Wednesday, April 20, 2011

நிலவே முகம் காட்டு....................

பசியைத் தூண்டும் வாசனை ஒரு பக்கம் வந்துக்கிட்டு இருக்கு. இங்கேயே சாப்பிட்டுப் போகலாமான்னா........... இப்பவே மணி ஒன்போதரை தாண்டியாச்சு. இன்னும் பட்டிமன்றத் தீர்ப்பு சொல்லலை. தீர்ப்புக்குக் காத்திருப்பதா? இல்லை கிளம்பிப்போயிடலாமான்னு நாங்க எங்களுக்குள் பட்டிமன்றம் நடத்திக்கிட்டு இருக்கோம். நம்ம ட்ரைவர் ப்ரதீப் காரோடு காத்துக்கிட்டு இருக்கார். எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுதுன்னா....எலிப்புழுக்கை ஏன் கூடவே காயணும்?

நம்ம சொந்தப் பட்டிமன்ற நடுவர் தீர்ப்பு சொன்னார். எல்லாம் நாந்தேன்:-) பாட்டுமன்றத் தீர்ப்பைக் கேட்டுட்டுக் கிளம்பிடலாம். பந்திக்கு இருக்கவேண்டாம். சாப்பாடு நமக்கு நம்ம வீட்டுலே. இப்போ பிரதீபை மட்டும் வெளியே போய் சாப்பிட்டு வரச் சொல்லலாம். பேஷ் பேஷ்!சரியான தீர்ப்பு !!

திடீருன்னு உறுமிச்சத்தம் கேக்குது. கூடவே நாயனமும் தவிலும். ஜல்ஜல்ன்னு சலங்கை ஒலிக்கத் தலையில் கரகம் ஏந்தி ஆடிவந்து மேடை ஏறுனாங்க ஒரு பெண்மணி.

ஒருமுறை நம்ம சென்னை விஜிபி வாசலில் கரகம் ஆடிக்கிட்டு இருந்தவங்களைப் பார்த்ததில் இருந்து மனசுக்குள்ளே ஒரு மாதிரி (தர்ம)சங்கடம். அது 1994 இல். மகள் அப்போ சின்னக்குழந்தை. தமிழ்நாட்டு பாரம்பரியக் கலைகளைப்பற்றியெல்லாம் மகளிடம் உயர்வாச் சொல்லிக்கிட்டு இருப்பேன். கரகம் ஆடுறாங்கன்னு கோபால் சொன்னதும் மகளுக்கு சின்னதா லெக்சர் அடிச்சுட்டு வாசலுக்கு வந்தால்..... என்னவோ ரொம்பவே சின்னதா ஒரு குட்டைப் பாவாடையும் சுண்ணாம்பு அடிச்ச முகமும் இன்னபிற அலங்காரங்களுமா ஆபாசமான அங்க அசைவுடன் ஆடிக்கிட்டு இருந்தாங்க ரெண்டு பெண்கள். அவுங்களுக்குப் பாட்டு பாடினவங்களும் கொட்டு அடிக்கிறவங்களுமா ரெட்டை அர்த்தத்துலே ...... நல்லவேலை மகளுக்கு அவ்வளவாத் தமிழ் தெரியாதுன்னு சந்தோஷப்படத்தான் முடிஞ்சது. குழந்தையென்னவோ விகல்பம் இல்லாமத்தான் பார்த்துக்கிட்டு இருந்தாள். ஆனால்.....எனக்குத்தான்......பேஜாராப்போச்சு. அங்கே வேடிக்கை பார்த்துக்கிட்டு கூட்டமா இருந்த இளைஞர்கள்வேற அசிங்கமா கமெண்ட்(நல்லவேளை தமிழில்) கொடுத்துக்கிட்டு இருந்தாங்களா...... இதுதான் நம்ம கலைன்னு மகள் (தப்பா) நினைச்சுக்கப்போறாளேன்னு, கரகாட்டக்காரன் சினிமாவை வீடியோவில் போட்டுக் காமிச்சு அதுலே போட்டுருப்பதுதான் ப்ராப்பர் அவுட்ஃபிட் ஃபார் கரகமுன்னு ஆயிரம் முறை சொல்லிப் புலம்புனதெல்லாம்..... தனிக்கதை:-)))))) அப்போ இருந்து கரகம்ன்னாலே மனசுக்குள்ளே ஒரு பயம்:( நான் சின்னப்பிள்ளையா இருக்கும்போது வத்தலகுண்டு மாரியம்மன் திருவிழாவில் கரகம் ஆட்டம் ஜோரா நடக்கும். அழகா பின்கொசுவம் வச்சுப் புடவை உடுத்தி கழுத்தில் மாலைகள் போட்டுக்கிட்டு, தகதகன்னு தங்கமா ஜொலிக்கும் பித்தளைச் சொம்பு தலையில் வச்சு சுழன்று சுழன்று ஆடுவாங்க. சொம்புக்கு மேலே இருக்கும் கலச அலங்காரத்தில் பச்சைக்கிளிகள் தாளத்துக்கு ஏற்ப குதிக்கும் பாருங்க......பலே பலே! தரையில் வச்ச காசை கரகச்சொம்பு விழாம குனிஞ்சு வாயாலே எடுப்பாங்க. சொம்பை தொடாமல் அப்படியே தோளுக்குக் கொண்டுவந்து தலையில் திரும்ப ஏந்துவாங்க. இந்த வித்தைகளையெல்லாம் பார்த்து ரசிச்சு மயங்கி, வீட்டுக்கு வந்து நானும் ஆடறேன்னு பித்தளைச் சொம்பை வச்சு ஆடி கீழே போட்டு நசுக்கிச் சொட்டை பண்ணி வச்சு அடி வாங்குனதெல்லாம் அப்போ நினைவுக்கு வந்துச்சு.
நல்லவேளையா இப்போ கரகம் ஆடுன பழனியம்மாள் நீல நிறப்புடவையைப் பின் கொசுவம் வச்சுக்கட்டி அளவான அலங்காரத்தோடு எவர்சில்வர் கரகச்சொம்பு தலையில் ஏந்தி வந்து ஆடறாங்க. பாட்டெல்லாம் ஒன்னும் பாடாம வெறும் வாத்திய இசை மட்டுமே. அதுக்குள்ளே மேடையிலொரு சிறுவனைப் படுக்க வச்சு அந்தப் பையன் வயித்துமேலே நூறுரூபாய் நோட்டு ஒன்னு வச்சாங்க. கரகச்சொம்பைத் தொடாம கழுத்தையும் தலையையும் குலுக்கிக் குலுக்கி சொம்பைப் பின் கழுத்துவரை கொண்டுபோன நம்ம பழனியம்மாள், நல்லா குனிஞ்சு உக்கார்ந்து அந்த ரூபாய் நோட்டை வாயால் கவ்வி எடுத்தாங்க. அதுக்குப்பிறகு மீண்டும் தலை அசைப்புகளால் சொம்பு தலையின் நடு உச்சிக்கு வந்துருச்சு, நல்ல ஆட்டம்!
ரூபாய் எடுத்தல்

உசரமான கம்புலே ஏறிக் கட்டைக் காலில் நடந்துவரும் ஸ்டில்ட் வாக்கர்ஸ் ரெண்டு பேர் வந்து மேடைக்கு முன்பக்கம் தரையில் நின்னு இசைக்கு ஏற்ப ஆடிட்டுப் போனாங்க.

மேடையில் நிகழ்ச்சிகள் நடந்துக்கிட்டு இருக்கும்போதே பாட்டில் தண்ணீர் டீ காஃபின்னு வரிசையா உபசரிப்புகள்தான் பார்வையாளர்களுக்கு.. எல்லாம் சிகப்பு சேலை உடுத்திய ஆதிபராசக்தி பக்தைகள். எனக்கு ஆதிபராசக்தி சந்நிதி பார்த்தவுடன் நம்ம நானானி நினைவு வந்து மனசுக்குள்ளே மணை போட்டுச்சு. அவுங்க இங்கே இருந்துருந்தா பூரிச்சுப்போய் இருப்பாங்க, இல்லே நானானி?

நல்ல சிநேகமான சனங்க. . இங்கே வந்தவுடன் காலனியைச்சும்மா சுத்திப்பார்த்தபோது, மக்கள்ஸ் அனைவரும் அன்போடு வீட்டுக்குள்ளே வாங்க வாங்கன்னு ஆசையாக் கூப்புட்டாங்க. சாயா குடிங்கன்னு ஏகப்பட்ட உபசாரம். வீட்டுக்குள்ளே வேணுமுன்னா போதுமான இடம் இல்லையே தவிர மக்கள் மனசு ரொம்பவே விசாலமா இருக்கு.

மேடையில் மாலை மரியாதைகள் தொடங்குச்சு. ஐயோ...மணி பத்தரை ஆகுது சீக்கிரம் முடிங்கப்பா...... பாட்டுமன்ற இருதயராணிக்கு மரியாதை செலுத்தி மாலை அணிவிக்க, திடீர்னு மைக்கில் நியூஸிலாந்து எழுத்தாளரை மேடைக்குக் கூப்பிடறாங்க. மாலை அணிவிச்சு (அதே சாமந்திப்பூ மாலைதான்) இளமஞ்சள் பொன்னாடை போர்த்தினேன். நல்லாப் பாடினீங்கன்னு கைகுலுக்கிப் பாராட்டினேன். சட்னு ராணி காலைத் தொட்டுக் கும்பிட்டுட்டாங்க. அப்படியே நடுங்கிப் போயிட்டேன். படா பேஜாராப் போயிருச்சு எனக்கு:( காலிலே விழும் கலாச்சாரத்தை முற்றிலும் வெறுப்பவள் நான்.

நம்ம மைக் செட்காரரையும் மேடைக்கு அழைச்சு மாலை, துண்டு எல்லாம் போட்டு கவுரவிச்சாங்க. 'நடப்பது நடக்கட்டும் நாராயணன் செயல் நமக்கென்ன கவலையடா'ன்னு மாறாத முகத்தோடு எல்லாத்தையும் ஏத்துக்கிட்டார் ஷர்மா சவுண்டு சர்வீஸ் ஓனர், திரு ஷர்மா:-)

ஒருவழியாப் பாட்டுமன்றத் தீர்ப்பு சொன்னார் நடுவர். ரெண்டு வாதிகளுமே ஜெயிச்சுட்டாங்க. பழைய பாடல் புதியபாடல் ரெண்டுமே நல்லா இருக்குன்னார். ஆமாம்...... கட்டிக்காத்தல் வெட்டிச் சாய்த்தல் என்ற தலைப்பை இப்படி வெட்டிச்சாய்ச்சுட்டாரே...............அட ராமா...............

தயாரிச்சுக் கொண்டுவந்த பாடல்கள் பலதையும் இன்னும் பாடி முடிக்கலை நேரம் இல்லாமல் போச்சுன்ற புலம்பலுக்கு....... நாளை பாரதி பவன் (சண்டிகர் தமிழ்ச்சங்கம்) கொண்டாட்டத்துலே முதல் ஐட்டமே பாட்டுமன்றம்தான். ரெண்டு மணி நேரம் உங்களுக்கே உங்களுக்குன்னு ராஜசேகர் உத்திரவாதம் கொடுத்தார்.

மறுநாள் சந்திக்கலாமுன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டோம். பாதுகாப்புக்கு வந்த சண்டிகர் நகரக் காவலர்கள் ஓரமா ஒரு பக்கம் நின்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. விழாவுக்கு ஆர்மி கர்னல் (தமிழர்) குடும்பத்தோடு வந்துருந்தார்.
தமிழ்ச்சங்கக்கூட்டத்தில் ஒரு பகுதி


மறுநாள் பகல் ரெண்டரைக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பம். நாலரைக்குப்போய்ச் சேர்ந்தோம். நல்ல கூட்டம். மேடையில் பாட்டுமன்றம் நடந்துக்கிட்டு இருக்கு. ஒரு பத்து நிமிச நேரத்துலே மத்திய அமைச்சர் பவன்குமார் பன்ஸால் பந்தா ஒன்னும் காட்டாம சிம்பிளாத் தன்னுடைய பி.ஏ.வுடன் அரங்கத்துக்குள்ளில் நுழைஞ்சார். அவரை வரவேற்று மேடைக்கு அழைச்சதும் போய் அங்கே போட்டுருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தார். ஆஹா..... தமிழ்நாட்டுலே விஐபிக்களுக்குப் போடும் சிம்மாசனமோ அலங்கார நாற்காலிகளோ ஒன்னுமே இங்கே இல்லை. ரொம்ப எளிமையான மனிதர். அடிப்பொடிகள், அடியாட்கள், கருப்பு வெளுப்பு பூனை, நாய் படை, பாதுகாப்பு ஒன்னுமே இல்லாம வந்தவரைப் பார்த்து எனக்கே ஐயோன்னு ஆகிருச்சு. விட்டுருந்தா பேசாம நானே கொஞ்ச நேரத்துக்கு அடியாளா நின்னுருப்பேன்.
கோவில் இடிக்கப்போகும் சேதி வந்ததும் என்ன செய்யறதுன்னு கையும் ஓடாமக் காலும் ஓடாம ராத்திரி பதினொன்னரைக்குப்போய் இவர் வீட்டுக் கதவைத் தட்டித்தான் உதவி கேட்டுருக்காங்க. காட்சிக்கு எளியவர்களா இருக்கணும் மக்கள் பிரதிநிதிகள் என்பதை மனசில் வச்சுருக்கார் பாருங்க. கட்டாயம் முடிஞ்ச உதவி செய்றேன்னு வாக்குக் கொடுத்துருக்கார். தமிழ்ச்சங்கக் கட்டிடம் ஒன்னு பக்காவா வேணுமுன்னு போன முறை கோரிக்கை வச்சப்ப , அஞ்சு லட்சம் ரூபாய் நமக்காகத் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒதுக்கி இருக்கார். சண்டிகர் சென்னை ரயில் இப்போ வாரம் ஒருமுறைதான் இருக்கு, வாரம் ரெண்டுன்னா நல்லா இருக்குமுன்னு கேட்டுகிட்டதுக்கு ரயில்வே அமைச்சகத்துக்குப் பரிந்துரை செஞ்சு அங்கே இருந்து நமக்குப் பதில்கூட வந்துருக்கு. இப்படி நல்ல மனசுடைய நேர்மையானவர் மக்கள் பிரதிநிதியா அமைஞ்ச சண்டிகர் நகர மக்கள் நெசமாவே கொடுத்து வச்சவுங்கதான். ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னே தமிழ்ச்சங்கத்துக்கு கம்ப்யூட்டர் அறை ஒன்னும் கட்டிக் கொடுத்துருக்கார்.
அமைச்சர் கையால் நிகழ்ச்சி நடத்தவந்த முப்பதுபேர் கொண்ட கலைக்குழுவினருக்கு(எல்லோரும் மதுரைக்காரவுக) நினைவுப் பரிசு கொடுக்க வச்சாங்க. கூடவே அமைச்சருக்கும் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் ஒரு நினைவுப் பரிசு கொடுத்தார் நம்ம ராஜசேகர். அந்தப் பரிசைப் பார்க்கும்போதெல்லாம் நம்ம தமிழ் கம்யூனிட்டிக்கு செய்யறேன்னு வாக்குக் கொடுத்ததை அவருக்கு நினைவூட்டும் பரிசாம்!!!! இது எப்படி இருக்கு:-))))))
மந்திரிக்கு(ம்) ஒரு கப்
நானிருக்கேன் உங்களுக்கு!


வேற அலுவல்கள் இருப்பதால் பத்து நிமிசம் மட்டுமே இருக்கமுடியும் என்று அமைச்சர் சொன்னதால்...... நாம் வரும்போது நடந்துக்கிட்டு இருந்த பாட்டுமன்றத்தை ஓரம் கட்டிட்டு கரகம், மயிலாட்டம், மாடாட்டம். எல்லாம் சட் சட்னுவந்து அவருக்கு முன்னால் ஆடிக் காமிச்சாங்க.

மாடு
மயில்

கரகம் ஸ்பெஷலிஸ்ட் பழனியம்மாள், தரையில் இருந்து ஊசி எடுத்தல், கண்ணைக் கட்டிக்கிட்டு ஒருத்தர் தலையில் வச்சுருந்த தேங்காய் உடைத்தல், காவடி ஆட்டம் இப்படி விதவிதமா ஆடி மகிழ்விச்சாங்க. மஞ்சள் புடவை பவுனுத்தாயி சப்போர்டிங் பெர்ஸன்தான்.

காவடி
தேங்காய் உடைத்தல்

இன்றைய நிகழ்ச்சிக்கு செலவை ஈடு கட்ட அவரவருக்கு விருப்பமான தொகையைக் கொடுத்து உதவணுமுன்னு தமிழ்ச்சங்கச் செயலாளர் ராஜசேகர் வேண்டுகோள் வச்சார். ஆயிரம் பேருக்கு இன்னிக்கு இரவு சித்திராப் பவுர்ணமி நிலா விருந்துக்கு ஏற்பாடு ஆகி இருக்குன்னார். நாமும் ஒரு தொகை நம்ம வகையில் கொடுத்தோம். நிதி இருந்தால்தானே சங்க நிகழ்ச்சிகளை நடத்த முடியும். இல்லீங்களா? ஊர் கூடித்தானே தேர் இழுக்கணும்?

பாட்டுமன்றம் முடிஞ்சதும் கவிதை அரங்கம் இருக்காம். கவிஞர் பொற்கைப் பாண்டியன், நேதாஜி சுவாமிநாதன், அர்ஜுனன், மணிகண்டன், கார்த்திக், அடைக்கலம் என்று ஒரு குழுவினர் வந்துருக்காங்க. நமக்கோ .................. பொறுமை கிடையாது. ஆறாச்சேன்னு கிளம்பி வெளியில் வந்தால் வண்டி டயர் பஞ்சர். சரி செய்யச் சொல்லிட்டு அங்கே வாசலில் நின்னுக்கிட்டு இருந்த 'கட்டைக் காலருடன் ' பேசிக்கிட்டு இருந்தேன்.

இவர் பெயர் மணிகண்டன். தமிழ்நாடு கிராமியக் கலைப் பண்பாட்டுக்கழக உறுப்பினர். இவர் சிலம்பக்காரர். தொழிலே சிலம்பம் சொல்லிக் கொடுப்பதுதானாம். இவருடைய தாத்தா, அப்பா எல்லாம் மல்யுத்த மாஸ்டர்களாம். இவர்தான் சிலம்பத்துக்கு வந்துட்டார். (உடம்பு மல்யுத்தத்துக்கு ஏத்தமாதிரி மாமிச மலையா இல்லையே)
மணிகண்டன் இதுவரை 45 திரைப்படங்களில் சிலம்பமாட்டம், சண்டைக்காட்சிகளில் வந்துருக்காராம். விஜய் படங்கள் ஏழெட்டு பெயர்கள் சொன்னார். செம்மொழி மாநாடு, சென்னை சங்கமம் திருவிழாவில் எல்லாம் பங்கெடுத்தவராம். ரெண்டு பெண்மக்களின் தந்தை. மகள்களுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி கொடுத்துக்கிட்டு இருக்காராம். ஒருமுறை ருமேனியா நாட்டுக்குப் போகும் வாய்ப்பு கிடைச்சும், சரியான நேரத்தில் பாஸ்போர்ட் கிடைக்காமப் போனதால் போகமுடியாமல் போச்சுன்னு வருத்தப்பட்டார். எல்லாத்துக்கும் நேரம் சரியா அமையணுமில்லையா?

சண்டிகர் வந்ததும் நேத்து ரோப்பார் என்னும் இடத்தில் நடந்த ஹாக்கி டோர்னமெண்ட்டுக்கு கட்டைக்கால் குழுவினர் போய் நிகழ்ச்சி நடத்தி விளையாட்டு வீரர்களையும் மக்களையும் உற்சாகப்படுத்திட்டு வந்தோமுன்னார். கலை நிகழ்ச்சிகள் எதாவது நடத்தணுமுன்னா இவருடை குழுவினர் வந்து நடத்திக் கொடுப்பாங்கன்னு சொல்லி செல் நம்பரைக் கொடுத்தார்.

வரப்போகன்னு ஆறுநாள் ரயிலுக்கே ஆயிருச்சாம். முப்பது பேருக்கு விமானமுன்னா செலவு இன்னும் ரொம்பவே கூடிப்போகும். அவ்வளவுக்கு நம்ம தமிழ்ச்சங்கம் தாங்காதுங்களே:(

வண்டி வந்ததும் கிளம்பி வீட்டு வந்துட்டோம். நிலாச்சாப்பாடு நம்ம மாடி முற்றத்தில்னு ஒரு கணக்குப் போட்டு வச்சேன். நம்ம அதிர்ஷ்டம் பாருங்க கருமேகக் கூட்டத்துலே இருந்து நிலா வெளியில் வரவே இல்லை:( நம்மைப் பார்க்க அதுக்குக் கொடுத்து வைக்கலைன்னுட்டு வீட்டுக்குள் ரசவிருந்தை ஆரம்பிச்சுத் 'தொட்டுக்க' டிவி போட்டா..... 'விஜய் டிவி நீயா நானா'வில் ஒரு பக்கம் டவுனுக்காரர்களும் இன்னொருபக்கம் நாட்டுப்புறக் கலைஞர்களுமா உக்காந்துருக்காங்க! நமக்குன்னு (ஜோரா) அனுபவங்கள் வாய்க்குது பாருங்களேன்!

PIN குறிப்பு: இந்த மூன்று பகுதிகளிலும் வெளிவந்த படங்கள் ரொம்பவே சுமார் ரகம்.அதற்காக ட்ரெய்னி ஃபோட்டோக்ராஃபர் சார்பில் 'மன்னிக்க வேண்டுகிறேன்'.

17 comments:

said...

PIN குறிப்பு: இந்த மூன்று பகுதிகளிலும் வெளிவந்த படங்கள் ரொம்பவே சுமார் ரகம்.அதற்காக ட்ரெய்னி ஃபோட்டோக்ராஃபர் சார்பில் 'மன்னிக்க வேண்டுகிறேன்'.//

நமக்கு இது கூட வராதே! அநுபவம் புதுமை! ஹிஹிஹி, தினம் வந்து பின்னூட்ட முடியறதில்லை! இதைக் கணக்கிலே வச்சுக்குங்க ஒரு பத்து பதிவுக்கு.

said...

ஆஹா, சுண்டல், வடை எல்லாமும் எனக்கே எனக்கா??

said...

நேரில் இருந்து நிகழ்ச்சிகளை பார்த்த மாதிரி நாங்க உணரும் படியாக படங்களும் நிகழ்ச்சி தொகுப்பும் அமைந்து உள்ளது. சூப்பர்!

said...

தமிழ்நாட்டு கலாச்சாரம் வடமண்ணில் ஜொலிக்கிறதைப்பார்க்கறச்ச ரொம்ப சந்தோஷமா இருக்கு.

said...

கரகம் ரொம்ப அழகா இந்த புடவைக்கட்டுல அற்புதமா இருக்கு.. அவங்க செய்யறதெல்லாம் குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்க்கும் ஆச்சரியமான விசயம் தான் .. கண்ணால் ஊசியும் , சேலைக்கட்டறதும்..:)

said...

சாதா கேமிராவா இருந்தா யாரு எடுத்தாலும் ஒரே மாதிரி நல்லா வரும். நீங்க வர வர நல்ல கேமிராவா வாங்கிடறீங்க போல..:)

said...

கரகம், மாடு, மயில் ஆட்டங்கள் வித்தியாசமாக இருக்கிறது.

said...

வழக்கம் போல் அருமையான பதிவு.
உங்களுக்கும் கோபால் சாருக்கும் நல்ல வரவேற்பு. எங்களுக்கு நல்ல மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் அம்மா.

said...

அன்பு துளசி, இப்பதான் படிக்க முடிந்தது.
போட்டோவும் பதிவுரையும் ஜோர் பா.
ரொம்ப அழகா வந்திருக்காங்க நூசி பதிவர்..
கற்றாருக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
சண்டிகர் தமிழ்ச் சங்கத்துக்கும் திரு ராஜசேகருக்கும்,அதைத் தெரியப் படுத்திய உங்களுக்கும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் நன்றி.

said...

வாங்க கீதா.

எல்லாமே அநுபவம் புதுமைதான்:-))))

சுண்டல் வடை மட்டுமில்லை கேஸரியும் உங்களுக்கேதான்!

ரைஸ் குக்கரில் செஞ்சு பார்த்தேன்:-)

said...

வாங்க சித்ரா.

'நான் பெற்ற இன்பம்' வகைகளில் இவை வருதுப்பா:-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

கலாச்சாரம் ஜொலிக்குதா???? உங்க வாய்க்குச் சக்கரை போடணும். நிகழ்ச்ச்சி முடிஞ்ச மறுநாள் ரெண்டு குழுவுக்கு பயங்கரச் சண்டை. நம்ம ராஜசேகர் மட்டும் இல்லைன்னா ஒரு கொலை விழுந்துருக்கும்:(

said...

வாங்க கயலு.

எனக்கு அந்தப் பின்கொசுவம் கட்டுவது ரொம்பப் பிடிக்கும். பார்டர் எல்லாம் எப்படிப் பளிச்சுன்னு வரும் இல்லே?

புதுக்கெமெராவுக்கு அடிக்கல் நாட்டியிருக்கேன். PIT மாணவிக்கு படிப்புக்கேத்தமாதிரி வாங்கித்தரணும் இல்லே?:-))))

said...

வாங்க மாதேவி.

மாடுகள் எனக்கும் புதுசுதான்:-)

said...

வாங்க ரத்னவேல்.

எதிர்பாராமல் கிடைச்ச வரவேற்புக்கு பயங்கர மகிழ்ச்சிதான்!!!!!

said...

வாங்க வல்லி.

ஆஹா...... இது வேறுவிதமா இருக்கணும்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை(யாம்):-)))))

said...

// நிகழ்ச்ச்சி முடிஞ்ச மறுநாள் ரெண்டு குழுவுக்கு பயங்கரச் சண்டை//

ச்சே.. இந்தக்கலாச்சாரத்தையும் அங்கே கொண்டுபோயிருக்காங்களா, தமிழன் பேரைக்கெடுக்கறதுக்குன்னே :-(