மாலா மராத்தி மாயீத் நாஹி! இப்படிச் சொல்லிக்கிட்டே மஹாராஷ்டிரா மாநிலத்தில் பூனா வந்து சேர்ந்தாச்சு! இப்ப அதுக்குப் பேரு புணே!
பம்பாய் மும்பை ஆனமாதிரி, பூனா இப்ப புணே! வெள்ளைக்காரன் வச்ச பேருங்களை எத்தனை நாள்தான் சொல்லிக்கிட்டு இருக்கறது?
அங்கே வந்தப்ப ஹிந்தி எல்லாம் தெரியாது. நமக்குத் தெரிஞ்ச் ஹிந்தியெல்லாம் அப்ப யஹாங், வஹாங், நஹி, மாலும், அச்சா இவ்வளவேதான்!
அங்க வந்து பட்ட பாட்டையெல்லாம் ஏற்கெனவே மரத்தடியிலே ' என் செல்ல( செல்வ)ங்கள்ன்னு எழுதிக்கிட்டு வர்ற தொடர்லே ஒரு பாட்டம்
புலம்பியாச்சு! அதனாலே அங்க புலம்பாம விட்டதை மட்டும் இங்கே சொல்றேன். சரியா?
நமக்குத் தெரிஞ்ச ஒரு நண்பரோட சொந்தக்காரர் அங்கே நேவியிலே இருக்கார். உதவி வேணும்ன்னா அவுங்களைக் கேளுங்கன்னு நண்பர்
அவுங்க அட்ரஸைக் கொடுத்தார். 'ஆஹா'ன்னு வாங்கி வச்சுக்கிட்டோம்!
வந்து ரெண்டே நாளுலே தெரிஞ்சுபோச்சு, வீடு கிடைக்கறது குதிரை கொம்பைவிடவும் கஷ்டம்ன்னு! நண்பர் கொடுத்த ஃபோன் நம்பரில்
நேவிக்காரவுங்களைக் கூப்பிட்டோம். உடனே வந்து பாக்கச் சொன்னாங்க. பஸ் பிடிச்சு அங்கே இங்கேன்னு தேடி அவுங்க வீட்டுக்குப்
போனோம். வீடா அது? அரண்மனைங்க அது!ஹப்பாடான்னு ஆகிப் போச்சு!
அப்புறம்தான் தெரியுது அவர் கடற்படையிலே நல்ல பெரிய உத்தியோகஸ்தர்ன்னு! வெள்ளைக்காரங்க காலத்துலே கட்டுன கட்டடம். கருங்கல்!
ப்ரமாண்டமான புல்வெளியோடு தோட்டம்! பேசாம கிரிக்கெட் கிரவுண்டா ஆக்கிறலாம்! உள்ளே போனா பெரிய ஹாலும், அதுக்குப் பக்கத்துலே
இன்னோரு பெரிய ஹாலுமா இருக்கு. ரெண்டாவதா இருக்கற ஹால்தான் 'டைனிங் ரூம்!'
ஒரு பழைய படத்துலே ( பெயர் ஞாபகம் இல்லே) நாகேஷ் தன்னுடைய தாத்தா காலத்து வீட்டை வர்ணிச்சது நினைவுக்கு வந்துச்சு!
'டைனிங்டேபிளின் ஒரு பக்கத்துலெ இருந்து, கொஞ்சம் உப்புன்னு சொன்னா, அடுத்த பக்கத்துலே இருந்து சைக்கிளிலே வந்துதான்
தரணும். அவ்வளவு பெரிய மேஜை'ன்னு வசனம் வரும். அந்த அளவுலே இங்கேயும் ஒரு மேஜை!
கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தப்ப, அவுங்க சொன்னாங்க, 'நீங்க பேசாம இங்கே எங்க கூடவே தங்கிடுங்க'
எனக்கு மனசுக்குள்ளே பயமா இருந்துச்சு! ரொம்பப் பெரிய இடம்(!) நாமோ ரொம்ப சாதாரணமான ஆளுங்க. ஆனா வீடு என்னவோ
கிடைக்கற லட்சணம் இல்லே! இவரு என்னைப் பார்த்துக்கிட்டே சரின்னு தலையை ஆட்டிட்டாரு!
மறுநாளே ஓட்டல் அறையைக் காலி செஞ்சுட்டு இங்கே வந்துட்டோம். ரெண்டு சூட்கேஸும், ஒரு மரப்பெட்டியும்! இவ்வளவுதான் நம்ம
சொத்து, சுகம்! எங்களுக்கு ஒரு பெரிய அறை ஒதுக்குனாங்க!அதுலேயே ஒரு அட்டாச்சுடு பாத் ரூம். உள்ளே பாத் டப் கூட இருக்கு!
இதெல்லாம் முந்தி சினிமாலே பார்த்ததோட சரி! இப்பத்தான் மொதல்முறையா நேரிலே !
அந்த அரண்மனையிலே( அப்படித்தான் நினைச்சேன்)14 ரூம்கள்! மூணு கிச்சன், அப்புறம் கேம்ஸ் ரூம், அங்கங்கே ஹால்
(எத்தனைன்னு எண்ணலே) சர்வண்ட் க்வாட்டர்ஸ் மட்டுமே 8!
அதுலே ஒரு மாலி. தோட்டக்காரர்! அவரே புல்வெளி பராமரிப்பு, செடிகொடிகளைவெட்டி ஒழுங்குபண்ணறதுன்னு எல்லாம் கவனிச்சுப்பார்.
ஒரு ஆளு கார் துடைக்கறது, வெளிப்பக்கம் சுத்தம் செய்யறதுன்னு. சில பெண்கள் வீட்டுக்குள்ளே சமையல், துணி துவைக்கறது, பெருக்கறதுன்னு!
அங்கே வீடு கிடைக்காத காரணத்தாலேயே, இலவசமா இந்த சர்வண்ட் க்வாட்டர்ஸ்லே தங்கிக்கிட்டு எல்லா வேலையும் செஞ்சு கொடுத்துருவாங்களாம்!
சம்பளம்ன்னு பெருசா ஒண்ணும் இல்லே. கொஞ்சமா ஏதோ கொடுத்தாப் போதுமாம்! அதுவும் சில ஆளுங்களுக்கு மட்டும்!
எனக்குன்னு ஒரு வேலைக்கு ஆளை நியமிச்சுட்டாங்க! அந்தம்மா பேரு 'ஷாரதா பாய்' அங்கெல்லாம் மராத்திக்காரங்க பேருலே 'பாய்'ன்ற
விகுதி இருக்கும். நம்ம 'ஜக்கு பாய்' மாதிரின்னு வச்சுக்குங்களேன்! அப்புறம் பொதுவாவே வீட்டு வேலைக்கு உதவி செய்யரவங்களை
'பாய் ( Bai)'ன்னே சொல்வாங்க.இன்னும் வேலைக்கு ஆள் வரலைன்றதையே, 'அபிதக் யே பாயி நை ஆயா'ன்னு சொல்வாங்க.
காலையிலே நம்ம 'ஷாரதாபாய்' வந்தாங்க. 'நமஸ்தே மேம்ஸாப்' அப்டின்னதும் நானும் 'நமஸ்தே'ன்னு சொன்னேன்.அதைக் கேட்டதும்
அவுங்களுக்கு ஒரே ஆச்சரியம்! எல்லாப் பெரிய ஆளுங்க வீட்டுலேயும் எஜமானி அம்மாவை, வேலைக்கு உதவறவங்க 'மேம்ஸாப்'ன்னு
சொல்றதுதான் வழக்கம்! அதுவும் இந்த மாதிரி ஆளுங்க வேலைக்கு வந்தவுடன் 'குட் மார்னிங்' சொல்றமாதிரி, சலாம், நமஸ்தே இப்படி
ஒண்ணு சொல்வாங்க. அப்ப அந்த எஜமானிங்க, அதை கம்பீரமா அங்கீகரிக்கிற விதம் ச்சும்மா தலையை ஆட்டறதுதான்!
இந்தப் பழக்கத்தை முறிச்ச மாதிரி, நான் நமஸ்தேன்னு திருப்பிச் சொன்னதும் அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்திருக்கும் போல.
அந்த விவரம் உடனே பின்னாடி 'சர்வண்ட்ஸ் க்வாட்டர்ஸ்லே' பரவிடுச்சு! நமக்கோ அப்ப ஹிந்தி நஹி மாலும். அதனாலெ எப்படி, என்ன
வேலை செய்யணும் ஹிந்தியிலே சொல்றதுக்காக, நேவிக்காரவுங்க கிட்டேயே,எனக்கு வேண்டிய 3 கட்டளைகள் எப்படிச் சொல்லணும்ன்னு
கேட்டுத் தமிழிலெ எழுதி வச்சுக்கிட்டேன்.
பாத்திரம் தேய்க்கணும், ரூமை, பெருக்கி, ஈரத்துணியாலே துடைக்கணும். துணிகளைத் துவைக்கணும். நாங்க ரெண்டு பேர்தானே, வேற
என்ன வேலை பெருசா இருக்கப்போகுது?
'ஷாரதாபாய், பர்த்தன் சாஃப் கரோ!'
'ஷாரதாபாய், அபி ஜாடு லகாவ், போச்சோ !'
'ஷாரதாபாய், கப்டா தோவ்!'
அந்தம்மா வந்தவுடனே, மேஜையின் இழுப்பறையிலே வச்சிருக்கற காகிதத்தைப் பார்த்து, முதல் 'கமாண்ட்' சொல்வேன்! அந்த வேலையை
முடிச்சவுடன் அடுத்தது. எல்லாம் அப்பப்ப பார்த்துப் பார்த்துதான்! மூணும் முடிஞ்சாச்சுன்னா, 'அச்சா, ஜாவ்' னு சொல்லிடுவேன். அன்னைக்குக்
காந்தாயம் முடிஞ்சது! அந்தம்மா வேற ஏதாவது சொன்னாங்கன்னா போச்! ஒண்ணும் புரியாது. அப்ப மதிப்பா சொல்றது,' ஹிந்தி மாலும் நஹி!'
எங்க இவருக்கு ஃபேக்டரி போகறதுக்கு அங்கேயிருந்து ரொம்பவே தூரம். மூணு பஸ் மாறிப் போகணும்! அங்கெயோ குளிரான குளிர் வேற!
அப்பல்லாம் இவர் வெண்குழல் வத்தி( நானும் தமிழ்ப் பேரு சொல்லிட்டேன்! வழலைக் கட்டி மாதிரி!)பிடிப்பாரு! அதாங்க சிகெரெட்!
காலையிலே ஏழரைக்கு வேலையிலே இருக்கணும். போன புதுசில்லையா? அதாலெ சரியான நேரத்துக்குப் போயிரணுமே! காலையிலே
5 மணிக்கு எந்திருச்சு, அஞ்சேமுக்கால் பஸ் பிடிச்சிடுவாரு.அப்படியே இன்னும் ரெண்டு பஸ் மாறி ஏழரைக்கு முன்னாலெ போயிருவாராம்!
சாயந்திரம் அதே போல 3 பஸ்! வீடு வரவே கிட்டத்தட்ட 6 மணி ஆயிரும்.பஸ்ஸுக்காக காத்திருக்கற நேரத்திலே எல்லாம் சிகெரெட் துணை!
எனக்குக் காலையிலே இவர் கிளம்பிப் போயிட்டா, சாயந்திரம் 6 வரை ஃப்ரீ டைம்! ஏராளமான நேரம்! என்னன்னு நேரம் போக்கறது?
நம்ம நேவி கமாண்டரும்( அதாங்க அவர் உத்தியோகம்) காலையிலே ஏழரைக்குக் கிளம்பிப் போயிடுவார்.அவுங்களுக்கு ரெண்டு பசங்க.
பெரிய பையன் (12 வயசாம்) ஊட்டிலே கான்வெண்ட்லே படிக்கறானாம். சின்னது 8 வயசுப்பொண்ணு. இங்கேயே படிக்குது.அதுவும்
சென்ட் ரல் ஸ்கூல் போல ஒண்ணு! அந்தப் பொண்ணைப் பள்ளிகூடத்துக்குக் கொண்டுபோய் கொண்டு வர்றதுக்குத் தனியா ஒரு ஆள்.
அவரே காரை ஓட்டிட்டுப் போய் வருவார். அப்படியே நமக்கு வேணுங்கற காய்கறிகளையும் ஃப்ரெஷா மார்க்கெட்டிலே இருந்து வாங்கி வந்துருவார்!
கமாண்டரோட மனைவிக்கு எங்களை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு! தனியா அத்தாம்பெரிய வீட்டுலே இருந்தவங்களுக்கு நான் துணையா
வந்துட்டேன்னு சொன்னாங்க. நானும் அக்கான்னுதான் அவுங்களைக் கூப்பிட்டேன்.
பாதுகாப்புப் பிரிவுலே இருக்கறவங்களோட வாழ்க்கைமுறையை, அப்போ கிட்ட இருந்து பாக்கற வாய்ப்பு எனக்கு! அதுவும் எல்லாம் ரொம்ப
மேல்தட்டு உத்தியோகஸ்தர்கள்! எல்லாவேலைக்கும் ஆள், அம்புன்னு இருக்கறதாலே 'ஸோ கால்டு சொஸைட்டி லேடீஸ்'க்கு எப்பவும்
காஃபி மார்னிங், சோஷியல் சர்வீஸ், ஃபோன்லே பலமணிநேரம் 'காஸிப்' இப்படி தினம் ஏதாவது ஒண்ணு! என்னையும் அவுங்க ஜோதியிலே
கலந்துக்க வச்சிட்டாங்க. நானும் உள்மனசுலே ஒரு ச்சின்ன பயத்தோடு (எச்சரிக்கை!) இதுலே சேர்ந்துக்கிட்டேன்.
ஆனா சும்மாச் சொல்லக்கூடாது, பலவிதமான மனுஷங்களோட பழகுற வாய்ப்பு மட்டுமில்லாம, பல கைவேலைகளையும் கத்துக்கிடவும்
நல்ல ச்சான்ஸ் கிடைச்சது! எல்லார்கிட்டேயும், அவுங்க 'கஸின்'னு சொல்லிட்டாங்க. பூனாவுலே 'சதர்ன் கமாண்ட்ஸ்' தலைமை அலுவலகம்
வேற இருக்கே. முப்படைக்கும் அங்கே ப்ரதானப்பட்ட ஆஃபீஸ்கள் இருக்கறதாலே, அப்பப்ப இந்த மேல்தட்டு லேடீஸ் சேர்ந்துக்கிட்டு,
'ஃபண்ட் ரைஸிங் ஈவண்ட்ஸ்' ஏதாவது செஞ்சுக்கிட்டே இருப்பாங்க! 'ஸாப்'புங்கெல்லாம் ஆஃபீஸ்லே, 'மேம்ஸாப்'புங்கெல்லாம் இப்படி
சேவை செய்யறதுலேன்னு நேரம் போகுது!
அலங்கார மெழுகுவர்த்தி செய்யறது, பத்திக் டிஸைன் வரையறது, பூக்கள் அலங்காரம், வாழ்த்து அட்டைகள் பெயிண்ட் செய்யறதுன்னு சவுத் இண்டியன்
ஸ்நாக்ஸ் செஞ்சு காட்டறதுன்னு ஏகப்பட்ட விஷயம்! நான் சுமாரா ஓவியம் வரைவேன். அதை நல்லா டெவலப் செஞ்சுக்கவும் முடிஞ்சது!
அந்த ஊருலே 'ஹேண்ட்மேட் ஆர்ட் பேப்பர்' தயாரிச்சு விக்கறாங்க. அதை வாங்கி அருமையான பூக்கள், ஸீனரின்னு வரைஞ்சு நிறைய
கிரீட்டிங் கார்ட்ஸ் செஞ்சு விற்பனைக்கு விட்டோம். இதுலே இன்னோரு விஷயம் என்னன்னா எல்லோரும் இங்கிலீஷ்லேதான் பேசிக்குவாங்க.
நமக்கு ஹிந்தி தெரியாட்டியும் பரவாயில்லேன்னு இருந்துச்சு! அப்பப்ப சில ஹிந்தி வார்த்தைகள் கலந்த இங்கிலீஷ்!
சரி, விஷயத்துக்கு வரேன். நம்ம ஷாரதா பாய் மாதிரி வீட்டு வேலை செய்யற மராத்திக்காரங்க ஒருவிதமான கைத்தறித் துணியிலே
ப்ளவுஸ் போடுவாங்க. நல்ல பச்சை, நீலம், மெரூன் போல அழுத்தமான கலருலே 'காண்ட்ராஸ்ட் கலரு'லே பெரிய பார்டரோட இருக்கும்!
நம்ம ஊர் பட்டுப் புடவை காம்பினேஷன் போல! கைக்கும், முதுகுக்கும் அந்த பார்டர் வரும்! பார்க்க அட்டகாசமா இருக்கும். ஆனா
நவநாகரீக மங்கையர் அதை வாங்கிக்க மாட்டாங்க! அவுங்கெல்லாம் டூ பை டூதான்! இது கிராமத்து ஆளுங்க டிஸைனாம்!
எனக்கோ அதைப் பார்த்தது முதல் அதும்மேலேயே ஒரு கண்ணு! போதாக்குறைக்கு, இடது மூக்குலே ஒரு வளையம் ( மூக்குத்திக்குப்
பதிலா)போட்டுக்கறாங்க, மார்கெட்லே நான் பார்த்த சின்னவயசு பொண்ணுங்க! அதுவுமே கிராமத்து ஆளுங்க ஸ்டைலாம்!
எங்க இவர் சொல்லிட்டார், இந்த வளையம், கிளையம் எல்லாம் சரிப்படாதுன்னு! (நோ பாடி பியர்ஸிங்!)போனாப் போட்டும். ப்ளவுஸ்
மட்டுமாவது தைச்சுக்கலாமேன்னு தேடிப் பிடிச்சு, பச்சைக்கலருலே. அரக்கு பார்டர் போட்டு துணி வாங்கி, தைக்கக் கொடுத்தேன்.
இந்தத்துணிங்க, பட்டும் நூலும் கலந்து நெய்யறதாலே ஒரு பளபளப்பாவேற இருக்கும்! தைச்சுவந்த ப்ளவுஸைப் போட்டுக்கிட்டு ஒரு மிதப்போட
இங்கே அங்கென்னு சுத்திக்கிட்டு இருந்தேன். சொஸைட்டி லேடீஸ்ங்ககூட அதைப் பாராட்டினாங்க!
மறுநாள் துவைச்ச துணிக் கும்பலிலே அந்த ப்ளவுஸைத் தேடி எடுத்தேன், அயர்ன் பண்ணி வச்சுட்டா, அடுத்தநாள் போட்டுக்கலாமேன்னு.
கையிலே எடுத்துப் பார்த்தவுடனே 'திக்'ன்னு ஆயிருச்சு! கலர் ஒண்ணும் போகலே, நல்லாவே இருக்கு. ஆனா, அது என்னுடைய
அளவிலே இல்லாம ஒரு அஞ்சு வயசுப் புள்ளைக்குத் தைச்ச மாதிரி இருக்கு!
அப்பத்தான், ஷாரதாபாய் சொல்றாங்க,'துணியை நனைச்சுட்டுல்லே தைக்கணும். ரொம்பச் சுருங்கிடுற ரகமாச்சே. டெய்லர்கிட்டே
சொல்லலையா?'
நாம என்னத்தைக் கண்டோம்? அந்த டெய்லர் இதைப் பார்த்துச் சொல்லியிருக்கவேணாமா?
ஐய்யோ, எவ்வளவு அருமையான ப்ளவுஸ், ஒரு ஹிந்தி படத்துலே ரேகா கூட இதே டிசைன் போட்டிருந்தாங்களே!
இன்னும் வரும்!
Tuesday, February 22, 2005
ரெடிமேட் !!!!! பகுதி 4
Posted by துளசி கோபால் at 2/22/2005 10:01:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment