நம்ம பள்ளிக்கூடத்துப் பசங்களையே ஒன்னு சேர்த்து ஒரு நிகழ்ச்சியைத் தயாரிப்பது கஷ்டம். அதிலும் வெவ்வேற பள்ளிக்கூடத்துலே இருக்கறவங்களோடு சேர்ந்து ஒரு 'மெகா' நிகழ்ச்சியைத் தயாரித்து நேத்து ( இந்த மாசம் 21 நவம்பர் 2009) நம்ம கண்முன் காமிச்சவரைக் கேட்டால்..... 'கலைமாமணி'களுக்குள்ளே ஒத்துமை இருக்குன்னு உலகுக்குக் காமிக்கத்தான் இப்படி ஒரு ஏற்பாடுன்னு சொல்றார்.
முத்து விழாவாம். முத்துன்னா எத்தனாவது வருசமுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டு நம்ம அடுத்த இருக்கைகளில் இருந்த பெண்'மணி'கள் இருவரிடம் விசாரித்தேன். 25ன்னா தங்கம்....... (இல்லே 22 ன்னாத்தான் தங்கமுன்னு சொல்லணும். வாய்வரை வந்ததை அடக்கிக்கிட்டேன்)ம்ம்.... இல்லீங்களே அது வெள்ளி. ஓ..... தெரியலை.....(சுத்தம்) வீட்டுக்குப்போய் கூகுளிச்சால் ஆச்சு. (ஆஹா.... முத்துன்னா முப்பதாம்)
நடன ஒத்திகையின் போது சிவாஜி ராவ் அவர்கள் எடுத்த இந்தப் படம் நாளிதழில் வந்துச்சு. அவருக்கு என் நன்றி. (காப்பிரைட் இருக்குன்னா படத்தைத் தூக்கிடலாம், பிரச்சனை இல்லை.)
கிட்டத்தட்ட மூணுமாசம் ரிஹர்ஸல். அதுக்குமுன்னே பல வருசங்களா மனசுலே ஊறவச்ச திட்டம். கண்முன்னே அந்த 'உழைப்பை' பார்த்ததும் பிரமிப்பு! வெள்ளோட்டம் போல வச்சுக்கணுமுன்னோ என்னவோ டிக்கெட் விவரம் குறிச்சு விலாவரியாச் சொல்லாம ஒரு தொலைபேசி எண் கொடுத்து தினசரியில் வந்துருந்தது. நாரதகான சபாவில்தானாம். வேறொரு நிகழ்ச்சிக்கு ( தனஞ்ஜெயன் நடனம்) போனபோது அட்வான்ஸ் புக்கிங் பண்ணிக்கலாமான்னா..... நிகழ்ச்சி நடக்கும் நாளில்தான் அங்கே டிக்கெட் விற்பனையாம். இதுக்கும் நாரதகான சபா ட்ரஸ்ட்டுக்கும் சம்பந்தமொன்னும் இல்லை(யாம்) சரி..... வரப்போகும் இசைவிழாவுக்கான நிகழ்ச்சிப் பட்டியல் ஒன்னு கொடுங்கன்னு கேட்டு வாங்கினோம். அதுக்குமே சீஸன் டிக்கெட்டுகளும், உறுப்பினர்களுக்கான டிக்கெட்டுகளும் வித்தே போயிருச்சாம். அன்னாடம் நிகழ்ச்சிக்கு 24 மணி நேரம் முந்தி கிடைக்கலாமாம்.
மதுரை முரளிதரன் சிலம்பைக் கையில் எடுத்துட்டார். போனமுறை 'ராமாயணம்' பார்த்தது முதல் இவரோட நிகழ்ச்சி எதையும் கூடியவரையில் விடக்கூடாதுன்னு முடிவு செஞ்சுருந்தேன். ஆறரைக்கு நிகழ்ச்சி. எங்கே டிக்கெட் இல்லாமப்போயிருமோன்னு கொஞ்சம்(?) சீக்கிரமாவே போனதுக்கு இன்னொரு பலனும் கிடைச்சதுன்னு வையுங்க. அதைப் பற்றி அப்புறம் ஒரு நாள், 'கையில் கிடைக்கட்டும்':-)
நாம் கொடுத்த காசுக்கு லபிச்சது ஏழாவது வரிசை. நம்ம எஸ். ஜானகி அம்மா வந்து முன்வரிசையில் உக்கார்ந்தாங்க. ஆறேகாலுக்கு டிவிடி ஒன்னு போட்டு வச்சாங்க. இவர் எப்படி நடனமாட வந்தார்....... கொசுவத்தி.......
தங்கை மணிமேகலையை நடனம் கத்துக்க விட்டுட்டு, வகுப்பு முடிஞ்சதும் அவுங்களைக் கூட்டிக்கிட்டு வரப்போனா.............. டான்ஸ் டீச்சர் ,'ஏம்ப்பா.... நீயும் தங்கச்சியும் ஒரே மாதிரி இருக்கீங்களே. கூடவே சேர்ந்து ஆடலாமேன்னு எப்படியோ இழுத்து விட்டுட்டாங்க. நடுத்தரக்குடும்பம். 3500 ரூபாய்க்கு பரதநாட்டிய உடைகள் என்பதெல்லாம் பிரமிப்பா இருந்த காலம். எப்படியோ சமாளிச்சு இவ்வளவு தூரம் வந்தாச்சு. 120 வர்ணங்களை 35 வகை தாளங்களில் இயற்றி இருக்கார். பொதுவா வர்ணங்களில் தலைவி மட்டுமே தலைவனுக்காக உருகி உருகி பாடும் வகைகளே (எப்போ வருவாரோ............)எக்கச்சக்கமா இருக்கு. ஆண்கள் நாட்டியமாடும்போது அதுக்கேத்த பாடல்கள் அநேகமா ஒன்னும் இல்லையேன்னுதான் இவரே வர்ணங்களை இயற்ற ஆரம்பிச்சுருக்கார்.( இன்னொரு பிரமிப்பு)
இவருடைய நடன குரு அந்தக் காலக் கலைமாமணி சாமுண்டீஸ்வரி அவர்கள். திரு. தண்டாயுதபாணிப் பிள்ளையின் மூத்த சிஷ்யை. வாய்ப்பாட்டு மதுரை சேதுராமன் அவர்களிடம். ஆடலும் பாடலும் சேர்ந்தே வந்துருக்கு!
ந்ருத்யஷேத்ரா என்ற நடனப் பள்ளியை இவரும் இவர் மனைவி நடனக்கலைஞர் சித்ரா முரளிதரன் அவர்களும் நடத்திக்கிட்டு இருக்காங்க. பள்ளிக்கூடம் இவர்கிட்டே தானா வந்தது. இவரது குருவான சாமுண்டீஸ்வரி அவர்களின் தாய் ஸ்ரீமதி சமந்தகமணி பழனியாண்டி அவர்கள் ஆரம்பிச்சது. அவர்களுக்குப் பின் சாமுண்டீஸ்வரி அவர்களின் நிர்வாகத்தில் இருந்துவந்தது. இவுங்களுக்கு வெளிநாட்டில் போய் (பிள்ளைகளுடன்???) வசிக்க வாய்ப்பு வந்ததும் பழம்நழுவிப் பாலில் விழுந்தது போல் திரு. முரளிதரனிடம் வந்துருக்கு. சரியா இது நடந்து இப்போ வருசம் முப்பது! 'முத்து விழா' ஏன்? னு இப்போ நல்லாவே புரிஞ்சுருச்சு:-))) இன்றையக் கணக்குலே 200க்கும் அதிகமான எண்ணிக்கையில் மாணவமணிகளின் இருக்கு. ஹைய்யோடா....! (இன்னொரு பிரமிப்பு)
சிறுதுளி (Little Drops) என்ற ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு இன்றைய வரும்படி முழுசும் போகுது என்பது ஒரு உபரித் தகவல். பேஷ் பேஷ்!! ( இன்னொரு பிரமிப்பு. நல்லா இருங்க திரு & திருமதி முரளிதரன் அவர்களே)
பாரம்பரியமிக்கக் கலைக்குடும்பத்துலே இருந்து, சித்ரா இவருடன் சேர்ந்து நடனமாடவந்தவங்க. முரளிதரன் குடும்பத்துக்கு இவரை ரொம்பவேப் பிடிச்சுப் போச்சுன்னு குடும்பத்துலே பிடிச்சுப் போட்டுட்டாங்க:-)))) இவுங்க மகள் காவ்யலக்ஷ்மி , இந்தச் சின்ன வயசுலேயே என்ன(ம்)மா ஆடுறாங்கன்னு உங்களுக்கு ஏற்கெனவே சொல்லி இருக்கேன்.
எங்க நாடு உள்பட எக்கச்சக்கமான வெளிநாடுகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்திட்டாங்க. டான்ஸ் ட்ராமா இவுங்க ஸ்பெஷாலிட்டி.
கண்ணகியா வந்த திருமதி பார்வதி ரவி கண்டசாலாவின் ஐடியாதானாம்...இப்படி வெவ்வேற நடனப்பள்ளிகளில் பயின்றவர்களை வச்சு நிகழ்ச்சி நடத்தலாம் என்பது. (சூப்பர் ஐடியா!)
பிரபல நடனமணிகளிடம் சேதி சொன்னபோது, வரவேற்பு பலமா இருந்துருக்கு. திருமதிகள் ரேவதி ராமச்சந்திரன், ஜெயந்தி சுப்ரமண்யம், அனிதா குஹா, உமா முரளிகிருஷ்ணா, கவிதா ராமு, பத்மலக்ஷ்மி சுரேஷ் இப்படிப் பல பெரிய நடனமணிகள் அவுங்கவுங்க பள்ளிகளில் பயிலும் ஒன்னாந்தரம் ஆடக்கூடிய நடனமணிகளைச் சிபாரிசு செஞ்சதோடு சிலர் தானே முன்வந்தும் இந்த நாட்டியநாடகத்தில் பங்கேத்துக்கிட்டாங்க.
முதல் ஸீன் வழக்கம்போல் பிரமிப்பு. ஞாயிறு போற்றுதும் திங்க:ள் போற்றுதும்..... 13 நடனமணிகள். திறந்தவாயை மூடலை நான்.
மாசறு பொன்னே வலம்புரி முத்தே.... என்றுக் கொஞ்சிக் குலவி கோவலனும் கண்ணகியும் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். (நாட்டிய நாடகமுன்னா எல்லோரும் ஆடிக்கிட்டேதான் இருப்பாங்க. ) அடுத்ததாக கோவலன், மனைவியை 'ஷாப்பிங்' கூட்டிக்கிட்டுப் போறார். கடைத்தெரு! பூக்கடை, அணிமணிகள் கடைகள் இருக்கு. சாமி ஊர்வலம் வருது.
சோழன் அரசவையில் மாதவியின் நடனம்
நாட்டியத்தில் சிறந்தவர்களுக்காக ஒரு போட்டி அறிவிப்பு ஒன்னு அரச சேவகர்களால் விளம்பரப்படுத்தப்படுது. மாதவி வந்து நாட்டியம் ஆடுறாங்க. கோவலன் அரசரைப் பார்க்க வருகிறான். ராஜாவுடன் நல்ல நட்பு போல. தோள் அணைத்து வரவேற்ற அரசருடன்( இது என்னப்பா? கைஸே பாய் ஸாஹப்ன்னு கேக்குறாப்போல! அரசன் என்னதான் நண்பனா இருந்தாலும் ஓரடி விலகி இருக்க வேணாமோ? ) இருந்து நாட்டியம் பார்க்கிறார். (தற்காலத்து சபாவிலே நடப்பதுபோல! அக்கம்பக்கத்து மக்கள் கொஞ்சநேரம் சும்மா இருந்துட்டாலும்...) அரசருடன் உரையாடிக்கொண்டே நடனத்தைப் பார்க்கிறான். மாதவிக்கு அன்பளிப்பாக ரத்தினமாலை ஒன்றையும், சிறந்த நடனமணி என்று அறிவித்து 'தலைக்கோல்' என்ற பட்டத்தையும் அரசர் அளிக்கிறார். இதெல்லாம் ஒரு கதை சொல்லியின் மூலம் அறிவிக்கப்படுகிறது.
ராஜா கொடுத்த ரத்தினஹாரத்தை வீட்டுலே வச்சுக்கப்படாதோ? அதை நல்ல விலைக்கு விற்கும்படி தோழியிடம் கொடுத்தனுப்ப அதோட விலையைக் கேட்டு ஆட்கள் மயங்கியே விழுந்துடறாங்க. கோவலன் வருகிறான். இடுப்பில் இருக்கும் பொன்முடிப்பை எடுத்துக்கொடுத்து மாலையை வாங்குகிறான். தோழி நல்ல விவரமுள்ள காரிகை. காசு சரியா இருக்கான்னு எண்ணி வாங்குகிறாள்:-) மாலை கை மாறுகிறது.
வீட்டுக்குக் கொண்டுவந்து மாலையை மனைவிக்கு அணிவித்து அழகு பார்க்கிறான்னு இத்தோட ஸ்டாப் ஆகி இருக்க வேண்டிய கதை.!
ஆனால் எல்லாம் விதியின் கையில்...... ஊழ்வினை(-:
மாதவி வீட்டுக்குப் போகிறான். மையல் கொண்டான். அவளுடனே 'குடும்பம் நடத்திக் குழந்தையும் பெற்றுக்கொள்கிறான். இதுலேகூட ஒரு நியாயம் இருக்கு பாருங்க. அங்கேயும் இங்கேயுமா 'ஆத்துலே ஒரு கால் சேத்துலே ஒரு காலுன்னு' ரெட்டை வாழ்க்கை வாழாம போன இடத்துலேயே தங்கிடறான். குழந்தைக்கு மணிமேகலை என்று பெயரிட்டுக் கொஞ்சி மகிழ்ந்து இருக்காங்க.
இந்திர விழா வருது. ஆட்டமான ஆட்டம். கோவலன், தனக்கு இன்னொரு பெண்மேல் மையல் வந்ததாக ஒரு பாடல் பாட, மாதவியும் இன்னொரு ஆடவன் தன்னை விரும்புவதாகப் பாடுகிறாள். அது நாந்தானா? ன்னு இவன் கேட்க, இவளும் விளையாட்டாக இல்லை என்று தலை ஆட்ட.......விளையாட்டு வினையாகிறது.. ஆஹா.... என்ன இருந்தாலும் 'பரத்தை' இப்படித்தான் இருப்பாள் என்று அவளைவிட்டுப் பிரிந்து 'பத்தினி' வீட்டுக்குத் திரும்ப வர்றான்.
(இங்கே கூட எதாவது நம் சொந்தக் கருத்துச் சொல்லணுமுன்னு கை துருதுருங்குது. கண்ணகி இடத்தில் நானிருந்தால் நடப்பதே வேற...அடக்கி வாசிக்கலாம்..... என்ன ஒன்னு...சிலை இருந்துருக்காது)
கண்ணகி துயரத்தால் வாடி இருக்காங்க. தோழி ஆறுதல் சொல்லித் தேற்றுகிறாள். உன் நல்ல மனசுக்கு இன்னும் கெடுதலா ஒன்னும் வராது. கட்டாயம் உன் கணவன் திரும்பி வரத்தான் போகிறான்' இப்படி..................
தோ.....வந்தாச்சு.
எல்லாப் பொருளும்தான் மாதவியோடு போச்சே................. வேறெங்காவது போய்ப் பொழைச்சுக்கலாமுன்னு மதுரைக்குக் கிளம்புறாங்க. வழியில் கவுந்தி அடிகளைச் சந்திக்கிறாங்க. அவுங்க ரெண்டுபேருக்கும் ஆறுதல் சொல்லித் தேற்றி, வழித்துணையாப் போறாங்க. மதுரை நகருக்கு வெளியே இடையர் குடில். மாதரியும் அவள் மகள் ஐயையும் இருக்காங்க. தம்பதிகளை அவர்களிடம் ஒப்படைக்கிறார் கவுந்தி அடிகள்.
மறுநாள் கண்ணகியின் காற்சிலம்பொன்றை எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குள் போகிறான் கோவலன். இது இப்படி இருக்க.....மதுரை ஆளும் பாண்டியனும் கோப்பெருந்தேவியும் ஆடிப்பாடிக் கொண்டு (!!) இருக்கிறார்கள். அரண்மனையில் அரசியின் நகைகளைப் பொற்கொல்லன் ஒருவன் களவாடி விட்டான்.. நகைகள் திருட்டுப்போன விஷயம் மட்டுமே தெரிந்த அரசன் கோபத்தால் குமுறுகின்றான்.
கோவலன் பொற்கொல்லனைச் சந்தித்ததும், தன்னிடம் உள்ள காற்சிலம்பு ஒன்றை விற்றுத்தர வேண்டுகின்றான். , அரசியின் காற்சிலம்பு போன்ற அதே வேலைப்பாட்டுடன் இருந்த பொற்சிலம்பைக் கண்டதும் தன் களவை மறைக்கும் எண்ணத்துடன் அரசனை அணுகி அந்தக் காற்சிலம்பைக் காண்பித்து, அரசியின் நகைகளைத் திருடிய கள்வனைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்ல, உண்மைதானா என்று ஆராய்ந்து பார்க்காத பாண்டியன் கோவலனைச் சிரச்சேதம் செய்துவிடுகின்றான். (அச்சச்சோ....கதை போகும் வேகத்தில் நடையை மாத்திப்புட்டேனே............)
சேதி கேட்ட கண்ணகி அழுது புலம்பிக்கிட்டே....'தன் கணவன் கள்வனா என்று தேம்பி அழறாள். வானத்தில் இருந்து அசரீரி ஒலிக்குது 'இல்லை இல்லை'ன்னு. நீதி கேட்டு பாண்டியன் சபைக்கு வர்றாள். (இப்போதைய நீதி மன்றமா இருந்தா.............. ஒரு நாப்பது ஐம்பது வருசங்களாகும் கேஸ் விசாரணைக்கு வர). அரசியின் சிலம்பு முத்துப் பரல் என்று தெரிகிறது. தன்னுடையது மாணிக்கக் கற்கள் என்று கூறி சிலம்பை ஓங்கித் தரையில் வீசி உடைக்கிறாள்.
தவறுணர்ந்த பாண்டியன், மனம்தாங்காமல் மாரடைப்பில் மரணமடைந்தான். மதுரை நகரம் பற்றி எரிகிறது. தனியே நிற்கும் கண்ணகியைக் கோவலன் தேவருடன் வந்து அழைத்துப்போகிறான்.
மொத்தம் முப்பது பேர். முரளிதரன் அவர்களின் மனைவி சித்ரா, பாண்டியன் வேடத்தில் வந்து ஒரு கலக்குக் கலக்கிட்டார். நிகழ்ச்சிக்கு நடுவில் முன்வரிசையில் லேசான சலசலப்பு. கடைசியில்தான் தெரிஞ்சது மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வந்துருக்கார். இவருடன் மேடை ஏறியவர்கள் அவ்வை நடராஜன், சாரதா நம்பி ஆரூரான், பெயர் தெரியாத இன்னொரு பெண்மணி.
பொற்கொல்லராகவும் யானையாகவும் ஒருத்தரே வந்தார். யானை அசைஞ்சு அசைஞ்சு ஆடி வந்தது சூப்பர். பொற்கொல்லன் பாகத்தில் முக பாவம் அதி சூப்பர்.
அனைவருக்கும் பொன்னாடைகள் மாலை மரியாதைகள் நடந்துச்சு. நம்ம முரளிதரன் வழக்கமாத் தலையை மொட்டையாகவே வச்சிருப்பதைத்தான் பார்த்துருக்கேன். அவர்தான் கோவலனாக வந்தவர். விக் 'Wig' வைச்சவுடன் அவர் வயசுலே 30 'டான்'ன்னு குறைஞ்சு போச்சு. அதுவும் மனிதருக்கு உடம்பு படு ட்ரிம்மாக இருப்பதால் அட்டகாசமா இருக்கார். நாட்டியம் அருமை. அசுர உழைப்பு. ஒவ்வொரு பகுதியிலும் தெரிகிறது. பலவருஷப் பயிற்சியின் விளைவு........
பத்து வருசமாக மனசுலே வச்சு அதுக்கான முயற்சிகளை இடைவிடாமச் செஞ்சு ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான இந்த சிலப்பதிகாரத்தை எந்நாட்டவரும் புரிந்து கொள்ளும் வகையில் நம் கண்முன்னே கொண்டு நிறுத்துன ஸ்ரீ முரளிதரன் அவர்களுக்கு நம் எல்லோர் சார்பிலும் நன்றி என்ற ஹாரத்தைச் சமர்ப்பிக்கின்றேன்.
ஜானகி அம்மாவை மேடைக்கு அழைத்துப் பொன்னாடை மாலை மரியாதைகள் நடந்துச்சு. மருமகளின் நடனத்தை ரொம்பவே ரசிச்சுப் பார்த்தாங்க. மாதவிதான் இவுங்க மருமகள்! உமா முரளிகிருஷ்ணா)
பி.கு: 1: கதையின் போக்குக் கருதியே கோவலனை 'ன்' என்றே குறிப்பிட்டு வந்துள்ளேன். இது கோவலன் என்ற கதா பாத்திரத்துக்கு மட்டுமே. கோவலர், கோவலர் ன்னு சொன்னால் கேட்கவேக் கொஞ்சம் கேவலமா இருக்கேப்பா
2: பதிவின் நீளம் கருதி ( என்ன செய்யறது....நிகழ்ச்சியும் கிட்டத்தட்ட மூணுமணிநேரம் நடந்துச்சே) படங்களை ஆல்பத்தில் போட்டுருக்கேன். பார்த்துக்குங்க.
Monday, November 23, 2009
சிலப்பதி'ஹாரம்'
Posted by துளசி கோபால் at 11/23/2009 04:15:00 PM
Labels: அனுபவம், சிலப்பதிகாரம், நாட்டியநாடகம்
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
//(இங்கே கூட எதாவது நம் சொந்தக் கருத்துச் சொல்லணுமுன்னு கை துருதுருங்குது. கண்ணகி இடத்தில் நானிருந்தால் நடப்பதே வேற...அடக்கி வாசிக்கலாம்..... என்ன ஒன்னு...சிலை இருந்துருக்காது)//
அதானே, டீச்சர் ஒரு குச்சியில வெளாசிருவாங்க. கோவலர்கள் ஜாக்கிரதை. :)
அடா அடா அடா டீச்சர் கலக்கீட்டீங்க போங்க. சிலப்பதிகாரம்னா சொல்லனுமா?
இதுல பாருங்க... கண்ணகி கோவலனோட இருந்ததை சிலப்பதிகாரமோ அதன் பாத்திரங்களோ பாராட்டவே பாராட்டாது. இளங்கோவடிகளும் கூட. அப்புறம் எதக் கற்புன்னு எதைச் சொல்றாங்கன்னு படிச்சாத்தான் உண்மை தெரியும். புருசனுக்கு இணக்கமா இருந்துக்குறது ஒரு பெண்ணுடைய விருப்பம். அந்த மாதிரி பெண்களுக்குப் பரிசு குடுக்கனும்னா சொர்கத்துக்குப் போனாலும் கூடவே இருந்துக்கட்டும்னு சொல்லீரலாம் (கோப்பெருந்தேவி மாதிரி)... ஆனா வாயில்லாப் பூச்சியா இருந்தாலும் அரசனை என்னடான்னு கேட்ட்ட அறச்சீற்றம்தான் கற்புன்ன்னு ஒரு பெண் சொல்லி ஆண் கேட்டுக்கிர்ரதா சிலம்பு சொல்லுது.
ஸ்கூல் ஞாபகத்த கிளறி விட்டுட்டீங்க...! அருமை...!
arumai arumai . meendum varukiREn.
டீச்சர் நடையில் ஒரு நாடகம் பார்த்தாச்சி ;))
வழக்கம்போல ஜீரா பின்னூட்டம் அருமை.ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் நெருடலா இருக்கு.
//ஆனா வாயில்லாப் பூச்சியா இருந்தாலும் அரசனை என்னடான்னு கேட்ட்ட அறச்சீற்றம்தான் கற்புன்ன்னு ஒரு பெண் சொல்லி ஆண் கேட்டுக்கிர்ரதா சிலம்பு சொல்லுது.//
அரசனை கேட்ட கண்ணகிக்கு ஏன் புருஷனைக்கேக்கணும்னு தோணலை?
அடேங்கப்பா. பொறாமையா இருக்கு அம்மா. நடன நிகழ்ச்சிகளா (அதுவும் அருமையானவையா) பார்த்துத் தள்றீங்க! வீடியோ இருக்கா? சென்னை வந்தா உங்ககிட்ட இருந்து சுடணும்! :)
டெஸ்ட்
டெஸ்ட்
ஆன்மீகச் செம்மலுக்கு, ப்ளொக்கர் தடா போடுதுப்பா. மின்மடலில் வந்த பின்னூட்டம் இங்கே காப்பி & பேஸ்ட்.
குழப்பம் தொடர்கிறது.
டெஸ்ட் மட்டும்தான் எடுக்குமாம்(-:
கொஞ்சநேரம் வெயிட் செஞ்சு பார்க்கலாம்
ம்ம்ம் கொடுத்துவைச்சிருக்கீங்க..அதான் நாட்டியமும் நாடகமுமா பார்த்து பார்த்து எழுதறீங்க டீச்சர்.நீயூசியிலிருந்து ஏதோ ஒரு ஸ்பெஷல் வரம் வாங்கிட்டு வந்தீங்களோ????
test again & again
சின்ன அம்மிணிக்கு....
ஆனா வாயில்லாப் பூச்சியா இருந்தாலும் அரசனை என்னடான்னு கேட்ட்ட அறச்சீற்றம்தான் கற்புன்ன்னு ஒரு பெண் சொல்லி ஆண் கேட்டுக்கிர்ரதா சிலம்பு சொல்லுது.//
அரசனை கேட்ட கண்ணகிக்கு ஏன் புருஷனைக்கேக்கணும்னு தோணலை? //
நீங்க கேட்டது நல்ல கேள்வி. விளக்கம் சொல்றேன்.
ஒருவேளை கண்ணகி கோவலனைக் கேட்டிருந்தான்னு வெச்சிக்கோங்க... இந்த நெலமையே வராமக் கூடப் போயிருக்கலாம்.
அப்படிக் கேட்டும் வந்திருச்சுன்னு வெச்சுக்கலாம். அப்ப என்ன ஆகும்... அந்தப் பொண்ணு எப்பவும் நல்லாத் துணிச்சலா கேள்வி கேக்கும். அதான் அங்கயும் போய்க் கேள்வி கேட்டிருக்குன்னு நம்மளும் லேசாச் சொல்லீருவோம்.
பொதுவாச் சிலப்பதிகாரம் படிக்காமலே நம்மள்ளாம் படபடன்னு விமர்சனம் செஞ்சிர்ரோம். காப்பியத்தின் அடிப்படையே கண்ணகியோட evolution தான். பரிணாம வளர்ச்சி. ஒரு பேதை இளம் செல்வக்குடும்பப் பெண் ஒன்னும் தெரியாம இருந்து... கணவனை இழந்து... திரும்பக் கிடைச்சு... இங்கயே இருந்தாத் திரும்ப நினைவு வந்துருமோன்னு ஊரவிட்டுக் கிளம்பி... கொஞ்சம் சுதாரிச்சிச் சிலம்பக் கழட்டிக் கொடுத்து ...பாண்டியன் மேல அறச்சீற்றம் வந்து...தட்டிக் கேட்கும் வீரப் பெண்ணணகி, பின்னர் கடவுளாகின்னு படிப்படியா மேல முன்னேஏறியிருக்காங்க.
அதுவுமில்லாம... கோவலன் செஞ்சது தவறு. அவனைக் கொன்றது கூட ஒருவிதத்துல தண்டனைதான். அதுனால பாண்டியன் செஞ்சது தப்பேயில்ல. எங்க அப்பா மாதிரி இருந்து கோவலன் செஞ்ச தப்பைத் தட்டிக் கேட்டிருக்காரு. அதுனால எனக்குத் தந்தைன்னு எல்லாம் சொல்லீருக்காங்க. தென்னவன் தீதிலன். தேவர்கோன் பெருவிருந்து ஆயினன். நானவன் தன்மகள். அப்படீன்னே எழுதீருக்காரு.
இத அடிப்படையா வெச்சி நான் எழுதுன ஒரு சின்னக் கதை.... http://gragavan.blogspot.com/2005/06/blog-post_27.html
/"சிலப்பதி'ஹாரம்'"//
ஹராம் என்று சொல்லுவாங்க அப்படின்னா அரபில் ஒதுக்கப்பட வேண்டியதாம் !
:)
//சேதி கேட்ட கண்ணகி அழுது புலம்பிக்கிட்டே....'தன் கணவன் கள்வனா என்று தேம்பி அழறாள். வானத்தில் இருந்து அசரீரி ஒலிக்குது 'இல்லை இல்லை'ன்னு. நீதி கேட்டு பாண்டியன் சபைக்கு வர்றாள். //
அந்த அசரீரியைத் தான் தண்டிக்கனும், முன்னமே பாண்டியனுக்கு அசரீரி சொல்லி இருந்தால் கோவலன் கொல்லப்பட்டு இருக்க மாட்டான் :)
வாங்க சின்ன அம்மிணி.
குச்சி விளாசல் எல்லாம் இப்போ காணாமப் போச்சுப்பா.
கோவலர்கள், கேவலர்களாக நடந்துக்கக்கூடாது என்பதுதான் முக்கிய விஷயம் இங்கே!
வாங்க ராகவன்,
ஒருவழியாப் பின்னூட்டப் பிரச்சனை தீர்ந்தது. இப்பப் பந்து அம்மிணியின் கோர்ட்டில் இருக்கு:-)
'அடிச்சு' அனுப்பி இருக்கேன்:-)
வாங்க கலகலப்ரியா.
கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்பேன், அதுவும் 200 சொற்களுக்கு மேற்படாமல்.
இது தேர்வுக்கு வரும் பகுதி. நினைவில் இருக்கட்டும்:-))))
வாங்க வல்லி.
மீண்டு வருக.
வாங்க கோபி.
நாடகம் மட்டும் பார்த்தால் போதுமா? இன்னும் என்னென்னவோ வரும் என்று ஒரு ஆட் போட்டு வைக்கவா?:-))))
சின்ன அம்மிணி,
புருஷனையும் கேட்டாளே. ஆனா இந்தக் கொலவெறியோடு இல்லை:-))
கடிந்து கொண்டாள். அவனும் சோகமா முகத்தை வச்சுக்கிட்டுத் தலைகுனிஞ்சு நின்னான்.
வாங்க கவிநயா.
எல்லாமே நல்லதுன்னு இல்லைப்பா. ஆனா நல்லதை மட்டும் எழுதுவதால் உங்களுக்கு இப்படித் தோணுது:-)))))
நோ வீடியோ. எல்லாமே பதிவு, மனசிலே மட்டும்:-)
வாங்க சிந்து.
வரம் மட்டும் வாங்கிவரமுடிஞ்சால் இன்னும் ஏழெட்டு சேர்த்தே வாங்கி இருக்கலாமேப்பா:-)))))
வாங்க கோவியாரே.
ஹாரம் என்றால் மாலை.
இதை எப்படி ஹராமா ஆக்குனீங்க!
ஓ.....வாங்கித் தரவேணாமுன்னா?
அசரீரி மேல் ஒரு தப்பும் இல்லை. கண்ணகி கேட்டதுபோல் நீதி வழங்குமுன் கோவலன் கள்வனான்னு பாண்டியன் கேக்கலை(-:
அதை நினைச்சே மண்டையைப் போட்டுட்டான் பாண்டியன்!
//இத அடிப்படையா வெச்சி நான் எழுதுன ஒரு சின்னக் கதை.... http://gragavan.blogspot.com/2005/06/blog-post_27.html//
இது மாதிரி எழுதறதை ஏன் நிறுத்தீட்டீங்க ஜீரா?
//துளசி கோபால் said...
வாங்க கலகலப்ரியா.
கட்டுரை எழுதச் சொல்லிக் கேட்பேன், அதுவும் 200 சொற்களுக்கு மேற்படாமல்.
இது தேர்வுக்கு வரும் பகுதி. நினைவில் இருக்கட்டும்:-))))//
புகாரில் பிறந்தான்...
புகாரால் இறந்தான்...!
(இப்டி வாலி கோவலன் பத்தி ஒரு கவிதை எங்கயோ சொன்னாங்க..)
கட்டுரை எழுதிட்டேன்... இருநூறுக்கு மேல இருக்கக்கூடதுங்கிறதுதான் நிபந்தனை..! ஆகக் குறைய எவ்ளோன்னு இல்லையே..? பாத்துங்க டீச்சர்... நாம ரொம்ப மோசமானவைங்க..!
சின்ன அம்மிணி,
காணவில்லை அறிவிப்பு ஒன்னு போடணும்ப்பா.
ஜீராவைக் காணோம்!
கலகலப்ரியா,
அச்சச்சோ..... 'நானும் ரவுடிதான்' கேஸா? ஆஹா........
Post a Comment