இங்கே வழக்கமா நாம சந்திக்கிற ஆளுங்க கேக்கற கேள்வி இது! இந்த 'வீக் எண்ட்' என்ன செய்யப்போறீங்க?
நமக்கோ ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு! எதைச் சொல்ல? எதை விட? அதனாலே மையமா ஒரு சிரிப்பு எடுத்துவிட்டுட்டு
இன்னும் முடிவு செய்யலைன்னு சொல்வோம்!
அவுங்க கேட்டதுக்குப் பதில் மரியாதை நாம செய்ய வேணாமா? அவுங்க கேட்ட கேள்வியையே நாமும் திருப்பிக் கேப்போம்!
இப்படி பதில் வரும்,'தோட்ட வேலை செய்யணும்! ரொம்ப வீடு(!) வளர்ந்து போச்சு! இது இங்கிலீஷ் வீடுங்க!' weed.
அப்பத்தான் நம்ம வீட்டுத் தோட்டம் இருக்கற நிலமை மனக்கண்ணுலே அப்படியே 'ஸ்லோ மோஷன்'லே ஓடும்! நம்ம வீட்டுலே
வீடான வீடுங்க! இன்னும் சொல்லப்போனா 'வீட்ஸ் கார்டன்'ன்னும் வச்சுக்கலாம்!
இந்த ஊருக்கு வந்த புதுசுலே வீட்டுத்தோட்டத்தைப் பராமரிக்க(!) என்னென்ன செய்யணும்ன்னுகூடத் தெரியாது! வீட்டை நமக்கு
வித்தவுங்க சொன்னாங்க 'நான் அடுத்த வாரம் ஒருநா வந்து என்ன செய்யணுமுன்னு சொல்லித்தாரேன்'
வீட்டை விக்கறதுக்குப் போட்டிருந்ததாலே உள்ளும் புறமும் படு சுத்தமா இருந்துச்சு! அடுத்த வாரம் வந்தாலும் இப்படி 'நீட்'டாகத் தானே
இருக்கப்போகுது. அதனாலெ ரெண்டு வாரம் கழிச்சு வரீங்களான்னு கேட்டேன். பக்கத்து வீட்டுக்காரங்க அவுங்களுக்கு நெருங்கிய
தோழியாம்.அதனாலெ 'அடிக்கடி வருவேன். அப்ப உங்களையும் வந்து பார்த்துட்டுப் போறேன்'னும் சொன்னாங்க!
சொன்னபடியே வந்துக்கிட்டும் இருந்தாங்க! வர்றப்பல்லாம் 'ஹோம் பேக்டு குக்கீஸ்' கொண்டுவருவாங்க! அவுங்களுக்கு என் மக வயசிலே
( 4 வயசு) ஒரு பையன் இருந்தான். அவன் பிறந்ததிலிருந்து இந்த வீட்டிலேயே வளர்ந்ததால் அவனுக்கு இது ரொம்பவே பழக்கப்பட்ட வீடாச்சே!
அவுங்கம்மா, பக்கத்து வீட்டுக்குள்ளெ வண்டியை நிறுத்துனவுடனே இங்கே ஓடிவந்துருவான்! வந்து? ஒவ்வொரு மரமா ஏறிக்கிட்டு இருப்பான்!
என் பொண்ணும் அவன் செய்யற சேஷ்டைகளையெல்லாம் 'ஆ'ன்னு பாத்துக்கிட்டு இருக்கும்!
ரெண்டு வாரத்துலே பச்சைப் பசேர்ன்னு செடிங்க வந்துருச்சு! சிலதுலே அழகான குட்டிக் குட்டிப் பூக்கள்! அந்தம்மா வந்தாங்க.நான் பதுசா
அவுங்ககூட தோட்டத்துக்குப் போனேன். 'இன்னைக்கு நான் வீடு எடுக்கறதைப் பாருங்க. அது ரொம்ப சுலபம். அடுத்த வாரம் நீங்களே
செஞ்சுருவீங்க'ன்னு சொல்லிட்டு வேலையை ஆரம்பிச்சாங்க!
இந்தப் பர்ப்பிள் கலர் பூ அழகா இருக்குதுன்னு நான் சொல்லிக்கிட்டு இருக்கறப்பவே அந்தச் செடியைக் கொத்தோட பிடுங்கிப் போட்டாங்க!
நான் பதறிக்கிட்டே ஏன்னு கேட்கறேன். அது ரொம்ப மோசமான வீடாம்! கொஞ்சம் விட்டா 'திபுதிபு'ன்னு வளர்ந்துடுமாம்! நான்
'க்யூட், க்யூட்'ன்னு சொல்லிக்கிட்டிருந்த அத்தனையுமே வீடாம்! அதுக்கப்புறம் நான் வாயை திறக்கலை!
அப்புறமா, லைப்ரரிக்குப் போய் செடி கொடி சம்பந்தப்பட்ட புத்தகங்களா வாரிக்கிட்டு வந்தேன்! இங்கே லிமிட் கிடையாது. இலவச சேவைதான்!
இப்ப நானே கொஞ்சம் தேறிட்டேன்.
எங்க வீட்டுலே இவர் 'கார்டனிங்' செய்யறேன்னு போனா, பின்னாலேயே நான் ஓடுவேன். கண்ணுக்குத் தெரிஞ்ச நல்ல செடிகளையே
வீடுன்னு எடுத்துப் போட்டுருவார்.நாந்தான் 'லபோ திபோ'ன்னு அடிச்சுக்குவேன். 'இப்ப என்னன்றே? தெரியாம எடுத்துட்டேன். மறுபடி
அது வந்துரும்! '( எப்படி?)
செடிங்களுக்கு உரம் வாங்குறாரோ இல்லையோ, 'ரவுண்ட் அப்'ன்னு இருக்கற 'வீட் கில்லர்' தவறாம வாங்கிவந்து ஆன்னா ஊன்னா
தெளிச்சிடுவார். அது 'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்...'ன்னு சொல்றதுக்கு நேர் எதிரா, நல்ல செடிகளுக்கும் பொசிஞ்சிடும்!
எங்க ஊர்தான் இந்த நாட்டின் 'தோட்ட நகரம்!' எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேர்ன்னு இருக்கும்( நம்ம வீட்டைத்தவிர)அதான், தமிழ்
சினிமாக்களிலே பார்த்திருப்பீங்களே! இங்கே இந்தத் தோட்ட நகர் பெயரைக் கட்டிக் காப்பாத்த 'சிடி கவுன்சில்' படாத பாடு படும்!
வீடுங்க கட்டறப்ப, இருக்கற நிலத்துலே 40% தான் கட்டணும். மீதி? தோட்டம்தான்! ஒண்ணும் இல்லேன்னா 'புல்'லாவது போடணும்!
தோட்டவேலை செய்ய முடியாம நான் 'ஃபுல்' போட்டாத்தான் உண்டு!
உலகத்துலெ இருக்கற மற்ற நாடுகளில் இருக்கும் தோட்ட நகரங்களுக்கும், எங்க ஊருக்கும் அக்கா தங்கை உறவுப்பாலம் கட்டி வச்சிருக்காங்க!
சியாட்டில், அடிலெய்ட், கிறைஸ்ட்சர்ச்( இங்கிலாந்து)கன்சு( Gansu, China), குராஷிகி,சொங்ப-கு( Songpa-Gu,Korea)இப்படின்னு பல நகரங்களோட நாங்க அக்கா தங்கையாக்
கொஞ்சிக்குலாவிக்கிட்டு இருக்கோம். இப்ப நம்ம பெங்களுர் தோட்டநகரம் எப்படி எப்படியெல்லாம் இருக்குன்னு பார்க்கவும், அதை உறவு
ஆக்கிக்கவும் எங்க ஊர் சிடி கவுன்சிலர்ங்க சிலர் போயிட்டு வந்திருக்காங்க! எங்க ஊரோட சரித்திரம் வெறும் 164 வருசம்தான் என்றபடியால்
பெங்களுர் எங்களுக்கு அக்கா!
இதையெல்லாம் படிச்சிட்டு, நான் தோட்ட வேலைக்கே எதிரின்னு நினைச்சுக்காதீங்க! எனக்கும் தோட்டவேலைகளிலே சில பகுதி பிடிக்கும்.
என்னன்னு கேக்கறீங்களா?
பூக்களை வெட்டிக் கொண்டுவந்து பூச்சாடியிலே அலங்காரமா அடுக்கறது!
ப்ளம் சீஸன் தொடங்குனதுமே போகவர மரத்துலே இருந்து ஃப்ரெஷ்ஷா பறிச்சுத் தின்னுறது!
பேரிக்காய் (pears) சீசன்லே அப்பப்ப நிறையப் பறிச்சு நண்பர்கள் வீட்டுக்குஅனுப்பறது!
'இன்டோர் ப்ளாண்டு'ங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு பாத்துக்கறது!( போனவாரம் 'வாழைக் கன்று' கிடைச்சது! வாங்கிட்டு வந்திருக்கேன்)
பக்கத்து வீட்டு எலுமிச்சைச் செடியிலே இருந்து அப்பப்ப எலுமிச்சம்பழம் கொண்டுவந்து சாதம் கிளறுறது!( அவுங்க எப்பவேணுமின்னாலும்
எடுத்துக்கச் சொல்லியிருக்காங்க!)
நம்ம வீட்டு ஃபென்ஸுக்கு வந்து கிளையை நீட்டிக்கிட்டுக் காய்க்கிற அடுத்த வீட்டு ஆப்பிள், ஆப்ரிகாட் பழங்களை ஒரு கை பாக்குறது!
இப்படி சில! இது போதாதா?
Thursday, February 03, 2005
எங்க ஊருக்கு அக்கா பெங்களூரு !!!!
Posted by துளசி கோபால் at 2/03/2005 11:42:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
///'இன்டோர் ப்ளாண்டு'ங்களை மாய்ஞ்சு மாய்ஞ்சு பாத்துக்கறது!( போனவாரம் 'வாழைக் கன்று' கிடைச்சது! வாங்கிட்டு வந்திருக்கேன்)///
துளசி,
வாழை மரத்தை வீட்டுக்குள்ளயே வளக்க முடியுமா ? பெரிய வீடா வச்சுருக்கீங்க போல தெரியுது.
எனக்கு வீட்டுக்குள்ள செடி வளர்ப்பதில் ஆசை உண்டுதான். ஆனால் இதுவரை அப்படி வளர்த்தில்லை. ஒரு நண்பர் தனது வீட்டை காலி செய்யும்போது அப்புறம் வாங்கிக்கறேன்னு சொல்லி ஒரு செடியை எனது அறையில் வைத்துவிட்டுப்போனார். அதைப் பார்க்க அழகாயிருந்தாலும் ஒரு சில நேரம் யாரையோ புடிச்சு அடைச்சு வச்சுருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் வருது. :)
அன்புள்ள முத்து,
இப்ப அது சின்னக் கன்றுதான்! ஒரு மீட்டர் உயரம்தான் இருக்கு. ஆனா 6 மீட்டர் உயரம்
வருமாம். பூவும், பழமும்கூட வருமாம்! ஆனா சாப்பிடற வகை இல்லையாம்! இப்படியெல்லாம் அந்த
மரத்துக்குக்கூடவெ வந்த குறிப்பு அட்டை சொல்லுது! 'அபிசீனியன் வாழை'யாம்!
மொதல்லே பூ வரட்டும். ஏன்னா இந்த மாசத்தோட சம்மர் முடியுது! அதுக்கப்புறம் குளிர் ஆரம்பிச்சுடுமே!
'கன்சர்வேட்டரி'யிலே வச்சிருக்கேன்! ஒண்ணும் சரியா வரலைன்னா இருக்கவே இருக்கு வாழை இலை
சாப்பாடு!!!!
நீங்க அனுப்பிய தனிமடலிலே ஒரே எண்களாத்தான் தெரியுது! எழுத்தா அனுப்புங்க ப்ளீஸ்!
என்றும் அன்புடன்,
துளசி.
நகைச்சுவை உணர்வு மனசுல இருந்தா... எழுத்துல இயல்பா வரும்னு டயலாக் வருவதற்கு முன் சில:
ஒங்க ஊர் 'ஹோம் பேக்டு குக்கீஸ்' எவ்ளவோ வருஷத்திலிருந்துன்னு இந்த கம்பெனியோ(குக்கீஸோ) இருக்குதுன்னு வேற போட்டிருந்தான். வீட்டில பொண்ணு சாப்பிட மாட்டேங்கறாள், கரப்பான் பூச்சி ஸ்மெல் வருதாம். அம்மணிட்ட வாங்கிக் கட்டினேன்.
அடிச்சுக்குவேன். 'இப்ப என்னன்றே? தெரியாம எடுத்துட்டேன். மறுபடி அது வந்துரும்! '( எப்படி?)எனக்கும் இப்படி ஏதாவது பின்னாடி நின்னு கேள்விகேட்டாலே... எரிச்சல்தான் வரும்:)
'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்...'ன்னு சொல்றதுக்கு நேர் எதிரா, நல்ல செடிகளுக்கும் பொசிஞ்சிடும்!வீட்டுல பத்து புக்குதான் இருக்குதுன்னீங்க இலக்கியவாதி மாதிரி எடுத்து உடுறீங்க...
ஒண்ணும் இல்லேன்னா 'புல்'லாவது போடணும்!
தோட்டவேலை செய்ய முடியாம நான் 'ஃபுல்' போட்டாத்தான் உண்டு!மதி ஆரம்பிச்சாங்க... இப்போ நீங்களா. இதிலாவது
பெண்பால் புலவர்களாய் இருப்போம்னு முடிவா... வாழ்த்துக்கள்.
ப்ளம் சீஸன் தொடங்குனதுமே போகவர மரத்துலே இருந்து ஃப்ரெஷ்ஷா பறிச்சுத் தின்னுறது!
பேரிக்காய் (pears) சீசன்லே அப்பப்ப நிறையப் பறிச்சு நண்பர்கள் வீட்டுக்குஅனுப்பறது!
பக்கத்து வீட்டு எலுமிச்சைச் செடியிலே இருந்து அப்பப்ப எலுமிச்சம்பழம் கொண்டுவந்து சாதம் கிளறுறது!( அவுங்க எப்பவேணுமின்னாலும்
எடுத்துக்கச் சொல்லியிருக்காங்க!)
நம்ம வீட்டு ஃபென்ஸுக்கு வந்து கிளையை நீட்டிக்கிட்டுக் காய்க்கிற அடுத்த வீட்டு ஆப்பிள், ஆப்ரிகாட் பழங்களை ஒரு கை பாக்குறது! நாம வேறென்ன செயவோம்...:)
நீங்களும் என் கட்சி தான் போலிருக்கு! இருக்கிற தொடர்மாடி வீட்டிலயே பால்கனியில் சட்டி/தொட்டியில் வாழை(குட்டியும் போட்டிருக்கு) கறிவேப்பிலையும் வளர்க்கிறேன். கறிவேப்பிலையை மிக கவனமாக கறிக்கு பாவிப்பேன்!!!:0)
ஒரு செடி வளர்ப்பு பற்றின வகுப்புக்குப் போய் அறிவை வளர்க்க முற்சித்தாலும் அது இத்துனூண்டு தான் வளர்வேன் என்று அடம் பிடித்ததால் அதன் போக்கிலேயே வளர விட்டாச்சு. வாழை உள்ள சட்டியில் "வீடு" வள்ர்ந்து போச்சு. வாழக்கு 'வீடு'(அட! சட்டி/தொட்டிங்க!) மாத்த வேணும்.
உங்க தோட்டம் சிறப்பா வர வாழ்த்துக்கள்.!
அதையேன் கேட்கிறீங்க... எங்க வீட்டம்மணி தான் வளர்க்கும் ரோஜாவுக்கு முட்டைத்தோடு, வெங்காயத்தாள்,லிப்டன் டீ (லிப்டந்தான் போடணும் டீ மாத்துனா பட்டு போய்டும்:) எல்லாம் போட்டு கவனிப்பாங்கா. அதுவும் நினைச்சா பூக்கும்.
உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கும் தோட்டக்கலையில் ஆர்வம் வந்துடுச்சு அக்கா !!.. :-)))
சுரேஷ்,
சரி சரி மூட் மாறிப்போறதுக்குள்ளே ஓடிப்போய் நல்ல செடியையெல்லாம் பிச்சுப் போட்டுட்டு 'வீடு கில்லரை'த் தூக்கிட்டு ஓடிவாங்க.
சே, காலங்கார்த்தால என்ன போஸ்ட்? எரிச்சலா இருக்கு. ஆப்பிள் மரமாம், பேரீக்காய் மரமாம் பறித்து சாப்பிடுவாங்களாம். ஹ¥ம்ம்ம்ம்!
இப்படிக்கு,
பாலைவனத்தில் வாடும் நொந்த உள்ளம்.
பி.கு துளசி , அக்டோபர் முடியப்ப்போகுது ஒரு வரட்டு குளிராவது வரும். ஆனால் இன்னும் வெய்யில் காய்கிறது. உண்மையில் நீங்க
மத்தவங்க எழுதியதைப் பார்த்து அழுகை அழுகையாய் வருகிறது. அதனால தான் ஸ்மைலி எங்கும் போடவில்லை.
வாங்க உஷா,
எப்படி இருக்கீங்க? உடம்புக்குத் தேவலையா? நாட்டு நடப்பையெல்லாம் ஒண்ணுவிடாம டி.வி.யிலே பார்த்து முடிச்சாச்சா? சட்டம் ஒழுங்கு இப்பத் தேவலாமா?
இந்தப் பதிவு எட்டுமாசத்துக்கு முன்னே வந்தது. அதனாலே ஸ்மைலி இல்லாட்டாலும் பரவாயில்லே:-))
க்யூட் க்யூட் - எல்லாமே வீட் வீட் தானா - இதுலெ எதுவும் தத்துவம் இருக்கா - இருக்கும்.
//'இப்ப என்னன்றே? தெரியாம எடுத்துட்டேன். மறுபடி
அது வந்துரும்! '( எப்படி?) //
ஆகா - கோபாலுக்கும் கோபம் வருமா - ( நானும் இப்படித்தான் - கடிச்சுக் கொதறிடுவேன் - தொல்லை தாங்க முடியாது)
//'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்...'ன்னு சொல்றதுக்கு நேர் எதிரா, நல்ல செடிகளுக்கும் பொசிஞ்சிடும்! //
என்ன பண்றது ??
//வீடுங்க கட்டறப்ப, இருக்கற நிலத்துலே 40% தான் கட்டணும். மீதி? தோட்டம்தான்! ஒண்ணும் இல்லேன்னா 'புல்'லாவது போடணும்!
தோட்டவேலை செய்ய முடியாம நான் 'ஃபுல்' போட்டாத்தான் உண்டு! //
ஜனத்தொகை கம்மி - இங்கேல்லாம் இருக்கவெ இடமில்லை - தோட்டமாவது மண்ணாவது
ஆமா "ஃபுல்" அப்டின்னா என்னாங்கோ ??
பெங்களூரு அழகே அழகு தான் - அக்கா மாதிரி தங்கச்சி வளர வாழ்த்துகள்
ஓசி ப்ளம் - ஓசி எலுமிச்சம்பழம் - கொடுத்து வைச்சவங்க - அலைவீங்களோ ?
திருட்டு ஆப்பிள் ஆப்ரிகாட்டெ மறந்துட்டேனே
அருமை அருமை
அன்பின் துளசி
அருமையான தோட்டம் வளர்ப்பதினைப் பர்றிய உரை. 2005லேயே தூள் கெளப்பி இருக்கீங்க - நான் 2007லேயே மறு மொழி போட்டிருக்கேன். அடேங்க்ப்பா 7 வர்ஷம் கழிச்சு ஞாபகமா சுட்டிக் காட்டுறீங்க - யானை தான் நீங்க - சும்மா சொல்லக் கூடாது. வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
வாங்க சீனா!
இப்பெல்லாம் யானைக்கும் ஞாபகமறதி வருதாம். இதுக்கு புவி வெப்ப நிலை உயர்வதும், உண்ணும் பொருட்களில் மரபணு மாற்றமும் வந்ததும்தான் காரணமுன்னு உலகவிஞ்ஞானிகள் வந்து சொல்லட்டுமுன்னு இருக்கேன்!
அஞ்சு வருசத்துக்கு முன்னால்ல் நீங்கள் இட்ட பின்னூட்டத்துக்கு இப்பவாவது பதில் சொல்லிடணும்.
இந்த வீட்டில் திராட்சைத்தோட்டம் வேலிக்கப்பால் இருந்து வந்துருக்கு. இனி ஓய்வெடுக்க ஹைதராபாத் போகவேணாம்:-)))))
//இப்ப நம்ம பெங்களுர் தோட்டநகரம் எப்படி எப்படியெல்லாம் இருக்குன்னு பார்க்கவும், அதை உறவு
ஆக்கிக்கவும் எங்க ஊர் சிடி கவுன்சிலர்ங்க சிலர் போயிட்டு வந்திருக்காங்க! //
ஏழு வருஷம் ஆச்சே. இப்போ வந்தாங்கன்னா உறவை வெட்டி விட்டிருவாங்களோன்னு பயம்ம்மா இருக்கு:(! அத்தனை இழந்து நிக்குது பெங்களூரு!
ஒரு காலத்தில் எங்களூரு உங்க ஊருக்கு அக்காவா இருந்திருக்கும். இப்போது பேத்தி என்று கூடச் சொல்ல முடியாத அளவிற்கு தோட்டம் என்பதே இல்லாமல் போய்விட்டது பெங்களூரு. ஒரு காலத்தில் முதியவர்களின் சுவர்க்கமாக இருந்த பெங்களூரு இப்போது இந்தியாவின் silicon valley ஆக மாறியதன் விளைவு இது.
இன்னமும் நீங்கள் அதே வீட்டில் தான் இருக்கிறீர்களா? புதிய புதிய பழங்களைப் பறித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா? கற்பனை செய்து பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.
வாங்க ரஞ்சனி.
வேற வீட்டுக்கு வந்து ஒன்பது வருசமாகுது. பழைய வீட்டில் நான் ரொம்ப மிஸ் செஞ்சது பேரிக்கா மரமும், ப்ளம்ஸ் மரமும் தான். ரெண்டுமே சூப்பர் ஸ்வீட் .
இந்த வீட்டில் இருந்த 11 ஆப்பிள் வகைகளை எடுத்துட்டுத்தான் வீடு கட்டும்படி ஆச்சு. அப்படியும் ஒரு க்ரீன் ஆப்பிள் (க்ரானி ஸ்மித்) தப்பிச்சுருச்சு.
அதுதான் நம்மாத்து மாங்காய்.
நிறைய பதிவுகள் நம்ம தோட்டத்தைப் பற்றி எழுதி இருக்கேன்.
சாம்பிளுக்கு ரெண்டு இங்கே:-)
http://thulasidhalam.blogspot.com/2007/12/just-to-keep-in-touch.html
http://thulasidhalam.blogspot.com/2008/12/blog-post_10.html
Post a Comment