்
//அது என்னவோ தெரியலை, புதுப் புடவை வாங்கினவுடனே கட்டிடணும்! எல்லாம் ரிஷிப் பிண்டங்க! ராத் தங்க மாட்டோம்!//
'ரிஷிபிண்டம்'னா என்ன?
ராத் தங்கமாட்டாமன்னு ஏன் சொன்னீங்க? நேரம் கிடைக்கிறப்ப சொல்லுங்க. வரட்டா?
-மதி
Post a Comment